அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஜனநாயகச் சர்வாதிகாரி!
1

மேனாட்டுச் சர்வாதிகாரிகள் -
ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு -
திராவிட நாடு

தம்பி!

"சர்வாதிகார ஆட்சி' என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம், உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்க வேண்டும் என்று விளக்கிக் கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாயமின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதிய வரி போடுவதாயினும் சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்பதாயினும், படைதிரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலையினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதிகாரம்; எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை!

இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சியையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது?

ஒவ்வொருவருக்கும், குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு என்ற நம்பிக்கை இருக்கிறது.

எதையும் செய்திடாமல்கூட இருக்கக்கூடும் - வாய்ப்புத் தேடிக்கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் - ஆனால் முடிவு, அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் எவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே, தெரியும் உமக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பது...! என் அறிவாற்றல், உம்மில் எவருக்கும் இல்லை! எனவே, என்னிடம் விட்டுவிடுங்கள் எல்லா அலுவல்களையும்; நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறும்போது, தமது உரிமை பறிக்கப்படுகிறது என்ற எண்ணமும், தமது தன்மானம் அழிக்கப்படுகிறது என்ற எரிச்சலும், ஏற்பட்டுவிடுகிறது - என்ன தலைக்கனம் இவனுக்கு! எல்லாம் தெரியுமாம் இவனுக்கு - ஏதும் அறியோமாம் நாம்! நாமென்ன, இவன்போன்றே ஆறறிவுடையோரல்லவா! ஆற்றல் என்பது இவனொடு நின்றுவிடுவதோ! நாம், வெறும் மரக்கட்டைகளோ! நாம் வெறும் பிறவிகள்! இவன் ஆளப்பிறந்தவனோ!! - என்றெல்லாம் பேசிடத் தோன்றுகிறது.

அவன் வீரன்! - என்று கூறினால், நான் என்ன கோழையா? என்று கோபித்துக் கேட்டிடச் சொல்கிறது உணர்ச்சி.

அவன் அறிவாளி! - என்று கூறினால், நான் முட்டாள் அல்ல! என்று கொதித்தெழுந்து கூறத் தோன்றுகிறது.

அவ்விதமின்றி, உனக்காக அவன்! உனக்கு வேறு அலுவலிருப்பதால், அவன்! உன் அனுமதி பெற்று, அவன் உன் காரியத்தை, உன் விருப்பமறிந்து, உன் யோசனைப்படி செய்து கொடுக்க, அவன்! - என்று கூறினால், கேட்பதற்குக் களிப்பும் பெருமையும் ஏற்படுகிறது.

"எல்லாம் செய்திடுபவன்' எதைச் செய்திடுவானோ! அவன் செய்திடுவதிலே, எதெது கேடு தருமோ என்று எண்ணும்போது, அச்சம் ஏற்படுகிறது. எதையும் செய்திடுவோனாகிவிட்ட பிறகு, கேடு பல செய்து, "இது ஆகுமோ' என்று கேட்டிடின், "யார் நீ இதைக் கேட்க? நானன்றோ காரியமாற்ற வேண்டியவன்! காரணம் காட்டவா, இருக்கிறேன்!'' என்று கொக்கரித்துக்கொடுமை செய்திடின், எதையும் செய்திடும் இடமேறிவிட்டவனிடமிருந்து, எப்படித் தப்பித்துக் கொள்வது? - என்று எண்ணும்போது, அச்சம் எழத்தானே செய்யும்.

அடுப்புக்குள் இடும் நெருப்புக்கும், அடுப்புக்குத் தேவை என்பதற்காக கூரையில் செருகிவைக்கும் கொள்ளிக் கட்டைக்கும், வித்தியாசம் இல்லையா?

சர்வாதிகாரம் - என்றவுடன் கொதித்தெழும் போக்கு எத்துணைப் பரவலாகச் சமுதாயத்திலே இருப்பினுங்கூட, இன்று உலகிலே, பல்வேறு நாடுகளிலே, சர்வாதிகாரிகளின் அமுல் இருந்து வருகிறது.

சில சர்வாதிகாரிகள் பத்தாண்டு, இருபதாண்டுகளாகக் கூடப் பீடத்தில் உள்ளனர்.

நாட்டுக்கு வெளியிடத்திலிருந்தோ, உள்ளேயிருந்தோ பேராபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்று கிலி கொள்ளும்படி மக்களை ஆக்கிவைத்துவிட்டு, "எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கட்டும், ஆபத்தைப் போக்க!' என்று பேசிச் சர்வாதிகாரிகளானோர், "இனி ஆபத்து இல்லை! சர்வாதிகாரம் வேண்டாம்!' ஜனநாயகம் மலரட்டும்! என்று அறிவிப்பது, மிகமிகக் கடினம்.

ஸ்பெயின் நாட்டிலேயும், போர்ச்சுகல் நாட்டிலேயும், சர்வாதிகாரிகளாகிவிட்ட பிரான்கோவும், சலாசரும் என்றென்றும் சர்வாதிகார முறைதான் இருந்திட வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள், எண்ணிக் கிடந்திடவேண்டிய முறையில், சூழ்நிலையை உண்டாக்கி வைத்துவிட்டனர்.

சர்வாதிகாரம் - ஜனநாயகம் சாதிக்காதவைகளைச் சில வேளைகளில் சாதித்தளிக்கக்கூடும்.

வெளிநாட்டானை விரட்டியும், உள்நாட்டிலே கொடுமையாளரை அடக்கியும் பெரும் வெற்றி, புதிய சமுதாய அமைப்பு, தொழில் வளர்ச்சி, செல்வவளர்ச்சி என்பனபோன்ற வெற்றிகள், ஒளிவிடத்தக்க விதமான ஆட்சி நடத்திடக்கூடும்.

ஆனால், அங்கு ஒன்று அழிக்கப்பட்டுவிடுகிறது - மனிதனின் சுய சிந்தனை. சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட பிறகு, எது வெற்றி, எது வேதனை? எது முற்போக்கு, எது பிற்போக்கு? என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அற்றுப்போய், அதை எடுத்துக்காட்டக்கூட, ஆட்சியினரை எதிர்பார்த்துக்கிடந்திட வேண்டியவராகின்றனர்.

இட்லரின் ஜெர்மனியில் இந்த நிலைதான் கப்பிக் கொண்டிருந்தது.

இட்லர் பார்த்து, இதுதான் இனிக்கும் என்றால், "ஆம்' என்று நாட்டினர் அனைவரும், கூறினர்; ஒரு சிலருக்கு, "கசப்பு' தெரிந்தாலும், அது தமது குற்றம், பொருளின் குற்றமல்ல என்று கருதினர்.

அந்த அளவுக்கு மக்களின் எண்ணத்தைக் கட்டிப்போட்டு வைத்துவிட இட்லரின் முறைகள் மெத்தப் பயன்பட்டன.

இருபத்து நான்கு மனிநேரமும், இட்லரின் பிரச்சார இயந்திரம் - பேச்சாளர் - ரேடியோ - பத்திரிகை - கலைத்துறை மக்களுக்கு எண்ணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருந்தன.

தொடர்ந்து திறமையுடன் இந்த முறை கையாளப்பட்டு வந்ததால், மக்கள், எதைப் பற்றியும் தாமாக எண்ணிப் பார்த்திட முடியாத நிலையைக்கூடப் பெற்றுவிட்டனர்.

தம்பி! எண்ணிப் பார்ப்பது இயல்பு. அந்தத் திறம் வளரவும், தெளிவும் பயனும் ஏற்படவும், எண்ணத்திலே வளர்ச்சி காணவும், எண்ணிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது!

தாயின் மடியிலே தவழும் குழந்தைக்குக்கூட, ஒரு பொருளைக் காணும்போது, எண்ணம் எழத்தான் செய்யும். பசிக்கிறது என்ற உணர்வு, புசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்காமலிராது! குழந்தையின் அழுகைதான் அதற்கான அறிவிப்பு.

ஏற்படும் எண்ணத்தை எடுத்துக்கூற வழி ஏற்பட வேண்டும், கூறுவதைக் கேட்டிடத் தன் போன்றோர் இருக்க வேண்டும், அவர்கள் அதைக் கேட்டுத், தமது கருத்தினைக் கூற வேண்டும். இரு கருத்துக்களும் ஒன்றோடொன்று தழுவியோ, மோதியோ, புதுப்புது பொலிவு பெறவேண்டும் - எண்ண வளர்ச்சி அப்போதுதான் ஏற்படும்.

கருத்து வளர்ச்சிக்கு, பேச்சு உரிமை இன்றியமையாததாகிறது.

சர்வாதிகார முறை, இந்த உரிமைகளை மறுத்துவிடுகிறது.

சமுதாயத்துக்கு இதன் பயனாக ஏற்படும் நஷ்டம் சர்வாதிகாரி பெற்றளிக்கும் எத்தகைய வெற்றியும் ஈடுசெய்ய முடியாததாகும்.

உள்ளத்தில் தோன்றுவதை எடுத்துரைப்பதும், உண்மை யைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதும், சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டும் அறிவாற்றலைக் கெடுத்துவிடும் என்ற அச்சம் சர்வாதிகாரிகளுக்கு.

எனவே, அவர்கள், தாக்கப்படுமுன் தாக்கிவிடவேண்டும் - முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்க வேண்டும் - கொடுக்கும் தாக்குதல், அவனைப் பிறகு எழுந்து நின்று, திருப்பித் தாக்கிடும் சக்தியில்லாதவனாக்கிடத்தக்கதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுவிடுகின்றனர். கொடுமை புரியத் துளியும் கூசாத தன்மை சர்வாதிகாரிக்கு ஏற்பட்டு விடுகிறது.

தம்பி! சட்டம் வேண்டாம், என் சொல் போதும்! வழக்கு மன்றம் வேண்டாம், என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் போதும்! என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு.

சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி, விசாரணை - எனும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் "முறை'யைப் புகுத்தி, சர்வாதிகாரம் செய்வோரும் உண்டு.

முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார்.

"என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்றகிழமை கூறினாய்; இப்போது ஏதோ, சாய்வு நாற்காலிக்காரர்போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே,'' என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன்.

"இரண்டமவர்' என்றேனே, அப்படிப்பட்ட "சர்வாதிகாரி'யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்கு மன்றத்திலே ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா.

வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது.

பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரியாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை!

சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம்பெற்ற பழுத்த அனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர்.

மற்ற மற்றவரும் அதுபோன்றே - கற்றறிவாளர்.

நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார்.

நீதி : கைதியைக் கொண்டுவா.

(போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி)

போலீ : அங்ஙனமே, பெருந்தகையே! (போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்) (நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப் பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன் அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.)

(தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன் அறிவையும் கொண்டு, வழக்கினை விசாரித்து நீதிகண்டு, தீர்ப்பளிக்கவேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி.)

ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானா யினும் அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.

அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில்.

அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒகேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர்என்று தெரிந்ததும், பீதி ஏற்படுகிறது. தேவையற்ற முறையில் பணிந்துவிடுகிறார்.

வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா?

பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல - எங்கோ இருந்துகொண்டு - பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்.

குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இது குறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கறை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் "சக்தி' டெலிபோன் மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!)

நீதிபதி : (பணிவாக) ஆமாம், மேன்மை தங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன் - நிச்சயமாக, விரைவில்.

(டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.)

(கவனித்தாயா, தம்பி! "வழக்கை விசாரிக்கிறேன்.' குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.)

குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார்.

குற்றவாளி, கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான், இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக, நீதிபதி, வாக்களிக்கிறார் - பணிவுடன்.

ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார்.

தன்னை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.

ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டுவரப்படுபவன் கொல்லப்படவேண்டியவன் - என்பதை டெலிபோனில் பேசும் "மேலவர்' தெரிவிக்கிறார்.

(அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!)

(பத்திரிகைக்கு குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.)

குறிப் : பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன்.

நீதி : சரி. பேசலாம்.

குறி : வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அனுபவம் பெற்றவர், ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா? இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார், கொண்டுவர. மரண தண்டனை - நிச்சயமாக, நீதி நிலைக்கும் - கட்டாயம்.

(பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும், வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!)

(போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படை கிறார்; பயம் கொள்கிறார்.)

போலீ : பெருந்தகையே! இதோ, கைதி.

நீதி : இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா?

போலீ : ஆமாம், பெருந்தகையே! போலீஸ் படை அதிகப் படுத்தப்பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங் களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

நீதி : கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...?

போலீ : ஆமாம்.... ஆனால்....

நீதி : ஆனால்... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!

போலீ : கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது - பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன.

நீதி : கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்!

(நீதிபதியின் நடுக்கம்; அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிற தல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டு வதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார் ஒருவர்.

பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார், மற்றொருவர்.

ஏதேது, இதை எல்லாம்கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி - ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார்.

ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன். குற்றவாளி, கூண்டிலே நிறுத்தப்படுகிறான்.

(நடுத்தர வயதினன் - எந்தக் கேடும் செய்திட இயலாதவன் என்பதைத் தோற்றமே காட்டுகிறது, புன்னகை செய்கிறான்.)

நீதி : குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா?

போலீ : ஆமாம்...

நீதி : எப்போது நடத்தினீர்கள், சோதனை?

போலீ : தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒரு தடவை வீதம்!

நீதி : ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே... இருந்ததா?

போலீ : தேடினோம் - கிடைக்கவில்லை. ஆனால், அவனே கூறுகிறான், ஆயுதம் அவன் தலையில் இருக்கிறதாம் - மண்டைக்குள்!!

(போலீஸ் பக்கத்திலே நின்று காவல் புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)

(குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.)

குறி : (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்துவரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது.

நீதிபதி : (வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்... தொடுப் : பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது, ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

நீதி : குற்றம் கொடியதே! அறியாதார் யார்?

தொடுப் : சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள், அறியாததும் உண்டோ?

நீதி : இவன் செய்த குற்றம்?

தொடுப் : சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்! எண்ணிப் பார்க்கிறான்!

(நீதிபதி கடுங்கோபங் கொள்கிறார். வழக்கு மன்றத்தி லிருப்போர் பதறுகிறார்கள். பெண்கள் பீதி அடைகிறார்கள்; ஆடவர் ஆத்திரமடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார், நீதிபதி.)

நீதி : சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன்? தொடுப் : எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக் காரனுக்கு. வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது!

நீதி : அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை - யோசிக் கிறான் - எண்ணிப் பார்க்கிறான்!

தொடுப் : அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற்பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ. அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான்.

நீதி : கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர் அல்ல - வழக்கறிஞர் - திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்தரமான பேச்சு. அவர் கூறிவிட்டார், இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண்கண்ட கடவுளராம் நமது நாட்டுத் தலைவர்கள், பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான் - அலசிப் பார்க்கிறான் - தானாகச் சிந்தித்துப் பார்க்கிறான் - பெரியோர்களே! எத்துணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போக வேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, "உபதேசம்' இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ணவேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள் - ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் - சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக்கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனா சக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? மறுக்கிறாயா?

கைதி : குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

நீதி : நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்?

கைதி : சுயமாகச் சிந்தித்தேன் - ஒப்புக்கொள்கிறேன் குற்றத்தை.

தொடுப் : நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து, துரோகம் செய்கிறாய்?

கைதி : மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக எண்ணிப் பார்த்து உண்மையைக் கண்டறிய விரும்பினேன்.

தொடுப் : சட்டத்தை மீறுகிறாய் - தெரிகிறதா உனக்கு.

கைதி : கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்?

தொடுப் : எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம்.

கைதி : நாட்டை வாழ வைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது...?

நீதி : குழப்பமோ இவனுக்கு மனதில்...

கைதி : ஆமாம்... குழப்பம்...

நீதி : ஏன் ஏற்படுகிறது?

கைதி : தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்...

நீதி : யார் அவன்? தேவதையோ?

கைதி : தேவதை என்றுதான் முதலில் எண்ணிக் கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல - பிசாசுக் குட்டி! என்று.

நீதி : குட்டிப் பிசாசா...?

கைதி : ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது, என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது.

நீதி : உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை... எங்காவது?

கைதி : எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்? (சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.)

(தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்கவைக்கிறது என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள் - மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர்.)