அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஜனநாயகச் சர்வாதிகாரி!
2

நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் "சாத்தான்' ஏவிவிடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர்.

நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும் - கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும், அதைச் சிந்தனை என்று கூறிவந்தனர், ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக்காட்டத்தான் "சிந்தித்தான்' என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு,தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீதிபதி : வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக்கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா?

தொடுப் : மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்!

நீதி : சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்...

(நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.)

நீதி : குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் - படித்திட - பாடம் பெற்றிட. இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். போலீஸ் காவலர்காள்! குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள்.

(கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.)

தொடுப் : பெருந்தகையே! ஒரு விஷயம் - சிறிய விஷயம்தான் - எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக...

நீதி : செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே!

தொடுப் : முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறு குறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்...

நீதி : அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம்முறையிலே குறைவைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம் - இப்போது.

(மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், "முறை வகுத்தார்' நீதிபதி.

ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது - ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர்'. ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ளதாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.)

தொடுப் : செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா?

மருத் : பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான்.

நீதி : மூளை கெட்டுவிட்டிருந்ததோ?

மருத் : ஆமாம்...

நீதி : மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ?

மருத் : ஒரு கிருமி - நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக் கிடந்தது.

நீதி : அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்?

மருத் : ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந் தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்த துண்டு. பழம்பெரும் நகரான ஏதன்ஸில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.

தொடுப் : அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய் கண்டு விட்டால், நோய் என்றென்றும் போகாதோ?

மருத் : ஒருக்காலும், நோய் போகாது.

தொடுப் : நோயின் குறிகள் யாவை?

மருத் : கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை.

தொடுப் : கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா?

மருத் : அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு.

நீதி : அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது, சமூகத்துக்கு மிகப் பெரிய நலன் தரும் செயல் - அல்லவா?

மருத் : ஐயமென்ன!! ஐயமென்ன!!

(குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக்கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.)

நீதி : (கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய், தொத்திக்கொள்ளக் கூடியதோ?

மரு : பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து, இந்த நோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்துகளை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.

நீதி : கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே - தொத்துநோய் என்கிறீரே - நம்மைப் பிடித்துக் கொண் டிருக்குமோ? மரு : இருக்கும்.

நீதி : அவன் உயிருடன் இருந்தால்தானே, நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே!

மரு : ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப் பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்த பிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும்.

நீதி : நோயை நீக்க, வழியே இல்லையா...?

மரு : இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது!

நீதி : என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர்.

மரு : உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது!

தம்பி! மருத்துவ நிபுணருக்கு, தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது.

சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது என்று எண்ணுகிறார் - அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளையைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி - அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட்பொருள், கொடுங்கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர் - அவனி எங்கும் அறிவு பரப்பினர் - சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் - அதுவும் நடவாது என்பதாகும்.

சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டுவிடும் - சிந்தனையாளர் ஆகிவிடுவர் என்ற கருத்தை விளக்கத்தான், குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய் என்று கூறினார்.

அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர்கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் "சிந்தனை'ச் செல்வத்தைப் பறிகொடுக்க மறுத்த காரணத்தால் - அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறுக்கிறான் - அவனன்றோ ஆண் மகன் - அவன்போல் அனைவரும் இருந்திட வேண்டும் -இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர், என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார்.

பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்துநோய்!!

வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி, அவன் மட்டும், என்ன!! நாம் நடத்தியது வழக்கு விசாரணை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன் - போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை - செய்தி தருவோன் பொய்யன் புரட்டன் - தாங்களோ, ஓர் கோமாளி!

பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! கொல்லுங்கள் துரோகியை! என்று ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார்.

சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட! படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நாம் இப்போது வாழ்ந்துகொண்டும் இல்லை! - என்று உருகிப் பேசுகிறான், வழக்குத் தொடுத்தோன்.

பொய்! பொய்! நான் இதுவரை, வெளியிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டப் புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான் - குற்றவாளிக் கூண்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான் - கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு! மற்றவர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்! மனிதக் கழுகுகள்!

இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான், இதழுக்கு - நோய் முற்றிவிட்ட நிலை அவனுக்கு!

நீதிபதிக்கும், இலேசாக நோய் பிடித்துவிடும் போலாகிறது.

ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! "மேலவர்' பேசுகிறார் - நீதிபதி பதறுகிறார்.

"நச்சுப் பூச்சி தீண்டியதால், இங்கு அனைவருக்கும் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!'' என்று கூறிவிட்டு, மற்றவர்களை அழைக்கிறார்.

"பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரியவில்லை.''

நீதிபதி பீதிகொண்டதுபோலவே, மற்றவர்களும் பீதி அடைகிறார்கள்.

குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாதவனும் கூடுகின்றனர்.

வழக்குமன்றத்திலிருந்தோர், வதைபடுவதைக் காட்டுகிறது குட்டிப் பிசாசு!

நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக்கிடக்கும் பேர்வழி களைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்! - என்றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது, குட்டிப் பிசாசு!

"இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங்களிலே மிகப் பெரும்பாலோராக உள்ளனர்'' என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன்.

"இவர்கள் இப்படியேதான் இருப்பார்களா? என்று கேட்கிறான்'' சிந்தித்தவன்.

ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன்.

எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன்.

நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப்பிணங்கள் மனிதத்தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன்.

நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டவன்!!

தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்குவார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து - எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து "சுயசிந்தனை' செய்து, அதன் காரணமாகக் கொடுமைப்படுத்தப்பட்டாலும் தாங்கிக் கொள்வர் என்ற பேருண்மையையும், நாடகம் விளக்கிக் காட்டுகிறது.

கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெறவேண்டிய பாடம்.

ஆனால், சர்வாதிகாரிகள் போலவா நமது அரசு, எண்ண, எழுத, பேச, கேட்க, உரிமை தராது இருக்கிறது என்று காங்கிரசார் கேட்பர், குறும்புச் சிரிப்புடன். பெரிய தலைவர்களே கூடச் சில வேளைகளில், மார்தட்டிக்கொண்டு பேசுகிறார்கள். "நாங்கள் அல்லவா பேச்சுரிமை கொடுத்தோம்!'' என்று. இன்னும் சிலர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கினர், "நாங்கள் மட்டும் நினைத்திருந்தால், உங்களை ஒழித்துக் கட்டிவிட்டிருப்போம். போனால் போகட்டும் என்று விட்டுவைத்திருக்கிறோம்'' என்று கொக்கரிக்கிறார்கள்.

இவர்கள் அளித்துள்ள பேச்சுரிமை, எத்தனை எத்தனை வளையங்கள் போடப்பட்டதாக இருக்கிறது என்பதுகூடக் கிடக்கட்டும் - பேச்சுரிமையை இவர்கள், கொடியவன் என்று கண்டிக்கப்பட்ட வெள்ளையன் காலத்திலே பெற்றுச் சுவையைக் காணவில்லையா?

சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரியைப் பிடித்தாட்டுவேன்! என்று பேசிடச், சத்தியமூர்த்திக்கு வெள்ளைக்காரன் உரிமை தந்தான் - நேருவுக்குக் கருப்புக்கொடி இன்னின்ன கட்டுத் திட்டத்தோடுதான் காட்டவேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கூறிட, கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிடும் உரிமையையும் தர மறுத்து, வழியிலேயே மடக்கிப் பிடித்துக்கொண்டுபோய், போலீஸ் கொட்டடியில் நம்மை அடைத்தவர்கள், இவர்கள். இவர்கள் பேசுகிறார்கள், பேச்சுரிமையை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதாக!

சர்வாதிகாரி, பேச்சுரிமை தரமாட்டேன் என்று அறிவித்து விடுகிறான் - காங்கிரஸ் ஜனநாயகவாதிகளோ, பேச்சுரிமை தந்திருக்கிறோம் என்று கூறிக்கொண்டே, எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகளை நசுக்க, நானாவிதமான முறைகளைத் தொடர்ந்து நடத்தியபடி உள்ளனர். எதிர்க் கட்சிகள் எடுத்துக் காட்டும் குற்றம் குறைகளுக்கு, தக்கவிதத்தில் மறுப்புரை கூறாமல், நாட்டு மக்களிடம் சென்று, எல்லா எதிர்க்கட்சியினரும் நாசக்காரர்கள், நாட்டுத் துரோகிகள், அறிவற்றவர்கள்என்றெல்லாம் ஏசித் திரிகின்றனர், தம்பி! கனம். காமராஜரே, பேசுகிறார், தி. மு. கழகத்தவர், "அரசியல் அப்பாவிகள்' என்று. இவர் ஈராறு ஆண்டுகள், அகில உலகப் பல்கலைக் கழகத்திலே அரசியல் பெரும் பேராசிரியராகப் பணியாற்றிப் பக்குவம் பெற்றவர் போலவும், சீனத்து மாசேதுங்கும் சோவியத் நாட்டு குருஷேவும், அமெரிக்க ஐசனோவரும் பிரிட்டிஷ் மாக்மிலனும், இவரிடம் பாடம் கேட்டுப் பயிற்சி பெற்ற மாணவர்கள் போலவும், எண்ணிக் கொண்டாரோ என்னவோ, நம்மை, அரசியல் அப்பாவிகள் என்கிறார்.

கிராமத்துப் பெரியதனக்காரர், வெட்டிய கிடாவின் இறைச்சித் துண்டுகளை, இன்னின்னாருக்கு இவ்வளவு என்று எடுத்து வைக்கச் சொல்லிக் கொடுத்தனுப்புவது போன்ற அலுவல், இவருக்கு, காங்கிரஸ் அரசியலில்! இவருடைய "அபாரமான' ஆற்றலுக்காக, இவரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரு பண்டிதர் முதலமைச்சராக்கி வைத்ததுபோன்ற ஒரு மன மயக்கம்போலும், இவருக்கு!

திராவிட இன உணர்ச்சி மலர்ந்துள்ள இடத்தில், ஆச்சாரியார் போன்றோர் ஆட்சியில் அமர்ந்திருப்பது அமளிக்கு வழிகோலும் என்ற அச்சத்தால், திராவிட இனத்தவ ராகவும், அதேபோது அந்த உணர்ச்சியை அறிந்துகொள்ளத் தக்க அறிவாற்றல் அற்றவராகவும் ஒருவர் கிடைத்தால், அவரைப் பிடித்திழுத்து தலையில் மகுடத்தைக் கவிழ்த்து உட்கார வைத்தால், நாட்டிலே அமளி மூளாதிருக்கும் என்பதன்றி, பிறிதோர் நோக்கத்தை நேரு பெருமகனாரும் கொண்டிருக்க வழி இல்லை.

இவர் நம்மை ஏசுகிறார், அரசியல் அப்பாவிகள் என்று!!

நடுநிலையாளர், இங்ஙனம் எதிர்க்கட்சியினரை முறைதவறி ஏசுவதும், முரட்டுத்தனமாகத் தாக்குவதும், சரியல்லவே! என்று கூறும்போது, கோபம் கொப்பளிக்கிறது, காங்கிரஸ் ஜனநாயக வாதிகளுக்கு.

"ஓ! ஓ! யார் தெரியுமா நாங்கள்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை விரட்டிய வீராதி வீரர்களாக்கும்! சுயராஜ்யம் பெற்ற சூரர்கள், அறிவீர்! சுயராஜ்யம் என்ன, விளையாட்டுக் காகப் பெற்றதாக எண்ணுகிறார்களோ!!'' - என்று எக்காளமிடுகின்றனர்.

தம்பி! கைதியாக்கப்பட்டிருக்கும், மெண்டாரிஸ் "ஏனோ தானோ' அல்ல!

பிறந்தது செல்வக் குடியில். விளைவு தெரியாமல் காரிய மாற்றிடத்துடிக்கும் காளைப் பருவத்தினர் அல்ல. பிறந்தது 1899!! நான் பள்ளிக்கூடம் போனதே இல்லை என்று கூறிக்கொண்டு, பல்கலைக்கழகப் பாதுகாவலர்களுக்கு "அறிவுரை' கூறப் புறப்படும், அலங்கோலம் காண்கிறோமே, அதுபோல் அல்ல; மெண்டாரிஸ், பார் புகழும் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்தவர்.

1917-ல், உதுமானிய சாம்ராஜ்யப் படையில் சேர்ந்து பணியாற்றியவர்.

உதுமானிய அரசு ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அலங்கோல ஆட்சி நடத்தியதால் துருக்கி, "ஐரோப்பாவின் நோயாளி' என்று பலராலும் நையாண்டி செய்யப்படும் நிலையில் கிடந்தது; அதுகண்டு வெகுண்டெழுந்து விடுதலைப் போர் நடாத்த முனைந்தார், கமால்பாஷா - மெண்டாரிஸ், அந்த வீரப் படையில் சேர்ந்து துருக்கிக்குப் புதுவாழ்வு பெற நடத்தப்பட்ட, புனிதப் போரில் பெரும்புகழ் ஈட்டியவன்.

அழகிய ஆரணங்கை மணம் புரிந்துகொண்டு, மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகி, செல்வ நிலையில் இருந்து வந்தான் - 1981-ல், கமால்பாஷா அவர்களே அழைத்து, மெண்டாரிசை அரசியல் அலுவலில் ஈடுபடச் சொன்னார்.

பாராளுமன்றத்திலே இடம் பெற்ற பிறகுங்கூட, முன் வரிசை நாடாமல், வாளா இருந்து வந்தார்.

1950லே, அவர் தலைமையில் கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபட்டு, மகத்தான வெற்றி பெற்றது.

மிகப் பெரிய தேக்கங்கள், அணைகள், எஃகுத் தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் எனும் பலவற்றைத் துவக்கினார், துருக்கியின் செல்வம் வளர வேண்டும், பொருளாதாரம் பலப்பட வேண்டும் என்பதற்காக.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பாராளுமன்றத்திலே 610 இடங்களில் 421 இடங்களை மெண்டாரிஸ் கட்சி பெற்றது!

அவ்வளவுதான்! ஆணவம் பிடித்துக்கொண்டது.

எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூடினாலும், நம்மை என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் தடித்தது. தடித்துப் போகவே, திட்டம் தீட்டும்போது, எவரையும் கலந்து பேச வேண்டும் என்ற அக்கறை எழுவதில்லை - நிறைவேற்றுவதிலே நேரிடும் ஊழல்களை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை; மாறாக, எதிர்க் கட்சிகளை ஏளனம் செய்தார்.

ஜெர்மன் நாட்டுப் பொருளாதார நிபுணர் எர்கார்டு என்பார்கூட, நிறைய கடன் வாங்கி வாங்கித் தொழிலை நடத்துகிறார்கள் - வருவாய் குறைவு; மிதமிஞ்சிய செலவு... இது ஆபத்து. நிர்வாகமும் ஒழுங்காக இல்லை! - என்று எடுத்துக் காட்டினார். தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தினால், இறுமாந்து கிடந்த மெண்டாரிஸ், அந்த நிபுணர் பேச்சையும் துச்சமென்று கருதினார்.

அவனுக்கென்ன தெரியும்? இவனுக்கென்ன தெரியும்? இவன் வாலை ஒட்ட வெட்டிவிடுவேன் - அவனை அடியோடு அழித்துவிடுவேன் - என்றெல்லாம் பேசுவது, ஜனநாயகச் சர்வாதிகாரிக்கு ஏற்படும் நோயின் குறி!

அந்த நோய் பிடித்துக் கொண்டால், வேண்டுகோளைப் புறக்கணிக்கச் சொல்லும், நல்லுரையைக் கேட்க மனம் இடம் தராது, நாமே எல்லாம் என்ற நினைப்புப் புகுந்து குடையும்!

தம்பி! நாம் கேட்கும் "திராவிட நாடு' அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; தமிழ் நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்குமிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா?

தேவையான அளவு தன்மான உணர்ச்சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை - தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா?

"தமிழ்நாடு' என்று பெயரிடும்படி, தி. மு. கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா!!

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள்' வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர்கழகம், தமிழாசிரியர் கழகம் - இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன.

பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது?

எவர் சொன்னாலும் சரி, என் போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப் பதா? என்ன கூறினாலும் விளக்கம் பெற முடியாத மந்த மதியினர் என்பதா?

ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!!

ஒருவர் சாகக் கண்டும் மனதை இரும்பாக்கிக்கொண் டாகிலும், கடமையைச் செய்ய வேண்டும் - செய்தேன் - என்று கூறவாவது, காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்து காட்டினாரா?

வேறு எதைச் செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா?

தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை.

அண்ணன்,

12-6-1960