அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கடமையாற்றிட
1

பாகிஸ்தானுடன் போர்
அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைப்பு
நாடு பிடிக்கும் நப்பாசை நமக்கு இல்லை
தாக்குதலைத் துவக்கியது பாகிஸ்தானே!
உலக நாளேடுகளின் கண்டிப்பு வல்லரசுகளின் விபரீதப் போக்கு.

தம்பி,

நாடே பாசறையாகி, இல்லங்கள் வீரக் கோட்டங்களாகி, பேச்செல்லாம் பரணியாகி வீரம் கொப்பளித்துக் கிளம்பி, பகைவர்களைப் பொசுக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் நாட்களைக் காண்கிறேம் - பகைப்படைகள் சிதறி ஓடுகின்றன; டாங்கிகள் நொறுக்கப்படுகின்றன; அரண்கள் பிளந்தெறியப் படுகின்றன, ஆற்றல் மறவர்கள் அகிலம் வியந்திடும் வெற்றிகளை ஈட்டிக் குவித்தபடி உள்ளனர்; நேற்றுவரை தயக்கம் காட்டி வந்தவர்கள் இன்று என்ன இவ்வளவு தீரச் செயல் புரிகின்றனரே, கொழுந்துவிட்டு எரிகிறதே அவர்தம் ஆற்றல் என்று எண்ணிப் பகைவர்கள் திகைக்கின்றனர் - அஞ்சா நெஞ்சினரான நம் படை வீரர்கள், மானம் காத்திடும் இந்தப் போரில் மகத்தான தீரம் காட்டி வருகின்றனர் - பாகிஸ்தானியத் தளங்களைத் தாக்கித் தகர்க்கின்றனர்; ஆணவக் கோட்டைகளை அழித்து வருகின்றனர்; எட்டுத்திக்கும் புகழ் முரசு கொட்டி வருகின்றனர்.

கவிகள் வேண்டும் வீர காவியம் புனைந்திட! அத்தனை வீரமிகு நிகழ்ச்சிகள் நித்த நித்தம் நடைபெற்று வருகின்றன, போர்க்களத்தில் என்று அமைச்சர் அளகேசன் கூறியுள்ளார்; அந்தப் பெருமித உணர்ச்சி இன்று நம் நாட்டினர் அனைவருக்கும் பொங்கிடும் நிலை!!

சீனப் படையெடுப்பின்போது நேரிட்டுவிட்ட சில சம்பவங்களைக் கொண்டு, இவர்கள் போரிடும் ஆற்றலற்றோர் - தாக்கிடின் தகர்ந்து போவர் - என்று ஒரு தவறான எண்ணம் கொண்டனர் பற்பல நாட்டினர், துளியும் எதிர்பாராத நிலையிலும் முற்றிலும் பழக்கமற்ற சுற்றுச் சார்பிலும், சீனர்களைச் சந்திக்க வேண்டி நேரிட்டுவிட்டதால், நமது படையினர் திருப்பித் தாக்கிடும் நிலையினை முழு அளவில் பெற முடியாமற் போய் விட்டது; ஆற்றல் அற்றதாலே அல்ல; அஞ்சா நெஞ்சுடை வீரர்க்குக் குறைவு ஏற்பட்டுவிட்டதாலே அல்ல என்பதனை உணர முடியாதவர்கள் மமதை கொண்டனர், வீர மற்றவர்கள் என்று கருதிக் கொண்டனர். இன்றோ, தவறு! தவறு! முற்றிலும் தவறு! என்று அலறியபடி புறமுதுகு காட்டுகின்றனர். அனைத்துக் கட்சியினர் முதலமைச்சர் பக்தவத்சலனார் தலைமையில் நடாத்திய பேரணியில் தம்பி கருணாநிதி கூறியபடி, புதிய புறநானூறு இயற்றப்பட்டு வருகிறது. தாக்கிடத் துணிந்த பாகிஸ்தான் மட்டுமல்ல, தருக்குடன் கிடக்கும் வேறு நாடுகளும், நமது வீரர்தம் ஆற்றலை உணர்ந்து கொண்டு வருகின்றன.

எந்த ஒரு நாடும், தனது சிறப்பினை, இரத்தத்தால் மட்டுமே எழுதிக் காட்டிட வேண்டும் என்ற நிலையினை நாம் விரும்புபவர் அல்ல; அஃது வரவேற்கத்தக்கதுமல்ல. ஆதரிக்கத்தக்கதுமல்ல. ஒரு நாட்டின் சிறப்பு, அந்நாடு மக்களை எத்தனை நேர்த்தியாக வாழவைத்திருக்கிறது, பிற நாடுகளுக்கு எத்துணை நட்புணர்ச்சி காட்டுகின்றது, உலகம் மேம்பாடடைய. மனிதக்குலம் தழைத்திட, பண்பாடு மிகுந்திட எவ்வகையில் பணிபுரிந்து வருகிறது என்பதிலேயே இருக்கிறது. இதனை உணர்ந்து, உலகில் அமைதி நிலவிடவும், பூசலும் புகைச்சலும் அற்ற நிலை மலந்திடவும், எத்தனை சிக்கலான பிரச்சினையாயினும் கலந்துரையாடித் தீர்த்துக் கொள்ளலாம், ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொள்ளத் தேவையில்லை என்ற குறிக்கோளைக் கடைப்பிடித்து, எரிச்சலூட்டப்பட்ட போதெல்லாம்கூட உணர்ச்சியைக் கட்டுப் படுத்திக் கொண்டு வந்ததனை, வலிவற்ற தன்மை என்றும் கோழைத்தனமென்றும் கருதிக் கொண்டு, படை கொண்டு தாக்கிட பாகிஸ்தானில் கொட்டமடித்துக் கொண்டுள்ள போர்வெறி கொண்டலையும் ஒரு கும்பல் துணிந்துவிட்டது. காஷ்மீரத்திலே "பிடாரிகளை' ஏவிவிட்டு, பெருத்த புரளிகளைக் கிளப்பிவிட்டு, அமளி மூட்டிட முனைந்தது. அம்முறை பலன் தராதது கண்டதும், படையினரைச் சிறுக சிறுக முதலிலும், பிறகு பெரும் அளவிலும், புதுமுறைக் கருவிகளுடனும் அனுப்பி அமளி எழச் செய்துவிட்டது. எல்லை தாக்கப்பட்டது, நாட்டின் தன்மானம் தாக்கப்பட்டது; மெள்ள மெள்ளக் காஷ்மீரத்தையே விழுங்கிவிடத் திட்டமிடப்பட்டது.

இஃது, எந்த நேரத்தில்? கட்ச் ஒப்பந்தம் ஏற்பட்டு பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற கட்டம் ஏற்படுத்தப்பட்ட நேரத்தில்.

கட்ச்சில் சமரசக் கோலம் புனைந்து காட்டிய அதேபோது காஷ்மீரில், படைகளை ஏவிவிட்டனர். இதனை அறமென்றோ அறிவாளரின் அரசியலென்றோ, சர்வதேச நியதிக்க ஏற்ற தென்றோ, எவரும் கூறார். இது சதிச் செயல்! நன்னெறியை மறந்திடத் துணிந்திடும் தூர்த்தரின் முறை. இதற்கு ஒரே ஒரு பதில்தான் உண்டு - திருப்பித் தாக்குவது. குண்டுக்குக் குண்டு! தாக்குதலை முறியடிக்கத் தாக்குதல்! இந்தியா இதனைத்தான் மேற்கொண்டது.

லால்பகதூர், அவசரப்பட்டு அல்லது ஆத்திரப்பட்டு, இந்த முறையை மேற்கொள்ளவில்லை; சொல்லப்போனால், தாக்க வேண்டும்! தாக்கித் தகர்க்க வேண்டும்! கட்ச் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டும்! பாகிஸ்தானியத் தளங்களைத் தவிடு பொடியாக்க வேண்டும்! என்ற முழக்கமெழுப்பினர் பாராளுமன்றத்தில் பற்பலர்; அமைதி! அமைதி! பாகிஸ்தான் அதிபர்கள் அறிவை இழந்திட மாட்டார்கள்! ஆத்திரப் படாதீர்கள்!! என்று கூறி வந்தவர், லால்பகதூர். அவரே, இதுபோது, பாகிஸ்தான் போர் வெறியர்களின் கொட்ட மடக்கிட, தாக்குவதுதான் முறை என்று முடிவெடுத்தார் என்றால், நல்வழிகள் அனைத்தையும் பாகிஸ்தானிய அதிபர்கள் தாமாகவே, ஆணவம் காரணமாக அடைத்துவிட்டனர் என்பதுதான் காரணம். அப்போர் வெறியர்கள் தாமே மூட்டிக் கொண்டு விட்ட பெருநெருப்பில் வீழ்ந்து இன்று கருகிக் கொண்டுள்ளனர் - தாங்கிக் கொள்ளத் தெரிந்த இந்தியாவுக்குத் தாக்கவும் தெரியும், எதிரி தலை தெறிக்க ஓடித் தீர வேண்டிய அளவுக்குச் செம்மையாகத் தாக்கத் தெரியும் என்பதனைத் தரணியே இன்று உணர்ந்து கொண்டு விட்டிருக்கிறது. உலக வல்லரசுகள் வியப்பால் வாய்பிளந்து நின்றிடத் தக்கவிதமான வீரப் போரிட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றவண்ணமுள்ளனர் நமது படையினர்.

பீரங்கி வாயிலிருந்து வேக வேகமாகக் குண்டுகள் கிளம்பியபடி இருந்தனவாம்; துளியும் அஞ்சாது, உயிரைச் துச்சமென்று எண்ணி, எப்படியும் பீரங்கிக்காரனை ஒழித்தே தீருவேன் என்ற உறுதி பூண்டு, எதிரே பாய்ந்து வந்து கொண்டிருக்கும் குண்டுகளைப் பூச்செண்டுகளாக எண்ணிக் கொண்டு, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று, கைவெடிக் குண்டு வீசி பீரங்கி பிளந்து போகச் செய்தானாம் ஓர் ஆற்றல் மறவன், நம் நாட்டு வீரன்! வாழ்க அவ்வீரன்! எந்நாடும் போற்றிடும் அத்தகு வீரத்தை! வெறி தலைக்கேறிய நிலையில், விமானத் தாக்குதலை நடத்தி மக்களை - படையினரைக் கூட அல்ல - ஊர் மக்களைப் படுநாசமாக்கிட முனைகின்றனர் பகைப் படையினர்; நமது விமானப் படையினர் சுட்டு வீழ்த்துகின்றனர் அவ்விமானங்களை! விழுகின்றன, எரிகின்றன! கருகி விடுகிறது, விமானமும், அதனை நம்பிக் கிடந்திடும் வெறியரின் ஆணவமும்!! தீரச் செயல்கள் ஒன்றல்ல; பல; பலப் பல! வீரப் பதக்கம் பெற்று வருகின்றனர் பலர்; பெருமாள் எனும் தென்னவர் அவர்களில் ஒருவர்.

போதிராஜு எனும் மற்றோர் தென்னவர், குண்டூர் மாவட்டத்தினர், பாகிஸ்தானிய ஜெட் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளார்; இருபத்தைந்து வயதாம் இந்த வீரனுக்கு; வீரச் சக்கரம் பெற்றுள்ளான்.

தென்னகத்தவரான பொறியியல் வல்லுநர்கள் - ஒருவர் குறிப்பிடத்தக்கவர், பெயர் லட்சுமணன் - போர் முனையில் அரும் பணியாற்றி வருவதனையும், போர் முனையில் முன்னணியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் தென்மொழி ஒலி கேட்டபடி இருப்பதனையும், போர் முனை சென்று செய்தி கண்டறிந்துள்ள "இந்து' செய்தியாளர் இ.கே. ராமசாமி பூரிப்புடன் தெரிவித்திருக்கிறார்.

டாங்கிப் படையை அவர்கள் மெத்தவும் நம்பிக் கிடந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. டாங்கிகளைத் தந்தவர்கள் அத்தனை தைரியம் கூறியிருந்திருப்பார்கள் போலிருக்கிறது. இந்த டாங்கிகளில் ஒரு பத்து உருண்டோடி வந்தால் போதும், இந்தியப் படையினர் மிரண்டோடிப் போவார்கள், அத்தகைய பயங்கர ஒலி கிளம்பும், அவ்வளவு பலமாகத் தாக்கும் வலிவுள்ளவை என்றெல்லாம் கூறித்தான் அமெரிக்கா பாடான் டாங்கிகளைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இன்று அமெரிக்காவே அச்சம் கலந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்து கிடக்கிறதாம். பாடான் டாங்கிகள் பொடிப் பொடியாகி விடுவது கண்டு! பீரங்கிகளைக் கொண்டு தாக்குகிறார்கள், அந்த டாங்கிகள் பிளந்து போகின்றன; உருப்படியாக உள்ளவைகளிலே உள்ளவர்கள் உயிர் பிழைத்தால் போதுமென்று, டாங்கிகளைக் களத்திலே விட்டு விட்டு ஓடுகின்றனராம்!! டாங்கிப் படைகளைக் கொண்டு எந்த முனையிலும் நமது படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்திட முடியவில்லை; சுற்றி வளைத்துக் கொண்டுள்ளன இந்தியப் படைகள் லாகூர் நகரினை, சியால்காட் தளத்தினை தம்பி! இந்த மடல் உன் கரம் சேர்வதற்குள் என்னென்ன பாகிஸ்தானிய அரண்கள் பிளக்கப்படும் என்று கூறுவதற்கு இல்லை ஒன்று தெரிகிறது, தெளிவாக; எந்தப் போர் முனையிலும் பாகிஸ்தானியப் படையின் கரம் ஓங்கி நிற்கவில்லை; எல்லா முனைகளிலும் வெற்றி தொடர்ந்து, படிப்படியாக நமது பக்கம் கிடைத்து வருகிறது போர் முறை அறிந்தோர் கூறுகின்றனர், இதே விதமான நிலையில் இன்னும் ஒரு திங்கள் கூடப் பாகிஸ்தானால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதாக! காஷ்மீரப் பகுதியிலிருந்து கராச்சி வரையில் பாகிஸ்தானியப் படை பிளக்கப்பட்டு விட்டிருக்கிறது. தோற்றுப் போகப் போவது தவிர்க்க முடியாதது என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கிய பிறகும், பாகிஸ்தானியப் போர் வெறியர்கள், அறிவுத் தெளிவு பெற்றார்களில்லை; ஆணவப் பேச்சை மறந்தார்களில்லை. கொக்கரித்தபடி உள்ளனர்.

காரணம் என்ன? தோல்வி மேல் தோல்வி பெற்று பெற்று வரும் அவர்களைத் தூக்கி எறிந்துவிடும் விதமான ஆத்திர உணர்ச்சி பாகிஸ்தான் மக்களிடம் ஏற்பட்டு விடுமே என்ற திகில்! பொய் பேசி, அந்த மக்களை மயக்கத்திலாழ்த்தலாமா என்று எண்ணச் செய்கிறது. இட்லரும், முசோலினியும் இதே போக்கையே மேற்கொண்டனர்; வீழ்ச்சி நெருங்கிட நெருங்கிட, வீறாப்பு மிகுந்திடும்! சர்வாதிகாரிகளின் - போர் வெறியர்களின் இயல்பு அது. பாகிஸ்தான் மக்களிடம் தாம் செய்துள்ளதாக எதையாவது எடுத்துக் காட்ட வேண்டாமா என்ற எண்ணத்தில், அமிர்தசரசிலிருந்து விசாகப்பட்டினம் வரையில் பல்வேறு இடங்களில் - கிராமங்களில் கூட - விமானத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். பீதி ஏற்படும் என்று ஒரு எண்ணம். நாட்டு மக்களின் மனத்திடம் என்றும் இந்த அளவு உன்னதமானதாக இருந்ததில்லை; அத்துணை நெஞ்சுரத்துடன், நீதி நமது பக்கம், அந்த நீதியை நிலைநாட்டத்தக்க வலிவு படைத்த படை நம்மிடம் என்ற நம்பிக்கையுடன், மக்கள் அமைதியாக உள்ளனர்; இந்தப் போர் விரைவிலே வெற்றிகரமாக முடிவடைய எந்தவிதமான தியாகத்தையும் மேற்கொள்ளும் துணிவுடன் உள்ளனர். கட்சிப் பூசல்கள் கிளர்ச்சிகள் எல்லாம் தாமாக மறைந்துவிட்டன; நாட்டைக் காத்திடும் பணியில் நாம் அனைவரும் ஒன்று என்ற முழக்கம் கேட்பது மட்டுமல்ல, உறுதி ஏற்பட்டு விட்டிருக்கிறது, ஜனநாயக முறையின் "இருப்பு' வலிவு முழுவதும் இன்று திரட்டப்பட்டு, பகையை முறியடிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் அதிபர்கள் பல தவறான கணக்குகளைப் போட்டுக் கொண்டு, போர்த்திட்டம் வகுத்துக் கொண்டனர். அவைகளிலே முக்கியமானது, இந்தியாவிலே, ஒற்றுமை கிடையாது, ஏற்படாது, பேதமும் பிளவும், போட்டியும் பூசலும் மாச்சரியமும் மனத்தாங்கலும் நிரம்ப உள்ளன. ஆகவே, ஒன்றுபட்டு நின்று போரிடும் ஆற்றல் கிடையாது, மூலைக்கு ஒருவராகி நிற்பர், முறியடித்துவிடலாம் என்ற எண்ணமாகும். அந்த எண்ணம் தடித்ததற்குக் காரணம், இங்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கும் நிலைமை. போர்நிலை மூள்வதற்குச் சின்னாட்களுக்கு முன்பு தில்லி பாராளுமன்றத்தில் லால்பகதூர் அமைச்சரவையிடம் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது; பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் லால்பகதூர் சர்க்காரின் போக்கைச் சாடினர். இதுபோன்ற நிகழ்ச்சிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ளும் நிலையில் அயூப்கான் சர்க்கார் இல்லை; அது இராணுவத்தைக் காட்டி ஜனநாயகத்தை மூலைக்கு விரட்டிவிட்ட சர்வாதிகார அரசு; எனவே ஜனநாயகம், கருத்து வேற்றுமைகளுக்கு, அரசாளும் வாய்ப்பில் "எனக்கு உனக்கு' என்று போட்டி போட்டுக் கொள்வதில் உரிமை அளிக்கிறது என்பதனையும், அந்த உரிமையைப் பெற்றுள்ளவர்கள் நாட்டுக்குப் பேராபத்து என்ற நிலை மூண்டிடும்போது கட்சிப் பாகுபாடுகளை மறந்து, எல்லோரும் நாட்டுக்காக, எந்தத் திட்டமும் நாட்டைக் காத்திட என்ற மூலத்தை உணர்ந்து, ஒன்றுபட்டு நின்றிடும் கடமையினைச் செம்மையாக நடத்திடுவர் என்பதனையும், பட்டாளத்தில் பத்தாம் இடமோ எட்டாமிடமோ பெறத்தக்க நிலையிலிருந்து, பாராளுமன்ற முறையை மாய்த்துவிட்டு, பட்டத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டு "பாதுஷா' போன்றாகிவிட்ட அயூப்கான் அறியமாட்டார். அறியும் திறனும் இயல்பும் அற்றவரானதால் தான் சின்னாட்களுக்கு முன்புதானே பாராளுமன்ளத்தில், ஆளும்கட்சியுடன் எதிர்க்கட்சிகள் மோதிக் கொண்டன, வெளியேறு என்றும், வேண்டாம் உமது ஆட்சி என்றும் முழக்கமிட்டார்களே இந்நிலையில் இவர்கள் சர்க்காருடன் ஒத்துழைக்கவா போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடும் - ஜனநாயக முறையின் நேர்த்தியினை உணராத காரணத்தால். ஆனால், என்ன காண்கிறார், காக்கி உடைக் கனவான்! கட்சிகள் பலப்பல என்ற நிலையே மறைந்து போய் எல்லோரும் ஒரே அணிவகுப்பில் என்ற நிலை! எந்தெந்த அரசியல் கட்சிகள் லால்பகதூர் சர்க்காரிடம் நம்பிக்கை இல்லை என்று சின்னாட்களுக்கு முன்பு தெரிவித்தனவோ, அதே கட்சிகளின் தலைவர்கள் கூடி, லால்பகதூர் சர்க்காருக்கு முழு ஒத்துழைப்பு, தயக்கமற்ற ஒத்துழைப்பு, நிபந்தனையற்ற ஒத்துழைப்புத் தந்திட உறுதி கொண்டோம் என்று அறிவித்தனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம், பாராளுமன்றத்தில், ஆகஸ்ட்டு 23-ம் நாளில்!

செப்டம்பர் 6-ம் நாள் பாராளுமன்ற மாளிகையில் ஐம்பதாவது எண் கூடத்தில், லால்பகதூர் தலைமையில், எல்லாக் கட்சித் தலைவர்களும் கூடுகின்றனர்; நாட்டைக் காத்திட, பகைப்படையை விரட்டியடித்திட, நீதியை நிலை நாட்டிட. நாங்கள் அனைவரும் ஆளுங்கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்குத் துணை நிற்போம் என்று சூளுரைத்தனர்.

ஜனநாயக முறை என்பது அருமை மிகு நெறி என்பதற்கு இதனினும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு இருக்க முடியுமா! ஜனநாயகத்தை மாய்த்துவிட்டு, போர்வெறிக் கும்ப-டம் அரசு சிக்கிக் கொள்ளச் செய்துவிட்ட அயூப்கானாலும், புட்டோ போன்றார்களாலும் இதனை உணர்ந்திட முடியுமா! விட்ட குறை தொட்ட குறை போலச் சிறிதளவு ஜனநாயக உணர்வு இருந்திடினும், பீகிங்கின் மாசேதுங் அதனைக் கொன்று, மென்று தின்று விட்டிருந்திருப்பாரன்றோ!

எனவேதான் தம்பி, அயூப்கானால் உண்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை. போர் மூண்டிடினும், கம்யூனிஸ்டும் கழகமும், சோஷயலிஸ்டும் ஜனசங்கமும், சுதந்திராவும் இன்ன பிறவும் மக்களைத் தனித்தனி முகாம்களில் இழுத்து வைத்துக் கொள்வார்கள், நாடு ஒன்றுபட்டு இருந்திடாது என்று எண்ணிக் கொண்டார் போலும் அவர் மட்டுமல்ல, அவனியே காண்கிறது, நாடே திரண்டெழுந்து நிற்பதை! எல்லாக் கட்சிகளும், எம்முடைய பணி நாட்டைக் காத்திட ஒன்றுபடுவதே என்று முழக்கமெழுப்புவதை!

தம்பி! தில்லியில், பிரதம மந்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் சர்க்காரை மாற்றியாக வேண்டும் என்ற கருத்தினை மிக அழுத்தமாகக் கொண்டுள்ள தலைவர்கள் பலரும் வந்திருந்தனர்.

இந்த சர்க்கார் முதுகெலும்பற்றது, உரிமைகளைக் காத்திடும் ஆற்றலற்றது என்று கூறிவரும் கோல்வால்கர் ஒரு புறம்; இந்த சர்க்கார் மாற்றப்பட வேண்டும், புரட்சி பூத்திட வேண்டும், புதுவாழ்வு மலர்ந்திட வேண்டும், பாட்டாளி அரசு அமைந்திட வேண்டும் என்று முழக்கமிடும் கம்யூனிஸ்டு தலைவர் டாங்கே ஓர்புறம், அவருக்குத் துணையாக புபேஷ்குப்தா; கோல்வால்கருக்குத் துணை போல ஜனசங்க வாஜ்பாய்! பிரஜா சோஷியலிஸ்டு தலைவர்! சோஷியலிஸ்டுத் தலைவர்! குடியரசுக் கட்சித் தலைவர்! ஆங்கிலோ - இந்திய வகுப்பினரின் தலைவர் பிராங் அந்தணி! சுதந்திரக் கட்சித் தலைவர் மசானி, ரங்கா! முஸலிம்லீக் தலைவர் முகமது இஸ்மாயில்! சீக்கியத் தலைவர்கள்! அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர், லால்பகதூர். அமைச்சர் அவையினரான நந்தா, சுப்பிரமணியம், இந்திராகாந்தி, சபாநாயகர் ஹுக்கும்சிங்! இப்படி பல தலைவர்கள். நானும் இருந்தேன்.

இப்படி ஒரு மன்றம் அமைய முடியும் என்றே அயூப்கான் எண்ணியிருந்திருக்க முடியாது; ஏனெனில் இவர்களில் பலர் சில நாட்களுக்கு முன்பு லால்பகதூர் சர்க்கார்மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தவர்கள்.

ஆனால், ஒன்றுபடுகிறார்கள் - வேற்றுமைகளை மறக்கி றார்கள் - எப்படி? புதிர் ஒன்றுமில்லை ஜனநாயகவாதிகளுக்கு அரசியல் தெளிவு இருக்கிறது. கட்சி - சர்க்கார். நாடு - என்பனபற்றிய தெளிவு நன்றாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அடிப்படை நாடு! நாடு நலம் பெறத்தான் சர்க்கார். அந்த சர்க்கார் நல்ல முறையில் அமைந்திட வழிகாட்டத்தான் கட்சிகள்! வழி அமைப்பதிலேதான் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள், வேற்றுமைகள், பூசல்கள், போட்டிகள்.

ஆனால், நாடு எனும் அடிப்படை வலிவும் பொலிவும் உள்ளதாக இருந்தாக வேண்டும். அதற்கு ஊறு விளைவிப்பவன் எவனெனினும் அவனை எதிர்த்தொழித்திடும் கடமை எல்லாக் கட்சிகளுக்கும் உண்டு. அந்தக் கடமையாற்றுவதிலே, கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நின்றே தீரும், இதுவே ஜனநாயகத்தில் உள்ள வலிவு, இருப்பு!! இது எத்தகைய வலிவு என்பதனை, இன்ற நாடே கட்சிப் பாகுபாடுகளைத் தூக்கித் தொலைவிலே வைத்துவிட்டு, ஒன்றுபட்டு நிற்பதிலிருந்து, உணர்ந்து கொள்ளலாம் - தெளிவுள்ளவர்கள் - வெறும் தேசம் ஆள்பவர்களால் இந்தத் தெளிவைப் பெறமுடியாது.

தாங்கள் மிக நியாயமானது என்று நம்பிடும் கொள்கை வெற்றிக்காக நடத்தத் திட்டமிட்டிருந்த கிளர்ச்சிகளைப் பல கட்சியினர் நாடு இன்றுள்ள நிலையில் கூடாது என்று நிறுத்தி வைத்துவிட்டனர்.

நாடு பகைவர்களால் தாக்கப்படக் கூடும் என்ற சூழ்நிலையைக் கருதி. நமது கழகம் எந்தவிதமான கிளர்ச்சிகளிலும் ஈடுபடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்று அந்தக் கூட்டத்தில் நானும் எடுத்துரைத்தேன்.

உணவுப் பிரச்சினை, தொழிலாளர் உரிமைப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, ஊதிய உயர்வுப் பிரச்சினை என்பவைகள் முக்கியமானவை என்ற போதிலும், நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைக்கே முதலிடம்; அந்தப் பிரச்சினையில் ஈடுபட வேண்டிய நிலை எழுந்துள்ளபோது மற்றப் பிரச்சினைகளுக்கு இடம் இல்லை என்பதனை உணர்ந்து எல்லாக் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறையிலே, தம்பி! நமது கழகம் செம்மையாகப் பணியாற்றும் என்பதிலே எனக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு. அதற்கேற்ற முறையில், கழகச் செயல் முறையை வகுத்துக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.

கட்சிகளுக்குள் உள்ள வேறுபாடுகளை எடுத்துப் பேசிக் கொண்டிருப்பது, இப்போது பொருத்தமற்றது, பொருளற்றது, பொல்லாங்கை விளைவிக்கக் கூடியது.

மக்களுடைய நேரமும் நினைப்பும் இன்று பல்வேறு பிரச்சினைகளிலே செலவிடப்படக் கூடாது; சிதறவிடக் கூடாது. நேரமத்தனையும் நினைப்பு அவ்வளவும், ஆற்றலத்தனையும் வசதிகள் அனைத்தும், நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை முறியடித்திடும் கடமைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆளுங்கட்சியிடம் எமக்கு நிரம்பக் கருத்து வேறுபாடுகள் உண்டு; பல பிரச்சினைகளுக்குப் பரிகாரம் கண்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் இது அல்ல கணக்குப் பார்க்கும் காலம்: இப்போது நமக்குள்ளது ஒரே பணி, நாட்டைக் காத்திடும் பணி; அதிலே எனது கழகம் லால்பகதூர் சர்க்காருடன் முழு அளவில் ஒத்துழைக்கும் என்று அன்றைய கூட்டத்திலே கூறினேன். நான் எண்ணுவது போலவேதான் கழகத் தோழர்கள் அனைவரும் எண்ணுவார்கள் என்பதனை நன்கு அறிந்திருக்கிறேன். சீனன் படை எடுத்த நாட்களில், கட்சிக் காரியங்களை மூட்டை கட்டி ஒருபுறம் எடுத்து வைத்துவிட்டு, போர் நடாத்திட ஆதரவு திரட்டிட நம்மால் இயன்றதனைச் செய்திருக்கின்றோம். அதுபோலவே இது போதும். அன்று இருந்ததைவிட இன்று போர் விரிவான அளவிலே அமைந்துவிட்டிருக்கிறது.

போரின் விரிவும் வேகமும், தன்மையும், நாமாக உண்டாக்கிக் கொண்டதல்ல; பாகிஸ்தானிய அதிபர்களின் நோக்கமும் போக்கும், அவர்கள் ஏவிடும் படைகளின் பாய்ச்சலும் எவ்விதம் அமைகிறதோ, அதற்கு ஏற்றவிதமாக; நமது போர்முறை அமைய வேண்டியிருக்கிறது.

காஷ்மீரில் நுழைபவர்கள் பாகிஸ்தானிகள் அல்ல; விடுதலை விரும்பிகள் என்று பசப்பிய நிலையிலிருந்து பாகிஸ்தான் வெளிப்படையாகவே பெரும்படையை ஏவி, காஷ்மீர் பகுதியைத் தாக்கிய பிறகே, இந்தியத் துருப்பு, பாகிஸ்தான் அரண்களைத் தாக்கும் திட்டத்தை மேற்கொண்டது.

பாம்புகள் வருகின்றன! தடியடிபட்டுச் சாகின்றன! ஆனாலும், மேலும் பல பாம்புகள் வந்தபடி உள்ளன என்றால், வருகிற பாம்புகளை அடித்துக் கொல்லுவதுடன் எந்தப் புற்றிலிருந்து இந்தப் பாம்புகள் கிளம்புகின்றன என்று கண்டுபிடித்து, அந்தப் புற்றினை அழித்திட வேண்டாமோ! இல்லையெனில் காலமெல்லாம், தடி தூக்கிக் கொண்டு, எந்தப் பக்கம் பாம்பு வருகிறது என்று பார்த்தபடி அல்லவா இருக்க வேண்டி நேரிடும்! வேறு வேலைக்கே நேரம் இருக்காதே.

ஆகவேதான் புற்றுகளை அழித்திடப் படைகள் அனுப்பப்பட்டன!