அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கைராட்டை காவேரி (1)
1

காங்கிரஸ் தொண்டன் காவேரியும் கட்சியின் ஊழலும் -
வெள்ளையன் சென்றபின் நாட்டின் நிலை

தம்பி!

மங்கியதோர் நிலவினிலே, வெண் மணலில் அமர்ந்து கொண்டு, கொந்தளித்துக்கொண்டிருந்த கடலை ஒரு அலட்சியப் புன்னகையுடன் நோக்கினான் - கைராட்டை காவேரி. காவேரி என்ற பெயர், வழக்கமாகப் பெண்களுக்குத்தான் வைப்பார்கள் என்றாலும், தமக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைக்குச் செல்லமாக இந்தப் பெயரிட்டு வளர்த்தனர், பெற்றோர். கைராட்டை என்ற அடைமொழியைக் காவேரி, கடினமான உழைப்பிற்குப் பிறகு பெற்றான். கைராட்டை காவேரி தூய உள்ளம் கொண்ட காங்கிரஸ் தொண்டன் என்று நான் கூறியதிலிருந்தும், திங்களைக் கண்டு மகிழாமல், கடலின் கொந்தளிப்பைப் பார்த்த வண்ணம் இருந்தான் என்று குறிப்பிட்டதிலிருந்தும், கைராட்டை காவேரி, தனியாகத்தான் உட்கார்ந்திருந்தான், என்பதைத் தெரிந்து கொண்டிருப்பாய்.

காங்கிரஸ் கட்சி, நாட்டு விடுதலைக்கான போர்ப்பரணி எழுப்பிக் கொண்டிருந்த நாட்களில், காவேரி, தன்னுடைய நலன், எதிர்காலம், என்பவைக் குறித்துத் துளியும் எண்ணிப் பார்க்க முடியுமா! தேசிய ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டுக், காங்கிரஸ் தொண்டாற்றக் கிளம்பி, தொல்லைகளைத் தாங்கிக் கொண்டான்; தூய உள்ளத்தோடு பணியாற்றினான்; சுற்று வட்டாரத்தில் இருந்தோர், சுற்றத்தார், காவேரியைத் துவக்கத்திலே ஏளனம் செய்து பார்த்தனர்; பிறகோ அவனுடைய அறிவாற்றலைப் பாராட்டினர்; அளவளாவினர்; அவனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று மற்றவர்க்கு அறிவுரைகூடக் கூறினர்.

காவேரி, மற்றப் பணிகள் எல்லாவற்றையும்விடக் கைராட்டையை அனைவரும் புனிதப் பொருளாகக் கருத வேண்டும், நூற்பது தமது தலையாய கடமை என்று கொள்ள வேண்டும்; கதர் அணிவது தர்மம் என்று உறுதிகொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறித், தன் வட்டார முழுவதிலும் கைராட்டையைப் பரப்பும் பணியினை மிகத் திறம்பட, அதிக ஆர்வத்தோடு செய்து வந்ததன் காரணமாகத்தான், கைராட்டைக் காவேரி என்ற பெயர் கிடைத்தது. கடற்கரை மணலிலே அமர்ந்திருந்தபோது, அவன் மனம் அந்தப் பழைய நாட்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின்மீது பாய்ந்து சென்றது; உள்ளத்தில் அடிவாரத்தில் இருந்த நினைவுகள் துள்ளித் துள்ளி வெளிப்புறம் வருவதும், மீண்டும் அடிவாரம் செல்வதுமான நிலைமை - மனக்கடலிலே கொந்தளிப்பு. அவன் கைராட்டைக் காவேரியானபோது, கோட்டையிலே, அவன் விரும்பிய கொடி பறக்கவில்லை! இப்போது பறந்து கொண்டிருந்தது - பாவாணர் கூறினாரல்லவா, பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர் என்று, அதுபோல.

அதைக் கண்டு, அவன் மனத்தில் மகிழ்ச்சி அல்லவா பொங்கி இருக்க வேண்டும் - எண்ணம் ஈடேறிவிட்டது - விடுதலை கிடைத்துவிட்டது - புதுவாழ்வு பிறந்துவிட்டது - பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது - புனிதப் போரில் வெற்றி கொண்டாகிவிட்டது - என்றெல்லாமல்லவா, எண்ணிக் களிப்படைந்திருக்க வேண்டும், என்று கேட்கிறாய். அப்படித் தான் கேட்கத் தோன்றும். பலர் காவேரியை அப்படித்தான் கேட்கிறார்கள். ஆனால், கைராட்டைக் காவேரியின் மனதில் கோபம், ஏமாற்றம், திகைப்பு, துக்கம், வெட்கம் என்பவைகள் தான் கொந்தளித்துக் கொண்டிருந்தன - கடலில் முத்து இருக்கத் தான் செய்கிறது, ஆனால் எல்லா இடத்திலுமா! - இல்லையல்லவா? சுறாவும், அதற்கு இரையாகும் வேறு மீனினமும், பாம்பும், வேறு பல நச்சுப் பூச்சிகளும் நிரம்ப இருக்கின்றன. காவேரி, இதைக் கூட எண்ணிப் பார்த்தான் - முத்து எடுக்க மூச்சடக்கிக், கத்தும் கடலடிச் சென்றவன், கரத்தில் சிக்கியது சிப்பி என்றெண்ணி எடுத்துவந்து உடைத்துப் பார்க்கும்போது, முத்து இருக்க வேண்டிய இடத்திலிருந்து சிறியதோர் நாகம் சீறிக் கிளம்பிடக் கண்டால் எப்படி இருக்கும் நிலைமை - என்று எண்ணினான் - ஓவென்று உரக்கச் சிரிக்கலாம் போலத் தோன்றிற்று; அடக்கிக் கொண்டான். அங்கு வேறு பலர் வெவ்வேறு நிலையில் சிரிப்பொலி கிளப்பியபடி இருந்தனர்; அவர்கள் அறிவார்களா இவன் மனக் கொந்தளிப்பை!

"ஐயா! சூடா பட்டாணி, கடலை, வேர்க்கடலை!'' - என்று சேதிகூறும் முறையிலே, குரலெழுப்பியபடி, கூடைக்காரன் வந்தான்; காவேரி, வேண்டுமென்றும் சொல்லவில்லை, வேண்டாமென்றும் கூறவில்லை; அவனால் வேறு முக்கியமான விஷயங்களிலேயே, வேண்டும்! அல்லது வேண்டாம்! - என்று கூறமுடியவில்லையே, பாபம் கூடைக்காரன், காவேரி எதிரே, உட்கார்ந்தான், குத்துக்காலிட்டபடி. அந்த மணற்பரப்பில், நடந்து நடந்து அலுத்துப்போனவன் - ஆகவே இளைப்பாறிக் கொள்ளலாம் என்ற நினைப்பு. உட்கார்ந்தவன், காவேரியின் முகத்தைப் பார்த்ததும், அடையாளம் கண்டுபிடித்து விட்டான். "நீங்களா! கைராட்டை காவேரி அண்ணன்தானே, அண்ணேன், எப்படி இருக்கறிங்க. . . உங்களுக்கு என்ன அண்ணேன், குறை! உங்க இராஜ்யம்தானே இப்ப நடக்குது. . . இப்பத்தான், உங்க மனம் குளிர்ந்திருக்கும்; கொடி பறக்குதே கோட்டையிலே!'' - என்று, கேலியாக அல்ல, கள்ளங்கபடமற்ற முறையிலே, பேசினான் கூடைக்காரன். கைராட்டை காவேரி தலையைக் கவிழ்த்துக்கொண்டான். காரணம் புரியவில்லை கூடைக்காரனுக்கு.

"அண்ணேன்! முன்னே மாதிரிதானே கைராட்டினமும் கையுமா இருக்கறிங்க. முன்னேயெல்லாம் உங்க பேச்சைக் கேட்காதவங்களெல்லாங்கூட, இப்ப, கைராட்டினம் சுத்துவாங்களே. . . உங்க இராஜாங்கம்தானே நடக்குது'' என்று கூடைக்காரன் பேசிக் கொண்டே போனான். அந்தப் பேச்சு. காவேரிக்கு மெத்த வேதனையாக இருந்தது. ஏனென்றால் அன்று காலைப் பத்திரிகையிலேதான், மிகப் பெரிய காங்கிரஸ் தலைவர், தான் இப்போது, கைராட்டை சுற்றுவதில்லை என்று தெரிவித்தது போடப்பட்டிருந்தது. அதைப் படிக்கும்போதே, கைராட்டை காவேரிக்குக் கோபம் கோபமாக வந்தது. பாவி மனுஷன் இப்படி மானத்தை வாங்குகிறானே! சுற்றாவிட்டால் கூடப் போகிறது, இதை நாலுபேருக்குத் தெரிகிறபடி பேசித் தொலைக்கத்தான் வேண்டுமா?'' என்று எண்ணிக் கொதித்தான். ஆனால், மறுகணம், கோபம் மாறி விட்டது. "இந்த ஆசாமி, பெரிய மனிதன், குற்றத்தை ஒப்புக்கொண்டு பேசுகிறான். மற்றவர்கள், இதைக்கூடச் செய்வதில்லையே! இன்னமும் ஊரை ஏமாற்றிக் கொண்டல்லவா இருக்கிறார்கள். அவர்களை விட இந்த ஆசாமி எவ்வளவோ மேல், என்று எண்ணிக்கொண்டான். கூடைக்காரனிடம் வேறு விதமாகப் பேச்சைத் திருப்பி விட்டாலொழியத் தன்னுடைய வேதனையை அதிகமாக்கும் விதமாகத்தான் அவன் எதையாவது பேசிக்கொண்டிருப்பான் என்ற எண்ணத்தில், காவேரி, கூடைக்காரனைப் பார்த்து, "ஆமாமப்பா! நீ ஏன் கிராமத்தை விட்டு, இங்குவந்து சேர்ந்தே, கெட்டவன் பட்டணம் போவான் என்பார்களே, ஊரோடு உற்றார் உறவினரோடு, காடு கரம்பைக் கவனித்துக்கொண்டு, கிடைக்கும் கஞ்சித்தண்ணியைக் குடித்துக்கொண்டு, குழந்தை குட்டிகளைப் பார்த்துக் கொண்டு, நிம்மதியாக இருப்பதை விட்டுவிட்டு, இப்படி, பட்டணத்துக்கு வந்து, கூடை சுமந்து கொண்டு, கூவிப் பிழைக்க வந்துவிட்டாயே, ஏன்?'' என்று கேட்டான் காவேரி.

"என்னைக் கேக்கறியே அண்ணேன், உங்க இராஜாங்கத்தை நடத்துகிறவங்களையல்லவா கேட்கவேணும்'' என்று ஒரு போடு போட்டான், கூடைக்காரன். காவேரி, இரண்டொரு நாட்களுக்கு முன்புதான் படித்தான், சட்டசபையிலே காங்கிரஸ் அமைச்சர், "கிராமத்து மக்கள் நகரத்துக்குச் சென்று விடுவது, வளர்ச்சிக்கு அறிகுறி - பொருளாதார முன்னேற்றத்துக்கு அடையாளம்'' என்று பேசியதை. அமைச்சர் பேசியது சரியானதுதான் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தால், கிராமத்தைவிட்டு நகரத்துக்கு ஏன் வந்தாய், என்று கூடைக்காரனைக் காவேரி கேட்டிருக்க முடியாதல்லவா? நல்ல வேளை, நம்முடைய அமைச்சர் பேசியது, இவனுக்குத் தெரிந்திருக்காது, இவன் எங்கே சட்டசபை நடவடிக்கைகளைப் படித்திருக்கப் போகிறான் என்று எண்ணிக் கொண்டான் காவேரி.

இருப்பிடம் கிராமமோ நகரமோ, இடம் அல்ல முக்கியம்; முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும், வாழ்க்கையிலே முன்னேற்றம், தொழிலிலே முன்னேற்றம், நிம்மதி, வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்பதல்லவா முக்கியம். மாந்தோப்பாக இருந்தாலென்ன, புளியந்தோப்பாக இருந்தாலென்ன, காலா காலத்திலே காய்த்து, காய்த்தது நல்ல விலைக்கு விற்றுக் காசு கிடைத்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தினால் போதும் என்றுதானே எவரும் எண்ணுவார்கள். கூடைக்காரன், மண் வெட்டியும் கையுமாகத் திரிந்து, மடைதிருத்திக் கிராமத்திலே இருந்தபோது, கிடைத்த வாழ்க்கை நிம்மதியைக் காட்டிலும், பட்டணத்திலே பிழைக்க வந்ததால், சிறப்பான வாழ்க்கையா கிடைத்தது. அதுதானே இல்லை! இடம் மாறினான், இடர் மாறவில்லையே! தொழிலை மாற்றிக் கொண்டான், தொல்லை குறையக் காணோம்.

கைராட்டை காவேரிக்கு இது நன்றாகப் புரிகிறது; புரிவதால், அமைச்சர், இதைப்போய், வளர்ச்சியின் அறிகுறி என்கிறாரே, எவ்வளவு. . .! என்று எண்ணுகிறான்; என்ன கடினமான வார்த்தை பொருத்தமாக இருக்குமென்று எண்ணிப் பார்த்துப் பார்த்து, மனதிற்குள்ளாகவே குமுறிக் கொள்கிறான்.

***

"அண்ணா! அதெல்லாம் இருக்கட்டும். இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது!'' என்றுதானே, தம்பி, கேட்கத் தோன்றுகிறது. உனக்கு அந்த ஐயப்பாடு ஏற்படும் என்று எனக்குத் தெரியும். இருவருமேதான் சொன்னார்கள்.

***

"என்ன செய்தாலும், இந்த ஜனங்களுக்குத் திருப்தியே ஏற்படுவதில்லை. குறைகூறிக் கொண்டிருப்பதே வேலை, ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா? வெள்ளைக்காரன் காலத்திலே, இங்கே ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்க, இழிவுகளைத் துடைக்க, பஞ்சத்தை நீக்க, எவ்வளவோ கஷ்டப் பட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உடனே தீர்ந்து விடக் கூடிய காரியமா இது. என்னய்யா, சுயராஜ்யம்! சுகம் எங்கே? என்றுதானே கேட்க வேண்டியிருக்கிறது, என்று பேசுகிறார்களே கொஞ்சம்கூடப் பொறுப்பு இல்லாமல்'' - என்று கைராட்டை காவேரி, சிறிதளவு கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தான், என் நண்பன் "நவபாரதி'யிடம். தம்பி! நவபாரதியை உனக்கு அறிமுகப்படுத்தவில்லையே! "நவபாரதி' என்பது, பெற்றோர் இட்ட பெயரல்ல; அவர்கள் பாபம், அதெல்லாம் தெரியாதவர்கள், இராமா, கிருஷ்ணா, கோவிந்தா, என்று காலந்தள்ளி வந்தவர்கள்; எனவே அவர்கள் நரசிம்மன் என்றுதான் பெயரிட்டார்கள்; ஆனால், நரசிம்மன், காவேரி போலவே, காங்கிரஸ் தொண்டாற்றக் கிளம்பி, "நவபாரதி' என்று பெயரெடுத்துக் கொண்டான். காகிதம் கிடைத்தாலும், நல்ல சுவர் கிடைத்தாலும், காங்கிரசைப் பற்றி எதையாவது எழுதுவான். அடியில், இப்படிக்கு "நவபாரதி' என்று கையெழுத்து இருக்கும்.

பீகார் பூகம்பம் ஏற்படக் காரணம் என்ன?

பிரிட்டிஷ் ஆட்சியால் பூமாதேவி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதுதான் காரணம்!

இப்படிக்கு
நவபாரதி

தம்பி! இப்படி எதையாவது எழுதியபடி இருப்பான். போலீசார் வெள்ளை அடித்து மறைப்பார்கள்; இவன் வேறு இடத்தில் எழுதுவான்; பிறகு இதிலே படிப்படியாக முன்னேறிக் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி, பிறகு அச்சிட்டு வழங்கி, பிறகு அச்சகமே வைத்து, பிறகு அது பறிமுதலாகி, பிறகு அதற்காகப் பொதுமக்கள் நிதி திரட்டிக் கொடுத்து, பிறகு அதை வைத்துப் பெரிய அளவில் பத்திரிகை நடத்தி, இப்போது, சர்க்காரின் சாதனைகளைத் தெரிவிக்கும், வெளியீடுகளை, அச்சிட்டுப் புகழ் (பொருள்) ஈட்டி வாழ்ந்து வருகிறார், நவபாரதி. அவரிடம் பேசும்போது, காவேரிக்கு, ஆர்வமும், துணிவும் இயற்கையாகவே அதிகமாகத்தானே ஏற்படும். தனக்குத் தகுந்த பக்கபலம் கிடைத்தது என்ற எண்ணத்தில், பேசலானான். மேலும், நான் இருக்கிறேனல்லவா - என்னைக் குத்திக் கிளறி வேடிக்கை பார்க்கலாம் என்ற நோக்கம் வேறு. நான் அன்று அங்கு இல்லா விட்டால், நவபாரதி, வேறுவிதமாகக், காவேரியுடன் கூடிக் கொண்டு பேசியிருப்பானோ என்னவோ, நான் இருந்து விட்டதால், நவபாரதி காவேரியுடன், வாதாட வேண்டித்தான் ஏற்பட்டுவிட்டது; ஏனெனில் நவபாரதி, என்னிடம் பலமுறை சுயராஜ்ய ஆட்சி சரியாக நடைபெறவில்லை என்று ஒப்புக் கொண்டு பேசியவன்!!

"காவேரி! மக்கள் குறை கூறுவது இருக்கட்டும். நம்முடைய காங்கிரஸ் ஆட்சியை மற்றவர்கள், அதிலும் அண்ணாதுரை போன்றவர்கள், குறைகூறிப் பேசும்போது, காங்கிரசுக்காகப் பாடுபட்ட நமக்குக் கோபம் வரத்தான் செய்யும். ஆனால், நமக்கே, உள்ளபடி, காங்கிரஸ் ஆட்சியில், திருப்தி ஏற்பட்டிருக்கிறதா? நாம், எதிர்பார்த்தபடி, திட்டமிட்டபடி, மக்களிடம் வாக்குறுதி அளித்தபடியாகவா, ஆட்சி நடக்கிறது?'' என்று நவபாரதி கேட்டான். அவன் பேச்சு, அழுத்தந்திருத்தமாக இருந்தது. தம்பி! எனக்குக் தூக்கிவாரிப் போட்டது; ஏனெனில், நவபாரதியின் புதிய வெளியீட்டில், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை அவ்வளவு அதிகமாகப் பாராட்டிக் கதிரவன் ஒளி காணாதார், கானம் கேட்டு இன்புறாதார், காங்கிரஸ் ஆட்சியின் சாதனையை உணராதார், மூவரும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! தாயல்ல அவள் - பேய்! பெரும் பேய்! பிரிட்டிஷார் விட்டுச் சென்ற பேய்!! - என்று நவபாரதி எழுதியிருந்தான்.

அவன்தான் காவேரியைக் கேட்கிறான், எதிர்பார்த்த படியாகவா காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, என்று என் எதிரில்.

காவேரிக்குக் கடுங்கோபம்; "நவபாரதி! குறைபட்டுக் கொள்வது, யாருக்கும் எளிது. ஆசை இருக்கும், அடுத்த விநாடியே அம்பாரிபோட்ட யானை மீது, அமர்ந்து பவனி வர வேண்டும். பக்கத்திலே ஒரு இராஜகுமாரி உட்கார வேண்டும், அவள் கூந்தலில், பாரிஜாத மலரைச் செருகி மகிழ வேண்டும், என்றெல்லாம். உடனே முடிகிற காரியமா! தோட்டமே கைக்கு வந்து கொஞ்சக்காலம்தானே ஆகிறது. திருத்தி, பாத்தி கட்டி, பயிரிட்டு, செடி முளைத்து. . . செ! இதுகூடத் தெரியாமல், அரச மரத்தைச் சுற்றிக்கொண்டே, அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிற கதைபோலச், சுயராஜ்யம் வந்து என்ன பலன்? ஒன்றும் காணோமே! என்று மூக்கால் அழுவதா?'' - என்று படபடத்துப் பேசினான், காவேரி. நவபாரதி, சில விநாடிகள் ஒன்றும் பதில் பேசவில்லை. ஒருவேளை, தனது அடுத்த வெளியீட்டுக்கு, காவேரியின் அந்தப் பேச்சை முன்னுரையாக்குவதா, முடிவுரை யாக்குவதா என்று யோசனை செய்து கொண்டிருந்தானோ, என்னவோ!

ஒன்றுகூற மறந்துவிட்டேனே, நாங்கள் மூவரும் வேறு வேறு ஒரு காரியமாகக் கிராமம் சென்றிருந்தோம். அங்குதான் இந்த உரையாடல்.

நவபாரதி பதிலேதும் பேசாததால், காவேரிக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. பிரிட்டிஷார் செய்து விட்டுப்போன நாசம் கொஞ்ச நஞ்சமா? அந்த நாசத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டைத் திருத்தி, நல்ல நிலைமையை ஏற்படுத்துவது எளிதான காரியமா? விரைவிலே முடிந்துவிடக் கூடிய காரியமா? வேரோடு கீழே சாய்ந்துவிட்ட பெருமரம் நம் கைபட்ட உடனே பூத்துக் காய்த்து, கனி குலுங்கவேண்டுமென்று சொல்வது போலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று!'' என்று காவேரி பேசினான்.

"நண்பருக்கு நான் ஒரு விஷயம் கவனப்படுத்தலாமா?'' என்று நான் கேட்டேன். "ஒன்று என்ன! ஓராயிரம் சொல்லலாம்! என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது தெரியாதா எங்களுக்கு'' என்று சற்றுக் காரமாகவே கூறினான் காவேரி.

தாராளமாகப் பேசலாம் என்று கூறினதால், நான், சற்று விரிவாகவே, விளக்கமளிக்கலானேன். "தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் வேலை, பாலைவனத்தைச் சோலை வனம் ஆக்குவது போன்ற மிகமிகக் கடுமையான வேலை என்று மக்கள் எண்ணி ஏமாற வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியினர் கருதுகிறார்கள் - பேசுகிறார்கள்.'' "புயலாலே பூந்தோட்டம் அழிந்தது; கிணற்றிலேயோ இடி விழுந்து தூர்ந்து போய் விட்டது. ஆறு, ஆறாவது கல்லில் இருக்கிறது. அங்கிருந்து வாய்க்கால் வெட்டிக் கொண்டு வருவதற்கோ, இடையில் ஒரு சிறு குன்று கிடக்கிறது, நான் அந்தக் குன்றைக் குடைந்து வாய்க்கால் அமைக்கலாமா; அதைச் சுற்றி வளைத்துக் கொண்டு வாய்க்கால் கொண்டு வருவதா என்பது பற்றி நிபுணர்களைக் கேட்போமா, அல்லது "நின்று தவமிருந்தாள்'' கோயில் பூஜாரியிடம் யோசனை கேட்போமா என்று சிந்தித்த வண்ணம் இருக்கிறேன், சிரமப்படுகிறேன். நீயோ மல்லிகைப் பூ மாலை எங்கே, மருக்கொழுந்துக் கட்டு எங்கே, மனோரஞ்சித மலர் எங்கே? என்று கேட்டுத் தொல்லை தருகிறாயே என்று பேசும் தோரணையில், காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெள்ளைக்காரன் நீங்கியபோது, பிணம் புதைக்கக் குழிவெட்டும் வேலையிலிருந்து இவர்கள் துவக்க வேண்டி வந்ததுபோலவும், அதற்குள் மக்கள் ஏதோ வீணாக அவசரப்பட்டு, ஆத்திரப்படுவது போலவும் கருதிக் கொண்டு, குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.

வெள்ளைக்காரன் இந்தியாவைச் சுரண்டினான் - மறுப்பாரில்லை; செல்வத்தைக் கொள்ளை கொண்டான் - மறைப்பாரில்லை; ஆனால், அவன் விட்டுச் சென்ற இந்தியா பாலைவனமுமல்ல - படுகுழி நிரம்பி, கள்ளி காளான் பூத்துக் கிடக்கும் கடுவெளியுமல்ல என்பதை மக்கள் அறிவார்கள்.

பெரும்போரிலே சிக்கி, கொடுமைக்கும் குண்டு வீச்சுக்கும் இலக்காகி, எழில்மிகு நகரங்கள் மண்மேடுகளாயின; வளம்மிகு வயல்களெல்லாம் பிணக்காடுகளாயின; தொழிற்சாலை களெல்லாம் குப்பை மேடுகளாயின; கடலே இரத்த மயமாயிற்று! குடும்பங்கள் இலட்சக் கணக்கிலே சிதறின! வாழ்வு சிதைந்தது! வீடிழந்து, நாடிழந்து, எதிரியிடம் சிக்கிச் சீரழிந்து போன மக்கள் ஆயிரமாயிரம்! நடுநிசியில் விமானம் வரும்; நாசக் குண்டுகளை வீசும்; கட்டிலும் தொட்டிலுமே புதை குழியாகும்; கன்னல் மொழிக் குழவி கண்ணெதிரே கூழாகும்; மனம் குழம்பித் தாய் மடிவாள்; தகப்பனோ, மரமாகி நிற்பான், மனத்துயரால்!

கட்டிடங்கள் இடியும் சத்தமும், குண்டுகள் சீறிடும் சத்தமும், குலை நடுங்கி மக்கள் கூச்சலிடும் சத்தமும், நித்திய நாதமாக இருந்தது. தலைநகர்களை விட்டுச் சர்க்கார் ஓட்ட மெடுப்பதும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் குழியில் இறங்கிக் குடும்பம் நடாத்துவதும், சர்வ சாதாரணமான சம்பவமாக இருந்தது.

நாமெல்லாம் மாண்டுபோனாலும், நாம் பெற்றெடுத்த செல்வங்கள், பிள்ளைக் கனி அமுதங்கள், இந்தப் பேசும் பொற்சித்திரங்கள் பிழைத்தால் போதும்; குண்டு வீச்சும், பிண நாற்றமும் பிடித்தாட்டும் இந்த நாட்டிலே, இந்த மொட்டுக்கள் இருந்து கருக வேண்டாம்; கண்காணாச் சீமைச் சென்றேனும் கண்மணிகள் வாழட்டும்; காலமும் நிலைமையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்தால் உச்சிமோந்து முத்தமிடுவோம்; அன்றி, இங்கேயே மடிய நேரிட்டாலும், நமது "குலக்கொடி' அழிந்து படவில்லை - எங்கோ ஓரிடத்தில், போரும் புகையும், சச்சரவும் சாவும் தீண்டாத ஓர் திருநாட்டிலே, நமது உயிரோவியங்கள் வாழ்கின்றன - என்று மனத்திருப்தியுடன் மண்ணில் புதைபடுவோம்; மாணிக்கங்கள் தப்பினால் போதும்; இன்பப் பெருக்குகள் இந்தத் துன்ப பூமியிலிருந்து வேறிடம் சென்றால் போதும் - என்று எண்ணித், தலைவாரிப் பூ முடித்துக் கன்னத்தைத் துடைத்து, முத்தமிட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "கண்ணே சென்றுவா, மணியே போய்வா! என் உயிரே, உன்னைப் பிரிகிறேன்! கர்த்தன் அருளால் மீண்டும் சேருவோம்!' - என்று தழதழத்த குரலில் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை, பிரிட்டனிலிருந்து, கனடாவுக்குக் கப்பலேற்றி அனுப்பி வைத்தனர்.

இவ்விதமான இடுக்கண்களும், பொருள் இழப்பும், உயிர் இழப்பும், கேட்போர் உள்ளத்தை உருக்கும் விதமான அளவிலும், வகையிலும் நடைபெற்று, நாடுபல நாசமாயின, போரின் காரணமாக!