அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கைராட்டை காவேரி (1)
2

அன்று அலர்ந்த மலரைக் கண்டு திங்கள் பலவாயினவாம் ஒரு வீரனுக்கு - களத்திலே, கடும்போரிலே, அவன் நெடுங் காலமாக ஈடுபட்டிருந்த காரணத்தால்! ஓர் நாள் களத்திலே சிறிது ஓய்வு கிடைத்ததாம்; அதுபோது அவன், களத்தை விட்டுச் சிறிது தூரம் சென்று, அழிவுக்கு மத்தியிலே, எப்படியோ தப்பிப் பிழைத்த ஒரு மலரைக் கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து, அதைப் பறிக்கச் சென்றானாம்! வேவு பார்த்துக் கொண்டிருந்த எதிரிப்படையினன் ஒருவன், மலர் பறிக்கும்போது, அவனைச் சுட்டுக் கொல்ல, கரத்தில் மலரும், மார்பில் இரத்தமுமாக, அந்த வீரன் இறந்துபட்டானாம்!

கண்ணீர் கன்னத்தில் புரண்டோடச் செய்யும் காதைகள் பலப்பல, களம் தந்தது.

அத்தகைய கடும்போரிலே, சிக்கிச் சீரழிந்த நாடுகளெல்லாம், மீண்டும் வாழ்வு பெற்றுவிட்டன; அங்கெல்லாம் ஆளவந்த நாயகர்கள், எவ்வளவு அரும்பாடு பட்டிருந்தால், இவ்வளவு அழிவுக்குப் பிறகு, அங்கு மக்களுக்கு வாழ்வு கிடைத்திருக்க இயலும் என்பதை எண்ணிப் பார்த்தால் போதும் - இங்கு, ஏதோ மலையைக் குடைபிடித்து, மந்தையைக் காத்திடும் போக்கிலே பணிபுரிவதாகப் பேசும் காங்கிரஸ் ஆளவந்தாரின் திறமை, வெட்டவெளிச்சமாகிவிடும்.

போர் நம்மைத் தீண்டவில்லை - நினைவில் இருக்கட்டும்! களம், இங்கு இல்லை - கவனமிருக்கட்டும்! நாசக் குண்டுகள், நமது நகர்களைப் பதம் பார்க்கவில்லை; எல்லாவற்றையும் சினிமாப் படத்திலேதான் பார்க்கிறோம்; இதழ்கள் மூலம் "சேதி' தெரிகிறது.

அணுகுண்டு விழுந்த ஜப்பானும், பிணமலை குவிந்த ஜெர்மனியும், இரத்த ஆறு ஓடிய ரμயாவும், இடிபாடு மயமான இங்கிலாந்தும், சீரழிந்த வேறுபல சிறு நாடுகளும், புயலுக்குப் பிறகு புள்ளினங்கள் கிளம்பிப் பண் இசைத்து, புதுக்கூடு, கட்டிக் கொண்டு, பெடையுடனும் குஞ்சுகளுடனும், குதூகலமாக வாழ்வதுபோல, மீண்டும் வாழ்வின் ஒளியைப் பெற்றுவிட்டன!

போரே தீண்டாத இப்பொன்னாடு, ஓர் புனித ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது; மற்ற எந்த நாட்டுத் தலைவர்களுக்கும் கிட்டாத மதிப்பும் செல்வாக்கும், இங்கு காங்கிரஸ் தலைவர் களுக்குக் கிடைத்தது.

போரிலே பெரும் பணியாற்றி, அழிய இருந்த பிரிட்டனைக் காப்பாற்றி, ஹிட்லரை முறியடித்த பெருமைக்கு உரியவராக இருப்பினும், சர்ச்சிலை, வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிடும் துணிவு, பிரிட்டிஷ் ஜனநாயகத்துக்கு இருந்தது.

இங்கோ, கல்லை நிறுத்தினாலும், கட்டையைக் காட்டி னாலும், காங்கிரஸ் என்றால், தட்டாமல் தயங்காமல், "ஓட்' அளிக்க வேண்டும் என்றனர் தலைவர்கள்;ஆஹா! என்றனர் மக்கள். ஒரு நாட்டு மக்கள், இதைவிட விளக்கமாகக், கட்சிப் பற்றையும், தலைவர்களிடம் "பக்தி'யையும் காட்டியிருக்க முடியாது.

இவ்வளவுக்குப் பிறகு, எதிர்ப்போர் எவரும் இன்றி, அழைத்த இடம் வருவதற்கு ஒரு நாட்டு மக்கள் தயாராக இருந்த நிலையில், எதைச் சாதிக்க முடிந்தது? ஏன் வறுமையைத் துடைக்க முடியவில்லை? ஏன் மக்களின் வாட்டத்தைப் போக்க முடியவில்லை?

தேசபக்தரே! தேசோத்தாரகரே! தேசபந்துவே! தீன பந்துவே! ஜோதியே! சுடரே! முத்தே! மணியே! வாழவைப்போம் என்று வாக்களித்த பெம்மானே! வாழ்வளிக்கும் திட்டம் எங்கே? சீரளிக்கும் சட்டம் எங்கே? என்று மக்கள் கேட்டால், சீறுகிறார்களே, நியாயமா?'' என்று நான் கேட்டேன்.

"இது தெரியும் இவர்களுக்கு, "வளவள'வென்று பேச, காமராஜர்கூட, இதைச் சென்ற கிழமை கண்டித்துப் பேசினார்'' என்றான் காவேரி.

"ஆமாம் மக்கள் நியாயம் கேட்டால், "வளவள'வென்று பேசுவதுபோலத்தானய்யா தோன்றும். இது எதேச்சாதிகாரி களின் போக்கு. "மளமள'வென்று காமராஜரால் பேச முடியும் - பேச வேண்டியதும் அவ்வளவுதான், அவருக்கு காங்கிரஸ் நல்ல கட்சி, மத்ததெல்லாம் மோசம். எங்களால்தான் ஆள முடியும். மத்தது பிரயோஜனம் இல்லை. நன்மைகள் செய்கிறோம். அதற்காகத்தான் வரி போடுகிறோம். வரி அதிகம் கொடுத்தால் நன்மை அதிகம் செய்வோம்.''

இவ்வளவுதான் அவர் சரக்கு! இதைக் காட்டிவிட்டுக் கோணியைச் சுருட்டிக் கொண்டு, அடுத்த ஊர் போய்க் கடை பரப்புவார். நாங்கள் அப்படி அல்லவே! ஆதியோடு அந்தமாக, விளக்கமாக, மனதில் பதிகிறபடி பேச வேண்டும். அது உங்களுக்கு வளவளவென்றுதான் தோன்றும், என்று நான் சொன்னேன். நவபாரதி குறுக்கிட்டு, "பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, இந்தியா எந்த நிலைமையில் இருந்தது என்பதுபற்றிக் காவேரி சொல்வது தவறா?'' என்று கேட்டார். "அதைக் கேட்டதற்குத்தான், ஒரு கதா காலட்சேபமே செய்து விட்டாரே!'' என்று கேலி செய்தான் காவேரி. "திட்டவட்டமாகப் பேச வேண்டும்'' என்றான் நவபாரதி. "புள்ளிவிவரப்படி'' என்று திருத்தமளித்தான் காவேரி. "புள்ளிவிவரம் கேட்கிறீர்களே - எந்தப் புள்ளிவிவரம்? உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் போலவா!'' என்று, எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, "உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் மகாமட்டம் என்று, திட்டக்கமிஷன் உறுப்பினர், சீமன் நாராயணனே கண்டித்திருக்கிறாரே, தெரியுமா!! ஆனால், நான் அப்படிப்பட்ட புள்ளிவிவரம் தரப்போவதில்லை. எல்லோரும் ஒப்புக் கொள்கிறதை மட்டுமே சொல்கிறேன்! வெள்ளைக்காரன் இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறபோது, தங்கமாகவும் ரொக்கமாகவும் நம்முடையது என்று இருந்த தொகை 1,179,74,00,000 ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். பதினான்காண்டு ஆட்சி நடத்தி இருக்கிறீர்கள் - இப்போது நிலைமை என்ன தெரியுமல்லவா? 4971 கோடி ரூபாய் கடன் பட்டிருக்கிறோம். 1959-60, கடனுக்காகச் செலுத்தும் வட்டித் தொகை 129 கோடி ரூபாய். 1960-61இல், வட்டித் தொகை 143 கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதைக்கூடக் காவேரி மறுக்கமுடியுமா?'' என்று கேட்டேன். நவபாரதி சிறிதளவு குறும்புத்தனமான பார்வையைக் காவேரியின் பக்கம் செலுத்தியபடி, "கடன் பளுவு அதிகம்தான்! மிகமிக அதிகம்! அதனால், வட்டி கட்டித் தீரவேண்டிய தொல்லை ஏற்படுவது மட்டுமல்ல, பணப்பெருக்கம் ஏற்பட்டு, விலைவாசி ஓரேயடியாக ஏறி, மக்கள் மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்'' என்று கூறினார். "கடன் வாங்காமல் முன்னேற்றம் நடக்குமா?'' என்று, நம்பிக்கையுடன் கேட்டான் காவேரி. "எந்த முன்னேற்றத்தைக் குறிப்பிடுகிறார் நண்பர்! சித்தரஞ்சனா, சிந்திரியா?'' என்று நான் கேட்க, நவபாரதி, "சிந்திரியைக் குறிப்பிடமாட்டார், அதிலும் இப்போது!! காவேரி! அண்ணாத்துரை நம்முடைய கட்சி அல்ல; அதனால் அவர் குத்திக்காட்டும்போது, நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்; ஆனால், கோபம் உண்மையைக் காணமுடியாத அளவுக்கு நம்முடைய கண்களை மறைக்கக் கூடாதல்லவா? எவ்வளவு வரிச்சுமை, கடன்பளு, இவைகளைத் தாங்கிக் கொண்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களிடம் சுரண்டிச் சிந்திரிபோன்ற பெரிய திட்டத்தை நடத்துகிறார்கள். அங்கு, இப்படிப்பட்ட அக்கிரமம், கண்மூடித்தனமான நிர்வாகம் நடக்கலாமா? ஏன், அடுத்த தலைமுறைகூடக் கட்டித்தீர வேண்டிய அளவுக்குக் கடன் வாங்குகிறீர்கள் என்று யாராவது கேட்கும்போது, மார்தட்டிச் சொல்கிறோம், கடன் வாங்கிக் கடலிலா கரைக்கிறோம், கட்டித் தங்கம் வாங்கி நகை செய்வதுபோல, விதைபோட்டுச் செடி வளர்ப்பதுபோல, இந்தப் பணத்தைப் போட்டு, நாட்டுக்குப் புதுச்செல்வம் தரக்கூடிய திட்டங்களைப் போடுகிறோம், அமைப்புகளை ஏற்படுத்துகிறோம், தொழில்களை அமைக்கிறோம் என்று பேசுகிறோம். பேசிவிட்டுச் சிந்திரியைக் காட்டுகிறோம். அங்கு நடைபெற்ற அக்கிரமத்தை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படிச் சகித்துக்கொள்வது? நீயேதான் சொல்லேன்'' என்று நவபாரதி கேட்டான். காவேரிக்கு கோபத்தைவிடத் துக்கம்தான் அதிகம் என்பது தெரிந்தது. நான் என்ன செய்வேன், நிர்வாக ஊழலுக்கு என்று, பொறுப்பைத் தட்டிக்கழிக்க விரும்புபவன் அல்ல காவேரி! எங்கள் கட்சி! எங்கள் சர்க்கார்! என்று மகிழ்ச்சியுடன், பெருமையுடன், சில வேளைகளில், ஆணவத்துடன்கூடப் பேசும் போக்கினன். பாவம்! பற்று இருக்கத்தானே செய்யும்!! உரிமையும் இருக்கத்தானே இருக்கிறது! மந்திரி மாணிக்க வேலருக்கு, என் கட்சி! என் சர்க்கார்! என்று கூறிக் கொள்ளும் துடிப்பும், பற்றும், உரிமையும், நிலைமையும், இருக்கிறபோது, காவேரிக்கு இருக்கக் கூடாதா அந்த உரிமை? கைராட்டைக் காவேரியாயிற்றே! மாணிக்கவேலர், சைக்கிள் பெட்டியாயிற்றே! காவேரி காந்தி பக்தர், மாணிக்கவேலர் பூந்தி தந்தவர் என்று பேசிக் கொள்கிறார்கள்!!

"பெரிய நிர்வாகத்திலே, சிறு சிறு தவறுகள் ஏற்பட்டு விடுவதுதான்; இதைப்போய்ப் பெரிதுபடுத்தலாமா?'' என்று சொல்லிப் பார்த்தான், காவேரி. "ஒன்றா, இரண்டா, பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள, அடுக்கடுக்காக வெளி வந்தபடி இருக்கிறது, ஊழல், விரயம், நிர்வாகக் கோளாறு. சிந்திரி விஷயம் சாதாரணமானதா? உணவு உற்பத்தி பெருக்கு வதுதான் திட்டத்தின் உயிர்நாடி என்கிறோம். உணவு உற்பத்தி பெருக, உரம் தேவை என்கிறோம். அந்த உரத்தொழில் நடக்கும் இடம் சிந்திரி. அங்கு மோசமான நிலைமை இருக்க விடலாமா!! குழந்தைக்காக, பால் காய்ச்சி வைத்திருந்தேன், பாழாய்ப்போன பூனை உருட்டிவிட்டது என்று மனைவி சொன்னால், சமாதானம் வருவதில்லையே, நம் மனதுக்கு. இது அப்படிக்கூட அல்லவே! பாலைப் பூனை குடித்துவிட்டது; என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூடப் புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே, குழந்தையை முதுகில் அறைந்துவிட்டு, அது வீறிட்டு அழ ஆரம்பித்ததும், பாலைக் குடித்த பூனை "மியாவ்' "மியாவ்' என்று கத்துவதைக் காட்டி, பாப்பா! அழாத! அதோ, கேள், பூனை பாடுகிறது! அதைக் கேட்டுக் கொண்டே தூங்கு! கண்ணல்ல, தூங்கம்மா, தூங்கு! - என்று தாய் பேசினால், எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது ஒவ்வொரு ஊழலைப் பற்றியும், சர்க்காரை நடத்துகிறவர்கள் சமாதானம் சொல்லும் போக்கு.''

இவ்வளவும், சர்க்காரின் சாதனைகளைக் குறித்து, வெளி யீடுகளை அச்சிட்டு வழங்கும் நவபாரதம், பேசுகிறார். தம்பி! எனக்கு வேலையே, இருக்காது போலிருந்தது.

"காவேரிக்குக் கண்களில் கலக்கமே தெரிகிறது. நவபாரதம் நீ ஏனப்பா இப்படி வாட்டி எடுக்கிறாய்?'' என்று நான், குறுக்கிட்டுப் பேசவேண்டியதாயிற்று, போயேன்.

"சிந்திரியில் காவேரி!'' என்று, சிறிதளவு அமைதியான முறையில், தொடங்கினான் நவபாரதி; சிந்திரியில், திடீரென்று உர உற்பத்தி வேலை நின்றுவிட்டது. ஏனென்று கேட்டால், அப்படி ஆகிவிட்டது நிலைமை; இன்னும் ஒரு ஆறுமாத காலம் ஆகும், உற்பத்தி நிலைமை சீர்பட, என்கிறார்கள். சீர்கேடு ஏன் ஏற்பட்டது என்று கேட்டால், சிந்திரியில் இயந்திரங்களை ஓட்ட உபயோகப்படுத்தப்பட்ட நிலக்கரி, மட்டமானதாக இருந்ததால், பழுது ஏற்பட்டுவிட்டது என்று, மத்திய அமைச்சர் சமாதானம் கூறுகிறார். நல்ல தரமான நிலக்கரி எஃகுத் தொழிற்சாலைக்குப் போய்விட்டதாம்; மிச்சம் இருந்த மட்டரகம் இங்கு வந்ததாம்! இப்படியா ஒரு மந்திரி பேசுவது. இதனால் ஏற்பட்டுவிட்ட நஷ்டத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது?'' என்று கேட்டான்.

"எனக்கு ஒன்று தோன்றுகிறது, காவேரிக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ. இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டதால், இதற்குத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துப் பொது மக்களுக்குத் தலைவணங்கும் முறையில், அந்த தொழிற்சாலையின் நிர்வாகத் திலிருக்கும் உயர்தர அதிகாரியும், தொழில் துறையை ஏற்றுக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரும், தமது பதவிகளை இராஜிநாமாச் செய்வது நல்லது; மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை யாகவும் அமையும். ஆனால், . . .'' என்று நான் சொன்னேன்.

"இதற்கெல்லாம் இராஜிநாமா செய்வது என்றால், அமைப்புகள் நடக்காதே. பெரிய பண மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிந்தால், இராஜிநாமாச் செய்யும்படி வற்புறுத்தலாம்'' என்றான் காவேரி.

"உலக்கைக் கொழுந்து என்பார்களே, அப்படி இருக்கிற தப்பா உன் புத்தி - பணமோசடி ஏற்பட்டால், கையிலே விலங்கு பூட்டி உள்ளே அடைப்பார்கள்'' என்று நவபாரதம் பதிலளித்தார்.

"நிர்வாகத்தில் எவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டுவிட்டது என்பதற்கு, வேறு எதையும்விட ஆராயத் தேவையில்லை. 1958-59இல் சிந்திரியில், ஒரு கோடியே ஒன்பது இலட்சம் இலாபம் கிடைத்தது; அடுத்த வருஷத்திலேயே அந்த இலாபம், கிடுகிடு வெனச் சரிந்துவிட்டது 1959-60இல் கிடைத்த இலாபம் 25 இலட்சம். இது முறையா?'' என்று கேட்டேன்; காவேரி மனம் பதறி, "பாவிகள், இப்படி எல்லாம் தாறுமாறாக நடந்து கொண்டு பண்டித நேருவுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார்கள். மக்கள் வாழ வேண்டும், அதற்கு என்ன திட்டம் போடலாம். என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பதிலே கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறார். அவரவர்கள் தங்கள் தங்கள் காரியத்தைச் சரிவரக் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். அவரை மோசம் செய்கிறார்கள்'' என்று காவேரி பேசிடக் கேட்டு, எனக்கு, உண்மையாகவே பரிதாபம் ஏற்பட்டது, தம்பி! காவேரிக்கு, ஏற்பட்ட அக்கரையைக் கவனித்தாயா? நேரு பண்டிதர் வரையிலாவது அப்பழுக்கற்றவர் என்று ஏற்படுத்திக் காட்டி, மனதுக்கு ஒரு ஆறுதல் தேடிக் கொள்ள முனைகிற வேடிக்கை, புரிகிறதல்லவா!!

"காவேரி! நேரு பண்டிதர் மீது கண்டனம் தெரிவிக்கிறேன் என்று எண்ணிப் பதறாதே. அவர் கண் முன் நடைபெறும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றால், இந்த 14 ஆண்டுக் காலத்தில், எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் நாசமாகி இருக்கிறது. ஆனால், அவர் துளியாவது பதறுகிறாரா! கண்டிக்கிறாரா? களைய முற்படுகிறாரா?

வேறு எவரேனும் இந்த ஊழல்களைக் கண்டித்தால், இவர் தானே வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார், பதில் அளிக்க. பழி துடைக்க, பாதுகாப்புத்தர! பிறகு, ஊழல் நிர்வாகம் நடத்து பவர்களுக்கு, அச்சம் ஏன் ஏற்படப்போகிறது! திருத்தவேண்டும் என்ற எண்ணம்தான் எப்படி உண்டாகும் என்று கேட்டேன் காவேரி, வாய்திறக்கவில்லை. துக்கம் துளைக்கும் நிலைதான்! வேறெப்படி இருக்க முடியும்?

"மற்றொன்று காவேரி! மக்களின் நல்வாழ்வுக்காகப் பண்டித நேரு அரும்பாடுபடுகிறார் என்று நம்புகிறாய் - நம்பச் சொல்கிறாய்! ஆனால், நிலைமை, வேறுவிதமாக அல்லவா இருக்கிறது. பதினான்கு ஆண்டு நேரு ஆட்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ரூபாய் கடன் பளு ஏறிய பிறகு, ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாக மக்கள் கொட்டிக் கொடுத்த பிறகு, மக்களின் நிலைமை எப்படி இருக்க வேண்டும்? திட்டம் வெற்றிபெற்று, பலன்கள் உருவாகக் கிடைத்து, அது மக்களிடம் பரவி இருந்தால், மரப்பொந்துகளிலே முட்டை யிட்டு வைக்கும் வண்ணப் பறவைகள், குஞ்சுகள் வெளிவரும், கொஞ்சிக் குதூகலிக்கும் என்றெண்ணியபடி, இரைதேடி வேறு இடங்களில் வட்டமிடும் வேளையாகப் பார்த்து, பாம்பு புகுந்து முட்டைகளை விழுங்கிவிடுமாம். அதுபோலன்றோ, பலன்கள் கிடைக்கும், பாங்கான வாழ்வு பெறலாம் என்று மக்கள் எண்ணி ஆவலுடன் காத்திருக்கும்போது, அந்த நம்பிக்கையுடன் கல் பிளந்து, மலை பிளந்து, காடு திருத்திக் கழனியாக்கி, நெருப்பில் வெந்து, பிலத்தில் நுழைந்து, உடலைக் கசக்கி, இரத்தத்தை வியர்வையாக்கிப் பாடுபட்டான பிறகு, பலன் தங்களுக்குக் கிட்டாமல், பகற்கொள்ளைக்காரர்களுக்குச் செல்வதைக் காண்கிறார்கள். பறவைகளாவது, படபடவெனச் சிறகடித்துக் கிரீச்சென்று கத்தி, இங்குமங்கும் வட்டமிட்டுத், தமது கோபத்தைத் துக்கத்தைக் காட்ட முடிகிறது. காவேரி போன்ற உண்மைத் தொண்டர்களால், தமது மனதிலே ஏற்பட்ட கொந்தளிப்பை வெளியே கொட்டிக்கொண்டு ஒருவிதமான ஆறுதல் பெறக்கூட அல்லவா முடிவதில்லை!'' என்று நான் கூறினேன். தம்பி! காவேரி, காங்கிரசை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு, பிழைப்புக்கு வழி தேடிக்கொள்பவனல்ல. எனவே, அவனுக்கு உள்ளதை ஒரே அடியாக மறைக்க மனம் இடம் தரவில்லை; அதேபோது, கட்சிக்கு இழுக்கு ஏற்படுவது கண்டு சகித்துக்கொள்ளவும் முடியவில்லை கலங்கினான்.

"ஆட்சியிலே பல கோளாறுகள் ஏற்பட்டு விட்டன; அதனை நானும் ஒரே அடியாக மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது! ஆனால், காங்கிரஸ் கட்சியின் அந்த நாள் சாதனைகள், தியாகங்கள், இவைகளை அடியோடு மறந்துவிட முடியுமா! அந்த மதிப்பு மங்கி மடியவிட, அந்தக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட எவருக்குத்தான் மனம் வரும்.'' என்று காவேரி பேசினான் - தனக்குத்தானே பேசிக்கொள்பவன்போல.

பொக்கை வாய்க் கிழவன், தனக்கு மீசை சுருள் சுருளாக இருந்தபோது, மயான காண்டத்தில், சுடலை காத்த காட்சியில், ஊர் உருகப் பாடிய கூத்து பற்றிக், கேட்போர் சலிக்கும் அளவு கூறிக் கொண்டிருப்பது போல, வறுமை கொட்டுவதால் துடித்துக் கிடக்கும் மக்களிடம், வீரதீரமாகச் சுயராஜ்யப்போர் நடாத்தியது பற்றிப் பன்னிப்பன்னிப் பேசினால், எப்படி இருக்கும்! அதுபோலச் பேசுவதுதான் காவேரிக்குத் தெரிகிறது. அது பொருத்தமுமில்லை, அதிலே பொருளும் இல்லை என்பது அவனுக்கு எங்கே புரிகிறது. ஆனாலும், தம்பி! எனக்குக் காவேரி அதுபோலப் பேசும்போது கோபம் பிறப்பதில்லை; ஏனெனில், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊராருக்கு இனிப்புப் பண்டம் வழங்கிய "உத்தமர்கள்' இன்று, காங்கிரசின் வீரத்தைப் பற்றி, தியாகத்தைப் பற்றி நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதை, நித்த நித்தம் கேட்டுத் தொலைக்கிறேனே! அவர்கள் அல்லவா, மறுப்புரை கூறினால், சீறுகிறார்கள், சபிக்கிறார்கள்! காவேரிக்கு, இதைவிட அதிகமாக அல்லவா, மனவேதனை ஏற்படும். ஆனால், அவனுக்கு ஆத்திரம் அடிக்கடியும் வருவதில்லை; அதிக அளவிலும் ஏற்படுவதில்லை. வேறு சிலர் இருக்கிறார்கள் காங்கிரசாட்சியிலே உள்ள கேடுபாடுகளை எடுத்துச் சொன்ன உடனே, தீ மிதித்தவர்போலாகிக் கொதிக்கிறார்கள், கொக்கரிக்கிறார்கள்!

சிறுவனாக இருந்தபோது, தம்பி! தெருக்கூத்துகள் நிறையப் பார்ப்பதுண்டு. இப்போதுகூட மெத்த விருப்பம் எனக்கு, நள்ளிரவில் ஒலிபெருக்கியின் துணை தேடாமல், ஊர் முழுவதும் கேட்கத்தக்க முறையில் குரலெழுப்பி, நடத்தப்படும் தெருக் கூத்துக்களைக் காண்பதில், கிருஷ்ண வேடம் போடுபவன், அலங்கார நடை நடப்பான்; ஆர்ப்பரிப்பு இருக்காது; புன்னகை செய்வான்; பற்களை நறநறவெனக் கடித்துக் காட்டமாட்டான்; குறும்புப் பார்வைதான் காட்டுவான், கொவ்வைபோலக் கண்களைச் சிவப்பாக்கியும், உருட்டி மிரட்டியும் கண்களைக் காட்ட மாட்டான்! நளினமான நடை இருக்கும். துரியோதனன், துச்சாதனன் போன்றவர்கள்தான், மண் கிளம்பும் அளவுக்குக் குதிப்பார்கள்; இடமும் வலமும் சரசரவென்று சுழலுவார்கள்; ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஒரு இரவு, வழக்கமான முறையிலே நடித்துக்கொண்டிருந்த கிருஷ்ண வேடக்காரன், துச்சாதனனை விட அதிக ஆர்ப்பாட்டமாக, குதிக்க ஆரம்பித்தான். எங்களுக்கு ஒரே வியப்பு! கண்ணன் இப்படி நடிக்கக் கூடாதே! போட்டுள்ள வேடத்தை மறந்துவிட்டானோ ஒரு சமயம் என்று எண்ணிக் கொண்டோம். அவனோ வலமும் இடமும் வேகமாகச் சுற்றுகிறான், தாளக்காரன் திகைக்கிறான். துரியோதனனே திடுக்கிட்டுப் போய், அசைவற்று நின்று விட்டான் போயேன், கண்ணன் ஆடிய ஆர்ப்பாட்டத்தைக் கண்டு.

மற்றவர்களைப் போல, இதைக் கண்டு வியப்படைவதுடன் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. கூத்து நடத்துபவர்களில், எனக்கு வேண்டியவர்களிடமே சென்று விசாரித்தேன், கண்ணன் இப்படி ஆடிடக் காரணம் என்ன? நடிப்பு இலக்கணமோ பாழாகி விட்டதே! ஒரு சமயம், கதையையே மறந்து விட்டானோ!! - என்று கேட்டேன். இடி இடியெனச் சிரித்தபடி விளக்கம் தந்தார்கள். விளக்கை நோக்கிப் பறந்துவந்த வண்டு, கண்ணன் போட்டுக் கொண்டிருந்த சட்டையிலிருந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்துவிட்டது; நெளிந்து பார்த்தான், தானாக வண்டு கீழே விழும் என்று; இல்லை! மாறாக, வண்டு, முதுகுப்புறம் சென்றது. ஓடி ஆடிப் பார்த்தான், கீழேவிழ வில்லை; பொல்லாத வண்டு முதுகில் பலமாகக் கொட்டி விட்டது. சுரீல் என்று எரிச்சல்! கண்ணன் வேடமானால் என்ன, காகுத்தன் வேடமானால் என்ன, வண்டு கொட்டினால் வேதனை தானே! அந்த எரிச்சலால், வேதனையால், கண்ணன் வேடம் போட்டவன் அந்த ஆட்டம் ஆடினான், துரியனைத் தோற்கடிக்கும் அளவுக்கு!!

எப்போதோ பார்த்த இந்தக் கூத்துதான், எனக்கு இப்போ தெல்லாம், காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்யும்போது நினைவிற்கு வருகிறது. நடிகனை வண்டு கொட்டி, ஆர்ப்பரிக்க வைத்ததுபோல, காங்கிரஸ் ஆட்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு, சில காங்கிரசாருக்கு, சுரீல் என்று கொட்டும் வண்டு போலாகி விடுகிறது! துடிக்கிறார்கள், ஆர்ப்பரிக்கிறார்கள், கண்டபடி தூற்றியும் திரிகிறார்கள். பணபலம், பத்திரிகை பலம், மகாத்மா விட்டுச் சென்ற அருள்பலம், ஆட்சிப் பொறுப்பு அளிக்கும் செல்வாக்குப் பலம், இவ்வளவு அரண்களையும் துளைத்துக் கொண்டு, எதிர்ப்புக் கொட்டுகிறது என்றால், அவர்களால், எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்! நான் கண்ட தெருக்கூத்து நடிகன் போலாகிவிடுகிறார்கள்! கண்ணன்போல வேடம் இருப்பினும், துரியன்போல ஆர்ப்பரிக்கிறார்கள்.

தம்பி! இதை உன்னால் உணர முடிந்தால், பிறகு கொதித்து, குளறி, பகை கக்கித் திரியும் காங்கிரசாரிடம் கோபம் அல்ல, இரக்கமே ஏற்படும்.

அண்ணன்,

2-4-1961