அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கைராட்டை காவேரி (2)
1

காவேரியின் குழப்பமும் நீக்கமும்
முதலாளிகளுக்குப் பாதுபாப்புத் தரும் காங்கிரஸ். . .

தம்பி!

மூவரும் கிராமம் சென்று பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா. தாமரைப் பூத்த குளம் என்று கவிகள் காட்டுகிறார்களே, ஏட்டில் அந்தக் குளம் - தாமரையும் இல்லை, தண்ணீரே போதுமான அளவு இல்லை; தவளைகள் தங்கி இருக்கும் அளவுக்குச் சேறு, குழம்பிக்கிடந்த நிலை. அங்கு, பெரிய வேப்ப மரம்; அதன் அடியில், "கன்னியம்மாள்' கோயில். அங்கு, கருங்கற்கள் - உட்கார்ந்து கொள்ளும் அளவில்! மூவரும் உட்கார்ந்தோம், வேறு பல விஷயங்களைப் பேசிக் கொண்டு.

இரண்டு பேர், பேசும் குரல் கேட்டது, உற்றுக் கேட்டோம்.

"நீ எப்பவும் அதிர்ஷ்டக்காரன்தாண்டா! இந்தப் பொழைப்பும் ஒரு பொழைப்பா என்று. இதற்கு ஒரு தலை முழுக்குப் போட்டுவிட்டுப் பட்டணம் போய், நிம்மதியாக இருக்க முடிகிறது. என்னைச் சொல்லு, எல்லைக் கல்லாக இங்கேயே கிடக்கிறேன்.''

"உனக்கு, ஆடுமாடு, காடுமேடு இவைகளை விட்டுவிட்டு வர மனம் இல்லை. . . காகாணி வேறே இருக்கே, அதைக் கட்டிக் கொண்டு கிடக்கிறே. . .''

"அண்ணே! நானும் இன்னும் கொஞ்ச நாளிலே இந்தப் பட்டிக்காட்டுக்கு ஒரு தலைமுழுக்குப் போட்டுவிட்டுப் பட்டணம் வந்துவிடறேன். . . அண்ணே! இப்ப நீ எங்கே வேலைக்கு இருக்கறே?''

"ஆர்பர்லே. . . அதாவது துறைமுகத்திலே . . கடலோரம்...''

"கடல் காத்துப் பட்டாலே போதுமாமே. . . உடம்பு பளபளன்னு ஆகிவிடுமாம். . . உன் உடம்புகூட அண்ணே! மேனி போட்டிருக்குது. . .''

"போப்பா, கேலி செய்யறே. . . நான் கருப்பன் கருப்பன்தான். ஆனா, பட்டணத்திலே என்னை எல்லோரும், இங்கே கூப்பிடுகிறதுபோல கருப்பன், கருப்பன்னு கூப்பிட மாட்டாங்க. கருப்பையான்னுதான் கூப்பிடுவாங்க. . . அதெல்லாம், ஒரு மரியாதைக்கு.''

"இங்கே, இவ்வளவு வயசு ஆச்சி எனக்கு. இன்னமும் கண்டவங்க, மொட்டை, மொட்டைன்னுதானே கூப்பிடுகிறாங்க, துளி கூட மரியாதை இல்லாமே, ஆமாண்ணேன்! நீ இருக்கிற தெரு பெரிசா?''

"அடேயப்பா! எம்மாம் பெரிசு! நம்ம ஏரிக்கரையிலே இருந்து, பக்கத்து ஊர் எல்லம்மா கோயில் வரைக்கும், ஒரே தெருவா இருந்தா எப்படி இருக்கும்! அம்மாம் பெரிசு!''

"கரண்ட் விளக்குத்தானே?''

"ஆமாம்! கண்ணைப் பறிக்கும்.''

"இங்கே, சூரியன் மலைவாயிலே விழவேண்டியதுதான் பாக்கி, ஒரே இருட்டு! பாம்புக் கடிச்சாக்கூட, ஒரு பச்சிலை தேடிப் பறிக்க வெளிச்சம் கிடையாதே, ஊராவா இருக்குது அண்ணேன்! தெருவுக்கு என்னா பேரு. . .''

"பவழக்காரத் தெரு. . .''

"அஞ்சு, ஆறு கிடைக்கும் கூலி என்கிறாயே, அம்மாம் பணமுமா, செலவழிச்சி விடுவே. . .''

"அட போடா, பைத்தியக்காரா! சுகப்படத்தானே அங்கே போனது. ஒரு சொக்கா துணி இல்லாம, இங்கே இருக்கற மாதிரியா, பிறந்த மேனியாவா இருக்கறது? இங்கே பச்சை மிளகா ஒண்ணைக் கடிச்சிக்கிட்டுப், பானைக் கஞ்சியைக் குடிக்கறது வழக்கம். இங்கே அப்படி முடியுமா? அப்படி இருக்கலாமா? நாலு பேர் பார்த்தா என்ன சொல்லுவாங்க.''

"காப்பித் தண்ணி குடிப்பே. . .''

"ஒரு நாளைக்கு நாலு தடவையாவது. . .''

"இங்கே, காச்சல் வந்தா காப்பி ஒரு முழுங்கு குடிடான்னு, வைத்தியர் சொல்றாரு. . .''

"அங்கே காச்சல் வந்தா, உடனே ஊசி போட்டுக்கணும்...''

"ஆசுபத்திரியிலே. . .''

"ஆமாம். . . ஆனா, வேலை மேலே இருக்கறதாலே, அங்கே போயி காத்துகிட்டு இருக்க முடியறதில்லை. நம்ம வீட்டுப் பக்கமா, டாக்டரய்யா இருக்கறாரு, அவர் போட்டு விடுவாரு ஊசி.''

"பணம் கொடுக்கணுமேல்லோ. . .''

"பின்னே! அவர் வயிறு என்ன மண்ணையா தின்னும்.''

"அண்ணே, கடல் காத்து வாங்கப் போறதாமே, நீயும் போவயா, எப்பவாவது''

"நானா! ஒவ்வொரு நாளும் கடல்காத்து வாங்கப் போவேனே. . .''

"நீ கொடுத்து வைத்தவன், அண்ணே, நான் வயித்தெரிச்சல் படறதா எண்ணிக் கொள்ளாதே, நான் சுகப்படா விட்டாலும், நீ சந்தோஷமா இருக்கறயே அது போதும். எண்ணே! இப்பத்தான் நீ நிம்மதியா, வேலை கிடைச்சு, பட்டணத்திலே வாசம் செய்யறியே, அந்தப் பழையக் கடனைக், கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துவிடக் கூடாதா! நான், கொழந்தை குட்டிக்காரனாச்சே. . .''

"அட, கொடுக்கறம்பா! இப்ப, கொஞ்சம் செலவு, அங்கே கூடக் கொஞ்சம் கடன் இருக்குது. . .''

"அங்கே, உன்னை யாருக்குத் தெரியும். யாரு கடன் கொடுத்தாங்க. . .''

"இங்கே போலவா, அங்கே மூணு தலைமுறையா, நாணயமான குடும்பமா, நிலம் இருக்குதா, நீர் இருக்குதான்னு பார்த்துக் கடன் கொடுக்க. அங்கே ஆளோட நம்பிக்கையின் பேரிலேயே, கடன் கொடுக்கறாங்க போயேன் - ஐம்பது வேணுமோ, நூறு வேணுமான்னு மனுஷாளோட மதிப்புத்தான் பெரிசு அங்கே. கடனைத் திருப்பிக் கொடுக்கச் சுலபமான வழியும் இருக்குதா, இங்கே, அறுவடை காலத்திலே வந்து களத்து மேட்டிலே உட்கார்ந்துகிட்டுப் பூரா கடனுக்கும் அளடா நெல்லை என்கிறானே, அதுபோலவா? ஒவ்வொரு நாளும் கையிலே கிடைச்சதைக் கொடுத்துகிட்டு வரலாமே - காலோ அரையோ, ஒண்ணோ ரெண்டோ, நம்ம இஷ்டம் போலே. . .''

"இம்மாம் சௌகரியம் இருக்குது அண்ணே! எல்லாம், சொயராஜ்யம் வந்த பிறகுதானே, இதெல்லாம். . .''

"ஆமாம். . . நான்கூட ஒரு நாள், நம்ம கைராட்டை காவேரியைப் பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்தோம், கடற்கரையிலே.''

"அப்படியா! அவரும் காத்து வாங்க வந்தார்போல இருக்கு. வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனயா?''

"இல்லே! அவருக்கு வேலை ஓய்வில்லைன்னு தெரிஞ்சுது, நாம போயி அவரோட வேலையைக் கெடுக்கலாமா. . . பட்டணத்திலே, அப்படி அனாவசியமா, ஒருத்தர் காரியத்திலே ஒருத்தர் தலையிடமாட்டாங்க. . .''

"ஆனா, உபகாரம் செய்ய ஆள் இருக்குதே. கேட்டா, கடன் கிடைக்குது என்கிறியே. . . அது சரி, கோயில் கொளம் இருக்குதா...''

"அட, ஏன் இல்லே! நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலாத்தம்மன் கோயில் இருக்குதே. இப்பத்தான் போன மாசம் அபிஷேகம் நடந்தது பழத்தாலே. . .''

"பழமா. . .''

"ஆமாம். . . இங்கே ஏது அந்தப் பழமெல்லாம். ஆப்பிளு, திராட்சை, கமலா, உம்! தினுசு தினுசான பழம்.''

"ஆத்தா கொடுக்கறா; கொடுக்கறவளுக்குக் கொண்டாட்டம் நடத்தாமே. . . இங்கே, கால்ரா வந்தா, காப்புக் கட்டிக் கடா வெட்டறோம். . .''

"அங்கே, உடனே, மோட்டார் வரும். . .''

"மோட்டார் காரு எதுக்கு. . .''

"காலராக்காரனை, தனி ஆசுபத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போவாங்க. . .''

"அப்படி அல்லவா இருக்கணும் ராஜாங்கம்னா.''

***

காவேரிக்குக் குழப்பம், கலக்கம், கவலை, எல்லாம் பறந்தே போய்விட்டது. இதோ ஒரு ஏழை; உழைத்து உருக்குலைந்து போனவன்; பட்டணம் சென்று, நல்லபடி வாழ முடிகிறது; நம்ம ராஜாங்கத்தில் - என்று எண்ணி, என்னைப் பெருமிதத்துடன் பார்த்தான்.

பேச்சுக்குரல் அடங்கிவிட்டது. இருவரும், எழுந்து போய் விட்டனர்; நாங்கள் மூவரும் எழுந்தோம், வீடு செல்ல. சுற்றிய அலுப்பு; வீட்டில் கிரசின் விளக்குத்தான். எனவே படிக்கவோ, எழுதவோ முடியவில்லை; சீக்கிரமாகவே படுத்துத் தூங்கி விட்டோம். மறுநாள் பகலில் வெளியில் கிளம்ப முடியவில்லை.

பச்சைப்பட்டு விரித்தாற்போலப் பாங்கான காட்சி. நீலநிற நீர்நிரம்பிய குளம்; அதிலே, பலவண்ணப் பூக்கள்; கரையோரத்தில் வெண்ணிறக் கொக்குகள்; செடி கொடிகளிலே மலர் கூத்தாடும்; பழமரங்களில் கிளிகள், நாகண வாய்ப்புட்கள் உற்றுக்கேட்டால், குயிலின் குரல், வானம்பாடியின் இசை - இவைகளைச் சுவைக்கத் தெரியாததால், வெளியே போகவில்லை என்று எண்ணிவிடாதே, தம்பி! ஏடுகளில் படிக்கும்போதே, இனிக்கிறதே - நேரில் காணக் கசக்குமா! ஆனால் இருந்தால் தானே காண!!

எலும்புந் தோலுமான மாடுகளை, இவனும் நமது இனம் தானா என்று சந்தேகப்பட்டுக் கேட்கவேண்டிய நிலையில் இருப்பவன் ஓட்டிக் கொண்டு போகிறான். ஒவ்வொரு நாளும் தான் போகிறோம், கண்டது என்ன, கால்கடுக்கச் சுற்றியது தவிர என்ற எண்ணமோ என்னவோ, மாடுகள் துளிக்கூட ஆவலோ, சுறுசுறுப்போ அற்ற நிலையில், சென்றன! அவனும், அவைகளை விரட்டவில்லை. பூச்சூடி விளையாட வேண்டிய வயதுச் சிறுமிகள், தலையில் புல்லுக்கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள் - கிராமத்துக்கு வெளியே. கோழி முட்டைகளை எடுத்துக், கந்தல் துணியில் முடிந்து, சிலர் செல்கிறார்கள் - கோழியும் பார்க்கிறது - வீட்டுச் சிறுவனும் பார்க்கிறான் நமக்குப் பயன்படவில்லை, எந்த மாடி வீட்டுக்குப் போய்ச் சேருகிறதோ முட்டைகள் என்ற ஏக்கத்துடன். கடப்பாரை காலில் விழுந்ததால் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்குப் பச்சிலை அரைத்துப் பூசிக் கொண்டு, வேலைக்குச் செல்கிறான் ஒரு பாட்டாளி. தன் ஆறு குட்டிகளும் பின்தொடரச், சொறி பிடிக்கும் நிலையில் உள்ள நாய், குப்பை மேடு நோக்கி ஓடுகிறது. ஏற்றம் இறைக்கிறார்கள்! ஏர் உழுகிறார்கள்!! எங்கும் உழைப்புத் தெரிகிறது, உற்சாகத்தைக் காணோம். சிரிப்பு எழவில்லை, சலிப்புக் குரலொலிதான் கேட்கிறது. சுற்றிலும் பொட்டல், எனவே, வெப்பக் காற்று வீசுகிறது. இப்படிப்பட்ட இடத்திலே, காலையிலே, கடும் வெயிலிலே, சென்று, என்ன காண்பது - என்ன இனிமை பெற முடியும்? கட்டு அறுத்துக் கொண்டு ஒரு முரட்டுக்காளை ஓட, அதனைத் துரத்திப் பிடித்து மடக்க, அடக்க ஒரு வீர இளைஞன் செல்கிறான் - என்ற விதமான காட்சியாவது இருந்தால் பார்க்கலாம். எதுவும் இல்லை. விசை கொடுக்கப்பட்ட உருவங்கள்தான் தெரிந்தன. சரி! கிராமங்களின் கவர்ச்சி பற்றிப் பட்டணம் சென்று, கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டோம். மாலை வரையில் வீடே கதி.

இருட்டும் நேரம். இங்கும் அங்குமாகச் சில குடிசைகள் இருக்கும் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். வழி என்று சொன்னேன் - அதற்குத் தெற்குப் பெரிய தெரு என்று பெயராம்!!

சற்றுத் தொலைவிலிருந்த ஒரு குடிசைப் பக்கம், நாலைந்து பேர் ஓடினார்கள் - குய்யோ முறையோ என்ற கூக்குரல் கேட்டு. நாங்களும் ஓடினோம்.

நாங்கள், அந்தக் குடிசைக்கு அருகிலே சென்ற நேரத்தில், ஏற்கனவே அங்கு சென்றவர்கள் திரும்பிவிட்டனர்.

"வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வாங்க.''

"என்னதான் சொல்லு - இப்படிக் கண்மண் தெரியாமல் அடிக்கக் கூடாது.''

"பட்டணத்துக்குப் போய், பய இதைத்தான் தெரிஞ்சு கொண்டு வந்திருக்கிறான் போல இருக்குது.''

"அந்தப் பொம்பளையும், மனுஷன் சுபாவத்தைத் தெரிஞ்சி அடங்கினா என்னவாம்!''

"அட, அவளுக்கும் ஆசை டோய், பட்டணம் பார்க்க. . .''

இப்படிப் பேசிக் கொண்டு, அவரவர்கள் தத்தமது வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். நாங்கள் மூவரும், குடிசை எதிரில் நின்றோம்.

உள்ளே இருந்து ஓலம்! அந்த அழுகுரலை அடக்கும் அளவுக்கு ஆடவனின் அதிகாரக் குரல். குழந்தைகளின் கூக்குரல்! இடையிடையே, அடி, அறை, குத்து இவைகளின் சத்தம். உள்ளே போர்க்களம்; சந்தேகமில்லை. சரேலென உள்ளே நுழைந்தோம். எதிர்பாராத எங்கள் நுழைவு, அமளிக்கு முற்றுப்புள்ளி வைத்தது; ஆனால், அழுகை ஓயவில்லை; அவனுக்கு மேல் மூச்சு நிற்கவில்லை. காவேரியைப் பார்த்து, "நீங்களா?' என்று சிறிதளவு கூச்சம் கலந்த பயத்துடன் கேட்டான்.

காவேரி, சற்றுக் கடுமையாகவே, "உன்னை நான் யோக்யன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், இதுநாள் வரையில். ஒரு பெண்பிள்ளையைப் போட்டு மாட்டை அடிப்பதுபோல அடிக்கிறாயே, ஈவு, இரக்கம், தர்மம், நியாயம், நாகரிகம் எதுவுமின்றி. சே! இவ்வளவுதானா! பெண்ணை அடிப்பது ஒரு பெரிய வீரமா!'' என்றான்.

"பெண்ணா! இவ! பேய், காவேரி அண்ணே; இது என் உயிரை வாங்கும் பேய். உனக்குத் தெரியாது.''

"பேய்தான் நானு. . . ஆமா. . . நியாயத்தைக் கேட்கறனே, அதனாலே. . .''

"என்ன நியாயத்தைடி நீ கண்டுவிட்டே.''

"ஊர் உலகம் ஒத்துக்கொள்கிற நியாயத்தைத்தான், நான் கேட்கிறேன். ஐயா! நீங்களே சொல்லுங்க. இங்கே நான் இந்த மூணு சனியன்களைக் காப்பாத்தப் படாதபாடுபட்டுக்கொண்டு கிடக்கறேன். காட்டிலே ஒவ்வொரு நாளுமா, சுள்ளியும் விறகுக் குச்சியும் கிடைக்கும். நாலு நாளைக்கு ஒரு கட்டுக் கிடைச்சாலே பெரிய அதிர்ஷ்டம். அதை வித்து, இதுகளைக் காப்பாத்திகிட்டு, நான் கால் வயிறு கஞ்சிக்கு இங்கே அலையறேன். இந்த மனுஷன், பட்டணத்திலே, குஷாலா காலந்தள்ளிக்கிட்டுக் கிடக்கறாரு, நானும் வர்ரேன். அழைச்சிக்கிட்டுப் போ என்கிறேன், முடியாதாம்...''

"முடியாது. . . என்னாண்றே! தலையைச் சீவிடுவயா. . .''

"நான் ஏன் சீவணும். ஆண்டவன் பார்த்துகிட்டுத்தானே இருக்கறாரு, நீ செய்யற அக்ரமத்தை. உன் தலையிலே ஒரு நாளைக்கு இடி விழாமலா போகும்!''

"விழட்டும். . . செத்துத் தொலைக்கறேன். அப்புறம் உடம்பு பூரா பூசிக்கடி மஞ்சக் குங்குமம். . . கேட்டிங்களேல்லோ பேச்சை... இடி விழணுமாம், என் தலையிலே. . .''

காவேரி மேற்கொண்டும் அவன், அவளை அடிக்க ஒட்டாதபடி தடுத்துவிட்டு,

"ஏன்யா! இதிலே என்ன தப்பு இருக்குது. உன்னோடு அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதானே.''

என்று கேட்டான். அவன், எவ்வளவோ வேதனையை அடக்கிக் கொள்பவன் போலாகி,

"பட்டணம்தானே! அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதான், இந்தப் பட்டத்து அரசியை! ஏன்னா! ஆறு அடுக்கு மாடி இருக்குதேல்லோ, எனக்கு அங்கே; இவ வந்து உலாத்தணும், அந்த அழகை நான் பார்க்கணுமேல்லோ. காவேரி அண்ணே! உனக்கு ஒரு இழவும் புரியறது இல்லே. சுத்தச் சொன்னா, நாளெல்லாம் கைராட்டினத்தைச் சுத்திகிட்டுக் கிடப்பே. குடும்ப விவகாரம், உனக்கென்ன தெரியும்? நான் அவளை அடக்கற விதமாக அடக்கிக் கொள்கிறேன். நீ போ, இதிலே தலையிடாம.. .''

என்று கோபம் குறையாத நிலையில் பேசினான்.

"ஏம்பா! இங்கே கிராமத்திலே இருந்துதான் நிம்மதியாக வாழ முடியவில்லை. பட்டணம் போயிருக்கறே - ஏதோ வேலை செய்து பிழைக்கறியே - கூட உன் சம்சாரம், கொழந்தைகள் இருக்க வேண்டியதுதானே தர்மம், நியாயம், முறை. இதுகள் இங்கே பட்டினி கிடக்கறபோது, நீ மட்டும், பட்டணத்திலே இருக்க, எப்படி மனம் இடம் கொடுக்கும் உனக்கு.''

என்று நான் கேட்டேன். கனிவாகப் பேசினால், அவனுடைய காட்டுக் குணம் மாறக்கூடும் என்ற எண்ணத்தில்.

"ஐயா! நான்தான் அங்கே, நாய் படாத பாடுபட்டுக் கொண்டு கிடக்கறனே, இவளையுமா, அந்த வேதனையிலே கொண்டு போய்த் தள்ளணும்.'' என்றான் - கோபம் குறைந்து, துக்கம் வளர்ந்து வரும் நிலையில்.

"ஏம்பா! ஒரே அடியாப் பொய் பேசறே. உனக்குத் தான், ஆர்பர்லே வேலைன்னு சொன்னயே நேத்து, உன் சிநேகிதனிடம்.''

"அட, யாரய்யா, விவரம் கெட்ட ஆளா இருக்கறே. கடன்பட்டும் காலந்தள்ள முடியாததாலே, சொல்லாம, கொள்ளாம, ஓடிவிட்டேன் சென்னை பட்டணம். திரும்பி வந்தேன், மனசு கேக்காததாலே, இந்தச் சனியன்க கண்ணிலேயே இருக்கற மாதிரியா இருந்தது. வந்த இடத்திலே, சென்னைப் பட்டணத்திலே எப்படி இருக்கறே, என்ன வேலை செய்கிறேன்னு எவனாவது கேட்டா, என்ன சொல்ல முடியும்? அங்கேயும் அவதிதான்னா சொல்ல முடியும்? அதனாலேதான் ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன். ஆர்பர்லே வேலைன்னு சொன்னதும், நீ என்ன, இவளாட்டம், நான் ஒரு ஆபீசர்னு நினைக்கறியா? மூட்டை ஏத்தறது இறக்கறதுய்யா, வண்டிகளிலே! தெரியாதா, அதுதான் உத்யோகம், ஆர்பரிலே...!''

"அஞ்சு ஆறு சம்பாதிப்பதாகச் சொன்னயே.''

"ஆமாம், சொன்னேன். பய, பட்டணம் போயிருக்கான், அங்கே திண்டாட்டம்தான் இவனுக்கு. பிச்சை எடுக்கப் போறான் பாரேன், நாமே காதாலே கேட்கப் போறோம். கண்ணாலே பார்க்கப் போறோம். பய பெரிய படிப்பாளி - இல்லையானா "மெμன், ஓட்டுகிறதிலே கை தேர்ந்தவர் - அப்படி ஒரு நினைப்புப் போல இருக்குது என்று பேசிக் கேலி செய்கிறார் களே, அவர்கள் வாயை அடக்க, ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன்; மூட்டை சுமக்கறதை மறைச்சி.''

"ஒவ்வொரு நாளும் கடல் காத்து வாங்குவேன், உடம்பு கூட அதனாலே பளபளன்னு ஆகுது என்று சொன்னயே - நாங்க கேட்டுக் கொண்டு இருந்தமே. . .''

"மூட்டை சுமக்கற நேரம் போக, மிச்ச நேரத்திலே கடற்கரையிலே, பட்டாணி கடலை விற்கறதய்யா. அதை எப்படி, அப்பட்டமாச் சொல்றது. அற்பப் பசங்க கேலி செய்வானுங் கன்னு அப்படி மறைச்சிப் பேசினேன். மனுஷனுக்கு மானம்னு ஒண்ணு இருக்கவேணாமா! நம்ம காவேரி பார்த்தாரே என்னை, கடற்கரையிலே பட்டாணிக் கூடையோட.''

"பட்டாணிக் கடலை விற்கறவன், பகலிலே மூட்டை சுமக்கறவன், பவழக்காரத் தெருவிலே எப்படிக் குடி இருக்க முடியும்? அது பெரிய பணக்காரர்கள், வியாபாரிகள் இருக்கற தெருவாச்சே.''