அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கைராட்டை காவேரி (2)
2

"ஆமாம். . . அங்கே ஆறாம் நம்பர் மாடி வீடு. நூறு ரூபா வாடகை கொடுக்கறேன். ஏன்யா வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொள்றே. பவழக்காரத் தெருதான்யா - வீடு எவன்யா நமக்குக் கொடுப்பான் - தெரு ஓரம், - நடைபாதை - சரிதானா! இதைப்போயி சொல்லச் சொல்றயா, அவன் கிட்ட. . . சொன்னா என்னைக் காகாசுக்கு மதிப்பானா. நானே அவன்கிட்ட கடன்பட்டிருக்கிறேன். . .''

"பட்டணத்திலே, கடன் கொடுக்கப் பலபேர் இருக்கறாங்க - மனுஷாளோட நம்பிக்கையின் பேரிலேயே கடன் கொடுக்கறாங்க - ஒவ்வொரு நாளும் கால் அரை கட்டலாம். இப்படிச் சொன்னயே.''

"அது புரியல்லையா உனக்கு ஈட்டிக்காரன் தெரியுமா உனக்கு; அட காபூல்காரன்யா! அவனுங்க கடனை எங்க தலையிலே கட்டிவிட்டு, ஒவ்வொரு நாளும் வந்துவிடுவான், கையிலே சவுக்கு எடுத்துக் கொண்டு, தெரியுமா! காலோ அரையோ கொடுக்கல்லே, சவுக்காலேயே கொடுப்பான்.''

"அட பைத்யக்காரா! அதைத்தானா, அவ்வளவு கௌர வமாச் சொன்னே.''

"அப்படிச் சொல்லாமே, தெரு ஓரத்திலே கிடக்கறேன் - மூட்டை தூக்கிப் பிழைக்கறேன் - என்று சொன்னா, ஊரார் பார்த்து மதிச்சி, மெடல் கொடுப்பாங்களா! சுத்த பைத்யக்காரனா, இருக்கறியே. . . சும்மா சொல்லி வைக்கறதுதான், மானம் போகாமலிருக்க. இவளிடம் சொன்னேன். நம்பினாளா!! ஆர்பர்லே வேலையாமேன்னு, பெரிய உத்யோகத்திலே நான் இருக்கற மாதிரியாகவும், "அடுத்த கவர்னர் நான்தான்' என்கிற மாதிரியாகவும் எண்ணிக்கொண்டு, நானும் வர்ரேன் என்கிறா, பட்டணத்துக்கு. இவளையும் இழுத்துக்கிட்டுப் போய், நடைபாதையிலே குடும்பம் நடத்தவா - இந்த மூணு கோட்டான் களையும் கூட்டிக்கிட்டுப் போகவா!! ஆர்பர்லே போயி, வெளியே வருவதற்குள்ளே ஆபீசர்கள் திட்டு, போலீஸ் அடி, இந்தப் பொழைப்புக்குப் போட்டி போட்டுக் கொண்டு வருகிறவங்களோட தொல்லை - கொஞ்சமா நஞ்சமா, நான் பட்டுக்கொண்டு வர்றது. இவ வேறே வரணுமா - நான் மூட்டை சுமக்கறதையும், உதை படறதையும் பார்க்க.''

"ஏம்பா, நீ பட்டணம் போயி, இந்தப் பாடு படணும். . .?''

"என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு. இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!''

மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம் கொட்டி விட்டதாலே, கூடைக்காரனுக்குக் கொஞ்சம் நிம்மதி. கணவன் படும் கஷ்டத்தை அறிந்ததாலே, மனம் இளகிற்று மனைவிக்கு. உண்மை தெரியாமல் அவனிடம் வம்புக்கு நின்றோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால், இவர்களுடைய வருத்தத்தைவிட, அதிக அளவு வருத்தம் காவேரிக்குத்தான். மலைபோல நம்பிக் கொண்டிருக்கும் காங்கிரசாட்சியிலே, உழைப்பாளிக்கு இதுதான் நிலை என்று அறிந்து குமுறினான்.

மூவரும், நகரம் வந்து சேர்ந்தோம். காவேரி என்னை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கு என் கட்சியின் மீதுள்ள பற்றுதலால், உன் பேச்சைக் கேட்கக்கூட எரிச்சலாக இருக்கும். இப்போது ஓரளவுக்கு எனக்கும் உண்மை புரிகிறது மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் பிறக்கிறது, என்றான். "காவேரி! இப்போதுதான் வெள்ளைக்காரனை எதிர்த்த போது, உன்னிடம் இருந்த தெளிவு, துணிவு, வீரம் மறுபடியும் மலருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிக், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உனக்கு, மகிழ்ச்சி, பெருமை, பக்தியே ஏற்பட்டு விட்டது. வழிபடும் தெய்வமாக்கிக் கொண்டாய் காங்கிரஸ் ஆட்சியை; அந்த ஆட்சியோ, உன்போன்ற உண்மைத் தொண்டர்களைப் பலி கேட்கிறது; இரத்தம் குடித்துக் கொழுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலே, காவேரி! 270- இலட்சம் மக்கள் ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணிநேரம் மட்டுமே செய்வதற்கு வேலைபெற்று, மற்ற நேரத்தில் தேம்பித் தவிக்கிறார்கள். 200-இலட்சம் மக்கள் இரண்டு மணிநேரமும், 450-இலட்சம் மக்கள் 4-மணி நேரமும்தான் வேலை கிடைக்கப் பெற்று, அதிலே கிடைக்கக் கூடியது கால்வயிற்றுக்குப் போதாததால் வேதனைப்படுகிறார்கள். 600-இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 5-அணா அளவில்தான் வருமானம். 400-இலட்சம் மக்களுக்கு 4-அணா அளவு! 200-இலட்சம் மக்களுக்கு 2-அணா!!

இது, சர்க்காரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு தருகிற புள்ளிவிவரம்.

இதேபோது, வெள்ளைக்காரன் காலத்திலே கிடைத்ததை விட, வருவாய் இப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, வணிகக் கோமான்களுக்குக் கிடைக்கிறது என்று வணிகர்கள் மகா நாட்டிலேயே பேசப்படுகிறது.

முதலாளிகளுக்குச் சர்க்கார் காட்டியுள்ள சலுகை - காங்கிரசாட்சி - 590 கோடி ரூபாய் அளவாம்.

சுயராஜ்யம் கிடைக்குமுன்பு, தனிப்பட்ட முதலாளிகள் நடத்திய தொழில்களில், அவர்களின் மூலதனம் 700 கோடி ரூபாய். இப்போது, சுயராஜ்ய ஆட்சியின் பயனாக, 1900 கோடி ரூபாய் தொழில்களில்.

காவேரி! உன்னைப்போல உழைத்த உத்தமர்களல்ல, தியாகச் செம்மல்கள் அல்ல, காற்றடித்த பக்கம் திரும்பும் துருத்திகள், விளைந்த காட்டுக் குருவிகள், பழந்தின்னிப் பறவைகள், காங்கிரசாட்சியிலே தங்கள் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துக் கொண்டு, காங்கிரசைப் புகழ்ந்து பேசுவதுடன், ஆட்சியின் அலங்கோலத்தை எடுத்து விளக்கும் எங்கள்மீது சீறிப் பாய்கிறார்கள்; எம்மைத் தேசத்துரோகிகள், பிளவு மனப்பான்மையினர் என்றெல்லாம் ஏசிப்பேசி, உன்போன்ற உண்மைத் தொண்டர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்; நீங்களும் மயங்கி விடுகிறீர்கள்.

"கனம் உதவி சபாநாயகர் அவர்களே! நாடு சுதந்திரம் அடைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கப் புகுந்திருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நிதி மந்திரி அவர்கள் சொல்லும் காலத்திலும், அறிக்கையின் வாயிலாக நாம் பார்க்கின்ற போதும், மக்களுடைய வாழ்க்கையின் தரம் மூன்று சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. அது சராசரியாகப் போட்ட கணக்காகத்தான் இருக்கும். உண்மையாகவே கிராம மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைமையைவிட, இப்பொழுது அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகச் சொல்ல முடியாது.

"உற்பத்தி செய்யுங்கள் அல்லது அழிந்துவிடுங்கள்'' (produce or perish) என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை எப்படியிருக்கிறது? "உற்பத்தி செய்து, அழிந்து விடுங்கள்' (produce and perish) என்ற நிலைமைதான் இருக்கிறதே - தவிர வேறு ஒன்றுமில்லை. தொழிலாள மக்களும், விவசாய மக்களும் நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். அதேமாதிரி உற்பத்தியையும் பெருக்குகிறார்கள். உற்பத்தியை என்னவோ அவர்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறார் களே தவிர, அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால், அதுதான் கிடையாது. மூன்று சதவிகிதம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இன்னும் அதிகமாக உயர்த்தப் போவதாகச் சொல்லுகிறார்கள்.

"கனம் நிதி மந்திரி அவர்கள் கொள்கையை விளக்கும் காலத்தில், கனரகத் தொழில்களை முதல்படியாக அமைக்கப் போவதாகவும், அதற்கு அடுத்தபடியாகக் குடிசைத் தொழில்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், அதன் மூலமாக மக்களுடைய வாங்கும் சக்தி உயரும் என்றும், விவசாயத்திலே மாறுபாடு செய்யப் போகிறோம் என்றும் சொன்னார்கள்.

"கனரகத் தொழிலைப் பற்றிச் சொல்லும்போது, உருக்குத் தொழிற்சாலையை டில்லி நகரத்திலும், அலுமினியம் தொழிற்சாலையை இன்னொரு இடத்திலும் வைக்கப் போவதாக யோசிக்கப்படுகிறது. எஃகுத் தொழிற்சாலையைப் பீகாரில் நிறுவலாமா என்று பேசப்படுவதாக நேற்றுப் பத்திரிகையில் பார்த்தேன். அது ஏன் என்று சொல்ல வேண்டும்? தென்னாட்டில் பல அங்கத்தினர்கள், நாங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் பக்கத்தி லுள்ள அங்கத்தினர்கள்கூட நிச்சயமாகத் தென்னாட்டிலே சரியான ஆலைத் தொழில் இல்லையென்று சொல்லி வந்திருக்கிறார்கள். சேலத்தில் ஒரு இரும்பு உருக்குத் தொழிற் சாலையை நிறுவவேண்டுமென்று இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல மக்களும் தெரிவித்தும்கூடச், சேலத்தில் நிலக்கரி கிடையாது, அதனால் உருக்குத் தொழிற்சாலையை ஏற்படுத்த முடியாது என்று மத்திய சர்க்காரால் பேசப்படுகிறது. ஆனால் பத்திராவதியில் நடப்பது என்ன? டன் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் மத்திய சர்க்கார் (Subsidy) கொடுக்கிறார்கள். அதே மாதிரி சேலத்தில் உருக்குத் தொழிற்சாலையை அமைப்பதற்கு வேண்டிய உதவியையும் மத்திய அரசாங்கம் அளிப்பதற்கு முன் வர வேண்டும். அலுமினியம், பாக்சைட் ஆகிய தாதுப் பொருள்கள் சேலத்தில் கிடைக்கின்றன. நிச்சயமாக ஒரு அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கட்டாயப்படுத்த வேண்டும். திருச்சி ஜில்லாவில் ஆயிரக்கணக்கான டன் எடை உள்ள ஜிப்சம் கிடைக்கிறது. அதைக் கொண்டு சூப்பர் பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்பார்வையில் விடப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதற்குப் பதிலாக மத்திய சர்க்காரோ, சென்னை சர்க்காரோ நேரடியாக நடத்துவதற்கு முன்வர வேண்டும். தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கும்படியாக விட்டுவிடக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன்.

"சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தி பெருகி விட்டது என்று சொல்லப்பட்டது. பஞ்சாலைத் தொழிலிலும் சிமெண்ட் தொழிலிலும் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதன் மூலம் தனிப்பட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் சென்று கொண்டிருக்கிறது. அந்த இலாபத்தை நிறுத்திக் கட்டுப்படுத்த வேண்டும். மக்களின் மீது மேலும் மேலும் வரியைச் சுமத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஆலைத் தொழிலை நடத்தக்கூடிய பெரும் முதலாளிகள் அடைந்து வரும் இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். சிமெண்ட் தொழிலில் சுமார் 50 முதல் 60 இலட்சம் வரை மூலதனம் போட்டவர்கள்கூட இன்று கொள்ளை இலாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி.சி., டால்மியா போன்றவர்களும், இன்னும் சாதாரணமாக மூலதனம் போட்டவர்களும், ரிசர்வ் நிதியில் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் புள்ளி விவரத்தைப் பல அங்கத்தினர்கள் இதற்கு முன் கொடுத்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலின் மூலம் வெள்ளைக்கார முதலாளிகள் நிறைய இலாபம் சம்பாதித்துப், பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேயிலைத் தொழிலில் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குக் காரணம் என்னவென்றால், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் யாதொரு விதமான வசதியும் செய்து கொடுக்காததுதான். வெள்ளைக்கார முதலாளிகள் இலாபத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தங்களின்கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, வீட்டு வசதி, குழந்தைகளின் கல்வி வசதி, இவை போன்ற பல வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்க, யாதொன்றும் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று நீலகிரியிலிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டில் வெள்ளை முதலாளிகள் ஏராளமான இலாபத்தைச் சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுடைய இலாபத்தைச் சர்க்கார் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் கேட்க ஆசைப்படுகிறேன். பெரும் முதலாளிகளுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தி, அளவுக்கு மேற்பட்ட இலாபத்தைச் சர்க்கார் எடுத்துக் கொள்வதின் மூலம், நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றலாம். அப்படிச் செய்தால் மக்கள்மீது வரி போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நான் யோசனை கூற விரும்புகிறேன். மக்களுக்கு இன்னும் வரி போட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழேதான் போய்விடும்.

"விவசாய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படியிருக் கிறது? சாதாரண விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை யென்று உறுதியாகக் கூற முடியும். அரசாங்கத்தார், டாடாவுக்கு ரூ. 10 கோடி கொடுக்கிறார்கள். மற்றும் பல கம்பெனிகளுக்கும் இம்மாதிரி உதவியளிக்கப்படுகிறது. ஆனால் அக்கம்பெனிகளின் நிர்வாகத்தில் அரசாங்கத்துக்கு பங்கு அல்லது கண்ட்ரோல் (Control) இருக்கிறதா? கிடையாது. இலாபத்தையும் அதிகமாக அடிக்க விட்டுவிட்டுத், தனிப்பட்ட மூலதனக்காரர்களுக்குக் கடன் கொடுக்கப்படுகிறது. நேற்றுக்கூட மத்திய அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகிற காலத்தில் Industrial Finance Corporation-ல் நடக்கும் ஊழல்களைப் பற்றிப் பல அங்கத்தினர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அனுசரிக்கும் முறையைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். சாதாரண சிறு தொழிலாளி களுக்குக் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டுமேயல்லாது, தொழிலாளிகளுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கும் தனிப்பட்ட பெரு முதலாளிகளுக்கு வட்டியேயில்லாமல் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தனிப்பட்டவர்களுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தித், தொழிலாளிகளுடைய நிலைமையை உயர்த்தி, நிலச் சீர்த்திருத்தம் கொண்டு வந்தால்தான் நாட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். ஐந்து வருடத் திட்டம் போட்டு விட்டோம். அதை அமுலாக்கப் போகிறோம்' என்று சொன்னால் போதாது.

"அடுத்தபடியாக, யாருக்கு வரி போட வேண்டும்? பெரும்பாலான அளவில் நாட்டில் மக்களுடைய வாழ்க்கை யிலுள்ள ஏற்றத் தாழ்வைக் குறைக்க வேண்டும். பெரும் பணம் படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நிறையப் பணம் படைத்த பணக்காரர்களுக்கு வரி போட்டு ஏழைகளுக்கு வரி போடாமலிருந்தால்தான், மக்களுடைய வாங்கும் சக்தி பெருகும். தென்னாட்டிலுள்ள விவசாயிகளுக்குத்தான் சம்பளம் மிகக் குறைவு. அகில இந்திய ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பெப்சுவில் பெண்களுக்கு ரூ. 1தீ சம்பளம், தென்னாட்டில் அவர்களுக்கு ரூ. தீ சம்பளம். இந்த ரிப்போர்ட்டை நாங்கள் தயாரிக்கவில்லை; இதை மத்திய அரசாங்கம் தயாரித்திருக்கிறது. வேறு ராஜ்யத்தில் தொழிலாளி களுக்குச் சம்பளம் ரூ. 4, 5 என்றால், நம் ராஜ்யத்தில் ரூ. 2-தான். ஆகையால் தொழிலாளிகளுக்கு இலாபகரமான தொழிலை ஸ்தாபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.''

"காவேரி! இது, நாங்கள் யாரோ, பேசுவதுபோலத் தோன்றுகிறது அல்லவா! காங்கிரஸ், முதலாளிகளுக்குப் பாதுபாப்பு அளிக்கிறது; வடநாட்டுக்குத்தான் வளம் கிடைக்கிறது என்ற இந்த இரு கருத்துக்களையும் நாங்கள் பேசும் அளவிலும், முறையிலும் பேசியவர், இப்போது, காங்கிரஸ் உறுப்பினராக டில்லிப் பாராளுமன்றத்தில் கொலு இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரசைத் தோற்கடித்த வீரர், ஏழை பங்காளர் என்ற விருதுபெற்றுச், சென்னை சட்டசபையிலே எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டு, இப்படிக் கனல் கக்கினார். "இன்று, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டு, இன்பம் சுவைக்கிறார். கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும், நமக்குக் கவலையுமில்லை, நட்டமுமில்லை. ஆனால், உடனே, எங்கள்மீதுதானா பாய வேண்டும். எங்கள் கழகக்குரலை, தென்னகத்தின் உரிமைக்குரலை, பாராளுமன்றத்திலே சம்பத் எழுப்பியபோது, ஒரு வடநாட்டுக்காரன் எழவில்லை எதிர்த்துப் பேச. இந்த வாழத் தெரிந்தவர்தான் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார், கண்டிக்க; கேலி பேச!

இப்படிப்பட்ட, "இடம் தேடிகள்' - "மடம் நாடிகள்' - இன்று காங்கிரஸ் கட்சியிலே நிறைய இருக்கிறார்கள். அந்த இடம் எப்படி, இனி உன் போன்றாருக்கு ஏற்றதாக இருக்க முடியும்!! - என்று கேட்டேன். காவேரியின் கண்களிலே நீர் துளிர்த்தது.

***

அண்ணா! இப்படி மனம் மாறிய காவேரியை நான் பார்க்க வேண்டுமே!! - என்றுதான் கேட்பாய்.

காவேரி - நவபாரதி - இவர்களைக் காண வேண்டுமென்ற ஆவல் நிச்சயம் எழத்தான் செய்யும்.

அவர்கள், தம்பி! இதோ, என் பக்கத்திலேயேதான் இருக்கிறார்கள் - ஆமாம், ஒரே ஒரு காவேரி அல்ல, ஓராயிரம் பேர் இருக்கிறார்கள், காங்கிரசிடம் மனதைப் பறிகொடுத்து விட்டு, மீண்டுவர மார்க்கமின்றிக் குமுறிக் கிடப்பவர்கள். அவர்களைக் கண்டறிந்து, கருத்தளித்து, அவர்களை நமது இயக்கத்துக்குக் கருவூலமாக்கித் தர வேண்டும் என்று உன்னைக் கேட்டுக்கொள்ளத்தான், ஒரு கற்பனைக் காவேரியைக் காட்டினேன்.

அண்ணன்,

9-4-61