அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கைதி எண் 6342
கைது செய்தார்கள். . .
1

தம்பி!

பாரிஸ், இலண்டன், வர்μங்டன், டோக்கியோ இப்படிப்பட்ட எழில் நகர்களில், ஐம்பது அடுக்கு மாடிக் கட்டடத்தில், மினுமினுப்பும் வழவழப்பும் உள்ள மெத்தையில் அமர்ந்தபடி, தான் கண்ட காட்சிகளையும் கோலங்களையும், உரையாடிய நண்பர்கள் குறித்தும், களிப்புப்பெற்ற கலைக் கூடங்கள் பற்றியும், வாங்கி வைத்துள்ள பொருள்பற்றியும், வருவதற்கான நாள்பற்றியும், தம்பிக்கு எழுதும் அண்ணன்மார்கள் உண்டு. உனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறேனே! குறைந்த பட்சம் பினாங்கு, சிங்கப்பூர், கொழும்பு, ஜகார்தா போன்ற இடங்களுக்குச் சென்று அங்கிருந்தாவது கடிதம் எழுத முடிகிறதா? உனக்குக் கிடைத்த அண்ணன் அப்படி! என்ன செய்வது!! சிறையிலிருந்து கொண்டு எழுதுகிறேன். சிறைதானே என்று அலட்சியமாகவும் எண்ணிவிடாதே, தம்பி! மாடிக் கட்டிடம்! தனி அறை!! கட்டுக்காவல் சூழ!! கம்பிகள் பதித்த கதவு! காற்றைத் தடுத்திடும் அமைப்பு! இலேசான இடமல்ல!!

மாடிக் கட்டிடம் - 5-ம் நம்பர் அறை - மணிகூட அடிக்கிறது 9 - நவம்பர் 25.

தொலைவிலே உள்ள பொது இடத்துக் கடிகாரமணி! "கடிகாரங்கள்' என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் தொட்டும் தொடர்ந்து இரண்டு மூன்று கடிகாரங்களின் மணியோசை கேட்கிறது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தொகுதி ஐந்து 147 இசை நயத்துடன். இந்த இசையை விரட்டும் அளவுக்கு, மின்சார இரயில் வண்டிகள் கிளப்பும் ஓசை!!

சென்னை நகரத்து மையத்தில்தானே இருக்கிறேன். நகரத்தையும் நகர மக்களையும் பார்க்க முடியாதே தவிர, நகரம் எழுப்பிடும் நாதத்தைக் கேட்க முடிகிறது - அதிலும் இரவு நேரத்தில் தெளிவாக மின்சார ரயில் கிளப்பும் ஒலி காதிலே விழும்போதெல்லாம், ஒவ்வொரு விதமான பொருளுள்ள சொற்றொடர் நினைவிற்கு வருவதுபோல, ஒரு மனமயக்கம்! சிறுவயதுக்காரருக்கு மட்டுந்தான் அப்படி ஒரு மயக்கம் ஏற்படும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் - வயது ஆனவர்களுக்குந்தான் ஏற்படுகிறது.

5-ம் நம்பர் அறை, எனக்கு ஏற்கெனவே பழக்கமான இடம்; ஆமாம் தம்பி! இங்கு நான் இப்போது மூன்றாவது முறையாகத் தங்கி இருக்கிறேன்.

முன்பு தங்கியிருந்தபோது, இந்த மாடிக் கட்டிடம் முழுவதும், நமது கழகத் தோழர்கள் நிரம்பி இருந்தனர். பூட்டிவிட்ட பிறகு, அவரவர்கள் தத்தமது அறையிலிருந்தபடியே பேசிக்கொள்வதுண்டு. இம்முறை, நான் மட்டும்தான் இங்கு - நமது தோழர்களை, சிறையில் வேறோர் பகுதியில் வைத்து விட்டார்கள். என்னுடன் இருப்பவர்கள் இருவர் - ஒரு முஸ்லீம் பெரியவர் - மற்றொருவர் செட்டி நாட்டுக்காரர். இருவரும், அமைதி விரும்புபவர் - என்பால் அன்பு கொண்டவர்கள், அரசியல்பற்றி அதிகமாகப் பேசுபவர்கள் அல்ல - விஷயம் தெரியாதவர்களுமல்ல.

சிறையிலே தம்பி, ஒருவன் எவ்வளவு காலம் நம்மோடு இருக்கப் போகிறவன் என்பதைப் பொறுத்தே பெரிதும் பழக்கம் ஏற்படும். சிறைபாஷையிலே, "தள்டா! அவன் போயிடுவான் பத்து நாள்லே! நம்ம கதையைச் சொல்லு, கிடக்கணுமே அடுத்த ஆடிவரைக்கும்'' என்று கூறுவார்கள்.

என் "கதை' இருக்கிறதே, இது எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை! மற்றவர்களுக்கு எப்படித் தெரிய முடியும்!! எத்தனை நாட்களோ! மாதங்களோ! ஆண்டுகளோ! இழுத்துக்கொண்டு வந்தார்கள், பூட்டி வைத்திருக்கிறார்கள். எதற்காக கொண்டு வந்தார்கள் என்று சட்டசபையிலே பேசப் படுகிறது. படித்துப் பார்க்கிறேன் - எனக்குச் சொன்னவர் எவரும் இல்லை.

"எதற்காகக் கைது செய்கிறார்கள் என்பதைக் கூறவேண்டும்' என்று என் நண்பர் வழக்கறிஞர் நாராயணசாமி, உயர்நீதி மன்றத்தில் வாதாடுகிறார். நான் எங்கே போய் வாதாடுவது? நில் என்றார்கள், நின்றேன்! ஏறு என்றார்கள்; ஏறினேன்! இரு என்றார்கள் இருக்கிறேன். இன்று எத்தனை நாள்? 16-ம் தேதி பிடித்தார்கள்! பார்த்தாயா தம்பி! எனக்கே, போலீஸ் "பாஷை' வந்துவிட்டது - பிடித்தார்கள்!!

அந்த அகராதி, எளிதாகப் பழக்கத்துக்கு வந்துவிடுகிறது.

சிலர் என்னைக் கேட்டார்கள் - இங்கு அல்ல - சைதாப்பேட்டை சப் ஜெயிலில் - மரியாதையாக - "அய்யா பேர்லே என்ன கேஸ் போட்டிருக்காங்க?'' என்று. என்ன பதில் சொல்வது? "இன்னும் ஒண்ணும் போடல்லே' என்றேன். "கேஸ் போடாத முன்னயே, ஜெயிலா!!' - என்றார்கள். இப்போதும் எனக்குத் தெரியவில்லை - என் பேரில் வழக்கு உண்டா, இல்லையா என்பது. (நவம்பர் - 26லில் புரிந்தது)

நவம்பர் 17ல் சென்னை அறிவகத்திலிருந்து கிளம்பி, திருவல்லிக்கேணி கடற்கரைப் பக்கம் சென்று, அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவைக் கொளுத்துவது என்பது நான் மேற்கொண்ட திட்டம்.

நவம்பர் 17 காலை 9 மணி சுமாருக்கு, நான் திருவல்லிக்கேணிப் பக்கம் சென்றேன் என்றால், திடுக்கிட்டுப் போவாயல்லவா - ஆனால் உண்மையாகவே, சென்றேன். நடந்து அல்ல? விலையுயர்ந்த மோட்டாரில்! தனியாக அல்ல; போலீஸ் துணைக் கமிஷனர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். சிறுதூறல்! என்னை, போலீஸ் கொட்டடியிலிருந்து, அந்த அதிகாரி அழைத்துக்கொண்டு போகிறார் திருவல்லிக்கேணி கடற்கரைப் பாதையாக, கமிஷனர் அலுவலகத்துக்கு, என்னையுமறியாமல் சிரிப்பு வந்துவிட்டது.

"அவசரப்பட்டு நீங்கள் நடவடிக்கை எடுத்துவிட்டீர்கள், ஐயா! மழை பெய்வதைப் பார்த்தால், என் வேலையை மழையே கெடுத்துவிட்டிருக்கும்போல இருக்கிறதே -'' என்றேன்.

"இந்த இடத்தில் அல்லவா, இன்று மாலை அறப்போர் துவக்கம் நடைபெற்றிருக்க வேண்டும். தடுத்துவிட்டார்களே'' என்று எண்ணினேன். ஏக்கமாகத்தான் இருந்தது.

16-ம் தேதி காலை, காஞ்சிபுரத்திலிருந்து, நான், தோழர்கள் பார்த்தசாரதி - பொன்னுவேல் - சுந்தரம் - வெங்கா - ஆகியோருடன், திருச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக ஜீப்பில் கிளம்பினேன், சென்னைக்கு.

13-ம் தேதியிலிருந்தே காஞ்சிபுரத்தில், பல விதமான வதந்திகள்; வந்துகொண்டிருக்கிறார்கள்; வந்துவிட்டார்கள் - பிடிக்கப்போகிறார்கள் - வீட்டிலேயே சிறைவைக்கப் போகிறார்கள் - என்றெல்லாம்.

சென்னையில் கழகத் தோழர்களைக் கைது செய்தது இந்த வதந்திகளுக்கு அதிக வலிவு கொடுத்தது.

காஞ்சிபுரத்தில், நண்பர்கள், நாலைந்து நாட்களாகவே பரிதாபம் கலந்த முறையில் என்மீது பார்வையைச் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். சரி! இங்கு இருந்துகொண்டு வதந்திகளைப் பெற்றுக்கொண்டிருப்பானேன் - சென்னைக்கே செல்வோம் என்று 16-ம் தேதி காலை கிளம்பினேன். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில், அன்று கைது செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 17-ம் தேதி, நிகழ்ச்சியின் போதுதான் "பிடிப்பார்கள்' என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஜீப், பூவிருந்தவல்லி தாண்டிய உடனே, எதிர்ப்புறம் இருந்து வருகிற மோட்டார்கள், வேகத்தைக் குறைத்துக் கொண்டு, என்னைப் பார்க்க ஆர்வம் காட்டத் தொடங்கின. எனக்கு "வாடை' புரிந்தது.

வேகமாக வந்துகொண்டிருந்த "லாரி'யை நிறுத்தினார், டிரைவர் பதைபதைப்புடன்,

"அண்ணே! வளையம் போட்டுகிட்டு இருக்காங்க, அமிஞ்சிகரை கிட்டே'' என்றார்.

"போனால் சிக்கிக்கொள்வானே, போலீஸ் தயாராக இருப்பது இவனுக்குத் தெரியாதே, நாமாவது முன்கூட்டிச் சொல்லிவைப்போம்' என்ற எண்ணம், அந்த நல்ல மனம் கொண்டவருக்கு.

"பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும்.''

என்று நான் பதில் கூறிவிட்டுக் கிளம்பினேன் - எதிர்ப்புறமிருந்து வருகிற லாரிகள் - மோட்டார்கள் எல்லாமே இந்தப் "போலீஸ் வளையம்'' பற்றிக் கூறின. ஒரு ஆர்வமுள்ள லாரிக்காரர், என் மனம் மகிழும்படி சொன்னார்.

"கவலைப்படாதே அண்ணா! நாங்கள் இருக்கிறோம் வெளியே'' என்று.

கொடி ஏறிவிட்டது. இனி திருவிழா நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது. நாவலரும், கருணாநிதியும், நண்பர்களும் மோட்டாரில் வந்தார்கள், சென்னையிலிருந்து வழியிலேயே என்னைப் பார்க்க. விவரமாகக் கூறினார்கள், அமைந்தகரை போலீஸ் நிலையத்தருகே, என்னைக் கைது செய்யத் தயாராக இருப்பதாக! கேட்டுக்கொண்டு கிளம்பினேன்.

காஞ்சிபுரத்திலிருந்து, அ. க. தங்கவேலார் தமது மோட்டாரில் வந்துகொண்டிருந்தார். அதிலே, என் மகன் இளங்கோவனுடைய மாமனார், பேரளம் குஞ்சிதபாதம் அவர்களும், நண்பர் இராசகோபாலும் வந்துகொண்டிருந்தனர்.

அமைந்தகரை போலீஸ் நிலையத்தருகே, போலீஸ் வான்கள்! சைக்கிள்கள்! இரும்புத் தொப்பிப் போலீசார்! அடே அப்பா! ஏழெட்டுக் கொள்ளைகளை நடத்திப் பிடிபடாத ஒருவனைப் பிடிக்க எடுத்துக்கொள்ளப்படும் "முஸ்தீப்புகள்' போல!! என்ன வீண் சிரமம்!!

அமைந்தகரை போலீஸ் அதிகாரி, பாதையின் நடுவே நின்றார். நில்! என்று கைகாட்டினார்; ஜீப் நின்றது. முன் பக்கம் உட்கார்ந்திருந்த என் அருகே வந்தார்.

"என்ன? நான் தேவையா?'' என்று கேட்டேன்.

"ஆமாம்'' என்றார், சிரித்த முகத்துடன்.

"நான் மட்டுமா? என்னோடு உள்ள நால்வரும் சேர்த்தா?'' என்று கேட்டேன்.

"ஐவரும்!'' - என்றார். "ஐவர் அணி' என்று சொல்லி இருந்திருந்தால் அகமகிழ்ச்சி கொண்டிருந்திருப்பேன்.

கீழே இறங்கினேன் - எதிரே தயாராக இருந்த போலீஸ் வானில் ஏறிக்கொள்ள ஒரு விநாடி யோசித்துவிட்டு, போலீஸ் அதிகாரி "ஏன்! ஜீப்பிலேயே போகலாமே, அருகேதான்'' என்றார். சரி, என்றேன். என்னுடன் ஜீப்பில் ஏறுவதா கூடாதா என்று அவருக்கு ஐயப்பாடு. "ஏறலாமா? ஏறிக்கொள்வதிலே தவறு இல்லையே'' என்றெல்லாம் கேட்டார் - குழப்பத்துடன் அவ்வளவு அச்சம் ஏற்பட்டுவிடுகிறது, அதிகாரிகளுக்கு. கழகத் தோழர்களிடம் எந்தக் காரணத்துக்காகத் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டி நேரிட்டாலும், அதை வைத்துக் கொண்டு எந்தக் காங்கிரஸ்காரர் என்ன கலகமூட்டி என்ன தீங்கு தேடிவிடுவாரோ, என்ற அச்சம்! ஆட்சியில் உள்ளவர்கள் நேர்மையாகத்தான் நடந்துகொள்வார்கள்; வீணான கலகப் பேச்சுக்குக் காது கொடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை இப்போது அதிகாரிகளுக்கு இல்லை. நல்ல தமிழில் ஒரு அதிகாரி பேசினாலே அவர்மீது ஐயப்பாடு ஏற்பட்டுவிடுகிற காலமல்லவா இது! அதனால்தான் போலீஸ் அதிகாரி என் பக்கத்தில் உட்கார அச்சப்பட்டார். "பரவாயில்லை! தவறு இல்லை!' என்று நான் பல முறை கூறிய பிறகே, வண்டியில் ஏறினார்.

போலீஸ் நிலையம் சென்று ஜீப் நின்றது; உள்ளே இரும்புத் தொப்பிக்காரர் ஏராளம்.

ஐவரும் உள்ளே சென்று ஒரு பலகைமீது அமர்ந்தோம்.

அங்கு இருந்த இரும்புத் தொப்பிக்காரர், எங்களைப் பார்த்துக்கொண்டு, நின்றிருந்தனர் - ஒருவரும் பேசவில்லை. எனக்கே என்னமோபோல இருந்தது. ஏதாவது பேசிவைப்போம் என்ற எண்ணத்தில், "நீங்களெல்லாம் ரொம்ப நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். வேடிக்கையான பேச்சு என்றுதான் இதனை யாரும் கருதிக் கொள்வார்கள். ஆனால் பாவம், அந்தப் போலீஸ்காரர்கள், அதற்குக்கூடப் பதில் கூறவில்லை. கூச்சம், அச்சம்! அருவருப்பும் அல்ல, கோபமும் அல்ல என்பதை அவர்களின் பார்வை விளக்கிக்கொண்டிருந்தது; அவர்கள் பேசாமல் நின்றது, இன்றைய ஆட்சியில், யாராருக்கு அச்சம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டிற்று. இதைக் கண்டு நான் வியப்புற்றேன். ஆனால் அடுத்த கணம், வேறோர் வியப்புக் கிளம்பிற்று. என்னுடைய பேரளத்துச் சம்பந்தியை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார்கள். அவரும், எங்களோடு வந்தவர், எனவே கைது செய்யப்படவேண்டியவர் என்ற கருத்தில். பேரளத்தார் எனக்குச் சம்பந்தியாகி மூன்று மாதம்தான் ஆகிறது! என்னோடு சேர்ந்ததற்காக, அவருக்கும் போலீஸ் கொட்டடியிலே நுழைவு! எனக்கு வியப்பாகவும் இருந்தது, வருத்தமாகக்கூட இருந்தது. என்னென்ன எண்ணிக் கொள்கிறாரோ என்றுவேறு, மனதிலே கொந்தளிப்பு. அதிகாரி யிடம் விளக்கம் கூறினேன் - அவர் என் உறவினர் - வெளியூர் - கழகத்தாரும் அல்ல; கிளர்ச்சிக்காகவும் வரவில்லை என்றேன். அதிகாரி, "எனக்கு அதெல்லாம் தெரியாது, எங்களுக்குக் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டு மோட்டார்களில் கழகத்தார் வருகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அதிலே ஒரு மோட்டாரில் இவர்! எனவே இவரும், கைதுதான், கமிஷனரிடம் விளக்கம் கூறி விடுவித்துக்கொள்ளுங்கள்'' என்றார். அவ்வளவுதான் அவர் கூறமுடியும் நமக்கு உள்ள நிர்வாக முறை, அவ்வளவுக்குத்தான் இடம் அளிக்கிறது.