அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கைதி எண் 6342
கைது செய்தார்கள். . .
1

ஏராளமான பொருட் செலவிலே, துப்பறியும் துறை, தகவல் சேகரிக்கும் துறை பணிபுரிகிறது. கழகத் தோழர்கள் எவரெவர்? எவரெவர் கிளர்ச்சியில் ஈடுபடப்போகிறவர்கள்? எப்போ என்பது அத்தனையும் துரைத்தனம் நன்கு அறியும். நாமும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிவிக்கிறோம், என்றாலும், போலீஸ் துறையினருக்கென்று அமைந்துவிட்டுள்ள வேலை முறை, உறவினராயினும் விடாதே, உடன்வந்தவர் என்றால், கிளர்ச்சிக்காரராகத்தான் இருப்பார்! என்று கட்டளை பிறப்பிக்கிறது. அதன்படி காரியம் நடக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, கமிஷனர் அலுவலகத்திலேதான், பேரளத்தாருக்கு "விடுதலை' கிடைத்தது. எனக்குச் சம்பந்தி ஆனதற்குக் கிடைத்த சன்மானமா இது என்று எண்ணி எங்கே சங்கடப்படுகிறாரோ என்று நான் எண்ணிக்கொண்டேன். ஆனால், அவர், வருத்தமோ கலக்கமோ கொள்ளவில்லை. அதைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. பிறகு சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்கும் வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. மெத்தச் சிரமப்பட்டு, சிரிப்பை அடக்கிக் கொண்டேன். காஞ்சிபுரத்திலேயே என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்று வதந்தி உலவியபோது என்னுடைய இளைய மருமகள், பேரளத்தாரின் மகள், விஜயா, என் மனைவியிடம், "மாமி! முதலமைச்சர் பக்தவத்சலம் எங்கள் குடும்பத்துக்கு ரொம்பத் தெரிந்தவர், வேண்டியவர். நான் போய் கேட்கட்டுமா அவரை, ஏன் என் மாமனாரைக் கைது செய்ய எண்ணுகிறீர் என்று'' எனக் கூறியதாக, ராணி என்னிடம் சொன்ன நினைவு வந்தது. என்னைக் கைது செய்யவேண்டாமென்று முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் சிபார்சு செய்ய விரும்பிய விஜயாவுக்கு, பாபம், தன்னுடைய தகப்பனாரையே பக்தவத்சலத்தின் அரசாங்கம் இந்தப்பாடு படுத்திவிட்டதைக் கேள்விப்பட்டபோது, முகம் எப்படியாகி இருந்திருக்கும்! நான்தான் உள்ளே இருந்தேனே, பார்க்க முடியவில்லை; ஆனால் யூகித்துக்கொள்ள முடிகிறதல்லவா!

பெரிய கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்கள், சர்க்காரைக் கவிழ்ப்பவர்கள், இப்படிப்பட்டவர்கள் பிடிபட்டால், அவர்களை, ஒரே இடத்தில், சிறை வைப்பது இல்லை. பிரித்துப் பிரித்து, தனித்தனியாகச் சிறை வைப்பார்கள். இது போலீஸ் முறை. வழக்குகளுக்குத் தேவையான துப்புகள் பெறவும், சாட்சிகள் சிதையாமல் பார்த்துக்கொள்ளவும், இந்த முறை புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.

நாங்கள் ஐவர்தானே கிடைத்தோம் - எனவே, அந்த முறையை, மெத்தச் சிரமப்பட்டு, எங்கள் விஷயத்தில், உயர்தரப் போலீஸ் அதிகாரிகள் கையாண்டனர். "கேலிக் கூத்தல்லவா' என்பீர்கள், நடந்ததே!!

பொன்னுவேல், பட்டப் படிப்புப் பெற்ற இளைஞர்; பொறுப்புமிக்க குடும்பத்தினர். அவர்மீது, கலகம், அடிதடி முதலிய எந்தவிதமான புகாரும் சுமத்தப்பட்டதுகூட இல்லை. என்னோடு, விலைவாசிக் குறைப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் இருந்தவர்!

வெங்கா என்ற இளைஞர், நிலபுலத்துக்கு உரியவர், அமைதியானவர், அச்சிறுபாக்கத்தை அடுத்த சீதாபுரம் என்ற சிற்றூரில், மதிப்பான குடும்பத்தில் பிறந்தவர்; பார்த்தாலே புரிந்துவிடும் படபடப்பான நடவடிக்கையில்கூட அவர் ஈடுபடமாட்டார் - ஈடுபடக்கூடியவர் அல்ல என்பது.

பார்த்தசாரதி - தாத்தாவானவர் - கழகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர் - கழக வரலாறு தொகுத்து அளித்தவர் - வில்லிவாக்கத்தில் வீடும் வாசலும் உடையவர் - பொறுப்பற்ற செயலில் ஈடுபடக்கூடியவர் அல்ல.

சுந்தரம் - சென்னையில், தையற்கலையில் சிறப்பிடம் பெற்று விளங்குபவர் - தையற்கலைபற்றி பல நூல்களை வெளியிட்டு, புகழ் ஈட்டியவர். எப்போதும் இதழோரத்தில் ஓர் புன்னகை தவழும்; அவர்மீது எந்தவிதமான கலகம், அடிதடி போன்ற வழக்குகளும் கட்டிவிடப்பட்டதுகூட இல்லை.

என்னை, நான் விளக்கத் தேவை இல்லை; அமைதியான அரசியலை நாடுபவன்!

இந்த ஐந்து பேர்களை, வெடிகுண்டு தயாரித்தவர்கள், விடிவதற்குள் எட்டு ஊர்களைக் கொளுத்தத் திட்டமிட்டவர்கள், அரிவாள் தீட்டினவர்கள், அடித்து விரட்டுபவர்கள் போன்றவர்களை நடத்துவதுபோல், ஒன்றாகக் கைது செய்து ஒவ்வொருவரை ஒவ்வொரு பக்கமாக இழுத்துக்கொண்டு போயா, கொட்டடியில் போட்டு அடைப்பது! தேவைதானா? முறைதானா?

நான் அடையாறு போலீஸ் கொட்டடியில்; பொன்னேரியில் சுந்தரம்; பூவிருந்தவல்லியில் பொன்னுவேல், காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதி; செங்கற்பட்டில் வெங்கா!

அவ்வளவு சர்வஜாக்ரதையாக, வேலை செய்கிறதாம் போலீஸ் இலாகா!!

நாங்கள் ஐவரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டால், என்ன விபரீதம் ஏற்பட்டுவிடும்? உடனே கூடிப் பேசி, 17-ம் தேதி எப்படித் தப்பித்துக்கொண்டு வெளியே சென்று, சட்டத்தைக் கொளுத்துவது என்று திட்டம் தீட்டிச் செயல்பட்டு விடுவோமா? அல்லது, எங்கள் ஐவரையும் ஒருசேர ஒரு இடத்தில் கண்டால், கண்டவர்கள், கண்களில் கனல்கக்கக் கிளம்பி, கலாம் விளைவித்து, சர்க்காருக்குத் தொல்லை கொடுத்துவிடுவார்களா? என்ன எண்ணிக்கொண்டு, என்ன காரணத்துக்காக, இந்த ஐவரையும், பிரித்துப் பிரித்துத் தனி இடத்தில் காவலில் வைக்கவேண்டும்!! தெரிந்தால் தெரிவியுங்கள்; எனக்கு இதிலே தெளிவோ, திட்டமோ இருப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பிறகு அடைத்து வைத்த சைதாப்பேட்டை சப்ஜெயிலில் கள்ளநோட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர், ஒரே இடத்தில்தான் இருந்தார்கள்! அத்தகைய விவகாரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைவிட "ஜாக்ரதை'யான ஏற்பாடுகள், வெளிப்படையாக, இன்ன காரியத்தை, இன்ன இடத்தில், இந்த நேரத்தில், செய்யப் போகிறோம் என்று முன் கூட்டியே தெரிவித்துவிட்டு, ஒரு அறப்போர் நடத்த முன்வந்த எங்கள் விஷயத்திலா கையாள்வது! ஒரு காரணம், அவசியம், பொருள், பொருத்தம், இருக்கவேண்டாமா! இப்படி இயங்குகிறது ஒரு அரசு. இந்தவிதமாக நடத்தப்படுகிறார்கள், பொது வாழ்க்கையில் பணி புரிபவர்கள் - அதிலும் சுயராஜ்ய காலத்தில்!

அந்தந்த ஊர் போலீஸ் அல்லது சிறைக் கொட்டடியில் உள்ளவர்கள், என்ன எண்ணிக்கொள்வார்கள், என்ன பேசிக் கொள்வார்கள், இப்படி தனித்தனியே, கொண்டு வந்து அடைத்ததுபற்றி?

"பெரிய பக்காத் திருடன்போல இருக்கிறது, அதனால்தான் இவனை இவனுடைய கூட்டாளிகளிடமிருந்து பிரித்துத் தனியாகக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள்' என்று பேசிக்கொள்வார்கள். இதிலே, போலீசுத் துறைக்குக் கிடைக்கும் கீர்த்தி என்னவோ, இலாபம் என்னவோ, சுவை என்னவோ, எனக்குப் புரியவில்லை!

அடையாறு போலீஸ் கொட்டடி போய்ச் சேருகிற வரையில், எனக்கு எங்கே போகிறோம் என்பது தெரியாது அதிகாரியை நான் கேட்கவுமில்லை. இரண்டு நாள் கழித்துத்தான், மற்ற நால்வர் சென்ற இடங்களும் எனக்குத் தெரிய வந்தன.

அடையாறு போலீஸ் கொட்டடியும் எனக்கு முன்பே பழக்கமான இடம்தான் - 1957லில் ஒரு இரவு, நமது நண்பர்களுடன் அடைக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்துக் கொண்டுவந்த துணைக் கமிஷனர் உத்தரவிட்டார், எனக்குச் சாப்பாடு கொண்டுவரச் சொல்லி. சாப்பாடு முடிகிறவரையில், மிக இயற்கையாகவே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு துணைக் கமிஷனர் சென்றுவிட்டார். போலீஸ் நிலைய அதிகாரிகள், மெல்லிய குரலில் "லாக்-அப்' என்றார்கள், பகல் 1 மணிக்கு! கைதி! லாக்-அப்பில்தானே போட்டாகவேண்டும். அதுதானே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிமுறை! கைதி என்றால் எல்லோரும் ஒன்று! அதிலே தராதரம் பார்க்கத் தேவையில்லையா! அரசியல் கிளர்ச்சி காரணமாகக் கைது செய்யப்பட்ட ஒருவரை, அறையிலே போட்டுப் பூட்டி வைக்கா விட்டால் தப்பித்துக்கொண்டு ஓடியா போய்விடுவார் - என்றெல்லாம் கேட்டார்கள்!

பொதுமக்களின் பேச்சா இன்று ஆளுகிறது! சட்டம், ஆள்கிறது, சட்டம்! அந்தச் சட்டம் சொல்கிறது, கைதியை லாக்-அப்பில் வை! - என்று, அதன்படி நடந்தாகவேண்டும் அதிகாரிகள். அதிகாரிகள் கண்களிலே ததும்பிய பாசம், பயம், திகைப்பு எல்லாம் எனக்குப் புரிந்தது. எத்தனையோ போலீஸ் கொட்டடிகள் இருக்க இங்குதானா இவனை அழைத்துக் கொண்டுவரவேண்டும் - நமக்குச் சங்கடமாக இருக்கிறதே என்றுதான் அவர்கள் எண்ணிக்கொள்வார்கள். அவர்கள் சிறிதளவு அன்பு காட்ட எண்ணினால், தீர்ந்தது, யார் என்ன கோள் மூட்டிவிடுவானோ, தலைக்கு என்ன தீம்பு வந்துவிடுமோ என்ற பயம் அவர்களைப் பிய்த்துத் தின்கிறது.

"லாக்-அப்' செய்யப்பட்டேன்! கடப்பைப் கற்கள் பரப்பப்பட்ட சிறிய கொட்டடி போலீஸ் நிலையமே 1957லில் நான் பார்த்த அதே நிலையில்தான் இருக்கிறது - இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் அதைத் தீண்டியதாகத் தெரிய வில்லை. ஒழுக்கல்! இட நெருக்கடி!

லாக்-அப்பில், கீழே விரித்துக்கொள்ள என்ன கிடைக்கும்? ஒரு பழைய விரிப்பு! அதுவும், பாவம், யாரோ கான்ஸ்டபிளுடையதாக இருக்கும். நான் கொண்டுபோயிருந்த சால்வை தலையணை ஆயிற்று. பிற்பகல் நாலு மணிக்குத்தான் விழித்துக்கொண்டேன். பிடிபடுவதற்கு முன்பு நாலைந்து இரவுகள் எனக்குச் சரியான தூக்கம் கிடையாது. எனவே, இடத்தின் இடர்ப்பாடுபற்றிய கவலையற்றுத் தூங்கிவிட்டேன். போலீஸ் அதிகாரிகள், என்ன எண்ணிக்கொண்டார்களோ தெரியவில்லை. பயலுக்குப் பழக்கம்! என்று எண்ணிக் கொண்டார்களோ - பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டார்களோ - இவனுக்கு ஏன் இந்த வேலை, இவன் படித்த படிப்புக்கு ஒழுங்காக எங்காவது வேலைக்குப் போயிருந்தால், இப்போது ரிடயராகி, பென்ஷன் கேட்டிருக்கலாம்; இப்படி லாக்-அப்பில் கிடக்கிறானே என்று பரிதாபப்பட்டார்களோ தெரியாது.

தம்பி! நமக்கு இருப்பதைவிட இத்தகைய அதிகாரிகளுக்குச் சங்கடம் அதிகம் - அதனை உணர்ந்திருக்கிறாயோ இல்லையோ, தெரியவில்லை.

பொதுவாகவே, ஏற்பட்டுவிடும் உணர்ச்சிகளைப் பேச்சினால், வெளியே கொட்டிவிட்டால்தான், மனதுக்கு ஒரு நிம்மதி - பெரிய பாரத்தைக் கீழே இறக்கிவிட்டபோது ஏற்படும் நிம்மதி - உண்டாகும். உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி வெளியே காட்ட முடியாமல், மனதுக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தால், மனம், சுமையினாலே பாதிக்கப் பட்டுவிடும். வேதனை அதிகமாகிவிடும்.

நாம் நமது உணர்ச்சிகளைப் பேசி வெளிப்படுத்துகிறோம் - பாரம் குறைகிறது - மனதுக்குச் சுமை இல்லை.

இந்த அதிகாரிகள் என்ன செய்வார்கள்? நெஞ்சில் இருப்பதை நாவுக்குக் கொண்டுவர முடியாது தத்தளிக்கிறார்கள். என்னை மட்டுமா அவர்கள் "லாக்-அப்' செய்தார்கள்? தங்களுக்கு இயற்கையாகத் தோன்றக்கூடிய பரிவு, பச்சாதாப உணர்ச்சி, எல்லாவற்றையும் சேர்த்துத்தான் "லாக்-அப்' செய்து விடுகிறார்கள்!!

இவ்விதமே செய்து செய்து, சில காலத்திற்குப் பிறகு அத்தகையவர்கள், உணர்ச்சிகள் எளிதிலே எழ முடியாத "மனம்' பெற்றுவிடுகின்றனர்.

போலீஸ் அதிகாரிகள், "பிடிபட்ட'வர்கள், தங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள், ஆணைக்கு அடங்க மறுத்தவர்கள், வம்புதும்பு பேசுபவர்கள் என்று வகையினராக இருந்தாலாவது, கோபம்கொண்டு, அமுல் நடத்த வசதி ஏற்படும். "பயல் பத்து நாட்களாகச் சிக்காமல் ஏமாற்றிக்கொண்டிருந்தான்; பிடிக்கச் சென்ற காஸ்டபிளுடைய கையைக் கடித்துவிட்டான்; எவனும் தனக்கு நிகர் இல்லை என்ற விதமாகப் பேசுகிறான்'' - என்று கூறி, கோபத்தைக் காட்டலாம். என் போன்றாரிடம், அவர்களுக்குக் கோபம் ஏற்பட ஒரு காரணமும் கிடையாதே! ஆகவே, கோப உணர்ச்சி எழ வழி இல்லை; பரிவு பச்சாதாப உணர்ச்சியை வெளிப்படுத்த முடிவதில்லை. மெத்தத் தத்தளிக்கிறார்கள்.

சிறிதளவு ஏமாந்தால் மேலே பாய்ந்து பிய்த்து எறிந்துவிடும் கொடிய புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவற்றைக் கூண்டிலே நிறுத்தி வைத்து, சர்க்கஸ்காரர் கையிலே சவுக்கும் துப்பாக்கியும் வைத்துக்கொண்டு மிரட்டுவதையும், அந்த மிருகங்கள் உறுமுவதையும் உடனடியாக அடங்க மறுப்பதையும், இரண்டொரு அடிகள் விழுந்த பிறகே அடங்குவதையும் பார்க்கும்போது, காட்சி களிப்பளிப்பதாகக்கூட இருக்கிறது. ஆனால் அதே சர்க்கஸ்காரர், அதே கூண்டிலே, ஆடு, முயல், அணில், இவைகளைக் கொண்டுவந்து நிறுத்தி, சவுக்கும் துப்பாக்கியும் கரத்தில் வைத்துக்கொண்டு மிரட்டினால், பார்ப்பதற்கு எப்படி இருக்கும்! அரசியல் பிரச்சினைகள் காரணமாகக் கிளர்ச்சிகளை மேற்கொள்பவர்களை, இன்று போலீஸ் துறையினரிடம் ஒப்படைப்பது, எனக்கு ஆடு, முயல், அணில் போன்றவைகளைச் சிறுத்தை, புலி, சிங்கம் ஆகியவற்றை அடக்கி ஆளும் வேலைதெரிந்த சர்க்கஸ்காரரிடம் ஒப்படைப்பது போன்ற வேடிக்கையாகவே தோன்றுகிறது.

அண்ணன்

20-9-1964