அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"கனா' நிகழ்ச்சி - ஒரு எச்சரிக்கை!
1

"கனா'வை விடுவித்தவரே கவிழ்க்கப்பட்டார்!
காரணம், "எல்லாம் நானே' எனும் நினைப்பே !
ஒரே கட்சி ஆட்சியால் வந்த வினை!
வெள்ளையரை விரட்டிய கருப்பரே வெள்ளையரானதன் விளைவு !

தம்பி,

நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்ட நாசகாலன் !

பொருளாதாரத் துறையைப் பாழ்படுத்தினவன் !

மக்களைப் பட்டினி போட்டுச் சாகடித்த பேயன் !

எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டிய வெறியன் !

ஆடம்பர வாழ்வு நடாத்திய எதேச்சாதிகாரி !

எல்லாம் தனக்குத் தெரியும் என்று உறுமிய அகம் பாவக்காரன் !

ஏன் என்று கேட்பவர்களைச் சிறையில் தள்ளி வாட்டி வதைத்த காதகன் !

ஆளத் தெரியாதவன்! அகப்பட்டதைச் சுருட்டுபவன்! ஆணவக்காரன் !

"இருப்பை'த் தொலைத்துவிட்டான், நாட்டைக் கடனாளியாக்கிவிட்டான். வீண் பெருமைக்காகப் பணத்தை விரயம் செய்தான்!

தொழில் கெட்டது, விவசாயம் பாழ்பட்டது, வகையற்ற ஆட்சி நடத்தியதால்!

இன்று கனா நாட்டிலே இவ்விதம் பேசிக்கொள்கிறார்கள், எழுதுகிறார்கள், நிக்ருமாவைப் பற்றி. ஆட்சியை ராணுவம் கைப்பற்றிக் கொண்ட பிறகு ஒரு புரட்சி சர்க்கார் அமைத்தான பிறகு பதவியைப் பறிகொடுத்துவிட்டு, வேறு நாட்டிலே "தஞ்சம்' புகவேண்டிய நிலைக்குத் துரத்தப்பட்டுவிட்ட நிக்ருமாவைப் பற்றி மிக வன்மையாகக் கண்டிருக்கிறார்கள்; அவன் ஆட்சியின் கேடுகள் பற்றி, கொடுமைகள் பற்றி அடுக்கடுக்காக எடுத்துரைக்கிறார்கள்.

மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்,

பாட்டாளிகள் களிப்படைந்துள்ளனர்,

மாணவர்கள் மமதையாளன் தொலைந்தான் என்று எக்காளமிடுகின்றனர்,

அதிகாரிகள்கூட அகமகிழ்ச்சி கொண்டுள்ளனர், என்றெல்லாம் கூறப்படுகிறது.

இவற்றில் பெரும்பகுதி, புரட்சிச் சர்க்காரின் "பிரச்சார'த் தாக்குதலாக இருக்கக்கூடும்; மிகைப்படுத்திக் கூறுவதாக இருக்கக் கூடும். ஆனால் இந்தக் கண்டனத்தில் துளியும் உண்மை இல்லை என்று ஒரேயடியாகக் கூறிவிட முடியாது.

நிக்ருமாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, "ஐயோ' என்று சொன்னவர்களோ, எப்படி அந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று கேட்டவர்களோ அதிகம் பேர் இருந்ததாகத் தெரியவில்லை.

அவருக்காக எமது உயிரையும் கொடுப்போம்! எமது பிணத்தின் மீது நடந்து சென்றுதான் அவர் அமர்ந்திருந்த அரியணையைத் தொட முடியும் உங்களால் என்று "வீரம்' பேசியவர்களையும் அதிகமாகக் காணோம்; தியாகம் புரிய முன் வந்தவர்களும் இல்லை.

ஆட்சி கவிழ்க்கப்படுகிறது! புதிய புரட்சி சர்க்கார் அமைக்கப்படுகிறது! கனா நாட்டு மக்கள், இது நடைபெற வேண்டியதுதான் என்ற முறையில் இருந்து விட்டிருக்கிறார்கள்.

பெரியதோர் உருவச்சிலை; கரத்தை உயர்த்திக் காட்டிய நிலையில்; விண்ணை நோக்கிய பார்வையுடன் அமைந்த சிலை; நிக்ருமாவின் சிலை; நிக்ருமாவே திறந்து வைத்த சிலை! அதைக் கீழே தள்ளி உடைத்துப் போட்டிருக்கிறார்கள்; தலை துண்டிக்கப்பட்டுப் போயுள்ள அந்தச் சிலை தரையிலே உருட்டப்பட்டுக் கிடக்கிறது; அதைச் சிறுவர்கள் சூழ நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! நேற்றுவரை நாட்டை ஆண்டு வந்தவன் சிலை நொறுக்கப்பட்டுக் கிடக்கிறது; ஆத்திரம், ஆவேசம், அழுகை எதுவும் காணோம்.

இதுகூட அல்ல விசித்திரம். இந்த அளவு கண்டிக்கப்படும் நிக்ருமா ஆட்சியில் இருந்தபோது - கடைசி நாள் வரையில் - இதே மக்கள் பயபக்தி விசுவாசம் காட்டி வந்தனர்.

கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடினர்.

ஏழைகளை வாழ்விக்க வந்த எம்மான் என்றனர்.

நாட்டை உய்விக்க வந்த பெம்மான் என்றனர்.

அவர் ஆற்றலை அவனி அறியும் என்றனர்.

ஆங்கிலர்க்கு அவருடைய பெயரைக் கேட்டாலே நடுக்கம் என்றனர்.

அவர் கனா நாட்டை மட்டுமல்ல, அடிமைப்பட்ட நாடுகளை எல்லாம் விடுவிக்க வல்ல தீரர் என்றனர்.

அவர் ஒரு நாட்டுத் தலைவர் மட்டுமல்ல, எழுச்சி பெற்ற ஆப்பிரிக்கக் கண்டத்துக்கே வழிகாட்டி என்றனர்.

கருப்பருக்குப் புதுவாழ்வு தந்திட அவதரித்தவர் என்றனர்.

தீரம் - தியாகம் - ஆற்றல் ததும்பும் புதிய வரலாறு படைத் திடும் பெரியோன் என்றனர்.

அவர் கரம் அசைத்தால் போதும், நாடு கட்டுக்கு அடங்கும்; அவர் சொல் கேட்டால் போதும்; படைகள் எட்டுத் திக்கிலிருந்தும் கிளம்பும் என்றனர்.

தன்னலமற்றவர்; தாயகம் வாழ்ந்திடத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்றனர்.

இவற்றிலே குறிப்பிடத்தக்க பகுதி, நிக்ருமா ஆட்சியிலே நடத்தி வைக்கப்பட்ட "பிரசாரம்' என்று கூறப்படலாம்; ஆனால் மக்கள் காட்டியதாகக் கூறப்படும் கனிவு முழுவதுமே "போலி'யாக இருந்திருக்க முடியாது.

போலி எந்த அளவு, உண்மை எந்த அளவு என்பது எதிர்கால வரலாற்றுத் துறையினர் கண்டறிய வேண்டிய ஒன்று! இன்று ஒன்று நன்றாகத் தெரிகிறது. புகழாரம் சூட்டப்பட்டு விட்டிருப்பதாலேயே, புனிதன் என்று விருது வழங்கப்பட்டு விட்டிருப்பதாலேயே கவிழ்க்கப்பட முடியாதவன்; காலமெல்லாம் நிலைத்திருக்கத் தக்கவன், என்று கூறிவிடுவதற்கில்லை. பெரு மரம் வீழ்த்தப்படக்கூடும் - புயலின் வேகத்தால்! எம்மான் என்றும், பெம்மான் என்றம் புகழப்பட்டவனே எத்தன் என்றும், பேயன் என்றும் கண்டிக்கப்படக்கூடும். உதடும் உள்ளமும் உறவு கொள்ளாமல், வெறும் ஓசை மட்டும் கிளம்பியபடி இருக்கக் கூடும்.

கனா நாட்டிலே நடைபெற்றுள்ள திடுக்கிடத்தக்க நிகழ்ச்சி, அந்த நாட்டுக்கு மட்டுமல்ல, எம்மை அசைத்திடவும் ஆகாது எவராலும்! என்று இறுமாந்து கிடந்திடும் பெருந் தலைவர்கள் எக்காளம் கிளப்பிடும் எந்த நாட்டுக்கும், ஒரு பாடம்; ஒரு எச்சரிக்கை, ஒரு அபாய அறிவிப்புத் தருவதாக அமைந்திருக்கிறது.

விடமாட்டேன்! புரட்சிக்காரரைப் பொசுக்கியே தீருவேன்! காலம் வரும்; வெகுவிரைவில், கனா நாட்டில் வெற்றி நடை போடுவேன் என்று வீரம் பேசுகிறார் நிக்ருமா! இன்றோ அவர் ஒரு முன்னாள் ஆக்கப்பட்டுப் போய்விட்டிருக்கிறார். மீண்டும் கனாவை அவர் கைப்பற்றிப் பீடம் ஏறி அமர்ந்து, "வட்டியும் முதலுமாக'ப் புரட்சி நடத்தியவர்களைத் தீர்த்துக் கட்டிவிட்டு, பழையபடி அரசாளத் தொடங்கினாலும், இப்போது நடைபெற்று விட்ட நிகழ்ச்சி இருக்கிறதே, அது இதயத்தில் ஏற்படுத்தியுள்ள "வடு' மறையவே மறையாது. இவ்வளவுதானா இவர்களின் வாழ்வு! உலகம் பேசுகிறதே, அந்த ஏளனம் மாறாது. மீண்டும் கனா நாட்டு அதிபராக அவர் வருவதும் நடைபெறக் கூடியதாக இப்போதைக்குத் தெரியவில்லை, ஆப்பிரிக்காவிலே பெரியதோர் போர் மூண்டெழும் என்றாலும் கவலையில்லை என்று துணிந்து வல்லரசுகள் அவருக்காக வரிந்து கட்டிக் கொண்டு படை திரட்டி வந்தாலொழிய.

ஆப்பிரிக்க நாடுகளிலே சில, "இது அக்கிரமம்! நிக்ருமா வீரன், தீரன், தியாகி, அவரை விரட்டுவதா! இது அநீதி! அவருக்காக நாங்கள், எதையும் செய்திடத் தயார்! என்று கூறிய போதிலும் - கனா நாட்டு அதிபர், தமது "முடி'யை நிக்ருமாவின் காலடியில் வைத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது - ஐக்கியக் குடியரசுத் தலைவர் நாசர் "மேல்மட்ட'த்தவர்களுக்கு இது குறித்து "மடல்' விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது - ஆப்பிரிக்க நாடுகளிலே மிகப் பல, புதிய சர்க்காரை ஏற்றுக் கொண்டு விட்டன!

நிக்ருமா, தன்னை ராணுவப் புரட்சிக் குழுவினர் கவிழ்த்து விட்டனர் என்றும் அறிந்து கொள்ளாமல் "ராஜோபசாரம்' பெறச் சீனா சென்றபோது, அந்த நாட்டிலுள்ள கனா தூதரகம், புதிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து, நிக்ருமாவை "அதிபர்' என்ற முறையில் வரவேற்க இயலாது என்று அறிவித்து விட்டது.

சீனத் தலைவர்கள், "கனா நாட்டு விடுதலை வீரனே! வருக! ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி நிற்போனே! வருக! மேற்கத்திய நாடுகளின் அகம்பாவத்திற்கு அஞ்சாத தீரனே! வருக!' என்று வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், சீனாவில் அமைந்துள்ள கனா தூதரகத்தினர், தமது அலுவலக நுழைவு வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்த அதிபர் நிக்ருமாவின் படத்தை அகற்றிக் கொண்டிருந்தனர், அவர் "காலம்' முடிந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக.

நடைபெற்றுவிட்ட நிகழ்ச்சி நிக்ருமாவுக்கு அடக்க முடியாத ஆத்திரத்தை மூட்டிவிட்டிருக்கும். அதனை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், மீண்டும் கனா அதிபர் ஆவேன் என்று முழக்கமிடுகிறாரே அதனை ஒப்புக் கொள்ளப் பல நாடுகள் தயாராக இல்லை.

புதிய கனா சர்க்காரை இந்தியப் பேரரசு ஏற்றுக் கொண்டு விட்டது.

நிக்ருமா ஆட்சியைக் கவிழ்க்க கனா நாட்டு ராணுவத் தலைவர்கள் இரகசிய நடவடிக்கையில் முனைந்திருக்கும் போது தான், உலகில் சமாதானம் மலரச் செய்திட, குறிப்பாக வியட்நாம் போர் பற்றிய பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் "புனித யாத்திரை' மேற்கொண்டிருந்தார் நிக்ருமா.

புதுடில்லி விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுடன் உலகப் பிரச்சினைகள் பற்றிக் கலந்து பேசினார்; கனா நாட்டுக்கு "வருகை' தரும்படி இந்திரா காந்தி அவர்களையும் அழைத்திருக்கிறார்.

இவர் இங்கு உலகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கே இவரை "ஒழித்துக் கட்ட' வேலை நடந்து கொண்டிருந்திருக்கிறது.

ராணுவத்தார், எத்தனை திறமையுடன் தமது "புரட்சி'த் திட்டத்தை எவரும் கண்டறிய முடியாதபடி வகுத்துள்ளனர் என்பதைக் காணும்போது வியப்பாகவே இருக்கிறது.

துளியாவது, "குறி' தெரிந்திருக்குமானால், வாடை அடித்திருக்குமானால், நிக்ருமா நீண்டதோர் பயணத்தை மேற்கொண்டிருந்திருக்க மாட்டார்; இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம் என்று துணிந்திருக்கக்கூடும்; ராணுவப் புரட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பின் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பர்; அவர்கள் வெற்றி பெற்றிருப்பின், சிலைக்கு நேரிட்ட கதி நிக்ருமாவுக்கே நேரிட்டிருக்கக் கூடும்.

துளியும் திட்டம் வெளியே தெரியாதவண்ணம் தீட்டி யிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, காட்டிக் கொடுக்கும் எண்ணமும் துணிவும் கொண்டவர்கள் யாரும், ராணுவத்தின் எந்த மட்டத்திலும் இல்லை என்பதும் இதனால் விளக்கமாகிறது.

ஆகவே இந்தப் புரட்சி, யாரோ சில விரல்விட்டு எண்ணக்கூடிய "வெறியர்' நடத்தியதாகத் தெரியவில்லை; நீண்ட நாட்களாக மக்கள் மனத்திலே இருந்து வந்த குமுறல், வெடித்துக் கிளம்பியதாகவே தெரிகிறது.

குமுறல் கிளம்பியபோதே, கவனித்திருப்பின் புரட்சி வெடித்துக் கிளம்பியிருந்திருக்காது.

குமுறலுக்கும் முன்பே கருத்துத் தெளிவுள்ள ஆட்சியாளர், குமுறலுக்கான குறிகள் தோன்றிடுவதைக் கண்டிடுவர்.

புன்னகை மடிந்து கவலைக்கோடுகள் மக்கள் முகத்தில் பதிந்து, கண்கள் ஒளி இழந்து, பெருமூச்சுக் கிளம்பிடும் போது, இனி அடக்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அல்லல் வளர்ந்து விட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், அக்கறையும் அறிவுத் தெளிவும் உள்ளவர்கள் ஆட்சி நடத்தினால்.

அறிவுத்தெளிவு ஆள்பவர்களுக்கு இருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, குறிப்பினில் நிறத்தவேண்டிய உண்மை; அல்லற்பட்ட மக்கள் தமது மனக்குறையை அச்சமின்றி, தாராளமாக, எடுத்துக் கூறிடும் உரிமை பெற்றிருக்கவேண்டும் என்பதே அடிப்படை உண்மை.

வெடி மருந்தினைக் கெட்டித்து வைத்துள்ள "குழாய்' போல, மனம் இருந்திடச் செய்வார்களானால், ஓர் நாள் அது வெடித்திடத்தான் செய்யும்; விபரீதம்தான் விளையும்! தடுத்திட முடியாது.

ஆட்சியாளரின் போக்கு பற்றியும், நடவடிக்கை பற்றியும், சட்ட திட்டம் பற்றியும் கட்டுக்காவல் குறித்தும், மக்கள் மனத்திலே "குறை' தோன்றிடுமானால், அதனை வெளியே எடுத்துரைக்க வாய்ப்பும் உரிமையும் இருந்திடுமானால், புரட்சி மூண்டிடாது, இரத்தக்களரி ஏற்படாது.

என்னை ஆள்பவர்கள் எப்படி ஆளவேண்டும் என்று எடுத்துரைக்கும் உரிமையும், திருத்திடவும் தடுத்து நிறுத்திடவும் உரிமையும் அதற்கு இடம் கொடாவிடின், ஆட்சி நடத்து வோரையும், தேவைப்பட்டால் ஆட்சிமுறையையும் கூட மாற்றிடும் உரிமையும், புதிய ஆட்சி, புது ஆட்சி முறை அமைத்துக்கொள்ளும் உரிமையும் எனக்கு உண்டு; நான் அந்த உரிமையுடன் என் கடமையைச் செய்திடும் போது, அலட்சியப்படுத்தவோ, அச்சமூட்டவோ, அடக்கி ஒடுக்கவோ அரசு முனையாது என்ற நிலையில் குடிமகன் இருக்கும் நாடுகளில், கனா நாட்டிலே நடைபெற்றது போன்ற நிகழ்ச்சி எலாது; தேவையுமில்லை.

ஆனால், கனா நாட்டுக்கு உண்மையிலேயே "ரட்சகர்' என்றுவந்த நிக்ருமா இந்த உரிமையைத் தர மறுத்து விட்டார். கொடுங்கோலராகி விட்டார் என்று பலரும் மனம் குமுறும் விதமாக நடந்துகொள்ளலானார்.

இது நிக்ருமாவுக்கு உள்ள இயல்பு; மக்களின் வாழ்வு பற்றி அவருக்கு அக்கறை கிடையாது; தைமூர், செங்கிஸ்கான் போன்ற இரத்தவெறி கொண்டலையும் போக்கு அவருக்கு என்றும் கூறிவிடுவதற்கில்லை.

கனா நாட்டு விடுதலைக்காக அயராது உழைத்தவர்; இன்னல் இழப்புகளை ஏற்றுக்கொண்டவர்; தன் நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று ஆர்வம் ததும்பும் உள்ளத்தினர்.

தன்னல மறுப்புப்பற்றி அவருக்கு ஒருவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. அவர் விடுதலை வீரராக விளங்கிய போது அதனை அவர் மற்றவர்களுக்கு ஊட்டியவர்.

எனவே இயல்பிலேயே அவர் கெட்டவர், ஆகவேதான் கேடான பல செய்தார்; இன்று கவிழ்க்கப்பட்டும் போய்விட்டார் என்று கூறிவிடுவதற்கில்லை.

கனா நாட்டின் விடுதலையைப் பெற்றளித்தபோது, நாடே விழாக்கோலம் பூண்டபோது, வீட்டுக்கு வீடு அவரை "வழிபடும்' அளவுக்குப் பாசம் ததும்பி வழிந்தது.

அவர் அரசாள முன்வந்ததும், தங்கள் அல்லல் யாவும் அழிந்தொழிந்தது என்று நம்பினர்; களிப்புற்றனர்.

தெருவெல்லாம் ஆடலும் பாடலும்; அவர் அரசாளும் நாளை விழாவாக்கினர்.

நிக்ருமாவின் புகழ், பாடலாக்கப்பட்டது; பள்ளிப் பிள்ளைகளுக்கு அவர் வரலாறு பாடநூல்! எங்கும் அவர் ஓவியம், அவருடைய சிலை! அவர் பெயரால் புதுப்புது அமைப்புகள்!

கருப்பர்கள் ஆளத் தெரியாதவர்கள் என்று ஏளனம் பேசினரே வெள்ளையர், பார்க்கட்டும் இப்போது, எத்தனை பெரிய ஆற்றல் கொண்டவர் எமது நிக்ருமா என்பதை என்று மார்தட்டிக் கூறினர். இத்தனை இன்ப இசையுடன் துவங்கப்பட்ட ஆட்சிதான் அவருடையது. பிறகு ஏன் அருவருக்கத்தக்க, கண்டிக்கத்தக்க, புரட்சி செய்தேனும் போக்கத்தக்கது என்று கருதத்தக்க செயல்களை அவர் மேற்கொண்டார்? மக்களைக் கொடுமையில் உழலச் செய்யவேண்டும் என்றா? இருக்க முடியாதே! ஆனால், காரணம் என்ன, ஆட்சிகெட? அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான்; எல்லாம் நானே! என்ற நினைப்புத் தான்.

இந்த நாட்டை விடுவித்த விடுதலை வீரன் நானே !

அடிமைகளாக இருந்த மக்களை ஆற்றல் பெறச் செய்தவன் நானே!

இந்த நாட்டை ஆளத் தகுதியும் திறமையும் படைத்தவன் நானே!

இந்த நாட்டை நடத்திச் செல்லும் உரிமை பெற்றவன் நானே!

இந்த மக்களுக்கு வளமான வாழ்வு அமைத்திட வல்லவன் நானே!

இந்த மக்களுக்கு எது நல்லது என்பதை அறியத் தக்கவன் நானே!

இப்படிப் பிறந்தது ஓர் நச்சுக்கருத்து.

விழாக்கோலம் கலைந்த நிலையில், மக்கள் ஆட்சி நிலையில், மக்கள் ஆட்சியின் பலன்பற்றிய கணக்குப் பார்த்திடும் போது போதுமான சுவை கிடைத்திடாததால், இப்படித்தானா? என்று கேட்டிட முன்வந்தனர். வந்தது கோபம் நிக்ருமாவுக்கு!

எப்படி ஆட்சி அமையவேண்டும் என்பதுபற்றி என்ன தெரியும் - உங்களுக்கு ?

எதை எப்படிச் செய்திட வேண்டும் என்பதுபற்றி அறிந்திடும் திறமை ஏது - உங்களுக்கு ?

அடிமைகளாகக் கிடந்தவர்களை விடுவித்து மனிதர் களாக்கினேன் - புதுவாழ்வு தந்தேன் - உங்களுக்கு !

என்னையா ஏன் என்று கேட்கத் துணிகிறீர்கள் ?

என்னிடமா கேள்விகளை வீசுகிறீர்கள் !

என்னை யார் என்று தெரியவில்லையா ?

என்னைப் புகழ்ந்தீர்கள், பாராட்டினீர்கள், பூசித்தீர்கள்,

என்னை வருந்தி வருந்தி அழைத்தீர்கள் அரசாள! இப்போது கணக்கா கேட்கிறீர்கள் கணக்கு !

நான் அறிவேன், உங்களுக்கு எது நல்லது என்பதனை.

எனக்குத் தெரியும் எதை எப்படிச் செய்யவேண்டும் என்று. என் சொல்லை நம்ப மறுக்கிறீர்களா?

என் சொல்லை மீறத் துணிகிறீர்களா ?

நான் இல்லாவிட்டால் கனா ஏது? விடுதலை ஏது ? ஆட்சி ஏது?

இவ்விதம் வளர்ந்தன விபரீத எண்ணங்கள்.

ஆட்சியிலே பல கோளாறுகள், திட்டங்களிலே பல தவறுகள், நிர்வாகத்திலே பல முறைகேடுகள்; இவற்றின் பயனாக மக்கள் மனத்திலே குமுறல்.

குமுறல்! ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ள வழி இல்லை! உரிமை இல்லை!

நாட்டுக்கு நானே தலைவன்! நான் ஒருவனே தலைவன்!

நாட்டை ஆள நான் வைத்திருக்கும் கட்சி ஒன்றக்குத்தான் உரிமை! வேறு எந்தக் கட்சியும் என் நாட்டில், இருந்திட நான் அனுமதிக்கப் போவதில்லை.

நோய் பிடித்துக் கொண்டது நிக்ருமாவுக்கு; ஆணவத் தடிப்பு நோய்.

ஒரே கட்சி ஆட்சியை அமைத்துக்கொண்டார். எண்ண, எண்ணியதைப் பேச, எழுத, மக்களிடம் தமது கருத்துக்கு ஆதரவு திரட்ட எந்தக் கட்சிக்கும் உரிமை கிடையாது.

மக்கள், அதிபர் இடையே வேறு தொடர்பு தேவையில்லை என்று கருதிவிட்டார்; மக்களைக் கெடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் அல்ல, எது நல்லது என்று தெரிந்துகொள்ளும் அறிவுத் தெளிவு மக்களுக்குக் கிடையாது என்ற அழுத்தமான - ஆனால், தவறான - நம்பிக்கை காரணமாக.

முன்பு வெள்ளையர் ஆட்சி நடத்தினர் - அவர்களின் விருப்பத்தையே சட்டமாக்கிக் கொண்டு; எதிர்த்துப் பேசும் உரிமையைத் தர மறுத்து, மீறி எதிர்த்திடத் துணிந்தவர்களைச் சித்திரவதை செய்யவும் கூசாமல்.

அவர்களை விரட்டிய வீரன் நின்ருமா!

அவர்களை விரட்டிய எனக்கு, "இதுகள்' எம்மாத்திரம் என்று தனது நாட்டு மக்களைப் பற்றியே ஒரு துச்சமான எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

நாலுபேர் நாலு வழி காட்டுவார்கள், நாலுவிதமாகப் பேசுவார்கள், மக்களைப் பிளவுபடுத்துவார்கள், குழப்பம் உண்டாக்குவார்கள், நல்ல காரியம் நடைபெற விடாது முட்டுக்கட்டை போடுவார்கள், பதவிக்காக அலைவார்கள், போட்டிகளை மூட்டுவார்கள்; பொல்லாங்கு வளரும், பொதுமக்கள் பாழ்படுவர்! - இவ்விதம் நிக்ருமா வாதிடலானார், உரக்கக்கூட அல்ல; தமக்குள்.

இதுபோலத்தானே வெள்ளையர் வாதாடினர்; கருப்பருக்கு என்ன தெரியும்? காட்டுப் பூச்சிகள்; நாமல்லவா எல்லாவற்றையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்? ஆட்சி பற்றி என்ன தெரியும் அவர்களுக்கு? அதற்குத் தேவையான அறிவுத் தெளிவும் ஆற்றலும் அவர்களுக்கு ஏது? அவர்களுக்குத் தேவை சோறு, வீடு, வேலை! இதை நாம் தந்து வருகிறோம்; போதவில்லை என்றால் மேலும் கொஞ்சம் கேட்டுப் பெற்றுக்கொள்ளட்டும்; அதை விட்டு விட்டு, உரிமை வேண்டும். ஆட்சியிலே பங்கு வேண்டும். ஆட்சி எம்முடையது ஆகவேண்டும். எங்கள் நாட்டை நாங்கள் ஆளவேண்டும் என்று கூவுகிறார்களே, எப்படி இந்தக் கூச்சலைச் சகித்துக் கொள்ள முடியும்? நாடாம் நாடு! இது நாடாகவா இருந்தது நாம் வந்தபோது? - இவர்கள் மனிதர்களாகவா இருந்தார்கள் நாம் நுழைந்தபோது? இப்போது உரிமை கேட்கிறார்கள், முன்பு இந்தக் காட்டிலே உலவிக்கொண்டு வேட்டையாடி வயிறு வளர்த்துக்கொண்டு கிடந்தவர்கள்!! பாருங்களேன் அக்கிரமத்தை! - என்றுதான் வெள்ளையர் பேசினர்.

நிக்ருமாவும் அதே "முடுக்குடன்' பேசத் தொடங்கி விட்டார்; கருப்பர் வெள்ளையராகிவிட்டார்!!

கட்சிகள் கிடையாது என்று ஆகிவிட்டதும், ஆட்சியிலே நடப்பது பற்றி "நல்லது... கெட்டது' அறிந்து கூறிடும் உரிமை பறிபோயிற்று.

சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன - நிக்ருமாவின் விருப்பப்படி.

அவை நல்லவையா அல்லவா என்பதுபற்றி ஆராய்ந்திட வாய்ப்பு இல்லை. கண்ணீர் பொழியும் நிலையில் இப்படி ஒரு சட்டமா? என்று குமுறலாயினர்; குறையினை வெளியே எடுத்துக் கூறிட வழி இல்லை, மனத்திலே புகை கப்பிக் கொண்டது; நச்சுப்புகை.