அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"கனா' நிகழ்ச்சி - ஒரு எச்சரிக்கை!
2

"ஒரே கட்சி' ஆட்சி என்ற முறையிலிருந்து, அடுத்த கட்டம் செல்வது வேகமாகிவிட்டது. ஒரே கட்சிதான், ஆனால் அதிலேயும் , நான் ஒருவன்தான், எதற்கும்; மற்றவர்கள் நான் சொல்வதைச் செய்திட, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல அல்ல! - என்று இலக்கணம் புகுத்திவிட்டார் நிக்ருமா! இதுவும் எல்லாம் தனக்குத் தெரியும்; தனக்கு மட்டுமே தெரியும், என்ற நினைப்பு தடித்துவிட்டதால்.

அதற்கு அடுத்த கட்டம், உடனிருந்து பணியாற்றுவோரை ஊழியக்காரர் போல நடத்துவது, கருத்து மாறுபாடு காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுப்பது, பதவியிலிருந்து விரட்டுவது, சிறையிலே தள்ளுவது - இப்படிச் சர்வாதிகாரம் வளர்ந்திடலாயிற்று.

"மந்திரிகள்' என்ற நிலையில் இருந்த பலரை, ஆத்திரத்தில் நிக்ருமா அடித்துவிடுவாராம், மந்திரிசபைக் கூட்டத்திலேயே! இப்போது தெரிவிக்கிறார்கள்!!

விடுதலைப் போராட்டத்தின்போது உடனிருந்த பல உயிர்த் தோழர்களை, தியாகிகளை, தன் கருத்தினை மறுத்தனர் என்ற காரணத்துக்காக, கொல்வது, நாடு கடத்துவது, சாகும்வரை சிறையிலே அடைத்துவைப்பது, சொத்தினைப் பறிமுதல் செய்வது என்றெல்லாம் வளர்ந்து விட்டது ஆட்சியின் அலங்கோலம்.

ஜனநாயகத்தின் பேரால் சர்வாதிகாரம் நடத்துபவர்கள்கூட நீதி மன்றங்களுக்கு உரிய மதிப்பு அளிப்பதுண்டு. நிக்ருமா, என்னைவிட நீதியின் தன்மையை உணர்ந்தவர்களும் இருக்க முடியுமா என்ற ஆணவம் தலைக்கேறிய நிலையில், ஒரு சதி வழக்கில், நிக்ருமாவின் விருப்பத்தைக் கருதாமல் உயர்நீதிபதி, சிலரைக் குற்றமற்றவர்கள் என்று கூறித் தீர்ப்பளித்தபோது வெகுண்டெழுந்து, நீதிபதியை விரட்டி விட்டதுடன் நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றவும், நீதிபதிகளை நீக்கவும், தண்டிக்கவும் தனக்கே அதிகாரம் உண்டு என்று சட்டம் இயற்றிக்கொண்டுவிட்டார்.

ராணுவம் ஒன்று மட்டும் இருந்தது! தனி அமைப்பாக, தனித் தன்மையுடன், வல்லமையுடன்.

அரசியலைக் காலடி கொண்டு வந்தாயிற்று; பாராளு மன்றம் தலையாட்டிகளின் கூடமாகி விட்டது, நீதிமன்றம் தன் பேனாமுனையின் தயவில் கொண்டு வரப்பட்டாகி விட்டது. மக்களை, உழைத்திடு! உறங்கிடு! ஊராள நான் இருக்கிறேன், அது பற்றிய கவலையை விடு! என்ற கட்டுக்குள் அடைத்தாகி விட்டது. ராணுவம் ஒன்றுமட்டும் தானே தலை காட்டிக் கொண்டி ருக்கிறது; அதையும் அடக்கிட முனைந்தார்! தனக்குப் பிடிக்காத ராணுவத் தளபதிகளை நீக்கினார்! தானே முதல் தளபதி என்பதை மரபு ஆக்கினார்! இனி? இனி! உலகைக் கவனிப்போம்! என்றுதான் உலா கிளம்பினார். இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று ராணுவம் புரட்சி நடத்தி, நிக்ருமாவை நீக்கிவிட்டது.

எங்கோ ஒரு நாட்டிலே நடைபெற்ற பயங்கர நிகழ்ச்சி என்ற அளவிலும் முறையிலும் இதனை நோக்கினால் முழுப் பயன் கிடைக்காது.

"ஒரே கட்சி சர்வாதிகாரம் என்னென்ன விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற பாடத்தையும்,

மக்களின் மனக்குமுறல் கவனிக்கப்படாவிட்டால் பயங்கரமான விளைவுகள் எதிர்பாராத நேரத்தில் வெடித்துக் கிளம்பிவிடக் கூடும் என்ற பாடத்தையும்,

இயல்பு நல்லது, நோக்கம் கூட நல்லது என்றாலும், முறையிலே ஒரு கனிவும் மக்களை மதித்திடும் பண்பும் இல்லையென்றால், ஆட்சி அருவருக்கத்தக்கதாகி விடும் என்ற பாடத்தையும்,

எல்லாம் எனக்கு மட்டுமே தெரியும் என்ற இறு மாப்பினை, மன்னன் - சீமான் என்பவர் மட்டுமல்ல, அரசாள முனையும் எவரும் கொள்ளக்கூடாது, மக்கள் அந்த ஆணவத்தை நெடுங்காலத்துக்குத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்ற பாடத்தையும்.

உள்நாட்டிலே மக்களை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டு, "உலகப் புகழ்' தேடிச் செல்வது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக முடியும் என்ற பாடத்தையும் பெற்றிட வேண்டும் இந்த நிகழ்ச்சியின் மூலம்.

மாற்றத்தக்கது ஆட்சி, நீக்கத்தக்கவர்கள் ஆள வந்தோர், தீர்ப்பளிக்கத்தக்கவர்கள் மக்கள் என்ற இலக்கணத்தின் அடிப்படையில் அமைக்கப்படாத அரசுகள், அடித்தளம் அற்ற கட்டடங்களாகும். மக்களின் கோபம் எனும் கடும் காற்று வீசும்போது சரிந்து விழுந்துபோகும்.

மக்கள் தமது மனத்திலே பட்ட குறைகளை எடுத்துக் கூறும்போது, பொறுமையுடன் கேட்டுக் கொள்ளவும், பொறுப்புணர்ச்சியும் பரிகாரம் தேடித் தந்திடவும், கனிவுடன் விளக்கமளித்திடவும் முன்வந்திடும் ஆட்சி ஆலெனத் தழைத்திடும்..

இந்த நல்ல இயல்பு "ஒரே கட்சி' என்ற அரசியல் அமைப்பிலே வளராது, வாழாது. அதுபோலவே ஒப்புக்கு ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும் போலி ஜனநாயக அமைப்பிலேயும் வளராது, வாழ்ந்திடாது.

இப்போது - கவிழ்த்தான பிறகு - குறைகளைக் கொட்டிக்காட்டுகிறார்கள், கனா நாட்டு ஆட்சியிலே நிக்ருமாவால் ஏற்பட்டுவிட்ட குறைகளை.

நிக்ருமாவிடம் ஆட்சிப்பிடி இருந்தபோது, வாய் திறந்திட முடியவில்லை. இப்போது தடுத்திட அவர் இல்லை. ஆகவே, எத்தனை தொல்லைகளை இத்தனை ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டோம் தெரியுமா என்று "கதை கதை' யாகக் கூறுகிறார்கள்; கண்டனத்தைப் பொழிகிறார்கள்.

1958-ம் ஆண்டு கனா விடுதலை பெற்றபோது, இருந்த "இருப்பு' 2000 இலட்சம் பவுன்கள்! இப்போது கனா, கடனாளியாக இருக்கிறது. யாரால்? நிக்ருமாவினால். ஏன்? எவருடைய யோசனையையும் ஏற்க மறுத்து, தன்னிச்சையாகச் செயலாற்றி நாட்டுப் பொருளாதார யந்திரத்தையே பாழாக்கி விட்டதால். இப்படிப்பட்ட நிக்ருமாவின் ஆட்சி தொலையத் தானே வேண்டும்!- என்று கேட்கிறார்கள் விவரமறிந்தோர்; ஆம் என்கிறார்கள் உண்மை நிலைமையை உணர்ந்தோர்.

கனா நாட்டுக்கார இதழாசிரியர் ஒருவர் நிக்ருமாவின் ஆடம்பரச் செலவு பற்றிய ஒரு கணக்கு விவரம் கொடுக்கிறார், இப்போது!

பதினாறாவது நூற்றாண்டு "சக்ரவர்த்தி' போல, கோலாகல வாழ்க்கையிலே மூழ்கிக் கிடந்தார் நாட்டிலே வறுமையைப் படர வைத்துவிட்டு என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆண்டொன்றுக்கு அதிபர் நிக்ருமாவுக்கு 54,400 பவுன் சம்பளமாம்! கனா குடியாட்சித் தலைவர் என்பதற்காக 12,000 பவுன்; கனா பிரதம மந்திரியாக இருந்த வகையில் பென்ஷன் 2400 பவுன்; குடும்பப் பராமரிப்பு செலவுக்காக 6000 பவுன், சுற்றுப்பயணத்துக்காக 34,000 பவுன்; மொத்தத்தில் 54,400 பவுன்!

சுற்றுப்பயணச் செலவான 34,000 பவுன், அவர் சுற்றுப்பயணம் செய்தாலும், செய்யாவிட்டாலும், தரப்பட்டாக வேண்டும்.

ஐந்து அரண்மனைகளாம் நிக்ருமாவுக்கு.

கனாவை வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுவித்தாரே தவிர, நிக்ருமா தமக்கு ஆலோசனை கூற வெளிநாட்டுக்காரர் பதினைந்து பேர்களை உடன் வைத்துக் கொண்டுதான் ஆட்சி நடத்திவந்தாராம்! உள்நாட்டுக்காரர்கள்? கனா நாட்டவர்? பலர் திறமை மிக்கவர்கள், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள். தவறு நேரிட்டால் எடுத்துக் கூறிடும் துணிவு பெற்றவர்கள் - சிறையில்! ஆட்சிக்கு எதிராக நடக்கிறார்கள், சதி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு.

மக்களுடைய வாழ்க்கைத் தரம் நாளுக்குநாள் தேய்ந்துகொண்டிருக்கிறது; நாட்டு வருமானம் போதுமான அளவு வளரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது; இப்போது.

கனா நாட்டை இந்தச் சீர்குலைவில் வைத்துக் கொண்டு நிக்ருமா ஆப்பிரிக்காவின் மற்றைய நாடுகளுக்கு விடுதலையும் புதுவாழ்வும் காணத் துடித்தார்; இதற்காகப் பணியாற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஒற்றுமைக் கழகம் நடத்த முனைந்த மாநாட்டுக்காக என்று கடனில் சிக்கிக் கிடந்த கனா நாட்டில் பலப்பல இலட்சம் பவுன் செலவிலே ஒரு அரண்மனை அமைத்தாராம்!

நாளாகவாக மேலும் பலப்பல குற்றச்சாட்டுகள் வெளியிடப்படக்கூடும்.

கனா நாட்டுப் பொருளாதாரம் கொக்கோ ஏற்றுமதியைத் தான் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறது. நிக்ருமா ஆட்சியில் கொக்கோ பயிரிடப்படும் இடம் அதிகமாக ஆக்கப்பட்டது; ஆனால், கொக்கோவுக்கு உலகச் சந்தையில் இருந்துவந்த விலை சரிந்து விட்டதால், கனா நாட்டுப் பொருளாதாரத்தில் சீர்குலைவு ஏற்பட்டுவிட்டது; கொக்கோ பயிரையே நம்பி வாழும் கனா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்பட்டு, உயிரூட்டமுள்ள ஜனநாயகம் நடைபெற்றிருக்குமானால், இந்தக் குறைகள் ஒவ்வொன்றும் தலைகாட்டும்போதே, கண்டனம் பிறிந்திருக்கும், எச்சரிக்கை கிளம்பியிருக்கும், பொதுமக்களின் எதிர்ப்பு தோன்றியிருக்கும், நிலைமையை அரசு உணர்ந்திருக்கும், கேடு தவிர்க்கப்பட்டிருந்திருக்கும்.

ஆனால், அதற்குத்தான் நிக்ருமா வழிவைக்க வில்லையே! ஒரே கட்சி அல்லவா!! ஆகவேதான் கலம் கவிழும்போதுதான் வெளியே எடுத்துக்கூற முடிந்திருக்கிறது நிலைமையை.

ஜனநாயகம், கேடு தடுக்கப்பட வழிகாட்டுகிறது; சர்வாதிகாரம், பயங்கரமான இரத்தக் களரிக்குத்தான் அழைத்துச் சென்றிடும்.

ஜனநாயகத்தில், தவறுசெய்யும் ஆளவந்தார்கள் பதவி இழந்திடுவர்; சர்வாதிகாரத்தில் தவறு செய்யும் ஆளவந்தார், விரட்டப்படுவார், சுட்டுக் கொல்லப்படுவார்;

எனவே, ஜனநாயக முறை ஆள்பவர்களுக்கும் நல்லது, ஆளப்படுபவர்களுக்கும் நல்லது.

ஆனால், புதிதாக விடுதலை பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகள் பலவுமே, ஒரு கட்சி ஆட்சி முறையைத்தான் மேற்கொண்டுள்ளன; அதன் விளைவாகவே, அடுத்தடுத்துப் பல புரட்சிகள், ஆட்சி கவிழ்க்கப்படும் அதிர்ச்சிகள், ஆளவந்தார்கள் அழிக்கப்படும் பயங்கரங்கள் நடந்தபடி உள்ளன. இவைகள், ஜனநாயக முறையினைப் பாழ்படுத்தி வருபவர்களுக்கும், "போலி' யாக்கி வருபவர்களுக்கும், நிலைமை காரணமாக நினைப்பிலே ஆணவத்தைப் புகுத்திக்கொண்டுள்ளவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

திட்டம் காணீர்! அணை பாரீர்! ஆலைகளைப் பாரீர்! அலங்கார மாளிகைகளைப் பாரீர்! என்று கூறி மக்களை மயக்கிவிட முடியாது என்பதற்கும் கனா நிகழ்ச்சி ஒரு சான்றளிக்கிறது.

நிக்ருமா, தனக்கு ஒரு நிலையான புகழும், கனா நாட்டுக்கு வளமும் தரத்தக்கதான வோல்ட்டா நீர்த்தேக்கத் திட்டத்தை அமைத்தளித்தார். பாசனம் மட்டுமன்றி, மின்சார உற்பத்திக்கும் ஏற்றது இந்தத் திட்டம். தொழில் நடத்தும் அமைப்புகளுக்கு (அன்னியருடைய அமைப்பு) லோல்ட்டா திட்டத்திலிருந்து மின்சாரம் விற்பதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கவும் வழி கிடைக்கிறது.

என்றாலும், மற்றத் துறைகளிலே மூண்டுவிட்ட கேடுகளும், ஊழலும் ஊதாரிச் செலவும், எல்லாவற்றையும் விட அகம்பாவப் போக்கும் சர்வாதிகார முறையும், வோல்ட்டா திட்டம் பற்றி எழக்கூடிய மகிழ்ச்சியைக்கூட மங்கச் செய்து விடுகிறது.

அதுபோலவே, பிறநாட்டுத் தலைவர்களின் நேசம், தொடர்பு, தோழமை, அவர்கள் சூட்டிடும் புகழாரம் ஆகியவற்றினைக் கொண்டு, உள்ளே புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சியை நிலைநிறுத்த முடியாது என்பதற்கும் கனா ஒரு எடுத்துக்காட்டு.

சீனா எனது நண்பன், ரஷ்யா எனது தோழன், எகிப்து எனது நேசன் என்று பட்டியல் காட்டினார் நிக்ருமா! சொந்த நாட்டு மக்களின் கனிவைப் பெறமுடியாமல், பெறுவதற்கு ஏற்ற முறையில் ஆட்சி நடத்தாமல், பிற நாடுகளிலே "நற்சான்று இதழ்' பெறுவதிலே என்ன பலன் கிடைத்திட முடியும்?

தனி மனிதர் ஒருவருடைய புகழ், அவருடைய ஆட்சியின் அலங்கோலத்தை மூடி மறைத்திட உதவாது என்பதற்கும் கனா நிகழ்ச்சி சான்றளிக்கிறது.

உலகப் புகழ் நிக்ருமாவுக்கு! அவருடைய ஆட்சியைக் கவிழ்த்து புது ஆட்சியை நடத்த முன் வந்திருப்பவர்களின் பெயர் இன்னும் பழக்கத்திற்கே வரவில்லை. என்றாலும், அமெரிக்காவும் பிரிட்டனும், பிரான்சும், நிக்ருமா உலகப்புகழ் பெற்றவர் - ஆகவே அவர் இல்லாத ஆட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட வில்லை; புதிய ஆட்சியைச் சட்ட சம்மதம் பெற்ற ஆட்சி என்று ஏற்றுக்கொண்டு விட்டுள்ளன.

பிரிட்டனுடைய போக்கே இதுதானே! அமெரிக்காவுடைய போக்கும் இதுதானே! என்றும் கண்டித்து விடுவதற்கும் இல்லை. இந்தியப் பேரரசும் புதிய கனா சர்க்காரை அதிகார பூர்வமான சர்க்கார் என்று ஏற்றுக்கொண்டாகிவிட்டது.

எந்த நாட்டை விடுவித்தாரோ, எந்த நாட்டிலே பாதம் பட்டால் மண்ணும் மணம்பெறும் என்று கருதப்பட்டதோ, அந்தச் சொந்த நாட்டிலே இனி நிக்ருமா நுழைய வேண்டுமானால், பெரியதோர் படையின் துணை வேண்டும். அந்த நிலை "ஒரே கட்சி' ஆட்சியின் விளைவு.

இதனை இன்னமும் உணராமல்,

செனிகால்
காம்பியா
மவுரிடானியா
மாலி
சியாரா லியோன்
லைபீரியா
அய்வரி கோஸ்ட்
டோகோ
நைஜர்
சாட்
காமிரூன்
காபன்
காங்கோ
ரூவாண்டா
டான்ஜானியா
கெனியா
மாலவி
ஜாம்பியா
மலாக்சி

ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் "ஒரே கட்சி' ஆட்சி முறையைப் புகுத்தி வைத்துள்ளனர்.

உகந்தாவில் "சர்வாதிகாரம்' துவக்கப்பட்டு விட்டிருக்கிறது.

விடுதலை பெற்ற வேறு பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒப்புக்கு எதிர்க் கட்சிகள் உள்ளன, உண்மையில் சர்வாதிகாரம் நடந்து வருகிறது.

இந்த நிலை கண்டுதான் மிக்க மகிழ்ச்சி அடைந்து சீனத்து சோ-இன்-லாய் ஆப்பிரிக்காவுக்கு ஆர்வத்துடன் பலமுறை பயணம் மேற்கொண்டார்.

அவர் கரம்பட்ட இடங்களிலே ஒன்று கனா!!

விடுதலை பெற்ற நாடுகள் உண்மையான ஜனநாயகத்தை மேற்கொண்டாலொழிய வாழ்வில் வளம் இல்லை என்பதை உணர்ந்து கொள்வதற்கும், விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் என்ற விருது ஒன்றே போதும் எத்தனை அலங்கோலமான ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கலாம் என்ற நினைப்பு எத்தனை விபரீதத்தை, ஆபத்தை மூட்டிவிடும் என்பதையும் கனா காட்டுகிறது.

முப்பத்து இரண்டு வயதுள்ள ஒரு மாது "நீதிபதியாக' அமர்ந்து மக்கள் வழக்கு மன்றம் நடத்தி, கனா நாட்டு அதிபராக இருந்த நிக்ருமா செய்த குற்றங்களை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்தாராம்!

வேடிக்கைக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆனால் நிக்ருமா சிக்கினால், புதிய சர்க்கார் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதனை விளக்கிட உதவுகிறது.

ஆனால், மரண தண்டனைகூட பரவாயில்லை என்று சொல்லலாம்; எந்த மக்கள் வாழ்த்தி வரவேற்றார்களோ அவர்களுடைய வெறுப்பினை, அரசியல் ஆணவம் கொண்டதால் பெற்று, ஆண்ட நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, ஆட்சி பறிக்கப்பட்டு, "அன்றொரு நாள்' பற்றி எண்ணி ஏங்கி ஏங்கி மனம் சின்னா பின்னமாகிடும் கொடுமை, மரண தண்டனையைவிட மோசமானது.

நாட்டை விடுவித்தவர் என்ற காரணத்துக்காக மக்கள் பாசம் காட்டுகின்றனர்; அது மக்களின் நல்லியல்புக்கு எடுத்துக்காட்டு. ஆனால், பாசம் கொண்ட மக்களை, இனி இவர்களை என்ன செய்தாலும் எதிர்க்க மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளோன் எண்ணிக் கொள்வது ஏமாளித்தனம்.

நாட்டை விடுவித்த நமக்கு எதிராகவா ஒரு புரட்சி நடத்திட முடியும்; நம்மையா ஆட்சியிலிருந்து விரட்டிட முடியும் என்று நம்பிக் கிடந்தார் கனா அதிபர்.

அவர் "ஒரு கட்சி' சர்வாதிகாரம் செய்திட முனையாமல் உண்மையான ஜனநாயக ஆட்சியை நடத்தியிருப்பின் இந்தக் "கதி' ஏற்பட்டிருந்திருக்காது.

பாசம் கொண்ட மக்களை ஏதுமறியாதவர்கள், எதையும் செய்ய இயலாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு சர்வாதிகாரம் செய்தார் நிக்ருமா. படைத் தலைவர்களோ, படையைக் காட்டி அவருடைய ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனர். "தன்வினை தன்னைச் சுடும்! ஓட்டப்பம் வீட்டைச்சுடும்!' என்ற பட்டினத்தடிகள் பற்றிய கதையின் நினைவுதான் பலருக்கும் வரும் - கனா அதிபரின் வீழ்ச்சி பற்றி அறியும்போது.

ஒரு நாட்டை விடுவித்த பெருமை நிக்ருமாவுக்கு. அது வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ், ஐயமில்லை. ஆனால் அந்தப் புகழேவா மக்களுக்கு வாழ்வு அளித்து விடும்? பசி! பசி! என்று துடிப்பவனிடம், பசி போக்கிக்கொள்ள வழி தந்திடாமல் தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகத் தூவி என்ற பாடலை இனிமையாகப் பாடிக் காட்டினால் பதறுவான், போதும்! போதும்! பசி தீர்ந்துவிட்டது என்றா கூறுவான்! நிக்ருமா மட்டுமல்ல தமது நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தந்தவர் என்ற விருது பெற்றவர்களில் மிகப் பலர் இது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அதற்குக் காரணம், விடுதலை வீரன் என்ற விருது இவர் பெற எத்தனை எத்தனை மக்கள் தமது இன்னுயிரையும் ஈந்துள்ளனர், இன்னல் இழப்புகளைக் கண்டுள்ளனர் என்பதனை மறந்து விடுவதும், கணக்கெடுக்கத் தவறிவிட்டதுமேயாகும்.

விளக்கிலே காணப்படும் ஒளிக்கு, அதிலே ஊற்றப் பட்டுள்ள எண்ணெய்த்துளி ஒவ்வொன்றும் தன்னைத்தானே அர்ப்பணித்திருக்கிறது, திரியின் ஒவ்வொரு இழையும் தன்னைத் தானே தந்துவிட்டிருக்கிறது, இவற்றின் மொத்த விலையே ஒளி!

ஒரு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு வெற்றி பெற்றவர் என்ற "விருது' ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ கிடைப்பதற்காக அந்த நாட்டில் "ஊர் பேர்' தெரியாத எண்ணற்றவர்கள் உழைத்து உருக்குலைந்து போயுள்ளனர். அவர்களின் தியாகத்தின் விளைவின் காரணமாகவே, நாடு விடுதலை பெற்றிட முடிந்தது என்ற உண்மையை உணர்ந்திடின், எத்தனை பெரிய விடுதலை வீரனுக்கும் ஓர் அடக்க உணர்ச்சி ஏற்படும். அந்த அடக்கம் அவனது ஆற்றலைப் பன்மடங்கு அதிகமாக்கிடும்; பெருமையைப் பன்மடங்கு உயர்த்திடும்.

ஆனால், இந்த இயல்பு பலருக்கு எளிதாக இருப்பதில்லை, உச்சி செல்லச் செல்ல ஒரு மனமயக்கம் ஏற்பட்டு விடுகிறது.

எல்லாம் நானே! எதற்கும் நானே! நான் மட்டுமே! என்ற எண்ணமே தலைக்கேறி விடுகிறது. அப்போது அவர்கள் தம்மையும் அறியாமல் "கொடுங்கோலர்' ஆகிவிடுகின்றனர்.

அப்படிப்பட்ட கொடுங்கோன்மை ஏற்பட்டுவிடுமானால், விடுவிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அடிமைகளாக்கப்பட்டுப் போவர். ஒரு சுமை கீழே தள்ளப்பட்டுப் புதுச்சுமை தலைமீது ஏற்றப்பட்டுவிடும் நிலை! தலைவலி போய் திருகுவலி வந்தது என்பார்களே அந்த நிலை.

மக்கள் உரிமையும் நலனும் பெற்று வாழ்ந்திடவே விடுதலை பெறுகின்றனர்; அந்த நோக்கம் ஈடேற வேண்டுமானால், மக்கள் மனதில் தமது கருத்தினைக் கேட்டறிந்து கொண்டுதான் ஆட்சி நடத்தப்படுகிறது என்ற உணர்வு எழவேண்டும்; அந்த உணர்வு உண்மையான ஜனநாயகத்திலேதான் பெறமுடியும் . அந்த உணர்வை அழித்திட்டார், ஆகவே அவருடைய முன்னாள் "புகழ்' கூட அவருக்குத் துணை நிற்க முடியவில்லை.

அவராகிலும் உள்ளபடி விடுதலைக்காகப் பணியாற்றியவர், பெருமைக்கு உரியவர், மக்களிடம் மார்தட்டிக் கூறமுடியும் "நான் உங்களுக்காகப் பாடுபட்டவன் அல்லவா?' என்று. இங்கு பார்க்கிறோமே, விடுதலைக்காகச் சிறு விரலையும் அசைக்காத பேர்வழிகள் எல்லாம்கூட, அந்த முகாமில் நுழைந்து இடம் பிடித்துக் கொண்டதாலேயே, எக்காளம் கிளப்பிடும் உரிமை தமக்குக் கிடைத்து விட்டிருப்பதாக நினைத்துக் கொள்வதை.

வியர்வை பொழியப் பாடுபட்டேன் என்று விலாப் புடைக்கத் தின்றவன், சாப்பிடும்போது ஏற்பட்ட அலுப்புக் காரணமாகச் சிந்திய வியர்வையைக் காட்டினால் "ஆமப்பா!'' வியர்வை கொட்டக் கொட்டத்தான் பாடுபட்டிருக்கிறார் என்று ஏமாளியன்றி வேறு யார் ஒப்புக் கொள்வார்கள், கடுமையான வேலை முடிந்து விழா நடந்து விருந்துண்ணும்போது பந்தியிலே இடம் பிடித்துக் கொண்டதுகளெல்லாம் இங்கே "வீரதீரம்' பேசும்போது, உள்ளபடியே நெருப்பாற்றில் நீந்தி வெளி வந்த நிக்ருமா, பெருமை பேசிக் கொள்ளக் கூடாதா? உரிமை உண்டு, ஆனால் அதையே காரணமாகக் காட்டி, கொடுங்கோலாட்சி செய்திடின்? நாடு ஒப்புக் கொள்ளாது என்பதனைக் காட்டுகிறது கனா நிகழ்ச்சி.

வெள்ளை மாளிகையில் என்ற தலைப்பில் நான் தந்து வந்த தொடர் கட்டுரையையும் இந்தக்கிழமை நிறுத்தி வைத்து, கனா பற்றி எழுதியதற்குக் காரணம், இந்த நிக்ருமா தன் ஆற்றலால் கனா நாட்டை மட்டுமல்ல, கருப்பர் இனம் முழுவதையுமே விடுவிக்க வந்தவர் என்ற விருது பெற்றவர், என்றாலும் நிதானம் இழந்ததால், மக்களை மதிக்க மறுத்ததால் கவிழ்ந்து விட்டார் என்பது, ஆட்சி எவ்விதம் இருந்தால் மக்களின் நிலையான ஆதரவைப் பெற்றிடும் என்ற பொதுவான பாடத்தை, வெள்ளை மாளிகையில் என்ற தொடர் கட்டுரையுடன் இணைத்துப் படித்துக் கொள்வது பயனளிக்கும் என்பதால்.

அது மட்டுமன்றி, நான் எழுதிக் கொண்டு வந்த தொடர் கட்டுரையிலும் நிக்ருமா தொடர்பு கொள்கிறார். எங்ஙனம் என்பதை அடுத்த கிழமை தந்திடும் வெள்ளை மாளிகை பற்றிய தொடர் கட்டுரையில் காணலாம்.

அண்ணன்,

13-3-66