அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கண்ணீர்!
2

நாடு சீர்கேடடைந்தது.
வளம் பாழாக்கப்பட்டது.
தொழில்கள் நசித்திடலாயின.
வீண் பகை வளர்ந்தது.
பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது!
நாணயத்தின் மதிப்பு தேய்ந்தது.
பண்டங்களின் விலைகள் விஷம்போல் ஏறின.
வாழ முடியாதாரின் தொகை பெருகிற்று;
பெருமூச்சுக் கிளம்பிப் பெரும் புயலாகி விட்டது!!
நம்பிக்கை முறிந்தது. கண்கள் சிவந்தன!
வழி திறந்தது! கேள்விகள் கிளம்பின!
எதிர்ப்பு வலுத்தது, எங்கும் பரவிற்று!
அதிபரின் அக்ரமப் போக்கு கண்டிக்கப்பட்டது!
மக்கள் பொங்கி எழுந்தனர், புது வேகத்துடன்!
புரட்சி வெடித்துக் கிளம்பிற்று.
போதும் உமது அலங்கோல ஆட்சி என்றனர் மக்கள்!

இனிப் பொறுத்திட முடியாது, பட்டதெல்லாம் போதும் என்று குமுறினர் மக்கள்.

அடக்குமுறையை அவிழ்த்து விட்டார் அதிபர்! அதன் பசி தீருமளவு "பலி' கிடைத்தது; ஆனால் புரட்சி மங்கிட மறுத்தது.

உடனிருந்தோர்களை உருக்குலையச் செய்திட்டார் அதிபர்! அவர்க்குப் பரிவு காட்டிட முனைந்தனர் மக்கள்!

சூறைக் காற்று கிளம்பிற்று; தோணி ஓட்டம் தடுமாறிடலாயிற்று.

துரத்தப்பட்டுப் போய்விடுவோமோ என்ற கிலி பிடித்துக்கொண்டது அதிபரை! ஆண்டது போதும்! மக்கள் மாண்டது போதும்; வளம் வறண்டது போதும் இனி நாட்டு வாழ்வுக்கான வழிகண்டிடத் துணிவு கொண்டோம் என்றனர் மக்கள்!

என்னையா எதிர்க்கத் துணிந்தீர்கள்! என் வீரதீரம் அறியீரா! என்று ஆர்ப்பரித்தார் அதிபர்!

மக்களின் மகத்தான சக்தியின் முன்பு எந்த மன்னனும் எம்மாத்திரம் என்று கேட்டனர் மக்கள்.

இளைஞர் அணி திரண்டது! மாணவர் படை முனைந்து செயலில் ஈடுபடலாயிற்று!

அதிபர் சுகர்ணோ தமது பிடிதளர்ந்து விட்டதனை உணர்ந்தார்; கொதித்தார்; மிரட்டினார்; கடைசியில்? அழுதார்! அவையைக் கூட்டி வைத்துக் கண்ணீர் கசிந்திடும் நிலையினராகி, நாட்டு விடுதலைக்காக நான் இன்னலும் பட்ட இழப்பும் கொஞ்சமா?

என்னை இதயத்தில் வைத்திருந்தீரே! என்னையா இப்போது எதிர்க்கின்றீர் என்று கேட்டார்!

பேச்சுடன் நிற்கவில்லை! கண் கசிந்தது!! மக்களின் மனம் இளகவில்லை. ஏன்? டாக்டர் சுகர்ணோவின் போக்கு அந்த நெஞ்சங்களைக் கல்லாக்கிவிட்டது.

துவக்கத்தில், மக்கள் துயரம் கொட்டிடுகிறதே, அதிபரே! என்று முறையிட்ட நேரத்தில், அதிபர்,

ஒரு தலை அசைவு, ஒரு இலேசான புன்னகை, ஒரு நல்ல வார்த்தை, துளியேனும் மதிப்பு

காட்டியிருந்திருந்தால், மக்கள் தமது இன்னலைக்கூட மறந்துவிட்டிருப்பர். அதிபர் சுகர்ணோவோ, கனலைக் கக்கினார், அது மக்களின் நெஞ்சிலே ததும்பிக்கொண்டிருந்த பற்று பாசத்தை அடியோடு பொசுக்கிக் கருக்கிப் போட்டுவிட்டது! மக்களின் மனம் வெதும்பிப் போய்விட்டது; அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்; இல்லை, இல்லை துரத்தப்பட்டுவிட்டனர்.

அதற்குப் பிறகு அவர்களின் மனம் இளகுமா?

பரிவு காட்டும் முறையில் அவர் பேசினாலும், அதனைப் பாசாங்கு என்றே மக்கள் கொண்டிடலாயினர்.

நாட்டுக்காக நாளும் உழைத்தேனே என்று அவர் கூறும்போது, அறிவோமே! நாட்டைக் காடாக்கியதை! மக்களை மாக்களாக்கியதை! செல்வத்தை நாசமாக்கியதை! என்று மக்கள் முணுமுணுத்திடலாயினர். அது மெள்ள மெள்ள வேகமடைந்து அதிபரின் நிலையைக் குலைத்திடும் எதிர்ப்பாகிவிட்டது! சீறிடும் மக்களை அடக்கிடும் திறனற்றுப்போன நிலையில் - அதிபர் சுகர்ணோ "அழுது கொண்டே' பேசினாராம்!

ஆனால் அவருடைய கண்ணீர் காலங்கடந்து வெளிப்பட்டது; ஆகவே, பலன் கிடைக்கவில்லை - அது மட்டுமல்ல ஆணவத் துடன் அரசு நடாத்தியதால் அவதி பல கண்டோர் கண்ணீர் வடித்தபோது, காவலன் கேலிப் புன்னகையோ அலட்சியமோ காட்டினான்; இரக்கம் காட்டினானில்லை, கண்ணீருக்கு மதிப்பளித்திட்டானில்லை. அத்தகைய போக்கினன், பிடி இழந்து நடை தளர்ந்து தடுமாறித் தத்தளித்துக் கண்ணீர் உகுத்திடின், எவர் இரக்கம் காட்டுவர்?

தம்பி! டாக்டர் சுகர்ணோவின் கண்ணீர், இரக்க உணர்ச்சியைத் தூண்டிடவில்லை எனினும், ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாரனைவருக்கும் பாடம் புகட்டத்தக்கது!

ஆர்ப்பரித்துக் கிடப்பவன் ஓர் நாள் அழுது தீர வேண்டும்.

மக்களைக் கசக்கிப் பிழிபவன் ஓர் நாள் கண்கலங்கி நிற்க வேண்டும்.

கனல் கக்கிக் கிடப்பவன் ஓர் நாள் கண்ணீர் சிந்திட வேண்டி வந்திடும்.

இந்தப் பாடங்களைத் தருவதாக உளது டாக்டர் சுகர்ணோ சிந்திய கண்ணீர். வீரத்தில், தீரத்தில், அறிவாற்றலில் தியாகத்தில், டாக்டர் சுகர்ணோ முதல் வரிசையில் வைத்துப் போற்றிடத் தக்க நிலையினர்; ஐயமில்லை. ஆனால், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து, மமதை கொண்டு, கொடுமை புரிந்திடின் "அன்றொரு நாள்' ஆற்றிய அரும் பணி எழுப்பிடும் பற்றும் பாசமும், மக்களைக் கடைசிவரையில் செயலற்றவர்களாக்கிவிடாது!

நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்; உண்மை; அதனால் நம்மை நசுக்கி உரிமைகளை உருக்குலையச் செய்து, நாட்டைப் பாழ்படுத்துவதா?

விடுதலை வாங்கித் தந்தார்! ஆம்! ஆனால், எதற்கு? நாம் ஆமைகளாய், ஊமைகளாய்க் கிடந்திடவா? கொடுங்கோலாட்சி நடத்திடவா? நியாயமா?

புலியிடமிருந்து மீட்டிட்டார், உண்மை; நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளோம்; ஆனால், எதற்காகப் புலியிடமிருந்து நம்மை மீட்டிடுவது? பெருநெருப்பிலே தள்ளிடவா? பெரு நெருப்பிலே நின்றிடும்போது நம்மைப் புலியிடமிருந்து காப்பாற்றிய புனிதன் இவன், ஆகவே, இப்போது நம்மைத் தழலிலே தள்ளிடினும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எவர் கூறுவர்! ஏமாளியும் கூறிடானே!

என்று பல முறை ஆற்றோரத்தில், அங்காடியில், சாலையில், சோலையில், விடுதிகளில் குடில்களில் பேசிப் பேசிக் குமுறினோர் பல்லோர்: அவர்களின் கண்ணீர் முதலிலே சிந்தப்பட்டது; இறுதியில் ஆணவ அரசு நடாத்தியோன் கண்ணீர் வடிக்கிறான்! இட்டார்க்கு இட்ட பலன்! விதைத்தது தினை அல்ல; கிடைப்பது தினையாக இருக்க முடியாதல்லவா!

இந்தோனேஷிய அதிபர் கண்கசியும் நிலையினில் பேசினார் என்ற செய்தியைப் படித்ததும் தம்பி! இந்த நினைவுகள் வந்தன! பிறிதோர் செய்தி கண்டேன், சிரிப்பே வந்தது.

பகை கக்கி, போர் மூட்டிவிட்டு வரம்பு மீறிய வகையில் "நாய்' என்றே ஏசிப் பேசி, இறுமாந்து கிடந்த பாகிஸ்தானத்து புட்டோ பதவி இழந்து, விரட்டப்பட்டு வீடு திரும்புங் காலையில், அவருடைய போக்கிரித்தனத்தை வீரம் என்று எண்ணிடும் போக்கினர், அவருக்கு வரவேற்பு நடத்தி, மலர் தூவிப் பாராட்டினராம், லாகூர் ரயிலடியில்; அப்போது புட்டோ விக்கிவிக்கி அழுதாராம்!

இறுமாப்பு இவ்வளவு விரைவிலே நொறுக்கப்பட்டுப் போகும் என்றோ, ஆணவம் கக்கிய கண்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் கண்ணீர் வடித்திடும் என்றோ, எவரும் எதிர் பார்த்திருக்க முடியாது. அயூப்கானையே ஆட்டிப் படைப்பவர் இந்த புட்டோ என்று புகழ் பாடினர்! விக்கிவிக்கி அழுதாராம் வீராவேசமாடிய புட்டோ! என்ன எண்ணிக்கொண்டு அழுதாரோ, என்ன நோக்கத்துடன் அழுதாரோ!

பாவம்! இப்படி அழுகிறாரே! இவருக்குப் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இத்தனை கொடுமை இழைத்துவிட்டாரே!

என்று பார்ப்பவர் எண்ணிக்கொண்டு, தன் பக்கம் திரண்டு நின்று, அயூப்கானை எதிர்த்திடத் தூண்டுவார் என்ற நினைப்பாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தானத்து அதிபரின் பக்கம் அமர்ந்து இருந்த துணிவிலே என்னென்னவோ பேசித் திரிந்தோம்; இனி? என்று எண்ணியபோது கண்ணீர் புரண்டோடி வந்ததோ? தெரியவில்லை.

ஆனால், ஆணவம் நிலைக்கவில்லை! அழவேண்டிய நிலை பிறந்தது.

இவராகிலும் பரவாயில்லை, விக்கிவிக்கி அழுதார், வேறு இன்னல் எதுவும் தாக்கிடவில்லை; இன்னமும். "நானே எல்லாம்' என்று இருமாந்துகிடந்த கானா நாட்டு அதிபர் நிக்ருமா, தம்பி! எந்த நிலையில் உள்ளார் தெரியுமா? ஆட்சி அவரிடம் இருந்தபோது நாடுகள் பற்பல போட்டியிட்டுக்கொண்டு அவருக்கு வரவேற்பு கொடுத்திட, விழா நடாத்திடத் துடித்தன.

இப்போது அறுபது நாடுகளின் போலீஸ் இலாகா, அவரைப் பிடித்துக் கைது செய்து, கூண்டிலே நிறுத்திட துடித்தபடி உள்ளன.

அழத்தான் செய்வார் பாவம்! அன்று இருந்ததை எண்ணிக்கொண்டு!! ஆனால், அவர் சிந்திடும் கண்ணீரைக் கண்டு இரக்கம் காட்டிட கானா மக்கள் ஒப்புவரா?

அழுகிறாரா? அழட்டும்! அழட்டும்! எங்களை ஆண்டு பல அழ வைத்தவர் அழட்டுமே சிறிது!! நாங்கள் அழுது அழுது ஓய்ந்து போனோம்! கண்கள் வறண்டு போய்விட்டன! இப்போது, எம்மை அழ வைத்தவர் அழட்டுமே! கண்ணீர் வடியட்டுமே!!

என்றுதானே பேசுவர் கானா நாட்டில் காட்டாட்சி நடத்தியவர் கண்ணீர் சிந்திடும்போது!

உயர்ந்த இடம் அமர்ந்துவிட்டோம், இனி நம்மை எவரும் நெருங்க முடியாது!

மக்களைத் துதிபாடகர்களாக்கி விட்டோம், இனி நம்மை அசைக்கவும் எவராலும் முடியாது.

என்று இறுமாந்து கிடந்ததால் கானா நாட்டு அதிபர், ஜனநாயக அமைப்பையே நொறுக்கித் தள்ளினார். இப்போது? அவர் கிடைக்கவில்லை! ஆகவே, அவருடைய சிலையை உடைத்துத் தூள் தூளாக்கினர், கொதித்தெழுந்த மக்கள்!

ஏ அப்பா! சாமான்யமானவர்கள் அல்ல இந்த மக்கள்!

மண் பொம்மைகள்
மரக்கட்டைகள்
தலையாட்டிகள்
தாள்பணிவோர்
அச்சத்தால் பீடிக்கப்பட்டோர்!
ஐயோ பாவங்கள்!
கையில் ஊமையர்!

என்று ஆணவ அரசு நடாத்துவோர்களை நம்பவைத்து விடுகிறார்கள், நெடுங்காலம்! ஆனால், ஓர் நாள், எங்கிருந்தோ, எப்படியோ அவர்களுக்கு எதையும் செய்திடலாம் என்ற துணிவு பிறக்கிறது; புயல் எழுகிறது! அப்போது,

அரண்மனைகள் இடிக்கப்படுகின்றன!

ஆணவ அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன!
மணிமுடிகளைப் பந்தாடுகின்றனர்!
மமதையாளர்களை விரண்டோடச் செய்கின்றனர்.
சிலைகள் தூள் தூளாகின்றன!
அந்த நாளை எண்ணி அரசு இழந்தவர், அழுகின்றனர்!

தெளிவாகத் தெரிகிறது, மக்கள்மீது மமதையாளர் இறுதிவரையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது.

என்றாலும், மக்களை அழ வைத்து மமதையாளர் சில காலமோ நெடுங்காலமோ சிரித்துக் கிடக்கின்றனர். பிறகோர் நாள்,

செருக்குடன் சிரித்தவன் கண்ணீர் சிந்துகிறான்.

அந்தக் கண்ணீரைக் கண்டு, இரக்கம் காட்டிட மக்கள் மறுக்கிறார்கள்!!

உரிமை பறிக்கப்படும்போது உள்ளம் குமுறி அழுகிறான் குடிமகன், உடைமை பறிக்கப்படும்போது கதறுகிறான் ஏழை! கொடுமை தாக்கும்போது கூவி அழுகிறான் சாமான்யன்! கொளுத்தப்பட்ட குடிசைகள், இடித்தெறியப்பட்ட நம்பிக்கைகள், ஏழையைக் கதறிடச் செய்கின்றன. மகனைச் சவுக்காலடித்ததைக் கண்ட தாய், சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்ட அன்னை, தலையில் அடித்துக்கொண்டு அழுகிறாள்! கற்பழிக்கப்பட்டாள் கன்னி என்பதனை அறிந்து ஆண் மகன் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான்; கொடியவன் கிடைத்திடின் வாள் வேண்டாம், இக்கரம் போதும் அவனைக் கொன்றிட என்று அழுதபடி கூறுகிறான்.

அப்போதெல்லாம், ஏழை எட்ட முடியாத உயரம் இருக்கிறோம், நம்மை எவன் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன், சிரிக்கிறான், செருக்குமிக்கோன்! பிறகோர் நாள்? கண்ணீர் வடிக்கிறான்!

பன்னெடு நாட்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த ஏழை காண்கிறான்.

நான் இளகிய மனதுடன்தான் இருந்தேன், உன் கொடுமை என் மனத்தைப் பாறையாக்கிவிட்டது!

நான் அடிபணிந்துதான் கிடந்தேன், அன்புக்குக் கட்டுப்பட்டு; உன் ஆணவம் என்னை எழுப்பிவிட்டு விட்டது.

நான் உன்னை ஆட்சி நடத்தச் சொன்னேன். நீயோ என்னைக் கா-ன் கீழ்போட்டு மிதித்தாய்! நான் விடுபட முனைந்தேன், பொடிப் பொடியாயிற்று உன் ஆதிக்கம். கண்ணீர் வடிக்கிறாய்! இப்போது!!

அந்தக் கண்ணீர் இனி உன்னைக் காப்பாற்றாது. ஆனால், மற்றவர்கள் - அரசாளும் நிலை பெறுபவர்கள் - பாடம் பெற உதவட்டும்! ஆகவே, அழு! அழு! ஆணவம் அழிந்தது என்று அழு! மக்களின் சக்தியே முதல்! முடிவு! என்று அழு! மனிதனாகு!! - என்று கூறுவான் - சொல்லால் அல்ல; தன் பார்வையால்.

தம்பி! இந்த எண்ணங்களெல்லாம் வந்ததுடன், இன்று ஆணவ அரசு நடாத்திடுவோர் இதனைக் கண்டேனும் பாடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது!

அந்தக் கேள்விக்கான விடையை நான் எங்கு எதிர்பார்ப்பேன்? உன்னிடந்தானே! ஆகவேதான் உள்ளத்தில் தோன்றினவற்றை உன்னிடம் உரைத்தேன்!

அண்ணன்,

26-6-66