அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கண்ணீர்!
1

சுகர்ணோ, பூட்டோ, நிக்ருமா கண்களில் கசிவு - ஏன்?
கனல் கக்குபவன் ஓர் நாள் கண்ணீர் சிந்துவன்!
ஆணவம் மிகுந்தது! அழிவு நேர்ந்தது!
செருக்குடன் சிரித்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்!
ஆணவக்காரரின் அழுகைகள் புகட்டும் பாடம்!

தம்பி!

புன்னகை, பூங்காற்று, இன்னிசை, பொற்கொடி, மழலை, விழிமொழி என்பவை குறித்து எழுதிடின், படித்திட இனிமையாகத்தான் இருக்கும்; எழுதிடவும் எளிதுதான். ஆனால், அவை குறித்து நான் இன்று எழுதப்போவது இல்லை.

சோலையில் உலவுதல், அருவியில் நீராடல், கனிரசம் பருகிடல், நடனம் கண்டு மகிழ்ந்திடல், மண அறை அமர்ந்திடல், மங்கை நல்லாளின் "முதல் இரவு' பெற்றிடல், பெற்றெடுத்த செல்வத்தின் உச்சி மோந்து கழிபேருவகை அடைந்திடல், தான் பெற்ற முதல் ஊதியத்தைத் தாயிடம் கொடுத்து அவர்கள் தந்திடும் பெருமிதம் கலந்த கனிவினை நுகர்தல் என்பவை பற்றியும் எழுதிடலாம், தித்திப்பு நிரம்பக் கிடைக்கும். ஆனால், அவை குறித்து எழுதிட இன்று மனம் இல்லை.

செய்தொழிலிலே பெற்றிடும் நேர்த்தியான வெற்றி, களத்திலே மாற்றான் மண்டியிடக் காணும் போது ஏற்படும் பெருமித உணர்ச்சி, உலா, முடிசூட்டு விழா போன்றவை குறித்து எழுதிடலாம்; மகிழ்ச்சியும் எழுச்சியும் நிரம்பிடத்தக்க விதமாக; ஆனால், அவை பற்றியும் இன்று எழுதிடப் போவதில்லை.

நான் இன்று எழுதுவது கண்ணீர் பற்றி! ஆமாம் தம்பி! ஆமாம். கண்ணீரைப் பற்றியேதான்!

நமக்கும் கண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டே அறிவாயே; பெரியார் நமக்கு இட்ட பெயரே, கண்ணீர்த் துளிகள் என்பதல்லவா! பெரியாரின் பொருந்தாத் திருமணம் பற்றி மனம் குமுறிய பல்லோர் தெரிவித்திருந்த கருத்துக்களை முதலில் கண்டனக் கணைகள் என்ற தலைப்பிட்டு நமது இதழில் வெளியிட்டனர்; எனக்கு அந்தத் தலைப்பு பிடிக்கவில்லை; ஆகவே, அந்தக் கருத்துக்களைக் கண்ணீர்த் துளிகள் என்ற தலைப்பிட்டு வெளியிடச் செய்தேன். அதனையே நமக்குப் "பெயர்' ஆக்கிவிட்டார் பெரியார். அவர் எனக்காகவென்று வெகு அருமையாகப் பாடுபட்டுத் தேடிக் கொடுத்த செல்வம் என்றே நான் அந்த "கண்ணீர்த் துளிகள்' என்ற பெயரை வரவேற்று மகிழ்ந்தேன்.

அது ஆண்டு பலவற்றுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி; இப்போது எதற்காக அண்ணா! அந்த நினைவு என்று கேட்கிறாயா? தம்பி! காரணமற்றும், தொடர்பற்றும், பொருத்தமற்றும், பொருளற்றும் எனக்குப் பழைய நினைவுகள் ததும்பிடுவதில்லை. இப்போதும் அப்படித்தான். ஒரு பெரிய தலைவர், நாட்டின் அதிபர் புரட்சி வீரர் புவியோர் மெச்சிடத்தக்க பேறு பெற்றவர், கண்ணீர் வடித்தார் என்று இதழ்களில் கண்டேன்; உடனே எனக்குக் கண்ணீர் பற்றிய பல்வேறு நினைவுகள் மனத்திலே ததும்பிடலாயின!

தம்பி! கண்ணீரில் பலவகை உண்டு! நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்பக் கண்ணீரின் வகை அமைகிறது.

வெற்றிக் களிப்பு, தியாக உணர்ச்சி, மகிழ்ச்சிப் பெருக்கு, வேதனை, கோபம் எனும் பல்வேறு உணர்ச்சிகளின் போதும் கண்ணீர் வெளிப்படுகிறது. வகை பல என்றேன். முறைகூடப் பலப்பல, அதனால்தான் கசிந்தான், பொழிந்தான், கதறினான், வடித்தான் என்று பலவிதமான பதங்களைக் கண்ணீருடன் இணைக்கிறோம்.

நான் குறிப்பிட்டேனே, நாட்டுத் தலைவரொருவரின் கண்ணீர் பற்றி. அவர் கண்ணீர் வடிக்கவில்லை; கண்களிலே நீர் கசிந்தது - மற்றவர்கள் கதறினால், கண்ணீர் பொழிந்தால், வடித்தால் காண உருக்கம் எழும். ஆனால், அவர் கண் கசிந்ததைக் காணவேண்டி ஏற்பட்டுவிட்டபோது ஒரு புன்னகை பிறந்திடும் நிலை பலருக்கு; மிகப் பலருக்கு.

சிரித்திடப் பிறந்தவர் அவர்; அவர் கண் கசிகிறது.

பலருடைய கண்களிலே நீர் கொப்பளித்துக் குபுகுபுவெனக் கிளம்பிடும் நிலைமைகளை மூட்டினவர் அவர்; அவர் கண்களிலே நீர் கசிகிறது.

அவருடைய கண்ணீர் தனித்தன்மை வாய்ந்தது.

அந்தக் கண்கள் களைப்பு, திகைப்பு, ஏக்கம், கோபம் ஆகியவற்றினை வெளிப்படுத்தினதுண்டு. இப்போது அந்தக் கண்களிலே கசிவு!

கண்ணீர் சிந்திடு முன்பு அவருடைய கண்கள் அகம்பாவத்தைக் கக்கின! அடுத்துக் கண்ணீர் சிந்திட வேண்டி நேரிடும் என்று அவர் துளியும் எதிர்பார்த்திருந்திருக்க முடியாது. அவ்வளவு உன்னதமான இடம் அவருடையது! ஒரு நாடே அவருடைய காலடியில்! உலகமே அவர் சுட்டு விரல் அசைவு கண்டு! அதற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்ற நினைப்பு தடித்துப் போயிருந்த நிலை! அவருடைய கோபம் போதும் எவரையும் சுட்டெரிக்க! அவருடைய புன்னகை போதும் வாழ்க்கையைப் பூங்காவாக்கிட! அவர் சொல்லே சட்டம்! அவர் கண் கசிந்திடும் நிலை பெற்றார் என்றால், அது தனித்தன்மை வாய்ந்ததல்லவா?

பேரிடி, பேரிழப்பு, மூட்டப்பட்ட வேதனை ஆகிய வைகளால் கிளம்பிடும் கண்ணீர் வேறு! இவர் சிந்திய கண்ணீர் வேறு. செய்த தவறுகளை எண்ணி, தன்னால் துன்புறுத்தப் பட்டவர்களை எண்ணி, சிந்திடும் கண்ணீர் வேறு, இவர் கண்களிலே கசிந்திட்ட கண்ணீர் வேறு. எடுத்த காரியத்தை முடித்திட முடியாது போகிறதே, போட்ட திட்டப்படி செயல் வடிவம் கொள்ளவில்லை, எதிர்பார்த்துக் கணக்கிட்ட பலன் கைக்குக் கிட்டவில்லையே என்பதாலே கண்ணீர் சிந்திடும் நிலைமைக்கும், இனி நமது விருப்பத்தின்படி காரியம் நடவாது போலிருக்கிறதே, இனி நமது கட்டுக்கு மற்றவர் அடங்கிட மாட்டார்கள் போலிருக்கிறதே, இனி நம்முடைய நிலை, தாழ்வாக்கிடப்படும் போல இருக்கிறதே, எப்படி நாம் அதனைத் தாங்கிக் கொள்வது, தாள் பணிந்து கிடந்ததுகளெல்லாம் தட்டிக் கேட்கத் துணிந்து விட்டனவே; அதுகளை மட்டந் தட்டத் தக்க வலிவு நமக்குக் குறைந்துபோய் விட்டிருப்பது, அவர்களுக்கும் புரிந்து விட்டிருக்கிறதே, இனி என்ன செய்வது என்று எண்ணியதால் கண்ணீர் கசியும் நிலை. அது தனி இயல்புடையது. அதனைக் காண்போர், அந்தக் கண்ணீரைத் துடைத்திடவோ, வந்துற்ற இன்னல் யாவும் நீங்கிப் போகும் என்று ஆறுதல் கூறிடவோ மாட்டார்கள்.

அப்படிப்பட்ட விதமான கண்ணீர் வடித்தார், இந்தோனேஷியா நாட்டு அதிபர் டாக்டர் சுகர்ணோ சின்னாட்களுக்கு முன்பு என்றோர் செய்தி கண்டேன். அதனால் தான் தம்பி! கண்ணீர் பற்றிய நினைவு எழுந்தது.

ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்டதோர் அவை; அங்குப் பேசுகிறார் டாக்டர் சுகர்ணோ, கண்ணீர் சிந்திடும் நிலையில்.

அந்த அவையின் முன்பு அவர் பல முறை இடி முழக்கமிட்டிருக்கிறார்; எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி இருக்கிறார்; புத்திமதி கூறியிருக்கிறார்; சூளுரைத்திருக்கிறார்; கண்டனக் கணைகளைத் தொடுத்திருக்கிறார்; விளக்கம் அளித்திருக்கிறார்; பேருரை நிகழ்த்தியிருக்கிறார்; செயல்முறை பற்றிக் கூறியிருக்கிறார்; வெற்றிக் களிப்புடன் பேசியதுண்டு; வீராவேசம் காட்டியதுண்டு; அறைகூவலை எழுப்பியதுண்டு; கோபக் கனலை வீசியதுண்டு, ஒரு நாளும் கண் கலக்கத்துடன் பேசினதில்லை. அந்த நிலை பிறந்திடும் என்று அவர் கனவிலும் எண்ணினதில்லை.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட அழைப்பு விடுத்தவர், எதனையும் இழந்திடலாம் உரிமையைப் பெற்றிட என்ற உறுதியை நாட்டவர் அனைவருக்கும் ஊட்டியவர் டாக்டர் சுகர்ணோ; மறுப்பார் இல்லை; வரலாற்றுச் சுவடியிலே பதிக்கப்பட்டுவிட்ட நிகழ்ச்சி அந்த வீரக் காதை.

விடுதலை கிடைத்துவிட்டது என்ற வெற்றிச் செய்தியை நாட்டவருக்கு அறிவித்து அனைவரையும் அகமகிழ்ச்சி கொள்ளச் செய்தவர் டாக்டர் சுகர்ணோ.

அன்னியரின் பிடியினை நீக்கிக்கொண்டோம்; இனி இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள செல்வத்தைத் திரட்டி நாட்டினைச் சீர்படுத்திடுவோம்; வெளி நாட்டார் விரும்பிப் பெற்றிடத்தக்க பொருள் நிரம்பிய களஞ்சியம் நம் நாடு; பொன்னும் மணியும் குவித்திடலாம், புவியோர் மெச்சிட வாழ்ந்திடலாம், புகழ்க் கொடியைப் பறந்திடச் செய்திடலாம் என்றெல்லாம் கூறினவர்.

டாக்டர் சுகர்ணோ பேசினால் ஆயிரம் ஆயிரம் மக்கள் அப்படியே சொக்கிப் போவார்களாம். சொற்சிலம்பம் கண்டு வியந்திடுவார்களாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தம்பி! அவரை அந்நாட்டு மக்கள் கண்கண்ட கடவுளாகக் கொண்டனர். அவரினும் அறிவாற்றல் மிக்கவர் எவரும் இல்லை என்று நம்பிக் கிடந்தனர்.

நாட்டுப்பற்று மிக்கவர் நமது தலைவர், தன்மானம் காத்திடுபவர் நமது தலைவர், நமக்கு நல்வாழ்வு அளித்திட வல்லவர் நம் தலைவர், நமக்கு எது தேவை, எது நல்லது என்பதனை முற்றிலும் உணர்ந்தவர் நமது தலைவர் என்று கொண்டாடினர்.

பிரச்சினை எதுவாயினும், சிக்கல் எதுவென்றாலும், அவர் அறிவார் என்ன செய்ய வேண்டும் என்பதனை என்று அந்நாட்டு மக்கள் திடமாக நம்பினர்.

கப்பலோட்டியின் திறமையிலே மிகுந்த நம்பிக்கை கொண்டவர், சீறிடும் அலைகளைக் கண்டோ, பாய்ந்து வந்திடும் பெருமீன்களைக் கண்டோ கவலை கொள்வார்களா?

கட்டளையிடுங்கள் காவலரே! வழிகாட்டுங்கள் தலைவரே! அழைத்துச் செல்லுங்கள் அதிபரே - என்று துதி பாடினர் அந்நாட்டு மக்கள்.

அவரிடம் அளவிட முடியாத மதிப்பும் நம்பிக்கையும், பற்றும் பாசமும் கொண்டதுடன், அவருடைய போக்கு, நோக்கு, சொல், செயல் எனும் எதிலேயும் எந்தத் தலைவருக்கேனும் நிபுணருக்கேனும் ஐயப்பாடு ஏற்பட்டு, விளக்கம் கேட்டிடின், வாதம் செய்திடின், மறுத்தும் பேசிடின், என்ன துடிக்குத்தனம்! நமது தலைவரிடமா குறை காணுகிறான்! அத்தனை பெரிய அறிவாளியோ இவன்! - என்று பேசிட, சீறிப் பாய்ந்திடவும் அந்த நாட்டு மக்கள் முனைந்தனர்.

எதனையும் சிந்தித்துப் பார்த்திடும் உரிமையைத் தாமாகவே விட்டுவிட்டனர், அதற்கான தகுதியும் திறமையும் தமக்குக் கிடையாது என்ற எண்ணத்தில்.

நம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான், மக்கள் எல்லாப் பிரச்சினைகளையும் நம்மிடமே ஒப்படைத்து விட்டனர். அவ்வளவு நல்ல இயல்பு கொண்டவர் நமது மக்கள் என்று துவக்கத்தில் "அதிபர்' எண்ணிக் கொண்டார். பிறகோ!

பாவம் ஏதுமறியாதவர்கள் இந்த மக்கள் என்று எண்ணிடலானார். பிறகு,

எதனையும் நானல்லவா சொல்லவேண்டி இருக்கிறது,

செய்யவேண்டி இருக்கிறது, என்று பேசிடலானார். அதற்குப் பிறகு,

ஏ! மூடமே! இப்படிச் செய்! இதைச் செய்!

என்று கட்டளையிடலானார். பிறகு,

எதையாவது ஒழுங்காக, திறமையாகச் செய்திடத் தெரிகிறதா இதுகளுக்கு! என்று கேலி பேசிடலானார்.

இப்படிச் செய்யாவிட்டால், இன்னின்ன தண்டனை விதிக்கப்படும்,

என்ற மிரட்டல் பேச்சும், அதைத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளலானார் அதிபர் சுகர்ணோ.

புதிய புதிய சட்டங்களைப் பிறப்பிப்பார்!

மேலும் மேலும் வரிகளை விதிப்பார்!

எண்ணிட, எழுதிட, கூடிட, பேசிட, தடைகள் போட்டிடுவார்!

இவன் உன் பகைவன், இவனை ஒழித்துக்கட்டு என்பார்!

உரிமை கேட்காதே, உடைமையும் உயிரும்கூட உனக்கே உரியது என்று எண்ணிக் கொள்ளாதே! எல்லாம் நாட்டுக்காக! நாட்டுக்காக நான்! என் சொற்படி நடந்திட நீங்கள்! நான் இல்லையேல், இந்த நாடு இல்லை. இந்த நாடு இல்லையேல், நீங்கள் இல்லை

என்று உரத்த குரலில் பேசி, உருட்டு விழி காட்டலானார். நாட்டு மக்கள் சிறிதளவு கலங்கினர். ஆனால், அவரைப் பின்பற்ற, அவர் சொற்படி நடந்திடத் தவறவில்லை.

நமக்குப் புரியவில்லை. ஆனால், நமது தலைவர் எதனையும் நமது நன்மைக்காக; நாட்டு நலனுக்காகத்தான் செய்திடுவார்

என்று கூறி அமைதி பெற்றனர்.

தத்துவ விளக்கத்தில் அக்கறை கொண்டோர் மட்டும் அதிபர் மேற்கொள்ளும் போக்குத் தவறானது, அதன் பயனாக நாடு சீர்கேடடையும், மக்கள் வேதனையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துப் பார்த்தனர்.

எச்சரித்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர்,
மக்கள் அதிபருக்குத் துணை நின்றனர்.

மெள்ள மெள்ளக் கட்டங்கள் புதிது புதிதாக வளர்ந்தன. இறுதியில் அதிபர் - கை கட்டி வாய் பொத்தி நின்றிடும் ஏவலர் - அடிமைத்தனத்தைத் தாமாகவே மூட்டிவிட்டுக் கொண்ட மக்கள்... என்ற நிலை பிறந்தது.

உரிமையின் அருமையும் சிந்தனைச் செல்வத்தின் பெருமையும் கிடக்கட்டும்; அவர் நடாத்திடும் ஆட்சியில், நாம் நல்வாழ்வு பெற்றிருக்கிறோம்; அது போதும். ஏடு தூக்கிடுவோர், எதற்கும் வாதாடிடும் இயல்பினர், எதனையாவது கதைத்துக் கொண்டு கிடக்கட்டும் நாம் புதுவாழ்வு, முழு வாழ்வு பெற்றிருக்கிறோம், நமக்கு அது போதும் என்று இந்தோனேμய மக்கள் எண்ணி நிம்மதி பெற்றிட முடியவில்லை.