அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கண்ணீர் பொங்கும்....
1

காரணம் கூறா நாடகம் !
வளரா நாடு வளர்ந்த நாட்டிடம் கடன் வாங்கலாம் !
கடனுக்குமேல் கடன் வாங்குவது ஆபத்து !
அமெரிக்கா கடன்தரக் கேட்டிடும் தகவல்கள் என்னென்ன ?

தம்பி,

ஒரு சிறு நாடகம் காண்கிறாயா? நாடகம் அளவிலே தான் சிறியது; அதிலே பின்னப்பட்டிருப்பவர்கள் பெரியவர்கள்! பெரிய இடத்து விவகாரம் என்றுகூடச் சொல்லலாம்.

நாட்டிலே நடப்பனவற்றிலே இதுவும் ஒன்று என்று ஒப்புக் கொள்வாய், நாடகத்தைப் படித்ததும்.

நடப்பதைத்தான் நான் தீட்டியிருக்கிறேன்; ஏன் அவ்விதம் நடந்தது என்பது பற்றி நீயே எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விட்டுவிட்டிருக்கிறேன்.

மலர்கள் இங்கும் அங்கும் நிறையச் சிதறிக் கிடந்தன - என்று கூறினால், ஏன் என்பது பற்றி எண்ணிப் பார்த்தால், என்னென்ன தோன்றும்?

கடுங்காற்று வீசி மலர்கள் சிதறி இருந்திருக்கக் கூடும்.

மந்திபுகுந்து மலர்களைப் பறித்துப் பாழாக்கிப் போட்டிருக்கக்கூடும்.

காதலர்களின் ஊடலின் விளைவால் ஏற்பட்டதாக இருக்கக்கூடும்.

படமெடுப்பதற்காகச் சினிமாக்காரர்கள் அந்தத் தோற்றத்தை உண்டாக்கி இருந்திருக்கலாம்.

இதுபோல ஏதோ ஒரு காரணம் மனத்திலே தோன்றுமல்லவா - மலர்கள் சிதறிக் கிடந்தன என்று கூறினது கேட்டால். அதுபோல, நாடகத்தில் உள்ள நிகழ்ச்சிகளைக் கண்டதும், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும் என்று எண்ணிப் பார்த்திட முடியும். சுவையும் மிகுதி; பயனும் உண்டு. ஆகவேதான் தம்பி! நிகழ்ச்சிகள், நிலைமைகள் ஆகியவைகளை மட்டும் தந்துள்ளேன்; காரணம்பற்றி ஏதும் கூறவில்லை. இனி நாடகம் கண்டிடுவாய்.

-[1948]-

இடம் : மங்களவிலாஸ் கூடம்.

இருப்போர் : மங்களபுரி மைனர், மானேஜர் மந்திர மூர்த்தி, பணியாள் பெருமாள்.

நிலைமை : மங்களபுரி மைனர் சோர்வாகச் சோபாவில் சாய்ந்து கொண்டிருக்கிறார். பணியாள், கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறான் மானேஜர் சிறு குறிப்புப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்.

மைனர் : நம்ம ஜெமீனிலே இதுவரை இல்லாத வழக்கமாக இருக்குதேய்யா, நீ சொல்வது, ஏன் அந்த ஆசாமியை நான் பார்க்கணும், என் பேரைச் சொல்லிக் கேட்டயேல்லோ.... பிறகு என்ன? என்னை ஏன் பார்க்கணுமாம்...

மானேஜர் : கேட்டதைத் தர அப்போதே சம்மதம் சொல்லி விட்டான்.... தங்களைப் பார்க்கணும் என்கிறது அந்த மூணு இலட்சம் தருகிற விஷயமாக அல்ல. அவனுக்கு ஒரு ஆசை.... நாலுபேர் மத்தியில், நான்கூட ஜெமீன்தாரரைத் தரிசனம் செய்தேன் என்று சொல்லிப் பெருமை தேடிக்கொள்ளத் தான். பணம் எப்படியோ சேர்ந்துவிட்டது அவனிடம். ஆனாலும் அந்தஸ்த்து தன்னாலே வருமா.... இப்படிப்பட்ட இடத்திலே தனக்குச் சினேகம் இருப்பதாகச் சொல்லி அந்தஸ்த்து தேடிக் கொள்ளலாம் என்கிற ஆசைதான்....

மை : கடன் விஷயமாக இங்குப் பேசக் கூடாது, தெரிகிறதா?

மா : வாயைத் திறக்கமாட்டான்- (மானேஜர் குறிப்புக் காட்டுகிறார். பணியாள் வெளியே செல்கிறான்.) மை : ஏன்யா... ரேஸ் கிளப்புக்கு அனுப்பவேண்டியதை...

மா : எல்லாம் விவரமாகக் குறித்து வைத்திருக்கிறேன்... நாளைக் காலையிலேயே எல்லாம் கட்டிவிட முடியும்...

(பணியாளுடன் வருகிறார் வட்டி வியாபாரம் வரதராஜன். வரதராஜன் பணிவாகக் கும்பிடுகிறான். மைனர் தலையை அசைக்கிறார்;)

மா : இவர்தான்... வரதராஜன் என்பவர்.... நம்ம ஜெமீனிடம் அலாதியான அன்பு.... (மைனர் இலேசாக ஒரு புன்னகை உதிர்க்கிறார்,)

வரதராஜன் : பெரிய ஜெமீன்தாருடைய தண்ணீர்ப் பந்தல் தருமகாரியத்தை என் தகப்பனார்தான் பார்த்துக்கொண்டு வந்தார்.

மை : இலேசாகத் தலைவலி.... அதிகம் பேச முடியாது....

வர : படுத்துக்கொள்ளுங்கள்... உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.... தங்கள் தரிசனம் கிடைத்ததே போதும்.. உடனே அனுப்பி வைக்கிறேன்...

மை : (ஏதும் அறியாதவர்போல) அனுப்பி வைக்கிறீரா? எதை.... என்னய்யா மானேஜர்!.... பாவம் சாமான்யமானவாளை எதுவும் கேட்டுத் தொல்லைப்படுத்தக் கூடாது என்ற கண்டிப்பாக உத்திரவு போட்டுமா இப்படி....

மர் : அய்யய்யோ, தப்பா நினைத்துக் கொள்ளப்படாது. ... அவராகத்தான்.... ஏதாவது வருவாய் கிடைக்குமென்று... பலருக்கும் தம்மிடம் நம்பிக்கை ஏற்படுமென்று... தர விரும்பினார்... சரி என்றேன்...

மை : உன் நோக்கம் சரியாக இருக்கலாம்... ஊரிலே என்ன பேசுவார்கள்... வட்டிக்கு ஜெமீன்தார் கடன் வாங்கினார் என்றுதானே....

வ : ஒரு ஆளுக்குக்கூடத் தெரிய விடமாட்டேன். பெரிய இடத்து விஷயம் .... வெளியே பரவ விடுவேனா... (மைனர் எழுந்து உள்ளே செல்கிறார். மூவரும் வெளியே செல்கின்றனர்.)

- [ 1950 ] -

இடம் : மங்களவிலாஸ் கூடம்.

இருப்போர் : மைனர், மானேஜர், புதிய வேலையாள்.

நிலைமை : மைனர் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிறார். பக்கத்தில், எரிந்து போன சிகரட் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. கண்கள் சிவந்து போயுள்ளன. மானேஜர், கையில் நாளிதழ் வைத்துக் கொண்டிருக்கிறார். பணியாள், சோபா பக்கத்தில் சிதறிக் கிடந்த கண்ணாடிப் பாத்திரத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துக் குவித்துக் கொண்டிருக்கிறான்; ஜெமீன்தாரரின் பட்டு மேலங்கி ஒரு வுறம் விழுந்து கிடக்கிறது : கூடத்துக் கடிகாரம் நின்று போயிருக்கிறது.

மைனர் : ஏன்யா இப்படி மரம்போல நின்னுகிட்டே இருந்தா என்ன ஆகிறது... எட்டு மணிக்கு ஆள் அப்பினே.... அந்தப் பய இன்னும் வரவும் இல்லை, சேசியும் சொல்லி அனுப்பல்லே மானேஜர் : சேதி சொல்லி அனுப்பிவிட்டான்... அவசரமான வேலையாம்... ஆடூர் மிட்டாவை இவனிடம் ஒப்படைத்து விட்டார்கள் அல்லவா, அதற்கான கணக்கு சரிபார்த்துக் கொண்டிருக்கிறானாம்....

மை. : ஆடூர் மாடூர், காடூர்னு ஏதேதோ சாக்கு... பணம் தரமுடியும் என்கிறானா, முடியாது என்கிறானா....

மா : ஐயா கேட்டிருக்க மாட்டார்.... நானாகத்தான் கேட்கிறேன் என்று ஒரு தப்பு எண்ணம் போல இருக்குது அவனுக்கு....

மை : பச்சையாத்தான் சொல்லன்யா... நானே கேட்கணும், ஒரு இலட்சம் அவசரமாத் தேவைன்னு.... அப்படித்தானே....

மா : அப்படி எல்லாம் இல்லே.. நான்தான் மானேஜரை அனுப்பிவைத்தேன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும். (பணியாள் வேலை செய்வதை நிறுத்திவிட்டு, இந்தப் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். அதைக் கவனித்துவிடுகிறார் மைனர்.)

மை : ஏண்டா தடிப்பயலே! என்ன பேசறாங்கன்னு கவனமா கேட்டாச்சேல்லோ.... இனி ஊர் பூரா தமுக்கு அடிப்பே... அப்படித்தானே.... வேலையாள் : எனக்கு அந்தப் பழக்கமே கிடையாதுங்க.... நேரம் ஏதுங்க வெட்டிப் பேச்சுக்கு....

(வட்டி வரதராஜன் வருகிறார், கலகலப்பான சிரிப்பை உதிர்த்தபடி வணக்கம் கூறுகிறார், மைனர், சோபாவைக் காட்டியபடி)

மை : உம் பரவாயில்லே... சோபாவிலேயே உட்காரலாம்....

வ : வேண்டாம்ங்க... பரவாயில்லே.... இப்படியே நின்று கொண்டாலே போதும்.

மை : பரவாயில்லே உட்காரய்யா..... இதிலே என்ன மரியாதைக் குறைவு வந்துவிடப் போகுது.... உட்கார்...

வ : அதுக்கு இல்லிங்க.... சோபாவிலே ஒரே மூட்டைப் பூச்சி தொல்லைங்க... போன வியாழக்கிழமை உட்கார்ந்தேன் பாருங்க., பிடுங்கித் தின்னுவிட்டுதுங்க மூட்டைப்பூச்சி...

மை : மூட்டைப் பூச்சி இல்லாய்யா.... உணி.... உணி தெரியாது... நாய்க்குப் பிடிக்குமே... நம்ம டெரியர் என்ன அடித்து விரட்டினாலும் அந்தச் சோபாவிலேதான் போய் உட்காரும்.... சுத்தக் குரங்கு அந்த நாய்.. சரி எனக்கென்ன வேறே வேலையே கிடையாது என்கிற நினைப்பா.... எப்ப வருவாரு வரதராஜபூபதி, வரம் எப்பத் தருவாருன்னு காத்துகிட்டு இருக்க...

வ : தப்பா எடுத்துக் கொள்ளக் கூடாது, நான் துளியும் எதிர்பார்க்கவில்லை.... தங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை இவ்வளவு அவசரமாகத் தேவைப்படும் என்று.... சென்னை பெரிய பங்களா கூட ஏதோ ஆபீசுக்கு வாடகைக்குக் கொடுத்ததாகக் கேள்வி....

மா : விவரம் தெரியாமல் பேசாதீர். வாடகைக்க விடுவதற்காக வீடு கட்டுகிறவரா ஜெமீன்தார்.... யாரோ அவருடைய சினேகிதர் வேண்டும்னு கேட்டா, சரின்னு சொன்னார்....

வ : எனக்கு வந்த தகவல் வேறே விதமாக இருந்தது....

மை : மானேஜர் வந்து சொன்ன தகவலைக் குறித்துப் பேசுமய்யா? ஏன் வீண் விவகாரம் உமக்கு?

வ : என் வீட்டுக்காரியும் பெரிய மகனும் இதேதான் எனக்குச் சொல்லியபடி இருக்கிறார்கள். கொடுத்த பணத்தை ஒழுங்காகத் திருப்பி வாங்காமப்படிக்கு மேலும் மேலும் கடனைக் கொடுத்தபடி இருந்தா ஆபத்து என்று.... போனமாதம் கேள்விப்பட்டிருப்பீங்களே! தவன உத்சவம் தாதுலிங்கம்பிள்ளை மஞ்சக் கடுதாசி நீட்டிவிட்டாரே - அரை இலட்சம்

மா : உமக்கும் கோவிந்தாதானா அரை இலட்சம்

வ : ராமானுக்கிரகத்தாலே அப்படி ஆகவில்லிங்க.... என் பணத்துக்கு ஈடா ஒரு பத்து ஏக்கர் நஞ்சையை வாங்கிக் கிட்டேன், கப்பல் கவிழும் என்கிற சந்தேகம் வந்தபோதே

மா : பலே ஆசாமியாச்சே நீ

வ : பணம் இப்ப முன்னேபோல இல்லிங்க - நானே கொஞ்சம் வட்டி அதிகம் கொடுத்துத்தான் வாங்கி வர்ரேன்

மை : சுற்றி வளைச்சி பேசுவானேன் - வட்டி கொஞ்சம் கூடுதலாக வேண்டும் - அவ்வளவுதானே? ஏன்யா அதுக்காகத் தலையைச் சொரிந்துகிட்டு இருக்கே - எழுதிக்கிட்டுவா, போ! சுருக்கா வா

வ : ஆகட்டுமங்க - நம்மக் கணக்கப்பிள்ளையிடம் கொடுத் தனுப்பறேன் பத்திரம்

மா : பணம்? அது யார் மூலம் கொடுத்தனுப்பறே

வ : பத்திரம் கைக்குவந்ததும் மகனிடம் கொடுத்தனுப்பினா அவன் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ஓடிவருவான் இங்கே, - பணத்தோட

(விடைபெற்றுச் செல்கிறார். மைனர் முகத்தில் கோபக்குறி காண்கிறார் மானேஜர்).

- [ 1954 ] -

இடம் : மங்களவிலாஸ் முன்புறம் - அலங்காரக் கொட்டகை.

இருப்போர் : மைனர், மானேஜர், வேலையாள்.

நிலைமை : (மைனர் இளைத்துப்போய், களைத்துப் போய் இருக்கிறார், கொட்டகையில் போடப்பட்டுள்ள பலகைமீது உட்காôந்து கொண்டிருக்கிறார். சிறிது அழுக்காகியுள்ள திண்டு பலகைமீது கிடக்கிறது. ஓர் புறம் வெற்றிலைப்பெட்டி இருக்கிறது. வேலைக்காரன் தூக்கக் கலக்கத்துடன் மைனருக்கு விசிறிக் கொண்டிருக்கின்றான். மானேஜர், பஞ்சாங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.)

மைனர் : ஏன்யா அதைப் புரட்டறே - எந்த நேரம் நல்ல நேரம் அவனைப் பார்க்க என்பதற்காக -

மானேஜர் : இல்லிங்க - முந்திரித்தோப்பு விஷயமா ரிஜிஸ்திரார் ஆபீசுக்கு நாளைக்குப் போகலாம்னு பார்த்தேன். கரிநாளா இருக்குது

மை : வாங்குகிற பயலுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதுக்காக - நான் கையெழுத்துப் போடணுமா ?

மா : தேவையில்லிங்களே - முந்திரித்தோப்பு பெரியம்மா பேர்லே தானே இருக்குது - அவங்க வந்தாப் போதும் -ஆனா பெட்டிவண்டி

மை : பெட்டி வண்டியிலே வரமாட்டேன் என்கிறாங்களா பெரியம்மா

மா : அதெல்லாம் இல்லிங்க. பெட்டி வண்டியோட "இருசு' வளைந்து போய் கிடக்குது - மை : இப்ப நாம வரதராஜப்பிள்ளை வீட்டுக்குப் போக, வண்டி.

மா : அவரோட குதிரை வண்டியே வருது - இப்பத்தான் அவரோட காரியஸ்தன் வந்து சொன்னான். சைகிள்லே வந்தான்

(வண்டிவந்து நிற்கிறது. மைனர் ஏறிக் கொள்கிறார். மானேஜர், தயக்கப்படுகிறார்.)

மை : பரவாயில்லை, ஏறு! எல்லாம் இப்ப! சமம் - ஏதோ பேப்பர்லே பார்த்தேன் - எவனோ ஒருத்தன் பேசி இருக்கறான் முழநீளம் - ஏறு! ஏறு

(மானேஜர் ஏறிக் கொள்கிறார்)

(வண்டி, புதிய முறையில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மாடி வீட்டின் முன் வந்து நிற்கிறது.)

வரவேற்க யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார் மானேஜர். வீதியில் யாரேனும் இருக்கிறார்களா, தன்னைப் பார்த்து விடுவார்களா என்ற சந்தேகத்துடன் மைனர் பார்க்கிறார். ஒரு பத்து வயதுச் சிறுவன் உள்ளே இருந்து வருகிறான். மானேஜர் அவனைப் பார்த்து "அப்பா' இருக்கிறாரா என்று கேட்கிறார்.

(சிறுவன் அதற்குப் பதில் ஏதும் கூறாமல், வண்டிக்காரனை முறைத்துப் பார்க்கிறான்.)

வண்டிக்காரன் : பெரியவருதான் போய் வரச் சொன்னாரு

சிறுவன் : ஏய் உனக்கு எங்கே போச்சு புத்தி - நான் பள்ளிக்கூடம் போகணும்னு தெரியலியா - ஊர்லே இருக்கறவங்க ஏறி சவாரி செய்யத்தான் பாட்டி வண்டியை வாங்கித் தந்தாங்களா

(மைனர் கோபத்தை அடக்கிக்கொண்டு வீட்டுக் குள்ளே போகிறார்,

உள் கூடத்தில் நாலைந்துபேர் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மானேஜர் கனைத்துக் காட்டுகிறார்.

ஒருவர், கா-யாக உள்ள நாற்காலிகளைக் காட்டுகிறார்.

மைனர் உட்காருகிறார்.

கூடத்தை அடுத்து உள்ள அறையிலிருந்து ரேடியோ சத்தம் கேட்கிறது.

"ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதி கெட்டு, என்ற பாடலை யாரோ வானொலியில் நிறுத்தி நிதானமாக, சோகக் குரலில் பாடுகிறார்கள்.

மைனர், சிகரட்டைப் பற்றவைக்கிறார். அதைப் பார்த்துவிட்ட குமாஸ்தா ஒருவர் சுவரில் மாட்டப் பட்டுள்ள முருகன் படத்தைக் காட்டுகிறார்.

மைனர் சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்து விடுகிறார்.

மானேஜர் குறும்புப் புன்னகை கிளம்புவதைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்.

உட்புறக் கதவைத் திறந்துகொண்டு, வரதராஜன் வருகிறார்.

மைனரைப் பார்த்தது:ம பதறுவதுபோல பாவனை காட்டி)

வ : அபசாரம்! அபசாரம்! இங்கேயா உட்காரச் சொன்னார்கள். மடப்பயல்கள். உள்ளே வாங்க... குளிர்ச்சியாக இருக்கும்.... வாங்க.... வாய்யா மானேஜர்! வா, நீயும்

(உள்ளே செல்கிறார்கள். ஏர்-கண்டிஷன் செய்யப் பட்டுள்ள அறை. வசதியும் பகட்டும் கொண்ட சோபாக்கள் போடப்பட்டுள்ளன.)

வ : என்ன சாப்பிடுகிறீர்கள் காப்பியா - ஓவலா - மைலோவா - மை : புறப்படும்போதுதான் ஆர்-க்ஸ் சாப்பிட்டேன். ஒன்றும் வேண்டாம்

வ : ஆர்லிக்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா - அப்படியானா என் பாக்கியம்தான் - ஏன்னா! இந்த ஜில்லா பூராவுக்கும் நான்தான் ஏஜண்டு ஆர்லிச்சுக்கு -

மா : யாரோ ஆராவமுதன் என்று பேர் போட்டிருந்துதே

வ : நம்ம பயதான் - மச்சினன் - அவன் பேர்லேதான் எடுத்துப் போட்டிருக்கிறேன் - உங்களை வரச் சொல்லி விட்டேனே தவிர, பிறகுதான் கையைப் பிசைந்து கொண்டேன், என்னடா ஒரு பெரிய மனுஷரை வரச் சொல்லிவிட்டமே, கணக்கு வழக்கைப் பார்க்காமப் படிக்குன்னு. பிறகு பார்த்தேன், பதறிப் போனேன்...

மை : பதறிப் போனிங்களா? ஏன்....

(ஒரு மேஜையைத் திறந்து காகிதத்தை எடுத்து மைனரிடம் தந்தபடி)

வர : பாருங்களேன் நீங்களேதான், படிச்சி.

(வேகமாகப் படிக்கிறார் மைனர். முகம் கடுகடுப் பாகிறது.)

மை : என்ன இது போக்கிரித்தனமான கேள்வி, சொத்து விவரம் - கடன் விவரம் - புதிய கடன் எதற்கு என்ற விவரம் - இதெல்லாம்... என்னைக் கேட்கிற கேள்வியா இது....

வர : கோபிக்கப்படாது. இதெல்லாம் உங்களுக்காக எழுதப் பட்டவை அல்ல. ஒருமுறைக்காக வைத்திருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் கடன் தொகை ஏறிவிட்டால், இந்த விவரம் கேட்டுத் தெரிந்துக்கொண்டு, திருப்தி ஏற்பட்ட பிறகுதான் கடன் கொடுக்கவேண்டும் என்ற கண்டிப்பான சட்டம் போட்டுவிட்டான், என் மகன்; பெரியவன்; அமெரிக்கா போய்ப் படித்துவிட்டு வந்திருக்கிறான்....

மை : எழுந்திரய்யா மானேஜர். போதும் இவரோட உறவு.... உம்! எழுந்திரு.

இருவரும் எழுந்து செல்கின்றனர். பதறாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு புன்னகை செய்கிறார் வரதராஜன்.)

- [ 1956 ] -

இடம் : "வளர்பிறை' மாளிகைக்கூடம்

இருப்போர் : வட்டி வரதராஜன், அவர் மகன் பால்

நிலைமை : (மகன் தயாரித்துக் கொடுத்த பத்திரங்களைப் படித்துப் பார்ககிறார் வரதராஜன். வேலையாள் வருகிறான்.)

வேலையாள் : நாளைக்கு வரலாமா என்று கேட்கிறார்....

வரதராஜன் : யார்? மைனரா? ஏன்! இன்னும் நாலு நாள் பொறுத்து வருவதுதானே... அதற்குள்ளே இன்னும் நாலு இடத்திலே கடனை வாங்கலாமே.... போ! போ! கையோடு அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லு, நாளைக்கு வருகிறாராம் நாளைக்கு.