அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கண்ணீர் பொங்கும்....
2

மகன் : ஒவ்வொரு நாளும் ஆசாமி முழுகிக் கொண்டிருக்கிறான்... காரியத்தைச் சுருக்காக முடிக்க வேண்டும்.... போடா! போய், அழைத்துக்கொண்டு வா....

வே : நம்ம குதிரை வண்டியை...

வர : மோட்டாரை எடுத்துக்கிட்டுப் போயேன். கடன்காரப் பயல்களுக்காகத்தானே வண்டி, வாகனம் இங்கே வாங்கி வைத்திருக்குது. மடையன்! போயி, அந்த மானேஜர் இருக்கானே அவனிடம் சொல்லு, ஒரு வாடகை வண்டி பிடிச்சிக்கிட்டுச் சீக்கிரமா வரச் சொல்லு....

(வேளையாள் ஓடுகிறான்.)

இதுபோலவே இன்ன ஊரில் நடைபெற்றது, தெரியும் எனக்கு; வகையின்றி வாழ்க்கை நடத்தி, வாங்கக்கூடாத அளவு கடனைவாங்கி, திருப்பிக்கட்ட முடியாமல் திகைத்து, கடனை அடைக்க மேலும் கடன்வாங்கி இறுதியில் சொத்தினை இழந்து தத்தளித்தார். இன்ன பண்ணைக்குச் சொந்தக்காரர், அல்லது இன்ன ஜெமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பலரும் தமக்குத் தெரிந்த பல "வரலாறுகளை'க் கூறுவார்கள். தம்பி! அவைகளை அறிந்துகொள்ள அல்ல நான் இதனை எழுதினது.

தனி மனிதர்கள் போலவே நாடுகளும் கடன் வாங்குவ துண்டு.

கடன் வாங்குவதே தவறு என்று கூறிடமுடியாது. வளர்ச்சி அடைவதற்காக வளாச்சி அடையாத நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளிடம் கடன்வாங்குவது தேவைப்படும் ஒன்று.

கோபக்குரலில் தம்பி! காங்கிரசார் சொல்லக் கேட்டிருப் பாயே, ரஷியாவே கடன் வாங்கித்தான் வளர்ச்சி அடைந்தது; அமெரிக்காவே கடன்வாங்கி இருக்கிறது என்றெல்லாம்.

கடன் வாங்கவே கூடாது என்று எவரும் கூறவில்லை.

கடன் எந்தமுறையில், எந்த அளவில், என்ன காரியத்துக்காக வாங்குவது என்பதிலும்,

கடன் வாங்கிய தொகையைத் தக்க காரியத்துக்குப் பயன்படுத்தி, அதன் மூலம் வருவாய் பெற்று, பட்ட கடனைத் திருப்பிக் கொடுத்துவிடத் திட்டமிடப்பட்டுச் செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதைப் பொறுத்துமே இருக்கிறது, கடன் வாங்கியது தவறா அல்லவா என்பது.

மங்களபுரி மைனர் போல ஆடிப்பாடிக் கிடந்திடக் கடனுக்குமேல் கடன் வாங்கியபடி இருந்தால், தவறு என்பது மட்டுமல்ல, ஆபத்து என்றே கூறவேண்டும்.

அவருக்கு இருக்கும் சொத்துக்கு, இந்தக் கடன் அவரை என்ன செய்துவிடும்! ஒரே வருஷ வருமானத்தைக்கொண்டு கடனைக் கட்டிவிடலாமே என்றும்.

கரும்பு மாசூல் ஒன்றுபோதுமே, கடனை அடைக்க என்றும்,

ஜெமீன் குடும்பம் என்ன சாமான்யமானதா! எவனுக்குத் துணிவு பிறக்கும், கடனைத் திருப்பிக்கொடுத்தாக வேண்டும், விரைவாக என்று வற்புறுத்த என்றும்.

கடனை ஏராளமாக வாங்கியபடி உள்ள பெரிய இடத்தைப் பற்றி ஊரார் பேசிக் கொள்வார்கள், துவக்கத்தில்! பிறகோ? சொத்து இருக்கட்டுமே மலை அளவு! இருந்து! கடனய்யா ஊரைச்சுற்றி! வட்டியே சரியாகக் கட்டவில்லையாம், வருஷம் இரண்டு முடிகிறதாம்! எந்த நேரத்தில் எவன் கோர்ட்டுக்குப் போய்க் கொடி ஏற்றி விடுகிறானோ, எவன் தமுக்குத்தட்ட வருகிறானோ என்ற திகில் ஆசாமியைத் துரும்பாக இளைக்க வைத்துவிட்டது என்று கேலி பேசுவர்.

கடன் வாங்குவதிலே உள்ள கேவலத்தைவிட அதிகக் கேவலம், கடனைத்திருப்பிக்கட்ட வழி ஏது என்று ஊரார் பேசிக் கொள்வது காதிலே விழுந்திடும் வேளையில்,

பருத்தி விளையுமாமே தரமாக. நல்ல ஆதாயம் கிடைக்கு மாமே என்றும்,

பொட்டல்காடுதான்யா அந்தச் சதுரம்; ஆனால், சர்க்கார் கட்டப்போகும் விருந்தினர் விடுதிக்கு அதை விட்டால் வேறு பொருத்தமான இடம் ஏது! ஆகவே அந்தப் பொட்டல் இடத்தை என்ன விலை கொடுத்தாகிலும் வாங்கியே தீருவது என்று அதிகாரிகளின் மேல் மட்ட மாநாட்டிலே முடிவு செய்திருக்கிறார் களாம் என்றும் கடன் கொடுத்தவர்கள், கடன் வாங்கிய "கனவான்' பெற்றுள்ள சொத்துப்பற்றிய விவரம் பேசுவர்; அதனைத் தமக்குள் பங்கு போட்டுக்கொள்ளும் நோக்கத்துடன்.

தனி மனிதர்கள் கடன் வாங்குவது அதிகப்பட அதிகப்படக் கடன் கொடுப்பவன் குரலிலே கண்டிப்பு அதிகப்படும், வட்டி ஏறும், வார்த்தைகளிலே கடுமை மிகுந்துவிடும்.

ஒரு நாடு மற்றோர் நாட்டிடம் கடன் கேட்டு வாங்கியபடி இருந்திடுமானால், ராஜதந்திரமுறை காரணமாகப் பேச்சிலே கடுமை எழாது. ஆனால் நிபந்தனை புதிது புதிதாக விதிக்கப்படும்!

ராஜதந்திரக் கலை இன்று மிக நேர்த்தியான வளர்ச்சியும் வடிவமும் பெற்றுவிட்டிருப்பதால், நிபந்தனையைக் கூட நிபந்தனை என்று பச்சையாகக் கூறாமல், "யோசனைகள்' என்ற பெயரிட்டுத் தருவர்; தருகின்றனர்,

கடன் சுமை அதிகமாகிக்கொண்டு போவதிலே உள்ள சங்கடம், சஞ்சலம் ஆபத்து ஆகியவை பற்றி அக்கறையுடன் "புத்திமதி' கூறுவதும்,

கடனைத் திருப்பிக் கட்டுவதற்கான திட்டம் செம்மை யானதாக இருக்கவேண்டும் என்று நட்புணர்ச்சியுடன் "ஆலோசனை' கூறுவதும், அதற்கான திட்டங்கள் எந்தவிதத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை அறிந்துகொள்ள "ஆவல்' கொள்வதும்,

அந்தச் செயல்முறை எந்த அளவு பலன் தந்திருக்கிறது என்பதைக் கணக்குப் பார்க்கத் "துணை' செய்ய விரும்புவதும்,

செயல் முறையின் பயன் அதிக அளவினதாக, தாமும் உடனிருந்து மேற்பார்வை செய்திடமுற்படுவதும்,

செயல் முறையின் ஒரு பகுதியை நடத்திச் செல்லத் தக்கவர் களை அனுப்பிவைக்க முற்படுவதும் - என்ற இந்த முறைகளில், நிபந்தனைகள் புகுத்தப்படும்.

சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் நடவடிக்கைகளில் மற்றோர் நாடு தலையிடுவது தவறு; அதனை அனுமதிப்பது தேசியத் தன்மானத்தை அழித்துக்கொள்ளும் இழி நிலையை மூட்டிவிடும்! மற்றோர் நாட்டிடம் "பிடி'யை ஒப்படைப்பதோ, அடிவருடிக் கிடப்பதோ கேவலம் என்பது மட்டுமல்ல, அது ஆபத்தாகவும் ஆகிவிடும்.

ஆகவே, நிபந்தனையற்ற உதவி பெற மட்டுமே தன்மானத்தையும் சுதந்திரத்தையும் காத்துக்கொள்ள விரும்பும் நாடு சம்மதிக்கும்.

இந்த நிலைமையினை, கடன் கொடுக்கும் நாடும் உணராமலிருக்க முடியாது. ஆகவே, கடன் தருவதற்கு நிபந்தனை விதிக்க அந்த நாடு முற்படாது.

அறிவுரை
ஆலோசனை
கணக்குப் பார்ப்பது
துணைபுரிவது
மேற்பார்வை
பொறுப்பிலே பங்கு

என்ற சொற்களை, நிபந்தனை என்ற சொல்லுக்கு மாற்றுச் சொற்க ளாக்கிக்கொள்ளும்!

எத்தனை இன்னல் வந்து தாக்கிடினும் நிபந்தனையுடன் கூடிய கடன் - உதவி - ஏற்க மாட்டோம்.

என்று கடன் வாங்கும் நாடு எக்காளமிடுவதும்,

எந்த ஒரு நிபந்தனையையும் நாங்கள் விதிக்க மாட்டோம்; தேசியத் தன்மானத்தை மதித்து நடந்திடுவோம்.

என்று கடன் கொடுக்கும் நாடு கனிவு காட்டுவதும், இன்று வேகமாக வளர்ந்து வரும் "ராஜதந்திர'த்தின் விளைவு. ஆனால், அந்தப் பகட்டுப் போர்வை, உண்மையை அடியோடு மறைத்து விடுவதில்லை; கூர்ந்து பார்த்திடுவோர், உண்மையைக் காணத் தவறுவதில்லை.

எந்த விதமான நிபந்தனைக்கும் கட்டுப்பட்டுக் கடன்வாங்க மாட்டோம் என்ற கூறிக் கொள்வதிலே பொருள் இல்லை; ஏனெனில் கடன் வாங்குவதே, கடன் படும் நாட்டைக் கடன் கொடுக்கும் நாட்டிடம் கட்டுப் பட்டு விடச் செய்து விடுகிறது, தன்னாலே!

எனவே, தனியாக நிபந்தனை எதனையும் புகுத்த வேண்டிய அவசியமே இல்லை.

ஒரு நிபந்தனையும் கிடையாது என்று கடன் வாங்கும் நாட்டின் ஆளவந்தார்கள் கூறுவது, மக்களை மயக்கிட, உண்மை நிலைமையை மறைத்திட!

உதவி கேட்கிறோம் - கடன் கேட்கிறோம் - ஆனால், அடிமைகளாகிட மாட்டோம், தலையாட்டிகள் ஆகிட மாட்டோம் என்று ஆளவந்தார்கள் முழக்கமிடும்போது, விவரமறியாத மக்கள் நிமிர்ந்து நிற்கின்றனர்.

கடன் கொடுத்த நாட்டினனோ கண் சிமிட்டுகிறான், குறும்புப் புன்னகையுடன்.

தம்பி! இந்திராகாந்தி அம்மையார் அமெரிக்கா சென்றார்களே, கடன் கேட்கத்தானே என்று வினவியபோது, ஆளவந்தார்களின் ஆலவட்டங்கள் கூறின,

கேட்க! கெஞ்சிட அல்ல!

ஆளுங்கட்சியை ஆதரிப்பதைத் தமது வாழ்வின் இலக்கண மாக்கிக் கொண்டுவிட்டுள்ள இதழ்களோ, தமது தனித் திறமையைக் காட்டி எழுதின!

எந்த அளவுக்குத் தொகை தரக்கூடிய நிலையில் அமெரிக்கா இருக்கிறது என்பதனை நேரடியாகவே கண்டறிவதற்காகப் பிரதம மந்திரி அமெரிக்கா சென்றிருக்கிறார்!

இந்தியாவுக்கு அவசரமாகவும் அதிக அளவிலும் உதவி தேவை, கடன் தேவை என்பதைக்கூட எடுத்துக் கூறிடுவது கூடாது என்ற அளவுக்கு ஆளவந்தார்களிடம் கட்டுப்பட்ட இதழ்கள், இந்திராகாந்தி, அம்மையார் சென்றது அமெரிக்காவின் நிலைமை என்ன? என்பதைக் கண்டறிய! உதவி செய்கிறேன்; கடன் தருகிறேன் என்று பேசுகிறதே அந்த நாடு, உண்மையில், கடன் தரக்கூடிய "வசதி' அந்த நாட்டுக்கு இருக்கிறதா, அல்லது வெறும்' வறட்டு ஜம்பம்' பேசுகிறதா என்பதைக் கண்டறியச் சென்றிருக் கிறார் என்ற கருத்துப்பட எழுதின ;

தூக்கிலே தொங்குபவன் கயிற்றின் வலிவு எப்படி இருக்கிறது என்று "பரீட்சை' பார்த்தான் என்பது போலவும்,

ஆற்றிலே விழுந்து மடிந்து போனவன் பிணம் மிதக்கும் என்ற தத்துவத்தை மெய்ப்பிக்கவே முற்பட்டான் என்பது போலவும்,

இது இருக்கிறதே என்று கேட்கத் தோன்றுகிறதா, தம்பி; கேட்டுவிடாதே! பெரிய இடத்தின் பொல்லாப்பு எதற்கு!

ஒரு பேச்சாளர் உச்சிக்கே சென்றுவிட்டார்; இந்தியா தனது நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதிலே, அமெரிக்க உதவி பெறாவிட்டால், எத்தனை விதமான சங்கடப்பட நேரிடும் என்பதை இந்திராகாந்தி அம்மையார் எடுத்துரைப்பார்கள் என்று "உண்மை'யைக் கூறுவதுகூட, எஜமானர்களுக்கு என்னமோ போலிருக்கும் என்ற எண்ணத்துடன் பேசினார்.

அமெரிக்க நாட்டுத் தலைவர் ஜான்சன் நமது பாரதப் பிரதமரிடம், இன்றைய நிலைமையில், வெளி நாடுகளுக்குக் கடன் தருவதிலே அமெரிக்காவுக்குள்ள சங்கடங்கள், சிக்கல்கள் ஆகியவைபற்றி விரிவாக, மனம் திறந்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

கவனித்தனையா, தம்பி! அமெரிக்கா தனக்கு உள்ள சங்கடங்கள் எற்றி, பேசுமாம்! இந்தியப் பிரதமர் சென்றிருப்பது, அதைக் கேட்டு ஆறுதல்கூற; கடன் கேட்க அல்ல!; இந்த அளவுக்கு "தங்க பஸ்பம்' சாப்பிட வேண்டி வந்து விட்டது.!

அமெரிக்கா வர விரும்புகிறேன்.

இப்போது வேண்டாம், செப்டம்பர் மாதம் வரலாம்!

லால்பகதூர் - ஜான்சன் பேச்சு இதுபோல அமைந்திருந்தது.

விரைவில் அமெரிக்கா வரவும்.

பாராளுமன்ற வேலைகள் முடிந்ததும், வர முடியும், வருகிறேன்.

இல்லை! இப்போதே வந்து போவது நல்லது.

சரி வருகிறேன். இப்படிக் கருத்துப் பரிமாறிக் கொள்ளப்பட்டது, பாரதப் பிரதம ருக்கும் அமெரிக்கத் தலைவருக்கும் இடையில் பாராளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே, அம்மையார் அமெரிக்கா சென்று திரும்பினார்! அழைப்பின் பேரில்தான்!!

ஒருவரை இப்போது வரவேண்டாம் என்று சொல்லவும், மற்றொருவரை உடனே வந்து போகவும் என்று அழைத்திடவும் அமெரிக்கத் தரைவரால் முடிந்திருக்கிறது.

நிபந்தனை கிடையாது கடன் தருவதில்!

ஆனால், வரவேண்டாம் என்ற கூறவும், வா! என்று அழைத்திடவுமான நிலை இருக்கிறது.

அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு!

நிபந்தனையா! எமக்கா! அத்தனை துணிவா? இணங்க நாங்கள் என்ன அடிமைப்பட்டவர்களா! என்று முழக்க மிட்டார்கள், தம்பி! மற்ற நிபந்தனைகள் யாவை என்ற ஆராய்ச்சி கூடப் பிறகு நடத்திடலாம்; முதலில் நிபந்தனையையே கவனித்தாயா?

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அழைக்கும் போதுதான், பாரதப் பிரதமர் போகலாம்!

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அழைக்கும் போது பேறு எந்த வேலை இருப்பினும், தள்ளிவைத்து விட்டுச் சென்றாக வேண்டும்!

இது நிலைமை! நிபந்தனை அல்ல!! எப்படி வேடிக்கை!!

இப்போது மீண்டும் நாடகத்தைப் படித்துப் பார்த்திடு தம்பி! என்ன சொல்கிறார், வட்டி வரதராஜன்.

வரசொல் ! உடனே வரச்சொல்!

கையோடு கூட்டிக் கொண்டு வா! .

கடன் கொடுத்தபோது, நான் வரக் சொன்னதும் வந்தாக வேண்டும் என்று ஏதேனும் நிபந்தனை உண்டா; இல்லை! ஆனால் நிலைமை? நிபந்தனையைத் தன்னாலே கொண்டு வந்து விடுகிறது!!

கடன் வாங்காமல் இருக்கவேண்டும் - இருக்க முடியும் என்பதை வலியுறுத்த அல்ல இதனை எழுதுவது.

கடனுக்கு மேல் கடன் என்று சுமையை அதிகமாக்கிக் கொண்டால், கடனைத் திருப்பிக் கட்டுவதற்கான வழிகள் அடைபட்டுக் கிடந்தால், நிலைமை எத்தனை மோசமாகிவிடும் என்பதை விளக்கத்தான்.

என்ன இது! போக்கிரித்தனமான கேள்விகள், சொத்து மதிப்பு! கடன் விவரம் இவைகளைப் பற்றி எல்லாமா கேட்பது, என்னை?

மங்களபுரி மைனர் (நாடகத்தில்) கொதித்திடக் கண்டனை அல்லவா! இதோ பார். தம்பி! கடன் கேட்கும் பாரத சர்க்காரிடம் அமெரிக்கா கேட்டிடும் தகவல்களை.

இன்னும் எத்தனை காலம் - கடன் வாங்கியபடி இருக்கப் போகிறீர்கள்?

இதுவரை வாங்கிய கடன் தொகையை எவ்விதம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

கடனைத் திருப்பித் தருவதற்குத் தேவைப்படும் வருவாய் பெற்றிட வழிகள் யாவை?

வருவாய் பெருகுவதுகூட இருக்கட்டும்; வயிற்றுச் சோற்றுக்கே வேதனைப்படுகிறீர்களே, ஏன் இந்த நிலைமை வந்தது?

விவசாயத் துறையிலே ஏன் போதுமான வளர்ச்சி பெறவில்லை?

அந்த வளர்ச்சியைக் கவனிக்காமல், தொழில்துறையில் ஏன் அகலக் கால் வைக்கிறீர்கள்?

தொழில் வளத்தைப் பெருக்கிட உதவி கேட்கிறீர்களே, ஏன் அந்தக் காரியத்தை உங்கள் நாட்டுத் தனியாரிடம்' (முதலாளிகள்) ஒப்படைக்கத் தயக்கம் காட்டுகிறீர்கள்?

தொழில் வளர, "முதல்' கேட்கிறீர்களே, ஏன் தொழில் துறையில் பல "கட்டுகள்', "தடைகள்' போட்டு, அன்னிய நாட்டு முதலாளிகளின் உற்சாகத்தைக் குறைத்தபடி இருக்கிறீர்கள்?

கடன் அதிகம்! வளம் குறைவு! வாட்டம் அதிகம்! இந்நிலையில் ஏன் பாகிஸ்தானுடன் பகை?

பாகிஸ்தானுடன் காஷ்மீர் பிரச்சினை பற்றி ஒரு சமரசம் செய்து கொள்ளாவிட்டால், இராணுச் செலவு அதிகமாகும், தாங்க முடியாது; தொழில் வளர வழி கிடைக்காது; இதை உணர்ந்து பாகிஸ்தானுடன் ஏன் சமாதானமாகிவிடக் கூடாது?

பாகிஸ்தானுடன் தகராறு இருக்கும்வரையில், தொழிலில் "மூலதனம்' போட அன்னிய முதலாளிகளுக்கு எப்படித் தைரியம் வர முடியும்?

விலைக்கட்டுப்பாடு, விநியோகக் கட்டுப்பாடு இலாப விகிதக் கட்டுப்பாடு போன்றவைகளை நீக்கினாலொழிய எப்படி அமெரிக்க "முதல்' இந்தியாவுக்குக் கிடைக்க முடியும்?

பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டாகச் சில தொழில் திட்டங்களை ஏன் செயல்படுத்தக்கூடாது?

தம்பி! சலிப்பாக இருக்கிறது முழுப்பட்டியலை விளக்கமாக்கிட.

இவ்விதமாகவெல்லாம் கேட்கிறது அமெரிக்க சர்க்கார் - கேள்விகள் என்று கூறாதே; கோபம் வருகிறது கோலேந்தி களுக்கும் அவர்தம் தாளேந்திகளுக்கும் - தகவல்களைக் கேட்கிறார்கள்;

ஏன்? கடன் கேட்கிறோமே! நாலாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு; ஏற்கனவே கடன் பட்டிருக்கிறோமே!

அதனால்!!

தம்பி!! இந்தத் தகவல்களை விளக்கியதும், அமெரிக்க சர்க்கார்.

விவசாயத்துறை
தொழில்துறை
வெளிவிவகாரத்துறை
நிர்வாகத்துறை

ஆகியவற்றிலே இந்தியப் பேரரசு என்னென்ன முறைகளைக் கையாளவேண்டும், திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்திட முற்படுகிறது.

மறந்து விட்டேனே, தம்பி! நிபந்தனை என்று கூறினால்தான் அவர்களுக்கு ஆத்திரமும் அழுகையும் வருகிறதே, நிபந்தனைகள் அல்ல;

அறிவுரை
ஆலோசனை
கருத்துரை
நட்புரை!

அம்மையாரிடம் "ஒட்டுமொத்தமாக'ப் பேசியாகிவிட்டது, இப்போது அசோக்மேத்தாவிடம், "புட்டுப் புட்டு'க் காட்டிப் பேசுகிறது அமெரிக்க அரசு! இது இன்றைய நிலைமை!

இப்போது மற்றோர் முறை படித்திடேன் தம்பி! நாடகத்தை; களிப்பு அல்ல, கண்ணீர் பொங்கும்.

அண்ணன்,

1-5-66