அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கண்ணொளி போதும். . .
1

உலக நிகழ்ச்சிகள் -
தி.மு.க. பற்றி மக்கள் ஆர்வம் -
கழகத்தவர் பணி.

தம்பி!

தமிழர் திருநாளில் மலர் அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல - அளவில், வகையில், எதிர் பாராதவை, ஏக்கமளிக்கத்தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்துகொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே.

அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார் - அரசோச்ச.

அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒரு புறம்.

மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தொடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர் புறம்.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி.

உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை.

இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம்.

இவையும், இவை போன்ற வேறுபல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.

க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கப் புரட்சிப்படை தயாராகி வரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி! - இவ்வண்ணம் பல பிரச்சினைகள் - பயமூட்டத்தக்க விதத்தில்.

எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை.

பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போக்கு.

தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரையோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைபட்டது.

பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நில வொளியில், காதல் வண்ணத்தையும், மொகலாய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எரிலுருவமாம் "தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசியின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார் - புலியினைக் கொன்றார், ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார்.

சிற்றரசர்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர் களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.

இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது.

கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்கு உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று.

புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு, ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ - பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை.

விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.

எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக் கொண்டிருந்தது.

வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர் - ஆனால், தமிழக மக்கள் இவை பற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை!

உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கறையுடன் பேசினாரில்லை.

பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கறையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை.

தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாகநாட்டு விடுதலை வீரனாம், பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அதுகுறித்த உரையாடலைக் காணோம்.

நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம்.

தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வான வெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப் பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர் - ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடை வீதியில் இதுதான் பேச்சு - கல்லூரிகளிலும் இஃதேதான்!

கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர்.

எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சி யத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர்; அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்! எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள முயற்சித்தனர் சிலர்.

என்னென்னமோ எண்ணிக் கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! - என்று வாட்டத்துடன் பேசினர் சிலர்.

ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் உறுதியுடனும் பேசினர் சிலர்.

உணர்ச்சி வயப்படப்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்ல தல்லவே என்று நல்லுரை கூறினார் சிலர்.

ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று. ஒரே ஒரு பிரச்சினை பற்றித்தான் கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக் கொள்ளப்பட்டது.

தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை - பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை - அகில உலகத் தொடர்பு கொண்ட பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!!

தி.மு. கழகத்திலே நெருக்கடி - நேசத் தொடர்புகளிலே முறிவுகள் - பாசத்தைப் பிய்த்தெரியத்தக்க பிளவுகள் - குழப்பம் - தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பதுதான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு.

நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி!

ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை.

மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சிகொண்டிட வைக்கும் மனமாச்சரியம்.

உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள்.

பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர்.

கேரளத்தில், காங்கிரஸ் - பிரஜா சோμயலிஸ்ட் கூட்டுக்கு வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள்.

வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை, காங்கிரஸ் முகாமில்.

இவைகைளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை. ஆனால் தி.மு. கழகத்திலே பிளவு - நெருக்கடி - குழப்பம் - என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கறையுடன் பேசிக் கொண்டனர்.

தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே. நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக் கொண்டிருந்ததே. அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப்பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும்.

நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும், பொதுமக்களால் மிகமிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொது மக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர்.

கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமை களையே, பாதிக்கத்தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது.

கழகத்தார், கழகத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம்.

கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துச் செய்திட வேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள் - நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், தொடர்புகொண்டு, சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.

கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப் பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம்.

கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக் குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது.

கழகம், விடுதலைப் போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபுகாத்திடும் மன்றமாகி, நம் நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத் தரவேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாகவேண்டு மென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது.

எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம் கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணர்ந்தோர் குமுறுகின்றனர்.

நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப் பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா?

விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சி கண்டு, எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனையோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்துபட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர். ஆமல்லவா?

பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது, பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும். நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.

நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிட வில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர்.

கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளர வேண்டும்; அதன் மூலமாக நமது நலிவுகள் போக்கப்பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர், என்வேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர்.

உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும், வலிவு இழப்பதும், அதைப் புகலிட மாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப் படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொது மக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை.

கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்றுத் திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப.

அதுபோலவே, விவரமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபடவேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக் கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக் கொண்டிருக்கும், புலியென்றாகிவிட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், "நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு "அறை கூவல்' ஆகி நிற்கிறது.

அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத்தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்துவிடவில்லை. கட்கமேந்திப் போரிடு வோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய கதையொன்றுண்டு. அதுபோல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று காங்கிரசிடம் உள்ள சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்தித் தீரவேண்டிய நிலைமை!!

இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம் - என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவோ, விருதுபெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர் களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம்.