அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கண்ணொளி போதும். . .
2

திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக் காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்து கொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்! மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடுவிட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசைவாணர்கள், காங்கிரஸ் நாமாவளி பாடி, புகழ் தேடினர். நாடகமேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக் காட்சிகள் பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது "சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத் திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமே, கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது, நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்.

பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப் பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல. நாட்டிலே, பெரிய இதழ்கள், பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்பு கொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக் கழகத்தின் செய்தியைக் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர், நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர்.

நமக்கு? இயக்கத் தொண்டர்கள் - கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசை வாணர்கள், நமது இயக்கப்பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்து வைத்துக்கொண்டால்தான், "கச்சேரி களைகட்டும்' என்ற நிலைமை!!

நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள், வேடமணியும் போது "வெல்வெட்' - மற்ற நேரங்களில் கதர்! அதுதான் "பாணி!!' இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள். நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர்.

இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இது போதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம்கொண்ட தாலுமல்ல; இத்துணை மாறுதல். வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட. அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா, என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால்தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு. கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்! - என்று. அது தன்னாலே அழிகிறது, ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக் கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார். அந்தவிதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும், இப்படியொரு வாதம் புரிய!

நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமை களால் பேதத் தலைதூக்கி நிற்கவேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள்பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல.

ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர், இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்ப வில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாத குழந்தை படுத்துறங்கு கையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா? அஃதே போல. நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைபற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? முண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது.

மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால், மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக் கொள்ள வேண்டும் என்று கூற மாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும் போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது - முறைக் கேடு ஏற்படக் கூடாது - கட்டுக்கோப்பு உடைபடக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக் கூடாது.

இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது.

ஒன்று மட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்கவிதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக்குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர். வேழம் சந்தனமரத்தின்மீது உராய்ந்து கொள்ளுமாம் - புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம் - முழக்கமிட்டபடி.

முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர்.

முறைபற்றிக் கருத்துவேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான்.

தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய்.

மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி - அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு, நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெற வில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர் களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர் - அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது - அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை.

மங்கிப் போய்விட்டதாலே மறைந்துபோய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர் - எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர் விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள். கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல. வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர்.

இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்கு தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள், நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக்கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைக்கேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக்கூடும். ஆனால், அழைப்பு வந்திடும்போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள், உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள்.

அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது.

கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம்.

கிளர்ச்சிகளில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி தம்பி! பார்ப்போர் பரவசப்படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது. ஆமாம், தம்பி இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம், தொல்லைகளைத் தாங்கிக்கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைக்கிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறு தேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும்.

ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட, அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக்கூட உண்டாக்கிவிடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில் துடைத்திட வேண்டும் - ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம் பாளமாகக் கீழே வீழ்ந்துவிடும், பாழ் பட்டுப் போகும் - பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும்.

தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதே யன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலை கொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக - எனவே, அமைப்பு அழிந்துவிடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான அறுவைத்திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக் கூடாதல்லவா? வேலின் கூர்பார்க்க, நம் விழியினையே குத்திக்கொள்ளப் போமோ!!

உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தால் கிடைத்தது, கழகம் எனும் இந்த அமைப்பு. இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது - என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல அமைப்பு - கடினமான உழைப்பின் விளைவு - தோழமைக்கு ஓர் எடுத்துக்காட்டு - தி.மு. கழகம்.

இன்றோ. மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர் - உற்றார் உள்ளம் குமுறுகின்றனர் - உடைபட்டுப் போய்விடும் என்று மிரட்டுகின்றனர், நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும், ஐயப்பாட்டினையும் நீக்கிடத் தக்கவிதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர் கூடக் "கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது' என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி. கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்கா மலிராது; ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம். அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம், தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புது உறுதி பெறுவதே, நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே!

உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும். உன் போக்கும் நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு, திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப் போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால். தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணிபோக்கும், மாமருந்து. அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது.

அண்ணன்,

12-2-61