அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கருப்பு மல்லி
1

உள்ளத்தில் தோன்றுவதை ஒளிக்காமல் பேசுபவர் அன்பழகன்!
மலையைக் கெல்லி எலி பிடித்த கதை!
மயக்க மருந்தில் பழையது, சுயராஜ்யம் புதியது, ஜனநாயக சோஷியலிசம்!
சைவ ஓட்டலிலே கோழிப் பிரியாணி தயாராம்!
காங்கிரஸ் சோஷியலிசத்தில் முதலாளிகளும் உண்டாம் !
அதிகார போதை தெளியக் காத்திருக்கிறார்கள் மக்கள்!

தம்பி!

நள்ளிரவு ஆகிவிட்டதே, இப்போதாகிலும் எழுதப் போகலாமா என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் பேச்சின் சுவை என்னை மேலும் பேசவைத்துவிட்டது; மணி இப்போது இரண்டு; இதுவரை என்னோடு பேசிக்கொண்டிருந்த அன்பழகன் இப்போதுதான் வீடு சென்றார், நான் எழுத உட்கார்ந்தேன். வேலூர் மாநாட்டுச் சிறப்பு குறித்து அடுத்து நடைபெற இருக்கும் சிவகெங்கை மாநாடு, கள்ளக்குறிச்சி மாநாடு, பொள்ளாச்சி மாநாடு ஆகியவைகள் குறித்தும் பேசத் தொடங்கிக் கழக வரலாறு, வளர்ச்சி, எதிர்காலம், அரசியலில் உருவாகிக்கொண்டு வரும் சூழ்நிலைகள் நிலைகள் ஆகிய பல பற்றிப் பேசினோம். உள்ளத்திலே தோன்றுவதை ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர் அன்பழகன். அவரிடம் கழகப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதிலே எனக்குத் தனியான விருப்பம் உண்டு; ஆகவே நேரம் ஓடுவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டேன்; பேசப் பொருள் நிரம்ப இருக்கிறது, நேரம்தான் இல்லை. அவரிடம் பேசுவது மட்டுமல்ல, தம்பி! நாட்டு மக்களிடம் நாம் பேசுவதற்கு உள்ள பிரச்சினைகள் நிரம்ப உள்ளன; போதுமான நேரம் இல்லை. காலம் கடுவேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது; செய்து முடிக்கவேண்டிய காரியங்களோ அளவிலும் வகையிலும் அதிகமாகிக்கொண்டே உள்ளன. என்ன செய்வது! அமைச்சர்களைப்போலவோ காங்கிரசின் பெருந்தலைவர்களைப் போலவோ,

ஆமாம், அப்படித்தான்!
அதனால் என்ன?
ஆகட்டும் பார்க்கலாம்!!

என்று பேசிவிட முடிகிறதா? ஒவ்வொரு பிரச்சினைக்கும் விளக்கம் - கேட்போர் ஒப்புக்கொள்ளத்தக்க விதமான விளக்கம் - தரவேண்டி இருக்கிறது. பிரச்சினைகளோ சிக்கல் மிக்கனவாகி விட்டுள்ளன; பொது மக்களுக்கோ அவைகளை ஆராய்ந்து கொண்டிருக்கப் போதுமான நேரமோ மன அமைதியோ கிடைப்பதில்லை. வாழ்க்கையின் சுமை அவ்வளவு அழுத்துகிறது; அல்லல்கள் அவர்களுக்கு அடுக்கடுக்காக.

ஆளுங்கட்சியினரோ பல பிரச்சினைகள் சிக்கலாகி விட்டிருக்கின்றன என்று தெரிந்தும், துளிகூடத் திகைப்புக் கொள்ளாமல், எல்லாம் தன்னாலே சரியாகிவிடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சினைகள் உள்ளன என்று ஒப்புக்கொள்வதற்கேகூட அவர்களுக்கு மனம் வருவதில்லை; மறைக்கப்பட முடியாத விதமாகப் பிரச்சினைகள் அழுத்த ஆரம்பித்த பிறகுதான், பிரச்சினை இருப்பதாகவே ஒப்புக்கொள்கிறார்கள். ஒப்புக் கொண்ட பிறகாகிலும், தக்க பரிகாரம் தேட முற்படுகின்றனரா என்றால், இல்லை! அப்படித்தான் இருக்கும் என்று கூறிக் கொண்டே காலத்தை ஓட்டப் பார்க்கிறார்கள்; பிறகு என்ன பரிகாரம் தேடலாம் என்பதுபற்றி ஆராய ஒரு கமிட்டி அமைக்கிறார்கள்; பிறகு கமிட்டியின் கருத்துபற்றி விவாதிக் கிறார்கள்; பிறகு பரிகாரத்துக்கான முறைபற்றி அறிவிப்பு அளிக்கிறார்கள்! செயல்படத் தொடங்குவதோ மிகுந்த காலதாமதத்துக்குப் பிறகு; செயல் மூலம் கிடைத்திடும் பலனோ மலையைக் கெல்லி எலி பிடித்த கதை கூறுவார்களே அதுபோல! ஏன் இந்த அலட்சியப் போக்கு ஏற்படுகிறது என்றால்,

அல்லலைத் தாங்கிப் பொறுத்துக்கொண்ட மக்கள், மேலும் சில காலம் அல்லலைத் தாங்கிக்கொள்வார்கள்.

தாங்க முடியாத அளவுக்கு அல்லல் வளர்ந்தாலும் மக்கள் சீறி எழமாட்டார்கள்.

சீறி எழுந்திடினும் அவர்களை அடக்கி ஒடுக்கிட நம்மிடம் அடக்குமுறை இருக்கிறது.

அடக்குமுறை ஆட்சியை மாற்றிடத்தக்க ஆற்றல் நாட்டிலே எழவில்லை

என்ற இந்த எண்ணம் ஆட்சியினருக்குத் தடித்துவிட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் மக்களைப்பற்றிய கவலையற்று இருக்கின்றனர்.

ஜனநாயகத்திலே இந்த நிலை வளர்ந்துவிடுவது பேராபத்தை மூட்டிவிடும்.

வளைக்க முடியாதது பிறகோர் நாள் முறிக்கப்பட்டுப் போகும் என்பதுபோல, ஆட்சியைத் திருத்த இயலாமல் போய்விடுமானால், சட்டம், சமாதானம், ஒழுங்கு, அமைதி ஆகியவைகள் அழியினும் சரி, பரிகாரம் தேடித் தீரவேண்டும் என்ற ஆத்திர உணர்ச்சி மேலோங்கும்.

அந்த நிலை சமூகத்தின் கட்டுக்கோப்பையே கூடக் கெடுத்துவிடும்.

மக்களை வாழவைப்பதிலே வெற்றிபெறத் தவறிவிடும் துரைத்தனத்தை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ள பொது மக்கள், அறிவாற்றலுடன் பணியாற்றி ஆட்சியை மாற்றிட முனையவேண்டுமேயன்றி, நம்மால் ஆகுமா என்று நெடுங்காலம் பெருமூச்செறிந்து கொண்டிருந்துவிட்டு, பிறகோர் நாள் எரிமலையாகி விடுகிற போக்கு கூடாது.

இவ்விதமான போக்கு எழும் என்று, அந்தப் போக்கு வெடித்துக் கிளம்புகிற வரையில், எந்தக் கொடுங்கோலரும் எதிர்பார்ப்பதில்லை; யாரேனும் துணிந்து எச்சரித்தாலும் ஏளனம் செய்வர்; நம்பிட மாட்டார்கள்.

ஊமைகளா இத்தனை முழக்கம் எழுப்புகிறார்கள்!

அடங்கிக் கிடந்தவர்களா இத்தனை ஆர்ப்பரிப்புச் செய்கின்றனர்!

சவுக்கடிக்கு நடுங்கிக்கொண்டிருந்தவர்களா இன்று துப்பாக்கிக்கு மார் காட்டுகின்றனர்!

அடிபணிந்து கிடந்தவர்களா இன்று முடிபறிப்பேன் என்று கூவுகின்றனர்!

என்று வியந்துதான் கொடுங்கோலர் கேட்டனர், ஒவ்வொரு புரட்சி வெடித்தபோதும்; இப்படித்தான் நடக்கும் என்று முன்பே தெரியும் என்று எந்தக் கொடுங்கோலனும் கூறினதில்லை.

முடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காரணமாக இருந்து வந்தது குருட்டுப் போக்கு.

குடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காட்ட இயலுவதில்லை; முறை மாறியிருக்கிறது. நெறித்த புருவம் அல்ல! புன்னகை! பாகுமொழி! இவைகளைக் கருவியாக்கிக் கொண்டு மக்களை மயக்கிக் கட்டுப்படுத்துவதிலே முனைகின்றனர்.

முரட்டுப் போக்குடன் முடி தரித்தோன் நடந்து கொண்டால், பல கொடுமைகளைத் தாங்கித் தவித்த மக்களிடமிருந்து ஓர் நாள், எதற்கும் அஞ்சாத ஒரு வீரன் எழுவான்! கொடுங்கோலன் வீழ்வான், இடையே இரத்தம்! தீ! பலி! நிறைய!

மக்களைத் தமது புன்னகையாலும் பாகுமொழியாலும் மயக்கிடும் போக்கிலே குடியாட்சிக் கோமான்கள் நடந்திடும் போது, எதிர்ப்பு உணர்ச்சி மங்கிடுவது இயல்பு. இந்த இயல்பு காரணமாகவே, அல்லல் பல தொடர்ந்து கிளம்பித் தாக்கியும், மக்கள், இந்தக் கொடுமைகளை மூட்டிவிட்ட ஆட்சியினருக்கு எதிராகப் பொங்கி எழ முடியாதவர்களாகின்றனர்.

இதனைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, ஆளவந்தார்கள் தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் தம்பி! மெள்ள மெள்ள அந்த மயக்கம் நீங்கிக்கொண்டு வருகிறது; தெளிவும் துணிவும் மிகுதியாகிக்கொண்டு வருகிறது - இனி நீண்ட நாட்களுக்கு மக்களை மயக்கிக்கொண்டிருக்க முடியாது பழைய பேச்சினால் என்று கண்டுகொண்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது புதிய மயக்கம் தரும் பானத்தைத் தயாரித்துத் தருகின்றனர்; இந்த மயக்க மருந்து இன்னும் சில காலம் வேலை செய்யும் என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றனர். அந்த மயக்க மருந்துதான், தம்பி, இப்போது இவர்கள் வெகு வேகமாகப் பேசிக்கொண்டிருக்கும் ஜனநாயக சோஷியலிசம் என்பது.

பழைய மயக்க மருந்து வேலை செய்வதில்லை முன்பு போல!

"சுயராஜ்யம்' என்ற சொல் காதில் பாய்ந்ததும் காதில் தேன் வந்து பாய்ந்திடும் நிலை முன்பு!

சுயராஜ்யம் வருகிறது! என்று அறிவித்ததும் பொது மக்கள் கண் முன்பு, அவர்கள் மனத்திலே இருந்துவந்த ஆசைகள் அவ்வளவும் வடிவம்கொண்டு நின்றன!

சுயராஜ்யம் வருகிறது, இனி வறுமை இல்லை, வாட்டம் இல்லை, வரிக் கொடுமை இல்லை; உண்ண உணவு, உடுக்க உடை, குடி இருக்க வீடு, செய்யத் தொழில், தொழிலில் நீதி, நிம்மதி எல்லாம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர்.

அத்தகைய ஒரு இன்ப வாழ்க்கையைப் பெற்றுத் தந்திடுவோர் காட்டிடும் பாதை நடந்திடுவோம், கேட்டிடுவதைத் தட்டாமல் தயங்காமல் கொடுத்திடுவோம் என்று சூளுரைத்தனர், செயல்பட்டனர்.

சுயராஜ்யம் வந்தது! கொட்டு முழக்குடன் கோலாகல விழாவுடன்! கொடி பறந்தது, பட்டொளி வீசி! கூனன் நிமிருவான்! குருடன் பார்வை பெறுவான்! என்றனர் குதூகலத்துடன். ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்பதாகக் கவிதைகள் இசைக்கப்பட்டன! ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது, மனக் கண் முன்பு. ஆனால் நாட்கள் உருண்டோடின, ஆண்டுகள் புரண்டோடின, ஆசைக் கனவுகள் நிறைவேறவில்லை. அல்லல் அகலவில்லை, தொல்லை தொடர்ந்தது; சுயராஜ்யம் என்றால் சுகராஜ்யம் என்று எண்ணிக்கொண்டிருந்தோமே, ஒரு சுகத்தையும் காணவில்லையே, கண்ணீர் விட்டா வளர்த்தோம்- செந்நீர் விட்டல்லவா வளர்த்தோம் சுதந்திரத்தை. நமக்கு ஒரு பயனும் கிடைக்கக் காணோமே என்று ஏக்கப்பட்டனர் மக்கள்.

ஆனால் இதுதானா ஐயா! சுயராஜ்யம்! என்று கேட்கக் கூச்சம்!! அச்சம்!!

ஒரு நூற்றாண்டாக உம்மைக் கப்பிக்கொண்டிருந்த அவதிகள், சுயராஜ்யம் கிடைத்த மறுநாளேவா ஓடிவிடும்! காலம் வேண்டும் நண்பர்களே! காலம் வேண்டும்! வேலையைத் தொடங்கி விட்டோம், விரைவிலே பலனைக் காணப்போகிறீர்கள். அதற்குள் அவசரப்படாதீர்கள் என்று அன்று தலைவர்கள் சொல்லக் கேட்ட மக்கள், "ஆமாம்! அவசரப்படக் கூடாது!!'' என்று கூறினர்; பொறுத்துக்கொண்டனர்; எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

ஆனால் ஆண்டுகள் பதினெட்டுக்கு மேலாகிவிட்ட பிறகும் எதிர்பார்த்த இன்ப வாழ்வு கிடைக்காமல் போனதையும், அதேபோது ஒரு சில செல்வந்தர்களுக்கும், ஆளுங்கட்சியின் ஆலவட்டங்களுக்கும் இன்ப வாழ்வு கிடைத்திருப்பதையும் கண்ட மக்கள், வெகுண்டு எழுந்து, இதற்குப் பெயர்தான் சுயராஜ்யமா! என்று முழக்கமிடலாயினர்! சுயராஜ்யம் என்ற சொல்லால் மயக்கினீர்கள் - கண்டுகொண்டோம்; மயக்கத்தின் பிடியிலிருந்து இதோ விடுபட்டோம்; காட்டு கணக்கினை! என்று மக்கள் கேட்டிடலாயினர். ஓ! ஓ! பழைய மயக்க மருந்து போதுமானதாக இல்லை; புதிதாக ஒன்று தந்தாக வேண்டும் என்பதனை அறிந்த தந்திரத் தலைவர்கள், ஜனநாயக சோஷியலிசம் என்ற சுவையினையே மயக்க மருந்து ஆக்கித் தர முயன்றுகொண்டிருக்கின்றனர்.

நாளைக்கு ஒரு சூரணம் தருகிறேன், அதனைத் தேனிலே குழைத்து மூன்றே வேளை சாப்பிடு, நோய் கட்டாயம் பறந்து போகும் - என்று மருத்துவர் சொல்லும்போது, இவ்வளவு நாள் இவர் கொடுத்த மருந்து துளியும் பயன் தரவில்லையே; ஒவ்வொரு வகையான மருந்து தருகிறபோதும் இதுபோலத் தானே இவர் கூறினார் என்ற எண்ணம் எளிதிலே ஏற்பட்டு விடுவதில்லை. இந்த மருந்தாவது வேலை செய்கிறதா பார்க்கலாம்! மருத்துவர்தான் இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லுகிறாரே, இதைச் சாப்பிட்டுப் பார்ப்போம் என்றுதான் எண்ணம் கொள்ளச் செய்கிறது- மனித இயல்பு! அதிலும் நம்முடைய நாட்டு மக்களின் இயல்புபற்றிக் கூறிடவா வேண்டும்!!

இதிலாவது பலன் கிடைக்கிறதா பார்க்கலாம், இவரா லாவது நலன் கிடைக்கிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கிடந்திடும் போக்கு மிகுதியாக. அந்த இயல்பைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி தமது சொல்லை மாற்றிக் கொண்டு வருவதிலே வல்லவர்கள், நம்மை ஆண்டு கொண்டுள்ளவர்கள்.

நாம் தம்பி! மக்களின் அந்த இயல்பையும் மாற்றவேண்டி இருக்கிறது; ஆளவந்தார்களின் போக்கையும் திருத்தவேண்டி இருக்கிறது.

துவக்கத்திலே இது குறித்து அக்கறை காட்டாமலிருந்து வந்த மக்கள் இப்போது நாம் எடுத்துச் சொல்வதைக் கேட்டுத் தெளிவு தேடிக்கொள்வதிலும், அதன் காரணமாகத் தமது இயல்பை மாற்றிக்கொள்வதிலும் முனைந்து நிற்கின்றனர். இதனை நாம் பொதுக் கூட்டங்களில் காணுகின்றோம்.

மாநாடுகளிலே இதனை மிக விளக்கமாகக் காணுகின்றோம். வேலூர் மாநாட்டிலே, மக்கள் காட்டிய இந்த அக்கறை குறித்து நான் அன்பழகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவர் தந்த விளக்க உரைக்காகப் பாராட்டினேன். அன்று அவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜனநாயக சோஷியலிசம் பேசுகிறது இந்தக் காங்கிரஸ் ஆட்சி; ஆனால் அதனுடைய செய-லே ஜனநாயகமும் இல்லை, சோஷியலிசமும் காணோம் என்பதற்கான விளக்கத்தை அவர் மிகத் தெளிவாகத் தந்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் வளருவது கண்டாலே எறிந்து விழும் போக்கும், ஆங்கு உள்ளவர்களை வலைவீசிப் பிடிக்கும் போக்கும் ஜனநாயகமாகுமா?

நாட்டை ஆளும் தகுதியும் திறமையும் தமக்கன்றி பிறர் எவருக்கும் இல்லை என்று பேசிடும் அகம்பாவம் ஜனநாயகமாகுமா?

மன்னன் மகேசன் பிரதிநிதி! அரசன் ஆண்டவனுக்குத்தான் பதில் கூறவேண்டியவன்; மக்களுக்கு அல்ல! மன்னன் செய்திடும் காரியம் கொடுமை உள்ளதாயினும் எதிர்த்திடலாகாது; முறையிட்டுக்கொள்ளலாம்; கடவுளை வேண்டிக்கொள்ளலாம் - என்ற தத்துவத்தின்மீது பலப்பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டு, கெட்டிப்படுத்தப்பட்டிருந்த முடியாட்சி முறையை உடைத்தெறியுமுன்பு பல ஆயிரவரின் மண்டைகள் பிளந்தெறியப் பட்டன! எவ்வளவோ இரத்தத்தைக் குடித்துக் கொக்கரித்து, பிறகே குடியாட்சி முறை மலர்ந்தது.

முடியாட்சியிலே நெளிந்துகொண்டிருந்த கருத்து மெள்ள மெள்ளக் குடியாட்சியிலும் தலைகாட்டுகிறது என்றுதானே கூறவேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள், தாங்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்று ஆணவம் கக்கும்போது! அந்தப் போக்கு ஜனநாயகமாகுமா?

அத்தகைய போக்கினை மேற்கொண்டுவிட்டவர்கள், ஜனநாயகப் பாதுகாவலர்கள் என்று வேறு தங்களைக் கூறிக் கொள்கின்றனர்.

மக்களின் ஆதரவினைப் பெற்றிடும் வாய்ப்புப் பெற்ற எவரும் நாடாளும் தகுதி பெறுகின்றனர்; மக்களின் நல் வாழ்வுக்கான முறையிலே ஆட்சி நடத்திடும் எவரும், மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற்றிடும் தகுதியைத் தேடிக்கொள்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியாளர்களோ, நாட்டிலே வேறு யாருக்குமே நாடாளும் தகுதி இல்லை என்ற அகம்பாவம் பேசி, நாட்டை ஆண்டுகொண்டு வருகின்றனர் தொடர்ந்து.

உள்ளபடி, எவர் ஆட்சி நடத்தினாலும் அவர்களின் திறமையால் கிடைத்திடும் பலனைக் காட்டிலும் மிகுதியான பலன் கிடைத்திடத்தக்க முறையிலே ஆட்சி நடத்திட மற்றொரு கட்சியினர் வாய்ப்புப் பெற்று, பழைய ஆட்சியுடன் புதிய ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தால் மட்டுமே, நாடாளும் தகுதி உள்ளவர்கள் எவர் என்பது பற்றிய உண்மையான மதிப்பீடு கிடைத்திட முடியும்.

ஓட்டப் பந்தயத்தில் ஒன்பது பேர் கலந்து கொண்டால்தான், யார் அதிக வேகமாக ஓடுகிறார்கள் என்று கண்டறிந்து பரிசளிக்க முடியும். பந்தய மைதானத்திலே நுழையும் தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று கூறிக் கொண்டு ஒரே ஆசாமி திடலில் ஓடுகிறான் என்றால், கேலிக்கூத்தாக அல்லவா கருதிடுவர்?

ஆனால் அத்தகைய முறையைத்தான் காங்கிரஸ் ஆட்சியினர், ஜனநாயகம் என்று கொண்டுள்ளனர். அது ஜனநாயகம் ஆகாது. மக்கள் இதனை அறிந்துகொண்டதால்தான், எதிர்க்கட்சிகளின் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.