அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கருப்பு மல்லி
2

ஆகவே மக்களை மறுபடியும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்தித் தமது பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும், கேட்பதற்கு இனிப்பாக இருக்கும் "சோஷியலிசம்'பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலே அவர்கள் எவ்வளவு நாணயத்தோடு உள்ளனர் என்பதும், அதனைச் செயல்படுத்த எந்த முறைகளைக் கடைப் பிடிக்கிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும்.

அந்த சோஷியலிசத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் தகுதி, தமக்கன்றி மற்ற எந்தக் கட்சிக்கும் இல்லை என்று கூறும் உரிமை இவர்களுக்கு யார் அளித்தது? என்ன காரணம் காட்டி இவர்கள் அந்த உரிமை தமக்கே இருப்பதாகக் கூறுகிறார்கள்.

நம்முடைய பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொள்கின்ற மக்கள் யார்? மேடையிலே அமர்ந்திருக்கிற கழக முன்னணியினர் எவரெவர்? மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் யார்? சட்ட மன்றம், பாராளுமன்றம் ஆகிய இடங்களில் உறுப்பினராகியுள்ள கழகத் தோழர்கள் எப்படிப் பட்டவர்? மிட்டா மிராசுகளா? எட்டயபுரம், போடி ஜெமீன் வழிவந்தவர்களா? பெரும் பண்ணைக்குச் சொந்தக்காரர்களா? நம்மிடம் தீராத பகை கொண்டவனும் அவ்விதம் கூறிட மாட்டானே! காமராஜரே ஒரு முறை கழகத்தில் உள்ளவர்களைப் பிச்சைக்காரர்கள்! - என்றே கேலி பேசியிருக்கிறாரே.

இவர்களைக் கொண்டதும் இப்படிப்பட்டவர்களால் நடத்தப்பட்டு வருவதுமான திராவிட முன்னேற்றக் கழகம் சோஷியலிசத்தைச் செயல்படுத்தாதா?

சோஷியலிசம் வேண்டும்! ஒப்புக்கொள்கிறோம், வரவேற்கிறோம்! ஆனால் அதனைச் செயல்படுத்தும் திறமையும், உரிமையும், கழகம் போன்ற மற்றக் கட்சிகளுக்கு இல்லை, எமக்குத்தான் உண்டு என்று கூறிக்கொள்ளக் காங்கிரசுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

சோஷியலிசத்தைச் செயல்படுத்திக் கொடுத்திடத் தக்கவர்களாலா காங்கிரஸ் நடத்தப்பட்டு வருகிறது? ஊரூருக்கும் அந்தக் கட்சியிலே உள்ள மூலவர்கள் எப்படிப்பட்ட பெரிய புள்ளிகள் என்பது மக்களுக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட பெரிய புள்ளிகளின் ஆதிக்கம் காரணமாகத்தான், ஏழைகளின் தொகை பெருகியிருக்கிறது, அவர்களின் அல்லல் - வளர்ந்து விட்டிருக்கிறது என்பதனை மக்கள் அறியமாட்டார்களா? அதே பேர்வழிகளின் பிடியிலே உள்ள காங்கிரசுக் கட்சியினால் எப்படி சோஷியலிசத்தைச் செயலாக்கிட முடியும்? - என்பது பற்றியெல்லாம் மக்கள் எண்ணிப் பார்க்காமலா இருக்கிறார்கள்?

சோஷியலிசம் பேசும் காமராஜர் பவனி வருகிற போதும் கொலுவீற்றிருக்கிறபோதும் சீமான்கள் பக்கம் நின்று பராக்குக் கூறுவதையும் மக்கள் பார்க்கத்தானே செய்கிறார்கள்!

கழகத்தை நடத்துகின்றவர்கள் வருகின்ற விழாக் களிலே, எந்தப் பெரிய புள்ளியும் கலந்துகொள்வதில்லை என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது, சோஷியலிசத்தை எம்மால்தான் செயல்படுத்த முடியும் என்று காங்கிரஸ் கட்சி பேசுவதை எப்படி மக்களாலே நம்ப முடியும்?

பணக்காரர்கள் புடைசூழப் பவனி வந்துகொண்டே பணக்கார ஆதிக்கத்தை ஒழிக்கப் போகிறோம் பாரீர்! ஆதரவு தாரீர் - என்று முழக்கம் எழுப்புகின்றனர் ஆளவந்தார்கள், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிக்கொள்கிறார்கள் என்ற நினைப்பில். ஆனால் மக்கள் அத்தனை தெளிவற்றவர்களாக இல்லை.

அவர்கள், காகிதப் பூவில் மணம் இருக்காது என்பதை அறியாதவர்கள் அல்லர்.

அதனை நன்கு அறிந்துகொண்டிருப்பதனால் தம்பி! நம்மிடம் அத்தனை பற்றும் பாசமும் காட்டுகின்றனர்.

புதிய மயக்க மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் காங்கிரசாரே இப்போது மெள்ள மெள்ள உணர்ந்துகொண்டு வருகின்றனர். "சுயராஜ்யம்' - என்று சொன்னபோது மக்களிடம் கிளம்பிய எழுச்சி இப்போது காணோமே என்று ஏக்கமடைந்து கொண்டு வருகின்றனர். திங்கள் தவறாமல் விழா நடத்து கிறார்கள்; ஜனநாயக சோஷியலிச விழாவாம்!

அவ்விதமான ஒரு விழாவுக்கான அறிவிப்பு, கொட்டை எழுத்துக்களிலே மாயவரம் சுவரிலே - எழுதிவைக்கப் பட்டிருந்ததைக் காண நேரிட்டது; என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு துணிந்து போலி நாடகமாடிடும் சாமர்த்தியம் கொண்டவர்களாகக் காங்கிரசார் இருக்கிறார்களே என்பதை எண்ணி வியப்படையாமலும் இருக்க முடியவில்லை.

ஜனநாயக சோஷியலிச விழா; தம்பி! மாயவரத்தில். யார் தலைமை?

தலைமை வகித்தவர், சக்தி விலாஸ் பஸ் கம்பெனி முதலாளி பார்த்தசாரதி என்பவர்.

நான் முதலில், யாரோ வேண்டுமென்றே சக்தி விலாஸ்காரரைக் கேலி செய்ய, இதுபோல எழுதி இருக்கிறார்களோ என்று எண்ணிக்கொண்டேன்; நண்பர்கள் சொன்னார்கள், அவர்தான் தலைவர், அறிவிப்பு அதிகாரபூர்வ மானதுதான் என்று.

இந்தப் போலி நாடகம் நடத்த, தம்பி! மெத்த நெஞ்சுரம் வேண்டும்.

கேட்டுப்பாரேன், இது எப்படி ஐயா பொருந்துகிறது? விழா சோஷியலிசத்துக்காக! தலைமை வகிப்பவரோ, பெரிய பஸ் முதலாளி! சோஷியலிசம் வெற்றி பெற அவரா வழி அறிந்து கூறுவார்? - என்று. ஒரு விளக்கம் வெடித்துக்கொண்டு கிளம்பும், எமது சோஷியலிசத்தில் முதலாளியும் உண்டு! - என்பதாக.

காங்கிரசார் கூறிடும் சோஷியலிசம் அப்படிப்பட்டது.

சைவ ஓட்டல் - கோழி பிரியாணி தயார்! - என்பது போன்றது!

சைவ ஓட்டல் என்கிறீர்களே, கோழி பிரியாணி அங்கு இருக்கலாமா என்றால், பதில் என்ன கூற முடியும்? கேட்டுப் பாருங்கள், காங்கிரஸ் பேச்சாளர்களை!

பைத்தியக்காரா! நாங்கள் நடத்தும் ஓட்டல் சைவ ஓட்டல். சந்தேகம் வேண்டாம்; உள்ளே வந்து பார், அவரைப் பொரியலும், கத்தரிக் கூட்டும், வெண்டைக் குழம்பும் இருப்பதை - என்பார்.

ஆனால் கோழி பிரியாணி தயார் என்று "போர்டு' இருக்கிறதே என்று கேட்டால், திகைத்துப் போய்விடுவாரா என்கிறீர்களா? திகைக்கமாட்டார்கள்; துணிச்சல் மிக்கவர்கள்!

ஆமாம்! கோழி பிரியாணியும் உண்டு! அதனால் என்ன? சைவ ஓட்டல் இது, ஆகவே சைவ பதார்த்தங்கள் உள்ளன. சைவ ஓட்டல் என்றால், வெண்டையும், கத்தரியும், அவரையும் பிற காய்களும் உண்டு என்றுதானே பொருள்; இருக்கின்றன! சைவ ஓட்டல் என்று அறிவித்திருப்பதாலேயே, இங்கு இறைச்சி இல்லை என்றா பொருள்? அப்படியா அறிவிப்புப் பலகை சொல்லுகிறது.

இங்கு ஆட்டு இறைச்சி, கோழிக்கறி போன்றவை கிடைக்காது.

என்றா எழுதியிருக்கிறோம். எமது ஓட்டல், சைவ ஓட்டல், - ஆனால் எமது சைவ ஓட்டலில் கோழிக்கறியும் இருக்கும் என்று கூறிவிட்டு, அடுத்த கூட்டத்திற்காக அவசரமாகக் கிளம்புவார். இடையிலே வேறோர் காரணம் மனத்திலே ததும்பும்; உடனே, திகைத்துப் போயுள்ள உன்னை இழுத்து நிறுத்தி, இன்னொரு காரணம் கூறுகிறேன் - இது சைவ ஓட்டல் என்பதை உறுதிப்படுத்த. முதலாளி இருக்கிறாரே, அவர் சுத்தச் சைவர், முட்டைகூடச் சாப்பிடமாட்டார், தெரியுமா? அவர் நடத்தும் கடையைச் சைவ ஓட்டல் என்று கூறுவது தவறா? - என்று கேட்டுவிட்டு - இன்று ஒரு போடு போட்டுவிட்டோம் என்ற திருப்தியுடன் நடையைக் கட்டுவார்!

தம்பி! கோழி பிரியாணி தயார்! என்ற அறிவிப்புடன், சைவ ஓட்டல் என்ற பலகையைத் தொங்கவிட்டு யாரும் கடை நடத்த இன்னும் துணியவில்லை.

காங்கிரஸ் கட்சியினரோ தனிப்பட்ட முதலாளிகளும் உண்டு எமது சோஷியலிசத்தில் என்று துணிச்சலுடன் கூறுகின்றனர்.

கோழி பிரியாணியும் வைத்துக்கொண்டு இந்த ஓட்டலுக்குச் சைவ ஓட்டல் என்று பெயரிடலாமா என்று கேட்டதும், கடை நடத்தும் முதலாளி சுத்தச் சைவர் - முட்டைகூடச் சாப்பிட மாட்டார் என்று கூறும் துணிச்சல்காரரைப்போல, முதலாளி களையும் வளர்த்துக்கொண்டு சோஷியலிசம் தழைக்கும் என்றும் பேசுவது பொருளற்றதாக இருக்கிறதே என்று கேட்பவர்களுக்கு, காமராஜரைக் காட்டுகிறார்கள்; பாருங்கள்! இவர் முதலாளி அல்ல! ஏழைப் பங்காளர்! - என்று.

ஆளுங் கட்சியில் இருக்கிறோம் என்பதாலே தன்னாலே ஒரு துணிச்சல் வந்துவிடுகிறது. அந்தத் துணிச்சலுடன் பேசு கிறார்கள்; இடம் பேசுகிறது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள், இவர்களிடம் வாதாடுவானேன் என்று இருந்துவிடுகிறார்கள்; ஒப்புக்கொண்டு அல்ல, நமக்கு ஏன் வீண் வம்பு என்ற எண்ணத்தில்.

ஆனால் தம்பி! அந்தத் துணிச்சல் மிக்க பேச்சுப் பேசிடும் திறனும், பாராட்டத்தக்கதுதானே! எல்லோருக்கும் வருமா பொய்யையும் பொருளற்றதையும் மளமளவென்று பேசிட?

ஒரு எத்தன், தம்பி! அவன் அலுவலகத்திலே சில காலம் "லீவ்' பெற எண்ணினான்; தனக்குக் கண் பார்வை சரியாக இல்லை என்று கூறினான்.

மருத்துவரிடம் அனுப்பினார்கள் பரிசோதனைக்கு.

டாக்டர், சுவரிலே அச்சடித்த எழுத்துக்கள் கொண்ட படத்தை மாட்டி, எழுத்துக்களைப் படி, ஐயா! என்றார்.

எந்த எழுத்துக்களைப் படிக்கச் சொல்லுகிறீர் டாக்டர் என்று கேட்டான் எத்தன்.

எதிர்ப்புறம் உள்ள சுவரிலே தொங்கவிடப்பட்டிருக்கும் படத்தில் உள்ள எழுத்துக்களை என்று விளக்கமளித்தார் டாக்டர்.

அவன்தான் ஏமாற்றித் தீருவது என்று துணிந்து வந்திருக்கிறானே, சிக்கிக்கொள்வானா?

சுவரா? எதிரே இருப்பது சுவரா! - என்று கேட்டான்; டாக்டர் ஏமாந்து போனார். ஆசாமிக்கு எதிரே வெள்ளைச் சுவர் இருப்பதும், அதிலே படம் தொங்கவிடப்பட்டிருப்பதும்கூடத் தெரியவில்லை; பாவம் கண் அந்த அளவுக்குப் பழுதாகி விட்டிருக்கிறது என்று பரிதாபப்பட்டு, கண் மிகவும் கெட்டு விட்டிருக்கிறது என்று எழுதிக் கொடுத்தார்.

ஒரு மணி நேரம் ஓடிற்று. தன் நடிப்பால் டாக்டரை ஏய்த்து விட்டவன், புதிய படம் ஒன்று கண்டு களித்திட சினிமாக் கொட்டகை சென்று அமர்ந்தான்; படம் துவக்கப்படவில்லை; இசைவிருந்து மட்டும் நடைபெற்றுக்கொண்டிருந்தது; அந்த நேரத்தில் அவனைத் தூக்கி வாரிப் போடத்தக்க நிகழ்ச்சி நேரிட்டது. எந்த டாக்டரை தனக்கு அடியோடு பார்வை கெட்டுவிட்டது என்று நம்ப வைத்தானோ, நடிப்பால், அதே டாக்டர், படம் பார்க்க, அதே கொட்டகைக்கு வந்து, பக்கத்திலேயே வந்து அமர்ந்தார்!

ஒரு கணம் அவன் திடுக்கிட்டுப் போனான், தன் குட்டு உடைபட்டுவிடுமே என்று எண்ணி; மறு கணம் சமாளித்துக் கொண்டு, தன்னைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்த டாக்டரின் பக்கத் திரும்பி, "அம்மா, இந்த பஸ் புறப்பட இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான்.

கண் அடியோடு பழுதாகிப் போய்விட்டதால், சினிமாக் கொட்டகையை மோட்டார் பஸ் என்று தவறாக எண்ணிக் கொண்டுவிட்டான் பாவம் என்று டாக்டர் எண்ணிக் கொள்ளுவார் என்று தந்திரம் செய்தான்.

டாக்டர் ஏமாந்து போனார்; பரிதாபம் கலந்த குரலிலே அவர் பேசினார், "யாரப்பா, உன்னை ஏமாற்றி இங்கே கொண்டுவந்து உட்கார வைத்துவிட்டார்கள்? இது மோட்டார் பஸ் அல்ல! இது ஒரு சினிமா கொட்டகை! - வா! உன்னை நான் மோட்டார் பஸ் இருக்குமிடம் அழைத்துச் செல்கிறேன்; நான்தான் உன் கண்களைப் பரிசோதித்த டாக்டர்!'' என்று.

"டாக்டர்! டாக்டர்! பார்த்தீர்களா டாக்டர், உலகம் எவ்வளவு பொல்லாதது என்பதை. அப்பா! எனக்குக் கண் சரியாக இல்லை; மெள்ள என்னை மோட்டார் பஸ் இருக்குமிடம் அழைத்துக்கொண்டு போய்விடு'' என்று கேட்டேன் ஒருவனை. அவன் "வா! ஐயா! உன்னை மோட்டார் பஸ்ஸிலேயே உட்கார வைத்துவிட்டு வருகிறேன்!'' என்று அன்பாகப் பேசி, இங்கு அழைத்துவந்து உட்கார வைத்துவிட்டுப் போய்விட்டான். நான் என்னடா இன்னும் பஸ் புறப்படவில்லையே, நேரம் ஆகிறதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்; "நல்ல வேளை, நீங்கள் வந்தீர்கள்; மிக்க நன்றி!'' என்றான்; டாக்டர் உருகிப் போனார்.

இந்தக் கதையிலே வருகிறானே குருடனாக நடித்தவன், அவன் ஒரு மண்டலம் பாடம் கேட்க வேண்டும் தம்பி! காங்கிரஸ் பேச்சாளர்களிடம். அவ்வளவு துணிவுடன் போலி நாடகத்தைத் திறமையாக நடத்துகின்றனர்; முதலாளிகளையும் கொண்டுள்ளது எமது சோஷியலிசம் என்று பேசுகின்றனர்.

தம்பி! ஆட்சி நடத்தும் கட்சியிலே இருக்கிறோம் என்ற உடன் துணிச்சலும் அதற்குத் தேவைப்படும் திறமையும் தன்னாலே பொங்கி வழிகிறது; அதனால்தான் அவர்கள் முதலாளிகளும் கொலுவிருக்கும் சோஷியலிசம் எம்முடையது என்று பேசுகிறார்கள், அவர்களுக்கு வளர்ந்துவிட்டிருக்கிற துணிச்சலில், இனிஅவர்கள்,

இனிக்கும் எட்டி
பாடும் ஊமை
ஓடும் நொண்டி
கருப்பு மல்லிகை

என்று பலப் பல பேசுவார்கள்! அவர்கள் அந்தத் துணிச்சல் கொண்டிருப்பதிலே நான் வியப்படையவில்லை; ஆனால் மக்கள் அந்தப் பேச்சையெல்லாம் நம்பிக்கொள்கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார்களே அது கண்டுதான் வியப்படைகிறேன். மக்கள் விவரமறியாதவர்கள் அல்ல; அவர்கள் நன்றாக அறிவார்கள், பேசுபவர் அறிவுத் தெளிவுடன் பேசவில்லை; அதிகார போதையிலே பேசுகிறார் என்பதனை. அந்தப் போதை தெளியட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்; போதையைத் தெளிய வைக்கும் நாளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணன்

24-7-66