அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கழுகும் கிளியும்
1

திருடனே உபதேசியான விந்தை!
உருட்டி விடப்பட்டவர் உபதேசியாகிறார், வெட்க மின்றி!
டி.டி.கே. முகத்திலே லால்பகதூர் பூசிய கரி!
இருந்ததை இழந்துவிட்ட எரிச்சலிலா இழிபேச்சு?
கழுகு பிணம் தின்னும்; கிளி கோவைக் கனி தின்னும்!
வாய் நீளுகிறது! வார்த்தை நாராசமாகிறது!

தம்பி!

கேட்போர் மனம் உருகும் விதமாக இருந்தது அந்த உபதேசம். அருள் வாக்கு என்றும், ஆத்ம சக்தியின் விளைவு என்றும் பலர் வியந்து புகழ்ந்திடும் விதமான உபதேசம்!!

கல் மனமும் கரையும்! காதகனும் புனிதனாவான்! மனமாசு அகலும்! மதி கலங்கும்! வழி தவறி நடந்து வந்தவனும் தன் குற்றத்தை உணர்ந்து நெஞ்சு நெக்குருக நிற்பான்; புதுப் பிறவியாகிடுவான்! அப்படிப்பட்ட அருமையான உபதேசம் அது.

கர்த்தரின் கட்டளைகளை எத்தனை விளக்கமாக்கிக் காட்டுகிறார் இந்த வித்தகர்!

நாமும்தான் நித்த நித்தம் படிக்கின்றோம் "வேதம்' - என்ன பயன்! இவர் கூறிடும் போதல்லவா அருமை புரிகிறது!

ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்; சான்றுகள் சரமாரியாக! மேற்கொள்ளும் விளக்கங்களும் எவ்வளவு சுவையுடன்! இதற்குமுன்பு இதுபோல உபதேசம் அருளியவர் எவரையும் கண்டதில்லை என்று அந்த உபதேசம் கேட்டவர்கள் கூறினர். நானாக எதனையும் கூறிடவில்லை! எல்லாம் நாதன் அருளியது!! என் சொல் ஏதும் இல்லை! எல்லாம் இறைவன் இட்ட பிச்சை! கற்றதனைக் கூறிடும் வித்தகன் அல்ல நான்! கர்த்தர் காட்டிடும் வழிநடப்பவன். அவர் பேசுகிறார் என் மூலம்!

ஆண்டு பலவாகக் கற்றுத் தெளிந்து பேசுகிறேன் என்றும் எண்ணற்க! நான் படித்தது ஒரே ஏடு! படிப்பது ஒரே ஏடு! அந்த ஒரு ஏடு போதும் உள்ளத்திலே அருள் ஒளியைத் தந்திட. அது புலவர் தீட்டிய ஏடு அல்ல - புனிதன் அருளிய வேதம் - பைபிள் அதில் உள்ளதனைத்தான் எடுத்து உரைக்கின்றேன்! - என்று அவன் உபதேசம் செய்கிறான், கேட்போர், கண்களில் நீர் துளிர்க்கிறது.

அதிலும் பத்துக் கட்டளைகளில் எட்டாவது கட்டளை யான பிறர் பொருளைக் களவாடாதே! - என்ற கட்டளை பற்றிய உபதேசம் முதல்தரமாக அமைகிறது.

திருடாதே! திருஅருளை இழந்திடாதே! திருடாதே!

சமூகத்தைக் கெடுக்காதே! திருடாதே!

பாப மூட்டையைச் சேர்த்துக் கொள்ளாதே!

எட்டாவது கட்டளைபற்றி அவன் செய்த உபதேசம் கேட்டு, "உபதேசியார்கள்' வியந்தனர் - அவ்வளவு அற்புதமாக இருந்தது அந்த உபதேசம்.

உபதேசமும் திடலில் அல்ல! திருக்கோயிலில்!!

இதே எட்டாவது கட்டளைபற்றி எவரெவரோ பேசினர், கேட்டோம்; இவர்போலவா அவர்கள் உபதேசம் செய்தனர்! என்று கூறினர் திருக்கோயிலில் கூடி அந்த உபதேசத்தைக் கேட்டவர்கள்.

ஆனால், அந்த அருமையான உபதேசம் செய்தவர் - அருள் பெற்றவனோ என்று பலரும் வியந்திடத்தக்க விதமான உபதேசம் செய்தவர் - எட்டாம் கட்டளை பற்றிய விளக்கத்தை ஏற்புடைய முறையிலே அளித்த அந்த உபதேசி ஒரு திருடன்!!

மோட்டார் திருடியவன்! பிடிபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவன்! அவன்தான் அத்தனை அருமையாகஉபதேசம் செய்கின்றான், எட்டாவது கட்டளை பற்றி; களவாடுவது பாபம் என்று!!

இருந்தால் என்ன? பூர்வ ஜென்ம வினையால் களவாடினான்; சிறைப்பட்டான்; சிறைச்சாலையையே தவச் சாலையாக்கிக் கொண்டு, செய்த தவறுக்காக வருந்தி இறைவனிடம் முறையிட்டு, பாபம் கழுவப் பெற்று, புனிதனாகி இருப்பான்! அதனால்தான் "உபதேசி' யாகி இருக்கிறான். முன்பு களவாடியவன் என்பதாலே, அவன் இப்போது "உபதேசி'யாகக் கூடாது என்று கூறிவிடலாமா? - என்று கேட்டிடுவார் உளர்.

தம்பி! இவன், தான் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டு, கழுவாய் தேடிக் கொண்டவன் அல்ல! செய்த பாபத்தைத் துடைத்து அருளும்படிப் பரமனை இறைஞ்சிப் புனிதன் ஆனவனல்ல.

களவாடினான்
சிறைப்பட்டான்
சிறைக்காவலரை ஏய்த்துத் தப்பி ஓடினான்.
ஊரை ஏய்க்க "உபதேசி' வேடம் புனைந்தான்.

எட்டாவது கட்டளையை மீறிய இந்த எத்தன் அதே எட்டாவது கட்டளையைப் பற்றியே அருமையாக "உபதேசம்' செய்வதன் மூலம், சட்டத்தின் கண்களையும் சமுதாயத்தின் கண்களையும் குருடாக்கிட முனைந்தான். உள்ளம் திருந்தியவன் அல்ல! உதட்டளவு உபதேசம்! ஊரை ஏய்க்க உபதேசம்!

பிறகு அவன் கண்டுபிடிக்கப்பட்டான்.

புரட்டு அம்பலமாயிற்று. இவனைப் புனிதன் என்று நம்பினோமே ஏமாளித்தனத்தால் என்று மக்கள் கூறினர்.

கதை அல்ல! நடந்த நிகழ்ச்சி!

சிட்னி என்ற நகரிலே, திருக்கோயில்களிலே எட்டாவது கட்டளைபற்றி உபதேசம் செய்து வந்தவன் எத்தன் என்பதும், அவன் திருட்டுக் குற்றத்துக்காகச் சிறைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து ரொட்டி வண்டியிலே ஒளிந்துகொண்டு தப்பி ஓடிவிட்டான் என்பதும் பிறகே தெரிய வந்தது; அவன் செய்த உபன்யாசங்களைக் கேட்டு உருகிய பிறகு.

இந்த நிகழ்ச்சிபற்றி இதழ்களிலே படித்தபோது தம்பி! எனக்கு ஒரே வியப்பு.

எவ்வளவோ "அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் வளர்ந்துள்ள இந்த நாட்களிலும், மக்களிடம் கப்பிக் கொண்டுள்ள ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்ள எத்தர்களால் முடிகிறதே! உருவத்தைக் கண்டும், புனைந்திடும் கோலம் கண்டும், பேசிடும் மொழியின் பாங்கு கண்டும், புனிதத்தன்மை பற்றிய பேச்சைக் கேட்டும், மக்கள் மயங்கிப் போகிறார்களே!... என்று எண்ணிக் கவலைமிகக் கொண்டேன்.

மதப் போர்வை அத்தகைய மன மயக்கத்தைத் தருகிறது; புரிகிறது!

எதனை நாம் புனிதமானது என்று நம்பிப் போற்றுகிறோமோ, அந்தப் புனிதத்தையே, புரட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் புல்லர்கள் உலவியபடிதான் இருக்கிறார்கள். விழிப்புடன் இருந்தாலொழிய எத்தர்கள் கிளம்பியபடிதான் இருப்பார்கள்; மக்களை ஏமாளி களாக்கியபடிதான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.

அந்த நேரமாக நண்பரொருவர் வந்தார்; அவரிடம் கூறினேன், என் மனத்திலே தோன்றிய இந்தக் கருத்தை. அவர் இடி இடியெனச் சிரித்தார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்ன! என்ன! இது நகைப்புக்குரிய விஷயமா! மக்கள் மதக்கோலம் புனைந்திடும் எத்தர்களிடம் ஏமாந்து போகும் செய்தி கேட்டு, நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும், ஆத்திரப்பட வேண்டும், பகுத்தறிவுப் பிரசாரத்தை மும்முரமாக்க வேண்டும், அவ்விதமிருக்க, நான் இந்த விஷயத்தைக் கூறிடக் கேட்டுச் சிரிக்கின்றீரே, ஏன் என்று கேட்டேன்.

அவர் சொன்னார், அண்ணாதுரை! மதவேடம் போட்டுக் கொள்பவன்தான் மக்களை மயக்க முடியும் என்று எண்ணிக் கொண்டு இத்தனை ஆத்திரப்படுகிறாய், உலகம் போகிற போக்கு புரியாமல்; அதை எண்ணித்தான் சிரித்தேன். மதவேடம் போடாமலேயேகூட, மக்களை மயக்கிடத்தக்க உபதேசம் செய்பவர்கள் உலவுகிறார்கள்; அவர்களைப் பார்க்கவில்லையா என்று கேட்டார்.

விளக்கம் கேட்டேன். அவர் கூறினார்: எட்டாவது கட்டளையை மீறியவன் எட்டாவது கட்டளையின் அருமை பற்றிய உபதேசம் செய்தான் என்பதுதானே உனக்கு வியப்பாக இருக்கிறது? எனக்கு அதிலே வியப்பு ஏற்படவில்லை. அவனாகிலும் "பைபிள்' கருத்திலே புலமை காட்டி, தன்னைப் புனிதன் என்று நம்பும்படி மக்களை மயக்கினான். டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் அப்படிக்கூட எந்த "அருட்பாவை'யும் கற்றுத் தெளிந்து வித்தகராகிடவில்லையே; கொச்சைத் தமிழில்தானே பேசுகிறார்? அவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறாரே, அது உனக்கு ஆச்சரியமாக இல்லையா? என்றார்.

"இது போக்கிரித்தனமான பேச்சு! நான் கள்ளனாக இருந்தவன் கர்த்தர் அருள் பெற்றவன்போல் நடித்து மக்களை மயக்கிய புரட்டுபற்றிக் கூறுகிறேன்; நீ காங்கிரஸ் தலைவருள் ஒருவரான டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் ஊருக்கு உபதேசம் செய்கிறாரே, அது நியாயமா என்று கேட்கிறாயே, முறையா அது'' என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். என் நண்பர்,

நான் உபதேசம் செய்து ஊராரை மயக்கப் பார்த்திடும் போக்குப்பற்றி மட்டுமே கூறுகிறேன்; நீ எதற்காகக் களவாடிய வனுடனா, "கனம்' ஆக இருந்தவரை ஒப்பிடுகிறாய் என்று கேட்கிறாய். மக்கள், தான் சொல்லுவதை நம்புவார்கள் என்ற உறுதியுடன்தானே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பேசுகிறார்? என்று கேட்டார்.

ஆமாம்! தனது பேச்சை நம்புவார்கள் என்ற நம்பிக்கை யுடன்தான் அவர் பேசுகிறார் என்றேன்.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் பேச்சு நம்பத்தகுந்தது அல்ல என்று இன்றைய கல்வி அமைச்சராக உள்ள சக்ளா அவர்கள், பம்பாய் நீதிபதியாக இருந்தபோது முந்திரா விவகார சம்பந்தமாக எழுதிவைத்திருக்கிறாரே, தெரியுமல்லவா? என்று கேட்டார். தெரியும் என்றேன்.

ஆக, யாருடைய பேச்சு நம்பத்தகுந்ததாக இல்லை என்று முந்திரா விவகார விசாரணையின்போது ஒரு நீதிபதியால் கூறப்பட்டிருக்கிறதோ, அந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், எந்தத் துணிவிலே மக்களிடம் பேசுகிறார், எந்தத் துணிவிலே தன் பேச்சை மக்கள் நம்புவார்கள் என்று எதிர்பார்க்கிறார்? அதைச் சொல்லு! என்று கேட்டார்.

என்னால் பதில் கூற முடியவில்லை. நானும் நண்பருடன் சேர்ந்துகொண்டு சிரித்தேன்.

ஆனால், தம்பி! டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் நடத்திக் கொண்டிருக்கும் உபதேசத்தில், நமது கழகத்தைப்பற்றி அவர் கூறிய கருத்துபற்றி எண்ணும்போது, சிரிப்பு அல்ல, உள்ளபடி வேதனைதான் பீரிட்டுக்கொண்டு கிளம்புகிறது.

ஒரு முறைக்கு இரு முறை "உருட்டிவிடப்பட்ட' இந்த உத்தமர், தமக்கு நேரிட்ட "கதி'யை எண்ணி, முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டும்; ஆனால், உலாவருகிறார், வெட்கமின்றி! உபதேசமும் செய்கிறார் துணிவுடன். கழகம்பற்றி மிகக் கேவலமாகப் பேசுகிறார் துடுக்குத்தனத்துடன்.

இவர்மீது ஒரு புகார் கிளம்பிற்று.

புகார் செய்தவர்கள் நடுத்தெரு நாராயணர்கள் அல்ல; பாராளுமன்ற உறுப்பினர்கள்.

புகாரும் திடலில் கூறப்படவில்லை; எழுத்து மூலமாகவே குடியரசுத் தலைவருக்குத் தரப்பட்டது; இந்தியப் பிரதமரிடம் அது குடியரசுத் தலைவரால் தரப்பட்டது.

மற்றவர்களைப்பற்றி மிக மட்டமாகப் பேசும் இந்த மகானுபாவரிடம் உள்ளபடி நம்பிக்கையும், மதிப்பும் இருந் திருந்தால், "புகாரை'ப் பெற்றுக்கொண்ட லார்பகதூர் என்ன செய்திருப்பார்?

என்ன துணிவு இப்படிப்பட்ட புகாரை, எனது நிதி அமைச்சர்மீது சுமத்த! அவருடைய யோக்யதை எப்படிப்பட்டது, நாணயம் எப்படிப்பட்டது! நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அவர் செய்துள்ள தியாகம் எப்படிப்பட்டது! கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் காட்டினாலும், அவர் நேர்மைக் கோட்டை விட்டு, இம்மி அளவாவது விலகுவாரா? சுயநலத்துக்கும் அவருக்கும் ஆயிரமாயிரம் காத தூரமாயிற்றே! தன் சுகம், தன் குடும்ப சுகம் ஆகியவற்றையா அந்த உத்தமர் பெரிதாக மதிப்பார்! நிஷ்காமகர்மி அல்லவோ அவர்! அப்படிப் பட்ட ஒப்பற்ற உத்தமர்மீது, பாவிகளே! பழி சுமத்துகிறீர்களே! ஆகுமா, அடுக்குமா? அந்தப் புனிதர்மீது பழி சுமத்தினால் நான் உங்கள் புகார் மனுவைத் துளியாவது மதித்திடுவேனா? இதோ அதனைச் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பைக் கூடையில் போடுகிறேன்! - என்றல்லவா கூறியிருந்திருக்க வேண்டும்.

ஆனால் லால்பகதூர் செய்தது என்ன?

மான ரோஷத்திலே துளி அக்கறை உள்ளவர்களும், தம்மீது ஒரு புகார் மனு தொடுக்கப்பட்டு, அதனைத் தமது சகாவாகவும் தலைவராகவும் உள்ளவர், ஏறெடுத்தும் பார்க்க மறுத்தார் என்ற நிலை கிளம்புவதைத்தான் பெருமைக்கு உரியதாகக் கருதுவார்கள்.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், சாமான்யமான நிலையில் இல்லை. இந்தியப் பேரரசின் நிதி மந்திரி! நிதித்துறை நிபுணர்! சிக்கல்களை அறுத்து எறிந்திடும் சமர்த்தர்! விளக்கம் அளிப்பதில் வல்லவர்! வாதாடுவதில் புலி! - என்றெல்லாம் விருது பெற்றவர்.

அவர்மீது புகார் மனு! அதனைத் தள்ளுபடி செய்யவில்லை லால்பகதூர். ஏன்?

இந்த ஒரு கேள்வியை எண்ணி எண்ணி மனம் குன்றிக் கிடப்பர், தன்மானம் பெரிது என்று எண்ணிடும் இயல்பினர்

புகார் மனு ஒன்று வந்தது.
பரிசீலனை செய்து பார்த்தேன்.

அவ்வளவும் அபத்தம், வீண் பழி என்று கண்டறிந்தேன்.

ஆகவே புகார் மனுவைக் கிழித்தெறிந்து போட்டு விட்டேன்.

இவ்விதம் லால்பகதூர் கூறி இருந்திருந்தாலாவது, ஓரளவு தலைநிமிர்ந்து நடந்திடலாம்; நான் மாசற்றவன் என்பது கிடைத்த தீர்ப்பு என்று மார்தட்டிக் கூறிக்கொள்ளலாம்.

அந்த நிலையும் கிடைக்கவில்லை இந்த வித்தகருக்கு.

புகார் மனு ஒன்று வந்திருக்கிறது, அதனை அலட்சியப் படுத்தி விடுவதற்கில்லை. ஆகவே புகார் மனுவிலே கூறப் பட்டுள்ளவைகள் விசாரிக்கத் தக்கவைதானா என்பதனைக் கண்டறிந்து கூறும்படி, இந்திய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அந்த மனுவை பரிசீலனைக்காக அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என்று லால்பகதூர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டதும், தன்மான உணர்ச்சி ததும்பிடும் மனத்தினர் ஒரு முழக் கயிறு கொடுத்து விடுங்களேன், இப்படி என்னைக் கேவலப்படுத்துவதைவிட என்று கூறிக் குமுறி இருப்பார்கள்.

புகார் மனு குப்பைக் கூடைக்கு அனுப்பிவிடத் தக்கது அல்ல; தானே விசாரணை நடத்தித் தள்ளிவிடத் தக்கது அல்ல. முதல் கட்டமாகவே, இந்தியாவின் தலைமை பரிசீலித்துப் பார்க்கத்தக்க விதமானது என்று லால்பகதூர் தீர்மானித்தார் என்றால், அதைவிட இழிவு வேறு என்ன வேண்டும்?

நாடே நகைத்தது! இவரோ துடிதுடித்தார்!

அப்படியானால் என்னிடம் தங்களுக்குப் பரிபூரண மான நம்பிக்கை இல்லை என்றல்லவா பொருள்படுகிறது என்று கேட்டார், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்.

நியாயமான கேள்விதானே! லால்பகதூருக்கு, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் நேர்மையிலும் நாணயத்திலும் முழு அளவு நம்பிக்கை இருக்குமானால், புகார் மனுவைப் பிரதம நீதிபதியிடம் அனுப்பப்போகிறேன் என்று அறிவிப்பாரா? இவருக்கு தெரியாதா, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எப்படிப் பட்டவர் என்பது - என்று நாட்டிலேயும் பலர் கேட்டனர்.

நயமாகப் பேசிப் பார்த்தார் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்! லால்பகதூர் அசைந்து கொடுக்கவில்லை.

பயம் காட்டிப் பார்த்தார்; அப்படியானால் நான் பதவியை ராஜிநாமாச் செய்கிறேன் என்றார்; லால்பகதூர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

நீங்கள் விசாரணை நடத்துங்கள்! அல்லது மந்திரி சபையினரிலிருந்து ஒரு குழு அமைத்து, விசாரணை நடத்தச் சொல்லுங்கள் - என்று வாதாடிப் பார்த்தார் நிதி மந்திரி.

லால்பகதூர் அந்த வாதம், வேண்டுகோள், மிரட்டல் எதற்கும் அசையவில்லை. பிரதம நீதிபதியிடம்தான் புகார் மனுவை அனுப்பிவைப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

பதவியை ராஜிநாமாச் செய்தார், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்!

லால்பகதூர் அதனை ஏற்றுக்கொண்டு, உடனடியாகவே வேறு ஒருவரை நிதி மந்திரியாக்கிவிட்டார்!

இந்த இலட்சணத்திலே இருந்திருக்கிறது இவருக்கு லால்பகதூர் காட்டிய மதிப்பும் மரியாதையும். இவர் கிளம்புகிறார் ஊருக்கு உபதேசம் செய்ய.