அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கழுகும் கிளியும்
2

குட்டுப்பட்டார்! குனிந்து கொடுத்தார்! இவர் கிளம்புகிறார் கழகத்தை இழித்தும் பழித்தும் பேச!

தன் நேர்மை, நாணயம், தகுதி, திறமை, வயது, அனுபவம் ஆகிய எதற்கும் லால்பகதூர் மதிப்பளிக்க மறுத்துவிட்டாரே என்பதை எண்ணி எண்ணி, வெட்கம் விலாவைக் குத்திடும் மற்றவர்களுக்கு; இவர் கிளம்புகிறார், கழகத்தைத் தாக்கிட!

காட்டுவதுதானே இந்த வீராவேசத்தை லால்பகதூரிடம்! கேட்பதுதானே அவரை, எனக்குப் பதவி பெரிது அல்ல! இதோ விலகிவிட்டேன். என்மீது எவனெவனோ செய்த புகார்பற்றி என் வார்த்தையை நம்ப மறுத்துவிட்டீர்கள். இருக்கட்டும். நான் மாசு மறுவற்றவன் என்பது நாட்டுக்கு விளக்கப்பட்டாக வேண்டும். ஆகவே விசாரணை நடத்துங்கள், உண்மை துலங்கட்டும், என் நேர்மையும் நாணயமும் உலகுக்கு மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுதானே! அதற்குக் கிளம்பக் காணோம் ரோஷத்துடன், இப்போது கழகத்தைத் தாக்கத் தோள் தட்டிக் கிளம்புகிறார்.

லால்பகதூர், இவர் முகத்தில் பூசிய கரியை நாடு அறியாதா! இவர் பதவி விலகியது இது இரண்டாவது முறை - இரு முறையும் புகார் கிளம்பிய பிறகே இவர் பதவியை விட்டு விலகினார் என்பதனை நாடு அறியாதா!

மூக்கறுபட்டோம், நாலு பேர் கண்களிலே படாமல் மூலையில் உட்காருவோம் என்று "சராசரிகள்' எண்ணிக் கொள்ளட்டும், நாம் அப்படியா! பெரிய ஆசாமி அல்லவா என்ற நினைப்புடன் கிளம்பிவிட்டார்!

காமராஜர் இவரிடம் சொன்னாராம், "போய்ப் பார்த்து வாரும், நாடு எப்படி இருக்கிறது; ஓட்டு எப்படிக் கிடைக்கும்' என்பது பற்றி.

காமராஜர் போகாத இடமா, பார்க்காத நிலைமையா, போடாத கணக்கா! அவருக்குப் புரியாததா இவருக்குப் புரியப் போகிறது? காமராஜர்தான் என்னை அனுப்பி வைத்தார் என்று இவர்தான் சொல்லுகிறார்; காமராஜர் வாய் திறந்து இதுவரை சொல்லவில்லை, நான்தான், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை அனுப்பி வைத்திருக்கிறேன் என்று.

அவர் சொல்லுவாரா? இவர் முகத்தில் லால்பகதூர் கரியைப் பூசியபோது, வாய் திறந்து, "ஐயோ! பாவம்!' என்று ஒரு வார்த்தை அன்பாக, ஆதரவாகப் பேசவே இல்லையே அந்தக் காமராஜர்.

அவர் இப்போதா வாய் திறந்து, ஊர் நிலவரம் அறிந்து வந்து கூறிடும் என்று இவரிடம் சொல்லி யிருப்பார். இவர் சொல்லிக்கொள்கிறார் அப்படி!

லால்பகதூருக்குப் பிறகாகிலும், "புகார் மனு' அபத்தமானது, தள்ளுபடி செய்தாகிவிட்டது என்ற "நல்ல செய்தி' தரப்பட்டதா? இல்லையே!

இந்திரா காந்தியார் என்ன கூறினார்? டி. டி. கிருஷ்ணமாச் சாரியாரின் நேர்மையும், நாணயமும் நாடு அறியும். அவர்மீது யாரோ அபத்தமான புகார் செய்தனர், அதனைத் தள்ளுபடி செய்துவிட்டேன் என்று கூறினாரா? இல்லை! டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டதால், புகார் மனுபற்றி மேற்கொண்டு கவனிக்கத் தேவை இல்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று மட்டுமே கூறினார்!

இது பெருமைக்குரிய நிலையா?

மேதையும் கூறிடான்!

ஆனால், இந்த மேதை ஏதோ தமது கீர்த்தி கொடி கட்டிப் பறப்பதாகக் கருதிக்கொண்டு கிளம்புகிறார் கழகத்தைத் தாக்கிட!

கழகம் ஆட்சி நடத்தினால், பெண்கள் நகை போட்டுக்கொண்டு ஊரிலே உலவ முடியாதாம்!

கேட்டனையா இந்தப் பேச்சை! என்ன அறிவுத் தெளிவப்பா இந்த அனுபவசாலிக்கு!

கழகம் ஆட்சி செய்தால், பெண்களை வழி மறித்துப் பொருளைக் களவாடுவார்களாம்! நகைகளைப் பறித்துக்கொள்வார்களாம்! அப்படிப்பட்ட காலித்தனம் நடக்குமாம்! அவ்வளவு அராஜகம் இருக்குமாம்!

இவ்வளவும் எந்த ஆராய்ச்சி மூலம் இவருக்கு கிடைத்திருக்கிறது? கூறக் காணோம்.

கழகத்தைப்பற்றி இத்தகைய இழிவான கருத்தைக் கொண்டிருப்பின், சென்ற தேர்தலின்போது 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு காட்டி, ஓட்டு அளித்திருப்பார்களா? என்று கேட்டால் என்ன பதில் அளிப்பாரோ இந்த அறிவுக்கரசர்!

சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சியாக, தமிழகத்தில் கொலுவிருக்கும் ஒரு அரசியல் கட்சியைப் பற்றி இத்தனை பெரிய பதவி வகித்தவர் இப்படியா பொறுப்பற்ற முறையில் பேசுவது? இதுதானா காங்கிரஸ் காட்டும் ஜனநாயகம்?

கழகத்தின் கொள்கைத் திட்டம் குறை மிக்கது என்று வாதிடட்டும். . . அறிவுத் தெளிவுடன்.

அறிவு அற்றவர்கள் பேசுவதுபோல, கழகத்திற்குக் கொள்கை இல்லை, திட்டம் இல்லை என்றாகிலும் குளறட்டும். கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடக்கும் - பெண்களின் நகை பறிபோகும் என்றா பேசுவது?

ஆணவத்துக்குக்கூட ஒரு வரம்பு வேண்டாமா?

ஆளுங்கட்சி, ஆகவே நாக்கு எந்த அளவும் நீளலாம் என்றா கருதுவது?

நாடாளும் கட்சியினர் நாங்கள், ஆகவே நாராச நடையில்தான் பேசுவோம் என்றா போக்கு இருப்பது?

சே! இத்தனை இழிநடையா!

பதவி பறிபோய்விடுமோ, பசையும் ருசியும் கெட்டுவிடுமோ என்ற கவலை எவ்வளவு தரக் குறைவான பேச்சையும் கொட்டச் செய்கிறதே! எதைச் சொல்லியாவது கழகத்தை இழிவுபடுத்த வேண்டும், எரிச்சல் மூட்ட வேண்டும் என்ற நினைப்பு நெளிந்திடக் காரணம் என்ன? கிலி! அச்சம்! பதவி பறிபோய்விடுமோ என்ற பதைப்பு!

பெண்களின் நகை பறிபோய்விடும் என்று பேசினால் மக்கள் பீதி அடைவார்கள், கழகத்தை ஆதரிக்க மறுப்பார்கள் என்றா எண்ணுகிறார் இவ்வளவு படித்தவர்? ஏமாளியும் அவ்விதம் எண்ணிடமாட்டானே!

காந்தியார் காலத்திலேயே இந்திப் பிரசார விடுதியில், விபசாரம் நடைபெற்றதாகப் புகார் வந்ததே! நாடு அறியாதா அதனை?

திங்கள் சில தானே ஓடியுள்ளன, ஒரு காங்கிரஸ் அமைச்சர்மீது ஒரு மாதிடம் வம்பு செய்ததாகப் புகார் கிளம்பி நாடு மறந்துவிட்டதா?

குடித்துப் புரளுவதும் மனைவியை அடித்துக் கொடுமை செய்வதுமாக இருந்தார் என்ற புகார் கிளம்பியது யார்மீது? ஒரு காங்கிரஸ் அமைச்சர்மீது அல்லவா?

குடித்துவிட்டுப் புரளும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர் என்று மொரார்ஜி தேசாயே கூறினாரே சென்ற ஆண்டு! நாடு மறந்துவிட்டதா? என்ன நினைப்பிலே பேசுகிறார்? இருந்ததை இழந்துவிட்ட எரிச்சலிலா? இடிபட்ட வருத்தத்திலா? ஒரு முறைக்கு இரு முறை புகார் தாக்கியதாலா? இப்படியா, மற்ற ஜனநாயக நாடுகளிலே பேசுகிறார்கள்.

கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடந்திடும் என்ற இழி மொழி பேசிடுகின்றாரே இந்த மூதறிஞர், இவருடைய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் நாட்களில்தானே, டில்லியில் முதியவர், நீதிபதி வேலை பார்த்தவர், அவருடைய வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார்! காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் நாட்களில்தானே கெய்ரோன் சுட்டுக் கொல்லப்பட்டார்! காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறபோதுதானே கொள்ளைக்காரக் கூட்டம் மத்தியப் பிரதேசத்தில் கொட்ட மடித்தபடி இருக்கிறது!

கொள்ளைக்காரத் தலைவர்களிலே ஒருவன் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அழைத்து, காங்கிரசின் தேர்தல் நிதிக்குக் கணிசமான தொகை நன்கொடை தந்தான் என்று சில காலத்துக்கு முன்பு செய்தி வெளி வந்ததே; நாடு மறந்துவிடுமா?

மக்கள் ஏதுமறியாதவர்கள், அவர்களிடம் எதனையும் கூறிடலாம், நம்பிவிடுவார்கள் என்ற நினைப்புடன் நாப்பறை நடாத்திடுகின்றனர்; மக்கள் தெளிவு பெற்று விட்டுள்ளனர் என்ற உண்மை அறியாது.

கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடக்கும் என்று இழிமொழி பேசுகிறார் இந்தப் பெரியவர்; ஆனால் தம்பி! காங்கிரஸ் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறதே இப்போது பஞ்சமாபாதகம் எந்த வகையிலே இருக்கிறது என்பதுபற்றி ஒரு சிறு கணக்குக் கொடுக்கவா? இதோ!!

தம்பி! மற்றக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சமாபாதகம் தலைவிரித்தாடும் என்று பேசுகிறாரே மகானுபாவர். இவருடைய காங்கிரஸ் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் இந்த நாட்களில், ஒரு ஆண்டில் நடைபெற்றதாகக் கணக்கு எடுக்கப்பட்டிருக்கும் குற்றங்களின் தொகை எவ்வளவு தெரியுமா? 6,74,466!

ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட கொடிய குற்றங்கள் தலைவிரித்தாடியிருக்கும் நிலை இந்த ஆட்சியில். இதிலே இருந்தவர் கதைக்கிறார் கழகம் ஆட்சிக்கு வந்தால் குற்றம் தலைவிரித்தாடும் என்று. அவ்வளவு நாகரிகமாகக்கூடப் பேசத் தெரியாததால், குளறி இருக்கிறார், நகை போட்டுக்கொண்டு பெண்கள் ஊரிலே உலாவ முடியுமா என்று.

எவ்வளவு அக்கறை நகைபற்றி!!

இவ்விதம் பேசியவர் சொந்தம் கொண்டாடும் கட்சி ஆட்சி நடத்திடுகிறது, குற்றங்களோ ஆறு இலட்சத்துக்கும் மேல்! விவரம் வேண்டுமா! தம்பி! தருகிறேன்.

கொலை 11,586
பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றம் 7,119
கொள்ளை 4,890
வழிப்பறி 7,551
கன்னம் வைத்துக் களவாடியது 1,34,324
ஆடு, மாடு களவு 23,122
களவு 2,29,331
கலகம் 29,096
நம்பிக்கைத் துரோகக் குற்றம் 18,092
மோசடி 9,738
கள்ள நாணயம் தயாரித்தல் 423
பலதரப்பட்ட குற்றங்கள் 1,99,194

 

தம்பி! ஒரு ஆண்டுக் கணக்கு! இந்த இலட்சணத்திலே இவர்கள் தர்பார் நடத்தும் நாட்டில் இருக்கிறது. இவர் வாயோ நீளுகிறது; வார்த்தையோ நாராசமாகிறது.

தம்பி! நான் தந்துள்ள கணக்கு 1962-ம் ஆண்டுக்கானது. அந்த ஆண்டிலே என்ன காரணத்தாலோ குற்றங்களும் கொடுமைகளும் அதிக அளவிலே இருந்தனபோலும். காங்கிரசின் மாபெருந் தலைவர்கள் உபதேசம் செய்யச் செய்ய, அந்தக் குற்றங்கள் குறைந்துகொண்டு வந்துள்ளனபோலும் என்று எண்ணிக்கொண்டுவிடாதே! வளர்ந்தபடி இருக்கிறது என்று சர்க்கார் அறிக்கையே தெரிவித்திருக்கிறது.

1965-ம் ஆண்டில், மூன்றே மாதங்களில், குற்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கைக்கூட சர்க்கார் தந்திருக்கிறது.

மூன்றே மாதங்களிலே, தம்பி! காங்கிரசின் புனிதமான ஆட்சியில் ஒரு இலட்சத்து எண்பத்து மூன்றாயிரம் குற்றங்கள்! வகையும் வேண்டுமா? பார்த்துக்கொள்ளேன்.

கொலை - 3,162
பெண் கடத்தல் - 1,873
கொள்ளை - 1,133
வழிப்பறி - 1,910

இது 1965-ம் ஆண்டில், மூன்று மாதத்துக் கணக்கு. 1961-ம் ஆண்டு, மூன்று மாதத்துக் கணக்குடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்போமா? இவர்கள் ஆட்சி காரணமாகப் புனிதத் தன்மையும் ஒழுக்கமும் எந்த அளவு வளர்ந்திருக்கிறது(!) என்பது விளங்கிவிடும்.

 
1961
1965
 
(3 மாதம்)
(3 மாதம்)
கொலை 2,792 3,162
பெண் கடத்தல் 1,674 1,873
கொள்ளை 1,053 1,133
வழிப்பறி 1,607 1,910

 

இப்படி வளர்ந்திருக்கிறது கொலையும் கொள்ளையும், பெண்களைக் கடத்திச் செல்லும் கொடுமையும், காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நாட்களில். இதற்காக வெட்கப்படாமல், வாயில் வந்ததைப் பேசுகிறார், பெரிய இடத்தில் இருந்தவர்.

காங்கிரஸ் ஆட்சியிலே கொலையும் கொள்ளையும் கற்பழித்தலும், வழிப்பறியும் போன்ற கொடுமைகள் வளர்ந்து கொண்டே போகின்றன; நாம் "பண்பு' காரணமாக இதனை எடுத்துக் காட்டிடவில்லை; இதற்காக இந்த ஆட்சியை இடித்துரைக்கவில்லை. ஆனால், பாரேன் அந்த இடத்துப் பேச்சு எவ்வளவு தரம் கெட்டதாக இருக்கிறது என்பதனை.

கொலையும், கொள்ளையும், வழிப்பறியும், களவும், பெண்ணைக் கடத்திச் செல்வதும், கன்னம் வைப்பதும், மோசடியும், பிற பாதகங்களும், இவ்வளவு நடந்துள்ளன. இவைகளையா காட்டுகிறோம், காங்கிரசாட்சியைக் குறை கூற! நமக்கு இல்லை அத்தகைய இழிதன்மையான போக்கு!

நாம் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற கிலி பிடித்ததும் பார் தம்பி! எத்தனை இழிமொழியைப் பொழியத் தோன்றுகிறது, இருப்பது பறிக்கப்பட்டுவிடும் என்ற எரிச்சல் காரணமாக.

ஆனால், தம்பி! அவர்கள் எத்தனை இழிமொழி உமிழ்ந்திடினும், நாம் நமது தரம் குறையாமல் நமது சொல்லையும் செயலையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

எருமைகள் சேற்றில் புரளும் - அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர்.

கழுகு அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்கிறது! கிளி, கொவ்வைக் கனியைத்தான் விரும்புகிறது!

புளித்த காடியைப் பருகுவான் குடிகாரன்; செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன்.

எவர் எத்தகைய இழிமொழி பேசிடினும் தம்பி! நீ கானம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும்.

பண்பு மறந்து, கண்ணியமற்று, காழ்ப்புக் காரணமாக ஆளவந்தார்கள் என்னென்ன இழிமொழி பேசுகின்றனர் என்பதை எண்ணிடும்போது தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியத்திலே வெற்றி கிடைத்திட மேலும் உறுதியும் ஊக்கமும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

யாராரோ வீசிடும் இழிமொழிகளை பழிச்சொற்களை, எல்லாம் கேட்டுக்கொண்டுதான் ஆகவேண்டுமா அண்ணா! என்று கேட்பாயேல், தம்பி! தயக்கமின்றிக் கூறுவேன், கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். நாட்டுக்கு நல்லாட்சி அமைத்திட நாம் இந்த "விலை' கொடுத்தாக வேண்டும்.

தம்பி! பாம்பும் மயங்கிடும் என்கிறார்கள், புல்லாங்குழல் இசை கேட்டிடின்! அந்தக் குழல் எப்படித் தயாரிக்கிறார்களாம் தெரியுமா? சூட்டுக்கோலால் துளை போட்டு! தீயால் சுடுகிறார்கள்; பிறகு தீஞ்சுவை இசை தரும் குழலாகிறது! சுடு சொல் நம்மீது வீசுகிறார்கள், வீசட்டும்!

அண்ணன்,

17-7-66