அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கிளிக்குப் பச்சை பூசுவதா?
1

தமிழின் ஓசை நயமும் பொருள் நயமும் -
தமிழ் மொழியின் இனிமை.

தம்பி,

எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டேன், நமது துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களை,

சூலூரிலிருந்து வருகிறேன் என்றார் அவர்.

நான் வேடிக்கையாக அவரைக் கேட்டேன்; "அதென்னய்யா அப்படிச் சொல்கிறீர்? நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் - நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்'' என்றேன் - கருவில் உருவாகி வந்த காதையல்லவா? அதனால் அவரும் உடனிருந்தோரும் சிரித்தனர்.

அது சரி, சூலூரிலிருந்து கிளம்புகிறோம், பிறகு நாம் செல்லுமிடம் எது? கூறும் என்றேன், குறும்புக்காக. அன்று என்னவோ ஒருவிதமான மகிழ்ச்சி. மாநில மாநாட்டுக்காக நல்லதோர் திடல் கிடைக்க இருக்கிறது, அதற்கான "உத்தரவு' பெற, மாவட்டக் கலெக்டரைத் துறையூர் சென்று காணப் புறப்படுகிறேன் என்று நண்பர் அன்பில் தர்மலிங்கம், அப்போது தான் கூறிவிட்டுச் சென்றார், அதனால் ஏற்பட்ட குதூகலம் என்று எண்ணுகிறேன்.

நண்பர் நடராசன், பதில் ஏதும் கூறவில்லை - வழக்கமாக அவரிடம் வெளிப்படுமே ஒருவிதமான வெறிச்சென்ற பார்வை, அதனைச் செலுத்தினார். நான் விடவில்லை.

"சொல்லுமய்யா, சூலூரிலிருந்து புறப்பட்டு வருகிறோம், பிறகு . . . . '' என்றேன்.

அவர் பதிலளிக்காதது மட்டுமல்ல, என்னிடமிருந்தே அதற்கான பதிலை எதிர்பார்த்தார்.

சூலூரிலிருந்து (கருவிலிருந்து) புறப்பட்டு, பாலூர் (அன்னையின் அன்புப் பாலூட்டப் பெறுகிறோம்) செல்லுகிறோம், பிறகு முறைப்படி வளர்ந்து வளர்ந்து, வேலையூர் (தொழில் செய்தல்) செல்கிறோம், அங்குப் பக்குவம் பெற்ற பிறகு சேலையூர் (திருமணம்) சென்று இன்புறுகிறோம், பிறகு வசதியூர் தேடுவதிலே ஈடுபட்டுக் கடைசியில் சுடலையூர் சென்று அமைதி பெறுகிறோம் - என்று நான் கூறினேன்.

"என்ன அண்ணா! பெரிய தத்துவம் பேச ஆரம்பித்து விட்டீர்கள் - வேதாந்தம் பேசுகிறீர் - என்று நடராசன் கேட்டார். கருவிலிருந்து கிளம்பி கல்லறைவரை நடத்தும் பயணத்தையும், அந்தப் பயணத்தில் பொதிந்துள்ள தத்துவத்தையும் விளக்கவே, நான் சூலூரிலிருந்து நாமனைவரும் புறப்பட்டுச் சுடலையூர் பயணமாகிறோம் என்று சொன்னதாக அவர் எண்ணிக் கொண்டார். ஆனால் தம்பி, நான் வேதாந்த விசாரத்தில் அப்போது மூழ்கியுமில்லை; நான் பேசினதும் தத்துவம் அல்ல; இலக்கணத்தில் மனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.

சூலூர்
பாலூர்
வேலையூர்
சேலையூர்
வசதியூர்
சுடலையூர்

இப்படி "ஓசை' நயம், கற்பனை செய்து கொண்டிருந்தேன் - காரணம், நமது கழக வளர்ச்சி கண்டு அகத்தில் குடைச்சலும் முகத்தில் கடுகடுப்புங் கொண்ட யாரோ ஒருவர், தமிழில் அடுக்கு மொழி பேசிப் பேசி மக்களை மயக்கிவிடுகிறீர்கள், அப்பாவி மக்களும் ஓசை நயத்தில் மயங்கி உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகிறார்கள், அதனாலேயே உங்களால், கூட்டம் சேர்த்திட முடிகிறது என்று ஏளனம் பேசினாராம், அதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட தம்பி ஒருவர், '"அண்ணா! இவ்வித மெல்லாம் பேசுகிறார்கள்'' என்று கூறிக் குறைபட்டுக் கொண்டார்; அதனால் என் மனம், அடுக்கு மொழி, இரட்டைக் கிளவி, எதுகை மோனை ஆகியவற்றின் எழில், பயன் மீது சென்றது; அதே நேரத்தில் சூலூர் எனும் இடத்திலிருந்து வருகிறேன் என்று நண்பர் நடராசன் கூறினார்; உடனே,

சூலூர்
பாலூர்
வேலையூர்
சேலையூர்
வசதியூர்

சுடலையூர்

என்றெல்லாம் பேசலானேன்.

ஓசை நயம் தேடுவதும் தருவதும் குற்றமல்ல, இசைக் கலையே ஓசை நயத்தைத் தரப்படுத்தித் தரப்படுவதுதானே! ஆனால் சிலர், ஓசை நயம் என்பது ஏதோ ஓர் இழுக்கான செயல் போலவும், அதன் பயனாக மாபெருங் கேடு மனித இனத்துக்கு ஏற்படுவது போலவும் பேசுவர். ஆராய்ந்து பார்த்தால், அவர்தம் போக்குக்குக் காரணம் கோபம் என்பதும் அந்தக் கோபத்துக்குக் காரணம் கவலை என்பதும், கவலைக்குக் காரணம் அவர்கள் ஓசை நயம் காட்ட முயன்று ஏற்பட்ட தோல்வி என்பதும் விளங்கிவிடும்.

வீட்டிலே, சின்னத் தம்பி இருந்தால், அவன் எதிரில், குழல் கொண்டு இசை எழுப்பிப் பார் - சிறுவன் சிரித்து மகிழ்வான், சிட்டுப் போலே பறப்பான், எனக்கு எனக்கு என்று கொஞ்சுவான், கொடுத்தால், ஊதிப் பார்ப்பான், ஓசை நயம் கிடைக்காது, ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு ஓசைக் கொலையாகும், தோல்வி கண்டு துயருற்று, கோபமுற்று, ஊது குழலை ஓங்கிப் பூமியில் அறைவான்.

மொழியில் ஓசை நயம் பெறவும் காட்டவும் முயன்று, முடியாததால் கவலை கொள்பவர்கள், கோபம் கொண்டு, தமக்குத் துணைவர மறுக்கும் ஓசைநயம், பிறரிடம் பேரன்பு காட்டுவது கண்டு பெருங் கோபம் கொண்டு, ஓசை நயம் என்பதே தவறானது, தீதானது என்று தூற்றத் தொடங்குவர்.

காதல் கைகூடாவிடத்துத் தென்றல் தேள்கடியாகும், நிலவு தீயாகச் சுடும், மலரே முள்போல் தைக்கும் என்கிறார்களல்லவா! காதல் மட்டுமல்ல, எது கைகூடாவிட்டாலும் கடுப்பு ஏற்படுவதும், அந்தக் கடுப்புக்குக் காரணமாகக் கடுங் கோபம் மூள்வதும், அதன் விளைவாகக் கடுஞ் சொற்கள் கிளம்புவதும் நிரம்பக் காண்கிறோம். அந்த முறையில்தான், தமிழின் இனிமையை ஓசை நயத்தின் வழியாகக் காட்ட முயன்று தோற்பவர்கள், அந்த முறையில் வெற்றி கண்டோரைக் காணும் போது கொதிப்புற்றுச் சுடு சொல் வீசுகின்றனர்.

தம்பி, சம்பத்திடம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வேடிக்கைக்காகக் கேட்டாராம். "என்னடா சம்பத்து, உங்கள் அண்ணாத்துரை, அடுக்குமொழி பேசுகிறான். எதற்காக? அடுக்கு மொழி பேசினால்தான் இயக்கம் வளருமா? சீனியும் பாதாமும் சுவை தராதா, அதனைக் கூட்டிக் கலக்கி "ஜிலேபி' யாக்கினால் மட்டுந்தான் இனிப்பளிக்குமா? அதுபோல, இயக்கக் கொள்கைகளை மெருகு மெட்டு இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொன்னால் உண்மை விளங்காதா. அதை விட்டு, அதனை அழகுபடுத்துகிறேன், சுவை கூட்டுகிறேன், அடுக்குமொழி தருகிறேன், ஓசை நயம் காட்டுகிறேன் என்று ஏன் உங்கள் அண்ணா கூறித் திரிகிறான்?'' என்று கேட்டாராம். சம்பத்து "சரிதானய்யா, "ஜிலேபி' யைச் சரியானபடி செய்யத் தெரிந்தவர்கள் செய்து தரட்டுமே, அதனால் என்ன? உங்கள் சீனியும் பருப்பும், "ஜிலேபி' வடிவம் எடுப்பதால், சுவைகெட்டா விடுகிறது?'' என்று திருப்பிக் கேட்டிருக்கிறான். அந்தப் பெரியவர். சம்பத்தின் வாதத் திறமையைக் காண்பதற்கே கேள்வி கேட்டவர், வயிற்று வலிக்காரரல்ல. எனவே அவர் மகிழ்ச்சியுற்று, முதுகில் தட்டிக் கொடுத்து, "பொல்லாத பயல்! போக்கிரிப் பயல்!' என்று செல்லம் பொழிந்தார்.

ஓசை நயம் குறித்து நம்மீது குறை கூறுவோர், நம்மைக் குறை கூற இதுவரையில் ஓராயிரம் காரணங்களைச் சிரமப்பட்டுத் தேடித் தேடி அலுத்தவர்கள் - ஒவ்வொன்றும் கிளம்பும் வேகத்தைவிட அதிக வேகமாக மடிந்தொழியக் கண்டு மன வேதனையுற்றவர்கள். எனவே அவர்கள், மொழியை நாம் கையாளும் வகை பற்றிக் குறை கூறிப் பேசுவது குறித்து நாம் கவலைகொள்வதற்கில்லை. குழலும் யாழும் குழந்தையின் மழலையின் இனிமைக்கு ஈடா என்று கூறினவர் வள்ளுவர், அடா! அடா? காது குடைகிறது, ஏன்தான், இதுகள் கழுதை போலக் கத்துகின்றன, கோட்டான் போலக் கூவுகின்றன என்று குழந்தைகளைப் பேணி வளர்ப்பதில் பொறுமையும் திறமையும் அறியாதவர்கள் அலறக் கேட்கிறோம்; கவலையா கொள்கிறோம்; இல்லை, இல்லை, கைகொட்டிச் சிரிக்கிறோம்.

முரசொலி, வீரர்க்கு மகிழ்ச்சி அளிக்கிறது, வீணில் உண்டு கொழுத்து இருப்போருக்கோ! ஐயோ முரசு அறைகிறார்களே, போரல்லவா மூளும் போலிருக்கிறது என்று திகில் பிறக்கிறது. எனவே, அவர்கள் முரசு முழங்கிடும் போது அதிலே ஓசை நயம் காண்பதில்லை.

சதங்கைச் சத்தம் கேட்டதும், சாலைக்கும் சோலைக்கும் அதற்குள் பல நூறுதடவை நடந்து நடந்து அலுத்துப் போய்ச் சலித்துக் கொண்டுள்ள காதலன், புன்னகை கொள்கிறான், காதவருகிற ôள், ஓசை நயம் அதனைத்தான் அறிவிக்கிறது என்று. காதலிக்குப் பதிலாக வேறோர் காரிகை அங்கு வந்து, தந்தை தடுத்து விட்டார், தத்தை இன்று வரமாட்டாள் - என்ற செய்தியை அளித்தால், ஓசை நயத்தின் விருந்துண்டவனே வேம்பு தின்றவனாகிறானல்லவா!

ஆலயமணியோசை, ஆலைச் சங்கொலி, சோலைக் குயிலின் கூவல், காலையில் காகம் கரைதல், கன்று தாயை அழைத்தல் ஓசை நயம் ஒவ்வொன்றில் ஒவ்வொருவருக்கு, அவரவர் இயல்புக்குத் தக்கபடி கிடைக்கத்தான் செய்கிறது. எனவே "ஓசை நயம்' என்பது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதேபோது. . . .

அதோ பார் குகை
அங்கு முடிப்பேன் என் பகை
அறிவாயோ, என்னிடம் தோற்றவர் தொகை
ஆயிரம் உண்டு போர் வகை!!

குகை - பகை - தொகை - வகை மேலும்கூடக் கூட்டிக் கொள்ளலாம், சிகை, நகை என்றெல்லாம்.

ஓசைநயம் தமிழில் நிரம்பக் கிடைக்கும் - ஆனால் அதை மட்டுமே நம்பி, "நடை' காட்டினால், சிறிது நாட்களில், தமிழின் இனிமைபற்றி அனைவரும் இன்று ஏற்றுக் கொண்டிருக் கிறார்களே, அதற்கேகூட ஊனம் வந்து விடும்.

ஓசை நயம் - அடுக்குத் தொடர் - இரட்டைக் கிளவி - போன்றவைகள், பூங்காவிலுள்ள கவின் மலர்கள் போன்றவை!

தாமாக மலர வேண்டும் - மணமுள்ளவைகளைப் பதமாகப் பறித்துப் பக்குவமாக மாலை தொடுக்க வேண்டும் - அப்போதுதான் கவர்ச்சி கிடைக்கும்.

ஓசை நயத்தை எப்படியும் பெற்றுத் தீர வேண்டும் என்று முயற்சித்தாலோ, காது குடைச்சல் ஏற்படுவது மட்டுமல்ல, மொழிக்கு ஏற்பட்டுள்ள பெருமதிப்பும் குன்றும், குறையும்.

கழுதூர்
பழுதூர்
தொழுதூர்
வழுதூர்

தம்பி, இந்தப் பெயர்ப் பட்டியலைப் பார்த்தாயா? ஓசை நயத்துக்காகவே வேண்டுமென்றே இட்டுக்கட்டியது போலல்லவா தோன்றுகிறது?

குகை
பகை
தொகை
வகை

என்று தேடிப் பிடித்திழுத்து, கூட்டிக் கலக்கித் தருவது போலவே வழுதூர், தொழுதூர், கழுதூர், பழுதூர், கற்பனைக் கலவை என்றுதான் எண்ணிக்கொள்வாய்; ஆனால், உண்மை யிலேயே இந்தப் பெயர்கள் கொண்ட ஊர்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அனைத்தையும் ஒருசேரக் கூறும்போது குகை, பகை, தொகை, வகைபோல, வேண்டுமென்றே ஓசை நயத்துக்காகவே கூறப்படுபவை போலத் தோன்றும்.

ஓசை நயத்தில் இயல்பாகவே அமைந்து, பொருள் செறிந்து, பொலிவு தருபவையே தேவை. பொருளற்று, பொலிவற்று வலிந்து கொண்டு வருவது, மொழிக்கு நாமே நம்மையும் அறியாமல் செய்துவிடும் தீங்காகும்.

ஓசை நயம் உயர்தரமாகவும், இயற்கைக்கு முற்றிலும் பொருந்திய தன்மையிலும் அமைந்துள்ள காப்பியங்களும் பாக்களும், தமிழ் மொழியில் உள்ள அளவு, பிற மொழிகளிலே உண்டா என்பது சந்தேகமே. .

மொழி வளமுள்ளதாகவும் நெடுங் காலமாகப் புலவர் பெருமக்களால் வளர்க்கப்பட்டதாகவும் இருந்தால் மட்டுமே, சுவையும் பொருளும் ஒருசேரத் தரவல்ல ஓசை நயம் - அடுக்குத் தொடர் ஆகியவை கிடைக்கும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நமக்கு அந்தச் செல்வம் நிரம்ப இருக்கிறது. கண்டறிவதும் கொள்வதும் எளிது; கொண்டதைப் பொருள் உணர்ந்து தருவது கடினம்; எனினும் இயலாததன்று. எப்படியும் "ஓசை நயம்' தந்தாக வேண்டும் என்ற "மன அரிப்பை'ச் சிறிதளவு அடக்கிக்கொண்டால் போதும், உயர்தரமான, "ஓசை நயம்' கிடைக்கும்.

என்ன அண்ணா! தமிழாசிரியர் "வேலை'யைத் துவக்கி விட்டாயே என்று கேட்கிறாயா, தம்பி!

அடுக்கு மொழியாலும், ஓசை நயம் காட்டியும், மக்களை மயக்கி அவர்களை ஆகாத வழியெலாம் அழைத்துச் சென்று ஆன்றோரும் சான்றோரும் அமைத்தளித்த அறநெறியை, அருள் நெறியைக் கெடுத்தொழிக்கிறோம் என்றோர் பழி படர்ந்திருக் கிறதல்லவா, நம்மீது; அது பற்றிய "விளக்கம்' விரும்பினார் ஒரு தம்பி! அவருக்குக் கூறுவதை உனக்கும் காட்டுவோமே என்ற எண்ணத்தில் இதை எழுதினேன்.

கலை
சிலை
வலை
நிலை
உலை
மலை
தலை
இலை

இவை, சிறு சிறு மாற்றங்கள் செய்து விட்டால்,

காலை
மாலை

என்று புதுவடிவம் மட்டுமல்ல, பொருளே மாறி விடுகின்றன!

மிகக் குறைந்த அளவு எழுத்தில் மாற்றங்கள் செய்து, முற்றிலும் வேறான பொருள் பெறத்தக்க வகையில், தமிழ் மொழி, அழகுற அமைந்திருப்பதைக் காணும் போது, நமக்கெல்லாம் பெருமையே பிறக்கிறது.

ஆனால், இவைகளை ஒரே இடத்திலே கூட்டி வைத்துக் காட்டியாக வேண்டுமென்ற "மன அரிப்பு' ஏற்பட்டுக் கலை வலை என்பார், சிலைக்கும், உலைக்கும், மலைக்கும், தலைக்கும், இலைக்கும் ஓலைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் உள்ளவர்கள் என்று ஒரு தொடர் கட்டிக் காட்டி, இதிலே கலை, சிலை, வலை, நிலை, உலை, மலை, தலை, இலை, ஓலை, அத்தனையையும் அடைத்துக் காட்டி இருக்கிறேன், எப்படி என் திறம்? என்று கேட்பது மொழிக்குத்தான் பெருமை தருகிறதா, அதைக் கையாள்வோருக்குத்தான் பெருமை தருமா?

நாம், ஓசைநயம் காட்டி, அடுக்கு மொழி பேசி, மயக்கி விடுகிறோம், என்று குறை கூறுவோரில் பலர், ஓசை நயமும் அடுக்கு மொழியும் இவர்களுக்குத்தானா, எமக்கும் எளிதுதான் என்று கூறி, வேட்டையாடி, நான் இப்போது காட்டிய "தொடர்' போன்றவைகளைக் சுட்டிக் காட்டுகிறார்கள்; விலைபோகாதது கண்டு கோபமும் கொள்கிறார்கள்.

துடுக்குத்தனமாக
அடுக்குமொழி பேசுவோரை
மடக்குவதற்கு
வெடுக்கு மொழி பேசி
முடுக்குடன் நான் வந்தால்
தடுக்கும் பேர்வழி யார்?

நமது "அடுக்கு மொழி'யைக் கண்டிக்கத் துடுக்கும் அடுக்கும், மடக்கும் வெடுக்கும், முடுக்கும் தடுக்கும் சரமாரியாகக் கிளம்புகின்றன. எல்லாம் குறி தவறி விடுகின்றன, கூரும் மழுங்கிப் போகின்றன.

"அடுக்கு மொழி' ஆகாது என்பதாலோ, அது தவறு என்பதாலோ அல்ல, பிறர் அது குறித்து, நம்மைக் கண்டித்துப் பேசுவது. அடுக்குமொழி பேசவேண்டும் என்பதுதான் அவர் கட்கும் உள்ள ஆவல்; ஆனால் அது சுவைபடவும் பொருள் தரவுமான முறையில் நம்மிடம் இருப்பது கண்டு, இது இவர்களிடம் இருக்கிறதே என்ற எரிச்சலில் பழம் புளிக்கிறது என்கிறார்கள்! வேறொன்றுமில்லை.

அவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும், நாம் மொழியின் அழகு விளங்கிடும் வகையான அடுக்குமொழியின் ஓசை நயத்தினை விட்டு விடவும் தேவையில்லை; ஓசை நயமும் அடுக்கு மொழியும் இருந்தால் மொழி அழகு பெறும் என்பதற்காகவே, தேடித் திரிந்து கூட்டில் அடைத்து வைத்து அழகு பார்க்கவுந் தேவையில்லை.

இருளைக் கீறிக் கொண்டு செல்லும் போதுதான், மின் மினியே அழகளிக்கிறது; மின்மினி ஒளிதருவது கண்டு, அதனைக் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்து வைத்து, அழகு காண முயற்சித்தல் சரியல்ல.

ஓசை நயம் தமிழ் மொழிக்கு மட்டுமே நிரம்பவும் நேர்த்தியுடனும் இருக்கிறது என்பதற்காகவே, அம் மொழி வேறெல்லா மொழிகளையும்விட உயர்ந்தது என்று மார்தட்டத் தேவையுமில்லை; அது அழகுமாகாது. இருபத்து ஆறு எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கில மொழி இன்று, உலக அரங்கம் எங்கணும் உயர்வு பெற்றுத் திகழ்கிறது; மறப்பது கூடாது.

கா
மா
வா
தா
போ
பா
பூ
தை
வை
கை
தீ

நீ
சீ
தூ

இப்படி ஒரே எழுத்துக்கூடத் தமிழ் மொழியில் பொருளளிக்கும் திறம் பெற்றுத் திகழக் காண்கிறோம்; எனினும் இதனை வேண்டுமென்ற ஒரு கூட்டுக்குள் பிடித்திழுத்துப் போட்டுக் காட்ட "நடை' தேடுவது நல்லதல்ல; அதாவது அளவும் முறையும், தேவையும் அறிந்து பயன்படுத்தினால், எழிலும் சுவையும் நிரம்பக் கிடைக்கும்; தவறினால் எரிச்சல் கிளம்பும். ஏளனம் பிறக்கும்.