அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கிளிக்குப் பச்சை பூசுவதா?
2

முறையுடன் தந்திடின் எத்துணை எழில் கிடைக்கிறது என்பதைத் தம்பி, இதோ இந்தப் பள்ளு எடுத்துக் காட்டுகிறது - பார்.

வானக் குரிசில் வள்ளலாய் - வரைக்
கோனைப் பரிசு கொள்ளலாய்
வழங்கு மாறும் புறப்பட்டே - புனல்
முழங்கு மாறும் தலைப்பட்டே
தானக் களிறு படிந்திடக் - கொலை
ஏனக் களிறு மடிந்திடத்
தழையின் ஆரம் உந்தியும் - பசும்
கரையின் ஆரம் சிந்தியும்
கானக் குளவி அலையவே - மது
பானக் குளவி கலையவே

முக்கூடற்பள்ளு தரும் ஓசை நயம் இங்ஙனம் அமைந்திருக்கிறது. எனவே ஓசை நயம் எற்றுக்கு என்று கேட்போர் பற்றி நாம் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் முறையற்ற ஓசை நயம் கூடாது என்ற எண்ணம் நமக்கு எப்போதும் துணை நிற்க வேண்டும், இல்லை என்றால்,

பள்ளாம் பள்ளு
தள்ளு தூரத் தள்ளு

என்று "விளையாட'த் தோன்றும் - துவக்கத்தில் அது விலை போகவும் செய்யும். பிறகோ மொழியின் அழகுக்கு நாமே ஊறு செய்கிறோம் என்ற உணர்வு வந்து தாக்கும்.

"கூட்டுப் புருவம்' சில குமரிகளுக்கு இருந்திடக் கண்டிருப்பாய் - புருவமே இப்போது அருமையாக மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாக இருக்கிறது - எனவே "கூட்டுப் புருவம்' நிரம்பக் கிடைத்திடாது; ஆனால் அது இயற்கையாக அமைந்தாலோ அந்த அணங்குக்கு அது தனியானதோர் அணியாகவே விளங்கிடும் - ஆனால் அதனைக் கண்டு, சரி, சரி, கூட்டுப் புருவம் அழகளிக்கிறது, எனவே இரு புருவங்களையும் மை கொண்டு இணைத்து, கூட்டுப் புருவம் ஆக்கிக் காட்டுவோம் என்று செய்தால் தூரத்துப் பார்வைக்கு அழகளிக்கக் கூடச் செய்யும். அருகே செல்லச் செல்ல, "மைவண்ணம்', காண்போம், கண்டு, இவ்வளவுதானா! என்போம்; ஏளனம் கூடச் செய்யத் தோன்றும், நமக்கு ஏற்படுவதைவிட அதிகச் சங்கடம் கூட்டுப் புருவம் தீட்டிக் கொண்ட குமரிக்கு ஏற்படும், வண்ணம் எப்போது கைபட்டுக் கலைந்து விடுகிறதோ என்ற அச்சம் குடையும்.

மொழியின் ஓசை நயம் குறித்தும், இதே கதிதான்.

தம்பி! சினிமாக்களில் ஒரு முறையைக் கையாளுகிறார்கள்.

அங்குக் கதைகட்டு ஏற்றவகையில் புருவங்கள் தேவைப் படுகின்றன! குனித்த புருவம், கூட்டுப் புருவம், நெரித்த புருவம், படர்ந்த புருவம், வில்லுப் புருவம் - இப்படிப் பலப்பல.

நல்ல பெண்மணியின் புருவம் வில்போல் வளைந்து இருக்கும் - இருக்க வேண்டும். காதகிக்குப் புருவம் அரவம்போல அச்சமூட்டுவதாக அமைதல் வேண்டும். அப்படி அங்கு ஒரு முறை!!

எந்த ஏந்திழையிடம் இத்தனை புருவங்கள் கிடைக்க முடியும். எனவே அங்கு முதலில், ஏந்திழையின் இயற்கைப் புருவத்தை எடுத்து விடுகிறார்கள், வழித்தெடுத்து விடுகிறார்கள் - இயற்கை பறிக்கப்பட்டான பிறகு, எழில் காட்டும் கலைஞன் தன் இச்சைக்கு ஏற்ப, புருவங்கள் அமைக்கிறான் - காதளவு வளர்ந்த கண்ணினை என்னென்பேன், காமன் தன் கருப்புவில் போன்ற புருவத்தைக் கண்டேன்' அதன் அழகை எவ்வாறு, கூறுவேன் என்றெல்லாம் பிறகு திரைக் காதலன் பாடம் படிக்கிறான். கொட்டகைக் கோமான்கள் குதூகலமடை கிறார்கள். ஆனால் உண்மையில் இயற்கையாக இருந்த "புருவம்' பறிபோய் விட்டது, இரவல் புருவம் பிறர் காணும்போது எழில் காட்டும் வகையில் அமைக்கப்படுகிறது.

தமிழ் மொழியிலும், தம்பி, அதற்கென்று இயற்கையாக அமைந்துள்ள, எழில் முறைகளைக் களைந்தெறிந்துவிட்டு, பிறமொழிச் சொற்களையும் முறைகளையும் கலந்து புதிய எழில் காட்டுகிறோம் என்று கூறுவாருளர்.

சினிமாக்களுக்குச் சிதைத்தலும், சேர்த்தலும், கூட்டலும், குறைத்தலும், மறைத்தலும் மிகுத்தளித்தலும் தேவைப்படுகிறது; அந்த உலகத்து இலக்கணம் அது; குறை கூறுவதற்கில்லை; ஆனால், மொழித் துறையில் இந்த துறையைப் புகுத்தி, உள்ள எழிலை உருக் குலையச் செய்து, பாழ்படுத்துவது அடாத செயலாகும். ஆனால் "மேதை'கள் பலர், பிற மொழிச் சேர்க்கையும், பிற முறைகளின் சேர்க்கையும், தமிழ் மொழியை வளமாக்கும் என்று காரணம் காட்டி, இந்தத் தீய செயலைச் செய்து வருகின்றனர்.

இதனை அறிந்து, தடுத்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பணியாற்றும் நம்மாலேயே கூட, (சற்று அதிகமாகவே என்னால்!) பிறமொழிச் சேர்க்கையையும் பிற முறைகளின் சேர்க்கையையும் நீக்கிப் பேசவும் எழுதவும் முடியாமலாகி விட்டிருக்கிறது - ஏனெனில், நாம் தூய தனித் தமிழ் சித்திரவதை செய்யப்பட்டுப் பிறமொழியும் பிற முறையும் கலந்து பேச்சும் எழுத்தும் "மணிப் பிரவாளம்' என்ற வடிவு கொண்டு, தமிழும் வடமொழியும் குழைத்து வழங்கப்பட்ட நாட்களில் பயின்றவர்கள். எனினும், புலவர் பெருமக்களின் அறிவுரை கேட்டதால், இந்தக் "கலவை' தீது பயப்பது என்று தெரிந்து, தமிழ் மொழிக்கு மீண்டும் தனியானதோர் ஏற்றம் தேவை என்ற தூய நோக்குடன் பணியாற்றி வருகிறோம். எனவே, நம்மாலே முற்றிலும் "தனித் தமிழ்' எழிலைக் காட்ட இயலவில்லை.

நானே, பல தடவைகளில், பேசியான பிறகும், எழுதியான பிறகும். இன்னின்ன சொற்களுக்கு இன்னின்ன தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருக்கலாமே - தவறிவிட்டோமே என்று எண்ணி வருத்தமுறுவதுண்டு. எனினும், தம்பி, எங்கள் மூலம் நீ இவ்வளவுதான் பெறலாம் - அதிகம் எதிர்பார்க்காதே - ஆனால் உன்னாலே முடியும் இந்தக் குறைகளையும் களைய - நாடு உன்னிடம் நிச்சயமாக அதிகம் எதிர்பார்க்கிறது.

ஆரிய மதக் கற்பனைகளுக்கு நிரம்ப இடமளித்து விட்டதால், தமிழ் மொழிக்குரிய இயல்பு எத்துணை கெட்டொழிந்தது என்பதளை அறிய, வேறெந்தத் துறையினையும் விட "உவமை' கூறுகிறோமே, அந்தத் துறையினைப் பார்த்தால், மிக மிக விளக்கமாகத் தெரிந்து விடும்.

சனியனே! உயிரை வாங்காதே.
எமன் போல வந்து தொலைத்தான்.
பெரிய அரிச்சந்திரன்தான், வாயை மூடடா!
துர்வாசர் போலச் சீறுகிறான்.
போதும், போய்ப் படுத்துத் தூங்கடா, அனுமாரே!
துரோபதை போலக் கதறுகிறாள்.
கலியுக பீமசேனன் என்று அவனுக்குப் பெயர்.
ஆசாமி, அர்ஜுனன் தான்!
அவள் ரம்பையேதான்.
அமிர்தம் போல இனிப்பான பானம்.
குபேர பட்டினம் போலக் காட்சி அளித்தது.

நிரம்பப் பேசுகிறோம், இதுபோல மேடைகளிலும், வீடுகளிலும், பழமை விரும்பிகள் மட்டுமல்ல, நாம் கூட.

கொல்லிமலைப் பாவை! என்று கூற நமக்கும் தோன்றுவ தில்லை; கூறிடின் புரிந்துகொள்வோரும் புலவர் அவையிலே மட்டுமே கிடைப்பர்; மக்கள் மன்றம் மறந்தேவிட்டது.

கொல்லிமலையில் ஓர் சித்திரப் பாவை செதுக்கப்பட்டிருந்ததாம்.

அத்துணை எழிலாம், அப்பாவைக்கு.

தொலைவிலிருந்து காண்போர், அழகால் ஈர்க்கப்பட்டு, அருகே செல்வராம், காண்பராம், உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டு நிற்பராம், நிற்பராம், அந்த அழகு அவர்தம் உயிர் குடித்திடும் வரையில் நிற்பராம்.

மயக்கி மாய்த்திடும் பொலிவு, கொல்லிமலைப் பாவைக்கு! ஆனால், நாம் இதனை "உவமைக்கு'க் கையாண்டதுண்டோ? இல்லை; ஏன்? நமது எண்ணத்திலேயே, பிறமொழிக் கருத்துக் கலக்கப்பட்டு விட்டதால், அழகு பற்றியோ, அதனால் வந்துறும் அவதிபற்றியோ எடுத்துரைக்க நினைக்கும் போதெல்லாம் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இவர்களே நமது நாவில் நின்றுவிடுகிறார்கள். தமிழ் மொழியில் காணக் கிடக்கும் கொல்லிமலைப் பாவையை மறந்தே விட்டோம். இயற்கைப் புருவத்தை எடுத்தான பிறகு, கூட்டுப் புருவம், மிரட்டும் புருவம், எல்லாம் அமைத்துக் கொள்கிறோம்.

எனவேதான், தம்பி! தமிழ் மொழியில் காணக் கிடைக்கும், "ஓசை நயம்' போன்ற எந்த எழிலையும் இழந்துவிடக் கூடாது என்று கூறிவருகிறோம்; அதேபோது, அந்த எழில் வேண்டும் என்பதற்காகவே, "இட்டுக் கட்டியும்' "இழுத்துக் குழைத்தும்' தரக்குறைவு ஏற்பட்டு விடும்படியும் செய்துவிடக் கூடாது என்கிறோம். தமிழ், எழிலும் பயனும் அளித்திடும் இன் மொழியாகத் திகழ்வதன் பொருட்டு முந்தை நாளில் புலவர் பெருமக்கள் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகள் பலப்பல.

செதுமொழி சீத்த செவி செறுவாக
முதுமொழி நீராப் புலன் நாஉழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர
செவியில் பொல்லாத சொற்களே புகுவதில்லை
செவிகளின் வழி பாய்வது சான்றோர் செய்யுட்களாம்!

நாவினையே ஏராகக் கொண்டு புலவர் உழுதுண்டனர்.

அவர்தம் மொழிகள் பழங்கதைகளாக இல்லை; புது மொழிகள் தந்தனர் - அவைதமை மக்கள் கொள்ளைகொண்டு உண்டனர்.

இத்துணைச் சிறப்புடன் புலவரும் அவர்தம் உழவின் பலனை உண்டு களித்த மக்களும் வாழ்ந்திருந்ததனால், நாம் இன்று ஓர் உயர்தனிச் செம்மொழிக்கு உரிமையாளரானோம். உலகிலே எத்துணையோ தேயங்கள், இத்தகு மொழி பெற்றோமில்லையே என்று வாடிக் கிடந்திடுவதனையும், பிறமொழிகளின் துணையினைத் தேடி அலைவதனையும் காண்கிறோம்.

கள்ளக் கடத்தலைக் குறித்திட "இந்தி'யில் சொல்லொன்று கிடைக்காது திகைத்தனர் ஆட்சியாளர் என்றோர் செய்தி, கண்டோமல்லவா சின்னாட்களுக்கு முன்பு.

இயலாமையை இந்த அளவுக்குப் பெற்றுக் கிடக்கும் "இந்தி' மொழிக்கு ஏற்றம் கிடைக்கிறது; தமிழ் இனத்துதித்தோரில் சிலர் அம்மொழி எம்மொழி என்றும் பேசிடக் கேட்கிறோம். கருத்தினை விளக்கிட எழுத்து ஒன்று போதும், ஈரெழுத்து மட்டும் போதும் பொருளளிக்க, சிறு சிறு எழுத்து மாற்றங்கள் மூலமே, பொருள் மாற்றம் பெரிதும் காட்டிட இயலும், அதனையும் அழகுபட, ஓசை நயத்துடன் எடுத்துக் கூற முடியும் என்ற இத்துணைச் சிறப்புடன் தமிழ்மொழி இருந்திடக் காண்கிறோம், எனினும் அதற்கென்று ஓர் தனி இடம், உயரிய இடம், உரிமையான இடம், பெற்றளிக்கும் திறனுமற்றுக் கிடக்கிறோம்.

கானவன் யானைமீது வீசிய கவண்கல் வேங்கையின் பூவைச் சிதறி, ஆசினிமென்பழத்தை உதிர்த்து, தேனின் இறாலைத் துளைப்படுத்தி, மாவின் குலையை உழக்கி, வாழையின் மடலைக் கிழித்து, பலாவின் பழத்துட் சென்று தங்கும்.

குறிஞ்சிக் காட்சியினைக் கூறுகிறார் புலவர்.

இவ்வளவுதானே, உமது புலவர் பெருமகனாரால் கூற முடிகிறது; இதோ கேளும் எமது புராணீகர் கூறுவதை, எம் பெருமான் ஸ்ரீராமச்சந்திரருடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய "அஸ்திர'மானது புயற்காற்றெனக் கிளம்பிச் சென்று, இராவணன் மார்பைத் துளைத்து, உயிரைக்குடித்து, அவன் உள்ளத்தில் எங்கெங்கும், சீதாதேவி மீது காமக் கருத்து இருக்கிறது என்று தேடிப்பார்ப்பது போல உள்ளத்தைச் சல்லடையாகத் துளைத்து, பிறகு காரியம் வெற்றிகரமாக முடித்தான களிப்புடன், கடலிற் சென்று குளித்துக் கறை போக்கிக் கொண்டு, மீண்டும் பறந்து வந்து காகுத்தன் அம்பறாத் தூணியில் சேர்ந்தது, என்கிறார் நம்பெருமாள் ஜயங்கார்!

மொழி, வரிவடிவத்தால் மட்டுமல்ல, மொழி மூலம் தரப் படும் கருத்துக்களின் வகை மூலம், ஒன்றுக்கொன்று எவ்வளவு மாறுபட்டன என்பது, குறிஞ்சியைக் காட்டிய நந்தமிழ்ப் புலவர் தரும் பாவுடன், இராமனின் வீரத்தை விளக்கிடப் புராணீகன் தரும் ஆரியத்தினை ஒப்பிட்டுப் பார்த்தாலே விளங்கிவிடும்.

புராணீகனின் கருத்தினை மறுத்திடாமல், ஆய்ந்து பாராமல், ஏற்றுக் கொள்வதாயினும், இராமனுடைய "தெய்வீகம்' வேண்டுமானால் விளங்குமே தவிர, பா நயமோ, இயற்கை உண்மையின் அழகோ அதிலே துளியும் கிடைக்காது. இராமனுடைய "அஸ்திரம்' மட்டுமே புராணீகன் சொன்னபடி செய்ய முடியும்! குறிஞ்சி குறித்துப் பாடிய புலவன் காட்டும் கவண்கல் இருக்கிறதே தம்பி, அது நீயும் நானும், எடுத்து வீசினாலும், செய்யுளிலே காட்டப்படும் செயலைத்தான் முறைப்படி செய்யும்; அவ்வளவு இயற்கையோடு ஒட்டியதாகக் கருத்தினைத் தந்துள்ளார் புலவர்.

பெரிதும், கண்டகாட்சிகளைக் காண்பதால் ஏற்படும் கருத்துடன் இணைத்துத் தருவதற்கே பண்டைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பினர்.

காடுகளையும் கானாறுகளையும், ஓடைகளையும் அவை தமில் துள்ளும் மீன்களையும், குவளையையும் தாழையையும், யானையையும் பெடையையும், செங்கால் நாரையையும் கருங்குயிலையும், கடுவனையும் மந்தியையும், உதிர்ந்த பூக்களையும் உலர்ந்த தருக்களையும், பாய்ந்தோடும் அருவிகளையும் பட்டுப்போன மொட்டுக்களையும் காணும் போதெல்லாம் அவர்கட்குக் கருத்து ஊற்றெடுத்திருக்கிறது, அத்துணைக் கருத்தும், உண்மையோடு ஒட்டியவையாக, கேட்போர் மறுக்கொணா வகையினதாக, கேட்டு இன்புறத் தக்கதாக அமைகின்றன. இந்தச் சிறப்பு புலவர் தேடித் தந்தது; புராணிகன் தேடித் தருவது அஃதன்று.

கானவன் கவண் வீசுகிறான் தம்பி! துவக்கத்திலேயே, புலவர் கானவனைக் கவண் வீசச் சொல்கிறார், ஏனெனில் வீச வேண்டிய முறைப்படி அதற்கேற்ற பயிற்சிபெற்ற நிலையிலுள்ளவன் வீசினாலல்லவா, கவண்கல் செய்ய வேண்டியதைச் செம்மையுறச் செய்யும்.

தாக்க வந்தவனை, ஆட்டுக் குட்டியைத் தூக்கி எறிவது போல எறிந்தான் - என்ற கருத்தை அளிக்க முற்பட்டால் மல்லன் என்ற சொல்லைக் கோத்தாக வேண்டுமல்லவா, ஏனெனில் மல்லன் செய்யக் கூடிய காரியமல்லவா, அது; அது போலத்தான், யானைமீது வீசவேண்டும் கல்லினை - எனவே புலவர், கானவனைத்தான் காட்டுகிறார்.

கானவன், கவண்கல் வீசுகிறான் யானைமீது!

புராணீகனுடைய கல் அல்ல அது; எனவே யானை சாக வில்லை, மிரண்டோடி விட்டது; வீசப்பட்ட கல்லோ வேங்கை மரத்தின் மீது உராய்ந்து செல்கிறது. வேகமாகச் செல்வதால், பூத்துக் கிடக்கும் பூ சிதறுகிறது. கல் சென்று கொண்டிருக்கிறது, ஆசினிப் பழத்தை உதிர்க்கிறது, தேன் அடை துளைக்கப் படுகிறது, மாவின் குலை தாக்கப்படுகிறது, வாழை மடலைக் கிழிக்கிறது, இறுதியாகப் பலாப் பழத்துட் சென்று தங்கி விடுகிறது.

கல் செல்லும் வழியெலாம் ஒரு முறை கருத்தைச் செலுத்திப் பார் தம்பி, சுவையுள்ள இடம் சேருவாய், கல்லே, சுவை மிகும் பலாப் பழத்தை அல்லவா சென்று சேருகிறது.

வீசப்பட்ட கல்லின் வேகம், படிப்படியாகக் குறையும், வேகம் குறையக் குறைய, அதன் செயல்படும் வலிவும் குறையும் என்ற உண்மையை, யானைமீது வீசப்பட்ட கல், வேங்கை மரத்துப் பூக்களைச் சிதறச் செய்து, ஆசினிப் பழத்தை உதிரச் செய்து, தேன் அடையைத் துளைத்து, வாழை மடலைக் கிழித்து, இறுதியில் பலாவிடம் அடைக்கலம் புகுந்து விடுவதாகக் கூறி விளக்கும் அழகினைப் பார். யானை மீதே கல் பட்டிருந்தால், கல் பிறகு யானை மீது மோதுண்ட காரணத்தால், மேலால் செல்லாது, கீழே "தடும்' என விழும்; பிறகு வேங்கையும், ஆசினியும், மாவும், பிறவும், புலவர்தம் பாவினிலே வரத் தேவை ஏற்பட்டிராது.

வேங்கையின் மலர், ஆசினிப் பழம் இவற்றினைச் சிதறவும் விழவும் செய்தாரே தவிர, இதற்குள் கல்லின் வேகம் குறைந்து போயிருக்கும் என்ற இயற்கை உண்மையை உணர்ந்தவராதலால், மாங்குலையின் மீது கல் பட்டபோது, உலுக்கி விடும் அளவுக்கும், பிறகு வேகத்தால் கிடைக்கும் வலிவு கல்லுக்குக் குறைந்து விடுவதால், வாழை மடலைக் கிழித்திட மட்டுமே இயலுமாகையால், அதனை மட்டும் கூறி, வேங்கை உயரத்துக்கு வேகமாக மேலெழும்பிய கவண்கல், பிறகு ஆசினி, மா, வாழை என்ற அளவுக்குக் கீழே இறங்கி, கடைசியில் பலாவில் சென்று தங்குகிறது - பழம், எனவே, கல் புக முடிந்தது; பலாப்பழம் எனவே அதற்குள்ளேயே ஒட்டிக்கொண்டு விட்டது என்றார். தம்பி! இவ்வளவு இயற்கையோடிணைந்ததாகக் கவிதை தருகிறார்; செய்யுட் சுவையுடன் கூடவே நெந்தமிழ் நாட்டு வளம் தெரிந்திடச் செய்கிறார்.

யானை உலவும் காடுகள்; அங்குத் துணிவுடன் உலவும் கானவர்; அவர்கள் கவண் வீசும் திறம்; ஓங்கி வளர்ந்த வேங்கை மரம்; கனிதரும் மாவும் வாழையும் பலாவும், கானகத்தில்! இவ்வளவு வளம் தமிழகத்தில்; குறிஞ்சிமட்டுமல்ல, எந்த நிலம் பற்றிப் பாடினாலும், இதே முறை - உண்மையை அழகுபட உரைத்திடுவது; இல்லை, தம்பி, உண்மையை உரைக்கிறார், அதிலே அழகு தவழ்ந்து வருகிறது!

இந்தத் "தமிழ்' இனிமை பெற, "இரவல்' எற்றுக்குப் பெற வேண்டும்? புள்ளிக் கலாபம் படைத்த மயிலுக்கு, வான்கோழிச் சிறகாலான தோகை தரவேண்டுமா?! கிளி அழகு பெற, அதற்குப் பச்சை வண்ணம் பூச வேண்டுமா? கேட்க வேண்டாம் தம்பி! கோபிப்பர்! எண்ணிப் பார், அது போதும்!!

அன்புள்ள,

18-3-1956