அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கிழக்கு வெளுத்திடும் வேளை
1

அறிவொளி பரவப் பழமைப் பனி கலையும் !
கொள்ளையடித்த பணத்தில் கொண்டாட்டம் !
ஆண்டவன் அவராக விரும்பும்போதே வரவேண்டும் !
கடவுள் கொள்கையிலே மறுமலர்ச்சி !
யூத இனம் இன்று பழிபோக்கப் பெற்ற இனம் !

தம்பி,

மூன்று கிழமைகளுக்கு முன்பு, பழனியில் பழனி ஆண்டவர் கலைக் கல்லூரியில் பேசும் வாய்ப்புக் கிடைத்தபோது, மாணவரொருவர்,

நான் நினைத்தபோதே நீ வர வேண்டும், முருகா!

என்றோர் "பிரார்த்தனை'ப் பாடலைப் பாடினார். இசை இனிமையாக இருந்தது; பாடல் மட்டுமல்ல; கல்லூரியின் பெயரே எனக்கு இனிமையாகத்தான் இருந்தது; பழனி ஆலய நிதியின் துணையால் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கிறித்தவ சமயத்தார் பெரும் பொருள் செலவிட்டு இங்குக் கல்லூரிகளும் மருத்துவமனைகளும், நடாத்தி, தமது மார்க்கம் அறிவையும் அன்பையும் அடிப்படை யாகக் கொண்டது என்பதனை விளக்கிக் காட்டுகின்றனரே அதுபோல, தமிழகத்துத் திருக்கோயில்களின் தொன்மை குறித்தும் மகிமை பற்றியும், மானியம் குறித்தும் மாநிதி குறித்தும், தேர்த் திருவிழா பற்றியும் தேவாலயக் கட்டட நேர்த்தி பற்றியும் எடுத்துப் பேசிப் பெருமிதம் அடைபவர்கள், அன்பு அரசோச்சிட, அறிவு பெருகிட, ஏன் ஆலயத்தில் முடங்கிக் கிடக்கும் செல்வத்தையும், வருவாயையும் அறிவாலயங்களான கல்லூரி களும் அன்பாலயங்களான மருத்துவமனைகளும் அமைத்திடப் பயன்படுத்தக் கூடாது! அமைக்கப்படும் கல்விக்கூடங்களுக்கு, "தலத்தி'லுள்ள தேவனின் பெயரையே சூட்டிடலாமே - பழனியில் பழனி ஆண்டவர் பெயராலேயே ஒரு கல்லூரி அமைத்திட லாமே! ஏனோ இந்த எண்ணம் அவர்கட்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப வெள்ளி இடபவாகனமும், தங்க மயில்வாகனமும், புதிய நீராழி மண்டபமும் கோபுரத்துக்குப் பொற்கலசமும் அமைத்துத் தமது பக்தியினைக் காட்டியபடி உள்ளனரே! ஏன் ஆலயங்களில் முடங்கிக் கிடக்கும் பொருளைக் "கோயிற் பெருச்சாளிகள் தின்று கொழுத்திடத் துணை நிற்கின்றனர்; இதுவா நெறி வளர்த்திடும் முறை, இஃதோ மனத்தூய்மை தந்திடும் மார்க்கம் என்றெல்லாம் பேசி வந்த நினைவு, அன்று பழனி தேவஸ்தானம் நடாத்திடும் பழனி ஆண்டவர் கலைக் கல்லூரிக்குள் நுழைந்தபோது என் மனத்திலே எழுந்து தவழ்ந்தது.

பழனியில், பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி! எத்தனை பெரிய மாறுதல்! எவ்வளவு ஏற்றமிகு மாறுதல்! தூற்றலைத் தாங்கிக் கொண்டது, பலன் தராமலா போய்விட்டது?

ஆலயத்தைக் காட்டிலும் வேறோர் அறிவாலயம் உண்டோ, ஆலயப் பணத்தைக் கொண்டு அறிவாலயம் அமைக்கச் சொல்கிறானே இந்த அறிவிலி என்று ஆத்திரம் மே-ட்டு ஆர்ப்பரித்தவர்களும்,

ஆலயம் ஆண்டவன் இருப்பிடம்; அருளைப் பெற்றிட வழிகாட்டும் புனித இடம்; இங்கு உள்ள செல்வம், கிடைத்திடும் வருவாய், ஆண்டவனுக்கான "பூஜா' காரியங்கட்கும், "பக்தர்கட் கான' வசதிகட்கும் செலவிடப்பட வேண்டுமேயன்றி, வேறு காரியத்துக்கு - கல்விக்குக் கூடச் செலவிடுவது பாபம் என்று பதறிக் கூறியவர்களும்,

ஆதி காலம்தொட்டு இருந்து வருவதும், ஆகம விதிப்படி அமைக்கப்பட்டதுமான ஆலயத்தில் புதுமுறை புகுத்திட வேண்டுமாமே! இது புரட்சியாமே! பேசுகிறான், கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே! சித்தர்களும் ஜீவன் முக்தர்களும், ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த திருநாடு இது. அவர்களுக்குத் தோன்றாதது, இந்த அறநெறி அறியாதானுக்குத் தோன்றிவிட்டதோ? ஆலயப் பாதுகாப்புக்கும் அம்மையுடன் ஐயன் பவனி வந்திட ஆகிடும் செலவினுக்கும், அபிஷேக ஆராதனைக்கும் செலவிடவன்றோ பக்தர்கள் காணிக்கை தந்தனர், மானியங்கள் அளித்தனர்; அந்தப் பணத்தை வேறு காரியத்துக்குச் செலவிடுவதா! தகுமா! தர்மம் செய்தவர்களின் மனம் என்ன பாடுபடும்! இது களவு! மோசடி! நாசத்திட்டம்! நாத்திகத்திட்டம்!! என்றெல்லாம் பேசி ஏசியோரும், அன்று என் மனக்கண்முன் தோன்றினர்; எதிரிலேயோ நூற்றுக்கணக்கான இளைஞர்கள், ஒளிவிடு விழியும் புன்னகை சிந்திடும் இதழும், அழகளிக்க வீற்றிருந்தனர். கல்லூரி நடைபெற்று வரும் முறை பற்றி. நடத்திச் செல்வோர் மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறினர். என் செவியில் அந்தப் பேச்சு விழவில்லை! பாவி! பழிகாரன்! நாத்திகன்! என்றெல்லாம் முன்பு கிளம்பிற்றே "தூற்றல்' - அந்தச் சத்தம்தான் நிறைந்திருந்தது.

எப்படியோ ஒன்று, பழைய முறைகளை இனியும் விடாப்பிடியாகக் கொண்டிருக்கக் கூடாது, பலன் இல்லை, சமூகம் தாங்கிக் கொள்ளாது; அறிவுக் கதிரொளி பரவப் பரவ பழைமை மூடுபனி கலையத்தான் செய்யும் என்ற எண்ணம் வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது. பழைய முறைகளுக்கும், பழைய கோட்பாடுகளுக்கும் புதிய விளக்கங்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தந்திடும் தேவை வலுவடைந்துவிட்டிருக்கிறது. சொல்கிறோம், கேட்டுக் கொள்கிறார்கள் என்று இறுமாந்து கிடந்த நிலை குலைந்து போய்விட்டது; கேட்பவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாகச் சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கி விட்டிருக்கிறது.

வெண்ணீறு அணிந்ததென்ன
வேலைப் பிடித்த தென்ன?

என்ற பாடலும் ஒலிக்கிறது; கிரேக்க சாம்ராஜ்யம், முக்கோ ணத்தின் இலக்கணம், தக்காணத்தின் தனிவளம், வானவெளிப் பயணம், புதுமுறைப் பாசனம் போன்றவை பற்றிய கருத்தொ-யும் பழனியில் பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி மூலம் கேட்டபடி இருக்கிறது.

கல்லூரி அமைத்தாலும் மருத்துவமனை அமைத்தாலும் "கந்தன்' பெருமை பற்றிக் கசிந்து உருகும் நிலை மட்டும் மாறாது என்பதனைக் காட்டவோ என்னவோ, "முருகனை' வழிபடும் பாட லைப் பாடினார், மாணவர். இனிமையாக இருந்தது என்றேன், விந்தையாகவும் இருந்தது.

முருகா! நீ வரவேண்டும்! என்ற முறையிலே மட்டும் பாடல் அமைந்திருந்தால், வியப்புத் தோன்றி இருந்திருக்காது.

அதே கருத்துள்ள பாடலை அதற்கு முன்பு ஒருமுறை கூடக் கேட்டதாக நினைவு.

என் கவனத்தை ஈர்த்ததும் விந்தையாகத் தென்பட்டதுமான பகுதி,

மயில்மீது வா!

மங்கையை விட்டு வா!

என்பன போன்ற பகுதிகள் அல்ல.

நான் நினைத்தபோதே, நீ வா!

என்ற கருத்து அமைந்த பகுதி.

பாடலாசிரியர் என்ன எண்ணத்தினால் அந்தக் கருத்துப் படப் பாடலை இயற்றினாரோ, நானறியேன்; ஆனால், பலர், ஆண்டவனை வேண்டிக் கொள்வதும், வரவேண்டும் என்று இறைஞ்சுவதும்,

தாங்கள் நினைக்கும்போது

என்று இருப்பதுதான் எனக்கு விந்தையாகத் தென்பட்டது. நினைத்தபோதே - என்று கூறியது உடனே வா! தாமதிக்காமல் வா! என்ற பொருளில் என்பது புரிகிறது. ஆனால், பலர் தாங்கள் அழைக்கும்போதுதான் ஆண்டவன் வரவேண்டும் என்றே பொருள் கொண்டவர்கள் போலச் செயலாற்றி வருகின்றனர்.

எப்போது, ஆண்டவன் வர வேண்டும் என்று விரும்பு வார்கள் பெரும்பாலும்?

பெரும்பான்மையினரான மக்கள், அண்டசராசரத்தை ஆக்கி, காத்து, அழித்திடும் வல்லமை பெற்ற ஆண்டவன் எப்படி இருக்கிறார் என்று பார்த்திடும் ஆவலினால் அல்ல. ஆண்டவனை வரவேண்டும் என்று அழைப்பது. அவர் வந்தாரானால், தனக்கு உள்ள அல்லலைப் போக்குவார், இன்னலை நீக்குவார், இதம் அளிப்பார், வரம் அருளுவார் என்பதால், இல்லை என்று கூறிட மாட்டார்கள் நம்மையொத்த சாமான்யர்கள். பெரியவர்கள் தம்பி! மறுத்துப் பேசுவார்கள்! ஆண்டவனைக் காண எண்ணுவது, அது வேண்டும் இது வேண்டும் என்ற அற்ப ஆசைக்காக அல்ல, வரம் கேட்டுப் பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்துக்காக அல்ல! ஜென்மம் சாபல்யம் பெற! பிறவிப் பிணி ஒழிந்திட! பேரின்பத்தில் திளைத்திட!! அவன் திருவடி நீழலில் சேர்ந்திட! என்றெல்லாம் கூறுவார்கள். அந்தக் கோடி சூரியப் பிரகாசத்தைக் கண்டதும், ஏ! அறிவிலி! உனக்கு மாடுமனை வேண்டும். மன்னனாக வேண்டும், மகன் பிறந்திட வேண்டும் என்ற அற்ப எண்ணங்களா தோன்றிடும்! ஐயனைக் கண்ட அந்த கணமே, ஆசைகள் அற்றுப் போகும், பாசங்கள் மடிந்து போகும், பார்த்திடுவாய், பரவெளியில் கலந்திடுவாய், நான் - எனது எனும் அகங்காரம் அழிந்துபடும்! அவனே எல்லாம்! என்ற மெய்ஞ்ஞானம் உதித்து விடும்! மதியிலி! அவனைக் கண்டான பிறகு "நீ' என்று தனியான நிலையும் நிலைக்குமோ! என்று பேசி மெய் சிலிர்க்கச் செய்திடும் மேதைகள் உள்ளனர், இப்போதுகூட! நான், தம்பி! சராசரி களைப் பற்றிப் பேசுகிறேன்; "நாம் சொல்லுவது எல்லாம் சரி!'' என்று பேசிடும் உபதேசிகளைப் பற்றி அல்ல.

ஆண்டவனே வர வேண்டும்! என்று நெஞ்சு நெக்குருக அழைத்திடுபவர்கள், தம்மை வாட்டி வதைத்திடும் இன்னலைப் போக்குவார் என்ற நம்பிக்கையுடனும், போக்க வேண்டும் என்ற முறையீட்டுடனும்தான், அழைக்கிறார்கள்.

இன்னல் வந்துற்றபோது இறைவனை அழைக்கிறார்கள், இன்னலைத் துடைத்திடுக என்று துதிபாடுகிறார்கள்.

ஆண்டவனே! தீராத நோயால் தாக்குண்டு தவிக்கிறேன் உட்கொள்ளாத மருந்தில்லை! பார்க்காத மருத்துவர் இல்லை, எனக்கு வந்துற்ற கொடுநோயோ போவதாகத் தெரியவில்லை! உம்மைத்தான் நம்பி அழைக்கிறேன்! என்றோ,

உழைத்து உழைத்து உருக்குலைந்து போகிறேன், வாழ வழி இல்லை! நடைப்பிணமாகிக் கிடக்கிறேன். காத்திடுவார் இல்லை! ஐயனே! உன்னைத்தான் நம்பி அழைக்கிறேன், என் கஷ்டத்தைத் துடைத்திடு என்றோ,

உன் அருளால், ஆண்டவனே எல்லாம் இருக்கிறது எனக்கு! மாடமாளிகை இருக்கிறது! மணி விளக்கென ஒளிவிடும் கண்ணினாள் எனக்கு மனையாட்டியாக வாய்த்து இருக்கிறாள்! ஆனால், மகேசா! மழலைச் செல்வத்தை மட்டும் நான் பெற்றேனில்லை. பாவி நான் என் செய்வேன்? உம்மைத்தான் நம்பித் தொழுது நிற்கிறேன்! உமையொரு பாகா? வந்திடு! எனக்கோர் வரமது தந்திடு! மகனொருவனை ஈந்திடு என்றோ, இதுபோன்ற ஏதேனும் ஓர் "வரம்' பெற்றிடவே ஆண்டவனை நாடுவர் தேடுவர். இதுவே "வாடிக்கை'யாக, நடைமுறையாக இருந்து வருவதனை எவரும் மறுத்திட இயலாது தத்துவ ஏடுகளில் உள்ளவை இந்த வாடிக்கைக்கு முற்றிலும் மாறானதாக இருக்கக்கூடும். நான் தத்துவ விசாரணையில் ஈடுபடவில்லை, நடைமுறையில் உள்ளவற்றினை எடுத்துக் காட்டும் பணியினில் ஈடுபட்டிருக்கிறேன். எனவே, அதனைக் குறித்துக் கூறுகிறேன். தத்துவங்களைத் தாளச் சத்தத்துடன் பேசி மகிழ்விப்போர், வேறு உளர்.

இன்னலைத் துடைத்திடும்படி இறைவனை வேண்டி அழைப்பது மட்டுமல்ல, ஏதேனும் இக்கட்டிலே சிக்கிக் கொள்கிறபோதும், இனி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்ற திகைப்பு மே-டுகிறபோதும் தன்னைக் காப்பாற்றிட ஆண்டவனை அழைப்பவர்கள் நிரம்ப உண்டு.

தான் நியாயமா - நேர்மையாக நடந்து கொண்ட போதிலும், பிறரால், சூழ்நிலையால், இன்னல் ஏற்பட்டு, அதன் காரணமாகப் பதறி ஆண்டவனை அழைத்திடுவார் உண்டு. அவர்கள் மட்டும் அல்ல! நீதிக்கொன்று, நேர்மை நெறி நடவாது தன் சுகத்துக்காகப் பிறரை வாட்டிடும் போக்கிலே நடந்து கொண்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும்போது அதிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டிக் கொள்வாரும் உளர்.

இவர் போன்றார், பொதுவாக இன்னலைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்குடன் உள்ளவர். அவர்கள் ஆண்டவனை எப்போது அழைத்திடுவர்? தங்களுக்கு ஆண்டவன் உதவி தேவைப்படும்போது!!

எனக்கு இதிலே விந்தையாகப்பட்டது, இன்னல் வந்துற்ற போது இறைவனைத் தேடும் வாடிக்கை இருக்கிறதே என்பது அல்ல;

ஆண்டவன், தன்னை நோக்கி வந்திட, நேரம் குறித்துக் கூறும் பகுதிதான், விந்தையாக இருக்கிறது. சிறிதளவு கோபம் கூட எழுகிறது.

ஆண்டவன், வந்தால்போதும், எந்த நேரமாக இருந்தால் என்ன, அவருக்கு உகந்த நேரத்தில் வரட்டும், எப்போது அவருக்குக் கருணை பிறக்கிறதோ அப்போது வரட்டும், அவரைக் காணும் அளவு எப்போது தூய்மை துளிர் விடுகிறதோ அப்போது வரட்டும் என்று கூறிடாமல், நான் நினைத்தபோது நீ வரவேண்டும் என்று கூறுவது பக்தியாகத் தோன்றவில்லை, ஏதோ ஓர் எச்சரிக்கை விடுவது போல இருக்கிறதல்லவா! ஆண்டவனே! நீ சமயம் தெரியாமல், சந்தர்ப்பம் தெரியாமல், உனக்காகத் தோன்றிய நேரத்தில் வந்துவிடாதே! நான் என்ன அலுவலிலே ஈடுபட்டிருப்பேனோ! என்ன வேலையிலே மூழ்கிக் கிடப்பேனோ! என்பது பற்றிய எண்ணம் கொள்ளாமல், வந்துவிடாதே, நான் வேண்டும்போது வந்திடு! என்றல்லவா, அழைப்பதுபோல இருக்கிறது, ஆண்டவனை!!