அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கிழக்கு வெளுத்திடும் வேளை
2

காலையிலே பன்னிரெண்டு மணி வரையில் அலுவலகத்தில் கடுமையான வேலை! பிறகு சாப்பிடும் நேரம்! மூன்று மணி வரையில் ஓய்வு! நான்கு மணிக்கு வெளியூர் புறப்பட வேண்டும்! ஆகவே, மூன்று மணிக்குமேல் நான்கு மணிக்குள் வந்து என்னைக் காணவும் என்று கடிதம் அனுப்புவது போலவா, கடவுளுக்குக் காணும் நேரம் குறித்து நாம் தெரிவிப்பது! கண்ட நேரத்தில் வந்து விடாதே! நான் கூப்பிடும்போது வந்தால் போதும் என்ற முறையிலா! நினைக்கும்போதே தம்பி! எனக்குச் சிரிப்பாய் வருகிறது, நான் அறிந்த வரையில், பலர், ஆண்டவன் எந்த நேரத்திலும் வரலாம், வந்தால் போதும் என்ற அச்சமற்ற நிலையில் இல்லை,

சத்தியப் பிரமாணமாகச் சொல்கிறேன், சரக்கு அறுபத்து ஆறுக்கு வாங்கியது. வழிச்செலவு, வட்டி, கடைச்செலவு இவை மட்டும் நாலு ஆகுது. நீங்களாக இஷ்டப்பட்டு எனக்கு ஏதாகிலும் இலாபம் போட்டுக் கொடுத்தால் போதும். பழனியாண்டவர் படத்துக்குப் பக்கத்திலே இருந்து கொண்டு சொல்கிறேன், நம்பினாலும் சரி, இல்லை என்றாலும் சரி, என்று நாற்பத்து எட்டு ரூபாய்க்கு வாங்கிய சரக்கு பற்றி "புளுகு' பேசி இலாப வேட்டை ஆடும் பெரிய புள்ளி எப்போது வேண்டு மானாலும் ஆண்டவன் வரட்டும் என்றா எண்ணுவார்! வந்தாரானால் நிலைமை என்ன ஆகும்?

அட பாதகா! பாலாபிஷேகமும் பன்னீர் அபிஷேகமும், பல்லக்கு உற்சவமும் நீ நடத்துவது, இப்படி அண்டப் புளுகு பேசி அடிக்கிற கொள்ளைப் பணத்தைக் கொண்டுதானா? எத்தனை நெஞ்சழுத்தத்துடன், என் மீது ஆணையிட்டு ஏமாற்றப் பார்க்கிறாய்! அறுபத்து ஆறு கொடுத்தா வாங்கினாய்? சொல்லு! என்னைப் பார்த்துச் சொல்லு!! ஆறுமுகனே! பன்னிரு தோளா! என்றெல்லாம் இந்தப் பொய் உமிழும் வாயினால் பஜிக்கிறாயே, எவ்வளவு துணிவு உனக்கு! - என்று என்னென்ன கேட்பாரோ ஏதேது பேசுவாரோ என்ற கிலி அல்லவா அவனைப் பிடித்து ஆட்டும்!

நான் நினைக்கும்போது,

நீ வர வேண்டும்

என்று முறை வைத்துக் கொண்டால், இந்த ஆபத்து வராதல்லவா!

"தொட்டேன்; கண்டேனா உடனே நீ தொட்டிலுக்குப் பாரம் சேர்த்துக் கொள்வாய் என்று. ஏதோ பணம் கொடு என்று கேள்; இயன்றதைத் தருகிறேன்; எங்காவது சென்றுவிடு; என் தலைக்குத் தீம்பு வைக்காதே! காலில் விழுந்தாலும் கண்ணீர் பொழிந்தாலும் கடுகளவு பயனும் ஏற்படாது. இவளை நான் கண்டதே இல்லை என்றுதான் சொல்லுவேன். ஆமாம்! ஊர்ப் பெரியவர்கள் நம்ப மறுத்தால் கோயிலிலே கற்பூரம் கொளுத்தி அடித்துக் காட்டிக் கூடச் சத்தியம் செய்வேன். வேறே வழி' என்று காமுகன் உறுமிக் கொண்டிருக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில் ஆண்டவன் அங்கு வந்துவிட்டால்?

ஆண்டவன் வந்துவிடக்கூடும் என்ற அச்சம் ஏற்படுமானால் அக்கிரமம் செய்திட நேரம் கிடைக்குமா! அக்கிரமம் செய்தாக வேண்டுமே, சுயநலம் ஆட்டிப் படைக்கிறதே!! அத்தகையவன் எப்படி ஆண்டவன் எந்த நேரத்தில் வந்தாலும் சரி, வந்தால் போதும் என்று கருதுவான். நான் வேண்டும்போது வரவேண்டும்! - என்ற முறை இருந்தால்தான் நல்லது என்றுதான் எண்ணிக் கொள்வான்,

அந்தவிதமான நோக்கத்தின் அடிப்படையிலேதான் அப்படி ஒரு பாடல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறவில்லை; நான் அற்பனுமல்ல, அடாவடிப் பேர்வழியுமல்ல; நான் சொல்லுவது, ஒருவர் வேண்டும்போதுதான் ஆண்டவன் வரவேண்டும் என்ற முறை இருக்கக்கூடாது, ஆண்டவன் வர வேண்டிய அவசியம் ஏற்படும்போது, வரவேண்டும் என்ற முறை இருக்க வேண்டும் என்பது, நாம் அழைக்கும்போதுதான் அவர் வர வேண்டும் என்ற முறை இருப்பதைவிட, எந்த நேரத்திலும், அவர் விரும்பியபோது வருவார் என்று முறை இருந்தாலாவது ஒரு அச்ச உணர்ச்சி மனிதனைத் தவறு செய்யவிடாது தடுக்கக் கூடும்.

தீதான எண்ணங்கள் முளைத்திடும்போது, ஆகாத வழியினில் நடந்திட முனைந்திடும்போது அடுத்துக் கெடுத்தாலும் ஆதாயம் தேடிடலாம் என்ற கெடுமதி பிறந்திடும் போது, மற்றவர்க்குக் கொடுமை விளைவிக்கக் கிளம்பும்போது, நேரமறிந்து, நமது பிறவியிலே ஒருவன் தவறு இழைக்கப் போகிறான். அதனால் பலருக்கு கேடு விளைந்து சமூகம் பாழ்படப் போகிறது என்று அறிந்து செல்வோம்! அவனைத் தடுத்திடுவோம்! என்று ஆண்டவன் வந்திடும் முறை மட்டும் இருந்திடின் தம்பி! இத்தனை கொடுமைகள், அநீதிகள் நெளிந்து கொண்டிருக்க முடியுமா!

ஆண்டவன் அத்தகைய நேரங்களில் வராதது மட்டுமல்ல, வரக்கூடாது என்று எண்ணுபவர்களாகவன்றோ, கெடுமதியினர் உள்ளனர். இந்த நிலையில், ஒருவர் வேண்டும்போதுதான் ஆண்டவன் வரவேண்டும் என்ற ஒரு நிலையும் நிலைத்திடின், அது அக்கிரமக்காரர்களுக்கு அல்லவா கொண்டாட்டமாகி விடும்!

இதனை எண்ணிடும்போதுதான், எனக்கு வியப்புடன் திகைப்பும் பிறந்தது. ஆண்டவனை வேண்டுபவர்கள், நான் அறிவை இழந்திடும் வேளையில், அறத்தை மறந்திடும் போதினில், அக்கிர மத்தைச் செய்ய முனைந்திடும் நேரத்தில், ஆண்டவனே! வந்திடு! என்னைத் தவறான பாதையிலே போகாதபடி தடுத்திடு! என்று இறைஞ்சிட வேண்டும். அல்லவா?

ஆனால், அந்த நிலை இருப்பதாகத் தெரியவில்லையே தம்பி! என்ன செய்வது!!

அக்கிரமம் நெளிகிறது; அநீதி தலைவிரித்தாடுகிறது, கொடுமை கொக்கரிக்கிறது; கொட்டு முழக்குடன் திருவிழாக்களும் நடக்கின்றன! சித்தம் உருகப் பாடிடுவோருக்கும் பஞ்சமில்லை, செய்த வினையெல்லாம் பொறுத்திடுவாய் சேவற்கொடி யோனே! என்று பஜனை பாடிடுவோருக்கும் குறைவு இல்லை. களவும் நடந்தபடி இருக்கிறது, காவல் நிலையமும் புதிது புதிதாக அமைகிறது என்பது போலவேதானா கொடுமையும் இருக்கிறது கோயில்களில், பூஜைகளும் குறைவின்றி நடக்கின்றன என்று இருந்து வருவது!

கடவுளைப் பற்றிய எண்ணம், நம்பிக்கை, அதன் அடிப் படையில் எழும் வழிபாட்டு முறைகள், எதற்குப் பயன்படா? கொடுமைகளைத் தடுத்திட அல்லவோ! கொடுமை புரிந்திடும் கெடுமதியைச் சுட்டுப் பொசுக்கிட அல்லவோ பயன்பட வேண்டும்! பயன்படக் காண்கின்றோமா? இல்லையே! நீண்ட நெடுங்காலமாகவே, ஆண்டவன், ஒருவர் வேண்டும்போதுதான் வருவது என்ற முறைப்படிதான் நடந்து கொண்டு வருகிறாரோ? இல்லையென்றால், சூதும் சூழ்ச்சியும், வஞ்சகமும் கொடுமையும், பொய்யும் புரட்டும் கொலையும் களவும் இந்த அளவு தலைவிரித்து ஆடிடச் செய்திடும் கொடியவர்களின் கொட்டத்தை எப்போதோ அடக்கி விட்டிருக்கக் கூடுமே. காணோமே!

மனம் உருகி, உள்ளன்புடன் நீ முறையிடும்போது ஆண்டவன் வந்திடுவார் என்ற பக்திப் போதனையைத் தம்பி! ஆண்டவன் எப்போது வேண்டுமானாலும் வந்திடுவார், அவர் வரமாட்டார், காணமாட்டார் என்ற எண்ணத்தில். அக்கிரமம் செய்திடத் துணியாதே! பாதை தவறிடும்போது, ஆண்டவன் வந்து நிற்பார், கேட்பார்! - என்ற விதமாக "பக்தி' போதனை வெற்றிகரமாக நடைபெற்றிருந்தால் கூட, உலகிலே இத்தனை அக்கிரமம் நெளிந்து கொண்டிருக்காது.

ஆண்டவனைப் பற்றிய எண்ணம், நம்பிக்கை, அறநெறி நடந்திட, அனைவரையும் அன்புடன் நடத்திட, சுயநலத்தை ஒழித்திடப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் கொலையும் கொள்ளையும், காமச்சேட்டையும் பிறவும் பெருமளவும் குறைந்திருக்குமே!

அதற்கு எங்கே பயன்படுத்தினார்கள் கடவுட் கொள்கையை, நம்பிக்கையை! கோயில்கள் கட்டவும் குளங்களை வெட்டவும், வே-கள் விடவும் செல்வம் குவிக்கவும், பூஜைகள் நடத்தவும், அதற்கான படையினை வளர்க்கவும், அற்புதம் கூறவும் அதற்கான கதைகளைக் கட்டவும், மகிமை பேசவும் காணிக்கை கேட்கவு மான காரியங்களுக்குத்தானே பயன்படுத்தி வந்தனர்.

அதனால் வளர்ந்தது என்ன? ஒருபுறம் அக்கிரமக்காரனின் கொட்டம் அடங்காது நின்றது! மற்றோர்புறம் அர்ச்சனையும் ஆராதனையும் சிறப்புடன் நடைபெற்று வந்தன!

பலவற்றிலே மறுமலர்ச்சிக் கருத்துக்கள் தோன்றியது போலவே கடவுட் கொள்கையும் நம்பிக்கையும் எதற்குப் பயன் படுதல் வேண்டும், எம்முறையில் வடிவம் பெற வேண்டும் என்பதிலேயும், மறுமலர்ச்சி, புது எழுச்சி தோன்றிடத்தான் வேண்டும். தோன்றும் என்பதற்கான அறிகுறியில் ஒன்றாகவே கல்லூரியை நான் கருதிக் களிப்புற்றேன்.

கடவுட் கொள்கையும் நம்பிக்கையும் மக்களை நல்ல நெறியிலே அழைத்துச் செல்வதற்காகத்தான் என்று கூறப்படுவது முழு உண்மையாக இருக்குமானால், நல்ல நெறி பற்றியும், அதன்படி ஒழுகிவருவதால் தனி மனிதனும் சமூகமும் அடைந்திடும் ஏற்றம் குறித்தும் வலியுறுத்தும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார்கள்; ஆனால். நடைபெற்றுக் கொண்டிருப்பது அஃது அல்ல, வீண் விரயம், வெற்றொலி நிரம்பிய ஆரவாரம், விரும்பத்தகாத சடங்குகள், அவைகளுக்கு விசித்திரமான விளக்கங்கள் ஆகியனவற்றிலே மூழ்கிக் கிடக்கின்றனர். இது எற்றுக்கு என்று கேட்டிடுவோர்கள் மீதோ, பாய்கின்றனர், காய்கின்றனர்; கடவுள் மீது நம்பிக்கை இல்லையோ என்று கடாவுகின்றனர். கடவுள் நம்பிக்கைக்கும் கடவுள் பெயர் கூறி நடத்தப்பட்டுவரும் நானாவிதமான காரியங்களுக்கும் பொருத்தமோ பொருளோ இருப்பதாகக் கூற முடிகிறதா? மெய்ப்பிக்க முடிகிறதா என்றால் முடிவதில்லை. ஆனால், எத்தனை மோசமான மூடநம்பிக்கையாக இருப்பினும், அதனை விடாப்பிடியாகக் கட்டிக்காத்து வருவதிலே எத்தனை தீவிரம் காட்டுகின்றனர்! என்னென்ன காரணங்களைக் சுட்டிக் காட்டுகின்றனர். மறுத்துப் பேசிடுவோர் மீது எத்தனை கடுங்கோபக் கணைகளை வீசுகின்றனர்! பழைய விளக்கங்கள் புதிய அறிவு வளர்ச்சி காரணமாகப் பொய்த்துப் போகக் காணும்போது, அலறித் துடிதுடித்து பதறிப் பதைபதைத்து, பொய்த்துப் போனதை விட்டுத் தொலைப்போமே என்ற துணிவு பெற்றிட முடியாமல் திகைத்து புதிய விளக்கம் ஏதேனும் கிடைத்திடாதா என்று தேடித் தேடி, ஏதேனும் ஒன்றினைக் கண்டதும், அதனைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு வந்து காட்டி, இதோ விளக்கம்! எமது கோட்பாட்டினை மெய்ப்பிக்க வல்ல விளக்கம்! என்று புது உற்சாகத்துடன், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் பேச முற்படுகின்றனர். இவை காட்டிடும் பாடம் யாதெனில், ஓர் புத்துணர்ச்சி பூத்துக் கொண்டு வருகிறது என்பதுதான்.

தம்பி! விடியும் வேளையில் கருக்கலும் கப்பிக் கொண்டி ருக்கும், இமையைத் தூக்கமும் அழுத்திட முனைந்திடும், அதேபோது காரிருளைப் பிளந்து கொண்டு கதிரொளி கிளம்ப முற்படும், தூக்கத்தின் அழுத்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, விழிமலர் புத்தொளி கண்டிட முற்படும். மிகப் பலரின் மனம் இன்று அந்த "விடியற்காலை' நிலையிலே உள்ளது, இமையை அழுத்திட முற்படும் தூக்கத்தைப் போல, மீண்டும் மூடுபனி படர்ந்திடச் செய்திடும் முயற்சியிலும் சிலர் வெகு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வளவுக்கும் இடையிலே குறிப்பிடத்தக்க வெற்றிகள், புதுமைகள் கிடைத்தபடி உள்ளன. இங்கு மட்டுமல்ல, தம்பி! உலகெங்கணும்.

ஏசுபிரானைக் காட்டிக் கொடுத்தவன் ஜுடாஸ். அவன் ஒரு யூதன்; அதன் காரணமாக யூத இனமே சபிக்கப்பட்ட இனமாகக் கருதப்பட்டு, ஜுடாஸ் தேடிக்கொண்ட பாபம் யூத இனத்தின் மீது படர்ந்திருப்பதாகக் கருதப்பட்டு, யூத இனத்தவர்கள் மீது பகையும், வெறுப்பும் காட்டிடவும், கொட்டிடவுமான நிலை, தேவையற்றது, பொருளற்றது; புனிதமானது ஆகாது என்று கூறவும் அஞ்சினர் சென்ற ஆண்டு வரை - ஏன்! சென்ற திங்கள் வரையிலும் கூட அந்த எண்ணம் இருந்து வந்தது. ஜுடாசின் செயலுக்காக, ஒரு இனம் முழுவதும் பழியினை ஏற்க வேண்டுமா, பாபாத்மாக்களாகக் கருதப்பட வேண்டுமா என்று கேட்டிடத் துணிபவனை மன்னிக்க முடியாத குற்றம் செய்தவனாகவே அருளாலய அதிபர்கள் கருதி வந்தனர் யூத இனத்தின் மீது பகையும் வெறுப்பும் கப்பிக் கொண்டதற்கும், அதன் காரணமாகப் பல்வேறு நாடுகளில் மக்களும் அரசும் யூதர்களைக் கொடுமைக்கு ஆளாக்கி வந்ததற்கும், வேறு அரசியல், பொருளியல் காரணங்கள் இருந்தன என்றாலும் வெறுப்புக்கான அடிப்படைக் காரணம், யூத இனத்தவன் ஜுடாஸ், அவன் ஏசுவைக் காட்டிக் கொடுத்தவன் என்பதுதான், கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த இந்த அழுத்தமான நம்பிக்கையை, கத்தோ-க்க மார்க்கத்தின் இணையற்ற தலைவராம் போப்பாண்டவர் சென்ற மாதம் தேவையற்றது, என்று கூறி நீக்கிவிட்டார், குற்றம் இழைத்தவன் ஜுடாஸ்; கொடுமையை அனுபவிக்க வேண்டியவர்கள் யூத இனத்தவரோ, ஏன் இது என்று கேட்டு இனி யூத இனத்தைப் பகைத்திடும் செயல் ஆகாது என்று ஆணை பிறப்பித்து விட்டார். யூத இனம் பழி துடைக்கப்பட்ட, மன்னிப்புப் பெற்று விட்ட இனமாகிவிட்டது. இனி அந்த இனத்தவரின் வேறு நடவடிக்கைகள் அல்லது நிலைமைகள் காரணமாக, பகையும் வெறுப்பும் இங்குமங்குமாக எழலாம் - ஏற்கனவே அரபுக்கள் யூதர்களின் மீது பகை கக்கி வருகின்றனர் - ஆனால், அந்தப் பகைக்கும் வெறுப்புக்கும் காரணம், ஜுடாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுத்ததை எண்ணி என்பதனை இனி வலியுறுத்திட இயலாது, கூடாது என்று ரோம் ஆணை பிறப்பித்துவிட்டது.

யூத இனத்தின் மீது கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக ஏற்றப்பட்டிருந்த பழி துடைக்கப்படும், பகை போக்கப்படும் என்று யார் கருதிட முடிந்தது. ஆனால் நடைபெற்று விட்டிருக் கிறதே!! எத்தனை பெரிய மாறுதல்.

பழங்காலக் கோட்டைகள் காலத்தால் கலனாகி இருந்திடும் இடம் என்ற நிலையினை இழந்த பிறகும், நெடுங் காலம், கோட்டை வடிவத்துடன் நின்று காட்சி தரும்! இங்கொரு வெடிப்பு, அங்கொரு விரிசல், என்ற முறையில் தொடர்ந்து சேதம் வளர்ந்தபடி இருக்கும். சேதம் மிகுந்த நிலையிலேயும், அடியோடு வீழ்ந்திட மாட்டேன் என்று ஆர்ப்பரித்திடுவது போல நின்று காட்டும். பழங்காலந்தொட்டு இருந்து வரும் பல எண்ணங்களும் ஏற்பாடுகளும், தத்துவங்களும் அவற்றினுக்கான விளக்கங்களும், இன்று அத்தகைய கோட்டைகளைத்தான் நினைவுபடுத்து கின்றன - எனக்கும் உனக்கும், அவ்விதந்தானே தம்பி! தோன்று கிறது? இதனைத்தான் கிழக்கு வெளுத்திடும் வேளை என்பார்கள்.

அண்ணன்,

21-11-65