அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றம் பல சென்றிருந்தேன்
1

சிலர் பிரிந்தபின் கழகத்தின் நிலை -
காங்கிரசின் போக்கு -
தி. மு. க. தேர்தல்

தம்பி!

சொல்லும்போதே சுவைதரும், "தம்பி' என்ற இந்தச் சொல்லை ஒரு திங்களாகச் சொல்ல இயலாமற் போய்விட்டதை எண்ணி எண்ணி, இனிப்பூட்டும் அந்தச் சொல்லை, மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிச் சுவை பெறலாமா என்று தோன்றுகிறது. ஆனால், தம்பி! தவறு என்னுடையது அல்ல. துரைத்தனத்தின் போக்கு, நம்மை ஒரு திங்கள் பிரித்துவைத்தது. ஆண்டுக்கணக்கிலே பிரித்துவைக்கத்தக்க போக்கினைத் துரைத்தனம் மேற்கொண்டிடத் திட்டமிட்டும் இருக்கிறது, அறிவாய். இந்தப் பிரிவு, கடுமையான சட்டம் காரணமாக ஏற்பட்டதல்ல; பத்திரிகைக் காகிதக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக ஏற்பட்டுவிட்டது; இதழுக்கான தாள் கிடைக்க வில்லை, உரிய நேரத்தில்; பலமுறை வேண்டுகோள் விடுத்தும்! பிறகு, நமது நண்பர் தருமலிங்கம் எம். பி. அவர்கள், இதற்கென்றே, டில்லிப் பட்டணம் பறந்துசென்று முறையிட்டு, நெருக்கடி நிலைமையை விளக்கிக்கூறித் தாள் கிடைத்திடச் செய்தார்; இதோ, உன்னிடம் பேசிட முடிகிறது, தம்பி!

ஆனால், மடல் தீட்டி மகிழும் வாய்ப்பினைத்தான், நான் ஒரு திங்கள் இழந்து தவித்தேனேயன்றி, தம்பிகளை நித்த நித்தம் காணத் தவறினேனில்லை; தித்திப்பளிக்கும் உரையாடி மகிழ்ச்சிப் பெறாமற் போகவில்லை; காலை, மாலை, நடுப்பகல், நள்ளிரவு தொகுதி மூன்று 619 எனும் கால அளவும் தன்மையும் குறுக்கிடவில்லை, தம்பிகளைக் கண்டு மகிழும் திட்டத்தில். எங்கும் எழில் நிறை முகங்கள்! அன்பொழுகும் பார்வை! புன்னகை! உறுதி! இலட்சியப் பற்று! கொள்கை முழக்கம்! சீரிய பணி!

தம்பி! எங்கு சென்றாலும் ஓர் புதிய துடிதுடிப்புத் தென்படுகிறது; புத்தம் புதியதோர் ஆர்வம்! ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றலைப் பெரும் அளவு மட்டுமல்ல, முழு அளவு காட்டியாகவேண்டும் என்ற நிலையிலே, சுறுசுறுப்புடன் பணியாற்றுகின்றனர். தொட்டுப் பார்ப்பதிலும், கைதட்டி வரவேற்பதிலும், கட்டிப்பிடித்துக்கொள்வதிலும், மாலையிட்டுக் காண்பதிலும், தழதழத்த குரலொலி எழுப்புவதிலும், தங்கநிறக் குழவிகளை என்னிடம் கொண்டுவந்து கொடுத்து இருக்கச் செய்வதிலும், தேர்தல் நிதி அளிப்பதிலும், சேதிகளைத் திரட்டித் தருவதிலும், எத்துணை ஆர்வம், மகிழ்ச்சி, பெருமை கொள்கின்றனர், உடன் பிறந்தார்! இதைக் காணக்காண, மாற்றார் கொள்ளும் மருட்சியும், வேற்றார் காட்டிடும் வியப்புணர்ச்சியும் வளருகிறது, வேக வேகமாக. தாயகத்தின் தன்மானம் காத்திட, மாற்றாரின் முயற்சிகளை முறியடித்திட, களம்புகக் கிளம்பிடும் படையொன்று, வீரநடை போட்டுச் செல்லுங்காலை, வீதிகளின் இருமருங்கிலும், பெண்டிரும், முதியவரும், சிறுமியரும், சிறாரும் கூடி நின்று, கையொலி கிளப்பியும், வாழ்த்தொலி முழங்கியும், பூச்சொரிந்தும் புன்னகை சொரிந்தும், படையினருக்கு வழி அனுப்பு நடத்துவது, கண்டிருக்கிறேன், கண்டிருப்பாய், காட்சிகளாக. பூச்சொரியும்போதே, கண்ணீர் கசியும்! கண்ணீரை விரட்டியபடி களிப்பொளி தோன்றும்! வாழ்த்தொலி எழுப்பும்போதே, வந்திடக்கூடுமே பேராபத்து களத்தில் என்று எண்ணம் எழும். அச்சம் குடையும்; மறுகணமோ, நாடு வாழ்ந்திடும் என்ற உறுதி அச்சந்தனை விரட்டி அடிக்கும். மணமாகித் திங்கள் சிலவே ஆகின்றன! மலர்ச்சோலை உலாவிடவும், மயிலே என்று அவன் அழைக்கக் கேட்டு மகிழ்ந்திடவும், மடியா மலரணையா? விழியா சுடர் ஒளியா? இதழா கனிச்சுளையா? இடையா படர்கொடியா? உடலா பொன் உருவா? என்றெல்லாம் அவன் பேச, விழியால் பதிலளித்து மகிழலாம் என்ற எண்ணம் கொண்ட எழிலரசி, மன்னன் களம் நோக்கிச் செல்லும் காட்சி கண்டு, கையொலியும் எழுப்புகிறாள், கண்ணொளியும் பொழிகிறாள். காதலின்பம் இழக்கிறோம் என்பதையும் உணருகிறாள், பெற்ற இன்பத்தை எண்ணுகிறாள், வெட்கி முகம் சிவக்கிறாள். களத்திலே "அவருக்கு' ஏதேனும் ஏற்பட்டுவிட்டால்? என்று எண்ணுகிறாள், அச்சத்தால் முகம் வெளுக்கிறது. மறு கணமோ, நாடு வாழ்ந்திடக் கூடி நடந்திடும் தானையினர் எழுப்பிடும் வீர முழக்கம் கேட்கிறாள், எழுச்சி கொள்கிறாள், நாடு மீட்டிடச் செல்கிறான் என் மணவாளன்! என்று பெருமை கொள்கிறாள்.

தம்பி! எனக்கென்னவோ இப்போதெல்லாம், நமது கூட்டங்களில், ஊர்வலங்களில், காணப்படும் எழுச்சியும், மகிழ்ச்சியும், உணர்ச்சியும், எழுப்பப்படும் முழக்கமும், களம் நோக்கிச் செல்லும் படையினை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் காட்சியைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது! நமது "உடன்பிறந்தார்' என்பதனால் மட்டும் ஏற்படும் மகிழ்ச்சி அல்ல! நமது "உடன்பிறந்தார்' உயிரைத் துரும்பென மதித்து, எதையும் இழக்கத் துணிந்து, இழக்கொணாத உரிமை காத்திடச் செல்கிறார் களம் நோக்கி; கரமோ காலோ, உடலிற் சில பாகமோ வெட்டுண்டு போகலாம்! உயிரே பட்டுப் போகலாம்! செல்கிறார் செருமுனை நோக்கி! திரும்புங்காலை வெற்றிக்கொடி பறக்கும்! ஆயின், வீரர்பலர் உயிரிழந்திடுவர் - என்றெல்லாம் எண்ணங்கள் பலப்பல எழும்பித்தான், இந்த உணர்ச்சியைக் கிளப்பிவிட்டுவிட்டிருக்கிறது. ஒளிப்பானேன், மறைப்பானேன், தம்பி! எனக்கே அப்படிப்பட்ட உணர்ச்சிதான் முழுக்க முழுக்க. ஒவ்வொரு நாள் காணும்போதும், ஆசைதீரப் பார்த்திடுவோம், நாளையதினம் துரைத்தனத்தார், பார்க்கவிடுகிறார்களா இல்லையோ! - என்ற எண்ணம். ஒவ்வொரு முறை பேசும்போதும், சொல்லவேண்டியதனைத்தையும் சொல்லிவிடவேண்டும், ஏனெனில், மீண்டும் பேசிடும் வாய்ப்பு எந்த விநாடியும் பறிக்கப் பட்டுவிடலாம் - என்ற எண்ணம். தம்பி! நம்மில் அனைவருமே இந்த நிலையை மிக நன்றாக உணர்ந்துவிட்டிருப்பதனால்தான், கரை புரண்டோடும் எழுச்சிமட்டுமல்ல, இதுவரை காணாத புத்துணர்ச்சி, மன நெகிழ்ச்சி காணுகிறோம். களம் நோக்கி நடக்கிறோம், தம்பி! வாழ்த்தி வழியனுப்புகிறது நாடு! கண் துடைத்துக் கட்டிப்பிடித்து, கன்னம் தொட்டு, சென்றுவா, மகனே! வென்று வா! என்று வீடும் வாழ்த்தி அனுப்புகிறது.

நம்மிலே சிலர் பிரிந்ததனால் நாட்டுநிலை அறியாதார் சிலர், நமது முயற்சி முறிந்துவிட்டது, இயக்கம் உடைந்துவிட்டது, உருக்குலைந்த நிலையில் இந்த விடுதலை இயக்கம் ஏதும் செய்ய இயலாததாகி, எடுப்பார் கைப்பிள்ளையாகிவிடும் அல்லது மாற்றார்முன் மண்டியிடும் என்றெல்லாம் எண்ணி, மனப்பால் குடித்தனர். நிலைமையோ அஃதன்று. "களைபோயிற்று, பயிர் தழைத்தது!' என்று கூறிடுவார் உளர்! அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத்தான் அடக்கிவருகிறேன் - சொல்வதைத்தான் நான் தடுத்திட முடிகிறதேயன்றி, எண்ணத்தை எங்ஙனம் இல்லாது போக்கிட இயலும். உள்ளபடி அவ்விதம் எண்ணுவோர் பலர் உளர். ஆனால் மிகப் பலரோ, சிலர் நம்மைவிட்டுப் பிரிந்தனர், எனவே அவர்கள் செய்துவந்த பணிகளுக்கு ஈடுசெய்திடும் வண்ணம் நாம் மிகுதியாகப் பணியாற்றவேண்டும்; அதுமட்டுமல்ல, அவர்களின் இன்றையப் போக்கினால் ஏற்படும் இழப்புகளையும் ஈடுகட்டியாகவேண்டும் என்ற எண்ணத்துடன், மிகத்திறம்படப் பணியாற்றுகிறார்கள்.

மாற்றுக் கட்சியினர் இதை உணருகிறார்களோ இல்லையோ; எல்லாக் கட்சிகளுமே தேர்தல் நோக்குடன் சுறுசுறுப்பாகத்தான் பணியாற்றி வருகின்றன; நம்மைப்போலவே! ஆனால், மற்ற எவர் நடத்தும் இயக்கத்திலும், நமது இயக்க நிகழ்ச்சிகளில் காணப்படும் இந்தப் "பாச உணர்ச்சி' இருப்பதாகத் தெரிவதில்லை - தெரியக் காணோம் - இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.

எடை போடுவது - எவரெவரிடம் என்னென்ன முறையில் பேசுவது - என்னென்ன வாக்களிப்பது - எவரைச் சிக்க வைக்க என்ன வலை, எவருக்கு என்ன விலை - என்ற இவைபற்றிய எண்ணம்தான் அங்கெல்லாம். கண்டதும் ஓர் முகமலர்ச்சி! பேச்சிலே ஓர் கனிவு! பார்வையிலேயே ஓர் பாசம்! - இவை இங்கன்றி வேறோர் இடத்தில் இல்லை.

தம்பி! உணவு விடுதியிலும் சாப்பிடுகிறார்கள்; வீட்டிலேயும் சாப்பிடுகிறோம். வீட்டில் செய்யும் கறி வகைகளைக் காட்டிலும், அதிகமாகவே உணவு விடுதியில் செய்கிறார்கள். வீட்டிலே, இலை போடுவார்கள் - மறதியால், பொத்தல் உள்ளதாகக்கூடப் போட்டுவிடுவார்கள். தெளித்துச் சுத்தம் செய்யத் தண்ணீர் வைக்க மறந்துவிடுவார்கள். செய்த கறி வகையிலே ஒன்றை இலையிட மறந்துபோவதுமுண்டு. இவையாவும் வீட்டில். உணவு விடுதியில் ஒழுங்காக, வைக்கவேண்டியதை வைத்திடவேண்டிய முறைப்படி வைக்கிறார்கள். கறிவகை பலப்பல! எனினும், தம்பி! நீ, கவனித்ததுண்டோ இல்லையோ - விடுதியிலே, கறியும் சோறும் படைத்திடும்போதும், கலந்து நாமதனை உண்டிடும் போதும், உணவு விடுதிக்காரர் காண்பார், கனிவு இருக்காது; கேட்பார் இன்னும் வேண்டுமா என்று; ஆனால் பேச்சில், எழுத்து மிகுதியாக இருக்கும், எண்ணம் இருக்காது; விழி திறந்திருக்கும் வெறிச்சிட்ட பார்வை இருக்கும்; இது முதல் தரமான உணவு விடுதியில், மட்டமான விடுதி எனில், தம்பி! நாம் சாப்பிடச் சாப்பிட, அவன் முகம் கருத்திடும்; நாம் கேட்போம், அவன் படைக்குமுன் நம்மை உற்றுப் பார்ப்பான்; அந்தப் பார்வையிலே பகை இருக்கும், கேள்வியும் இருக்கும்; நாம் உண்டிடுவோம், இவன் தூரநின்று கவளம் அதிகமாக உள்ளே செல்லச் செல்ல, ஐயோ! நமக்குக் கிடைக்கக்கூடிய இலாபம், குறைந்துகொண்டே வருகிறதே என்று எண்ணி ஏக்கங்கொள்வான். உணவு படைத்திடும் பணியாளன் ஒருமுறைக்கு இருமுறை, நமது இலை நோக்கி வந்து நின்று, என்ன தேவை என்று கேட்டிடக் கண்டால், விடுதிக்கு உரிமையாளன், சதி ஏதோ நடக்கிறது! பயல் நம்மைப் பாழாக்குகிறான்! என்றெண்ணி, அந்தப் பணியாளனை முறைத்துப் பார்ப்பான்; கடுமொழியும் புகல்வான்.

தம்பி! விடுதியில் உணவளிப்பது இலாப நோக்குடன்; நம்மிடம் கொண்ட அக்கறையாலா!!

விடுதியில் உண்பவர், அளவு குறைத்துச் சாப்பிடச் சாப்பிட விடுதிக்காரருக்கு மகிழ்ச்சி. அளவும் வகையும் அதிகம் கேட்போரைக் கண்டால் வெறுப்பு.

எவரிடமும் கனிவு இருக்கக் காரணமில்லை; ஏனெனில், உண்டுவிட்டுப் போகும் ஓராயிரவரில் இவர் ஒருவர்; ஊர்பேர் தெரிவானேன்; உபசாரங்கள் செய்வானேன்; உள்ளம் மகிழ வைப்பானேன்!

இதற்கு முற்றிலும் வேறு அல்லவா, இல்லத்துச் சோறிடும் முறை.

நான் கூறியதுபோலத் தம்பி! சோறிடும் முறையிலே குறைபாடுகளும் இருக்கும். சோறுக்கேற்ற அளவு சாறு ஊற்றி யிருக்கமாட்டார்கள்! கலந்து பார்த்ததில் மேலும் கொஞ்சம் சாறு வேண்டும் என்று நமக்குத் தோன்றும்; அதை அறியாது அணங்கு நம் எதிர் நின்று, வளையைச் சரிப்படுத்திக்கொண்டிருக்கக்கூடும். அல்லது வந்து நிற்கும் பிள்ளைக்கு ஊட்டி மகிழ்ந்தபடி மெய்மறந்து இருக்கக்கூடும்; துவக்கத்திலே தம்பி! கோபம்கூட நமக்கு எழக்கூடும் - துளியும் முறைவகை அறியாத மதியிலியாக உள்ளாளே என்று எண்ணத் தோன்றும்; முறைத்துப் பார்ப்போம்; அவள் சிரித்தபடி நிற்பாள்; மகவு சித்தியதனை வழித்தெடுத்து, சுவைமிகு பண்டம் என்று இலையில் இடவும் வருவாள்; தான் சோறிட்ட முறையில் குறை வந்துளது என்பதை அறியாமலேயே. ஆத்திரமா பீறிட்டுக் கிளம்புகிறது. அவள் வீசும் பார்வை, சாறு போதுமானதாக இல்லை என்ற எண்ணத்தையே மாற்றிவிடுமே!! உணவு விடுதியிலென்றால் நிலைமை இதுவா?

"நாலு நாழியாகக் காவு காவு என்று, சாம்பார்! சாம்பார் என்று கத்துகிறேன்; மரமாக நிற்கிறாயே.''

"மரம், மாடு என்று மரியாதை இல்லாமல் பேசாதே ஐயா! உமக்குச் சேறுபோலச் சாம்பார் வேண்டும் என்று நான் கண்டேனா? சாதத்துக்குச் சாம்பார் என்று நான் எண்ணிக்கொண்டேன்; உனக்குச் சாம்பாருக்குச் சாதம் என்று முறை இருப்பது எனக்குத் தெரியுமா?''

"உளறாதே தெரியுமா?''

"பெரிய சூரப்புலி! சும்மா இரய்யா. நான் ஒன்றும் நீ வைத்த வேலையாள் அல்ல.''

இந்த அளவோடு, நான் நிறுத்திக்கொள்கிறேன் - நிலைமை பொதுவாக இந்த அளவோடு நிற்பதில்லை.

தம்பி! நான் சுவைத்துச் சாப்பிட, வீட்டிலே மகிழ்ச்சியுடன், கனிவுடன், பெருமையுடன் காண்பர்! விடுதியில்? மருட்சி! அருவருப்பு! வெறுப்பு!! ஏன்? வீட்டில் உள்ளவர்கள், நம்மிடம் பாசம் கொண்டவர்கள்; விடுதிக்காரர் நம்மிடம் இலாபம் பெறுபவர்; இல்லம் அன்பின் இருப்பிடம்; விடுதி? இலாபம் பெறும் இடம்! வீட்டிலே கனிவும், விடுதியிலே கணக்கும் இருப்பதுதானே, எதிர்பார்க்கவேண்டிய முறை.

தம்பி! மற்ற மற்றக்கட்சி நிகழ்ச்சிகளுக்கும் நமது கழக நிகழ்ச்சிக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எனக்கு, வீட்டுச் சாப்பாட்டுக்கும் உணவு விடுதிச் சாப்பாட்டுக்கும் இருக்கிற மாறுபாடுதான் நினைவிற்கு வருகிறது.

அமைச்சர்களைக் காண வருகிறார்கள் - ஊரூரும், யார்? இவர்களெல்லாம் அமைச்சர்களாகிவிட்டார்களே! இப்படியும் காலம் கெட்டுவிட்டதே!! - என்று எண்ணி உள்ளூரக் குமுறிக் கிடக்கும் கனதனவான்! அருவருப்பை அடக்கிக்கொண்டு அதிர்ஷ்ட வசத்தால் அமைச்சரானார், அவரைப்பிடித்து மருமகனுக்கு ஒரு பெரிய வேலையைத் தேடிக்கொண்டால் போதும் என்ற நினைப்பினர்!! ஏழை எளியவரும் வருகிறார்கள், தவறு தம்பி! தவறு! அழைத்து வரப்படுகிறார்கள்; அமைச்சர் வருவதற்கு ஐந்தாறு மணிக்கு முன்பே அந்த இடத்திலே அதிகாரிகள் நடத்திடும் அமுலையும், சீமான்கள் மோட்டாரில் வந்திறங்கி இடம் பிடிப்பதையும், பார்த்தபடி நிற்கிறார்கள். அமைச்சர்கள் பலப்பலர் வந்தார்கள், அவரவர், தெரிந்ததைச் சொன்னார்கள். ஒருவரும் நம் குறை போக்கவில்லை, ஓட்டாண்டியாகிறோம் நாளுக்கு நாள் என்று நினைத்தபடி. அமைச்சர் வந்துகொண்டே இருக்கிறார் என்பது அறிவிக்கப் படுகிறது, முன்னோடியாக வரும் அதிகாரியால். மோட்டார் மன்னர்கள். உடையைச் சரிப்படுத்திக்கொள்கிறார்கள், அணிபணியை ஒழுங்குபடுத்திக்கொள்கிறார்கள், அதிகாரியை நோக்கிப் பல்லிளிக்கிறார்கள். அதன் பொருள் அவர் அறிவார், யாதெனின், அமைச்சர் அருகே அழைத்துச் செல்வீர், ஐநூறு ரூபாய் தந்தவன் நான், என்பதாகும்; அதிகாரியோ, வரிசையாக நிற்கும் கனதனவான்களைப் பார்க்கிறார், பெருமூச்செறிகிறார். ஏனோவெனில், அவர் அறிவார் எவரெவர் எந்தெந்த விதமான கேடுகள், குற்றங்கள் செய்த பின்னர், சீமான்கள் ஆகினர் எனும் மர்மம்; எனினும் சட்டம் அவர்களைச் சாடவிடாமல் சாமர்த்திய மாகத் தப்பினவர் என்பது புரிந்த அதிகாரி, என்செய்வது என்றெண்ணி ஏங்குகிறார். அவரும் சிரிக்கிறார், இவர்களும் அப்படியே - எவர் சிரிப்புக்கும் காரணம் மகிழ்ச்சி அல்ல; எல்லாம் இடத்துக்கு ஏற்றமுறை. ஏழைக்கு இதுவொன்றும் விளங்கவில்லை. உதடு அசைகிறது யாவருக்கும்; ஒருவருக்கும் உள்ளம் அசைவதாகத் தெரியவில்லை.

அமைச்சர் வருகிறார், கும்பிடுகிறார்; குறிப்பாக யாரையும் பார்த்தல்ல; மொத்தமாக; மெத்த அலட்சியத்துடன்.

அனைவரும் வாயடைத்து நிற்கின்றனர்; அதிகாரிகள் பரபரப்புக் காட்டுகின்றனர்.

உம்! உம்! - என்று கூறுகிறார் அதிகாரி!

மனுக்களைத் தருகின்றனர் ஏழை மக்கள். வாங்குகிறார் அமைச்சர்! அதை வாங்கிக்கொள்கிறார் மற்றோர் அதிகாரி!

கோயிலிலே பூவால் அர்ச்சனை செய்ததும், அந்த மலர்கள் தேவருலகு சென்று தேவ தேவன்மீது வீழ்வதாக அல்லவா எண்ணிக்கொள்கிறார்கள்; அது பக்தியினால். இங்கு பாடுபடுவோர், "மனு'வை மந்திரி தொட்ட உடன், குறைகள் தீர்ந்துவிட்டது என்று எண்ணிக்கொள்கிறார்கள்; எண்ணிக்கொள்ளும்படி, அதிகாரியும் சீமானும் போட்டியிட்டுக் கொண்டு சொல்லி வைக்கிறார்கள்.

அமைச்சர் பேசுகிறார்! செ! என்ன துடுக்குத்தனம், பார், தம்பி! எனக்கு - பேசுகிறார் என்று சொல்கிறேன். அமைச்சர் பேசுவாரா? சொற்பொழிவாற்றுகிறார். தாக்குகிறார்! தகர்க்கிறார்! முகமூடியைக் கிழிக்கிறார்! எச்சரிக்கை விடுக்கிறார்! எதிர்க் கட்சிகளை!!

கேட்டிடும் சீமான், எந்த இடத்திலே மட்டும் கைகொட்ட வேண்டும் என்பதை அறிந்து அதன்படி நடக்க, எத்தனை பாடுபடுகிறார் தெரியுமா தம்பி!

ஏழைக்கு வியப்பாக இருக்கிறது. நாம்தான், அகவிலையால் வரிச்சுமையால், வறுமையால், பிணியால், அவதிப்படுகிறோம்; கோபம்கூட வரத்தான் செய்கிறது; இவருக்குப் பாபம் எதற்காக இத்தனை ஆத்திரம்! இவரே சொல்கிறார், எதிர்ப்பாளர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள், மிகச் சிலர் என்று; அது உண்மையானால், இவர் எதற்காக, யாரோ உச்சியைப் பிடித்துக் குலுக்கிடுவதுபோல ஆத்திரப்படுகிறார் - என்றெண்ணி வியப்படைகிறான். ஏழைகள் ஈடேற வழி சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறான்! சொற்பொழிவின் இறுதியில், எதிர்க் கட்சிகளை எல்லாம் கொன்று குவித்துத் தம் காலடியில் குவியலாகப் போட்டுக்கொண்டான் பிறகு, அமைச்சர், ஏழை எளியவர்கட்கும், ஈடேற வழி சொல்கிறார்.

வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள்.

வரி கட்டத் தயங்காதீர்கள்.

கஷ்டம் கஷ்டம் என்று கதறி, காலம் கடத்திட வேண்டாம்.

பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாய் இருங்கள்; பொழுது விடியும்.

திட்டம் இரண்டு மூன்று நிறைவேற வேண்டும்; பிறகே கஷ்டம் போகும்.

காங்கிரசை ஆதரியுங்கள்; கண்டது கேட்டுக் கெட்டுப் போகாதீர்கள்.

காந்தியின் கட்சி எங்கள் கட்சி; உங்களைக் காப்பாற்றுவது இந்தக் கட்சி!

எதிர்த்தால் சும்மா விடமாட்டோம்; எம்மிடம் படைபலம் மிக அதிகம்.

ஏழை பணக்காரன் என்று பேதம் பேசிப் பாழாகாதீர்.

இருப்பவனிடம் இருந்தால்தான், இல்லாதவனுக்குத் தருவான். இதுதான் எங்கள் சமதர்மம்! இதை எங்கும் நீங்கள் காணவில்லை.

வந்தே மாதரம்! ஜே இந்து! வருகுது தேர்தல்; ஓட்டுக் கொடு!

"வந்தே' - என்று அமைச்சர் துவக்கும்போதே, அதிகாரி, அமைச்சருக்கு வழி அமைக்கும் அலுவலில் ஈடுபடுகிறார்; சீமான்கள் அமைச்சரை நெருங்குகிறார்கள்; இரண்டொருவரிடம் பேசுகிறார் அமைச்சர், பொருளற்றதை; அமைச்சரின் பேச்சுக்குப் பொருள் கண்டுபிடித்துப் பூரிப்படைகிறார் சீமான்; தொழுவத்தி லுள்ளதைப் பார்ப்பதுபோல, தொலைவிலுள்ள ஏழைகளை அமைச்சர் பார்க்கிறார்; தலையைக் கணக்கெடுக்கிறார். அவர்கள் வயிறு காய்வதைக் கவனிக்க மறுக்கிறார்.

மருமகன் விஷயம்?

கவனமிருக்குது!

மாட்டுச் சந்தை?

கேட்டுப் பார்க்கிறேன்!

இங்கா? அங்கா?

எங்கு நான் நிற்க?

சொல்கிறேன் சீக்கிரம், நல்லபடி அமையும்.

கழகக்காரர் கொட்டம் அடக்க. . . . .

கையாலாகவில்லையோ உம்மால்!

கூட்டம் சேருது அமர்க்களமாக. . . . .

ஓட்டுச் சேர்க்கும் வழியைப் பாரும்.

விதைப்பண்ணைக்கு விட்ட நிலத்தின் விலையைக் கொஞ்சம் கூட்டித் தரச் சொல்லி. . . .

உத்தரவு விரைவிலே வரும். உம்முடைய பங்கு, தேர்தல் நிதிக்கு உடனே அனுப்பி வைத்திடும், ஆமாம்.

இப்படிப்பட்ட உரையாடல்கள்! நடந்தபடி! மோட்டாரில் உட்கார்ந்தபடி! மோட்டார் புறப்படுகிறது! ஜே போடப் படுகிறது! தூசி கிளம்புகிறது! சீமான்கள் உடையை உதறிக் கொள்கிறார்கள். ஏழைகள் அதுவும் செய்யவில்லை. கூட்டம் கலைகிறது! பத்திரிகையில் பக்கம் பிறகு நிரம்பி வருகிறது, நிகழ்ச்சி குறித்து.

தம்பி! இந்த முறையன்றி, வேறு எந்த முறையிலே நடக்கிறது அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்! இதிலே பற்றும் பாசமும் காணமுடியாது; பயமும் நயமும் காணப்படும்; ஒட்டும் உறவும் இருக்காது, உசாவல் உராய்தல் இருக்கும்; கண்களில் கனிவு இருக்காது; பார்வையில் பசி நிறைந்திருக்கும். பளபளப்பு மிகுந்திருக்கும்; பரிவு மிகவும் குறைந்திருக்கும். அதிகம் சொல்வானேன், தம்பி! இது உணவு விடுதிச் சாப்பாடு! வீட்டுச் சாப்பாடு அல்ல! உண்டவரும் தந்தவரும் கொடுத்ததையும் கொண்டவையும் கணக்கெடுக்கும் போக்கினரே - உள்ளம் உள்ளத்துடன் உறவாடும் நிலையினர் அல்லர். எனவேதான், அந்த நிகழ்ச்சிகளிலே, ஒரு கலகலப்பு இருப்பதில்லை; களிப்பு மலர்வதில்லை! காகிதப் பூவாக, கல்லுருவமாக இருக்கிறது!