அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்றம் பல சென்றிருந்தேன்
2

தம்பி! நம்முடைய கழக நிகழ்ச்சிகள் அவ்விதமல்லவே! கடல் கடந்து சென்று திரும்பி வந்த தலைமகனை, குடும்பம் வரவேற்றுக் குதூகலித்து உரையாடி, இல்லம்தனில் உள்ள எழிலை எல்லாம் எடுத்துரைத்து, இன்பம் ததும்பும்படி எதை எதையோதான் பேசி மகிழ்ந்து உறவாடும் முறையன்றோ காண்கின்றோம், நம் கழக நிகழ்ச்சிகளில், பொருளற்றதா இந்தப் போக்கு? பயனற்றதா இந்த நிலைமை? கருத்தற்றவரன்றி வேறெவரும் இதனை உணராதிருக்க முடியாது.

களிறும் காட்டெருமையும், கடுவனும் கரடியும், கொல்லும் புலியும் பிறவும் உலவும் காடு சூழ குன்று பல சென்று வந்தேன் - பத்து நாட்களுக்கு முன்பு.

வளைந்த பாதைகள்! வழுக்கல் பாறைகள்! அடர்ந்த புதர், ஆபத்தான அடவிகள்! இங்கெல்லாம் சென்றிருந்தேன். எழில் காண அல்ல, தம்பி! காடுசூழ் இடமாம் பருகூர் மலையினில் கொடியும் கண்டேன். கன்னடம் பேசும் படுகர் கழகம் நடத்தக் கண்டேன். குளிர்மிகு "குந்தா'தன்னில் கூடிய தோழர்மாட்டு, கொள்கையின் ஆர்வம் கண்டேன், கொள்ளை இன்பம் உண்டேன். கோத்தகிரிக்குச் சென்றேன்; கூடினர் பெரியோர், இளைஞர்; அனைவரும் பேசும் மொழி, அருமைக் கன்னடம்தான், தம்பி! அங்கெலாம் கழகம், ஆமாம்! அவரெலாம் அண்ணா என்றே அன்புடன் அழைக்கக் கேட்டு, அவன் எனக்கு எப்படி அண்ணனாவான்! ஒட்டென்ன உறவு என்ன? ஒரு தாய் வயிற்றிலா உதித்தோம்? என்று கற்றது பேசிக் காழ்ப்பைக் கக்கிடும் போக்கினர்போல், காடுடை இடத்திலுள்ளார் இல்லை. அவரெல்லாம், அன்பினைச் சொரிகின்றார்கள், ஆதரவளிக் கின்றார்கள். நாளையோ மறுநாளோதான் நமது விடுதலைக்கான போரினைத் தொடுக்கவேண்டி நேரிடும் என்ற நெஞ்சினராக உள்ளனர்! கொஞ்சமா, அவர்கள் அன்பு!! கொடுத்தது என்ன அவர்கட்கு, நான்? பெற்றதோ பாசம், நேசம்! இதனை நான் பெற்ற பின்னர், எது இழப்பினுந்தான் என்ன? சுரங்கம் நிரம்பி உளது; பாளங்கள் பறிபோனாலும்! களஞ்சியம் புகுந்து நெல்லைக் களவாடிச் சென்றிட்டாலும்; வளமிகு வயலும் இங்கே வகையாக உளது தம்பி! அல்லியைப் பறித்துச் சென்றார்; அழகு நீரோடை, அரும்புடன் இருக்குதப்பா! அதனை நாம் இழந்தோமில்லை. கழகத்தின் கொள்கை இன்று காடு சூழ் இடங்கள்கூட நுழைந்துளது, தம்பி! உழைப்பு வெற்றி தந்துள்ளது!!

கொட்டுதே மாற்றார் நாக்கு! கொடுவாளாகி வெட்டுதே பிரிந்தோர் போக்கு! என்றெல்லாம் எண்ணமிட்டு, ஏக்கம் நான் கொண்டிட்டாலும், எங்கும் நான் காணும் காட்சி மாமருந்தாகி, என்னை, களிப்பூரில் கொண்டு சேர்த்து, காண் என்று கூறக் கேட்டேன்.

சுற்றுலா வந்தபோது, சிற்றூர்கள், பலவும் கண்டேன் - சிரித்த முல்லை கொல்லையில் காணும் மங்கை, விடுவளோ! பறித்திடாமல்; அதுபோல், போனது சரிதான் அண்ணா, பொருள் என்ன கொண்டுவந்தாய் என்று பொருள்நிறைச் சிரிப்பைக் காட்டிக் கேட்டிடத் தம்பி உண்டே! பொருளாளர்! எனவே பொருளும் சிறிதளவு பெற்றுப் பெரிதும் நான் மகிழ்ச்சியுற்றேன். எங்கும் நான் கண்ட காட்சி, எவர் உள்ளமும் மகிழும் வகையே! கோவை மாவட்டந்தனில், கோபமோ இவர்க்கு என்று எவரும் எண்ணிடும் வகையிலே காணப்படுவர், கொள்கை காப்போர். உடுமலை நாராயணனுடன், பொருள் பெறத்தக்க நல்ல புன்னகை முகத்தில் காட்டிப், பொறுமையை அணியாய்ப் பூட்டித், தொண்டாற்றிடும் இளைஞர் தேவசகாயம் கூடி, எனை அழைத்துச் சென்ற ஊர்களின் எண்ணிக்கை மறந்து போனேன் - எங்கும் நான் கண்ட ஆர்வம் என்றுமே மறப்பேன் அல்லேன். ஆங்கொரு சிற்றூர், தம்பி! உடுமலைப் பகுதி! ஆமாம்! பகலிலே ஊர்வலம்! பரிவு நிழலளிக்க, பாசம் உடனிருக்க, பல்லோர்கள் வந்தார்கள், மேடைநோக்கி, நானிருந்த வண்டி நகர்ந்தது, ஓடவில்லை. ஓடோடி வந்தார் தோழர்! ஒருகணம் அண்ணா! என்றார்! நான் இந்த ஊர்க்கழகத்தின் பொறுப்பாளன், இதனைக் கேளும், "அண்ணனைக் காண ஓடிவருகிறாள் என் துணைவி, அண்ணா! நின்று ஓர்கணம், அன்னாளின் அஞ்சஏற்றுக்கொள்ளும். என்னுடைய துணைவி யாரோ என்று எண்ணிட வேண்டாமண்ணா! சென்னையம்பதியிலுள்ள செல்வி அனந்தநாயகியின் தங்கையே எந்தன் தாரம்!'' என்று கூறுகின்றார். வந்த மங்கையும் வணக்கம்கூறி, செண்டு கைக்கொடுத்துவிட்டுச் சென்றிடக் கண்டேன் - என்ன இவ்வன்வு வெள்ளம், இத்துணை வேகமாக, எங்கெங்கும் கொழிக்கின்றதே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டேன், தம்பி!

இவ்விதமெல்லாம் இணையில்லா இன்பம், அன்பு, ஈட்டி என்முன்னம் கொட்டி, எடுத்தேகு அண்ணா என்று எண்ணற்றோர் கூறும்போது, பண்டிதர் பதைபதைக்கப் படுகளம் ஆவதெனினும் பார்க்கிறேன் ஒருகை என்று பண்பற்றுப் பேசும் பேச்சு, எனக்கென்ன கலக்கந்தனையா, ஏற்படுத்திட இயலும்? வெறும் கேலிக் கூத்து! பாரெலாம் பஞ்சசீலம் பரவிட வேண்டு மென்று நாநலமிக்க பேச்சுப் பேசிடும் பண்டிதர் நேரு போரில்லை பொறுப்பற்றதோர் போக்கோ செயலோ இல்லை, போற்றிடுகின்றோம் நாட்டை, மீட்டிட உறுதிகொண்டோம், அறநெறி நின்று கூறிடும் நம்மை நோக்கி, உள்நாட்டுப் போரும்கூட மூண்டிடுவதாயின், நான், உமக்கொரு நாடு தாரேன், உறுதி, இது அறிவீர் என்று உரத்தக் குரலெழுப்புகின்றார் - உள்ளத்தில் குழப்பம் மூண்டதாலே! இதனை நான், அன்பு சொரிந்திடும் குழாத்திடை இருந்தகாலை எண்ணிக்கொண்டேன் - மிரட்டிடும் பேச்சைக் கேட்டு மிரண்டிடுவாரோ சிலர் என்று - தம்பி! அதுதான் இல்லை! தம்பிகள் சிலர் போனார்கள். கழகத் தகுதியும் உடனே போச்சு! இங்கு இனிக் கழகம் தன்னைச் சீந்துவார் எவரோ என்று ஏளனம் பேசினாரே, ஏமாளிகளானோர் சில்லோர், பார் நமது திருவிடம் காட்டும் கோலம் புரிந்தது பண்டிதர்க்கு, பகற்கனவு என்றார் பழுக்காப் பான்மையினார் சிலரும், பண்டிதர் உணருகின்றார், பரணியாகித் தரணியெங்கும் பரவிடும், திராவிட நாடு திராவிடருக்கே என்னும் கொள்கை வளர்ந்துள்ள வகையும் அளவும். ஆகவேதான், அவரும் அச்சம் மிகவும் கொண்டு அச்சுறுத்துகின்றார்; அழித்திடுவேன் படையால், அமளிக்கும் தயார் என்கின்றார். காட்டுவது எதனை, இந்தக் காட்டுப் பேச்சு? கண்மூடி இருந்துவிட்டோம்; இயக்கம் இறந்துபடும் தானாக என்றெண்ணி ஏமாந்துபோனோம்; இல்லை! இல்லை! இவ்வியக்கம் எங்கெங்கும் பரவும் போக்கு ஏதேனும் ஆபத்துண்டாக்கும்; எனவே, இதனைப் பலமாகத் தாக்கவேண்டும் என்று எண்ணுகின்றார் பண்டிதர் என்பதன்றோ பொருளாகின்றது, தம்பி! பட்டபாடு வீண்போயிற்றா! இதோ, பண்டிதர் பதைத்து எழுகிறாரே! பகற்கனவு என்றா அவரும் பரிகாசம் பேசிவிட்டு, பாடிக்கொண்டே பழகுவோம்; பருகிக் கொண்டே பாடுவோம் என்று ஆகிவிட்டார்! இல்லை; தம்பி! நான் காடும் மேடும் சுற்றிப் பட்டிதொட்டியில் பேசி, கண்டிடும் காட்சிகள், மொத்தமாய்த் தந்திடும் நிலைமை விளக்கமது நேரு பண்டிதர்க்குத் தெரிந்துவிட்டது; புரிந்துவிட்டது! இனி, இரண்டில் ஒன்றுதான் - நம்மை அடியோடு அழிப்பது அல்லது நமது கொள்கைக்கு மதிப்பளிப்பது!

இத்துணை வீரமுழக்கமிட்டவரா, இறங்கிவருவார் என்று கேட்பது புரிகிறது. தம்பி! ஆனால் இதனைக் கேள், ஏறினோர் இறங்கவேண்டும், மேலும் ஏறிட இடமில்லாதபோது! பண்டிதர் போக்கு, பழைமை அறிந்தோர்க்கு பயமூட்டாது! வேகப் பேச்சு, அவருக்கு வெல்லக்கட்டி; கரைந்துபோகும்!! ஆகாதென்பார்! ஆர்ப்பரிப்பார்! அரிமாபோலக் குரல் எழுப்பிடுவார்! எல்லாம், கட்டம் ஒன்று, முடிவல்ல!! கதையை அறிந்திட வழி சொல்லிடுவேன். பாகிஸ்தானை ஜின்னா கேட்டபோது, பதைபதைத்தது கொஞ்சமா? பகை கக்கியது சாமான்யமா? கட்டம் ஒன்று!! கண்டோமே! இறுதியில் நடந்தது என்ன, தம்பி! கராச்சி தலைநகர் ஆயிற்று, காயிதே ஆஜம் வெற்றியுடன் கண்டார். பாகிஸ்தான் கண்டோம்!! உள்நாட்டுப் போர் மூண்டிடட்டும் ஒருபோதும் பாகிஸ்தானுக்கிணங்கேன்; உறுதி! காந்திமேல் ஆணை! என்று கூறினார், அறிவாயா! என்று கேட்டுச் சிரித்தார் ஜின்னாவும்.

அந்தப் போக்கு இம்மிகூட மாறிடக் காணோம்; அனுபவம் பாடம் தருமாம்; அது இங்கு தென்படக் காணோம்.

அணுகுண்டு யுகத்தினிலே ஆகுமா பாகிஸ்தான், தனிநாடு? என்று ஆர்ப்பரித்தார் பண்டிதர். கொண்ட கொள்கையை மாற்றிடவோ, கோணல் பாதை புகுந்திடவோ, கோல்கொண்டோர் முன் குதித்தாடிப் பண்டமும் பழமும் பெற்றிடவோ, சிற்றறிவினரா ஜின்னாவும்? சீரழிக்கவா அவர் வந்தார்? பாகிஸ்தான் எம் பிறப்புரிமை; அதனைப் பெற இயலாதேல், கபுர்ஸ்தான் எம் இருப்பிடமாய், ஆகட்டும்; கவலை இல்லை எனக் கர்ஜித்தார்! காங்கிரஸ் குரலை மாற்றிற்று.

இந்தியா என்றென்றும் ஒரு நாடாய் இருந்திடச் செய்வதே காங்கிரஸ் திட்டம். எனினும் ஏதோ ஓர் பகுதி, இருந்திட மாட்டேன் இந்தியாவில், எனக்கோர் அரசு தனியாக இருக்க வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்குமானால், என் செய்வோம்! தடுத்திட மாட்டோம், உமதிஷ்டம்! தனி நாடாகப் பிரிந்திடு, போ! எனத் தயக்கமின்றி ஒப்புக்கொள்வோம்; தத்துவம் இதுவே அறிவீர் என்றார், தலையே போவதானாலும் தரவேமாட்டேன் பாகிஸ்தான், எனத் தர்பார் பேச்சுப் பேசிய பண்டிதர் நேரு.

தம்பி! அது வேறு காலம் என்று கூறுவார் உளர். பிறிதோர் சமயம் அதுபற்றி என் கருத்தைத் தெரிவிக்கிறேன். இப்போது, இது விளக்கமாகிவிட்டதல்லவா!

கழக வளர்ச்சி வேகமுடன்,

காணுமிடம் எங்கும் எழுச்சி,

எழுச்சியின் அடிப்படை நெஞ்சநெகிழ்ச்சி,

நெகிழ்ச்சிக்குக் காரணம், பாசம், பற்று,

பாசம் பற்று இல்லை வேறு எவ்விடமும்,

அவ்விடமெல்லாம் வெறும் வியாபாரம்,

கணக்கர் போனால் கடை போகும் என்று கருதிய நிலை இன்றில்லை,

காடுசூழ் சிற்றூர் எல்லாம், கழகம் கண்டனர் நம் தோழர்,

கழக நிலையை அறிந்ததால் கலக்கமடைந்த பண்டிதர், கலக்கப் பார்க்கிறார் நம் மனதை, உள் நாட்டுப் போர் வருமென்று கூறி.

ஆனால், தம்பி! உள்நாட்டுப் போர் என்பதெல்லாம் உதட்டுப் போர்தான்! வேறொன்றுமில்லை. எங்கும் பூத்திருக்கும் வண்ண மலர்களை, காம்பு உடையாமல். இதழ் கெடாமல், பக்குவமாகப் பறித்தெடுத்து மாலையாகத் தொடுத்திடுவதுபோல, எங்கணும் காணப்படும் எழுச்சியினைப் பக்குவமாகக் கூட்டுச்சக்தியாக்கி, வருகிற பொதுத்தேர்தலிலே, நம் கழகம் வெற்றிபெற முனைந்து நின்று பணியாற்று. முறிந்து போகும் பண்டிதர் முடுக்கு.

தேர்தல் குறித்துத் திட்டமிட்டு, திரட்டிடு பேராதரவு. தெருத்தெருவாகச் சென்றிடலாம், தெரிவித்திடலாம், காங்கிர சாட்சியிலே, விளைந்துவிட்ட கேடுபாடுகளை. ஒன்றா இரண்டா அவை, தம்பி! அடுக்கடுக்காக உள்ளனவே! ஒன்றை எடுத்துக் கொண்டாலே, நன்றாய் விளக்க நாள் ஆகும். உள்ள நாட்கள் மிகக் குறைவு, கொள்ளை வேலை இருக்குதப்பா! வேறு நினைப்புகள் வேண்டாம் இனி, வெற்றிகாண வழி தேடு! உதயசூரியன், நம் சின்னம். ஊரெங்கும் அறிவித்திட, முன் வருவாய். நீயே அறிவாய் என்றாலும், நானும் அறிவேன் என்றுணர்த்த, தம்பி! சில நான் தொகுத்தளிப்பேன். தரமுடன் அதனைப் பயன்படுத்து; துண்டு விளம்பரம் ஆக்கலாம், சுவரொட்டிகளும் ஆக்கலாம், சிந்துகளாக்கிப் பாடிடலாம், செய்முறை, உன்திறம். விட்டுவிட்டேன். கேட்டிடு, கூறிட, கருத்துரையை:

சோறு தின்பவர் சோம்பேறி எனச் சொல்லு கிறார் நேரு பண்டிதரும்; "ஓட்டு' கேட்கும் காங்கிரசார் உண்பது என்ன? கேட்டிடுவீர்!

கோட்டை கொத்தளம் கட்டினவர், கோபுரம் பலப்பல எழுப்பினவர், மாடமாளிகை அமைத்தவர்கள் சோறு தின்பவர், நம் இனத்தவர், சோம்பேறிகளோ, அவர்களெலாம்?

கண்டவர் மெச்சும் காவியமும், கண்ணைக் கவரும் ஓவியமும் வளம்தரும் தொழில்கள் வகை வகையாய்க் கண்டவர் தமிழர்! சோறுண்டார்! அவர்தமை ஏசும் காங்கிரசை ஆதரிப்பது அறமாமோ?

அருந்தமிழ் நாட்டை ஏசுகிறார் ஆளுங் காங்கிரஸ் கட்சியினர். அவர்க்கோ "ஓட்டு!' ஐயயோ!!

"செக்கு' இழுத்த சிதம்பரனார்
வளர்த்த, காங்கிரஸ் இன்று

செக்கு தரும் சீமானிடம் பல்லிளிக்குதே!

வெட்கம்! வெட்கம்! என்று காலம் காரித்துப்புதே!

விலங்கொடித்த வீரர்களே!
விம்மிப் பயன் என்ன!
வீறுகொண்டெழுந்திடுவீர்
மரபு காத்திட!
"உதயசூரியன்' ஒளியை நாடு பெற்றிட!
"ஓட்டு'களை அளித்திடுவீர் புதுவாழ்வு பெற்றிட!

காத்திருந்தவன் பார்த்த பெண்ணை
நேத்து வந்தவன், கடத்திச் சென்ற
கதையைப் போல, காங்கிரசாட்சியில்
கஷ்டம் தீரும் என்று ஏழை காத்திருக்கையில்,
கள்ள மார்க்கட்காரன் வந்து அடித்தான்
கொள்ளை!! கையைத் தலையில் வைத்தழுதான்
உழைக்கும் ஏழை!
உழைத்தலுத்த உத்தமனே! அழுதது போதும்!
உதிக்குதுனக்காகவே "உதயசூரியன்'
இன்ப ஒளி பெற்றிட நீ வாராய் என்று
அன்புடனே அழைத்திடுது, தி. மு. கழகம்.

புஞ்சை, நஞ்சை ஆச்சென்றார்,
புதுப்புதுப் பாசனம் பார் என்றார்,
விளையுது நெல்லு மலைபோல என
விளம்பரம் பலமாய்ச் செய்திட்டார்,
விளைச்சல் அதிகம் ஆனபின்பு
விலைகள் விஷம்போல் ஏறுவதேன்?
வீட்டைத் தேடிக் காங்கிரசார்
ஓட்டுக் கேட்க வரும்போது
விளக்கம் கேட்பீர், தோழர்களே!
திருவிடம் விடுதலை பெற்றிடவே
தி. மு. கழகம் ஆதரிப்பீர்!
"உதயசூரியன்' உம் சின்னம்
உலகு தழைத்திடச் செய்வதுவும்
"உதயசூரியன்' உணர்ந்திடுவீர்!

எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஏட்டினில்!
இந்தி குட்டக் குனியும் குணக்கேடர்கள் நாட்டினில்!
கடன் பட்ட நாடு காவல் இல்லா வீடு
விழி இழந்தும் வாழலாம்
மொழி அழிந்தால் வாழ்வில்லை.
தட்டிக்கேட்க ஆள் வேண்டாமாம்
தாள்வேண்டாமாம், கதவுக்கு!
உரிமை இழந்த நாடு உயிரற்ற வெறும் கூடு
சாக்காடு மேல் என்று புலம்பும் நிலை
பூக்காடு எனப்புலவோர் மொழிந்த நாட்டில்.
சங்கம் கண்டார், முன்னவர்; தென்னவர்
பங்கப்படுகிறோம், இன்று; அவர், வழி வழி!
வாளும் வேலும், முன்னோர் கரத்தில்
தளையும் வளையும் இன்றுளர் கரத்தில்!
இனத்துக்குள்ள இயல்பினை
எவரே அழிக்கவல்லவர்கள்?

அரிசிச் சோறு கூடாதாம்! அறிவிக்கிறார் இப்போது. ஆளக் காங்கிரஸ் வந்திட்டால் அழியும் நெல்வயல் அறிவீரே.

கோதுமை விளைவது வடநாட்டில். கோதுமை சாப்பிடத் தூண்டுகிறார். கோதுமை சாப்பிட நாம் முனைந்தால், கோடி கோடி பணம் வடக்குக்கு.

ஓட்டுச் சாவடி போகுமுன்பு ஒரு கணம் இதனை யோசிப்பீர்; உழவுத் தொழிலைக் காத்திடவே "உதயசூரியன்' ஆதரிப்பீர்!

அமெரிக்கா தரும் பால் பவுடர் இலவசம், ஏழைக் குழந்தைகட்கு! அதுவும் கள்ளமார்க்கட்டு, வந்து விற்குது! காரணம் யார்?

பிச்சை எடுத்தார் பெருமாளு; அதைப் பறித்ததாம் அனுமாரு எனக் கொச்சை மொழியிலே கூறுவரே, இது அதுபோலத்தானே இருக்கு!

அமெரிக்கத் தூதர் கண்டிக்கிறார்; ஆளும் காங்கிரஸ் பதில் தருமா?

சிங்களம் ஆளும் சீமாட்டி சிரீமாவோ கொடுமையினால் சிறகொடிந்த பறவைகளாய் சித்திரவதைக்கு ஆளாகிச் சீரழிகிறார், நம் நாட்டார்.

அம்மாவுக்கு மாம்பழம் ஐயா கொடுக்கிறார் பரிவோடு. ஆலாய்ப் பறக்கும் தமிழர்களை, அடித்து நொறுக்குவது அம்மாதான்!! ஐயாவுக்குக் கவலை இல்லை, ஆமாம், அவர் வடநாடு!! வதைபடுவது இலங்கையிலே, வாழ்விழந்த திராவிடராம்.

திராவிடர் வாழப் பாடுபடும் தி. மு. கழகக் கரம் வலுத்தால், தீரும் துயரம் இலங்கையினில்!

இலங்கைத் தமிழர் துயர் துடைக்க, சிங்கத் திராவிடத் தோழர்களே! பொங்கி எழுவீர்; வந்திடுவீர், பொதுத்தேர்தல் வருகுது விரைவினிலே.

பொல்லாங்கெல்லாம் அழிந்திடவே, புதுமை வாழ்வு செழித்திவே, போட்டியிடுவீர் உம் ஓட்டுகளை "உதயசூரியன்' அழைக்கின்றான்.

இவைகளையும் இவை போன்றவைகளையும் எடுத்துக் கூறி, நாட்டினருக்குக் கருத்து விளக்கமளிக்க நாட்கள் அதிகம் இல்லை, தம்பி! நாட்கள் அதிகம் இல்லை!

எவரெவர் எந்த எந்தத் தொகுதி என்பதும் அறிவிக்கப்பட வில்லையே என்பது குறித்துக் கவலைப்படாதே. உன் கடமை "உதயசூரியன்' வெற்றிக்காகப் பாடுபடுவது. எனவே, தம்பி!

உறங்கும் உலகை எழுப்பிவிடும்
உதயசூரியன்!
உலகு தழைக்க ஒளி தருவது
உதயசூரியன்!
உழைப்பவர்க்கு உரிய சின்னம்
உதயசூரியன்!
உமது வாழ்வு மலரச்செய்வது
உதயசூரியன்!
இருளகற்றி எழிலளிக்கும்
உதயசூரியன்!
இன அரசு விரும்புவோர்க்கு
உதயசூரியன்!
திருவிடத்தின் விடுதலைக்காம்
உதயசூரியன்!
தி. மு. கழக தேர்தல் சின்னம்
உதயசூரியன்!
ஓட்டுப் போட ஏற்ற சின்னம்
உதயசூரியன்!
நாட்டினரே! போற்றிடுவீர்! உதயசூரியன்!

ஞாயிறு போற்றதும் என்று கூறினாரன்றோ, இந்த ஞாலம் போற்றும் பேரறிஞன், இளங்கோவும்! அந்த ஞாயிறு இல்லாவிட்டால் ஞாலம் ஏது?

உயிர்களுக்கெல்லாம் உற்ற தோழன்
உதயசூரியன்!
அரும்பை மலரச் செய்பவனும்
உதயசூரியன்!
அனைத்துக்கும் ஒளி ஊட்டுபவன்
உதயசூரியன்!
அகிலம் ஆளும் வலிமை பெற்றோன்
உதயசூரியன்!
பொங்கிவிடும் வளத்தைத் தந்திடுபவனும்
உதயசூரியன்!

இதனை நாடு அறிந்து, நல்லோர் எல்லாம் நம்மவராகி நாட்டின் நலிவு போக்கிடும் பணியில், நமக்காதரவு மிகவும் தந்திடச் செய்திடல், உன் கடன் அறிவாய் தம்பி! மற்றவை தொடர்ந்து தெரிவித்திடுவேன், மரபு காத்திடும் உடன்பிறந்தோனே!

அண்ணன்,

29-10-61