அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குருதி கலந்த மண்
1

நாகர் கிளர்ச்சி -
மொழிக் கிளர்ச்சிகள் -
அசாம் வங்க மொழிகள் -
இந்தி பேசாத பகுதி மக்கள் நிலை

தம்பி!

பிசோ! உயிரோடு! அல்லது பிணமாக!! - கொண்டு வருபவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு தரப்படும்.

"இந்திய' துரைத்தனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆண்டு மூன்றாகப் போகிறது!

இப்போது பிசோ சார்பாக வேறோர் விளம்பரம் வெளியிடலாம்போல இருக்கிறது, வேடிக்கைக்காக!

பிசோ, எப்படி இங்கிருந்து, உளவாளிகள், வேவு பார்ப்போர், உயர்தர இராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு இலண்டன் போக முடிந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவோருக்கு, 20,000 ரூபாய் பரிசளிக்கப்படும்.

மலைநாட்டு மாவீரன் என்று, நாகர்கள், அவனை வாழ்த்துகிறார்கள்.

மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கூத்தாடும், காட்டுமிராண்டித் தலைவன் என்று டில்லி கூறுகிறது.

அந்தப் பிசோ இலண்டன் நகரில் இருக்கிறான் - அரசியல் தலைவர்களைக் காண்கிறான். பத்திரிகைக்காரரிடம் உரையாடுகிறான். தாயகம் அடிமைப்பட்டிருப்பது பற்றிய விளக்கத்தை உலகுக்கு அறிவித்து நீதி கேட்கப் போகிறேன் என்று அறிக்கை விடுகிறான்.

இறந்துவிட்டிருக்கக்கூடும் என்று முன்பு கூறினோர், இன்று இளித்தவாயர் என்ற பட்டம் பெற்றுச் சுமக்கின்றனர் - அவனோ, விடுதலை வீரர்கள் விரும்பிச் சென்று அடைக்கலம் தேடிடும் திருத்தலம் போயுள்ளான்.

நாகர் தனி இனம்! நாகர்களுக்குத் தனி மொழி! நாகர்களுக்குத் தனி கலாசாரம்! ஆகவே நாகநாடு தனி அரசு ஆகவேண்டும்! - என்பது பிசோவின் விடுதலைக் கீதம்.

நீங்களும் இந்தியர்தான், ஆனால் மலை ஜாதியினர்; உங்கள் நடை உடை மாறுபட்டிருக்கலாம், ஆனால் உள்ளம் இந்திய உள்ளம்; காட்டுக் கூத்தும், வேட்டைப் பாட்டும் கலையாக இருக்கலாம். ஆனால் அதுவும் பாரதப் பண்பாட்டிலே ஒருவகை தான்! எனவே, தனி அரசு கூடாது, பேரரசிலே இணைந்து இருக்க வேண்டும் - மறுத்தால் படை இருக்கிறது பலமாக; குண்டுகள் உள்ளன மாரிபோல் பொழிய; தலைவர் இருக்கிறார், திம்மைய்யா! - என்று டில்லி கூறிற்று; கூவிற்று; மிரட்டிப் பார்த்தது.

மலை அரண்களைத் தூளாக்கினர், புதிய அரண்கள் அமைத்தனர், நாகர்கள்.

படைகளை ஏவினர் தாக்க; பதுங்கினர் நாகர்கள், சமயம் பார்த்துத் திருப்பித் தாக்க!

விமானம் வட்டமிட்டது; அடர்ந்த காடுகளிலே ஒளிந்து கொண்டு, நாகர்கள் கெக்கலி செய்தனர்.

மாமன் பிடிப்பட்டான், மைத்துனன் கொல்லப்பட்டான், வலது கரமாக இருந்தவனை வளைத்துப் பிடித்துக் கொண் டோம், இடதுகரமாக இருந்தவனைப் பிடித்திழுத்து வந்தோம்; அணிவகுப்பு சின்னாபின்னமாகிவிட்டது, தங்க இடமின்றித், தக்க துணையின்றித், தலை தப்பாது என்று தெரிந்து திகில் கொண்டு அலைந்து திரிகிறான் பிசோ என்றனர்.

சென்றகிழமை, அவனை ஜெயப்பிரகாஷ் நாராயணன், இலண்டன் நகரில் கண்டு பேசினார் என்று இதழ்கள் தெரிவிக்கின்றன.

தம்பி! நாக நாடு தனி நாடு ஆகவேண்டும், என்று கேட்பதற்குக் காட்டப்படும் காரணங்களைவிட, ஆதாரங்களை விட, ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான, துப்புரவான ஆதாரம், குவிந்து கிடக்கிறது, நமக்கு - திராவிடருக்கு.

நாகர், மலைஜாதியினர் - ஆடுவதும் பாடுவதும் அடவியில்! தேடுவதும் பெறுவதும், உயிர்வாழ உணவு வகைகளை!

திராவிடரோ, வீரமரபினர், வாகைசூடியோர், வளம்பல பெற்றவர், வரலாற்றுப் புகழ்கொண்டவர்கள்!

திராவிடரின் தனி மரபு - தரணிக்குக் கிடைத்துள்ள, பல அணிகலன்களிலே சிறப்பான தொன்றாகும்.

அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சு நெக்குருகி நிற்கிறோம். இதனை அறியாததால், வடவர், நம்மை நையாண்டி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.

நாம் யார் என்பதை நமக்குக் காட்ட, நமது தாய்மொழியாம் தமிழ், கொடி இழந்து, கொற்றம் இழந்து, ஈட்டியது இழந்து, இனிமை பலவும் இழந்து கிடந்துழலும், இந்த நாட்களிலும் துணை நிற்கிறது, மனப் பிணி போக்கி வருகிறது.

அந்த அழகு தமிழ் மொழியினை அணைத்து, அழித்திட, ஏவுகின்றனர், இந்தியினை.

"மொழி விஷயத்தை இவ்வளவு பெரிதாக்கலாமா' என்று பேசுகிறார்கள் சிலர் - அவர்கள் வேறு ஏதோ, மிகப் பெரிய மனிதகுலத்தின் மேம்பாட்டுக்கான, விஷயத்தைக் கவனித்துக் கொண்டு இசைபட வாழ்ந்துகொண்டிருப்போரோ எனில், இல்லை, தம்பி! இல்லை வெந்ததைத் தின்றுவிட்டு, வாயில் வந்ததைப் பேசிடுவோர்: அல்லது கிடைத்தது பறிபோகாதிருக்க, கைகட்டி வாய்பொத்திக் கிடக்கும் போக்கினர். வாயும் வயிறும் தவிர, வேறெது பற்றியும் கவலைகொள்ளா மனிதர்கள்! மனிதர்களா!! மனித உருவங்கள்!! இவர்கள் பேசுகிறார்கள், மொழி பற்றித் தகராரு கூடாது என்று!!

தம்பி! நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அசாம் மாநிலத்தில், பல இடங்களில் பட்டாளம் காவல் புரிந்துகொண்டிருக்கிறது, போலீசுக்குத் துணை நின்று; கிளர்ச்சியை அடக்க!

அசாமியர், வங்காளிகளைத் தாக்குகிறார்கள்.

வகையாக அசாமியர் சிக்கிக்கொண்டால், வங்காளிகள் பதிலுக்குத் தாக்குகிறார்கள்.

வங்காளிகளின் கடைகள் சூறையாடப்படுகின்றன!கொலை, கொள்ளை, தீவைத்தல் போன்ற வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செயல்கள் நடக்கின்றன.

வங்காளப் பத்திரிகைகளை அசாமியர் கொளுத்துகின்றனர்.

வங்காள மொழி ஒழிக! வங்காள ஆதிக்கம் ஒழிக வங்காளிகள் ஒழிக!! - என்று அசாமிய இளைஞர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.

அசாமிய மொழி ஆதிக்கம் ஒழிக! அசாமிய வெறி ஒழிக! என்று வங்காளிகள் முழக்கமிடுகிறார்கள். வங்காளிகள் இனி அசாமில் இருக்க முடியாது என்று அஞ்சி, சாரை சாரையாக வங்கம் திரும்புகின்றனர்.

வங்காளிகளுக்கும் அசாமியருக்கும், என்ன தகராறு? மொழிப் பிரச்சினையேதான்! வேறு ஒன்றும் இல்லை.

அசாம் மாநிலத்தில், மிகப் பெரும் அளவுக்கு வங்காளிகள் குடியேறிப் பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அசாமில் உள்ள அசாமியரைவிட, வங்காளிகள் வசதியுடன் வாழக்காணும் அசாமியருக்கு, என்ன தோன்றும்!! மனக் குமுறல்! நமது நாட்டுக்குள்ளே நுழைந்து, வியாபாரத்தை, தொழிலை, அலுவல்களைக் கைப்பற்றிக் கொண்டு கொட்ட மடிக்கிறார்கள், வங்கத்தார்; நாம் கிடக்கிறோம், வகையற்று; செ! என்ன பிச்சைப் பிழைப்பு இது!! - என்ற எண்ணம் குடைகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை, ஆகஸ்ட்டுத் திங்கள் 15லிம் நாளும், ஜனவரி 26-ம் நாளும், தலைவர்கள் உபதேசமளிக் கிறார்கள், "அசாமியராயினும் வங்கத்தாராயினும், பீகாரி யானாலும், ஒரியாவாயினும், எல்லோரும் பாரத புத்ரர்கள்! இந்தியர்கள்!!' என்று. ஜெய் ஹிந்த்! போடுகின்றனர்! பிறகோ?

"அந்தச் சிமெண்டுக் கம்பெனி, யாருடையது?''

"வங்காளியுடையதுதான்!''

"நேற்று கலாமண்டபத்திலே பாடிய...''

"வித்வானைக் கேட்கிறாயா? முகர்ஜி! கல்கத்தா!''

"வங்காளியா?''

"ஆமாம்!''

இப்படி உரையாடல்! இது உள்ளத்திலே என்னென்ன எண்ணங்களை எழச் செய்யும்?

தம்பி! இந்தச் சமயத்தில், அசாம் துரைத்தனத்தார், சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்ட நிலையில், அசாம் மொழியை அசாம் மாநிலத்தில் ஆட்சிமொழி ஆக்குவதற்குகான சட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தனர்.

அமளி! அசாமிய மொழி ஆட்சி மொழி ஆகிவிட்டால், வங்காளிகளான, எங்கள் கதி என்ன ஆவது? அசாமிய மொழி கற்றவரன்றோ, அலுவலகத்தில் இடம்பெற முடியும்? அசாமிய மொழிக்கல்லவோ ஏற்றம் ஏற்பட்டுவிடும்? பிறகு, வங்காள மொழிக்காரனுக்கு இங்கு என்ன வேலை? என்றல்லவா, அசாமியர் கேட்கத் துணிவர் - என்று எண்ணினர் வங்காளிகள்; கொதித்தனர்.

"இங்கு என்ன வேலை? என்று எப்போதோ, கேட்பதா! இதோ, இப்போதே, கேட்கிறோம். வங்கம் இருக்கும்போது, வங்காளிக்கு இங்கு என்ன வேலை?'' என்று அசாமியர் அறைகின்றனர், ஆத்திரத்துடன். அமளி!! துப்பாக்கி அமுல் நடத்துகிறது! துடுக்குத்தனம் தலைவிரித்தாடுகிறது!

தம்பி! இந்தப் பிரச்சினையிலே இருக்கிற நியாய அநியாயம் இருக்கட்டும் ஒரு புறம் - மொழி, வாழ வழிகாட்டுகிறது; ஆதிக்கம் நடத்தக் கருவியாகிறது - என்பது விளங்குகிறதல்லவா? கவனிக்கச் சொல்லு, கருத்திலே கடுவிஷம் கலவாத நிலையிலுள்ள காங்கிரசாரிடம்.

இந்தியா ஒரே நாடு! நாம், எம்மொழி எனினும், எம்மதம் எனினும், இந்தியர் - என்ற பேச்சுக்கும், அசாமிலே காணப்படும் உணர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாகத் தெரிகிறதா!!

"நாம் இந்தியர்' என்ற உணர்ச்சி, பொய்யுரையின்மீது நிற்கிறது. எனவேதான், துளி அளவு பிரச்சினையானாலும், உண்மை உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்துவிடுகிறது.

தம்பி! திருவண்ணாமலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, இந்தி ஆதிக்கம் எனும்ஆபத்து வரக்கூடும் என்பது பற்றிப் பேசப்பட்டது. இந்தி எதிர்ப்பு நாள் நடத்தப்பட்டது; நாடெங்கும், கிளர்ச்சிக்கான முன்னேற்பாடுகள் செய்யலாயினர். ஆட்சிமொழி பற்றிக் கேர் குழு தந்த அறிக்கையில் டாக்டர் சுப்பராயனும், வங்கப் பேராசிரியர் ஒருவரும் ஒப்பம் எழுத மறுத்து, எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர் - தமிழக மக்களுக்கு இது, பெரியதோர் விழிப்புணர்ச்சியை ஊட்டிற்று.

டாக்டர் சுப்பராயன், தமிழர் - அறிமுகப்படுத்தத் தேவையில்லை - அமைச்சராகி இருக்கிறார் இப்போது - முன்பு ஆச்சாரியாரின் வலக்கரம் என்ற சிறப்புக்கு உரியவராக இருந்தவர் அவர், கேர் குழுவின் முடிவைப் பலமாகத் தாக்கினார் - தக்க காரணங்களைக் காட்டி.

எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், எவருடன் குலவினாலும், தமிழன் என்ற இன உணர்ச்சி அவரை விட்டுவிடாது; எனவே அவர், மறுப்புரை எழுதியதிலே விந்தை இல்லை.

அதேவிதமான கருத்தினை, ஏறக்குறைய அதே சொற் களில், சுனிதிகுமார் சட்டர்ஜி எனும் வங்காளப் பேரறிவாளர் தெரிவித்திருந்தாரே, அது உள்ளபடி வியப்புக்குரியது, ஐயமில்லை.

சுனிதிகுமார் சட்டர்ஜி, மொழித்துறை வல்லுநர்; நாற்பது ஆண்டுகளாக அந்தத் துறையில் பணியாற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர்.

மேற்கு வங்க மேல்சபைத் தலைவராகத் திகழ்ந்தவர்.

வர்தாவில் துவக்கப்பட்ட "ராஷ்டிர - பாஷா பிரசார் சமிதி'யின் மேற்கு வங்கக் கிளைக்குத் தலைவர்; எனவே, இந்திக்கு விரோதி அல்ல.

இந்தி மொழியில் நான்கு நுற்களை இயற்றியவர் - பரிசு கூடக் கிடைத்தது - எனவே, இங்கு இந்திக்காக வாதாடும் பேர்வழிகள் போல, இந்தி தெரியாதவரல்ல - விற்பன்னர்.

அப்படிப்பட்ட அறிவாளி "இந்தி வெறி' - "இந்தி ஏகாதிபத்தியம்' என்றெல்லாம் கண்டித்து, எழுதினார்.

I cannot help feeling that the Report is simply trying to suggest certain programmes and lines of procedure from the Centre without a close consideration, either of the general situation in India in the sphere of language or of future reactions and repercussions among large sections of our people.

The entire out-look is that of the Hindi-speakers in the Indian Union, who alone are to profit immediately and for a long time to come; if not forever.

I fear that in the entire report there is very little evidence of an attempt to understand the feelings and the intellectual approach of the non-Hindi speaking peoples for their own languages...

The attitude is far from democratic - it is just a case of imposition of one kind of mentality over the rest...

The recommendations will in my opinion bring about the immediate creation without intending to do so of two classes of citizens in India - Class I citizens with Hindi as their language obtaining an immense amount of special privileges by virtue of their language only.

I honestly feel that I am seeing an incident ‘Hindi Imperialism’.

After consulting the non-Hindi States, the Constitution of India is to be amended in its section on the official language of the Indian Union.

கேர் குழு, ஆட்சி மொழி குறித்து ஆய்ந்தறியத்தக்க முறைகளை மேற்கொள்ளவில்லை, என்பதற்கு, சட்டர்ஜி காட்டுவதைவிட வேறென்ன காரணம் தேவை?

மொழி விஷயமாக இந்தியா முழுவதிலும் என்ன கருத்துப் பொதுவாக நிலவுகிறது என்பதைக் கண்டறியாமலும், பெரும் பாலான மக்களிடையே, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்காமலும், மத்திய அரசு என்னென்னவழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மட்டுமே, குழு அறிக்கை தயாரித்திருக்கிறது.

அறிக்கையின் நோக்கம், இந்தி பேசும் மக்களுக்கு, உடனடியாகவும், நெடுங்காலத்துக்கும், ஒரு சமயம் என்றென்றும், இலாபம் கிடைத்திடக்கூடிய விதமாகவே அமைந்திருக்கிறது. ★ இந்தி பேசாத மக்கள், தங்கள் மொழிபற்றிக் கருதுவது என்ன என்பதைக் கண்டறிய ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதும், இந்தி பேசாத மக்களுடைய உள் உணர்ச்சி மதிக்கப்படவில்லை என்பதும் அறிக்கையில் தெரிகிறது.

ஜனநாயக முறை கையாளப்படவில்லை. ஒரு கருத்தினர் தமது கருத்தை மற்றவர்மீது திணிப்பதுதான், இந்த முறை என்று தெரிகிறது.

இந்த அறிக்கையின்படி காரியமாற்றினால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் மேலோர் ஆகவும், மற்றவர்கள் இரண்டாந்தர மக்கள் ஆகவும் ஆகிவிடுவர்.

இந்தி ஏகாதிபத்யம், நெளிவதைக் காண்கிறேன்.

இந்திய அரசியல் சட்டத்தில் மொழிபற்றி இருக்கும், விதியை, இந்தி பேசாத மாநிலங்களுடன் கலந்து பேசி, திருத்தி அமைக்க வேண்டும்.

தம்பி! டாக்டர் சுப்பராயன், இந்தக் கருத்துக்களை ஆதரித்ததுடன், இந்தி பற்றி, பல்கலைக் கழக மாணவர்களின் கருத்தினை அறிந்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார்.

இந்த கருத்துகளும், நாட்டிலே, இதற்குப் பரவலாகக் கிடைத்த ஆதரவும், நமக்கெல்லாம் மிகுந்த திருப்தியை உண்டாக்கின.

இந்திக்கு எதிர்ப்பு, எதிர்பாராத இடமிருந்தெல்லாம் வருகிறது. எனவே, வெறி குறையும், ஆதிக்க முயற்சி குலையும் என்று எண்ணம் பிறந்தது; செந்தேனாய் இனித்தது.

இம்மட்டோ! இந்தியைக் கட்டாய பாடமாக்கி, தமிழரை வம்புக்கு இழுத்து, தாளமுத்து - நடராசன் எனும் இரு இளைஞர்களைப் பலிகொண்ட அடக்குமுறையை அவிழ்த்து விட்ட, ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு இந்தியைப் பலமாகத் தாக்கலானார்.

இந்தியை எதிர்த்து நானும் ஆச்சாரியாரும் ஒரே மேடையில் பேசிய அற்புதமே கண்டாயல்லவா!

வங்கம் சென்றுகூடப் பேசினார் ஆச்சாரியார்.

சம்பத்தும், வி. பி. இராமனும் வங்கம் சென்று மொழி மாநாட்டிலே பேசினர்.

இங்குள்ள இதழ்கள்கூட, இந்தி வெறியைக் கண்டித்தன.

எங்களுக்கு மட்டும் என்ன, தமிழ் உணர்ச்சி இல்லையா? நாங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே பிறக்கவில்லையா!! என்று காங்கிரஸ் மந்திரிகளேகூடப் பேசலாயினர். மகிழ்ச்சி நமக்கு, மயக்கம் வரும் அளவுக்குப் போரிடாமலே வெற்றி கிடைத்துவிடும், என்ற நினைப்புத் தடித்தது.

இவைகளை எல்லாம்விட, இந்தி குறித்துப் பண்டித நேரு பாராளுமன்றத்தில் இரு முறை பேசியது, நம்மைக் களிப்புக் கடலிற் கொண்டு சேர்த்தது எனலாம்; இனிப்புக் கூட்டிப் பெருந்தன்மையைக் காட்டிப், பெருந் தலைவர் என்ற கோலம் பூண்டார் நேரு பண்டிதர்! நம்மை மகிழ்வித்தார். என்ன தெளிவு! எத்துணை கனிவு! தலைவரென்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார்! மர மண்டைகளும். புரிந்துகொள்ளத்தக்க விளக்கம் தருகிறார்! அச்சம் அகன்றது! ஐயம் நீங்கிற்று! ஆணித்தரமாகப் பேசி விட்டார்! இனி இந்தி வெறியர், பெட்டிப் பாம்பாவர்! - என்றெல்லாம், நாடே புகழ்பாடிற்று, பண்டிதரின் பேருரை கேட்டு. சந்தைச் சதுக்கத்திலோ, சாவடித் திண்ணையிலோ, அல்ல! தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார். எந்த இடத்தில் பேசினால், இந்தத் துணைக் கண்டம் மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் கூர்ந்து கவனிக்கப்படுமோ, அங்குப் பேசினார்!!

Hindi would not be imposed against their wishes on non-Hindi speaking people.

English would continue as an associate or additional language in the country for an indefinite period or as long as the non-Hindi speaking people wanted it.

The decision as to how long it would continue as an associate language should be left to the non-Hindi speaking people and not to the Hindi-speaking people.

Many people in the South objected to learning Hindi. They did so because of a feeling that it was being imposed on them.

Therefore all talk of imposition must go. (Hear! Hear) I shall go further and say that if they don't want to learn Hindi, let them not learn Hindi.

I believe in two things. There must be no imposition of Hindi. Secondly for an indefinite period — I do not know how long — English should continue as an associate or additional language, not because of certain facilities and all that but because I do not wish people in the non-Hindi areas to feel that certain doors of advances are closed to them.

So I would take (English) it as an alternative language so long as people require it and the decision on that I would not leave to the Hindiknowing people, but to the non-Hindi knowing people. (Cheers)

படித்துப் படித்து இன்புறலாம் என்று தோன்றும், பண்டிதரின் பேருரை! இந்தி பேசாத மக்கள்மீது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தி திணிக்கப்படமாட்டாது.

துணை மொழியாக, ஆங்கிலம், நீண்ட நெடுங்காலம் - அல்லது இந்தி பேசாத மக்கள், எவ்வளவு காலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் துணை மொழியாக இருக்கும்.

ஆங்கிலம் துணை மொழியாக எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை முடிவுகட்டும் உரிமை, இந்தி பேசும் மக்களிடம் அல்ல, இந்தி பேசாத மக்களிடமே விடப்படும். ★ தெற்கே பலர், இந்தி கற்பதை மறுக்கிறார்கள்; இந்தி திணிக்கப்படுகிறது என்ற எண்ணத்தாலே. எனவே, திணிப்புப்பற்றிய பேச்சு ஒழிய வேண்டும்.

நான் இன்னும் சொல்லுவேன்: அவர்கள் இந்தி படிக்க விரும்பாவிட்டால், படிக்கத் தேவையில்லை.

இரு விஷயங்களில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று இந்தித் திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக காலம் குறிப்பிட முடியாது - எவ்வளவு காலம் என்று எனக்கே கூறத் தெரியாது. ஆங்கிலம் துணை மொழியாகத் தொடர்ந்து இருந்தாக வேண்டும்; அதனால் சில வசதிகள் உள்ளன என்பன போன்ற காரணங்களுக்காகக்கூட அல்ல; தங்கள் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டதாக இந்தி பேசாத மக்களுக்கு ஒரு உள் உணர்ச்சி ஏற்படக் கூடாது என்பது என் எண்ணம்.

எனவே, ஆங்கிலம், இந்திக்குப் பதிலாக, மாற்று ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் - எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்க வேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் நான் விடமாட்டேன்; இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

தம்பி! இவ்வளவு தெளிவாக இந்தத் துணைக்கண்டத்தின் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் ஈடு எதிர்ப்பில்லாத் தலைவர், உலகப் பெருந்தலைவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்கவர் என்ற புகழ் ஈட்டிக் கொண்டவர், பஞ்சசீல கர்த்தாவென்றும்பாண்டுங் மாநாட்டு வீரர் என்றும் கொண்டாடப்படுபவர், போர் வெறிகொண்ட இந்தக் கெட்ட உலகிலே, சமாதானம் நிலவப் பாடுபடும் சாந்த மூர்த்தி, என்று போற்றப்படுபவர் - பண்டிதர் - பேசினால் யாருக்குத்தான், நம்பிக்கை மேலிடாது.

இந்தி குறித்து இனிக் கவலையில்லை.

அச்சம் இல்லை; நீதி நிலைத்தது.

இந்தி வெறியரின் கொட்டம் அழிந்தது; ஆதிக்கம் ஏற்படாது.

இந்தி பேசாத மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு விட்டது. பண்டித நேருவே இதற்கு உறுதிமொழி அளித்து விட்டார்.

அவருடைய உறுதிமொழியை, மாஸ்கோவும் வாμங்ட னும், பெர்லினும், இலண்டனும், பாரிசும் டோக்கியோவும், மதிக்கும்போது, நாம் மதிப்பளிக்காதிருப்பது, அறிவுடைமை யாகுமா! - என்றெல்லாம் தம்பி! நம் நெஞ்சம் எண்ணியதிலே, தவறு இல்லையே! நம்பினோம்!

அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், திருவண்ணா மலையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய நாம், 1959 செப்டம்பர் திங்கள் நடத்திய பூவிருந்தவல்லி மாநாட்டில், - ஒரு வாழ்த்துத் தீர்மானமே, நிறைவேற்றினோம்.

"இந்தி ஏகாதிபத்தியத்தைப் புகுத்தி நிலைபெறச்செய்ய வடநாட்டுச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் வஞ்சக முயற்சியை திராவிடப் பெருங்குடி மக்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் அறவழி நின்று நடத்திவரும் கிளர்ச்சியின் விளைவாக, வடநாட்டு இந்தி வெறியர்களின் போக்கைப் பண்டித நேருவே கண்டிக்கவும்; தடுத்து நிறுத்தவும்; முன்வரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது திராவிடரின் கிளர்ச்சி வெற்றிப்பாதை நோக்கிச் செல்கிறது என்பதையே எடுத்துக் காட்டுவதாக இந்த மாநாடு கருதுவதுடன், பண்டித நேருவின் போக்கிலேயே ஒரு மாற்றத்தையும், இந்தி வெறியர்களின் கொட்டத்துக்கு ஒரு பலமான அடி கிடைத்தது போன்ற நிலைமையையும் ஏற்படச் செய்ய வீரமும் தியாகமும் நிறைந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடப் பெருங்குடி மக்களுக்கு இம் மாநாடு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.''

நமக்கு மட்டுமல்ல, இந்தி ஏகாதிபத்தியத்தை வெறுக்கும் பலருக்கும் பண்டிதரின் பேச்சு, பாகாக இருந்தது. இனி இந்தித் திணிப்புப்பற்றிய பயம் இல்லை என்று பலரும் கூறினர் - களித்தனர்.