அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குருதி கலந்த மண்
2

வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றியபோதுகூடத் தம்பி! நமக்கு ஐயப்பாடு அறவே நீங்கிவிடவில்லை.

பண்டிதரின் போக்கு மாறிவிடுமோ? பேச்சை ஒரு நாள் மறுத்துவிடுவாரோ? பேசிமட்டும் என்ன பலன்? சட்டம் மிரட்டியபடி இருக்கிறதே! எந்த நேரத்தில் இந்தி வந்திடுமோ, கொட்டிட! - என்ற அச்சம் கலந்த ஐயப்பாடு எழுந்தது. எனவேதான், வாழ்த்துரைத்ததுடன், வேறொன்றினையும் தீர்மானம் அளித்தது.

"1965-க்குப் பிறகு, இந்தி மொழியே அகில இந்திய ஆட்சி மொழியாகி, ஆங்கிலம் அறவே அகற்றப்படும் என்ற நெருக்கடியைப் பண்டித நேருவின் வாக்குறுதி தளர்த்தியிருப்பது கண்டு இம்மாநாடு மகிழ்கின்றது. என்றாலும், பேச்சளவோடு நின்று விடாமல், பண்டித நேரு தமது வாக்குறுதியைச் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்துக்கொள்வதன் மூலம் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று இம்மாநாடு வ-யுறுத்திக் கூறுகிறது.''

எந்த இந்திப் பிரச்சினை எரிச்சலையும் அருவருப்பையும் மூட்டி வந்ததோ, எந்தப் பிரச்சினை எதேச்சாதிகாரத்துக்கு வழிகோலுவதாகும் என்ற நியாயமான அச்சம், திராவிடப் பெருங்குடி மக்களின் உள்ளத்தைக் குடைந்து வந்ததோ, அந்தப் பிரச்சினைக்கு மிகச் சாதாரண அரசியல்வாதிபோல அல்ல, மக்களின் மனதினை அறிந்தும் மதித்தும் நடந்திடும் மாபெருந் தலைவர் என்ற முறையிலே, தக்கதோர் தீர்வுகாண முன்வந்த, பண்டித நேரு, தமது வாக்குறுதிக்குச் சுவையும் பயனும் ஏற்படத்தக்க செயலை மேற்கொண்டாரா? இல்லை!

இந்தி பேசாத மக்களின் கருத்தறிய, ஏதேனும் முயற்சி எடுத்துக்கொண்டாரா? இல்லை.

இந்தி பேசாத மக்களின் கருத்தறிய என்ன வழி என்றாவது கலந்துபேசினாரா? இல்லை.

இந்தி பேசாத மக்கள், இப்போது இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டனரா? இல்லை.

இந்தி குறித்து முடிவு கட்டாமல், சும்மாவிடப்பட்டதா? இல்லை.

நேரு பேசினார், நேசம் சொட்டச் சொட்ட; குடியரசுத் தலைவர், தமது ஆணையின் மூலம் தமிழரின் வாழ்வை, பதைக்கப் பதைக்க வெட்டுகிறார், 1965-க்குப் பிறகு, இந்திதான் ஆட்சி மொழி, அறிவீர் என்று அறைகிறார்.

இந்தி பேசாத மக்களைக் கேட்பேன் - இந்தி பேசாத மக்களைத்தான் கேட்பேன்; இந்தி பேசும் மக்களைக் கேட்கத் தேவையில்லை - கேட்கப் போவதில்லை - என்று பண்டிதர் கூறினார் - அவருடைய சொல்லுக்குக் கிடைத்த மதிப்பு, வாக்குறுதிக்குக் கிடைத்த மரியாதை என்ன? பாபு இராஜேந்திரபிரசாத், பிடி சாபம்! என்று கூறிவிட்டார்! நேருவின் முகத்தில் கரி பூசிவிட்டார்! துடைத்துக்கொண்டு விடுவோம் என்று பண்டிதர் எண்ணிக்கொள்ளக்கூடும். ஏனெனில், அது அவருக்கு மிகச் சாதாரணமான, "அதிகாரவரம்பு' பற்றிய பிரச்சினையாக இருக்கலாம். நமக்கோ? உயிர்ப் பிரச்சினையாயிற்றே!

அவ்வப்பொழுது இருக்கும் ஆற்றலை மட்டுமல்ல, அவனியிலுள்ள அறவோர் இன்று மட்டுமல்ல, பிறகோர் நாளும், என்ன கூறுவர் என்பதற்கு அஞ்சி, ஆட்சி நடத்துவதே அறவழி.

வலிவு கரத்திலே சிக்கிவிட்டதாலேயே, வழிப்பறி நடத்தி விடலாம் சில காலம், சிலரிடம். ஆனால், அவனை வீரனென்று எவரும் கூறார். வெற்றியும் இறுதிவரை இருந்துவிடாது.

பண்டித நேரு இந்த அறிவினைப் பெற்றவர். எனவேதான், பண்புடன் பேசுகிறார்; அறநெறி நிற்கிறார் என்றெண்ணி அகமிக மகிழ்ந்தோம்.

ஆனால், பாராளுமன்றத்தில், பலருடைய கைதட்டுதலைப் பெற்ற நிலையில், தாம் பேசிய பேச்சினைத் துச்சமென்று கருதும் தன்மையில், கொடுத்த வாக்குறுதியைக் குப்பைக் கூடைக்குத் தூக்கி எறியும் விதத்தில், குடியரசுத் தலைவர், இந்தி பேசாத மக்களின் கருத்துப்பற்றி ஏதும் கூறாமல், ஆணை பிறப்பிக்கிறார், இந்திதான் ஆட்சிமொழி 1965-ல் என்று. நேரு பண்டிதர், வாயடைத்துக் கிடக்கிறார். வேதனையும் வெட்கமும் விலாவைக் குத்தவில்லையா?

பூ! இது என்ன பிரமாதம்! பாண்டுங் மாநாட்டில் "பாய் - பாய்'! என்று இருந்தார் சூயென்லாய்; இப்போது பற்களை நறநறவென்று கடித்துக் காட்டுகிறார் - மாலை மாலையாகப் போட்டார் என் கழுத்தில்; இப்போது பல ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றிக்கொண்டார்! வெட்கம்தான்! வேதனைதான்! ஏதோ டில்லிவரை வராமலிருக்கிறாரே, என்று எண்ணிக் கொள்ளவில்லையா! அதுபோல், குடியரசுத் தலைவர் என் தலையில் குட்டுவதுபோலத்தான் காரியம் செய்துவிட்டார் - என்ன செய்யலாம்! இத்துடன் விட்டால் போதும்! இறங்கு கீழே!! என்று கூறினால் என்ன செய்வது!! - என்ற முறையிலே எண்ணிக்கூட, நேரு சமாதானம் தேடிக்கொள்ளலாம், சாந்தி பெறலாம். ஆனால் நாம்? நமது கதி என்ன ஆவது?

பண்டித நேரு, கொதிக்கும் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி தேடித் தருகிற முறையில், தேன்மொழி பேசிவிட்டு, இந்தித் திணிப்பு நடைபெறும்போது, நம்மை மயக்கத்திலிருந்திடச் செய்துவிட்டால், நிûமை மோசமாகிவிடுமே என்ற கவலை, நமக்கு, அந்த நேரத்திலும் இருந்தது. வாழ்த்தினோம்! வலியுறுத்தினோம்! என்ற அளவோடு நின்றோமில்லை.

"எந்த நேரத்திலும் தீவிரமான அறப்போர் நடத்தவேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என்று இம்மாநாடு கருதுவதால், ஒவ்வொரு கிளைக் கழகமும், ஒவ்வொரு சிற்றூரிலும் இந்தி ஆதிக்க ஒழிப்பு அறப்போரில் ஈடுபட உறுதிகொண்டவர்களின் பட்டியலைத் தயாரித்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பித் தரவேண்டும்.''

என்ற தீர்மானத்தையும், பூவிருந்தவல்லி மாநாட்டிலே நிறைவேற்றியிருக்கிறோம். 1957 ல், திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, அறப்போர் வீரர்களின் பட்டியல் தயாராக வேண்டும் என்று கழகம் கட்டளையிட்டது.

1959 செப்டம்பரில், பூவிருந்தவல்லி மாநாட்டிலேயும் "பட்டியல்' தயாராகட்டும் என்று கழகம் நினைவுபடுத்திற்று.

இரண்டு மாநாடுகளுக்கும் இடையே இருந்த ஆண்டுகளிலே, எத்தனை எத்தனையோ மாற்றங்கள் - எனினும், நமது கழகம் மயங்கிவிடவில்லை, மருண்டுவிடவில்லை, அயர்ந்து போய்விடவில்லை.

எந்தச் சமயத்திலும், அறப்போர் அணிவகுப்புகளுக்கான அழைப்பு அனுப்பவேண்டிய நிலை பிறக்கும் என்று விழிப்புடனேயே கழகம் இருந்துவந்திருக்கிறது.

இப்போது நேரு, தன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது, தமது கடமை என்பதை மறந்துவிட்டார்; நேருவின் பேச்சுக்கு உரிய மதிப்பளித்துதான் முறை என்பதைக் குடியரசுத் தலைவர் மறந்துவிட்டார்; இந்தி அரசோச்சும் என்று அறிவிக்கும் ஆணை பிறப்பித்துவிட்டார்; இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்திடத் துளியும் முயற்சி எடுக்கப்படவில்லை, சட்டம் திருத்தப்படவில்லை; என்ன செய்வது? ஏக்கம், பலன் அளிக்காது! துக்கம் துளைத்திட இடமளித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. துணிவுடன், மனத்தூய்மையுடன், கடமை உணர்ச்சியுடன், இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தொழிப்பதன்றி வேறு வேலை தேவை இல்லை என்று கூறும் கட்டம் காண்கிறோம்!

அதென்ன அண்ணா! கட்டம் காண்கிறோம் என்று கூறுகிறாய்! கட்டம் வந்து சேர்ந்துள்ளோம் என்று கூறு, மேலால் என்ன செய்வது என்பதையும் சொல்லு; என்ன வகையான தியாகமும் செய்யத் தயாராக உள்ள இலட்சக் கணக்கான தம்பிமார்கள் உள்ளனர் என்பதை மறவாதே! - என்று, உன் விழி பேசும் வீரத்தை நான் மறந்தேனில்லை! மகிழ்கிறேன்! பெருமை கொள்கிறேன்!

இந்தி பேசாத மக்களுடைய கருத்தை அறிந்து கொள்ளாமல், இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது அடாத செயல். அதைத் தடுக்கத்தான், நமக்கு ஆவி; தாசராகித் தவித்திட அல்ல!!

திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவேண்டியவன் துச்சாதனன் என்றால், திரௌபதைக்கு என்றையத் தினம் துணி கிடைக்கும்?

திரௌபதைக்கு எந்தத் துணி தேவை என்பதைத் தருமன் கூற உரிமைபெற்றால், ஏதோ ஒரு நாட்டுச் சேலையாவது கிடைக்கக் கூடும்.

அருச்சுனனுக்கு அந்த உரிமை இருப்பின் ஒரு அலங்காரச் சேலை வாங்கித் தருவான். துரியோதனனுக்கோ துச்சாதனனுக்கோ அந்த உரிமை அளிக்கப்பட்டால், எந்தச் சேலை கிடைக்கும்? இருக்கிற சேலையையே உருவியவர்கள் அல்லவா, அவர்கள்!

அதுபோன்று இருக்கிறது, அரசியல் ஆதிக்கத்தைப் பறித்துக்கொண்டுள்ள வடவர், இந்தி பேசும் மக்கள், பார்த்து, நமக்கு எந்த மொழி ஆட்சிமொழி என்று முடிவுகட்டுவது.

வைதிகக் கலியாணம் போலல்லவா, அவர்களின் நடவடிக்கை இருக்கிறது. பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல், விடியற்காலை கணவனைக் கொண்டுவந்து உட்காரவைக்கும் நேரத்தில், அவனுக்கு ஒரு கால் நொண்டியாக இருந்து, சாய்த்தபடி வந்தால், பார்த்து, மணப்பெண் கண் கலங்கி, "என்ன? ஒரு கால் நொண்டிபோல் இருக்கிறதே?'' என்று தோழியிடம் கேட்டால், "இல்லை; வாழைப்பழத் தோலை மிதித்தார் - வழுக்கிக் கீழே விழுந்தார் - வேறொன்றுமில்லை'' என்று பொய் பேசி, கழுத்திலே தாலி கட்டிய கதை போலல்லவா இருக்கிறது.

வடநாட்டு இந்தி வெறியர்கள், எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பதை விளக்கிட, இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில், அடுக்கடுக்காகப் பல நிகழ்ச்சிகளைக் காட்டலாம்; காட்டிக்கொண்டுதானே வருகிறோம்; கட்டுண்டு கிடக்காதவர்கள், கண்ணியத்தை இழந்திடாதிருப்பவர்கள், உணருகிறார்கள், உள்ளம் வெதும்பிக் கிடக்கிறார்கள். சென்ற கிழமை வடவர் காங்கிரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியாரிடமே இந்த வெறியைக் காட்டினரே!!

பண்டித நேரு, பாரதத் தலைவரானார் - எதற்கு? - நமது இந்தி ஆதிபத்தியத்தை நிலைநாட்ட! அதற்கு அவர் கருவியாக இருக்கவேண்டுமேயன்றி, மற்றவரின் உரிமை - மற்றவர் கருத்தறிதல் - போன்றவைகளிலே ஈடுபட அல்ல!! என்று இந்தி வெறியர்கள் கருதுகிறார்கள்.

பண்டித நேருவுக்குப் பலமளித்திருப்பதே, இதற்காகத்தான்! - என்று எண்ணுகிறார்கள்.

இந்தக் காரியத்தை நிறைவேற்ற, நேரு தனக்கு அளிக்கப்பட்டுள்ள இடம், வலிவு, ஆகியவற்றைப் பயன்படுத்தத் தவறினால், அவரை வீழ்த்தவும், அவர்கள் தயங்க மாட்டார்கள்.

இந்துமத ஆதிக்கத்துக்கு முழுக்க முழுக்கப் பயன்படுவார் மகாத்மா என்று நம்பி, அவரிடம் "பயபக்தி விசுவாசம்' காட்டி வந்த இந்துமத வெறியர்கள், காந்தியார் "ராமும் - ரஹீமும்' ஒன்றேதான் என்று கூறுமளவு பெருங்குணம் காட்டியதும், இனி இவர் நமக்காக இருக்கமாட்டார்! இவரால் நமது ஆதிக்கத்துக்கேஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்! - என்று கூறி, வெறிகொண்டு, அவரை இழித்தும் பழித்தும், பேசினார்களே!

தம்பி! அப்படிப்பட்ட வெறி பிடித்தலைந்த கோட்சே எனும் பார்ப்பனன், உலக உத்தமர் காந்தியாரைச் சுட்டே கொன்றுவிட்டானே! அதைவிட, இழிதன்மைக்கும் கொடுமைக் கும் வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

சோவியத் தலைவரும், அமெரிக்க அதிபரும், எகிப்துத் தலைவரும், இன்ன பிறரும், காந்தியாரின் "சமாதி'யில் மலர்தூவி, அஞ்சலி செய்கிறார்களே, தம்பி; அப்போது, அவர்கள், பாரதத்தின் விடுதலைக்காகக் காந்தியார் நடத்திய ஒத்துழையாமை, உப்புச் சத்தியாக்கிரகம், தண்டி யாத்திரை போன்றவைகள் பற்றியா, எண்ணிக்கொண்டு நிற்கிறார்கள்! நிச்சயமாக, அந்த எண்ணம் எழாது!!

எவ்வளவு இழித்தன்மை நிறைந்த கொடியவர்கள் இந்த நாட்டிலே! நாடு மீள வழி காட்டினால் - அவரை அல்லவா, மதவெறி காரணமாகச் சுட்டுக்கொன்றனர்! மதம், வெறி அளவாகி, யாரைக் கண்கண்ட தெய்வம் என்று கோடிக் கணக்கானவர்கள் கொண்டாடினரோ, அவரையே அல்லவா, மத ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார் என்பதற்காக, கொலை செய்தனர் என்று எண்ணுகிறார்கள், தம்பி! எண்ணியதும், ஆயிரத்தெட்டு அணைக்கட்டுகளைக் காட்டினாலும் நூற்றுக்கணக்கான புத்தம் புதுத் தொழிலிடங் களைக் காட்டினாலும், இவைகள் நல்ல வளர்ச்சிக்கான அறிக்குறிகள், உண்மை; நல்ல நாடு என்பதைக் காட்டும் சான்றுகள்; ஆனால்...'' - என்று எண்ணிப் பெருமூச்செறிகிறார் கள் - கண் கசிகிறது - ராஜ கட்டத்தை நினைக்கிறார்கள் - காடு அல்லவோ இது என்று எண்ணிக் கடுங்கோபம் கொள்கிறார்கள்.

காந்தியாருக்குக் கிடைத்தது, மூன்று குண்டுகள் - மார்பில்! ஆதிக்கம் பெற அலைவோர், அபலை எனினும், அருளாளன் எனினும், வழிகாட்டி எனினும், வாழ்வளித்தவன் எனினும், யாராக இருப்பினும், தமது ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிப்பான் என்று, துளி சந்தேகம் தோன்றினாலும், ஈவு இரக்கம் காட்டாமல் தொலைத்துவிடுவார்கள்.

நேரு பண்டிதர், இந்த உண்மையை உணராமலிருக்க முடியாது! இந்தி ஆதிக்கக்காரர்களைத் தீவிரமாக எதிர்த்து நின்றிட, அறம் அவரை அழைக்கிறது; எனினும் அச்சம் அவரைத் தடுத்திடவும் செய்கிறது.

எனவேதான், வீரதீரமாக இந்தித் திணிப்பு அறவே கூடாது என்று பேசிய, ஆற்றல் நிறை தலைவன், பேச்சைத் தொடர்ந்து செயலாற்ற முன்வரவில்லை. எந்தச் சமயம் பாய்வார்களோ, பழிக்கஞ்சாப் பாதகர்கள் என்று பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது.

சம்பத்தைக் கேட்டேன், "ஆமாம்! பண்டித நேரு இவ்வளவு வெளிப்படையாக, இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினாரே இந்தி ஆதிக்கக்காரர்கள், என்ன கூறினார்கள், அதுபற்றி?'' என்று. "அதை ஏனண்ணா! கேட்கிறீர்கள்! பாராளுமன்ற ஓய்விடத்தில் அமர்ந்து, அவர்கள், நேருவை, நாக்கில் நரம்பின்றி ஏசிக்கொண்டிருந்ததையே கேட்டேன்'' என்று கூறினான்.

"வீராவேசப் பேச்சு''

"பேச்சுத்தானே! பேசட்டும்!''

"வீராவேசப் பேச்சுக்கூடப் பேசாமல், வேறு என்ன செய்வார், வீரர்!''

"யாரிட்ட போதனையோ, இப்படிப் பேசினார்.''

"எதிலாவது அவருக்கு விருப்பம் ஏற்பட்டால், அது போதை அளவுக்குப் போவதுதானே, வாடிக்கை.''

"பேசட்டும் - ஆனால் சட்டத்தைத் தெரிந்தல்லவா பேச வேண்டும்''

"சட்டம்தானே! நான் இட்டது சட்டம், என்கிறார்.''

"சொல்வார்! சொல்வார்! நாம் சொரணையற்றுக் கிடந்தால்.''

தம்பி! இப்படியும், இதனைவிடக் கடுமையாகவும், அன்றே இந்தி வெறியர்கள், நேருவின் பேச்சைக் கேட்டு, குமுறிக் குளறிக் கொட்டினார்களாம்!!

இந்தவிதமாக ஆய்ந்தறிய நமது மாநில அமைச்சர்களுக்கு நேரமும் இல்லை - பழக்கமும் ஏற்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், ஒன்றே ஒன்று - நாங்கள் 150! நீங்கள் 15!! எங்கள் பக்கம் பஸ் முதலாளிகள்: உங்கள் கட்சியில், டிரைவர் கண்டக்டர்! எங்கள் பக்கம் மிட்டா மிராசு! உங்கள் பக்கம் ஏர் கலப்பை! இதுதான்!!

இந்தியா? - படியேன்! என்ன கஷ்டம்? - என்று ஒவ்வொரு அமைச்சரும், ஒன்பது மொழி படித்துத் தேறிய வித்தகர் போலப், பேசிவிட்டு வருகிறார்கள்.

இப்படி இப்படி நேரு பேசினார் - குடியரசுத் தலைவரின் ஆணை இதற்கு மாறாக, முரணாக இருக்கிறது - அதனை எதிர்த்துத்தான், தி. மு. கழகம் அறப்போர் நடாத்தப் போகிறது என்று எவரேனும் கூறினால், எல்லாமறிந்தவர் இருக்கிறாரே, இந்த நாட்டு முதலமைச்சர், அவர் இளிக்கிறாராம், செய்யட்டுமே! - என்று கூறி. என்ன துணிவினால்? போலீஸ் இருக்கிறது, ஏவிச், செம்மையாக அடிக்கச் சொல்லலாம் என்ற துணிவு! அந்தப் போலீஸ் துறையினருக்கு மட்டுமென்ன? இந்தி மொழி வந்து, ஆலாத்தி எடுக்கப் போகிறதோ!!

"பெயர்?''

"பாரதிதாசன் என்கிற பாண்டுரங்கம்''

"எதற்காக, வந்தீர்?''

"தங்களைப் பேட்டி கண்டு மனு கொடுக்க.''

"மனுவா?''

"ஆமாம்! நான், சப்-இன்ஸ்பெக்டராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன்; இப்போது மேல் உத்தியோகம் பார்க்க விரும்புகிறேன்,''

"உம்! மேல் உத்தியோகமா? சரி! தகுதி; கூறும்''

"எட்டு மாவட்டங்களிலே கொட்டமடித்துக் கொண்டிருந்த, கொலைகாரக் கோபாலசாமியைப் பிடித்தது, நான்தான்!''

"அப்படியா? பிறகு...?''

"சூதாட்ட மடம் நடத்திய சுப்பண்ணா கோஷ்டியை, சிவராத்திரி அன்று, சுடுகாட்டு மண்டபத்திலே, சுற்றி வளைத்துப் பிடித்தது, நான்தான்! காதைப் பாருங்கள்! அந்தக் காலி கடித்துத் துண்டாக்கி விட்டான்.''

"சரி! சரி! வேறே?''

"கடமை தவறாதவன். ஒரு கருப்புப் புள்ளியும் கிடையாது.''

"இது கிடக்கட்டும். மேல் உத்யோகம் வேண்டும் என்கிறாயே! தகுதி வேண்டுமே, அதற்கு!! இந்தி தெரியுமா?''

"இந்தி மொழியா...''

"என்னய்யா இழுத்துப் பேசுகிறீர்! இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி! அதுவே தெரியாதா உனக்கு. தூத்தூதூ! இந்தி மொழி தெரியாத ஆளுக்கு, மேல் உத்யோகமா? இந்த உத்யோகமே, இருக்கப்படாதே! திருடனைப் பிடித்தேன், சூதாடியைப் பிடித்தேன் என்று மளமளவென்று வீரப் பிரதாபத்தை எல்லாம் கொட்டிக் காட்டினாயே! இந்தி தெரியாத ஆள், இதெல்லாம் தெரிந்து என்ன பலன்? போ! போ! போய், இந்தியில் பரீட்சை எழுது! மார்க்கு வாங்கு! அந்தத் தகுதிபெற்ற பிறகு, வா! போ! போ!!''

தம்பி! நாம், தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தி ஆதிக்கம் ஏற்பட்டுவிடும்; ஏற்பட்டுவிட்டால் போலீசுக்கும் இதே கதிதான்! அவர்கள்தானே அடிக்கப் போகிறார்கள்! பரவாயில்லை! தாங்கிக் கொள்வோம் தம்பி! நம் இனத்தின்மீது (போலீசில் உள்ளவர்களையும் சேர்த்துத்தான்) இந்தி ஆதிக்கம் செலுத்த வருகிறது; அந்தத் தாக்குதலைவிட, போலீஸ் தடி கொண்டு தாக்குவது கொடுமையானதல்ல! தடி உடலைப் புண்ணாக்கும், உயிரைக் குடிக்கும்; இந்தியோ மனதைப் புண்ணாக்கும், மரபினை அழித்திடும்!

இதைக் கண்டதால் ஏற்பட்ட மனக் குமுறல்தான், தம்பி! ஏதாவது வம்பு வல்லடி வேண்டும் வேண்டும் என்று அலையும் பழக்கமற்ற, தி. மு. கழகத்தை, போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது.

அறப்போரில் ஈடுபட்டு, அடக்குமுறையால் நம் குருதி கொட்டப்பட்டால், அந்தக் குருதி கலந்த மண் இருக்கிறதே, தம்பி! அதைவிடப் புனிதப்பொருள் வேறு இல்லை.

அண்ணன்,

10-7-1960