அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மானே! தேனே!!
1

தென்னவர் பற்றி வடவர் பசப்பு!
திராவிடத்தின் சிறப்பு -
வட நாடு, தென்னாடு வேற்றுமை

தம்பி!

"ஏனோதானோ'' என்று அந்நாள் வரை இருந்து வந்தவன், "மானே! தேனே!' என்று மயக்க மொழி பேசினான். அடிமூச்சுக் குரல் அன்பின் அறிகுறியாக மட்டுமல்ல, நம்பினோரை நாசமாக்கவும் பயன்படும் என்பதை அறியாமல், நாரீமணி, பூங்கொடி தென்றலில் ஆடுவது போலானாள். புது வாழ்வு பிறந்தது என்று எண்ணிக் கொண்டாள். அவனோ, அவளை இன்பபுரிக்கு அழைத்துச் செல்லவில்லை; அவளிடமிருந்து இருபது பவுன் "செயினைப்'' பெற்றுக்கொண்டு, நடையலங்காரி ஒருவளை நாடிச் சென்றான்!

கதை, தம்பி கதை. காதலின்பம் பெறவேண்டிய காரிகையர் சிலர் கருத்தழிவதைக் காட்டும் கதை.

"கொழுந்தே, உனக்கு மிட்டாய் வேணுமா, ஊதுங்கோல் வேண்டுமா, ஆடும் குதிரை, பாடும் பறவை எல்லாம் வாங்கித் தரட்டுமா?''

"மிட்டாயா, வாங்கிக் கொடுங்கோ மாமா, எனக்கு ரொம்ப இஷ்டம்.''

"கடைத் தெருவுக்குப் போகலாம வா, கண்ணு.''

"ஐயோ, அம்மா அடிக்குமே. நான் போய் அம்மாவிடம் சொல்லிவிட்டு. . .''

"அம்மாவிடம் சொன்னா, உன்னை அனுப்பமாட்டாங் களே, மிட்டாய் தின்னப்படாதுன்னு சொல்லுவாங்க.''

"அம்மாவுக்கு தெரியாமெ, ஓடிப்போய் மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா?''

நஞ்சு நிறை நெஞ்சினன் என்பதறியாத அந்தப் பிஞ்சு, வயலோரத்தில் கசக்கிப் போடப்படுகிறது - கையிலே மிட்டாய் இருக்கிறது - ஆனால் கைவளையும் காது லோலாக்கும் இல்லை.

திருவிழாக்களின் போது கேள்விப்படுகிறோம், இது போன்ற நிகழ்ச்சிகளை.

கனி மொழி, சுவையுள்ளதுதான், ஆனால் நஞ்சுக்கு அதனை உரையாக்கிடும் போக்கினரும் உண்டு - எனவேதான் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்கிறார்கள்.

அழகும் மணமும் கொண்ட செந்தாழை இருக்கிறது பார் தம்பி, அதிலே, இதழ்களின் இடையே, ஒட்டிக்கொண்டிருப்ப துண்டாம் சிறுநாகம் - தீண்டினால் தீர்ந்து போவார்களாம்! அதனால், அனுபவமுள்ளவர்கள் செந்தாழையைப் பிரித் தெடுக்கும்போது, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பர்.

தம்பி, முரட்டுத்தனத்தினாலே மட்டுமே, தீயகாரியங் களைச் சாதித்துக்கொள்வது என்ற முறை, இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது - தீய காரியம் குறையவில்லை முறை மாறிவிட்டிருக்கிறது.

"கழட்டடி கழுதே! உங்கள் அப்பன் வீட்டிலே போட்டா என்னவாம்? இப்ப கழட்டிக் கொடுக்கறயா, இல்லையானா, இடுப்பை முறிச்சிக்கப் போறியா?''

இந்தக் "கணவன்'' இப்போது -

"என்ன செய்யறது; வேற எங்கேயும் கிடக்கலையாம், என் உயிரை வாங்கறான் வேலாசாமி. கலியாண வேலையை முடிச்சிட்டு உடனே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்னு கெஞ்சறான்; பரிதாபமாயிருக்கு; நம்மிடம் இருக்கவே நானும் அவனுக்கு வேண்டியவனாக இருக்கிறதாலே, ஒரு நாலு நாளைக்கு இரவல் கொடுன்னு கேட்கறான். இதுக்கு என்னமோ மூக்காலே அழறியே. எடு! எடு! கொடு! கொடு! நேரமாவுது, ரயிலுக்கு'' என்று பேசி நகையைப் பறித்துக் கொள்ளவும், அதைக் கிண்டி ரேசுக்குப் பயன்படுத்தவும், பயிற்சி பெற்றுவிட்டான்.

முரட்டுத்தனமாக அவன் இருந்த போதாவது பரவாயில்லை. அடி உதை கிடைத்தாலும், அண்டை அயல் பஞ்சாயத்துக்கு வருகிற முறையில், அழுகுரல் கிளம்பி இருக்கும். சில வேளைகளில், அதற்கு அஞ்சி, அவன், புற்றுக்குள் புகுந்து கொள்ளும் பாம்பாகிவிடவும் கூடும்.

மானே! தேனே! என்று அவன் தித்திப்பு ஊட்டும்போது, பாபம், அவள் தப்ப வழியே கிடைக்காதல்லவா!

ஆதிக்கக்காரர்களின் போக்கிலே இப்போது இதுபோன்ற மாறுதல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது - இதன் பயனாக ஆபத்தும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

புலி, உறுமும் - அந்தச் சத்தம் கேட்டு, கிலி பிறப்பினும், ஒரு படை திரட்டிவிடவும், அதை வேட்டையாடிக் கொன்று போடவும், வழியும் கிடைக்கக்கூடும். ஆனால், முல்லை பறித்திட மலர்த்தோட்டம் சென்று, பச்சைப் பட்டோ என்று பரவசப் படத் தக்க பசும் புற்றரையில் நடந்து செல்லும் போது, அரவமின்றி ஊர்ந்து வந்து தீண்டிவிடும் நாகமாக இருந்தால், என்ன கதியாவது?

ஆதிக்கக்காரர்கள் புலியாக இருப்பதாலே ஏற்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டு, இப்போது புற்றரைப் பாம்பாகி இருக்கிறார்கள்.

எல்லோருமே அவ்விதம் எப்போதுமே அவ்விதம், என்று சொல்லவில்லை; இப்போதும் பழைய முறையே சாலச் சிறந்தது என்று எண்ணும், போர்ச்சுகீசிய ஆதிக்கக்காரர் இருக்கத்தான் செய்கிறார்கள் - கொக்கரிக்கிறார்கள், சுட்டெரிக்கிறார்கள். ஆனால் குறிப்பிடத் தக்க அளவிலே, புலி, பாம்பாகிவிட்டிருக்கிறது.

கதை படித்திருப்பாயே, சிறு வயதில்?

பல்லின் கூர்மையும், நகத்தின் கூர்மையும் பட்டுப்போன கிழப்புலி பாய்ந்து சென்று தாக்கி, பிய்த்து ரத்தம் குடித்துப் பசி தீர்த்துக் கொள்ள முடியாது என்ற தெரிந்துகொண்டு தங்கக் காப்பைக் காட்டி, ஆசையை மூட்டி, அருகே வருபவனை அடித்துத் தின்றது, என்றோர் கதை உண்டு.

பேராசைக்காரப் பார்ப்பான் ஒருவன். இப்படி ஒரு கிழப்புலியிடம் சிக்கிக் கொண்டான் என்பது கதை.

பேராசைக்காரப் பார்ப்பான் என்று சொல்லக்கூட, இந்த சர்க்காரிலே அனுமதி கிடைக்காது போலிருக்கிறது, தம்பி! இதற்கோர் கண்டனக் கூட்டம் போட்டு, இருபதாம் தேதி மாறடித்தழுவோம் என்று "இந்து' தீர்மானித்துவிடக் கூடும்! நாடு அவ்வளவு முன்னேறிவிட்டிருக்கிறது. "நம்ம காமராஜா'' என்று சொல்லிச் சொல்லி நாக்குக்கூடத் தழும் பேறிவிட்டிருக்கும்; எனினும், "அவர்களின்' போக்கிலே மாறுதல் காணோம்.

அது கிடக்கட்டும் - அந்தப் பிரச்னை தீர, விருதுநகர் வித்தகரிடமா மருந்து கிடைக்கப்போகிறது?

ஆதிக்கக்காரர்களின் போக்கிலே ஏற்பட்டு வரும் மாறுதலைக் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கவேண்டும் என்பதைக் கூறத்தான் விரும்புகிறேன். தம்பி! இடையே இந்த சர்க்கார் கவனம் வந்தது, விட்டுத் தள்ளு.

சென்னையில் ஒரு பகுதிக்கு இப்ஹஸ்ரீந் பர்ஜ்ய் கருப்பர் ஊர் என்ற துணிந்து பெயரிட்டனர், வெள்ளையர்!

அது, கொடுக்கிறாயா, கொல்லட்டுமா? என்று கேட்கும் நிலை.

பிறகு, கருப்பர் பட்டினம் ஜார்ஜ் டவுன் என்று ஆயிற்று - வேலாசாமி இரவல் கேட்கிறான் என்று புளுகி, நகையைப் பறித்த கட்டம் போன்றது.

கருப்பர் - இன்று, அன்பர், நண்பர், தோழர், என்றெல்லாம் ஆகிவிட்டது!

ஏகாதிபத்யம் போக்கை மாற்றிக் கொண்டது - நீதி, நேர்மை, நியாயம் இவைகளுக்காகவா? செச்சே! அதற்கல்ல; நோக்கம் நிறைவேறப் பழைய முறை உதவாது என்று புரிந்துவிட்டதால்.

திராவிடத்தைத் தமது ஆதிக்கத்துக்கு உட்படுத்திக் கொண்டுள்ள வடநாட்டுத் தலைவர்கள் சிலர், வரலாறு காட்டும் இந்த நிலைமைகளை நன்கு அறிந்து கொண்டி ருக்கிறார்கள்; எனவே அவர்கள், அச்ச மூட்டுவதால் பலனில்லை, ஆசை காட்டவேண்டும் என்று புரிந்து கொண்டு, செயலாற்றத் தொடங்கியுள்ளனர்.

காட்டு மிருகங்களை வேட்டையாடுவது போல நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளிய வெள்ளைக்காரனே, காலம் தெரிந்து, கருத்தை மறைத்திடவும், கனி மொழி பேசிடவும் கற்றுக் கொண்டான் என்றபோது, "அதிர்ஷ்டப் பரிசு''ச் சீட்டு வாங்கியவனுக்கு ஆறு இரட்சம் கிடைத்ததுபோல, களத்தில் கடும் போரிட்டு அல்ல, வீர தீரத்தைக் காட்டியல்ல, நமது கோட்டைகளைத் தாக்கித் தகர்த்து கொடி மரங்களை வெட்டி வீழ்த்தி, நம்மைப் புறமுதுகிட்டு ஓடச்செய்து அல்ல, வெளியேறிய வெள்ளையனுடைய கண் பார்வையில் இருந்த ஒரே காரணத்தால், திராவிடத்தை ஆளும் நிலையை வடநாட்டுத் தலைவர்கள் பெற்றனர் - அப்படிப்பட்டவர்கள், கனிமொழி பேசித்தான் காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும் என்று முறை அமைத்துக் கொள்வதிலே, ஆச்சரியம் என்ன இருக்கிறது.

வெள்ளையன் இங்கு நுழைந்த நாளிலிருந்து வெளியேறிய நாள் வரை, நடை, நொடி, பாவனை, மதம், மொழி, வாழ்க்கை, வழி ஆகிய எல்லாவற்றிலும்தான் வேறுபட்டவன் மட்டுமல்ல மேம்பட்டவன் என்று நம்பிக்கொண்டிருந்தான்; கூசாமல் சொல்லியும் வந்தான்.

வடநாட்டுத் தலைவர்கள் அப்படியல்ல - காங்கிரஸின் துணைக்கொண்டு, "பந்த பாசம்'' இருப்பதாகச் சொல்லி, பாரத தேசம், பாரத மக்கள், இந்தியர் என்ற இனிப்புப் பண்டமளித்து, திராவிடரை மயக்கி வைத்திருந்தனர். நாடகங்களிலே பார்க்கிறோ மல்லவா இருவகையான கொலைக் காட்சிகள் - ஒன்றில், வாள் வாளைச் சந்திக்கும், இரத்தம் கொட்டப்படும், ஓடிஓடிப் போரிடுவர், உயர இருந்து கீழே குதிப்பர், கூடம் களமாகும், எதிரேயிருக்கும் சாமான்கள் உடைபடும், கடைசியில் ஒரு கொலை! மற்றோர் வகையிலே, வாள் உறையிலே தூங்கும், வாட்கண் அவன் நெஞ்சத்தைத் துளைக்கும்; அவள் இடை அசையும், இவன் இதயம் விம்மும்; அவள் கடைகாட்டுவாள், இவன் கருத்திலே ஏதேதோ கொந்தளிக்கும், கண்ணாளா! என்பாள்; இவன் கட்டிக் கரும்பே! என்பான்; மாமோகம் கொண்டேன் என்பாள்; இவன் கட்டிக் கரும்பே! என்பான்; மாமோகம் கொண்டேன் என்பாள்; இவன் கனவல்லவே கட்டழகி! என்ற குழைந்து கூறுவான்; அவள் புன்னகை புரிவாள். இவன் புத்தி தடுமாறும்; அவள் இதோ கனிரசம் என்று அளிப்பாள், அவன் அவள் கரம் தொட்டு அதைப்பெற்றுப் பருகுவான், கண்ணிலே ஒரு திரை போடுவது போலாகும், கால் நடுக்குறும், அழகால் அழிவு தரும் ஆரணங்கை ஆசையுடன் பார்த்தபடி அருகே நெருங்குவான்; அவள் "இலாவகமாக'' ஒதுங்கிக் கொண்டு ஒரு பசப்புச் சிரிப்பொலி கிளப்புவாள்; இதற்குள் இவன் பார்வை மங்கும், பூமியில் கால் பரவாது, கீழே சாய்வான், பிணமாவான்!

தென்னாட்டவர், தீரர், வீரர், தேச பக்தர்!

தென்னாட்டவர், என்னாட்டவரும் வியக்கத்தக்க நுண்ணறிவு படைத்தவர்கள்; எதையும் சாதிக்கவல்லவர்கள். எத்துணை கஷ்டத்தையும் பொருட்படுத்தாதிருக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள்.

தென்னாட்டவருக்கு எத்தனை மொழி கற்பதானாலும், சிரமமிராது - பாண்டித்யம் பெறமுடியும்.

தென்னாட்டவர் இந்தியைக் கற்பது மட்டுமல்ல, வெகு விரைவில் வடநாட்டுக்கே இந்தி ஆசிரியர்களாகி விடக்கூடிய திறமைசாலிகள்!

தென்னாடு! அறிவாளிகள் நிரம்பிய இடம்!

எல்லாக் கலையும் கொஞ்சி விளையாடும் பூந்தோட்டம் தென்னாடு!

அழகிய மங்கையரின் முக விலாசமும், அறிவாளர்களின் முக தேஜசும், இயற்கை எழிலுடன் சேர்ந்து, தென்னாட்டைக் காந்தர்வபுரியாக்குகிறது!

தென்னாட்டின் அருமை பெருமைகளை அறியாதார் அறியாதாரே!

முல்லை காட்டி, பாகு கலந்த சொல்லமுது ஊட்டி, பாவை பம்பரமாக ஆட்டிவைக்கிறாள்!

மாவ்லங்கர், தத்தர், தேபர், மகதாப் என்று வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள், இத்தகைய மயக்க மூட்டும் நோக்குடன்.

ஒருவர் இயற்கை வளத்தைப் புகழ்கிறார். இன்னொருவர் மொழி வளத்தைக் கண்டு வியப்படைகிறார். தேச சேவையை பாராட்டித் தேன் கொட்டுகிறார் ஒருவர். தெய்வ பக்திமிகுந்த இடமல்லவா என்று பரவசம் பாய்ச்சுகிறார் இன்னொருவர். அனைவருக்கும் ஒரே நோக்கம். ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது என்பதுதான்! அதற்கு ஆர்ப்பரிப்பு பலனில்லை, அன்பு ஆலாபனமும், புகழ் பல்லவியும் தாஜா'' செய்யும் தாளமும் தேவை என்பது முறையாக்கப் பட்டிருக்கிறது.

பன்னெடும் காலமாகவே திராவிடர், இப்படி பசப்பு வோரிடம் நம்பிக்கை வைத்து நாசமாகி இருக்கிறார்கள். இல்லையானால், காய்ந்த புல்லைக் கையிலே கொண்டிருந்த கூட்டத்திடம், கட்கமேந்திப் போரிடுவதைக் காதலுக்கு ஈடான நிலையில் வைத்துப் புகழ் ஈட்டிய திராவிட இனம், அடிமைப் பட்டிருக்கவே முடியாதே!

வடநாடு, ஒழுங்கு முறைக்கு உட்படுத்தப்படாமலிருந்த நாட்களிலேயே, இங்கு திராவிடம் ஒழுங்கு படுத்தப்பட்டு, ஒழுக்கத்தை ஓம்பி வளர்த்திடும் திருநாடாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

செல்வம் கொழிக்கும் நிலையும், செங்கோல் ஓச்சும் மன்னர்களும் பெற்ற நிலையில், வடநாடு சித்தரிக்கப்படும் கட்டத்தைக்கூட, வேண்டுமானால் திராவிட நாட்டு வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லு, தம்பி, திராவிடத்தின் தனிச் சிறப்பு விளக்கமாகத் தெரியும்.

மன்னர் இருந்தனர். இங்கும், அங்கும் மணிமுடி இருந்தது, இரு மன்னர் முடியிலும். எனினும் இரு வேறு முறையன்றோ காண்கிறோம் அவர் தம் போக்கில்.

மக்களுக்காக அரசு. அரசு செம்மையாக நடந்துவர மன்னன் என்பது திராவிடத்தில், தத்துவமாக மட்டுமல்ல, திட்டமாக இருந்து வந்தது அந்த நாட்களிலும்.

மன்னன் செம்மையாக வாழ ஒரு அரசு, அந்த அரசு வளமுடன் இருக்க மக்களின் உழைப்பு என்ற தன்மை இருந்து வந்தது வடக்கில்.

வெட்டிப் பேச்சல்ல, தம்பி. மன்னன் தன்னிடம் அரசாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கருதிப் பணியாற்றினான் இங்கு. அங்கு அங்ஙனமல்ல! நாடு மன்னன் உடைமை! அதன் பயனைப் பெறும் அனுமதியை மன்னன் மக்களுக்கு அளிக்கிறான் அங்கு. எனவேதான் காண்கிறோம், நாடு மன்னனால் எப்படி வேண்டுமானாலும் ஆக்கப்பட்டுவிடும் அக்கிரமத்தை!

கேகயன் மகள் ஒரு கோகிலம்! தசரதமன்னன் நரைத்த தலையினன்!! அங்கம் தங்கம், அந்த அரசிளங்குமரிக்கு; உடலெங்கும் காலம் தந்த சுருக்கம் இந்த அரசனுக்கு. எனினும் அந்த சிற்றிடைச் சிங்காரியைச் சரசக் கருவியாகக் கொள்ள வேண்டுமென்று இந்த சத்திழந்தவர் விரும்பினார் - என்ன செய்தார்? என்னைக் களிப்பிக்கும் தொண்டு புரிய இந்தத் தோகை இசையட்டும். நான், அவள் வயிற்றில் உதிக்கும் மகனுக்கே என் இராஜ்ஜியத்தைத் தருகிறேன் - இப்போதே, இதோ என் இராஜ்ஜியத்தைத் தந்து விடுகிறேன் என்று வாக்களிக்கிறான்.