அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மானே! தேனே!!
2

வயோதிகருக்கு அந்தக் கணை புகுந்தால், கருத்து எப்படி ஆகிவிடுகிறது என்பதைக் கவனிக்கச் சொல்லவில்லை - இதை அறிய இராமாயண காலத்துக்கா போக வேண்டும், நமது நாட்களிலேயே பார்க்கிறோமே!!

கொடுத்த வாக்குறுதியைத் தசரதன் காப்பாற்றாதது குற்றமல்லவா என்று "இராமதாசர்களை''க் கேட்கும்படி கூடச் சொல்லவில்லை - இதைவிடக் காரசாரமான கேள்விக் கணைகளால் தாக்குண்டு, அவர்கள் வைகுண்ட வாசனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் உன்னை கவனிக்கச் சொல்வது எது தெரியுமா தம்பி, தசரதன் தன் ஆட்சியில் இருந்து வந்த இராஜ்ஜியத்தை, தன் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் தர முடிகிறது.

இது வடநாட்டில்தான், இங்கு இதுபோல் நடைபெற்றதில்லை.

சூதாடித் தோற்கிறான் இராஜ்ஜியத்தை - நளன் - தருமன்.

தானமாகக் கொடுத்து விட்டுச் சுடலை காக்கச் செல்கிறான் அரிச்சந்திரன்.

இவை வடநாட்டு மன்னர்களின் முறை - மன்னர்களிடம் நாடு உடைமையாக்கப்பட்டு விடும் - கேடான கொள்கையைத் தென்னகம் ஏற்றுக் கொண்டதில்லை.

பெரிய தத்துவத்துக்குப் போவானேன் தம்பி, ஜவருக்கு ஒரு மாது பத்தினியாக இருக்கலாம் என்பதைக் கற்பனைக்கும் ஒத்ததாகத் திராவிடர் கருதவில்லை - வடக்கே அப்படிப்பட்ட பத்தினி பற்றிய காதை எழுதி, அந்த அம்மையின் உற்ற "இரக்ஷகராக'' பகவானே உடனிருந்து வந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது.

பண்பு நிச்சயமாக இங்கே வேறுதான் - அங்கே இருந்து வந்த "ஆசாபாசங்களை'' பண்பு என்று கூறக் கூசுகிறது.

எல்லாம் சரி! ஆனால் இன்று என்ன நிலைமை?

வடநாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகிறார்கள், புகழ் கிறார்கள், நமது அருமை பெருமை கண்டு அகமகிழ்கிறார்கள், ஏன்?

இப்படிப்பட்ட பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதான பொன்னாடு, தங்களின் பிடியில் இருக்கிறது என்ற பூரிப்பு!!

ரோம் நாட்டவர் கிரேக்க நாட்டைத் தோற்கடித்து அடிமைப்படுத்தினர். பொன்னும் மணியும் வண்டிவண்டியாகக் கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றுடன் கிரேக்கர்பலரை அடிமைகளாகக் கொண்டு சென்றனர்.

மாளிகையில் மந்தகாசமாக, ரோம் வீரன் அமர்ந் திருப்பான்; நண்பர் அவனுடன் உரையாடுவதும், தங்கக் கோப்பையிலே வார்த்துத் தரப்படும் திராக்ஷை ரசத்தைப் பருகுவதும், போதை ஏறிய நிலையில், பொழிலில் கண்ட கடைக் கண்ணழகி பற்றியும், செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட காலால் சேயிழை தன் மார்பகத்தே உதைத்த போது அடைந்த உவகை பற்றியும், பேசிக் களிப்பர். "ஆஹா! மறந்தேபோனேன், நண்பர்களே! வெண்ணிலவில் வேல்விழியாளுடன் ஆற்றோரம் உலவினால் அடையும் ஆனந்தம் பற்றிய அரும் கவிதை ஒன்று இருக்கிறது, கேட்டதில்லையே நீங்கள் - சுவையுள்ள கவிதை என்பான் விருந்தளிப்போன், "அப்படியா! கவிதையா! பாடிக் காட்டு நண்பா!'' என்று கேட்பர் விருந்துண்போர். "நானா பாடுபவன்! என்னிடம் இருக்கிறான் ஒரு அடிமை அழகழகாகப் பாடுவான்'' என்று கூறி அழைப்பான் புலமைமிக்க கிரேக்கன், அடிமைக் கோலத்திலே வந்து நிற்பான், "ஏ! கவி! நேற்று பாடிக் காட்டினாயே கவிதை, அதைப் பாடு இப்போது, இவர்கள் கேட்கட்டும்' என்று கூறுவான். அடிமை பாடுவான். கீர்த்தி மிக்க கிரேக்க நாடு தாழ்ச்சியுற்ற போது நேரிட்ட, நெஞ்சைப் பஞ்சாக்கும் சோகச் சம்பவம்.

இப்போது, பரதநாட்டியம், கருநாடக சங்கீதம், கதகளி, திராவிடமொழி, திராவிடச் சிற்பம், இவைகளை இன்னும் பதம் கெடாமல் பாதுகாத்திடும் வித்தகர்களின் திறமை, புலமை ஆகியவற்றை வடநாட்டவர் பாராட்டிப் பேசும் போது, எனக்குத் தம்பி! ரோம் நாட்டின் மாளிகையிலே கண்ணீரையும் கவிதையையும் சேர்த்து வடித்துக் கொடுத்த கிரேக்க அடிமையின் கவனம்தான் வருகிறது.

"மிகப் பழங்கால முதற்கொண்டே வளமாக இருந்த திராவிடம்' என்று அவர்கள் புகழ்கிறார்கள். திராவிடரோ மலேயா காடுகளிலே மிருக வாழ்க்கையில் இருக்கிறார்கள் - கடல் கடந்து சென்று கைகட்டிச் சேவகம் செய்வது மட்டுமல்ல, கட்டை வெட்டுகிறார்கள், கல் உடைக்கிறார்கள், குப்பை கூட்டுகிறார்கள்.

மிக உயர்ந்த மொழி திராவிடத்தில் இருக்கிறது என்று அவர்கள் பாராட்டுகிறார்கள். பாராட்டிவிட்டு, எனினும் "இந்தி'' படித்தால்தான் வாழ்வு உங்களுக்கு என்று துணிந்து கூறுகிறார்கள்.

அறிவாளரின் வாழ்விடம், கலையின் பிறப்பிடம் என்றெல்லாம் பேசுகிறார்கள் - பேசிவிட்டு, இவ்வளவு தகுதி இருப்பதால், தனி அரசு அமைத்துக் கொண்டு தரணியில் ஒரு மணி விளக்காகத் திகழ்வீர் என்றா கூறுகிறார்கள்? "இந்தியப் பேரரசின்'' ஒரு பகுதி என்று பசப்புரை கூறி, அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பொன் விளையும் பூமி என்கிறார்கள் - தரித்திரம் போக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். அவசரப்படாதீர்கள் என்கிறார்கள்.

அவர்களின் புகழுரை நாணயமானதாக இருந்தால், ஏன் திராவிடம் தனி நாடாகத் திகழ்வதற்கு இசைவு தரக் கூடாது?

இவ்வளவு புகழுரைகளுக்கு ஏற்றதாக ஒரு எழில் நாடு இருக்க, ஏன் அதனை அடிமைக்காடாக்கி வைத்திருக்கிறார்கள்?

நல்ல பெண்! மிக நல்லவள்! கொஞ்சம் கூச்சம்! பயம்!! அடே அப்பா! கரத்தைப்பிடித்திழுத்ததும் சிவந்தேவிட்டது? கன்னத்தைத் தொட்டேன், மலர், மலரே தான்! மஞ்சம் சென்றபோது, சிறு குழந்தை போல, விக்கிவிக்கி அழுதாள்! பிறகு மயங்கிக் கீழே வீழ்ந்தாள்! தரையில் அவள் கிடந்த போது, சிற்பி செதுக்கிய சித்திரப்பாவை தவறிக் கீழே விழுந்து கிடந்தது போல இருந்தது.

இப்படி ஒரு காமுகன் பேசினால், அதைக் கேட்டுக் காரிகையின் பெற்றோர், பெருமையா கொள்வர்? பூரிப்பா அடைவர்? சிறிதளவு ரோஷமுள்ளவர் சீறிப் போரிடுவர் - அது அற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வர்.

அமைச்சர் சுப்பிரமணியம் வடநாட்டுத் தலைவர்கள் வழங்கும் புகழுரைகளைக் கேட்டுப் பூரித்துப் போகிறார், புளகாங்கித மடைகிறார்!

அவரால் முடிகிறது! அவர் போன்றோரால் முடிகிறது! நம்மால் முடியவில்லையே? நமக்குத் திராவிடம் அன்று வாழ்ந்த பெருவாழ்வுடன் இன்று அடைந்துள்ள அவல நிலையை ஒப்பிடும்போது, அணி மணி பறிகொடுத்த ஆரணங்கு, கழுத்து நெறிக்கப்பட்ட பேசும் பசுமை, மானமழிக்கப்பட்ட மாது - இத்தகைய கொடிய காட்சிகளல்லவா நினைவிற்கு வருகிறது! நெஞ்சு நெருப்பிலிட்ட புழுவாகாமலிருக்குமா? அவர்கள் மகிழ்கிறார்கள் - அத்தனைக்கும் ஈடாக அமைச்சர் பதவி கிட்டிவிட்டது என்று! நமக்கோ அரசு இழந்தோம், முரசு இழந்தோம், வளம் இழந்தோம். வகை இழந்தோம், தன்மானமும் அழிந்து படவேண்டும்? என்று எண்ணம் பிறக்கிறது.

"பைத்தியக்காரர்களே! என்னைப் பாருங்கள்! நான் உங்களைப் போல உதவாக்கரைக் கருத்துகளுக்கு என் மனதில் இடமளித்து இருந்தால், இந்த நிலையிலா இருந்திருப்பேன்? மூலையிலல்லவா முக்காடிட்டு அழுதபடி இருந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்?'' என்ற கருத்துப்பட "கனமான' சுப்பிரமணியம் கழறுகிறார்!

புகழுரையை அபினாகத்தரும் புதுமுறையில் ஈடுபட்டுள்ள வடநாட்டுத் தலைவர்களிலே ஒருவர், தத்தர் என்பார் பேசிய கூட்டத்திலே, அமைச்சர் சுப்பிரமணியம் தீப்பொறி பறக்கப் பேசி, "தீகா' வாவது என்று ஏசினாராம்!

அரிய உண்மையையும் அருளியிருக்கிறார் அது போது. பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பேச்சைக் கேட்டு இருந்தால் நான் என்ன கதியாகி இருப்பேன்? இப்போது இந்த தீகா தீமுகா தலைவர்கள் இருக்கிறார்களே அதுபோல எங்கோ ஒரு மூலையில் அல்லவா கிடந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்? என்று பேசியிருக்கிறார்.

இதிலே ஒரு அரிய உண்மை இருக்கிறது, தம்பி; நிச்சயமாக இருக்கிறது.

காங்கிரசில் சேர்ந்தால்தான், சுப்பிரமணியம் போன்றார், சபை நடுவில் சன்னத்துடன் இருக்கமுடிகிறது! இல்லையேல், மூலை முடுக்குதான்; சந்தேகம் இல்லை! காங்கிரசின் தயவு இருக்கிறது என்ற தகுதி தவிர, தமது நிலைமைக்கு வேறு தகுதி இல்லை என்பதை அவர் நெஞ்சார உணருகிறார்! நேர்மையாகச் சொல்லியும் விட்டார்! ஆனால் மற்றோர் பேருண்மை அவருக்குப் புலப்படவில்லை - இன்று அவர் இருக்கும் நிலையில் புலப்படாது!

"அது சரிடி அம்மா! அந்தப் பாவியோட குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தா, இன்னேரம் கூலிக்காரியாகி, புளித்த கூழுக்கும் அழுகல் மாங்காய்க்கும் அலைந்து திரிந்து கிடக்க வேண்டித்தான் வந்திருக்கும்'' என்று துணிந்து கூறுகிறார்; கொண்டவன் வறுமையின் பிடியில் இருப்பது கண்டு குலுக்கி நடந்து குட்டிக் குபேரனை வலையிட்டு, அவனுடன் வாழ்க்கை நடத்தி, வங்கி ஒட்டியாணத்துடன் மாங்காய் மாலையும் வைர ஓலையும் பச்சை மோதிரமும் பத்து ஏக்கர் நஞ்சையும் பங்களா தோட்டமும், "சம்பாதித்த'' சல்லாபி! ஆனால் உலகம், காரி உமிழ்கிறது! ஆஹா! அப்படியா! அம்மணீ! வாழும் வழி கற்றுக்கொடுத்த வனிதா மணியே! வாழி! வாழி!! என்று கூறி வாழ்த்துவதில்லை. அவளிடம் வண்டி ஒட்டி வயிறு கழுபவன் கூட, வாழ்த்த மாட்டான் - பாழும் அங்கத்தை வளர்க்க இந்தப் பங்கப்பட்ட பாவியிடம் அல்லவா வேலை செய்ய வேண்டி "விதி'' இருக்கிறது என்றெண்ணி வேதனைப்படுவான்.

ஆனால் இதெல்லாம் சாமானியர்கள் விவகாரம்!

பேசினவர் அமைச்சர்; உன்னையும் என்னையும் போல "உருப்படத் தெரியாத'' வரா!

எனக்கும் உனக்கும் தம்பி! அவர் போல "அந்தஸ்து'' பெறுவதற்கு என்ன வழி என்பது தெரிய வேண்டாம் - நாடு பொலிவு பெற, தன்னரசு பெற்றுத் திகழ வழி என்ன என்ற விஷயம் புரியட்டும் - போதும்.

புகழுரை பொழிவதன் மூலம் மயக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, நாம் ஏமாளிகள் அல்லவென்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.

வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள். அவர்களின் உண்மை நோக்கத்தை உணர்ந்ததாலேதான், சேலத்தில் தோழர்கள், சீறி எழுந்து கண்டனக் குரலைக் காட்டினர். மேலும் விளக்கமாவதற்காகக் கருப்புக் கொடியும் காட்டினர்.

"அடிக்கடி செல்வோம், அன்பாகப் பேசுவோம், புகழ்பாடுவோம், புன்னகை காட்டுவோம், அவர்கள் ஏமாந்து போவார்கள், "எடுபிடி'' யாகி விடுவார்கள்!'' என்று எண்ணு கிறார்கள், முறையை மாற்றினால் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து விடலாம் என்று எண்ணும் வடநாட்டுத் தலைவர்கள்.

சாகஸத்துக்குப் பலியாக மறுத்திடும் அணிவகுப்பு ஒன்று இருக்கிறது. அது வளர்ந்த வண்ணமும் இருக்கிறது, என்பதைக் காட்டியாக வேண்டும்.

எனவே இனி திராவிடம் வந்து "தந்தினம்'' பாடி மேலும் தலைகளைப் பூட்டிட எண்ணும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, கழகம் கருப்புக்கொடிமூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தைத் தோழர்கள் பலர் கூறியுள்ளனர் - நான் முறைப்படி அதனை நமது பொதுச் செயலாளருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

தடியடி! துப்பாக்கி! சிறை! கலகம்! குழப்பம்! கல்லெறி! எனும் பலப்பல கிளம்பக் கூடும் - எனினும் இவைகளைக் கண்டு கண்டு நாம் பழக்கப்பட்டவர்கள் தம்பி! உன் கருத்து என்ன?

கண்ணே! மணியே! கற்கண்டே! என்று அன்புடன் பேசுகிறோம்; அக்ரமக்காரர்களே, எங்களுக்குக் கருப்புக் கொடியா காட்டுகிறீர்கள், என்று வடநாட்டுத் தலைவர்கள் நெருப்பைக் கக்கக் கூடும்.

காட்டு மிராண்டிகள்! பைத்தியக்காரர்கள்! சிறு பிள்ளைகள்! என்று மீண்டும் ஒரு முறை நேரு பண்டிதர் நாக்கைத் தீக் கோபமாகக்கக் கூடும்.

ஆனால், நமக்கு வடநாட்டுத் தலைவர்கள் நம்மைப்பற்றி எப்படிப் பேசுகிறார்கள், புகழ்ந்தா? இகழ்ந்தா? வெல்லமா? வெடிமருந்தா? என்பதல்ல, கவனிக்க வேண்டிய பிரச்னை. தம்பி! மலத்தை மிதித்து விட்டாலும், கழுவி விட்டால் நாற்றம் போய் விடுகிறது; பூசிய சந்தனம் வியர்வையில் கரைந்து காற்றோடு போய்விட்டாலும், மணம் மடிந்து படுகிறது!

நம்மை வடநாட்டுத் தலைவர்கள் புகழ்கிறார்களா, இகழ்கிறார்களா - சந்தனம் பூசுகிறார்களா, நரகல் நடையில் ஏசுகிறார்களா, என்பதல்ல பிரச்னை.

நமக்குள்ள பிரச்னை - நம்மைப் போன்ற சாமான்யர் களுக்கத்தான் தம்பி, அமைச்சர்களுக்கு அல்லவே அல்ல - வடநாட்டார் நமது தாயகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான்! அடிமைத்தலை பூட்டியா, அல்லது நேசநாடாக்கிக் கொண்டா என்பதுதான் பிரச்னை. வழுக்கி விழுந்த வனிதாமணிகள் வந்தார்க்கு விருந்தளிக்கட்டும்; தாயகத்தின் தலை ஒடித்திட நாம் பணியாற்றுவோம் - நமது பங்கினை செலுத்துவோம்.

அன்புள்ள,

19-6-1955