அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மனிதனும் மிருகமும்
2

எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடத்தக்க, ஒருவரை ஒருவர் வஞ்சித்தும் அழித்தும் கொள்ளத் தேவையற்ற முறைபெற, விஞ்ஞானம் வழிகாட்டுகிறது. ஆனால், இதற்கு அந்த விஞ்ஞானத்தைப் பயன்படுத்திக்கொள்வதைக் காட்டிலும், அழிவுக் கருவிகளைத் தயாரிப்பதற்காகவே விஞ்ஞானத்தைப் பெரிதும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பல விஞ்ஞான விற்பன்னர்கள் இது குறித்துத் தமது கவலையையும் தெரிவித்துள்ளனர்.

பொருளை மிகுதியாக்கிக்கொள்ளவும் வளத்தைப் பெருக்கிக்கொள்ளவும், விஞ்ஞானம் வழிகாட்டத் தயாராக இருக்கிறது; ஆனால், அதனிடமிருந்து வெடிகுண்டுகளையும் அணுகுண்டுகளையுமே அரசுகள் கேட்டுப் பெற்று இறுமாந்து கிடக்கின்றன.

பஞ்சம் பசி போக்கிடும் வழிகாட்டப் பயன்படவேண்டிய விஞ்ஞானம், இன்று பகை மூட்டிட, அழிவை ஏவிடப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

மனிதனுடைய வாழ்க்கை முறையையே செம்மைப் படுத்தவும், மேம்பாடடையச் செய்யவும் பயன்படவேண்டிய விஞ்ஞானத்தை, மனிதகுலத்தின் நாசத்துக்குக் கருவிகளைச் செய்திடும் காரியத்துக்குப் பயன்படுத்துவது கொடுமையினுங் கொடுமை. எனினும் இந்தக் கொடுமை நடந்தபடி இருந்திடக் காண்கின்றோம்.

இன்றுள்ள மனிதகுலம், தனக்குக் கிடைத்துள்ள விஞ்ஞானத்தை இத்தகைய கொடுமைக்குப் பயன்படுத்தினது போல, மாக்கள் நிலையிலிருந்து விடுபடாதிருந்த மக்கள், தமக்குக் கிடைத்த கருவிகளைப் பயன்படுத்திக்கொண்டார்களில்லை. அவர்களுக்கு விஞ்ஞானம் நகர் அமைப்பு, பாதை அமைப்பு, பாசன வசதி, பயிரிடும் முறை, கல்விக்கூடம், மருத்துவக்கூடம் என்பவைகளைத் தரவில்லை - இன்றைய மனித குலத்துக்கு விஞ்ஞானம் தந்துள்ள வசதிகள் மிகப் பல; எனினும், கிளியைக் கொன்று காக்கைக்கு விருந்திடுவதுபோல, விஞ்ஞான அறிவைக் கொண்டு மனிதகுல அழிவுக்கு வழி கண்டுபிடிக்கும் கொடுஞ் செயலில் இன்றைய மனிதகுலம் ஈடுபட்டிருக்கிறது.

டாக்டர் எட்வர்டு டெல்லர் எனும் விஞ்ஞான விற்பன்னர், சென்ற திங்கள், விஞ்ஞானத் துறையை மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படும் விதமாகக் கட்டுப்படுத்தும் உரிமை விஞ்ஞானிகளிடம் இல்லாமலிருப்பது குறித்தும், அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கக் கூசிடும் கேடான காரியங்களுக்கு விஞ்ஞான அறிவு ஆக்கித் தரும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்தும் மிகுந்த கவலையைத் தெரிவித்திருக்கிறார்.

விஞ்ஞானி, பொருள்களைப் படைத்திட விரும்பும் பேரறிவாளன் - அழிவு கண்டு உள்ளம் வெதும்பிடத்தான் செய்வான். தூங்கும் பனிநீர் தங்கிடும் மூங்கில் இலையெனினும் அதனிடம் காணக்கிடக்கும் கவர்ச்சி அதனிடம் உள்ள உயிர்ப்பு. இதனை மேலும் மேலும் வலிவுள்ளதாக்கிட பொலிவுள்ள தாக்கிட விரும்பும் விஞ்ஞான விற்பன்னர்கள் மனிதர்கள் மாக்களைப்போல ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதற்கு, விஞ்ஞானம் பயன்படுத்தப்படுவது கண்டு, உள்ளம் நொந்து போகின்றனர்.

பசியாலும் பஞ்சத்தாலும் தாக்கப்பட்டோ, இயற்கை விளைவிக்கும் கொடுமைகளால் கொட்டப்பட்டோ, நோயூட்டும் கிருமிகளால் அரிக்கப்பட்டோ, கூனிக் குறுகி, குற்றுயிராகிடும் மக்களை, நிமிர்ந்து நின்றிடச் செய்திட நிம்மதியான வாழ்வு பெற்றிட வழி காண இரவு பகல் விழித்திருந்து, பொருள்களின் தன்மையினை ஆய்ந்தறிந்து புது முறைகளைக் கண்டுபிடித்துத் தந்திடும் விஞ்ஞானிகள், அவர்கள் பெற்றளித்திடும் பேருண்மை களே மனித குல அழிவுக்குப் பயன்படுத்தப்படுவதனைக் காணும்போது, ஏன் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைத் தந்தோம் என்று எண்ணி வேதனைப்படத்தான் செய்கிறார்கள்.

இதனால்தான் டாக்டர் எட்வர்டு டெல்லர் எனும் விஞ்ஞான விற்பன்னர் மனித குலத்துக்கு உள்ள இன்னலைத் துடைத்து, இன்ப வாழ்வு அளித்திடும் வழிகள் காணவே, விஞ்ஞானம் உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். டாக்டர் ராபர்ட் ஒப்பன் ஈமர் எனும் மற்றோர் விஞ்ஞான விற்பன்னரும் இதுபோன்றே கூறியுள்ளார்.

விஞ்ஞானம் இதுவரை பெற்றளித்துள்ள பெரு வெற்றிகளால், மனித குலம் எந்த வகையிலும் அளவிலும் பயன்பெற்றிருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுத்தாக வேண்டும் என்பதற்காகவே பல்கலைக் கழகமொன்றில் பார்த்துவந்த வேலையைக்கூட உதறித் தள்ளி விட்டார் இந்த விஞ்ஞானத்துறைப் பெருமகன்.

விஞ்ஞானத் துறையின் வளர்ச்சிக்காகப் பெரும் பொருள் செலவிடப்பட்டு வருகிறது; காலத்தையும் கருவூலத்தையும் கணக்கற்ற அளவு செலவிட்டுத்தான் பேருண்மைகளைக் கண்டறிந்து, புதிய கண்டுபிடிப்புகளைத் தருகின்றனர் விஞ்ஞான விற்பன்னர்கள்.

மின்னிடும் விண்மீன்களின் இயல்புகளைக் கண்டறியவும், விண்வெளியில் உலவிடவும், ஆங்கு உள்ள கிரகங்களைக் காணவும், எத்தனை எத்தனைக் கருவிகள்! என்னென்ன முறைகள்! விண்வெளியிலே நடந்தே காட்டிவிட்டான் சோவியத் நாட்டு மாவீரனொருவன், விஞ்ஞானத்தின் துணைகொண்டு.

இவை எவரையும் வியப்பில் ஆழ்த்தும், ஐயமில்லை. எனினும் மறைந்த மாமேதை ஆல்டேன் என்பார், விண்வெளியின் ஆராய்ச்சிக்காகப் பெரும் பணம் செலவிடுவது தேவைதானா! இப்போது கவனிக்கப்படவேண்டிய பிரச்சினைதானா விண்வெளி விஷயம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தார்.

இப்போது விண்வெளி ஆராய்ச்சிக்காகப் பல்வேறு நாடுகளும் செலவிடும் தொகை, கேட்போருக்கு மயக்கமூட்டும் அளவினதாக இருக்கிறது.

விண்வெளித் துறை பற்றிய ஆராய்ச்சிக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 10,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்கின்றனர்.

இத்தனை பெருந்தொகையை, விண்வெளி ஆராய்ச்சிக்காகச் செலவிடுவதனைக் காட்டிலும், மனித உடற்கூறு பற்றியஆய்வுத் துறைக்கும், உணவுத் துறை, பொருள் ஆக்கத் துறை, மருத்துவத் துறை ஆகியவற்றினுக்கும் செலவிட்டிருக்கலாம் - செலவிட வேண்டும் என்ற கருத்தினைக் கூறிச் சென்றார் ஆல்டேன்.

மக்களின் இயல்புகளே பெரும்பாலும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்குக் காரணம்; அவர்களின் நடவடிக்கைகளைச் செம்மையாக்கிட வேண்டுமானால், இயல்புகளை மாற்றிட, அல்லது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்; விஞ்ஞானம் அதற்குப் பயன்பட வேண்டும் என்ற கருத்து இன்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள உண்மைகளில் ஒன்றாகும்.

குற்றவாளி ஒரு நோயாளி. குற்றவாளியைத் தண்டிப் பதனால் மட்டும் அவனைத் திருத்திவிட முடிவதில்லை.

ஒருவர் இருவரைத் திருத்திவிட்டாலும் குற்றம் எழாதபடி தடுத்துவிட முடிவதில்லை.

குற்றவாளி, ஒரு நோயாளி! ஆகவே அவனுக்கு உள்ள நோயைப் போக்க வேண்டும்; போக்க முடியும். இந்தக் கருத்துக்களை இன்று அறிவாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால், இதனைத் தொடர்ந்து, இயல்பினைக் கெடுத்திடும் நோயை நீக்கிட வழி கண்டறிந்திடும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு, புதிய முறைகளைச் சமைத்து அளித்திடப் போதுமான தொகை செலவிடப் படுவதில்லை.

நிலவிலே காணப்படும் "கறை'யின் தன்மையைக் கண்டறியச் செலவிடுவது உடனடியாகத் தேவையா அல்லது மக்களுடைய மனத்திலே மூண்டிடும், அழுக்கு களைப் போக்கிட வழி கண்டிடச் செலவிடுவது உடனடித் தேவையா என்ற கேள்வி பிறந்துவிட்டிருக்கிறது.

குற்றவாளி ஒரு நோயாளியே என்ற பேருண்மையின் அடிப்படையில், நரம்புகள், உடல் உறுப்புக்களிலே சில ஆகியவற்றிலே பழுது பார்ப்பதன் மூலம், புதுப்பிப்பதன் மூலம், குற்றம் செய்திடும் இயல்பினை மாற்றிட முடியும் என்று கூறுகின்றனர், அந்தத் துறையின் விற்பன்னர்கள். ஆனால், அந்தத் துறைக்காகச் செலவிடப்படும் தொகை போதுமான அளவினதாக இல்லை. விண்வெளிபற்றிக் கிளம்பிவிட்டுள்ள வேட்கை பெரும் தொகையை விழுங்கிவிடுகிறது.

குடல் வெந்து கிடப்பவன் வாய் நாற்றமடிப்பதும், நீர் கொண்டவன் தும்மியபடி இருப்பதும், வெப்ப நோயாளன் இருமிக்கிடப்பதும் காண்கிறோம். அவர்களின் நோயைப் போக்கிட மருந்தளிக்காமல், வாய் நாற்றக்காரனுக்கு நாற்பது ரூபாய் அபராதம், தும்மலொன்றுக்கு எட்டணா கட்ட வேண்டும், இருமலுக்கு இரண்டு ரூபாய் அபராதம் என்று முறை கூறினால் எப்படி இருக்கும்; முறையாகுமா? ஆகாது. அதுபோலத்தான். ஒருவனுக்கு அமைந்துவிட்ட உறுப்புகளின் தன்மைக் கோளாறு காரணமாக ஏற்பட்டுவிடும் நடவடிக்கைகளுக்காகத் தண்டனை விதித்திடும் முறை என்று கூறுகின்றனர்.

உடற்கூறு பற்றிய அறிவுத் துறையிலே கண்டறிய வேண்டுவன நிரம்ப உள்ளன. அந்தத் துறையிலே நல்ல வெற்றி கிட்டக்கிட்ட, குற்றவாளிகளாகப் பலரையாக்கிவிடும் அந்த நோயையே போக்கிவிடலாம்; பெருமளவு குறைத்துவிடலாம் என்கின்றனர்.

மக்கள் தொகை எத்தனை வேகமாகவும் அளவினதாகவும் பெருகினாலும்கூடக் கவலையில்லை. விவசாயத் துறையிலும், பொருளாக்கத் துறையிலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைப் பெற்று அனைவருக்கும் "வாழ்வு' அளித்திட இயலும் என்கின்றனர்.

நோயினால் மக்கள் மடிந்துபோவது மட்டுமல்ல, பிழைத்துக்கொள்பவர்கள்கூட வலிவிழந்து போய்விடுவதன் காரணமாக, அவர்களின் உழைப்புத்திறன் கெட்டுப்போகிறது; அதன் காரணமாக உற்பத்தித் திறன் உருக்குலைந்துவிடுகிறது. எனவே, நோய்களை நீக்கிட வழி காண வேண்டும்; காண முடியும் என்கின்றனர்.

இந்தத் துறைகளில் செலவிடப்படும் பணம், மனித குலத்தின் இன்னலைத் துடைத்து இதம் தந்திட உடனடியாகப் பயன் தந்திடும். ஆனால், இந்தத் துறைகளுக்காகச் செலவிடுவதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகத் தொகையை வெறி என்று கூறத்தக்க ஆர்வ உணர்ச்சியுடன் அழிவுக் கருவிகளைக் காண்பதற்கான துறைகளுக்கு வல்லரசுகள் செலவிட்டு வருகின்றன!

மனிதனை, மிருக நிலையிலிருந்து விடுவித்து முன்னேற்ற மடையச் செய்யப் பயன்படவேண்டிய விஞ்ஞானம், அதனை முறைப்படுத்திக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தவறிவிட்டதன்காரணமாக, மீண்டும் மனிதனை மிருக நிலைக்கே கொண்டு போய்ச் சேர்க்கப் பயன்பட்டு வருகிறது என்ற கருத்து இன்று பரவிக்கொண்டு வருகிறது.

இந்தக் கருத்தின் வெற்றியைப் பொறுத்திருக்கிறது, மனித குலத்தின் எதிர்காலம். கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்று பேசிடும் நிலை மாறி, இவையே இனி மனித குலத்தின் வாழ்வுமுறைகள் என்றாக வேண்டும். அதிலே எந்த அளவு வெற்றி கிடைக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு மறையும்.

தம்பி! இந்த எண்ணங்கள் எனக்கு ஏற்படக் காரணம் என்ன என்று அறிந்துகொள்ள விரும்புகிறாயல்லவா! நான் ஏதும் பெரிய தத்துவ நூலைப் புதிதாகப் படித்து அதனால் ஏற்பட்ட எண்ணக் கொந்தளிப்புக் காரணமாக இதனை எழுதவில்லை. த. வெள்ளைப்பாண்டி, (பி.எஸ்.ஸி. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்) செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி இதழில் தீட்டிய கவிதை ஒன்றைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அதனைப் படித்ததால் இத்தனை எண்ணங்கள் எழுந்தன; உன்னிடம் சொல்லி வைத்தேன்.

இதோ அந்தக் கவிதையையும் தந்திருக்கிறேன்; படித்துப் பயன் பெற!

எண்ணில்லாப் பொறிகளினை விசைகள் தம்மை
இருள்போக்கும் மின்னொளியை நிறைத்து வைத்தாய்
மண்ணுக்குட் புகுந்தாய்நற் கனியைக் கண்டாய்
மனமெட்டாத் தொலைவினையும் கைக்குள் கொண்டாய்
கண்ணுக்குத் தெரியாத பொருளை எல்லாம்
கண்டறியும் நுண்கருவி பலவும் செய்தாய்
விண்ணினையும் காற்றினையும் அளந்தெ டுத்தாய்
வியக்கின்றேன்; வியக்கின்றேன்; வியக்கின்றேனே;

பிணியெல்லாம் போக்குதற்கு மருந்தைக் கண்டாய்
பிறநாட்டில் பேசுவதை இங்குக் கேட்டாய்
அணுவையும்நின் ஏவலனாய் ஆக்கிக் கொண்டே
அகலுலகைப் புதுமையினால் நிறைத்து விட்டாய்
இணையில்லாச் செயற்கைக்கோள் பறக்க விட்டாய்
இயற்கைதனை வென்றேனென் றலறு கின்றாய்
திணிசெருக்கால் உன்னைநீ அழித்தல் கண்டு
சிரிக்கின்றாள் சிரிக்கின்றாள் இயற்கை அன்னை!

ஆதிக்க வெறிகொண்டிவ் வண்ட மெல்லாம்
அழித்திடுவேன் நொடியில்என் றறிவிக் கின்றாய்
சோதித்துப் பார்ப்பாயாம் குண்டை வானில்!
தொல்லையினை யோரவில்லை: வருங்காலத்தில்
காதற்றும் காலற்றும் பார்வை யற்றும்
கருப்பையுள் குழவியதும் ந-தல் உண்டாம்
போதித்துப் பார்க்கின்றார் பெரியோ ரெல்லாம்
புழுதியிலே கொட்டியநெய் போலா யிற்றே!

ஏற்றங்கள் பலகண்ட மனிதன் இந்நாள்
இறங்கிவிட்டான் அழிவென்னும் புதைகுழிக்குள்:
காற்றெல்லாம் நஞ்சாக மாறக் கூடும்
கழனியெலாம் கருவற்றுப் போகக் கூடும்
ஊற்றுக்கள் நச்சாறாய் ஓடக் கூடும்
உண்ணுகின்ற மக்கள்உயிர் இழத்தல் கூடும்
கூற்றிங்குத் தலையைவிரித் தாட்டம் போடும்
குவலயமே வெற்றிடமாய்க் காட்சி கொள்ளும்!

பயனுள்ள வாள்தூக்கிப் பகையை வெல்லார்
பதடிகளாய்த் தம்முடலை யரிவார் போலும்
வயலுக்குக் களைநீக்கும் கருவி கொண்டு
வளர்பயிரைத் துண்டாக்க முனைவார் போலும்
கயமைக்கு நல்லறிவை உகுத்தல் போலும்
கருதிவிட்டாய் அணுவாலே யுலகைத் தாக்க
நயமான வேலைக்கே அணுவைக் கொண்டால்
நலமென்பேன் இல்லையேல் அழிவே மிஞ்சும்!

 

அண்ணன்

16-5-1965