அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மற்றொரு கூவம்!
1

அமைச்சரும் அறிவாற்றலும் -
தென்னாட்டுத் தொழில் வளம் -
தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை.


தம்பி!

"கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு. கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய் வீச்சும் மதிப்புப் பெற்றுவிடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம்.

"என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித்திறன் எத்தன்மையது, வீரதீரம் எத்துணை பெரிது, ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப் போய், கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறீர்கள்'' என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச்சொல்ல வில்லை. எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப் பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைகட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்து தீரவேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெற முடியாது என்பார்போல, உள்ளத்திலே தொகுதி மூன்று 29 குடிபுகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழா விட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலி பேசிப் பார்க்கிறார்.

ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன். நாடு மண்டியிட்டுக் கேட்டுக் கொண்டதால், பல துறைகளையும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டு வருகிறேன், அப்படிப்பட்ட என்னைப் போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாள வழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது, இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள், பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடுகின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் "இராஜதந்திரிகளை' வரச்சொல்லி, அறிவுரை அருளி, உலகம் உய்ய பழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பிவிட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித் தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு, ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்து முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்களே என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது, அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது.

அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் - அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது, எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன் பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு அடையாளம்.

யார், எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்ட வேண்டும் என்று கேட்டார்கள்!

அன்றும் கேட்டோம், இன்றும் கேட்கிறோம், கோடி கோடியாகக் கொட்டி மலைமலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன? என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப்போனதை உணருவதால்.

இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராகமட்டும் இல்லாது போனால், யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக்கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி.

கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியோ, நாம் யாரும் கேட்டோ மில்லை; கேட்டதெல்லாம், வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, பெரும்பொருள்கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்களே, அந்த ஆர்வம், அக்கரை, திறமை, ஏனய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள் தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல் வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தி, திட்டங்களை நிறைவேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறீர்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்கு பதில், உதட்டைப் பிதுக்குவதும் உறுமிக் காட்டுவதும்தானா! வேறு இல்லையா!!

தம்பி! அமைச்சர் கூவத்துக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டுமே பார்ப்போம். பார்த்தோமே பொறுத்திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டு களுக்கு மேலாக, கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூட அல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும், வாய்ப்பு!! "யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும்.

கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது - அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறை வேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்துவரும் திட்டம். செய்து முடித்தாரா? செருமுனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை.

ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்!

கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த, தொகையின் அளவு ஏன் அதிகப்படுத்தக் கூடாது.

தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையால் மோதப்பட்டு மோதப்பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக் கின்றன - ஆமடா, தம்பி! ஆம்! எந்தச் சிங்களம், சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி, அடிமை களாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர் காண, தமிழரின் பிணங்கள், சுறா தின்றது போக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள் சிங்களத் தீவின் கரை ஓரம் கிடந்தன!!

தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின் கரையிலே கிடக்கின்றன!

கொங்கு நாட்டுக் குடிமகன், தேம்ஸ் நதிக்கரை மீது எழுப்பப்பட்டுள்ள எழிலூர் சென்று, எமது காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் புது வாழ்வு, முழுவாழ்வு பெற்று மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப் போகிறார்!!

அமைச்சர் அல்லவா, ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அகமகிழ்ச்சி பற்றி ஆங்கிலர் அறிந்திட எடுத்துரைக்கப் போகிறார். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பெரும் பேராசிரியர்கள், மதத் தலைவர்கள், கலைஞர்கள், நமது அமைச்சர் பெருமானை, அச்சமும் அடக்கமும் கொண்ட நிலையில் அணுகிப் பாடம் கேட்கப் போகிறார்களோ, நமக்கென்ன தெரியும், தம்பி? தெரியாமலா, செல்வார்!!

ஆனால், அங்கு சென்றும், நமது நினைவால் தாக்கப்பட்டு, கூவம் நதிக்கா அணைகட்டுவது என்று கேட்டுவிடக் கூடாது; ஏனெனில், அணை இருக்கட்டும், கூவம் நதியின் நாற்றம் போய்விட்டதா என்று அறிந்தோர், கேட்பர்.

தொழில்வளம் காண்பதற்காக, இயற்கை வளத்தைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலே, தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி, இடித்துரைக்காத நிபுணர் இல்லை என்னலாம். இந்த அமைச்சரேகூட, கனரகத் தொழிலைப் பொறுத்த வரையில் தென்னகம் - அதிலும் குறிப்பாகச் சென்னை - சரியான அளவிலும் முறையிலும் வளர்ச்சி அடையவில்லை என்பதைச், சில வேளைகளில் எடுத்துக்காட்டிப் பேசியுமிருக்கிறார். மற்றவர் களுக்கு மட்டுந்தானா, எமக்குத் தெரியும், என்று உரிமையுடன் பேசித் தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கான வழிவகை நிச்சயமாகக் காண்பேன் என்று வாக்களித்துமிருக்கிறார். எனினும், இவரே, நாம் அதை எடுத்துக் காட்டும்போது, எரிச்ச லடைந்து, கூவத்துக்கு அணைகட்டவா என்று கொதித்துக் கேட்கிறார். கொஞ்சம் உரத்த குரலில் பேசுங்கள் - என்று கூறுபவரைப் பார்த்து, காது செவிடா? என்று கேட்டுவிடுங்கள் - எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு.

காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப் பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி சரியான அளவிலும் வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; "ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள்.

ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று, காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான், பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கக் துணிந்து விட்டார்கள்.

ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே; திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு. கழகத்தினர்தான் - என்று பொதுமக்களே, மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே, ஒருபுறம் எரிச்சல், இன்னோர் புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு, இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து, குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் "மனு' போடும் "மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற்கில்லை. ஆனால், இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது, இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும்போதே அச்சம் குடைகிறது. நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது.

பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம் ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட? என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.

"எவ்வளவு முன்னேறி இருக்கிறது, இந்த மாநிலம், எமது திறமையான ஆட்சியினால்: மின்சாரத்தில் உணவு உற்பத்தியில், பாதைகள் அமைப்பில், பகல் உணவுத் திட்டத்தில், இப்படிப் பல துறைகளில், இப்படிப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கும் போது, திரும்பத் திரும்ப வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்று பேசிக்கிடப்பதா, என்று அமைச்சர் வாதாடுகிறார். அவரே நீதிபதியுமாகி, நாம் கூறுவது தவறு; நடவாததை, நடக்கக் கூடாததை, தீதானதை, தேவையற்றதை, நாம் கேட்பது அடாத செயலாகும் என்று தீர்ப்பும் அளித்துவிடுகிறார்!! தண்டனையும் தருகிறார்! நான் பொருளற்றது பேசுவேன்; அதனைப் பொன் மொழியாகக் கொள்ள வேண்டும்; இதுதான் உமக்கு நாம் அளிக்கும் தண்டனை என்கிறார்.

தம்பி! கிடைக்கிற "மின்சாரத்தைக்' கிராமப் பகுதிகளிலே, அதிகமாக அளவுக்குப் பயன்படுத்துவதிலே "சென்னை இராஜ்யம்' முன்னணியில் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்தியில் முதலிடமல்ல, சென்னைக்கு. சென்னையில் உற்பத்தி யாவதைவிட, அதிக அளவு மின்சக்தியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் மாநிலங்களில், மேலும், மின்சக்தியை அதிகப் படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன; இங்கு, அந்த வாய்ப்புகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன; இனி அணு உலைக்கூடம் மூலம்தான், வழி கண்டாகவேண்டும். இங்கு அமைச்சர்கள், அதைக் குறித்துப் பேசத் தவறவில்லை, வாக்களிக்கத் தவறவில்லை. மேலிடம் சென்று கெஞ்சிடத் தவற வில்லை. ஆனால், தம்பி! உனக்குத்தான் தெரியுமே. அணு உலைக்கூடம், இங்கு இல்லை - எது மிக அவசியமோ, அங்கு அது இல்லை; பம்பாய் பகுதியில் அமைக்கத் தீர்மானித்து விட்டார்கள்! நமது அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இந்தச் செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறார்கள்!! சிறிதளவு ஆயாசமோ, அருவருப்போ, கண்டனமோ தெரிவிக்கக்கூட அவர்களுக்கு அச்சம்! என்ன நேரிட்டுவிடுமோ என்ற கவலை. இப்படி இடுப்பொடிந்த நிலையில் இருந்தால், தென்னகத்தின் உரிமைகளை யார்தான் பறித்துக் கொள்ளத் துணியமாட்டார்கள்.

அசாமும், வங்காளமும், காங்கிரஸ்காரர்கள் அரசோச்சும் மாநிலங்கள்; அங்கு உள்ள முதலமைச்சர்கள், தரத்தில், திறத்தில், தகுதியில், இங்கு அரசு நடாத்தும் காங்கிரஸ் தலைவர்களை விடக் குறைவானவர்கள் அல்ல! ஏக இந்தியா - அகில பாரதம்- என்ற மயக்கமொழிகளை அவர்களும் மக்களிடம் பேசி வருபவர்கள்தான். ஆனால், தத்தமது மக்களின் உரிமை பற்றிய பேச்சு எழும்போது, எவ்வளவு துடித்துக் கிளம்புகிறார்கள்.

அசாம் அமைச்சரவையைக் கலைத்துவிடவேண்டும், என்று வங்க முதல் அமைச்சர், பேசுகிறார்.