அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மற்றொரு கூவம்!
2

சுதந்திர தினத்தையே அல்லவா, கொண்டாட முடியாது என்று, வங்க அமைச்சரவை அறிவித்தது. வங்க மாநில கவர்னர்,. சுதந்திர தின விழாவின்போது நடத்தும் விருந்து, வைபவம்கூட அல்லவா, நிறுத்திவிட்டார். டில்லி செங்கோட்டையில், நேரு பண்டிதர் கொடி ஏற்றுகிறார்; வங்கத்திலோ, எமது மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அசாமில் இழைக்கப்படும் கொடுமை எமது உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கிறது; இந்நிலையில், கொண்டாட்டம் ஒரு கேடா! செத்து விழுகிறார்கள், வங்க மக்கள்; தடுத்து நிறுத்த வில்லை, டில்லிப் பேரரசு; இந்த இலட்சணத்தில், சுதந்திர விழா வேறு கொண்டாட வேண்டுமா? முடியாது! மனம் இடம் தராது! மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று, வங்கக் காங்கிரசு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்? குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் குணாளர் களாக விளங்குகிறார்கள்!

"ஐயனே! அணு உலைக்கூடம் வேண்டும்,' என்று கேட்கிறார்கள்.

அணு உலைக்கூடமா? ஆமாம்! அதன் அற்புதசக்தி அபாரம். அதை நாமும் உணர்ந்திருக்கிறோம். உமக்கு அணு உலைக்கூடத்தின்மீது ஆசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அணு உலைக்கூடத்தைக் காண விரும்பினால், பம்பாய் வட்டாரம் சென்று காணவும்; அங்குதான் அணு உலைக்கூடம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது! - என்று டில்லி கூறுகிறது.

மெத்தச் சந்தோஷம்! மிக்க நன்றி - என்று இவர்கள் கூறுகிறார்கள்.

எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை சம்பந்தமாக, முன்பு, அசாமுக்கும், டில்லித் துரைத்தனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பி! இப்போது இங்கே கவர்னராகக் கொலுவிருந்துகொண்டு, அகில பாரதம்பற்றிய அரிய "உபதேசம்' செய்துகொண்டிருக்கிறாரே, இதே மேதி அவர்கள் அசாமில் முதலமைச்சராக இருந்தார். என்ன நடந்தது என்பதை, இங்குள்ள காங்கிரசாரை, பழைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொல்லு, தம்பி! அசாம் முழுவதும் முழக்கம் - அகில பாரதம் என்று அல்ல - அசாம் அசாமியருக்கே! என்ற முழக்கம். தேசிய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பேசுவது, அசாமை வஞ்சிக்க, புறக்கணிக்க, சுறண்ட என்பது எமக்குப் புரிந்துவிட்டது. வேண்டாம் இந்தப் போலி உறவு! அசாமுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்; உரிமை பறிபோக விடமாட்டோம். டில்லிப் பேரரசு ஓரவஞ்சனையாக நடந்தால், அசாம். இந்தியாவிலிருந்து பிரிந்து போய்விடும்! என்று பேசி, நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது, அசாம். டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று.

இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி.

உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி.

தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி.

எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும். ஐயனே! அதுபோதும்!! - என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள்.

பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத்திலே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த "மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட, அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது!

பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறி போகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள்.

பதவியில் இருந்துகொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும், கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும் தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன்வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல, டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள்.

இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக்களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும், ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பதுபோலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்துவிடலாம் என்று, "கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார், குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து, மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர்.

"இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படி செய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும்.

சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்க வேண்டும்.

முதுகுளத்தூர் தாலூகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்.''

தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும், செய்யப்பட வேண்டியவை - ஒரே ஒரு துறையில் மட்டும்.

எல்லாம் செய்தாகிவிட்டது, இனிக் கூவத்துக்கு அணை கட்டவேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா?

முதுகுளத்தூர் தாலூகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். காமராஜர் வீரஉரை, விளக்கஉரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர்.

தம்பி! இதை நான் எழுதிகொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்துவரும் ஆதிதிராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை ஒரு முயற்சியும் எடுத்துக்கொள்ளாததுபற்றி வருத்தத்துடன் வந்து கூறினர்.

இந்த இலட்சணத்தில் காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப்பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.

பாகல்மேடு இதற்குத்தான் என்றார்! பாதயாத்திரை இதற்காகவேதான் என்றார்! சூறாவளிச் சுற்றுப்பயணம் இதற்காகத் தான் என்றார்! இப்போது மாநாடுகள் நடத்துவது இதற்குத்தான் என்கிறார்.

மாத்திரை தீர்ந்ததேயன்றி, மாந்தம் போகவில்லை என்பார்கள், தாய்மார்கள்.

அதுபோல, இவர், முறை பல காட்டுகிறாரேயன்றி, குறைகள் எங்கே களையப்பட்டன?

இதோ, கீழம்பியில், ஆதிதிராவிட மக்கள், பிணம் எடுத்துச் செல்ல, பாதை இல்லை என்கிறார்கள் - இதை, முதலமைச் சரிடம், ஏழைபங்காளன் என்ற விருது சூட்டிக்கொண்டு உலா வரும் காமராஜரிடம், நான் முன்னின்று நடத்திய தண்டலம் மாநாட்டிலே, மனுக்கொடுத்துத் தெரிவித்துக்கொண்டார்கள், பலன் என்ன? பூஜ்யம்!! அதனால் வெட்கப்படவேண்டியது, யார்? காமராஜர் ஆட்சி அல்லவா!!

கீழம்பிப் பகுதி ஆதிதிராவிட மக்களுக்கு, பிணம் எடுத்துச் செல்லப் பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் உரிமையைக் காத்திட, உமக்குப் பெருமை தேடித்தர, கக்கன் இருக்கிறார் கனம் மந்திரியாக என்று போய்ச் சொல்வதா!

அமைச்சர் கேட்கிறார், கூவத்துக்கு அணை கட்டவா? என்று.

பிணம் புதைக்கும் இடம், அதை எடுத்துச் செல்ல "வழி' அமைத்துக் கொடுக்கக்கூட, வக்கற்றுக் கிடக்கும் அமைச்சர், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால், வளம் பொங்கி வழிந்துவிடும் என்று எண்ணுகிறாரா? வளமும் பொங்கி வழியாது, திறமும் வளராது. இப்படிப்பட்ட பேச்சினால், நாராச நடையினால் நறுமணம் எங்ஙனம் எழும்! ஓங்கி அடித்தேன், ஒடிந்து விட்டார்கள்! சரியான போடுபோட்டேன், சாய்ந்தார்கள் கீழே! - என்று வேண்டுமானால், துதிபாடித் திரிபவரிடம் பேசி மகிழலாம். தூய்மை, வாய்மை, செயல்திறமை, என்பவைகளைக் கவனித்து ஆய்வு நடாத்தும் அறிவாளர்கள் இத்தகைய பேச்சினை வீரமென்றோ விளக்கமென்றோ கொள்ளமாட்டார்கள். இது மற்றொரு "கூவம்' என்றுதான் கூறுவர்.

கொங்குநாட்டுக் குடிமகன் வாயிலே இருந்து, இந்தக் "கூவம்' வெளிவரலாமா! நான் பரிதாபப்படுகிறேன்.

தொழில் வளர, செல்வம் கொழிக்க, விலைவாசி கட்டுப் படுத்தப்பட, விஞ்ஞானம் வளர, இன்னபிறபற்றிய தெளிவுரை கூறவேண்டியவரிடமிருந்து, கூவம் கிளம்புவது கண்டால், பரிதாபமாகத்தானே இருக்கும்!

கூவம் ஏன் கெடுநாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன்; நல்ல நீரோட்டம் இல்லாததால், சரியான முறையில் துப்புரவு செய்யப்படாததால், அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால், நாற்றம் அடிக்கிறது என்றார்கள்.

பேச்சிலே "கூவம்' ஏற்படக் காரணம் என்ன என்பதை, விளக்கவா வேண்டும். சிந்தனை வழி அடைபட்டுப் போயிருப்பது, எல்லாக் கருத்துக்களையும் அறிந்து உண்மையைக் காண வேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப் போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமற் செய்துவிடுவது, அலட்சியம், அகம்பாவம், போன்ற அழுக்குகள் படிந்து படிந்து, அறிவுக்குத் தேவையான தெளிவைப் பாழ்படுத்தி விடுவது ஆகியவைகளே, பேச்சுக் "கூவம்' ஆகிவிடக் காரணம்.

கூவத்துக்கு அணைகட்டச் சொல்லி, அமைச்சருக்கு, ஒருவரும் சொல்லவில்லை; அவர் பேச்சைப் பார்க்கும்போது, "ஐயனே! அமைச்சராக இருக்கும் காலம் வரையிலுமாகிலும், பேச்சிலே, "கூவம்' புகாமல் பார்த்துக் கொள்வீராக!'' என்று கூறத் தோன்றுகிறது.

இவர்தம் ஆட்சியின் சிறப்பினை, உலகுக்கே, எடுத்துக் காட்டச் சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!!

சிங்களவர், என்ன எண்ணி இருப்பர், தமிழரின் பிணங்களைக் கண்டு; தமிழருக்கு இது கதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட்டுக் கிடக்க வேண்டியதிருக்க, வீறாப்புக் காட்டுவதும், பேச்சைக் கூவமாக்கு வதுமாக இருக்கிறார்கள்.

இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலைகடலில் தத்தளித்த போது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சடைந்தபோது என்னென்ன எண்ணினரோ, எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்!

கடலில், தமிழன் பிணமாகி மிதக்கிறான் - அது கண்டு சிங்களவன், இதோ "கள்ளத் தோணி' என்று கேலி பேசிச் சிரிக்கிறான், வாழ வைக்கவேண்டிய பொறுப்பினை நிறை வேற்றும் தகுதி இழந்து போனோமே என்று கண்ணீர் வடிக்க வேண்டிய அமைச்சர், பேச்சைக் கூவம் ஆக்கிக் கொள்கிறார்; ஏனோ, பாவம்!

அண்ணன்,


4-9-1960