அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மூலவர் மூவர் முரசொலி...
1

குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி -
நேருவின் பதில்

தம்பி!

என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்துகொண்டிருந்த அந்த "வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு, கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்துகொண்டிருந்திருக்கிறாய் - புன்னகை பூத்திடக் காரணம் அதுவே - எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய் - எதை உணர்த்த? - அடே! அப்பா! இலேசான ஆளல்லவே நீ!! எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ - உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால்தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத் தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றி பெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என்போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது. அந்த உன் இயல்பு, உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது. அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது, அண்ணன் காணா நேரத்தில் அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிடஓர் பொய்க் கோபம் காட்டுகிறாய், புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச் செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை - இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது, பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய "பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீர உணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!!

எதற்கு அண்ணா, பேரார்வம் வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில், அதற்கு இது சமயமல்ல, தேவைப்படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று. பிறகு நான் நொந்துகொள்ளவேண்டும் - ஏனோ, இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திட வேண்டி வருகிறதே, பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுணை சென்று, சீறிப் போரிடவேண்டாமோ, சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ! - அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோலமயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே! பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயம் பார்ப்போம்! சென்று, வா!'' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாதவனாக்குகிறாய் - ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா! - என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி! மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும்போது!

ஆமாம்! கோபம் காட்டுகிறாய் - அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்கவகையில், அறப்போர்க்களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்பது. ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஓர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண் மணலில், முத்தொன்று, காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது.

பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை! - என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடிக்கி கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு, மேலே எழும்பிவந்து, காட்டுவான், கரை நிற்போருக்கு, காணீர் நன் முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப் பிடித்திழுத்து வந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது; புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க் கோபம் காட்டுகிறாய்! அல்லவா?

தம்பி! உனக்கு மாதுளைப் பழம் தரவேண்டும், அதனைத் தின்றிடச் சொல்லி, பக்க நின்று பார்த்திட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும்போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணிசெய்வோன், செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள்பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க, இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள்மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர்.

தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ, துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை - அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது, எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால்தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும் உண்மை!!

அதுபோலவேதான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கையினைக் கீழே துப்புவதுபோல, வெற்றிச் சாறு தரும் சுவை பெற்றான பிறகு, பொய்க் கோபம் காட்டி நிற்கிறாய்!

ரோம் நாடு, பேரரசின் இருப்பிடமாய், பெரு வெற்றிகள் திகழ்ந்திடும் எழிலிடமாய் இருந்த காலை, வீரர் குழாம் கூடிடும் வகையிலே, கோடம்பாக்கத்தில், நீல வானத்தையே கொட்டகையாகக் கொண்டு, பல்லாயிரவர் கூடினபோது,

"தமிழழிக்கும் இந்தியினைத் திணிக்கும் ஆணை பிறப்பித்து விட்டு, அது குறித்து எழுந்துள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும் ஐயப்பாட்டினைப் போக்கும் முறையிலும் விளக்கம் அளிக்காமல், பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் பவனி வரப்போகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்! வரவேற்கப் போகிறீர்களா?

என்று, அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவன் என்ற முறையில் கேட்டேன்.

"இல்லை! இல்லை! வரவேற்கமாட்டோம்! கருப்புக் கொடி காட்டுவோம்!!

என்று முழக்கமெழுப்பினாய்! கண்முன் தெரிகிறது காட்சி! காதினிலே ஒலிக்கிறது முழக்கம்!

"பாபு இராஜேந்திரர் விளக்கம் அளித்துவிட்டுத் தமிழகம் வரவேண்டும்! இல்லையேல், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்.''

என்று கூறினேன், ஆம்! ஆம்! என்று கூறி ஒப்பம் அளித்தாய். உள்ளம் மகிழ்ந்தது! ஊர் மகிழ்ந்தது! இந்தியத் துணைக் கண்டத்தையே, அந்தச் செய்தி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது!

உளறித் திரியும் சில்லறைகளின் பேச்சை விட்டுத்தள்ளு, தம்பி! உன் சூளுரை, அடிமுடி அனைத்தையும் கிடுகிடுக்க வைத்தது. ஊரெல்லாம் அடக்குமுறை வலைவீசிப் பிடித்தாலும், பிடிபட்டவர் போக, கருப்புக் கொடி காட்டப் பல்லாயிரவர் இருப்பர் என்பதை நேரு பண்டிதர் கண்ட காட்சியினின்றும், நாடு அறிந்திருக்கிறது. விரட்டினாலும், மிரட்டினாலும், அடித்துத் துரத்தினாலும், வட்டமிட்டு அடித்தாலும், வளையமிட்டு அடித்தாலும், குருதி கொட்டக் கொட்ட அடித்தாலும், கருப்புக் கொடி காட்டிடத் தயங்கமாட்டார்கள் என்பது ஆளவந்தார்களுக்குத் தெரியும். எனவே, கோடம்பாக்கத்தில், உன் முழக்கம் கேட்டு - மூலை முனை தேடித் திரிந்திடும் பேர்வழிகளைத் தள்ளு - மூலவர்கள் முகம் கருத்தது, மனம் குழம்பிற்று!

கருப்புக் கொடியா? தி.மு.க. வா? ஐய்யயோ! பொல்லாத பாவிகளாயிற்றே! என்ன நேரிடினும் கலங்கமாட்டார்களே! எடுத்ததைச் செய்தே முடிப்பார்களே! கழகம் கட்டளை பிறப்பித்தால், நிறைவேற்றியே தீருவார்களே! கண்டோமே நேரு வந்தபோது! - என்றெண்ணினர். கூடிக்கூடிப் பேசினர்; குமுறிக் குமுறிக் கிடந்தனர்; தூதுவிட்டனர்; துயரப்பட்டனர்; பாகுமொழி பேசிடுவோமா, பல்லைக் காட்டிக் கெஞ்சிடலாமா, அடைப்பம் தாங்கி கோபம் துடைத்திடலாமா, என்ன செய்து இந்த இக்கட்டை நீக்குவது என்றெல்லாம் எண்ணி, ஏங்கிக் கிடந்தனர். போலீசும் தூங்கிக்கொண்டில்லை. வட்டம் வட்டமாகச் சென்று, பெயர் என்ன? வயதென்ன? தொழிலென்ன? தோழர்கள் எவரெவர்? என்ற விவரங்களைக்கேட்டறிந்து குறித்தவண்ணமிருந்தனர். அறிவகம் நாடிவந்து அன்புரை பகன்று, ஆற்றலறிவோம்! கொள்கையின் நேர்த்தியும் தெரியும்! எனினும் குடியரசுத் தலைவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் - அவருக்குக் கருப்புக்கொடி பிடிக்காதீர்கள்! என்று கூறிக் கொஞ்சியோர் பலப்பலர் - மேலதிகாரிகளும் கூடத்தான்!!

இங்குள்ள இதழ்கள் மட்டுமல்ல, வடநாட்டு இதழ்கள் யாவும், இந்தச் செய்தியை வெளியிட்டன; வெளிநாட்டு இதழ் களிலே என்ன வந்துள்ளன என்பது எனக்கு இனித்தான் தெரிய வேண்டும்; எங்கும் ஒரே பரபரப்பு, தம்பி! உன் ஆற்றலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்! அன்றைய மாநாடு, ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்ததோர் அருமையான காட்சி என்பதையும் உணர்ந்தனர். எனவே, எப்படியும் மனதினைத் தொட வேண்டும், விபத்தை நீக்கிக்கொள்ள வேண்டும், இன்மொழி பேச வேண்டும், இன்னல் ஏற்படாமல் தடுத்துவிட வேண்டும், என்பதற்காகப் படாதபாடு பட்டார்கள்.

"பசப்பு! அண்ணா! பசப்பு! எல்லாம் வெறும் ஏமாற்று வித்தை! நமது திட்டத்தை முறியடிக்கும் சதி! இனிப்பாகப் பேசினால் மனம் இளகும் என்பதறிந்து மேற்கொள்ளப்படும் முறை இதைக் கண்டு நாம் ஏமாறக்கூடாது'' என்று கூறிடும் தம்பிமார்கள் ஏராளம். கூறினர். செயற்குழு கூடும்போதுகூட அறிவகம் வந்தனர்; பசப்பு மொழி கேட்டு போரை நிறுத்த வேண்டாம்! என்று உரிமையுடன் கூறினர்; உவகையுடன் கேட்டுக்கொண்டுதான் உள்ளே சென்றேன்.

தம்பி! மாற்றாராயினும் உற்றாராயினும், பேசுவது எவ்வகையானது என்பதனையும், நோக்கம் யாது என்பதனையும், அதனை எந்த அளவு, எந்த முறையில், எந்தச் சமயத்தில், கவனிக்க வேண்டும், என்பதையும் அறிந்தவன்தான் உன் அண்ணன் என்பதை நினைவுபடுத்தவா வேண்டும்.

கொஞ்சுமொழி கேட்டுக் கொள்கையை விட்டுவிடுவது என்றால், கொள்கையே இந்த அளவு உரம் பெற்றிருக்காது.

இனிமை மொழி கேட்டு கொள்கை விட்டுவிடுவதென்றால், கோகிலகான M.S. சுப்புலட்சுமி "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய போதே, கொள்கையை விட்டு விட்டிருப்போம்.

பசப்பு மொழி கேட்டு, கொள்கையை விட்டுவிடுவ தென்றால், வடக்காவது தெற்காவது! திம்மையா, யார்? கட்டாரி யார்? டாக்டர் இராதாகிருஷ்ணன் யார்? கிருஷ்ணமேனன் யார்? - என்றெல்லாம் பேசிக் காட்டினரே, அப்போதே, கொள்கையை விட்டுவிட்டிருப்போம் அல்லவா?

நாம் எடுத்துக்கொண்டுள்ள கொள்கையும், அதற்கான திட்டமும், அச்சமூட்டியோ, பசப்புக் காட்டியோ ஒழித்துக் கட்டிவிடக் கூடியன அல்ல; அடக்குமுறை எனும் நெருப்பாற்றில் நீந்திச் செல்ல நேரிடினும், வெந்து நீரானவர்கள் போக மீதமுள்ளோர், இலட்சியப் பயணத்தை மேற்கொள்வர்.

இதை அறிந்திருக்கிறாய், எனினும், தம்பி! அறப்போர் நடாத்தி உன் ஆற்றலைக் காட்டிடும் வாய்ப்புப் போய் விடுகிறதே என்ற ஆயாசத்தால், அண்ணன் எங்கே பசப்பு வார்த்தை கேட்டு உறுதியைத் தளர்த்திக்கொண்டு விடுவானோ என்று ஐயம் கொள்கிறாய்.

இதிலே, உன் ஐயத்தைவிட, உனக்கு உள்ள பேரார்வம் இருக்கிறதே, அதை நான் பெரிதும் மதிக்கிறேன் - அந்த ஆர்வம் கொண்டவர்களை வாழ்த்துகிறேன். கோடம்பாக்கம் மாநாட்டில் நான் கூறியபடி, "பேரார்வம் பொங்கிடும் நிலையில் உள்ள படை வரிசை கண்டும், போரிட வழி தராமல் இருக்கும் தலைவனாக இருப்பது, போரிட அழைக்கும் போது, போரிடப் படை வீரர்கள் முன் வராது இருப்பதைக் காணும் தலைவனாக இருப்பதைவிட, மேலானது, மகத்தானது, பெருமைக்கு உரியது.''

போர் இல்லை!

ஏன்? போர் நடாத்த வீரர் இல்லை!

தம்பி! இதுதான், கேவலம், இழுக்கு.

போர் இல்லை!

ஏன்?

இப்போது தேவையில்லையாம்?

யார் கூறுவது?

அவர்தான் போரிட ஆர்வம் காட்டியவரேதான்.

தம்பி! இதிலேதான், மாற்றாரே கண்டு மருளத்தக்க, வலிமைமிக்க, உண்மையான பெருமை, சிறப்பு இருக்கிறது.

கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப் படாமல்! - இப்படி ஒரு நிலை.

அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழி லிடத்தில் - ஆனால், கட்டித் தங்கம் இல்லை! - இப்படி ஒரு நிலை.

தம்பி! இந்த இரு நிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!!

நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர - களம் புக! ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது.

களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்! - என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர். ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை என்று வைத்துக்கொள் - எப்படி இருக்கும் அந்த நிலைமை!!

அதுபோலத்தான், தம்பி! இந்த அண்ணன் இப்படித்தான், அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்து நிற்கிறோம், திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார் - செ! என்ன ஏமாற்றம்! எத்துணை மனச் சங்கடம்! - என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.