அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மூலவர் மூவர் முரசொலி...
2

கருப்புக் கொடி காட்டவேண்டாமாமே?

ஆமாம்! செயற்குழு முடிவு!

எவ்வளவு ஆசையாக இருந்தோம்!

என்னென்ன எண்ணிக்கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி!

செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான் முடிவு செய்தது. ஐந்து மணி நேரம் நடந்ததாம்.

தம்பி! நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல்.

கருப்புக் கொடி இல்லையாம்.

ஏன்?

அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்!

இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்; உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?

கருப்புக் கொடி இல்லையாமே!

ஏன்?

எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே!

அதென்ன விஷயம்?

இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள், இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திரபிரசாத், இங்கு வந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக்கொண்ட படியே, இங்கு வருவதற்கு முன்பே, ஹைதராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார்.

என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்?

என்ன விளக்கம் வேண்டுமென்று, தீனா மூனாக்காரர் கேட்டார்களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம் என்று விளக்கம் கொடுத்தார்.

பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!!

ஆமாம், நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்...

ஆனால் என்ன...

இவர் பேசினார்! நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார்!

கடிதமா! அவரா? இதுகளுக்கா?

ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம், காங்கிரசுக்கு தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக்கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்க வேண்டும்'' என்று.

எப்போது எழுதினான்?

ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!

பாரேன், துணிச்சலை. ஆகஸ்ட் ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு. மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டிருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒரு புறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர்புறம். இவைகளைக் கவனிப்பாரா, இந்த கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா?

நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். இது களுக்காவது, நேருவாவது, கடிதம் எழுதுவதாவது! அவர் பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன, பெரிய மனிதர்களா!! - என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல், முகத்தில் கரிபூசிக்கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன்.

ஆனால் நேரு, பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே!

வெட்கம் பிய்த்துத் தின்கிறது. என்ன செய்வது? சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பெயர், பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!!

கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடாமலா இருப்பார்கள்?

நமக்குள்ளே பேசிக்கொண்டால், என்ன தப்பு. வெற்றி தான்! இராஜேந்திர பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்த வல்லபபந்த். அவர், பார்லிமெண்டில் பேசுகிறார், இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம், - என்றெல்லாம்; நேரு கடிதமே போடுகிறார்.

எல்லாம் இந்தப் பயல்கள் கருப்புக் கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!
- அதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது.
சாதாரண சமயத்திலே பேசட்டும், கடிதம் போடட்டும், அது ஒன்றும் பிரமாதம் அல்ல; அது எங்கள் தலைவர்களின் பெருந் தன்மையைத்தான் காட்டுகிறது என்று கூறிக்கொள்ளலாம்; நாலு பேரையும் நம்ப வைக்கலாம். விளக்கம் கொடு, இல்லாவிட்டால் கருப்புக் கொடி என்று மிரட்டுகிறான்; அப்பா! அப்பா! இதோ இந்த விளக்கம் என்று இராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறான் சம்பத்; உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார் நேரு! நினைத்தாலே, வெட்கமாக இருக்கிறது.

கருப்புக் கொடிக்குப் பயந்துகொண்டுதான், உங்கள் தலைவர்கள், பந்த், நேரு, பிரசாத் மூவரும், விழுந்தடித்துக் கொண்டு, விளக்கம், உறுதிமொழி, கடிதம், தருகிறார்கள். நீ கேலியாகப் பேசினாயே, கருப்புக் கொடி பற்றி, பார்த்தாயா, உன் தலைவர்கள், அடிமுதல் முடிவரை கிடுகிடுத்துப்போனதை என்று கழகத்தான், கேட்பானா மாட்டானா?

கேட்பானய்யா கேட்பான். நமது தலைவர்கள் செய்து விட்ட காரியத்துக்கு, இதுவும் கேட்பான், இதற்கு மேலும் கேட்பான். நம் தலை எழுத்து, கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

அட, குமாரபாளையத்திலே கூடி என்னமோ தீர்மானம் போட்டு அனுப்பிவைத்தார்களே, அப்போது இந்த இழவு விளக்கம், உறுதிமொழிக் கடிதம், இதை அனுப்பி இருக்கக் கூடாதா, நம்ம தலைவர்கள். அப்போதெல்லாம் கல்லுப்பிள்ளையார்போல் இருந்துவிட்டு...

நான்கூடச் சந்தோஷப்பட்டேன். இந்தப் பயல்கள் தீர்மானம் போட்டு அனுப்பினால் சட்டை செய்வார்களா!! பார்! பார்! இதுகள் அனுப்பிய கடிதத்தை, எங்கள் தலைவர்கள், குப்பைக் கூடையிலே தூக்கி வீசினார்கள் என்றெல்லாம் பேசினேன்.

நான்கூடத்தான் பேசினேன். இப்போது? கருப்புக் கொடி காட்டுவோம் என்று மிரட்டியதும், மூலவர்கள் மூன்று பேரும், போட்டி போட்டுக் கொண்டு, காட்டாதே! காட்டாதே!விளக்கம் தருகிறோம்! உறுதிமொழி தருகிறோம்! கடிதம் இதோ! என்று நடந்துகொள்கிறார்கள்.

நாம் பேசுகிறோம், வீராவேசமாக! கழகம் கால் தூசு! இதை எவனும் மதிக்கமாட்டான், கழகம் சொல்லும் போர் வெறும் புஸ்வாணம் என்று...

ஆமாம்! நம்ம தலைவர்கள் அப்படி இல்லையே! அவர்களை மிரட்ட, புஸ்வாணமே போதும்போல் இருக்கிறதே.

கழகக்காரர்கள், நேரு கடிதத்தை, படம் போட்டல்லவா, வைத்துக்கொள்வார்கள்!

ஆமாம்! நாம் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போதெல்லாம், எடுத்து வீசுவார்கள் நமது முகத்தில்.

கழகத்துக்கு வெற்றி தேடித் தருகிறார்கள் - நமக்குக் கேவலத்தை உண்டாக்குகிறார்கள் நமது தலைவர்கள்!

ஆமாம் ஆமாம், நமது... தலை...வர்கள்... செ! வெட்கம் பிய்த்துத் தின்கிறது.

காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி! மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின்னொருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர, ஆவலும், அவசரமும் காட்டியது வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை.

கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது, சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது. நாதி ஏது? என்று பேசுவார்களே, சில கதராடைகள், அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்?

கருப்புக் கொடி காட்ட, ஆதரவு தராதீர்!

என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று இருந்துவிட்டிருக்க வேண்டும்.

கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால்தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக் குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும்? கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகையிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா என்பதுகூடச் சந்தேகம்.

அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி! நீ, களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!!

தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள்.

குடியரசுத் தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக!

ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைப்பற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.

குடியரசுத் தலைவர் ஆணையில், மாற்றம் தேவை என்றால் எடுத்துச் சொல்லுங்கள்.

மாற்றம் ஏற்பட, நான், மத்திய சர்க்காருடன் வாதாடுகிறேன், போராடுகிறேன்.

என் சர்க்கார் இதற்குத் துணை நிற்கும் என்று நான் சத்தியம் செய்து கொடுக்கிறேன்.

தம்பி! இவையெல்லாம், கழகத்தைக் கண்டதுண்டமாக்க வல்ல வீராதிவீரர் என்கிறார்களே, அந்தச் சுப்ரமணியனார் இருக்கிறாரே(!!) அவர் திருவாய் மலர்ந்தருளியவை!!

அவருடைய வாழ்நாளிலேயே, இதற்குமுன் எப்போதும் காட்டாத அளவு, பணிவு, குழைவு, கனிவு ததும்பும் முறையில் பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டிப் பேசினார். இத்தனைக்கும் அவரிடம் இப்போது போலீசுத் துறையும் விடப்பட்டிருக்கிறது.

எனவே, தம்பி! கோடம்பாக்கத்தில், நீ எடுத்த சூளுரை வெற்றியை, அவர்களே, நம்மைத் தேடிக் கொண்டுவந்து தர வைத்திருக்கிறது.

இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்த பெருமை,

நேருவின் வாக்குறுதி காற்றிலே போய்விடாமல், உறுதிப் படுத்தப்பட்ட அருமை,

நம்மை அடக்குமுறை காட்டி ஒடுக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் அறிந்து கொண்டுள்ள அரிய உண்மை,

இவ்வளவும், நீ, காட்டுவேன் கருப்புக் கொடி என்று முழக்கமிட்டதிலேயே கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றிதான், உன்னைப் புன்னகை புரிய வைக்கிறது.

அறப்போர் நடத்துவதிலே உள்ள ஆர்வம், செயல்பட வழி ஏற்படாமல் போனதால், பொய்க்கோபம் எழுகிறது.

குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக்கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள்வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால், எவரும் மகிழ்ச்சி கொள்வர், வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.

ஏடுகள் சில, இந்த வெற்றி கண்டு, காங்கிரசார் கலக்க மடையாது இருக்க வேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக்கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப் படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை! வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி!

அண்ணன்,

7-8-1960