அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முள்ளு முனையிலே...
1

மறவனும் மறத்தியும் -
சட்டசபையில் 15 தி. மு. க. -
தமிழ்நாடு அரசின் திட்டங்கள்

தம்பி!

"புலிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி; அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம் கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்.''

தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? "ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ, ஒரு நாட்டுக்குத் தேவை! அத்தகையவர் இருந்தாலன்றோ, மாற்றார் அந்த நாட்டினைக் கண்டு மருண்டிடுவர்!'' - என்று பேசிடத் தோன்றும். உள்ளத்திலே ஒரு எழுச்சி ஏற்படும்! கண்களிலே புது ஒளி காணப்படும்! உரையிலே உவகை ததும்பிடும்!

ஓவியம் தீட்டுவோமா, காவியம் இயற்றுவோமா, கவிதை பாடுவோமா, காட்சியாக்கிக் காட்டிடுவோமா என்றெல்லாம் விருப்பம் எழும்.

"இதுபோலத்தான்' என்று துவக்கி, மாவீரர் காதை, மண்டலம் வென்ற தீரர் வரலாறு, மாற்றாரைக் கண்டதுண்ட மாக்கிய ஆற்றல் மிக்கவன் பற்றிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கூறிடப் பலர் முன்வருவர்.

நமக்கு இல்லையே அந்த ஆற்றல்? - என்று சோகித்துக் கொள்வர் சிலர். அவன் என் ஆருயிர்த் தோழன் என்று சொந்தம் கொண்டாடிக்கொள்வர் மற்றும் சிலர். "அவன் இயற்கையிலே அத்துணை ஆற்றல் படைத்தவன் அல்ல, சூழ்நிலை அவனை அவ்விதம் ஆக்கிவிட்டது'' என்று விளக்கம் கூறுவர் இன்னும் சிலர். பல்வேறு முறையாகப் பேசிக்கொண்டாலும், ஊடே மணிகளைச் சேர்த்திடும் இழைபோல, மகிழ்ச்சி, பெருமை எனும் உணர்ச்சி காணப்படும், அல்லவா?

"இது என்ன அண்ணா! கேள்வி! வீரச்செயல் குறித்துக் கேள்விப்பட்டால், எவர் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படத்தானே செய்யும், இயல்பாகவே! இதைக்கேட்டுத்தானா தெரிந்துகொள்ளவேண்டும்!'' - என்று கூறுகிறாய். புரிகிறது, ஆனால் தம்பி! மேலும் கூறுகிறேன் கேள்.

கேட்போர் மனத்திலே எழுச்சி ஊட்டத்தக்க விதமான வீரச்செயல் புரிந்திடுபவனை, எவரும் மெச்சிடுவர் - மெச்சிப் பேசுவது தவறுமல்ல - தேவையுங்கூட.

ஓங்கி வளர்ந்த தென்னை - ஒய்யாரமாக நின்றிடும் தென்னை! நிலவொளி, கீற்றிலே படும்போது ஓர் தகத்தகாயம் தெரியும். அப்படிப்பட்ட தென்னை தரும் பானம் இது - என்று, தம்பி! இளநீரையும் கூறலாம், கள்ளையும் கூறலாமல்லவா!! இரண்டிலே, எது விரும்பத்தக்கது என்பதற்கு விளக்கமா வேண்டும்! இரண்டும், ஒரே தென்னை தருவதுதான். எனினும், கள்ளை வெறுத்திடத்தானே வேண்டும். கள், கூடத் தம்பி, தொழிலறிந்தோர் கூறுகின்றனர், பாளை சீவிப் பானையில் துளிகளைத் தேக்கினால் உடனே அது கள்ளாகிவிடுவதில்லை; இனிப்புச் சாறாக மட்டுமே இருக்குமாம்; வேறோர் முறையின் மூலமாகவே இனிப்புச் சாறு, மனிதனை மிருகமாக்கிடத்தக்க போதைதரும் கள் ஆக்கப்படுகிறது.

தென்னை தருவதுதானே என்பதால், கள் விரும்பத்தக்கது ஆகிவிடாது. அதுபோலவேதான், தம்பி! செயல், வீரதீர மிக்கது என்பதால் மட்டுமே, பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத் தக்கது என்று கூறிவிடமுடியாது.

நான் காட்டினேனே, கல்லெறிக்கும் வேல் வீச்சுக்கும் அஞ்சாது, எதிர்ப்புக்கண்டு கலங்காது, அகழி கடந்து, சுற்றுச் சுவரைத் தாண்டி, ஓடினவன் - அவன் போற்றத்தக்கவனா அல்லவா என்பது, அவன் காட்டிய திறமைகளை மட்டும் கவனித்தால் விளங்கிவிடாது - ஆற்றல் மிக்கோனாக, எதிர்ப்பட் டோரை வீழ்த்துவோனாக, எந்த இடர்ப்பாட்டையும் கண்டு கலங்காதவனாகத் தெரிகிறானே, அவன், யார்? எந்தக் காரணத்துக்காக அவன் அதுபோல நடந்துகொண்டான்? விளைவு என்ன? என்பதைப் பொறுத்துத்தான், போற்றத் தக்கவனா அல்லவா என்பதுபற்றி முடிவுசெய்ய இயலும். அதுதான் முறை.

செங்கிஸ்கான், தைமூர் போன்றோர்கள், அழித்த நகரங்கள் ஏராளம்! கொன்று குவித்த மக்கள்தொகை மிக மிகுதி! பெருங்காற்றுக் கிளம்பினால் அழிந்திடும் பூங்காபோல, பெரு நெருப்புப் பிடித்துக் கொண்டால் சாம்பலாகும் எழிலூர்போல, செங்கிஸ்கான், தைமூர் போன்ற கொடியவர்களின் கோபப் பார்வை பட்டதால் மட்டுமே, பாழாகிப் போயின பேரூர்கள், சிற்றூர்கள்; எனினும், அவர்களை, வீரத்தின் சின்னமென, விருதுபெறத்தக்கோரென, அறிவாளர் கூறார். இயற்கை சில வேளைகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் இவை என்றே கூறுவர்.

ஆயினும், தம்பி! போர் முறைகளிலே, அவ்விருவரும் வல்லவர்கள்! புது முறைகளைக்கூடக் கண்டவர்கள்! மிகப்பெருங் கூட்டத்தைச், சிறுபடை கொண்டு, சின்னாபின்ன மாக்குவதிலே சமர்த்தர்கள்! பீதி கிளப்பியே அரசுகள் சிலவற்றை அழித் தொழித்தவர்கள். "நட!' என்று அவர்கள் கட்டளையிட்டதும், ஏன் என்று கேட்கவோ, எவ்வழி? என்று விசாரிக்கவோகூட முடியாத நிலையில், படையினர் பாய்வர்! "விழு,' என்று உத்தரவு பிறந்தால், எதிரே தெரிவது கரை புரண்டோடும் பெருவெள்ள மெனினும், கதி யாது? என்று எண்ணிடாமல், வீழ்வர்! "வெட்டிவா தலைகளை' - குருதி சொட்டச் சொட்ட, தலைகளைக் கொண்டுவந்து, தாளின்கீழ் கொட்டுவர்!!

ஆக, படை அமைத்திட, படையினரிடம் அதிகாரத்தைப் புகுத்திட, முறை வகுத்திட, திறன் இருந்தது அவ்விருவரிடமும். எனினும், போர்முறை பலவற்றைக் கண்டறிந்து அளித்த ஆசான்களாக அவர்களை, அவனியில் எவரும் ஏற்றுக் கொண்டாரில்லை. எனவே, வீரதீரம், அறிவாற்றல், திறமை எனும் எதனையும், பெற்றவர் எவர் என்பதைப் பொறுத்தும், பெற்றதனால் விளைந்தன யாவை என்பதைப் பொறுத்தும் தான் மதிப்பிட வேண்டுமேயல்லாமல், ஆஹாஹா! வீரதீரம் இருந்தவாறென்னே! அறிவாற்றலை என்னென்பது! திறமை இஃதன்றோ! என்று விளைவு அறியாது, பாராட்டிடக்கூடாது. ஆனால், கேட்டவுடன், பாராட்டலாம்போலத் தோன்றும். துவக்கத்திலே நான் காட்டினேனே, மயிர்க் கூச்செறியத்தக்க விதமான வீரச் செயலாற்றியவனை; அவன் போன்றாரின் "காதை'யைக் கேட்டதும், பாராட்டிடத்தானே தோன்றும்.

புரவிமீதமர்ந்து அடவி சென்றானே, ஆற்றல் மிக்கோன் - அவனைக் காண்போம், தம்பி! கருத்துத் துலங்கிட.

வேகமாக வருகிறது குதிரை! வேலேந்திகள் வெருண்டோடு கின்றனர்! விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் இயலாத நிலை! தலைவிரிகோலம்! கரங்களில் விலங்கு! இந்நிலையில் உள்ளாள் மூதாட்டி. காவல் புரியவந்த வீரர்கள் ஓடிடுவதையும் கடுகிவரும் குதிரைவீரனையும் காண்கிறாள்; கண்ணீரால், பார்வை சிறிதளவு தெளிவற்று இருக்கிறது! உற்றுப் பார்க்கிறாள், முகம் மலருகிறது, "மகனே! என் அருமை மகனே!' என்று கூவுகிறாள்.

"அம்மா! அம்மா! என்னை ஈன்றவளே! என்னை ஆளாக்கி விட்ட அன்னையே!'' என்று குதிரை வீரன் கதறுகிறான்; காலடி வீழ்கிறான்; கண்ணீரால் அவள் காலடியைக் கழுவுகிறான்.

அவன் முகத்தைத் தன் இரு கரங்களில் வைத்துக் கொண்டு, தாய் பெருமிதம் கொள்கிறாள்.

இந்த இன்பம் கிடைக்குமென்று, நான் துளியும் எண்ணினேனில்லையடா, மகனே! கடைசி முறையாக ஒரு கணம், என் கண்குளிர உன்னைக் காணவேண்டும், அப்போதுதான் நிம்மதியாகச் சாகமுடியும் என்று நினைத்தேன். என்னையோ கொலைக்களம் இழுத்துச் செல்கிறார்கள். உன்னையோ, சிறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்கள். உன்னை எப்படி, இந்தப் பாவி காணமுடியும்! - எனக்குக் கிடைக்காது அந்த வாய்ப்பு! - என்று எண்ணினேன் - ஏக்கம் தாக்கிற்று. ஆனால், மகனே! இதோ இணையில்லா இன்பம்! நான் பெற்றெடுத்த செல்வத்தைக் கண்குளிரக் காணும் இன்பம்! இனி, என்னை, மகனே! கொடியவர்கள் கொன்று போடட்டும். கழுகுக்கு இரையாக்கட்டும், கனலோ புனலோ, கடுவிஷமோ, கட்டாரியோ, தூக்குக் கயிறோ, சித்திரவதையோ, எம்முறை அவர்களுக்கு விருப்பமோ அம்முறையில், என்னை அழிக்கட்டும், கவலையில்லை! உன்னைக் கண்டேன். அந்தக் களிப்பு என் இதயத்தில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், மரணம் எனக்கு வேதனை தராது.

அவ்விதம் அகங்குழைந்து பேசிய அன்னையின் தாளை வணங்கி, அந்த மாவீரன், "என்ன வார்த்தையம்மா சொன்னீர்கள்! என் உடலிலே உயிரும், கரத்திலே வாளும் உள்ளவரையில், படையே வரினும், தொடவிடுவேனா தங்களை! என்னைப் பிணமாக்கிய பிறகல்லவா, கொடியவர்கள் உன்னிடம் நெருங்க முடியும். சிறைக்கம்பிகளைப் பெயர்த்துவிட்டு, சீறும் புலிகளை விரட்டிவிட்டு, நான் ஓடோடி வந்தது, "போய் வா, தாயே! கொலைக்களத்துக்கு!'' என்று கூறி, வழி அனுப்பவா! அன்னையே! வீரதீரமும், தியாகமும் கலந்தல்லவா, பாலூட்டி வளர்த்தீர்கள்!'' என்று கேட்கிறான்.

அடவியிலே, இதுபோன்ற காட்சி கண்டிடின், தம்பி! அவன் வீரர் கோட்டத்துக்கு ஏற்றவன், வழிபடத்தக்கவன் என்று கூறலாம்; கூறிட எவரும் தயங்கார்.

அந்தவிதமான காட்சியாக இல்லாமல், அடவியில் ஓர் குகை; அதன் அருகே சென்று, அவன், உள்ளே நுழைகிறான் என்று வைத்துக் கொள், தம்பி! அவனைக் கண்டதும், அலறித் துடித்தபடி, ஒரு அபலை நிற்கிறாள். அவன் "இடி இடி'யெனச் சிரிக்கிறான். அவள் உடல் படபடவெனத் துடிக்கிறது.

"சிறையில் தள்ளிவிட்டோம் - செத்தொழிவான் அல்லது நடைபிணமாகிவிடுவான் - என்று எண்ணிக் கொண்டா யல்லவா? இதோ பார்! நன்றாகப்பார்! உற்றுப்பார்! கண்களில் பழுது இல்லை அல்லவா! பார்! நான்தான்! ஆமாம்! பிடித்திழுத்துச் செல்லுங்கள் பேயனை என்று கூறி, நான் பிடிபட்டது கண்டு பெருமிதம் கொண்டாயே, அதே ஆள்தான், நன்றாகப் பார்த்துக் கொள். உன் கண்ணீரைக் கண்டும், கூக்குரலைக் கேட்டும், என்மீது பாய்ந்தனர், பலர்! தாக்கினர் ஈட்டியால், வாளால், வேலால்! பிடிபட்ட புலியைக் கூண்டிலடைத்த பிறகு, மாடோட்டும் சிறுவன்கூடக் கோல் கொண்டு குத்திக் குறும்பு செய்து சிரிக்கிறான்! என்னைப் பிடித்தவர்களோ, களம்பல கண்டவர்கள்! அரச ஆணையால் வலிவுபெற்றவர்கள். சிறையில் தள்ளினர்! கருங்கற் சுவர்கள்தான், காரிகையே, கருங்கற்சுவர்! இரும்புக் கம்பிகள்! எப்புறம் திரும்பினாலும் காவலர்கள்! இரவுபகல், எந்த நேரத்திலும் கட்டுக்காவல்! அவர்கள் என்னைப் பூட்டிவைத்தது, அத்தகைய சிறையில்தான்! விடுதலை தந்துவிடவில்லை! என் வல்லமையால், வெளியேறினேன்! தடுத்தனர், தாக்கினேன்! தாக்கினர், தப்பினேன்! துரத்தினர், பிடிபடவில்லை. வேல் எறிந்தனர், எடுத்தேன், ஒடித்தேன், இதோ இங்கு நிற்கிறேன்! நன்றாகப்பார்! நானேதான்!'' என்று அவன் பேசுகிறான், அந்த மாது மிரளுகிறாள்.

காட்சி இதுபோல் எனின், என்ன தோன்றும் உனக்கு, அவனைப்பற்றிக் கூறிட?

அவன் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும், பாராட்ட வேண்டும்போல் தோன்றுகிறது.

அவன், அந்த மாதிடம் பேசுகிறான் - அவளோ திகைக்கிறாள்.

அவளிடம் அவன் பேசுவதிலிருந்து, அவனைப் பிடிபட வைத்தது, அந்த மாதுதான் என்பதும், சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், அவளிடம் வந்து நின்று மிரட்டுகிறான் என்பதும், அவனால் அதுபோது, அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில், அவனைப் பற்றி என்ன எண்ணத் தோன்றுகிறது. உனக்கு உடனே, கூறிவிடாதே, தம்பி, அவ்வளவு எளிதல்ல!

"பிடிபட்டேன் - என் வல்லமையால், விடுபட்டேன்'' என்கிறான். பாராட்டத்தக்க ஆற்றல் இருக்கிறது இவனிடம் என்பது தெரிகிறது. அந்த வகையில், அளவில், அவன் பாராட்டப்பட வேண்டியவன்.

சிறையிலிருந்து தப்பி வந்தவன், கொலைக்களம் இழுத்துச் செல்லப்படும், தாயைக் கண்டு, அவளைக் காப்பாற்றத் தன்னையே அர்ப்பணிக்க உறுதிக் கொண்டதாகக் கூறுவது போன்றது, காட்சியாக இருந்திடின், அவன் பெருவீரன் என்று பெருமிதத்துடன் கூறலாம்; அவன் மிதித்த மண் மணம் பெறும் என்று கவிதை பாடலாம்.

அவன் காண்பது கொலைக்களம் கொண்டு செல்லப்படும் தாய் அல்ல, குகையிலே இருக்கும் ஒரு மாது; அவள் பேசுவது மகன் என்ற பாசத்தால் அல்ல, பிடித்துக் கொடுத்தவள் இவள் அல்லவா என்ற கோபத்தோடு பேசுகிறான் என்பது தெரிகிற போது, அவனைப் பற்றி என்ன கூறப்போகிறாய்! அவன் வீரதீரத்தை, ஆற்றலை அஞ்சாமையைப் பாராட்டப் போகிறாயா?

காடு! குகை! அங்கு ஓர் அபலை! அவளிடம் அச்சமூட்டும் முறையில் பேசுபவனைப் பாராட்ட முடியுமா! அவன் ஆயிரத்தெட்டு அகழிகளைத் தாண்டினவனாக இருக்கட்டும்! நூற்றெட்டுக் கருங்கற் சுவர்களைத் தாண்டிக் குதித்தவனாக இருக்கட்டும்! எதிர்ப்பட்டோரைக் கொன்று குவித்தவனாக இருக்கட்டும்! இருந்தாலும், அவன் ஓர் மாதிடம், உருட்டி மிரட்டிப் பேசுவது கண்ட பிறகு, அவனை வீரனென்றா கூற முடியும்? கொடியவன் என்றல்லவா கண்டிக்கவேண்டும்! சிறை கடந்தவன் என்றா பாராட்டமுடியும், ஏய்த்துவிட்டு ஓடி வந்த கைதி அல்லவோ அவன்! - என்று கூறுவாய் - கூறத் தோன்றும்; ஆனால் அவசரப்பட்டு அவ்விதமும் கூறிவிடாதே. முழு உண்மை, உனக்குத் தெரிந்துவிட்டதா? குகை தெரிகிறது, மாது காண்கிறாய், அவளிடம் மருட்டிப் பேசுபவனைக் காண்கிறாய். அதுபோதுமா, உண்மையை உணர்த்த? போதாது!

உண்மை முழுவதும் தெரியவேண்டுமானால், "என்னைப் பிடித்துக் கொடுத்தாய் - சிறையில் அடைத்தனர் - இதோ நான் தப்பி ஓடி வந்திருக்கிறேன்'' என்று பேசுபவனையும், அவன் பேசக்கேட்டுக் குகையிலே நின்றிருக்கும் மாதையும், பார்த்தால் மட்டும் போதாது; அவர்கள் யார் என்பதும் தெரிந்தால்தான் உண்மை துலங்கும்.

"ஏழை எளியோரை வாட்டி வதைக்கிறான் மன்னன்! அவன் அருகிருந்து, அறம் அழிக்கின்றனர், அவனால் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கும் ஆள் விழுங்கிகள்! இந்த அக்கிரம அரசு இருக்கும் வரையில், விளைவது உழுபவனுக்குக் கிடைக்காது, வீணர் கொழுப்பர்; விவரமறியாதார் விவேகிகள் என்ற விருது பெறுவர், நாடு நாசமாகும், நல்லோர் மறைவர் என்பதை உணர்ந்தேன். இந்த அரசை அழித்திடத் திட்டமிட்டேன். காடுகளைக் கூடாரமாக்கிக்கொண்டேன்! கூனர்களை நிமிரச் சொன்னேன்! விழி திறந்திருந்தும் காணாது இருந்தவர்களைக் காணச்செய்தேன்! ஊமையரல்ல, உள்ளத்தில் பட்ட உண்மையை எடுத்துக் கூறுங்கள் என்றேன். பாமரரைப் படை வீரராக்கினேன்! நான் வாழ அல்ல. நாடு வாழ! செல்வம் தேடிட அல்ல, சீரழிவைத் தடுக்க. மாதரின் கற்புக்கு ஆபத்து ஏற்படக் கூடாதே! மாதாவிடமிருந்து மகனைப் பிரிப்பது மாபாவமாகுமே! உழைப்பவனை உருக்குலையவைப்பது ஊராளும் முறை அல்லவே! என்பதால். அரசுக்கு எதிராக வேலை செய்தேன். என்னைப் பிடித்திட என்னென்னவோ திட்டமிட்டனர். தோற்றனர்! எவரெவரையோ ஏவினர், வெற்றி கிட்டவில்லை! ஓயாத உழைப்பு, நோய்வாய்ப்பட்டேன் - இங்கு வந்தேன், அடைக்கலம் என்று. படையால் பிடித்திட முடியவில்லை, என்னை; பாவிமகளே! படுத்துக் கிடந்தேன் உணர்வற்று அந்த நிலையில் பத்தாயிரம் பொன் பரிசு தருவார்கள் என்று ஆசைப்பட்டு, உளவு கூறி, என்னைப் பிடித்துக் கொடுத்தாயே! நீ பெண்தானா!!' - என்று அவன் பேசிடக் கேட்டால், அவனை மாவீரன் என்று மட்டுமல்ல, விடுதலை வீரன், வீரத்தியாகி என்றெல்லாம் பாராட்டவும், அவனைக் "கள்ளி' என்று இடித்துரைக்கவும், "வீரத்திலகமே! இந்த மாபாவி நின்றிருக்கும் மண்ணில் உன் கால்படுவதுகூடத் தகாது! வா, வீரனே, வா! எமது இதயத்தைப் பெயர்த்தெடுத்து, மாலையாகத் தொடுத்து உனக்கு அணிவிக்கப் போகிறோம். மக்கள் மன்றம் வா! மாண்பு மிக்கவனே! நீ வாழும் நாட்களிலே, நாங்கள் வாழ்கிறோம் என்பதொன்றே எமது நெஞ்சை விம்மிடச் செய்கிறது'' என்றெல்லாம் பேசிடச் செய்யும் - பேச வேண்டும்.

அதுபோலத்தான் பேசப்போகிறேன் என்று துவக்கி விடாதே, தம்பி! இப்படி இருந்தால், எப்படிப் பேசவேண்டி நேரிடும் என்பதையும் எண்ணிப்பார்.

"அடி கள்ளி! அரண்மனையில் தவழும் அன்னங்கள் எல்லாம், என் கண்ணடிக்குப் பலியாக வீழ்ந்தன - நான் தொட்டேன், மகிழ்ந்தன! காட்டுமல்லிகை நீ! பாட்டுமொழி பேசினேன் உன்னிடம்; நீ பணிய மறுத்துவிட்டாய். அங்கம் தங்கம், என்னை ஆரத்தழுவிய ஆயிரம் ஆரணங்குகளுக்கு! கருநிறம் உனக்கு! உழைத்துப் பிழைக்க வேண்டியவள் நீ! நீ மறுத்தாய், என் மஞ்சம் வர!! சந்தனக்கட்டையாலான காலணி போட்டுக்கொண்டு, சப்பாத்திக் கள்ளிக்காக, காடு அலைவாரில்லை. நானோ சரசாங்கிகளின் சல்லாபத்தை, போதும் போதும்! என்று கூறிவிட்டு, உன்னைத் தேடிவந்தேன். மாடப்புறாவே, மடமயிலே, மாதுளைக் கொத்தே, மனமகிழ் மலரே, காதளவோடிய கண்ணினை உடையாய், காற்றினில் ஆடிடும் கவின் மலர்க்கொடியே! - என்றெல்லாம் எவளிடமும் நான் பேசினதில்லை. எவர் பேசியும் நீ கேட்டிருக்கமாட்டாய். பேசத் தெரிந்தவனுக்கும், உன்னைக் கண்டால் பேசத்தோன்றாது - எனினும், அதுபோலெல்லாம் பேசினேன் - நீ என்னை அடித்து விரட்டினாய்! துடிக்கத் துடிக்க உன்னை... முடியும் என்னால்... ஆனால் கசக்கி முகர்ந்தால், மலர் மணம் ஏது என்று காத்திருந்தேன் - நீயோ, மன்னனிடம் மண்டியிட்டு அழுது, என்னைக் "குற்றவாளி' ஆக்கி சிறையிலும் தள்ளி விட்டாய். இப்போது!! எங்கே சிறைச்சாலை! எங்கே காவலர்கள்! மன்னன் ஆணை மண்ணாகிறது! மாதே! கற்பு கற்பு என்று விக்கிவிக்கிப் பேசுவாயே, அது என்ன ஆகப்போகிறது பார்! சிறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார்கள், இனி அவன் நம்மை என்ன செய்யமுடியும் என்று, சிறுமதி கொண்டவளே, மெத்தத் தைரியமாக இருந்திருக்கிறாய், இனி?'' - என்று அவன் பேசுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! அவனைப் பாராட்டவா முடியும்! இனி? - என்று கூறி அவன் வாய் மூடுமுன், அவன் மீதல்லவா பாய்ந்திருப்பாய்!