அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முள்ளு முனையிலே...
2

"உண்மைதான் அண்ணா! அவன் யார்? என்ன போக்குடை யவன்? அவன் செயலால் விளைவது யாது? என்று அறியா முன்னம், வீரதீரச் செயல் புரிந்தவன் என்ற உடனே பாராட்டலாம் என்ற துடிப்புத்தான் ஏற்பட்டது. ஒவ்வொரு கட்டமாக தீட்டிக் காட்டிக்கொண்டே வரும்போதுதான், ஒவ்வொரு கட்டத்தின்போதும், ஒவ்வோர் வகையான உணர்ச்சி ஏற்பட்டது என்று கூறுகிறாய். சரி! ஆனால், தம்பி! இதனையே ஒரு நாடகமாகக் கண்டால்? வீரத்தை அக்கிரமத்துக்கு, திறமையைத் தகாத காரியத்துக்குப் பயன்படுத்தியவனைக் கண்டிக்கவேண்டும் என்பதற்காக, மாதரின் கற்பைச் சூறையாடிடும் மாபாவி வேடமிட்டு நடித்தவனைக் கண்டிக்கவா, கிளம்புவாய்! இல்லை அல்லவா? நடிப்புத் திறமையைப் பாராட்டுவாய்! அதுபோலத் தம்பி! நான், நிதி அமைச்சர் சுப்பிரமணியத்தைப் பாராட்டுகிறேன்.

சந்துமுனை நின்று சத்தமிடும் சத்தற்றதுகளுக்குச் சீற்றம் மேலிடும். என்ன மண்டைக் கர்வம் இவனுக்கு! காமுகனைப் பற்றிக் கூறிவிட்டு, கணக்கிலே புலி, வாதத்திலே வேங்கை, என்று கூறத்தக்க, எமது அமைச்சர் பெருமகனை அந்தக் கதைப்போக்குடன் இணைத்துப் பேசுவதா! இதைக் கேட்ட பிறகும் நாங்கள் சும்மா இருக்கமுடியுமா! - என்றெல்லாம் கொதித்துக் கூறுவர்.

நான், தம்பி! கருத்து விளக்கத்துக்காக, கதை வடிவமாக்கித் தந்தது, "கனம்' அவர்களைக் காமுகனோடு ஒப்பிட அல்ல! கல்லாமை கயமை எனும் பிணிகளால் பீடிக்கப்பட்டவனல்ல, நான்.

கதை வடிவிலே, நான் சொல்லவந்தது, எவருடைய அறிவாற்றல், வீரதீரம், அஞ்சாநெஞ்சம் - எனினும், அவர்களின் போக்குக்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள், நிகழ்ச்சிகளுக்குள்ள பின்னணி என்பன போன்றவைகளை எல்லாம் ஆய்ந்தறிந்து கண்டபிறகே, பாராட்டுவதா அல்லவா என்ற முடிவுக்கு வரமுடியும்- மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், முழு உண்மை தெரியாது என்ற கருத்தை விளக்க.

அதன் தொடர்ச்சியாக அறிவாற்றல், திறமை, தீரம், என்பவைகளைக் காட்டிடுவோர் என்பதுகூட அன்றி, அத்தகையோர்போல வேடமிட்டு நாடகமாடிடுவோரைக் கண்டால், என்ன கூறத் தோன்றும் என்று எண்ணினேன் - நடிப்புக்கு நமது பாராட்டுதலை வழங்குவோமல்லவா, அதைக் கூறினேன். அதைக் கூறும்போது, நடிப்புத்திறமையைக் காட்டும் பான்மையில் பேசிவரும், நிதி அமைச்சரின் நினைவும் வந்தது; அவரையும் நாம் பாராட்டத்தானே செய்கிறோம் என்ற நினைவு தொடர்ந்தது. அதைத்தான் கூறினேன் - அவரைக் காமுகனுடன் ஒப்பிட்டுவிட்டேன் என்று தப்பாக எண்ணிக்கொண்டு, புதிய கதர்ச்சட்டைகள் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக இந்த விளக்கம் தருகிறேன்.

அமைச்சரிடம் உள்ள திறமையை, அறிவிலி! நடிப்புத் திறமை என்றா கூறுகிறாய். ஏன்! பதினைந்து!! அவர் சாமான்யர் என்றா எண்ணிக்கொண்டாய் - அவருக்குப் பக்கத்தில், நூற்று ஐம்பது - தெரிகிறதா? - என்றெல்லாம் கோபமாகப் பேசிக் கனம் களின் கண்ணில் படவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் "துந்துபிகள்' முழக்கமிடுகின்றன; கேட்கிறது! அமைச்சர்க ளென்ன, பக்தர்களைப்பற்றியேகூட, இவ்விதம் கூறப்பட்டிருக் கிறது. நாடகத்தில் உன் அடியார்போல் நடித்து என்பது மேற்கோளுக்காகக் கொள்ள வேண்டுகிறேன்.

நடிப்பு, அமைச்சரிடம் ஏது? என்பர்.

எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி. மு. க. பயனற்றவை, வலிவே இல்லாதவை, வளர்ச்சியே அடையாதவை, அவைகளைப்பற்றிக் கவலைப்படவே தேவையில்லை என்று பேசுகிறாரே, அது நடிப்பு!

வடக்கு - தெற்கு என்று பேசுவது பேதமை, அதை ஒரு தத்துவமாகக் கொள்வது மடைமை, அதை மக்கள் காது கொடுத்துக் கேட்பது, கொடுமை - என்றெல்லாம் பேசுகிறாரே அது நேர்த்தியான நடிப்பு!

திறமையும் இருக்கிறது. மறைக்கவில்லை, ஆனால் எதில்? எவ்வகையில்? என்ன விளைவுகள்! என்பவைகளைத்தானே முக்கியமாகக் கவனிக்கவேண்டும்.

புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது ஒரு திறமை! அவைகளைச் சமயம்பார்த்துப் பயன்படுத்துவது திறமையில் குறிப்பிடத்தக்கவை. எதிரியின் வாய் அடைத்துப் போகும் என்று, தன் கட்சிக்காரர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே புள்ளிவிவரங்களைக் காட்டுவது, ஒருவிதத்தில் திறமைதானே!

நான், கதைவடிவில் காட்டிய "வீரன்' - கத்தி, கட்டாரி தூக்குவான் களத்தில். அமைச்சருக்கு புள்ளிவிவரம் ஆயுதம் என்று தோன்றுகிறது.

ஆனால், அதே "போர் முறை'யைக் கையாள எண்ணி புள்ளிவிவரங்களைக் கூறினால், அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இப்படி எல்லாம் பேசுகிற இந்தத் தி. மு. கழகத்தவர் யார் தெரியுமா? அவர்களுடைய யோக்யதை தெரியுமா? பூர்வோத்திரம் அறிவீர்களா? என்று மூலைவாரி ஓடும் காளைகள்போல வேறு பக்கம் சென்று விடுகிறார்கள்.

தமக்கு எல்லாப் பிரச்சினைகளும் புரிந்துவிட்டது, தமக்கு மட்டுமே புரிந்திருக்கிறது, தமக்குமட்டுமே புரியும்!... என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் இருக்கிறாரோ, என்னவோ! அப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பதுபோலப் பேசுகிறார், அது நேர்த்தியாக இருக்கிறது. அதை நான் பாராட்டியிருக்கிறேன். இதைக்கூடப் பெருந்தன்மையின் விளைவு என்று கொள்ள முடியவில்லை அவர்களால்.

சட்டசபையிலே, எதிரிலே, தி. மு. கழகத்தார், எங்களைத் திறமைசாலிகள்! ஆற்றல்மிக்கவர்கள்! என்றெல்லாம் பாராட்டு கிறார்கள், வெளியே வந்துதான், கன்னாபின்னா என்று கண்டபடி பேசுகிறார்கள் - என்று பொருள்பட நிதி அமைச்சர் பேசுவதாகப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அவரும் அதனை மறுத்திடவில்லை.

என்ன எண்ணிக்கொண்டு அவர் அவ்விதம் பேசுகிறாரோ புரியவில்லை.

இந்தப் பயல்களுக்குச் சட்டசபையிலே பேசப் பயம்.

அங்கே கைகட்டி வாய்பொத்தி இருக்கிறார்கள்.

அங்கு ஏதாவது பேசினால் அமைச்சர்கள் சும்மாவிட மாட்டார்கள்.

இவ்விதமெல்லாம், தம்முடைய கட்சிக்காரர் பேசி மகிழ வேண்டும்; மந்திரியாக்கி வைத்தவர்களுக்கு இந்த இனிப்புப் பண்டமாவது தராவிட்டால் நல்லதல்லவே என்ற நினைப்பிலே பேசுகிறாரோ என்னவோ! அந்தக் காரணத்துக்காகப் பேசுவதானால் நான் குறை சொல்வதற்கில்லை. அமைச்சர்களும் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்தாக வேண்டுமல்லவா! செய்யட் டும். ஆனால், அமைச்சரே உள்ளபடி நாம் ஏதோ பயந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருப்பாரானால், பரிதாபப்படவேண்டி இருக்கிறது.

தம்பி! ஒன்றுமட்டும் கூறுவேன். நூற்று ஐம்பது பேருக்கு எதிரே பதினைந்து பேராக நாம் உட்கார்ந்துகொண்டு, எதிர்க் கட்சி என்ற கடமையை அச்சம் தயை தாட்சணியத்துக்குப் பலியாகாமல், எண்ணிக்கை பலத்தைக்கண்டு அஞ்சாமல், பணியாற்றி வருகிறோமே, அந்த வகையிலும், அளவிலும், அமைச்சர் அவையில் உள்ள தலைவர்கள் எண்ணிக்கை பலமிழந்த பிறகு, அறிவாற்றலை, அஞ்சாது பணிபுரியும் கடமையைச் செய்யக்கூடியவர்களா என்று கேட்டால் அவர்கள் கோபித்துக்கெண்டாலும் பரவாயில்லை, உண்மையைக் கூறுகிறேன், ஒருநாள் கூட முடியாது!

பணக்காரன் வீட்டுப் பாயாசத்திலே பதம் சரியாக இல்லாவிட்டாலும், வெளியே சொல்லமாட்டார்களல்லவா - அதுபோல எண்ணிக்கை பலம் மிகுந்திருக்கிற கட்சி என்பதால், பேச்செல்லாம் அறிவுரை என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்கு வீரதீரம் என்றும்கொள்ளப்படுகிறது; கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம், புள்ளிவிவர நிபுணத்துவம் என்று கருதப்படுகிறது; வேறென்ன?

அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அதிகாரிகள் கஷ்டப்பட்டுத் தயாரிக்க "அறிக்கைகளை' எதிரே அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.

நாம் பதினைந்தே பேர்தானே என்ற பயம் எப்போதும் ஏற்பட்டதில்லை.

இங்குகூடக் கிடக்கட்டும் - பதினைந்து பேர்களாவது இருக்கிறோம்.

கோவிந்த வல்லப பந்த் இருக்கிறாரே, அவருடைய முழு உருவத்தையும் பார்க்காமல், முகத்தை மட்டும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், கூண்டுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டிருக்கும் சிங்கம்போலத் தோற்றமிருக்கும். அங்குதான் தி. மு. கழகத்தினர், இரண்டே இரண்டு பேர் - இளைஞர்கள் - இருக்கிறார்கள் - இளித்துக்கொண்டு அல்ல, இச்சகம் பேசிக்கொண்டு அல்ல - பயந்துகொண்டு அல்ல - இந்தியா ஒரு நாடு அல்ல! பல இன மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்று பேசிக்கொண்டு.

இருவர்! ஐந்நூற்றுச் சொச்சம், ஆளுங் கட்சியினர் - அதிலே ஒரு அரை டஜன் பேர்களாவது சுதந்திரப்போராட்ட காலத்திலே, "அசகாய சூரர்கள்' என்று பெயரெடுத்தவர்கள்.

அச்சம், நிச்சயம் ஏற்படாது. காரணம் அறிந்துகொள்ளக் கனம்களும், அரசியல் இலாபம் தேடிடும் இனம்களும் விரும்பினால் கூறுகிறேன் - தனிப்பட்ட ஆட்களின் வீரதீரத்தின் போக்கு அல்ல அதற்குக் காரணம் - நாம் கொண்டிருக்கிற கொள்கையின் தூய்மையில், நமக்கு இருக்கும் அப்பழுக்கற்ற பற்று, அசைக்கமுடியாத நம்பிக்கை! அதிலிருந்து பிறப்பதே நமக்கு உள்ள அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஆளடிமையாகாத் தன்மை.

இத்தனைக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் எனும் இடங்களிலே உள்ள தி. மு. கழகத்தினர், எல்லாச் சுகத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு அலுத்துப்போன, "சஷ்டியப்த பூர்த்திகளல்ல.' ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கொந்தளிக்கும் நிலை என்று கூறத்தக்க வாலிபப் பருவத்தினர் - (நான்தான் 51 -) எனினும், வெள்ளைவேட்டிப் பண்டாரங்களாகி விட்டவர்கள்!

தங்களை "மேதாவிகள்' என்று கருதிக்கொண்டு, இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுமல்ல, மேதாவிகள் என்போர், பதவியில், மேலுக்குமேல் தாவிக் கொண்டிருக்கிறார்களே, நாமாவது இதைச் செய்வோம் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டவர்கள்.

ஆசைதான் துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர்.

ஆசை, அச்சத்துக்கும் காரணமாக அமைந்துவிடும்.

சட்டசபைக்கு வந்துவிட்டோமே, ஒரு நாலு கமிட்டி களில் இடங் கிடைக்க வேண்டாமா, இரண்டு மந்திரிகளுடைய நேசமாவது ஏற்படவேண்டாமா, உறவினரில் ஒரு நாலு பேருக்காவது வேலை வாங்கிட வேண்டாமா என்ற ஆசை ஏற்பட்டிருந்தால், அச்சம் அதைத் தொடர்ந்து படரும். இதைப் பெறவேண்டுமானால், அமைச்சர்களைக் குறை கூறாமலிருக்க வேண்டும்; அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசக் கூடாது; அவர்களுக்குச் சங்கடம் ஏற்படக்கூடிய பிரச்சினை களைக் கிளறக்கூடாது என்றெல்லாம் தோன்றும். எதைப் பேசினால் எந்த அமைச்சருக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம் "பிடித்தாட்டும், பிறகு "ஐயா! ஒரு சேதி கேளும்! இந்த அடிமைக்காரன் சொல்லும் வார்த்தை கேளும்' என்று நொண்டிச்சிந்து பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஆசை இல்லை, எனவே அச்சம் இல்லை!

அமைச்சர்கள், எமக்குத் தரக்கூடியது என்று ஒன்றும் இல்லை.

ஒன்று கேட்டேன், துவக்கத்திலேயே - இதயத்தை. திறமையை, வேண்டுமானால் காட்டுகிறேன் என்றனரே தவிர இதயத்தைத் தரவில்லை. எமது கொள்கைகளுக்கு இதயத்தில் இடம் கொடுங்கள் என்றுதான் கேட்டேன்.

ஆசை அற்ற இடத்தில், அச்சம் எழக் காரணம் இல்லை.

அமைச்சர் சுப்பிரமணியம், நமது தோழர்களின் பண்பையும், ஜனநாயகத்துக்கு இன்றியமையாத அடக்க உணர்ச்சியையும், பயம் என்று எடுத்துக் கொண்டாரோ என்னவோ!

பதினைந்து பேர்கள் சட்ட மன்றத்தில், திட்டமிட்டு, பண்பு கெடாத வகையில் பணியாற்றுவதால், காங்கிரஸ் உறுப்பினர் களிடமேகூட ஏற்பட்டுக் கொண்டுவரும் மனமாறுதலை அமைச்சர், உணருகிறாரோ இல்லையோ, அதைத் துளிகூட வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரே, அதைத்தான் நான், நேர்த்தியான நடிப்பு என்று கூறுகிறேன் - பாராட்டுகிறேன்.

தகவல் கோரியும், விளக்கம் பெறவும் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதில் கூறப்படுகிறதே, அதிலே எத்தனை முறை அமைச்சர்கள், மத்திய சர்க்காரைக் கேட்கவேண்டும் - இது மத்திய சர்க்காரைப் பொறுத்த விஷயம் - மத்திய சர்க்கார் இணங்கவில்லை - என்று பதிலளிக்கிறார்கள்.

இந்தப் பதில்கள் எதைக் காட்டுகின்றன? இன்றுள்ள அரசியல் முறையின்படி, இந்த அரசு முழு அதிகாரம் பெற்றதாக இல்லை, போதுமான அதிகாரம் பெற்றதாகவும் இல்லை என்பதைத்தானே.

இந்த உண்மை சட்டசபையில் ஒப்புக்கொள்ளப்படுகிறதே - அதுபோதும் எங்களுக்கு! அதைப்பெற நாங்கள் அங்கு வந்தவர்கள் - வேறு எந்த ஆசையும் எமக்கு இல்லை - எனவே அச்சமும் இல்லை.

"டெல்லிக்காரர்களைத் தட்டிக் கேட்கத்தக்க துணிவை இந்தத் துரைத்தனத்தார் இன்னும் பெறவில்லை. அண்டை ராஜ்யமான ஆந்திர ராஜ்யத்தில் அமைச்சர்கள், மத்திய சர்க்காரின் மூலம் தங்கள் ராஜ்யத்துக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை மத்திய சர்க்காரிடமிருந்து பெறுவதற்காக, மத்திய சர்க்கார் மூலம் தங்கள் ராஜ்யத்தில் ஏற்படவேண்டிய தொழிற் சாலைகளைக் கேட்க, மத்திய சர்க்கார் தக்க விதத்தில் ஏற்படுத்த வில்லை என்று மத்திய சர்க்காரின்மீது குற்றம் சாட்டத்தக்க துணிவைப் பெற்றிருக்கிறார்கள். நமது ராஜ்ய அமைச்சர்கள் அதைக் கவனிக்கவேண்டும் - ஆனால் நமது மாநில அமைச்சர் கள், எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். நமது ராஜ்யத்தில் மத்திய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம், இவர்கள், மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்... பிற மாநில துரைத் தனங்கள் எல்லாம் மத்திய சர்க்காருடன் போராடித் தங்கள் மாநில நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இந்த மாநில அமைச்சர்களோ, ஐந்து வருஷத்துக்குக் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, மத்திய சர்க்காரி லிருந்து மாநில சர்க்காருக்கு அனுப்பப்பட்டவர்கள்போல, எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்.

தம்பி! 16-3-60-இல் சட்டசபையில், நான் கூறியது இது.

இதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுத்தான், அமைச்சர் வெளியே சென்று, சட்டசபையில் அவர்கள் எங்களைக் கண்டிப்பதே இல்லை, குறை கூறுவதே இல்லை, அவ்வளவு பயம் அவர்களுக்கு என்ற கருத்துப்படப் பேசுகிறார். விந்தை மனிதர்!

"மந்திரிகளாக வந்து அமர்ந்திருக்கும், மாமிசப் பிண்டங்களே! உங்களை இந்த மாநிலத்து மக்கள் காரித் துப்பு கிறார்கள்! ஏன், பிசின் போட்டு ஒட்டப்பட்டது போல், பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். மக்களுக்கு வயிறாரச் சோறுபோட முடியாத நீங்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத நீங்கள், தொழிலை வளர்க்கமுடியாத நீங்கள், ஏன் கொலுப்பொம்மைகளாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியே போய்விடுங்கள்! மக்கள் வாழ்வு துலங்கும்! பதவியை விட்டு விலகுங்கள், பசி பஞ்சம் பட்டினி போகும்!''

இவ்விதமெல்லாம் சட்ட சபையில் நாம் பேசுவோம் என்று அமைச்சர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில், நாம் அவ்விதமான காட்டுமிராண்டித்தனத்தை நம்பிப் பிழைக்கும் அரசியல் இலாபச் சூதாடிகள் அல்ல.

நாக்கில் நரம்பின்றி, பதவியில் இல்லாதபோது காங்கிரசார் மற்றக்கட்சியினரைப் பேசிவந்தார்களே, அதுபோல நாம் பேசமாட்டோம். அது பண்புமல்ல - மரபும் அது அல்ல.

இவ்விதமும் கூறிவிட்டு, காமுகன் கதை கூறிக் "கனம்' பற்றி இணைத்துப் பேசலாமா என்று எண்ணிக் காங்கிரசார் வருத்தப்பட வேண்டாம்.

மீண்டும் ஒரு முறை துவக்கத்தைப் படித்துவிட வேண்டும். படித்தாகிவிட்டதா! சரி வீரதீரம், அஞ்சா நெஞ்சம், எதிர்ப்புக் கண்டு பொருட்படுத்தாத தன்மை, இவைகளை மட்டும் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முழு உண்மை விளங்காது, எல்லாக் கட்டங்களையும் எண்ணி எண்ணிப் பார்த்தால் மட்டுமே உண்மை துலங்குமே அதே போலத்தான் நமது அமைச்சர்கள் அல்லது காங்கிரஸ் அரசு குறித்து மதிப்பிட வேண்டுமானால், அவர்கள் காட்டும் புள்ளி விவரக் கணக்கு எண்ணிக்கை பலத்தால் ஏற்படும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு, நையாண்டிப் பேச்சை வாதமாக்கும் வல்லமை, இவைகளை மட்டும் பார்த்தால் போதாது. இவர்களுக்கு உள்ள அதிகாரம், இவர்களை ஆட்டிப்படைப்பவர்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றையும் கவனித்துப் பார்க்கவேண்டும்.

துவக்கத்திலே காட்டினேன் வீரதீரச் செயலில் ஈடுபட்டவனை.

இதோ இன்னொருவர்.

சுற்றாத நாளில்லை! போகாத ஊரில்லை! தேடாத புள்ளி விவரமில்லை! வாதம், நேர்த்தியாக! துணிவு, அளவுக்கு அதிகமாக! அவருக்கு.

திங்களன்று விமானம் ஏறுகிறார் - செவ்வாயன்று மனுக் கொடுக்கிறார் - வியாழன்வரை காத்திருக்கிறார் - வெள்ளி வீடு திரும்புகிறார் - வெறுங்கையோடு.

இந்தியா முழுமைக்கும் திட்டம் போடப்படும் ஆலோசனைக் குழுவில், இவருக்கு இடமுண்டு!

நேரு பெருமானுக்கு வலமோ, இடமோ இடம் கிடைக்கும்.

மாநிலத் தேவைகளைக் கணக்கெடுத்து, ஆதாரங்களைத் திரட்டி, அங்கு காட்டுவார்.

இனிய முகம் காட்டி, எமது குறை தீரும் ஐயனே என்று வேண்டுவார். இவ்விதமானவரைப் பாராட்டத்தானே வேண்டும்! மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்; ஆம்! ஆனால், துவக்கத்திலே கூறினேன் அந்தக் கதைவடிவக் கருத்து விளக்கத்தின்படி, இதனையும் கவனித்துப் பார்த்தால், பாராட்ட முடிகிறதா என்று கூறு தம்பி!

எதிர்க்கட்சிகளைத் தாக்கும் தீரர், எண்ணிக்கை பலத்தைக் காட்டும் வீரர், எமக்கன்றோ எல்லாம் தெரியும் என்று எக்காளமிடும் எந்தல், ஏற்றமிக்க குழுக்களில் இடம் பெற்றுள்ள மேலோன், எது வேண்டும் இங்கு என்பதைக் கண்டறிந்த கற்றறிவாளன், நேரு பெருமகனாரின் நண்பர் என்ற அளவுக்கு உயர்ந்தோர், வாதவல்லவர், புள்ளி விவரப்புலி, விமானமேறித் திங்களுக்கு இருமுறையேனும் தில்லி தரிசனம் செய்யும் பக்திமான்! ஆமாம்! அதிலே ஒன்றும் குறைவில்லை!

ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை, எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு,

தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை.
மைல் கற்களிலேயும் இந்தித் தொல்லை.
சேது சமுத்திர திட்டம் வரப்போவதில்லை.
சேலத்து இரும்புத் தொழிலுக்கு, விமோசனம் இல்லை.
நெய்வேலி நிர்வாகம் இவரிடம் அல்ல.
அலுமினியத் தொழிலுக்கு அதிகாரி இவரல்ல.
காகித ஆலை கட்டப்போவது இவர் துரைத்தனம் அல்ல!

- என்று அடுக்கிக்கொண்டே போகலாம் (அவ)லட்சணத்தை.

இந்த நிலையில் நாடு; இதற்கு வந்து வாய்த்த அமைச்சர் வீரதீர மிக்கவர், அறிவாற்றல் நிரம்பியவர் என்று காட்டிப் பயன் என்ன? இந்த முழு உண்மை தெரியாமுன்பு பாராட்டக்கூடத் தோன்றும்! முழு உண்மை தெரிந்த பிறகு? நாட்டுப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது,

முள்ளு முனையிலே
வெட்டியது மூணு குளம்!
இரண்டு குளம் பாழ்
ஒன்றில் தண்ணியே இல்லை.

தம்பி! இந்த நிலையில் உள்ள துரைத்தனத்தையும், துரைத்தனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அரசியல் ஏற்பாட்டையும், இன்னமும் சரிவர உணர்ந்து கொள்ளாத மக்கள், மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, துவக்கத்தில் காட்டினேனே பார்க்கச் சொல்லி, அந்த வீரச் செயலில் ஈடுபட்டவனை, பாராட்டலாம் என்று எண்ணுவது போலாகி, பாராட்டியும் விடுகிறார்கள். முழு உண்மை தெரியவேண்டும் - எல்லோருக்கும். அதைத் தெரியப்படுத்தும் பணியில்தான், உன் அறிவாற்றல் அனைத்தும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் பயன்பட வேண்டும். அதற்கான முறையிலேதான், உன் திறம் வளரவேண்டும், மிளிர வேண்டும். அந்த நம்பிக்கைதான், எனக்கும் உனக்கும் உள்ள ஒரே ஒரு கருவூலம்.

அண்ணன்,

17-4-60