அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முயன்றால் முடியும்!
1

அமைச்சர் கருத்துப்படி காங்கிரஸ் -
காங்கிரஸார் கொடுமை -
தி. மு. க. வின் தனித்தன்மை

தம்பி!

காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ளவர்கள் எப்படிப்பட்ட வர்கள், அவர்களை என்னென்ன பெயரிட்டு அழைக்கலாம் என்பதைக் கூறட்டுமா? நமக்கும் அவர்களுக்கும் கட்சி வேறு என்பதாலே ஏற்படக்கூடிய எரிச்சல் காரணமாக அல்ல; அவர்களின் இயல்பு, நிலைமை, நினைப்பு, செயல் ஆகியவை களைக் கவனித்து, அவைகளுக்கு ஏற்ற பெயர் என்னென்னவாக இருக்க முடியும், என்னென்ன பெயர்கள் பொருத்தமுள்ளதாகவும் பொருள் உள்ளதாகவும் இருக்க முடியும் என்பதைக் கவனித்துக் கூறுகிறேன்; கசப்பு, கோபம் காரணமாக அல்லவே அல்ல.

இடந் தேடிகள்
பணம் பிடுங்கிகள்
பத்தாம்பசலிகள்
வகுப்புவாதிகள்
சிண்டுபிடித்திழுப்போர்
செயலாற்றாதார்
கொள்கை அறியாதார்

என்ன அண்ணா இது! காங்கிரஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கக்கூடாது, கேவலமாகப் பேசக்கூடாது, தூற்றக்கூடாது என்றெல்லாம் எங்களுக்குக் கூறிவிட்டு, நீ! காங்கிரஸ்காரர்களை இவ்வளவு கடுமையாகக் கண்டித்துப் பேசுகிறாயே,

இடந்தேடிகள்
பணம்பிடுங்கிகள்

என்றெல்லாம் கேவலமாகப் பெயரிட்டு அழைக்கிறாயே என்றுதானே, தம்பி, கேட்கிறாய். நியாயமான கேள்வி. விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இடந்தேடிகள்
பணம்பிடுங்கிகள்

என்பவைகள், கடுமையான வார்த்தைகள், கேவலமான சொற்கள், இழிமொழிகள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் இப்படிக் காங்கிரஸ்காரர்களைத் தூற்றும் நிலைக்கு நான் கீழே இறங்கவில்லை; இறங்கவும் மாட்டேன். இப்படியெல்லாம் பெயரிட்டு அழைக்கத் தக்கவிதமான கண்டனத்தை, கடுமொழியை, காங்கிரசார்மீது நான் வீசவில்லை. வீசியவர், விவரம் தெரியாதவரும் அல்ல; காங்கிரசுக்குப் பகைவரும் அல்ல; எதுவோ கிடைக்குமென்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து எரிச்சல் மூட்டப்பட்டவருமல்ல; நல்ல நிலைமையிலே உள்ளவர்; தரம் உயர்ந்தது; பதவி உயர்வானது; ஆராய்ந்து பொறுப் புணர்ச்சியுடன் பேசக்கூடியவர்; பண்டித ஜவஹர்லால் நேருவின் நேரடியான நிர்வாகத்திலே உள்ள வெளிநாட்டு விவகாரத் துறையிலே பொறுப்பேற்றுள்ளவர்; நேருவுக்குத் துணையாக இருப்பவர்; துணை அமைச்சர்; இலட்சுமி மேனன் அவர்களின் பேச்சிலே இருந்து எடுத்தவைகளே,

இடந்தேடிகள்
பணம்பிடுங்கிகள்

எனும் கருத்துவிளக்க மொழிகள்! நானாவது அவ்வளவு துணிந்து, காங்கிரசாரைத் தூற்றுவதாவது!

அம்மையார், காங்கிரஸ் கட்சிதான்; இப்போதும்.

வீண் தகராறுகளில் தம்மைச் சிக்கவைத்துக்கொள்பவரு மல்ல; எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் இயல்பு உள்ளவருமல்ல. அநேகமாகத் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அப்படிப்பட்ட இலட்சுமி மேனன் அவர்களுக்குத்தான் என்ன கடுங்கோபமோ தெரியவில்லை, மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார், காங்கிரஸ் கட்சியினரை - நேருவை நீக்கிவிட்டு; பிறரை.

காங்கிரசைவிட்டு வெளியேறி வெகுண்டு பேசிய வார்த்தைகளும் அல்ல. இருக்கும் கட்சியிலேயே தானோர் அதி அற்புத மேதை என்ற ஆணவம் பிடித்தலைபவரும் அல்ல அம்மையார். எனினும், காங்கிரஸ்காரர்களைப்பற்றி, காங்கிரசுக்குப் பல ஆண்டுகளாக எதிர்ப்புக் காட்டிவருபவர்கள் கூடச் சொல்லத் துணியாத கண்டனமொழிகளை வீசுகிறார்; காரணங்களும் மிகப் பொருத்தமாகக் காட்டுகிறார்.

கேட்கும்போதே, காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆத்திரம் பீறிட்டு எழும்; கண்களிலே கனலும் புனலும் ஒருசேரக் கிளம்பும். பிய்த்து எறிந்துவிட வேண்டும் என்று கோபம் உண்டாகும்.

இடந்தேடிகள்
பணம்பிடுங்கிகள்
பத்தாம்பசலிகள்

என்றெல்லாம் இழிமொழி கூறினவர் மட்டும், காங்கிரசல்லா தாராக இருந்திருப்பின், இந்நேரம், காங்கிரஸ் பெருந் தலைவர்கள், பூமிக்கும் ஆகாயத்துக்குமாகக் குதித்திடுவர்; மந்திரி சுப்ரமணியத்தைப் போன்ற அரைகுடமாக இருப்பின், இதற்குள் "சவால்கள்' பிறந்திருக்கும். ஆனால், எவ்வளவு வெட்கம், வேதனை, ஆத்திரம் பிறந்தாலும்,பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது; ஏனெனில், கண்டனச் சொற்களைக் கூறினவர், காங்கிரஸ் கட்சியினர், அமைச்சர், நேருவுக்குத் துணை அமைச்சர். எனவே, வாய்பொத்திக் கிடக்கிறார்கள்! வேறு வழி! அம்மையார், ஒளிவு மறைவின்றி, அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்பட மறுத்து, உண்மையை, விளைவு பற்றிய கவலையற்று எடுத்துப் பேசுகிறார்கள். காரணங்களை அழகுற எடுத்துக் காட்டுகிறார்கள். என் செய்வர் காங்கிரஸ் தலைவர்கள் - தொண்டர்கள்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறார்கள்.

பொதுத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சி, சல்லடம் கட்டிக்கொண்டு, சங்கநாதம் எழுப்பிக்கொண்டு, சந்துமுனைச் சிந்து பாடுவோரில் இருந்து, சந்தைக்கடை தரகு வியாபாரி போலப் பேரம் பேசிக்கொண்டு சோரம் போகத் தயாராக இருக்கும் பேர்வழிகள் வரையில் படைதிரட்டித் தயாராக வைத்துக்கொண்டு, இருக்கும் நேரமல்லவா!!

தயாரிக்கப்பட்ட மாலையைக் கழுத்திலிருந்து கணுக்கால் வரையில் தொங்கத்தொங்கப் போட்டுக்கொண்டு, "தேச பக்தர்கள்' பட்ட கஷ்ட நஷ்டங்களை, சிதம்பரனார் செக்கிழுத்ததை, குமரன் மண்டை உடைந்ததை, கொடிய அடக்குமுறைக்குப் பலியானதைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் எடுத்துக்கூறி, "அப்படிப் பட்ட காங்கிரஸ் கட்சியின் அபேட்சகர் இவர்' - என்று அர்ச்சனை செய்வதைக் கேட்டு அகமகிழும் நேரம்! அமைச்சர் வேலை நிச்சயம் கிடைக்குமா, முழு அமைச்சரா, குட்டி அமைச்சரா, ஏதாகிலும் கிடைக்குமா என்று ஆரூடம் பார்க்கும் நேரம்! அவர்களே கேட்டு ஆச்சரியப்படும்படி, துதி பாடகர்கள், கட்டணம் பெற்றுக்கொண்டு, புகழுரைகளைப் பொழியும் நேரம். அப்படிப்பட்ட நேரத்தில், இப்படிப்பட்ட தூற்றல் கணைகளை அம்மையார் தொடுப்பது, தம்பி! பருவ மங்கையின் கழுத்தில் தாலிகட்டப் போகும்போது, மாப்பிள்ளைக்குக் "காக்காய் வலிப்பு' வருவதுபோலவும், சீனியுடன் பிஸ்தா பருப்பும், குங்குமப் பூவும் போட்டு, காய்ச்சி வெள்ளிப் பாத்திரத்திலே ஊற்றி, காலில் சதங்கை கொஞ்சிட, கண்களில் கனிவு ஒழுகிட, அன்னநடை நடந்துவரும் ஒரு சின்ன இடைக் கிளிமொழியாள் தர, ஒரு முழுங்கு பருகும்போது, பாலில், செத்துக்கிடக்கும் பூச்சி இருப்பது கண்டால் எப்படிக் குமட்டுமோ, அதுபோலவும் அல்லவா இருக்கும்.

கொண்டாட, புகழ்பாட, கொடிதூக்கிகள் கும்பல் கும்பலாகக் கிளம்பியுள்ள நேரம் பார்த்தா, அமைச்சர் வேலை பார்க்கும், அமைதியான இயல்பு படைத்த திருமதியார் இலட்சுமி மேனன், இப்படிப்பட்ட, அருவருப்புத் தரத்தக்க இழிமொழிகளை வீசுவது!! பரிதாபம்! பரிதாபம்!!

மாப்பிள்ளையைக் காணோமே? வழிதவறிவிட்டதோ? என்று கேட்டுப் பதறிநிற்கும் மாமனாரிடம், "பார்த்தேன் உமது மாப்பிள்ளையை! பாதையில்! படுத்து உருண்டு கொண்டிருந்தார் சாக்கடை ஓரத்தில்! கேட்கப்போனால், இது பன்னீர்க்குளம் என்கிறார்!!'' என்று ஒருவர் சொன்னால், மாமனார் மனம் எப்படிப் பதறும்! அவ்வளவுக்குப் போவானேன், தரமான மாம்பழம் என்று எண்ணி வாங்கிச் சுவைத்திடும்போது, ஒரு பக்கம் புளிப்பாகவும், மற்றோர் பக்கம் வெம்பலாகவும், முழுதும் நாராகவும் இருந்தால், மனம் என்ன பாடுபடும்!

அதுபோல, மாலையும் மரியாதையும், மக்கள் ஆதரவும் பெறத்துடிக்கும் நேரத்தில், தியாகிகள்! தீரர்கள்! ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள்! என்று வாழ்த்துரைகளைப் பெற்று மெய்மறந்து கிடக்கும் வேளையில்,

இடந்தேடிகள்
பணம்பிடுங்கிகள்
பத்தாம்பசலிகள்
வேடதாரிகள்
கபடர்கள்
சுயநலப்புலிகள்

என்றெல்லாம் பொருள்பட, அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிகப் பொறுப்பான பதவியில் உள்ள அம்மையார், திட்டவட்ட மாகக் கூறிடக் கேட்டால், எப்படி இருக்கும் "அரசியல் அந்தஸ்து' தேடிக்கொண்டிருக்கும் காங்கிரசாருக்கு!

போகட்டும், பொதுமக்கள் மட்டும், பாவம் என்ன நினைப்பார்கள்?

பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், காங்கிரசில் உள்ளவர்களைப்பற்றி,

உண்மைத் தொண்டர்கள்
ஊருக்கு உழைப்பவர்கள்
தியாகச் செம்மல்கள்
தீரமிக்கவர்கள்

என்று பலபலப் புகழக் கேட்டு, இவ்வளவு பேர்கள் புகழ்ந்து பேசுவதால், காங்கிரசில் உள்ளவர்கள், தகுதியுள்ளவர்களாக, தன்னலமற்றவர்களாக, தொண்டாற்றக் கூடியவர்களாகத்தாம் இருப்பார்கள் என்று பொது மக்கள் ஒருகணம் மயங்கும் நேரமாகப் பார்த்து, அம்மையார், சவுக்கடி கொடுக்கிறார்களே,

ஆளுக்கேற்ற பேச்சுப் பேசுவோர்
அகப்பட்டதைச் சுருட்டுவோர்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
கட்சி வளர ஏதும் செய்தறியாதார்!
காரியவாதிகள்!

என்றெல்லாம்!!

மெத்தக் கஷ்டப்பட்டு, பெரும்பொருளும் செலவிட்டுக் காங்கிரசார் பொது மக்களிடம் செல்வாக்குத் தேடும் நேரமாகப் பார்த்து, இந்தக் காலத்துக் காங்கிரசார் கபடர், கசடர் என்று காங்கிரஸ் அமைச்சராகப் பணிபுரியும் பொறுப்புள்ளவர் பேசிடக் கேட்டால், பொது மக்கள் மனமும் படபடவெனத் தானே அடித்துக்கொள்ளும். இவர்களைப் போய், காந்திய வழி வந்தவர்கள், ஊருக்கு உழைக்கவரும் உத்தமர்கள், தன்னலமற்ற பெரியோர்கள், தகுதி யாவும் பெற்றவர்கள் என்று நாம் இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தோமே, இப்போதல்லவா தெரிகிறது இவர்களின் உண்மை வடிவம் - என்றுதானே எண்ணிக்கொள்வர். அதிலும் இது தேர்தல் நேரம்; எடைபோடும் நாட்கள்; "மாத்து' கண்டுபிடிக்கும் காலம்! அப்படிப்பட்ட காலத்திலே, மிகக் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இன்று உள்ள காங்கிரசார் என்று இலட்சுமி மேனன் கூறுவது, காதிலே நாராசம் காய்ச்சி ஊற்றுவது போலல்லவா இருக்கும்.

நாட்டிலே நல்ல திட்டங்கள் வேண்டும், மக்கள் சுகப்பட வேண்டும், வாழ்வு துலங்கவேண்டும், வஞ்சகம் வீழ்ந்துபட வேண்டும், வலியோர் எளியோரை வாட்டி வதைத்திடும் கொடுமை ஒழிக்கப்படவேண்டும், அதற்கு ஏற்றமுறையிலே ஆட்சிமுறை அமையவேண்டும் என்பதற்காக, எதிர்வரிசை நின்று சொந்தத்துக்கு ஒரு சுவையும் பயனும் எதிர்பார்க்காமல், மனதிற்குச் சரியென்று பட்டதை, மரியாதை கலந்த உறுதியுடன் நாம் எடுத்துச் சொல்கிறோமே, தம்பி! என்னென்ன ஏசிப் பேசுகிறார்கள், எவரெவரை விட்டுப் பேசவைக்கிறார்கள், அங்கம் அங்கமாக வர்ணிக்கிறார்கள், பரம்பரைகளை ஆராய்கிறார்கள், பழிச்சொற்களை வீசுகிறார்கள், பற்களை நறநறவெனக் கடிக்கிறார்கள், தாவித்தாவிக் குதிக்கிறார்கள், காங்கிரசார் - தலைவர்கள் வரிசையிலே உள்ளவர்களேகூட பார்க்கிறோம். இதோ அம்மையார், செம்மையாகக் கொடுக்கிறார்களே, சவுக்கடி. வாய் திறக்கிறார்களா! முடியுமா!! எல்லா ரோஷமானமும் ஆத்திரமும் ஆர்ப்பரிப்பும், நம்மை நோக்கித்தான் பாய்கிறதே தவிர, பத்தாம்பசலி என்கிறார், படுமோசம் என்கிறார், சுயநலமிகள் என்கிறார், சுகபோகிகள் என்கிறார், கொள்கை தெரியாதார் என்கிறார், கூடிக் குடிகெடுக்கிறார்கள் என்கிறார் அம்மையார்; ஒரு வார்த்தை, ஒரு கனைப்பு, ஒரு இருமல், தும்மல் கிடையாது! சுருண்டு சுருண்டு கீழேவிழும் அளவுக்குக் கொடுத்திருக்கிறார் அம்மையார்; துடைத்துக் கொண்டு, அதை எங்கே நாம் பார்த்துவிடுகிறோமோ என்று கவலைப்பட்டுத், தழும்புகளை மறைத்துக்கொள்கிறார்களே தவிர, எங்களையா இப்படிக் கேவலமாகப் பேசுவது? எப்படிப் பேசலாம்? எப்படிப் பொறுத்துக்கொள்வோம்? ஏன் பொறுத்துக் கொள்ளவேண்டும்? என்று கேட்கும் துணிவு இருக்கிறதா? எப்படி இருக்க முடியும்? அம்மையார்தான், புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே! கிளறினால், மேலும் பல வெளிவந்துவிடுமே என்ற கிலி! எனவேதான் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.

இருந்தபோது சாமரம் வீசியவர்கள், விலகி இழிமொழி கக்கினால், அதைச் சிந்தாமல் சிதறாமல் பிடித்துக்கொண்டு வந்து, சந்தைக் கடையிலே கூவிக் கூவி விற்கிறார்களே காங்கிரசார், நம்மைக் கேவலப்படுத்த; இலட்சுமி மேனன் தரும் வார்த்தைகள், நற்சான்றுப் பாத்திரங்கள் என்று கருதுகின்றனரா!!

நம்மைவிட்டு விலகியோர், நாடிப்பெற்ற கொள்கையை வெறுத்தோர், பழிசுமத்தி, இழிமொழி பேசி, பகைகக்கித், தங்கள் போக்குக்குச் சமாதானம், விளக்கம் தேடிக்கொள்கிறார்கள். அவர்கள் நம்மைப் பகைத்துக்கொண்டதால் பேசித்தீர வேண்டியது என்ற தரக்குறைவான முறை காரணமாக, கடுமொழி பேசினால், பார்! பார்! போடுபோடென்று போடுகிறான்! கேள்! கேள்! கொடு கொடு என்று கொடுக்கிறான் என்று கூவுகிறார்கள், கூத்தாடுகிறார்கள், இதே காங்கிரஸ்காரர்; கூட இருந்து கொண்டே குட்டுகிறார், குடைகிறார், இடிக்கிறார், உடைக்கிறார், மானத்தைப் பறிக்கிறார், யோக்கியதை கெட்டதை அம்பலமாக்கு கிறார் இலட்சுமி மேனன்; திருடனைத் தேள் கொட்டியது போலல்லவா, திருதிருவென்று விழித்தபடி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இலட்சுமி மேனன் சொல்லியது, பொது மக்கள் காதுக்கு எட்டாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்று தந்திர முறையைக் கையாளுகிறார்களே ஒழியப், பொங்கி எழுகிறார்களா? முடியுமா? அச்சம்! இப்படிப் பேசலாமா என்று கேட்க ஆரம்பித்து, அம்மையார், நான் சொல்வதை மறுத்துப்பேச வக்கிருந்தால் பேசுங்கள் என்று கூறிக் "குரங்குப் புண்'ணாக விஷயம் ஆகிவிடப்போகிறது என்ற அச்சம். நல்லவேளை, இந்த அம்மையார், பொதுப்படையாகப் பேசினார்கள்; ஊரும் பேரும் சொல்லி மேலும் மானத்தைப் பறிக்காது விட்டு வைத்திருக் கிறார்களே, அதுவரையிலே இலாபம் என்ற நினைப்பிலே இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தவிர, தரமான, தகுதியான கட்சியே கிடையாது; அதிலே உள்ளவர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள். ஆளத் தெரிந்தவர்கள்; மற்றவர்களுக்கு ஏதும் தெரியாது, தன்னல மறுப்பும் கிடையாது என்று, மேடையிலே நின்று மார்தட்டிப் பேசுகிறார்கள் காங்கிரசார். அதிலும் எவ்வளவுக்கெவ்வளவு பேசுபவர்களுக்கும் காங்கிரசின் தியாகச் செயல் நிரம்பிய வரலாற்றுக்கும் தொடர்பே இல்லாமலிருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு உரத்த குரலில், உறுதி காட்டி, உருட்டி மிரட்டிப் பேசுகிறார்கள்.

திடீரென்று கேட்டால், தண்டி என்பது ஊரின் பெயரா, ஆளின் பெரா என்றுகூடச் சந்தேகப்பட்டுக் குழம்பும் காங்கிரஸ் காரர்கள் இருக்கிறார்கள்.

ரவுலட் சட்டம் தெரியுமா என்று கேட்டுப்பார், தம்பி! புத்தம் புதுக்கதர் ஆடையை! விவரம் தெரியாமல் விழிப்பார்கள்! மகமதலி சவுக்கதலி தெரியுமா? தெரியாது! பாஞ்சாலத்திலே வீர மரபு ஏற்படுத்திய லாலா லஜபதிராய் வாழ்க்கை வரலாறு தெரியுமா? தெரியாது! வேறு என்ன தெரியும்? மந்திரியிடம் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொடுக்கக்கூடிய தரகர் யார்? அவருக்கு என்ன தரவேண்டும்? என்பது தெரியும்! எந்தத் தொகுதியில் எந்த ஜாதி மக்கள் அதிகம்? அது தெரியும்! மயக்குவதா மிரட்டுவதா அந்த மக்களை? அது தெரியும்! காங்கிரஸ் நடாத்திய வீரப்போராட்டங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள், எதுவும் தெரியாது.

அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையே இன்றைய காங்கிரசில் அதிகம்! அந்த எண்ணிக்கை வேகமாக வளர்ந்தும் விட்டது. அதுகண்டுதான், ஒரு நல்ல கட்சி, நாட்டுக்கு விடுதலை பெறப் பாடுபட்ட கட்சி, சபர்மதி முனிவர் என்று சான்றோர் போற்றிய காந்தியார் வளர்த்த கட்சி, இன்று இந்தக் கதிக்கு வந்துவிட்டதே என்று மனம் குமுறி, மனதில் உள்ள பாரத்தைக் குறைத்துக்கொள்வதுபோல, இலட்சுமி மேனன் அவர்கள் அவ்வளவு வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் உள்ள ஊழல்களை!

அது சரி அண்ணா! இலட்சுமி மேனன் எப்போது அப்படிப் பேசினார்கள்? எங்கே பேசினார்கள்? காங்கிரசில் உள்ளவர்கள், என்னைக் குடைந்து எடுப்பார்களே! உங்கள் அண்ணாத்துரை கூறுவது அண்டப்புளுகு என்பார்களே! நான் என்ன பதில் அளிக்க? - என்று கேட்கத் துடிக்கிறாய் - தெரிகிறது தம்பி! கூறுகிறேன், விவரம், தெரிந்துவைத்துக்கொள்.

பத்து நாட்களுக்கு முன்பு நாகபுரியில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. நாகபுரி நகர காங்கிரஸ் குழுத் தலைவர், தலைமையில்! அதிலேதான் அம்மையார், இலட்சுமி மேனன் இன்றைய காங்கிரசாரின் போக்கை அம்பலப்படுத்திக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். ஆங்கிலப் பத்திரிகையான "Times of India'' டைம்ஸ் ஆப் இந்தியாவில் விரிவாகவே வெளியிடப்பட்டிருக்கிறது.

அம்மையார் அருளிய மணிவாசகங்களிலே சில கூறவா?

"நேரு ஒருவர் மட்டுமே காந்திய வழியைக் கடைப் பிடிக்கிறவர்; மற்றக் காங்கிரசாரில் மிகப் பெரும்பாலோர், காந்திய வழி நடப்பதாக ஆணை யிடுகிறார்கள். ஆனால் அவர்கள், இந்தியாவில் உள்ள பிற்போக்குச் சக்திகளின் பிரதிநிதிகளாகவே உள்ளனர்.''

கபடர்! காதகர்! - எனும் கடுமொழிகள், அம்மையாரின் இந்தப் பேச்சிலே தொக்கி நிற்கின்றன என்பதைப் புரிந்துகொண்டாயல்லவா?

காந்தியத்தின்மீது ஆணையிடுகிறார்கள்.
பிற்போக்குத்தனத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். மிகப்பெரும்பாலான காங்கிரஸ்காரர்.

உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவதல்லவா, இது; நயவஞ்சகம், வெளிவேடம், ஏய்ப்பது என்றெல்லாம் கூறலா மல்லவா. இந்தக் கருத்தைச் சுருக்கமாக்கிக்காட்ட, நான் தம்பி, அவ்வளவையும் விட்டுவிட்டு, "பத்தாம்பசலி' என்று மட்டுமே குறித்துக் காட்டினேன். சொல்வதென்றால் இன்னும் நிரம்பச் சொல்லலாம்.

காந்தியத்தின்மீது ஏன் ஆணையிடுகிறார்கள்? பிறகு ஏன் பிற்போக்குச் சக்திக்குத் துணைநிற்கிறார்கள்?

காந்தியத்துக்கு மக்களிடம் நிரம்பச் செல்வாக்கு இருக்கிறது, எனவே, தாங்கள் அதன்வழி நடப்பதாக ஆணையிட்டால் மக்கள் தங்களை நம்புவார்கள், ஆதரவு தருவார்கள்! அதிலே கிடைக்கும் ஆதாயத்தைப் பெறலாம் என்ற எண்ணம். இது சுயநலமல்லவா? மக்களை நம்ப வைத்துக் கழுத்தறுப்பது அல்லவா? வெளிவேஷம் போட்டு மக்களை ஏய்ப்பதல்லவா?

நானா கூறுகிறேன்? இலட்சுமி மேனன்!

நயவஞ்சகம், வெளிவேஷம் போடுபவர், பத்தாம்பசலிக் கொள்கையுடன் குலவுபவர், ஒருவர் இருவர் அல்ல! அம்மையார் கூறுகிறார், நேரு நீங்கலாக உள்ள காங்கிரஸ்காரர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்று.

அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிதான், நாடு ஆள நாங்களன்றி வேறு எவருளர்? எவருக்கு உண்டு அந்தத் தகுதி என்று எக்காளமிடுகிறார்கள்; கேட்கப்போனால், சவால் விடுகிறார் சுப்பிரமணியனார்!!

மானம் போகக் காணோம் மிகப்பெரும்பாலான காங்கிரஸ் காரர்கள் நயவஞ்சகர்கள் என்ற பொருள்பட அம்மையார் பேசிடக் கேட்டு; நம்மீது பாய்கிறார்கள்!!

அம்மையார், காரணம் காட்டாமலிருந்தால், தூற்றித் திரிகிறார்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம். ஆனால், தக்க காரணம், விளக்கம் அளித்திருக்கிறார்கள்.