அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முயன்றால் முடியும்!
2

"நீண்ட காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டிய சமுதாய சீர்திருத்தத்துக்கான முற்போக்கான சட்டங்கள், பாராளுமன்றத்திலே கொண்டுவரப்படும் போதெல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்கள்தான், முன்னால் நின்று அவை களை எதிர்த்து வந்தனர். என் உள்ளம் வெதும்புகிறது''

எப்படி இருக்கிறது, தம்பி! பத்தாம்பசலிகள் என்று நான் குறிப்பிட்டேனே, தவறா? முற்போக்கான சட்டதிட்டங்கள் வருகிறபோது, காங்கிரசில் இருந்துகொண்டு எதிர்க்கிறார்கள் - நியாயமா? இவர்களா நாடாளத் தகுதிபெற்ற கட்சியினர்! இப்படிப் பட்டவர்களைக் கொண்டுள்ள கட்சியா மக்களை வாழ வைக்கும் கட்சி?

என் உள்ளம் வெதும்புகிறது என்று அம்மையார் மட்டுமா, அறிவுத் தெளிவுள்ள, முற்போக்குக் கருத்துள்ள, அனைவரும்தான் கூறவேண்டி இருக்கிறது. ஆனால், இப்படிப் பட்ட நயவஞ்சகர்களில் இருந்தல்லவா "ஆளவந்தார்கள்' பொறுக்கி எடுக்கப்படுகிறார்கள்.

அவர்களிலே பலர் கதர் கட்டுகிறார்கள். ஆனால், உள்ளூர வகுப்புவாதக் கட்சிகளான, ஜனசங்கம், இந்துமகா சபை, ஆர். எஸ். எஸ். - போன்றவைகளிடம் அன்பும் அபிமானமும் கொண்டுள்ளனர்; அவை களுக்குக் கட்டுப்படுகின்றனர்.

கட்டுவது கதர்! கனிவு காட்டுவது காட்டுமுறை விரும்பும் கட்சி களுடன்! கதர் கட்டுவது எதற்கு? ஊராரை மயக்க! மகாத்மாவின் தொண்டர்கள், தூயவர்கள் என்று பிறர் நம்பிக்கொள்ளும்படி செய்ய! ஆனால் உண்மையில்? வகுப்புவாதக் கட்சிகளுடன் குலவுகிறார்கள்.

தம்பி! கபடர்கள் என்று கூறினேன் - தவறா?

பணம்பிடுங்கிகள் என்று நான் குறிப்பிட்டது. பலருக்குச் சற்றுக் கடுமையான மொழி என்று தோன்றக்கூடும். ஆனால், பொருத்தமில்லாமல் கூறிடவில்லை என்பதை அமைச்சரின் மற்றோர் மணிமொழி கேட்டால் புரிந்துகொள்வார்கள்.

காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் கமிட்டிகளும் பணத்தை நாடும் போக்கு, வளர்ந்தபடி இருக்கிறது. விடுதலைப் போரிலே வீரத்தியாகம் புரிந்தவர்களைப் புறக்கணித்து விட்டுக் காங்கிரஸ் கமிட்டிகளுக்குப் பணம் கொடுக்கக் கூடியவர்களைக் காங்கிரஸ் கமிட்டிகள் ஆதரிக்கின்றன.

இது தேர்தலுக்கு "அபேட்சகர்களை'ப் பொறுக்கினார்களே, அதிலே வெட்டவெளிச்சமாகத் தெரிகிறதல்லவா? தொண்டர்கள், தூயவர்கள், தியாகிகள் இவர்கள் சீந்துவாரற்றுப் போய் விட்டார்கள்; பணம் பந்தியிலே என்று ஆகிவிட்டது என்று அம்மையார் வேதனைப்படுகின்றார்கள்.

முன்பெல்லாம் ஆக்க வேலைகளிலே ஈடுபடு வார்கள்; இப்போதைய காங்கிரசார் சில்லறைச் சண்டை களிலே மூழ்கிக் கிடக்கின்றனர். நாட்டு முன்னேற்றத்துக் கான திட்டங்களில் அக்கறை காட்டுவதில்லை. காங்கிரஸ் துரைத்தனம், மக்கள் நல்வாழ்வுக்காக என்னென்ன செய்திருக்கிறது என்பதைக் கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்லும் செயலில் ஈடுபடுவதில்லை.

எப்படி ஈடுபட அவர்களுக்கு மனம் வரும்? அவர்கள் அதற்கா சேர்ந்தனர் காங்கிரசில்? காந்தியப் போர்வையில் இருந்து கொண்டு அகப்பட்டதைச் சுருட்டத் திட்டமிடுகிறார்கள்; வெளிவேஷம்; சுயநலம்; நயவஞ்சகம்!!

இரண்டு திட்டங்கள்பற்றி, மிகுந்த சிரமப்பட்டுச் செலவிட்டு அச்சடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கச் சொல்லி அனுப்பிவைக்கப்பட்ட கட்டுக் கட்டான புத்தகங்கள், காங்கிரஸ் கமிட்டிகளில் கட்டுக்கூடப் பிரிக்கப்படாமல் கிடந்ததை என் கண்ணால் கண்டேன்.

தம்பி! இதைவிட வேதனையுடன் எவரும் பேசிட முடியாது. இப்போது எண்ணிப் பார்க்கச் சொல்லு காங்கிரசாரை, நான் குறித்துள்ள "அடைமொழிகள்' பொருத்தமற்றவைகளா என்று! கோபிக்காமல்! குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்று ஆத்திரப் படாமல், யோசித்துப் பார்க்கச் சொல்லு. இந்தக் குற்றச் சாட்டுகளைக் கூறுபவர், வேறு கட்சி அல்ல; காங்கிரஸ்! ஏனோதானோ! அல்ல! துணை அமைச்சர்!

மகாராஷ்டிரம் சென்றிருந்தார்களாம் அம்மையார்! அங்கு, தகுதியுள்ளவர்களைக் காங்கிரஸ் சார்பில் தேர்தலுக்கு நிறுத்தாமல், கசடர்கள், காதகர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், நேற்றுவரை காங்கிரசை எதிர்த்தவர்கள் ஆகியோர் தேர்தலுக்குக் காங்கிரஸ் அபேட்சகர்களாக நிறுத்தப்பட இருக்கிறார்களாம். பயங்கரமாக இருக்கிறது என்கிறார் இலட்சுமி மேனன்.

மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல, எங்கும் இதேதான்.

பணம் இருக்கவேண்டும் நிரம்ப! எப்படிச் சேர்த்த பணமாக இருந்தாலும் சரி! கள்ளமார்க்கட் பணமாக இருந்தால், மிக நல்லது. ஏனெனில், கணக்குக்காட்டவேண்டிய அவசிய மில்லாமல் தேர்தலில் செலவழிக்கலாம். பண்பு இருக்கிறதா? பொதுத்தொண்டாற்றிப் பயிற்சி இருக்கிறதா? சட்டமன்றத்திலே பணிபுரியும் தகுதி இருக்கிறதா? இவைகளைக் கவனிக்கவே இல்லை! பணம் உண்டா! - ஏராளமாக! தாராளமாகச் செலவிடத் தயாரா? அப்படிப்பட்டவர்தான் வேண்டும்? எதற்கு? துறவியாக வாழ்ந்து, தூய்மைக்கும் வாய்மைக்கும் மதிப்பளித்த மகாத்மா வளர்த்த கட்சியைக் காப்பாற்ற! வெட்கக்கேடு இதைவிட வேறு உண்டா? ஆனால், நாட்டிலே இன்று இதைத்தானே காண்கிறோம். ஆங்காங்கு, தேர்தலில் வேட்பாளர்களாகக் காங்கிரசால் நிறுத்திவைக்கப்பட்டிருப்பவர்களின் தகுதி, திறமை, பண்பு, பயிற்சி, முன்னாள் தொடர்பு இவைகளைச் சற்றுப் பார்க்கச் சொல்லேன், தம்பி!

தம்பி! பார்க்கச் சொல்லேன் என்று நான் கூறுகிறேனே தவிர, இப்போதே மக்கள் இதைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது, எனக்குத் தெரியாமல் இல்லை.

அதுமட்டுமல்ல, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்கள் உளம் வெதும்பித்தான் கிடக்கிறார்கள். எவரெவர் ஊர்க்குடி கெடுப்பவர்களோ அவர்களெல்லாம் காங்கிரசில் இழுத்துப் போடப்பட்டு, அபேட்சகர் ஆக்கப்பட்டு உலா வருகின்றனர். அவர்களுக்குக் கொடிபிடிக்கும் காலமும் வந்ததே என்று வெட்கித் தலைகுனிகிறார்கள் விவரம் தெரிந்த காங்கிரஸ்காரர்கள். களத்துமேடு கால்படியாவது கிடைக்காதா என்று அலையும் பேர்வழிகள்போல, கதர்போட்டுக்கொண்ட கனவான் கூடச் சென்று "காசு' பறிக்கலாம் என்று உள்ளவர்களும் உள்ளனர். ஆனால், காங்கிரசில் இழுத்துப்போடப்பட்டுள்ள பணக்காரர் வீட்டு வேலையாட்கள்கூடக் காங்கிரஸ் கட்சியை இன்று மதிக்க மறுக்கிறார்கள் - இவ்வளவு தரம் குறைந்து போய்விட்டதே இந்தக் கட்சி என்று.

தம்பி! இதோ ஒரு குடிசை! சற்று உள்ளே செல்வோமா - கற்பனை உலகுதானே! யாரும் நம்மைக் காணமாட்டார்கள், வா; அஞ்சாமல் வருகிறான் பார்! வண்டி ஓட்டும் முனியன்! மிட்டா மாணிக்கத்திடம் வேலை. அவன் மனைவி முத்தம்மா! இருவரும் பேசிக்கொள்கிறார்கள் கேட்போம், சந்தடி செய்யாமல், உற்றுக் கேள்:

முனியன் :
அய்யா செய்யும் அக்கிரமம்
அய்யே! உனக்குத் தெரியாதென்று
கேலி என்னைச் செய்தாயே!
கேளடி! கேளடி! முத்தம்மா!!
நாடு மீட்டவர் நல்லவர்கள்
ஆட்சி நடத்தி வருபவர்கள்
காங்கிரசார் எனச் சொன்னாயே
அந்தக் காங்கிரஸ்காரர் செயலதனை
கேளடி முத்து! கேளம்மா
நம்ம அய்யா வீடு வந்தார்கள்!!

முத்தம்மா:
ஊரை ஆளும் உத்தமர்கள்
உங்க அய்யாவிடமா வந்தார்கள்?
உலகம் புகழ வாழ்பவர்கள்
உங்க அய்யாவிடமா வருவார்கள்?
நாடு மெச்ச வாழ்பவர்கள்
நாடி வருவரோ, அவரிடந்தான்?

முனியன்:
வந்ததைக் கண்ணால் பார்த்தேண்டி!
வாய்பிளக்க நின்றேண்டி!
வந்தார் காங்கிரஸ் தலைவரெலாம்
வரிசையாகவே மாளிகைக்கு!

முத்தம்மா: வந்து?

முனியன்: வந்தா? மாலைகள் பலப்பல போட்டாரடி!
மண்டியிடக்கூடப் பார்த்தாரடி!
மானம் காத்திட வேணுமென்று
மனுக்கள் கொடுத்தார் அய்யாவிடம்!
காங்கிரஸ் வெற்றி உம்கரத்தில்
கருணை காட்ட வேண்டுமென்றார்!

முத்தம்மா:
உங்க அய்யாவிடமா?
அறுந்த விரலுக்கும் சுண்ணாம்பு
அய்யே! அவர்தர மாட்டாரே!
அடுத்த வீட்டான் வாழ்ந்திட்டால்
ஆத்தே! வயிறு எரிவாரே!
அய்யா இலட்சணம் ஊரறியும்
யார்தான் அவரை நாடிடுவார்!

முனியன்:
எதையோ சொல்லு முத்தம்மா!
எவன் உன் பேச்சை மதிக்கிறான்!
அய்யா தேர்தலில் குதிக்கிறார்
ஆறேழு இலட்சம் செலவழிக்கிறார்!!

முத்தம்மா:
இவரா காங்கிரஸ் கட்சியிலே
இப்ப தேர்தலில் நிற்கிறார்?
கள்ளுக்கடையை நடத்தினவர்
இந்தக் கண்ணியவான் அல்லவா?

முனியன்:
அய்யா சொன்னார் அதைக்கூட,
அதனால் பாதகமில்லை யென்று
அடித்துப் பேசினார் பெரியவரும்,
மண்டலக் காங்கிரஸ் தலைவரடி!
மந்திரிக்கும் அவர் சொந்தமடி!
கதரும் கட்டிப் பழக்கமில்லை
கண்ட பயல்களைக் காண்பதில்லை!
கண்டிப்பான பேர்வழி நான்
என்றும் சொன்னார், எஜமானர்.

முத்தம்மா:
அய்யா சொன்னதைக் கேட்ட பின்பு!

முனியன்:
மெய்யாத் தாண்டி, எல்லோரும்
மேதையின் பேச்சிது என்றார்கள்!

முத்தம்மா:
ஐய்யே! இது அநியாயம்
அடிப்பவர் கொள்ளை பல தொழில்
அதை அனைவரும் அறிவார் தெளிவாக
அன்பும் அறமும் அவர் அறியார்
அழுத கண்ணைத் துடைத்தறியார்
எரிந்து விழுவார் எவரிடமும்
எவருக் கிவரால் உபகாரம்?
சத்திரம் சாவடி கட்டினாரா?
சாலைகள் சோலைகள் அமைத்தாரா?
சாத்திரம் பலபல கற்றாரா?
சான்றோருடன் சேர்ந்துழைத்தாரா?
சட்டம் திட்டம் அறிவாரா?
சட்டசபையில் நின்று உரைப்பாரா?
சஞ்சலம் துடைத்திட வல்லவரா?

முனியன்:
அதெல்லாம் எனக்குத் தெரியாது!
ஆமாம், அவர்க்குப் படிப்பில்லை!
ஆன்றோர் பேசும் சொல்லெல்லாம்
அவர்க்குக் காதில் ஏறாது.
அய்யா உழைக்க மாட்டார்தான்!
அதனால் என்ன முத்தம்மா!
அனைவரும் கூடி ஒருமுகமாய்
உம்மால்தான் இது ஆகுமய்யா
உடனே கைஎழுத்திடும் என்றார்.

முத்தம்மா:
இப்படியா காங்கிரஸ் சீரழியுது
எப்படித்தான் ஒப்பி மக்கள் ஓட்டளிப்பார்கள்?
தப்பிதங்கள் மெத்தவுமே செய்தவராச்சே
தருமம் துளிகூடச் செய்தறியாரே!

முனியன்:
புலம்பிக் கிடடி முத்தம்மா!
அய்யா, புதுசா கதரு போட்டாச்சி!
போகுது புறப்பட்டுக் கொடிபடையும்
போலோ பாரத் மாதாக்கீ
ஜே! ஜே! என்று கூவிக்கொண்டு.

முத்தம்மா:
ஓட்டுக் கேட்கவா போகுது
உலக உத்தமர் வளர்த்த படை?

முனியன்:
அய்யாவுக்கு ஓட்டுபோடச் சொல்லி நேருவும்
அனைவரையும் கேட்கிறாரே இன்னும் என்னடி?

முத்தம்மா:
நேருவா இவருக்கு போடச்சொல்லுறார்
நேர்மைக்கும் இவருக்கும் பகையாச்சே!
நேத்துவரை, காங்கிரசின் எதிரியாச்சே!

முனியன்:
இருந்தால் என்ன முத்தம்மா!
இதுதான் இப்பத்திக் காங்கிரசு!!

முத்தம்மா:
"ஓட்டு' சீட்டுள்ள மக்களெல்லாம்
உன்னைப்போல இருந்திடப் போவதில்லை
உழைப்புக்கும் உண்மைக்கும்
தோல்வி இல்லை பார்!
உங்க எஜமானருக்குப் பட்டை நாமம்தான்!
ஊர்க்குடி கெடுப்போர்க்கு ஓட்டு இல்லை
ஊராளும் காங்கிரசு பேர் சொன்னாலும்
உதயசூரியன் சின்னந்தான்
உழைப்பின் சின்னம், ஊரறியும்.
உழைக்கிற மக்கள் "ஓட்டு' உண்மையாக
அதற்கேதான்!
ஊர்முழுதும் படைதிரட்டி
உங்க எஜமானரை நான்
தோற்கடிப்பேன்!!
"உதயசூரியன்' சின்னம்
வெற்றிபெற
உழைப்பேன்; இது உறுதி
அறிந்திடு நீ!

முனியன்:
மூளை உனக்குத் தானோடி
மொத்தமாய் இருக்குது முத்தம்மா!
நானும் உண்மை அறிவேண்டி
நாடும் தூங்கிக் கொண்டில்லை!
நம்மைப்போலப் பாடுபடும்
ஏழை மக்கள் எல்லோர்க்கும்
ஏற்ற சின்னம் அறிவேண்டி
"உதயசூரியன்' நம் சின்னம்
உழைப்போம், வெற்றி பெற்றிடுவோம்.

தம்பி! நாடெங்கும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்ச்சியின் விளைவுகளாக அமைந்துள்ள எழுச்சிமிகு நிகழ்ச்சிகளிலே, ஒன்று இது.

மக்கள் தெளிவுடன்தான் உள்ளனர் பயம் வேண்டாம்!

பணம் படைத்தோர்களைக் காங்கிரஸ் கட்சி எதற்காகப் பிடித்திழுத்துத் தேர்தலிலே நிறுத்துகிறது என்பது, "பாமரர்' என்று ஆட்சியாளர்களால் ஏளனமாகக் கருதப்படும் மக்களுக்கும், மிக நன்றாகப் புரிந்துதான் இருக்கிறது. எனவே தம்பி, இனி உன் வேலை, ஏற்கனவே, மக்கள் அறிந்திருப்பதை, அடிக்கடி பக்குவமான முறையிலே, கவனப்படுத்தியபடி இருப்பதுதான்.


தி. மு. க.
சட்டசபை சென்று
கொள்கை இழக்கவில்லை
கோணல் வழி செல்லவில்லை.
கோலேந்தும் காங்கிரசின்
கோலம் கண்டு
மயங்கவில்லை
மருளவில்லை
நாடு செழித்திடும் திட்டம்
நல்லாட்சிக்கான சட்டம்
வேண்டுமென
வாதாடி
ஏழை வாழ வழி தேடி
ஏற்ற பொறுப்பை
நிறைவேற்றி
விருந்து வைபவம்
நாடாமல்
எதிர்க்கட்சியாய்
பணியாற்றி
விதவித வடிவம்
தேடாமல் நாடு மீட்டிட,
கேடு அழித்திட
எதிர்ப்புக்கண்டு அஞ்சாமல்
ஏளனம் கேட்டுப் பதறாமல்
எங்கள் தொண்டு நாட்டுக்குண்டு
எதையும் தாங்கும் இதயம் உண்டு
தென்னகம் பொன்னகம் ஆகிடவும்
தேம்புவோர் நிம்மதி பெற்றிடவும்
எல்லோருக்கும் நல்வாழ்வு எங்கும் நீதி நிம்மதி
கண்டிட நாளும் போராடி!
பணிபுரிவது நாடறியும்
அறிவொளி பரப்பி
அரசியல் விளக்கி
மக்களாட்சியின் மாண்பு காத்திட
மீண்டும் அனுமதி வேண்டி நிற்கிறோம்.
நாட்டினரே நல்லாதரவு தந்திடுவிர்
பாதை வழுவாது பணிபுரிவோம்
பாட்டாளியின் அரசு அமைப்போம்
ஏழையை வாட்டும் விலைவாசி
முதுகை முறிக்கும் வரிச்சுமைகள்
எதிர்ப்போம் குறைப்போம் உமதருளால்!
செல்வம் சிலரிடம் சிக்குவதும்
செத்திடும் நிலையில் மிகப்பலரும்
உள்ள கொடுமை களைந்திடுவோம்!
உறுதி தளரோம்! இது திண்ணம்!
இம்முறை செய்திட அலுவல்கள்
ஏராளம் - குவிந்திருக்குது.
தொண்டுகள் புரிந்திட அனுமதி தந்து
எமை வாழ்த்துவீர், தோழர்காள்!
திருவிடம் விடுபட! தீமைகள் பொடிபட!
தி. மு. க. தொண்டு
நாட்டுக்கு என்றும் உண்டு!
தம்பி! இதை நாடெங்கும் உள்ளவர்கள் அறிந்திடச் செய். - பார், பிறகு, எங்கெங்கும், ஆதரவு பெருகி வருவது காண்பாய்.