அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாநலம்
1

பயன் தராததைப் பேசுபவன் பதர்
ஜனநாயக நாள்களில் நாநலம் தேவை !
கொக்கொக்கக் கொத்திட வேண்டும்
பேச்சிலே பக்குவம், பயன், தெளிவு வேண்டும்
எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புக் கூடாது
காமராசர் விரும்பும் ஜனநாயகம்

தம்பி,

பயனறிந்து பக்குவம் கெடாமல், பண்பு குறையாமல், பேசிட வேண்டும். அதுபோன்றே, மேல்மட்டத்து இடம் கிடைத்துவிட்டது என்பதாலோ, நேரம் தனக்குச் சாதகமானது என்பதாலோ, மற்றவர்களைக் கெடுத்திடத்தக்க இன்னலை உண்டாக்கத்தக்க விதமாகவும் பேசக்கூடாது.

***

"பயனில சொல்லாமை' என்று ஓர் அதிகாரமே அளித்திருக்கிறார் வள்ளுவர்.

வெறும் சொல்வன்மையைக் காட்டவோ, தான் எது சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையிலே சிலர் உளர் என்ற நினைப்புடனோ, எந்தவிதமான பயனும் தராததைப் பேசுபவனைப் "பதர்' என்றே கடிந்துரைக்கிறார்! "பதர்' உருவில் நெல்போலத்தான் இருக்கிறது; பயன்? ஏதுமில்லை அல்லவா! அதுபோலத்தான் பயனற்றன பேசுவான் மனித உருவில்தான் இருக்கிறான், ஆனால், பயன் ஏதும் இல்லை என்கிறார்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்;
மக்கட் பதடி எனல்.

ஜெர்மன் மருந்தாவது ஜப்பான் மருந்தாவது என்று பேசினானே, அந்தப் பேச்சு பயனற்றது மட்டுமல்ல, பலருக்கும் கோபமூட்டிடத் தக்கது. அவ்விதமானவனைத்தான் வள்ளுவர் முதலில் காட்டிச் சாடுகிறார்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்.

நான் உண்மையைத்தானே சொன்னேன் என்று வாதாடுவானல்லவா, அதனையும் விளக்குகிறார் வள்ளுவர். வாய்மைக்கு ஒரு இலக்கணம் வகுத்தளிக்கிறார்:

வாய்மை எனப்படுவது யாதுஎனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

என்று கூறிவிட்டு, அப்படியானால் பொய் பேசுவதோ என்று கேட்பார்களே என்று உணர்ந்து, அதற்குத் தக்க விளக்கம் தந்துவிடுகிறார்:

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

தம்பி! நன்மை பயக்கும் என்கிறபோது பேசுபவருக்கு நன்மை பயப்பது என்று கொள்ளக்கூடாது; மற்றவர்க்கு என்பதே பொருள்.

மற்றும், கடுஞ் சொல் கூடாது என்பது குறித்தும், தெளிந்த பிறகு பேசு; தெரிந்ததை எல்லாம் கூறிவிடலாம் என்று எண்ணிப் பேசாதே என்றும், குறிப்பறிந்து பேச வேண்டும், அவை அறிந்து பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

பேசுவது பற்றி இவ்வளவு கூற வேண்டுமா என்று என்னை எங்கே கேட்டு விடுகிறாயோ என்றுதான், தம்பி! வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவரே, அதுபற்றிய இலக்கணத்தை மிக விளக்கமாக அளித்திருக்கிறார் என்பதனை எடுத்துக் காட்டுகிறேன்.

தம்பி! எழுதுவது என்பதைவிட எளிதாக உள்ளதல்லவா, பேசுவது? ஒரு சமூகத்தில் விரல் விட்டு எண்ணத்தக்க சிலர் மட்டுமே எழுத்தாளர் ஆகின்றனர்; அவர்களில் சிலரே எழுத்தாளர் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். பேசுபவர் என்று சமூகத்தில் ஒரு பகுதியைப் பிரித்துக் காட்ட முடியாது; பேச்சாளர்கள் இருக்கிறார்கள், சமூகத்தில் ஒரு பகுதியினராக; ஆனால் பேசுவோர் சமூகத்தினர் முழுவதுமல்லவா! பேசுவோர், எங்குப் பேசினும், எவரிடம் பேசினும், எதற்காகப் பேசினாலும், ஏதேனும் ஓர் விளைவு ஏற்பட்டுத்தானே தீரும்? ஒரு அவசரப் பேச்சு, ஆத்திரமிக்க பேச்சு, பழிச்சொல், சமூகத்தில் எத்தனை கேட்டினை உண்டாக்கிவிட முடிகிறது! தீயினால் சுட்ட புண்ணை ஆற்றிவிடலாம், நாவினால் சுட்ட வடு ஆற்ற முடியாதது என்று அறிவிக்கிறார்.

தீப்பட்ட இடம் புண்ணாகிப் பிறகு உலர்ந்து வடுக்கூடத் தெரியாது போய்விடும் தக்க மருத்துவ முறையினால், ஒருவருடைய பேச்சினால் மனம் புண்ணாகிப் போனால், அது ஆறாது, ஆற்றவே முடியாத புண்ணை ஏற்படுத்தக் கூடிய பயங்கரமான கருவி நாக்கு என்பதால்தான்.

யாகாவாராயினும் நா காக்க!

என்று எச்சரிக்கிறார், காத்திடுவது எங்ஙனம் என்பது பற்றிய விளக்கமும் அளிக்கிறார்; குடும்பத்தாருக்கு, நண்பர்களுக்கு, அமைச்சர்கட்கு, தூதுவர்க்கு.

கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி யுரைப்பான் தலை.

தன் கடமை என்ன என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும், காலம் இடம் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று வள்ளுவர் தூதருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்.

***

தம்பி! நாநலம், நாகாத்திடல், நல்லன நவின்றிடல், அல்லன தவிர்த்திடல், பயனில் சொல்லாமை எனும் பண்புகள் மற்ற எந்த நாட்களையும் விட ஜனநாயக நாட்களில் மிகமிகத் தேவைப் படுகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளுகிறார்கள் என்பது ஜனநாயக முறை. இது நடைமுறையில், மக்கள் தங்கள் சார்பில் ஆட்சி நடத்தச் சிலரைத் தேர்ந்தெடுத்து அனுப்பு கிறார்கள் என்று ஆகிறது. சிலரைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது என்ற முறை இருக்கிறது என்றால், அதன் முழுப் பொருள், பலருக்கும் தேர்தலில் ஈடுபடும் உரிமை இருக்கிறது என்பதாகும். இந்தப் "பலரில்', சிலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்குப் பலர் பேசுவதனையும் கேட்டு, சீர்தூக்கிப் பார்த்து, பயன் அறிந்து, தக்காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, தேர்தலில் ஈடுபடுபவர்கள், மக்களிடம், தமது நோக்கம், திறம் பற்றிய விளக்கமளித்துப் பேச வேண்டும். அதற்கு நாநலம் இருந்தால் மட்டும் போதாது; பறை ஓசை கிளப்பிடின் யாழ் இருக்குமிடம் தெரியாது போய்விடும்! சங்கு கொண்டு ஊதிடின் குழல் இனிமை விளங்கிடாது.

***

பேச்சிலே அழுத்தந் திருத்தம் இருந்திடல் வேண்டும், அப்போதுதான் கேட்பவர் மனத்திலே அந்தப் பேச்சுப் பதியும், ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இது ஒரளவுக்கு உண்மை.

பொறி பறக்கப் பேசினான் என்று கூறுகிறோமல்லவா! பொறி மட்டும் இருந்திடின், பயன் இல்லை; ஒளி கிடைத்திட வேண்டும். சம்மட்டி அடி நொறுக்கத்தக்க வலிவு மிக்கது. ஆனால், அது இரும்பு அடிக்க அல்லது பாறையைப் பிளக்கத் தேவை, ஆடையின் அழுக்கெடுக்க அல்ல, பொன்னை அணியாக்கிட அல்ல!

இது "மடத்தனம்' - இவர்கள் "முட்டாள்கள்' இதுகளை "ஒழித்துக் கட்டாமல் விடமாட்டேன்' என்றெல்லாம் பேசுவது எளிது; அதிலும் முழுக்க முழுக்க நம்மவர்கள் உள்ள அவை என்று அறிந்துவிட்டால், மிக மிக எளிது; கைதட்டுதல் பெற இது பயன்படும், இதயத்தைத் தடவிட அல்ல.

குழலூதும்போது கவனித்துப் பார் தம்பி! விரல்கள் எவ்வளவு "நளினமாக' வேலை செய்கின்றன என்பது விளங்கிடும். ஓவியம் தீட்டுவோன் தூரிகையை எவ்வளவு பக்குவமாகப் பயன்படுத்துகிறான் என்பதனையும் பார்த்திடு, கல்லிழைத்த நகை செய்திடும் பொற்கொல்லரின் கைத்திறனையும் பக்கமிருந்து பார்! பொன்னார் இழை கொண்டு ஆடை நெய்திடும் கலைஞன் என்ன முறையில் வேலை செய்கிறான் என்பதனைப் பார்! கட்டை பிளப்பவன், கோடாரியை வீசிடும் விதத்தையும் பார்!

முன்னவர்கள் புதிய "படைப்புகளை'ச் செய்தளிக்கிறார்கள்; கோடாரிக்காரன் கிடைத்ததை உடைத்துத் தருகிறான். பேச்சிலேயும், இப்படி வகை உண்டு.

நாம் கூறிடும் கருத்தினை ஏற்ப மறுப்பவர்கள் எல்லோரும் மாற்றார்கள் - நம்முடைய கண்டனக் கணைக்கு ஆளாக வேண்டியவர்கள் அல்லது நம்மாலே அலட்சியப்படுத்தத் தக்கவர்கள் என்ற நினைப்புடன் - முனைப்புடன் என்றாலும் தகும் - பேசுவது ஏற்கனவே நம்மோடு இணைந்து போய் விட்டவர்களுக்குக் கரும்பு! மற்றவர்களுக்கு அது வேம்பு மட்டுமல்ல, எட்டி என்றே தோன்றும்; நம்மை நெருங்கிடவே அவர்களுக்கு விருப்பம் வராது!

பொறி பறக்கப் பேசுவது என்றால், ஒருவரையும் அருகே நெருங்கவிடாதபடிப் பேசிடுவது என்பதல்ல பொருள்; கொள்கையிலே நமக்குள்ள ஆர்வம் கொழுந்து விட்டு எரிந்து, அதன் பொறிகள் பேச்சின் மூலம் சிதறுகின்றன என்பதுதான் உண்மையான பொருள்.

கனியிருக்கக் காய் கவருவது போன்றது என்றார் வள்ளுவர் கடுஞ்சொல் பேசும் முறையை.

நாம் எங்கு இடம் பெற்றிருக்கிறோமோ, அந்த இடத்திற்கு உள்ள வலிவு, நமக்கும் வந்து சேருகிறது. இது இயற்கை. நாற்பது மைல் வேகத்தில் ஓடும் மோட்டாரில் உள்ளவன் தானாக நடந்தால் "மாதம் காதவழி' மட்டும் போகத்தக்க "நோன்ஜான்' ஆக இருந்தாலும் அவன் மேற்கொண்ட பயணம், வேகமாக அமைந்து விடுகிறது.

அதனை உணராமல், அவன், நான் மணிக்கு நாற்பது மைல் வேகம் செல்லவல்லேன் என்று கூறிடின், அவனைப் பேதை என்று அறிவாளர் கூறுவர்; கூறுவரா? இல்லை! எண்ணிக் கொள்வர்!

இருக்கும் இடத்தின் வலிவு கண்டு இறுமாந்து கிடந்திடும் இயல்பினின்றும் தப்புவது மிகக் கடினம். பயில்வான் வீட்டில் பாத்திரம் துலக்கும் வேலைதான் என்றாலும், அவன் பக்கத்து வீட்டுக்காரனிடம் வம்புக்கு நிற்கும்போது, பல்லைத் தட்டிக் கையில் கொடுத்துவிடுவேன் பயலே! என்றுதான் ஆர்ப்பரிக்கிறான்!

ஆட்சியிலே அமர்ந்திருக்கும் கட்சியிலே புகுந்து கொள்ளும் "அடைக்கலம்' முழக்கம் எழுப்பும்போது, ஆட்சிக் கட்சியின் முழு வலிவும் அந்த நா வழி வழிந்திடுவதைக் காண்கிறோமல்லவா! அதுபோலத்தான்.

அத்தகைய இயல்பினரால் இருக்குமிடத்திலே கிடைக்கும் இனிப்புப் பண்டங்களைப் பெற்றிட முடியுமேயன்றி, புதிதாக ஒன்றையும் செய்திடவோ, உள்ளதைப் பெருக்கிடவோ முடியாது.

இருக்கும் இடம் வலிவுள்ளது என்பதால் எழும் எண்ணம் தடித்துத் தடித்து, எதையும் செய்தளிக்கத் தக்க ஆற்றலையே மாய்த்துவிடும்!

தம்பி! நீ இருக்கும் இடம் இனிப்புப் பண்டம் நிரம்பிக் கிடந்திடும் இடமுமல்ல, அதிகாரம் அளித்திடும் வலிவு உள்ள முகாமுமல்ல.

ஆட்சியால் கிடைத்திடும் வலிவே, நாநலமற்றவர்களால் சிதைக்கப்பட்டுப் போய்விடும் என்கிறபோது, ஆட்சியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளவர்களின் கருத்துகளுக்கு மறுப்புக் கூறிடும் முகாமில் உள்ளவர்கள், நா நலத்தை எத்தனை பக்குவமுள்ளதாக்கிடப் பயிற்சி மேற்கொண்டபடி இருக்க வேண்டும் என்பதனை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

நம்முடன் இல்லாதவர்களையும் நம்முடன் வந்திடச் செய்திடும் வகையிலே பேச்சு சிறந்திட வேண்டும். நம்மை அந்த நெறியினின்றும் மாறிடச் செய்வதற்காக மற்றவர்கள் தடித்த சொல் வீசும்போது, பொறுத்துக் கொள்ளும் மனத்திடம் இருக்க வேண்டும். சாக்ரடிஸ், இன்று உலகோரின் வழிகாட்டிகளில் ஒருவராக அரசோச்சுகிறார். ஆனால், அவர் வாழ்ந்த நாட்களில், நாடகம் எழுதிடும் புலவரொருவர் அழுக்காறு காரணமாக சாக்ரடீசைக் கேலி செய்திட, கேவலப்படுத்திட, "மேகங்கள்2 என்றோர் நாடகம் நடத்திக் காட்டினாராம். அந்த நாடகத்தை, தம்பி! சாக்ரடீசே நேரிலே கண்டு களித்தாராம்! எத்தனை பொறுமைக் குணம், சகிப்புத்தன்மை என்றுதான் நீ எண்ணி எண்ணிப் பாராட்டுகிறாய். நான் தம்பி! அதனை எண்ணிட வில்லை, எத்தனை நம்பிக்கை சாக்ரடிசுக்கு, தன்னைக் கேவலப்படுத்தும் ஒரு நாடகம், தன் செல்வாக்கைத் துளியும் சிதைத்திடாது என்பதில்! அந்த நம்பிக்கைதான் எனக்கு வியப்பளிக்கிறது.

நாநலத்துடன், நமது சொல், வெல்லும் என்ற நம்பிக்கையும், வெற்றி கிட்டத்தக்க முறையில் பணியாற்றிடும் திறனும், அவற்றை விட, காலம் வருகிற வரையில் காத்திருக்கும் பொறுமையும் வேண்டும்.

கொக்கொக்கக் காத்திரு!
அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு

என்கிறார் வள்ளுவர்.

துள்ளி ஓடிடும் சிறு மீன்கள், கரையில் உள்ள கொக்கு கண்ணற்றது, செயல் திறனற்றது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கும் ஏன்? கொக்கு, தான் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறதே அதனால்.

இத்தனை மீன்கள் துள்ளி ஓடின, கரையோரக் கொக்கு ஏதும் செய்திடவில்லை, இயலவில்லை; இனி நமக்கென்ன பயம் என்று எண்ணிக் கிளம்புகிறது, சிறிதளவு பெரிய மீன்! என்ன ஆகிறது? கொக்கு கொத்திக் கொள்கிறது! கொக்கு அங்கே இருந்தது அதற்குத்தானே?

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

இரைதேடிக் காத்திருப்பதும், கிடைத்ததும் பற்றிக் கொள்வதும் கொக்குக்கு மட்டும்தானா இயல்பு; மற்றப் பலவற்றினுக்கும் உண்டே! ஏன் கொக்கினை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறார் வாக்குண்டாம் பாடிய ஔவையார் என்று கேட்கத் தோன்றுகிறதா தம்பி? காரணத்தோடுதான், காட்டியிருக்கிறார்.

புலிகூட இரை தேடிக் காத்திருக்கிறது, பதுங்கிக் கொள்ளக் கூடச் செய்கிறது.

வல்லூறு கூடப் புறாவைத் தேடி வட்டமிடுகிறது.

ஆனால், பதுங்கி இருந்திடும் புலி, மானைக் கண்டதும் பாய்கிறது, மான் ஓடுகிறது, புலி துரத்துகிறது, பல மைல்கள் கூட அலுப்பு மேலிட ஓடி ஓடி வேட்டையாடிய பிறகே மானைக் கொல்ல முடிகிறது புலியினால்; ஒரு போராட்டம் நடைபெறுகிறது.

வல்லூறு பாய்ந்து வருவது கண்ட புறா தப்பித்துக் கொள்ளப்படும் பாடு, கொஞ்சமல்ல.

கொக்கு மீனைக் கொத்துவது அவ்விதமல்ல! என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் மீன் துள்ளி வருகிறது. கொக்கு அதைக் கொத்தப் போக, மீன் தப்பித்து ஓட, கொக்கு விடாமல் துரத்திச் சென்று கொத்திடும் முறை இல்லை. மீன் வருவதும் கொக்கு கொத்துவதும், மீன் சிக்கிக் கொள்வதும் உடனே இரையாகிவிடுவதும் எல்லாம் கண் மூடிக் கண் திறப்பதற்குள். மீன் வருவதற்கும், மீன் சிக்குவதற்கும் உள்ளே இரையாகிச் செல்லுவதற்கும், இடைவெளிகளே இல்லை; எல்லாம் ஒரே நேரத்தில் நடைபெற்று விடுகிறது. அதனால்தான் கொக் கொக்கக் கொத்திட வேண்டும் என்றார். பாம்பு கூட, ஓசைப்படாமல் தீண்டிவிடுகிறது. ஆளை வேட்டையாடிக் கடிப்பதில்லை. ஆனால், மனிதனைத் தீண்டித் தீர்த்துக் கட்டுமேயன்றித் தின்பதில்லை. கொக்கு தீண்டித் தீனியாக்கிக் கொள்கிறது மீனை. அவ்வளவு கூர்மையான பார்வை. அத்தனை நேர்த்தியான குறிபார்த்திடும் திறன், அவ்வளவு வேகமான கொத்தும் தன்மை, கொக்குக்கு! அத்தனை திறமையாக இரை தேடிக் கொண்ட கொக்கு, புலிபோல உறுமுவதில்லை, இரத்தம் குடித்த மகிழ்ச்சியில் புலி படுத்துப் புரள்கிறதே, அதுபோலவும் இல்லை, ஏதும் அறியாததுபோல, எப்போதும் போல இருக்கிறது கொக்கு, காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு! இவற்றினை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் வள்ளுவர், "கொக்கொக்க' என்று கூறினார்.

***

துடுக்குத்தனமாக புட்டோ பேசியதைக் கண்டதாலே, பேச்சின் தன்மை பற்றிய விளக்கம் அளித்திட முற்பட்டிருக்கி றேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம், தம்பி! அறிவுத் தெளிவும், சராசரிப் பண்பும் உள்ளவர்கள் சில வேளைகளில் பக்குவம் மறந்து பேசிவிடுகிறார்களே, அவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, இதனைக் கூறுகிறேன், வெறியும் மண்டைக் கனமும் கொண்டு காட்டு மிராண்டியாக உள்ள புட்டோ போன்றோரைத் திருத்த முடியும் என்ற நோக்கத்துடன் அல்ல; லால்பகதூர் கூறியபடி, புட்டோ போன்றாரின் பேச்சுக்கு வார்த்தைகளை வீசிப் பதில் அளிக்கத் தேவையில்லை, தீரமிக்க நமது படை வீரர்களின் வல்லமைமிக்க பதிலடியே பொருத்தமானதாக இருக்கும்! இன்னவிதமான "சோப்பு' தேய்த்துக் குளித்து வந்தால், சொறி சிரங்கு அரிப்பு ஆகியவை போய்விடும் என்று கூறும்போது, குட்டம் போன்ற வியாதியாலே பீடிக்கப்பட்டவனுக்காகக் கூறப்படும் யோசனை என்று கொள்ளக்கூடாதல்லவா? அதுபோல பேச்சிலே பக்குவம் இருக்க வேண்டும் பயன் இருக்க வேண்டும், இடம் நேரம் பற்றிய தெளிவு இருக்க வேண்டும் என்று நான் கூறுவது, இயல்பு அடியோடு பாழ்பட்டு விட்டவர்களுக்கு அல்ல. திருந்திவிடக் கூடிய அளவு நலிவுற்றிருப்பவர்களுக்கு; புட்டோக்களுக்கு அல்ல.