அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாநலம்
2

யார் என்ன எண்ணிக் கொண்டாலும் கவலையில்லை! கொள்ளினுஞ்சரி, தள்ளினும்சரி கவலை கொள்ளேன். என் மனதுக்குச் சரியென்று பட்டதனைச் சொல்லித் தீருவேன், என்னை எவரும் தடுத்திட முடியாது என்ற போக்குக் கொள்வது கொள்வோருக்குச் சுவை தந்திடும். சிற்சிலருக்குப் புகழ்கூடத் தந்திடும்; ஆனால், அதனை எல்லோராலும் எல்லாக் காலத்திலும் எளிதிலே கையாளத்தக்க பொது விதியாகக் கொண்டிட முடியாது; கூடாது.

தீவிரமான பேச்சுக்காரர் என்ற பட்டத்தைத் தட்டிப் பறித்துக் கொள்வதற்காக, சிலர் எத்தனை வேகம் காட்டினார்கள் என்பதும், அதைவிட, வேகமாக வேறு திக்கு நோக்கிப் பாய்ந் தார்கள் என்பதும், எனக்குத் தெரியும்; உனக்குந்தான் தெரியுமே தம்பி!

வளைய வேண்டும், நெளிய வேண்டும், வழவழா என்று குழைய வேண்டும் என்று சொல்லுவதாக எண்ணிக் கொள்ள மாட்டாய்.

எல்லாம் எனக்குத் தெரியும்; எனக்கு மட்டும் தெரியும் என்று இறுமாப்புக் கூடாது என்று மட்டுமே கூறுகிறேன்; அழுத்தந் திருத்தமாகப் பேச வேண்டாமென்றோ, திட்டவட்ட மாகப் பேச வேண்டாமென்றோ, அச்சமற்றுப் பேச வேண்டா மென்றோ கூறவில்லை; கூறுவேனா?

பொதுவாக நாம் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதிலே நம்பிக்கை நிரம்ப இருக்குமானால், அடித்துப் பேச வேண்டும். இடித்துப் பேச வேண்டும் என்ற எண்ணம் வராது. நாம் எடுத்துக் கூறுவதிலே நமக்கே ஐயப்பாடு இருந்திடிலோ, நமது வாதத் திறமையிலே குறையிருக்கிறது என்ற எண்ணம் நமக்கே தோன்றினாலோ, பேசிடும் பேச்சிலே பொறிபறக்கும், நெடி அடிக்கும் காட்டுமிராண்டித்தனம் வெடித்துக் கிளம்பும்!

***

ஜனநாயக முறை, கருத்து வேற்றுமைகளை மதித்திடும் அடிப்படையிலும், கருத்துக்களை அச்சமற்று எடுத்துக் கூறிடும் உரிமையின் அடிப்படையிலும் அமைந்திருக்கிறது.

போர்க்காலம் இது. இந்த நேரத்தில் கருத்து வேற்றுமைகளை மூட்டைகட்டி ஒரு பக்கம் வைத்து விடுங்கள்.

என்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் காமராஜர் கூறுகிறார். எவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய கருத்து. நமது கழகம் இந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் இதுபோது செயல்பட்டு வருகிறது.

நாட்டு மக்களின் முழுவலிவும் அன்னியன் கொட் டத்தை அடக்கவே பயன்பட வேண்டும்.

அந்த முழு வலிவு கிடைக்க வேண்டுமானால், நேரத்தையும் நினைப்பையும் வேறு பக்கம் அல்லது வேறு பிரச்சினையில் திருப்பி விடக் கூடிய நிலை ஏற்படக் கூடாது.

அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், கருத்து வேற்று மைகளைக் கிளறிக் கொண்டிருக்கக் கூடாது.

கருத்து வேற்றுமையை ஜனநாயகப் பண்புகளிலே ஒன்று, அடிப்படையானது என்று நாம் போற்றினாலும், அது பிளவு, பேதம், வலிவிழக்கும் நிலைமை என்ற விதமாக வடிவமெடுத்து, பகைவர்களுக்குச் சாதகமாகிவிடக் கூடும்.

எனவே, போர்க்காலத்தில், கருத்து வேற்றுமைகளைக் கிளறிக் கொண்டிருப்பது நல்லதல்ல.

இதனை வலியுறுத்தும் காமராஜர் கருத்து வேற்றுமை எனும் உரிமையை மதிக்கிறாரா என்று பார்க்கும்போதுதான், திகைப்பு ஏற்படுகிறது!

போர்க்காலமல்லாதபோது, உங்கள் கருத்து வேற்றுமைகளைப் பேசித் தொலையுங்கள்!

என்றுதான் கூறுகிறார். கருத்து வேற்றுமை என்றால் அவ்வளவு கடுங்கோபம் பிறக்கிறது. பேசித் தொலையுங்கள் என்று கூறித் தமது கோபத்தையும், வெறுப்பையும் காட்டிக் கொள்கிறார். இது ஜனநாயகப் பண்பு ஆகாது. இந்த நோக்கத்துடன்தான் அரசு நடத்தப்பட வேண்டும் என்றால், பல நாடுகளிலே செய்து விட்டிருப்பதுபோல,

கட்சிகள் பல கூடாது.

என்று சட்டமியற்றிவிட்டு, ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தை மேற்கொண்டுவிடலாம்.

ஜனநாயகம் - அதிலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் பாராளு மன்ற ஜனநாயகம் - எமது முறை, இங்கு வயது வந்தவர்களுக் கெல்லாம் வாக்குரிமை உண்டு, எந்தக் கட்சியும் தேர்தலில் ஈடுபடலாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு, கருத்து வேற்றுமை யைப் பேசித் தொலையுங்கள் என்று வெறுப்புடன் பேசுவதில் பொருள் இல்லை; பொறுப்புள்ள ஜனநாயக உணர்வு ஆகாது அந்தப் போக்கு.

நாட்டுக்கு எது நல்லது என்பதைக் கண்டறிந்து கூறிடும் உரிமை, உனக்கு இருப்பதைப் போலவே எனக்கும் உண்டு,

நாட்டிற்கு எது நல்லது என்பதனைக் கண்டறியக் கூடிய திறமை உனக்கு மட்டுந்தானா, எனக்கும் உண்டு,

நாட்டுக்கு நல்லது என்று எதனை நீ நம்புகிறாயோ அதனை நாட்டினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது போல நானும் எதிர்பார்க்க உரிமை இருக்கிறது.

என்ற இந்த அடிப்படைகளின் மீது ஜனநாயகம் எழுப்பப்பட்டிருக்கிறது.

பேசுவதற்கு உரிமை தரப்பட்டிருப்பதால் பேசுகிறான் - ஆனால், இவனுக்கு ஏது அறிவு, நாட்டுக்கு நல்லது எது என்று கண்டறிய என்ற எண்ணமும்,

இவனுக்கு நாட்டுக்கு நல்லது எது என்று கண்டறியும் நோக்கமே இருக்க முடியாதே, வெறும் சுயநல உணர்ச்சிதானே இருக்கும், தனக்குச் சுகம், பதவி பட்டம் இவைகளைத் தட்டிப் பறித்துக் கொள்ளும் நோக்கம் கொண்டவன்தானே, இவனுக்கு எங்கிருந்து நாட்டுக்கு எது நல்லது என்று கண்டுபிடிக்கும் எண்ணம் ஏற்பட முடியும் என்ற நினைப்பும் தடித்துப்போன நிலையிலேதான், மற்றவர்கள் ஜனநாயக அடிப்படையில் பெற்றிருக்கிற கருத்துச் சுதந்திரத்தைக் கேவலமாக்கிடும் எண்ணம் வர முடியும், அந்த எண்ணத்தின் காரணமாகத்தான் காமராஜர்

"சாதாரண காலத்தில் கருத்து வேற்றுமைகளைப் பேசித் தொலையுங்கள்'' - என்று கூறுகிறார்.

நாட்டுக்குத் தேவையான நல்லனவற்றை எல்லாம் கண்டறிந்து செயல்படுத்தும் அறிவாற்றல், இவருக்கும் இவருடன் இணைந்துள்ள பேரறிவாளர் சிலருக்கும் மட்டுமே உண்டு, மற்றவர்களுக்குக் கிடையாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, ஜனநாயகத்தை எப்படிச் செம்மையாக நடத்திச் செல்ல முடியும்!

ஜனநாயகமோ அல்லவோ, முறை எதுவோ அது பற்றிக் கவலை இல்லை, நாட்டுக்கு எது நல்லது என்பது தெரியும், அதனைச் செயல்படுத்த முடியும், இது வேறு எவராலும் ஆகாது என்ற நம்பிக்கை பொங்கிடும் உள்ளம் கொண்டவர்களாக இருந்திடின் மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்று ஒப்புக் கொண்டு, முறை வகுத்திருக்கத் தேவையில்லை. நான் கொடுப்பதுதான் சரக்கு, சொன்னதுதான் விலை, கூறுவதுதான் எடை என்று ஒரு அடாவடிக் கடை நடத்தலாம்; ஆதாயம் பெறலாம். ஆனால், ஜனநாயகமும் இருக்கும், அங்கு ஆட்சியில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் எவரும் "பேசித் தொலைக்கலாம்' - சகித்துக் கொள்கிறோம் என்றும் பேசுவது என்றால், அது ஜனநாயகம் அல்ல.

எல்லாம் எமக்குத்தான் தெரியும், மற்றவர்கட்கு ஏதும் தெரியாது என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்களேயொழிய இன்றைய ஆளுங் கட்சியினர் எல்லாம் அறிந்தவர்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று துதி பாடிடுவோர் கூடத் துணிந்து பேசி, மெய்ப்பிக்க முடியாதே.

சீனா பகைவனாகிவிடுவான் என்று யூகித்தறிந்திட முடிந்ததா? இல்லையே! பாய் - பாய் பாடிக் கொண்டிருந்தனரே!! இப்போது? சீனாவின் ஆதிக்கவெறி புரிகிறது, அதனைத் தடுத்திட நாட்டு மக்களை ஒன்று திரட்டிடும் பணி நடந்து வருகிறது.

நாட்டுக்கு உணவு நெருக்கடி வராமல் தடுத்திடத் தெரிந்ததா - எல்லாம் தெரிந்தவர்களுக்கு - எவனுக்கு என்ன தெரியும் என்று பேசுபவர்களுக்கு - இல்லை என்பதை அளவரிசி முறை காட்டுகிறதே!

திட்டத்தின் பலன் ஏழை ளியோர்களுக்குப் போய்ச் சேர்ந்திடும் முறையிலே காரியமாற்றிடத் தெரிந்ததா? இல்லையே! பலன் எங்கே போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதனைக் கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் இலாகாவே அல்லவா அமைக்க வேண்டி வந்துவிட்டது!

இதுபோன்றே பல்வேறு துறைகளில், பிரச்சினைகளில், இந்நிலையில், எல்லாம் எமக்குத் தெரியும், எவனும் எமக்கு எதையும் கூறத் தேவையில்லை என்றா எண்ணிக் கொள்வது? பேரரசர்கள் இதுபோல எண்ணிக் கொண்டபோதே, பேதைமை என்று உலகு கண்டித்தது. நம்மிலே ஒரு பகுதியினர், எல்லாம் நமக்குத் தெரியும் என்று எக்காளமிடுவது, அதிலும் ஜனநாயக முறையை வைத்துக் கொண்டு பேசுவது, கொடுமை அல்லவா! ஆனால், பேசுகிறார்கள்.

அன்னியனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டி ருக்கும் வேளையில், நமக்குள் உள்ள கருத்து வேற்றுமை களைக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது, ஒற்றுமை குலையும்படி நடந்து கொள்ளக் கூடாது.

இது அறிவுரை! தம்பி! நாம் வரவேற்கத் தயங்கமாட்டோம். ஆனால், அமைதி மலர்ந்த பிறகும், கருத்து வேற்றுமைகளைப் பேசிடும் உரிமை இல்லை என்ற நிலை பிறந்தால், அந்த அரசினை ஜனநாயக அரசு என்று எண்ணி மதித்திட இயலாதல்லவா?

நாட்டுக்கு நெருக்கடி நிலை இல்லாதபோது கூட, அவரவர்கள் தத்தமக்குச் சரியென்று பட்ட கருத்தினை எடுத்துக் கூறி மக்களின் ஆதரவினைப் பெற்றிடும் உரிமையைப் பெறக் கூடாது என்ற உள்ளம் கொண்டுள்ள காமராஜர்களின் கட்சிக்கு உள்ளாகவே, கருத்து வேற்றுமைகள் இல்லையா, அவைகளை வெளியே கூறாமலிருக்கிறார்களா!

உணவுப் பிரச்சினை ஒன்றிலே மட்டும் ஆளுங்கட்சித் தலைவர்களுக்கிடையிலே எத்தனை விதமான கருத்து வேற்றுமைகள் உள்ளன, என்பது நாடு அறியாததா!

சென்ற கிழமை பேசியிருக்கிறார் மொரார்ஜி தேசாய், உணவு நெருக்கடிக்குக் காரணம், உற்பத்திக் குறைவு அல்ல; விளைந்ததைச் சரியான முறையில் பங்கிட்டுத் தராததுதான் என்று!

மற்றோர் ஆட்சித் தலைவர், தேவைக்குமேல் அதிகம் விளைவித்துள்ள மாநிலங்கள், பற்றாக்குறை இடங்களுக்கு உணவுப் பொருளை அனுப்பாமல் பதுக்கியதுதான் நெருக் கடிக்குக் காரணம் என்று பேசுகிறார். கருத்து வேற்றுமை இல்லையா - வெளியே பேசிக் கொண்டில்லையா? பேசுகிறார்கள்!

புட்டோவின் போக்குக்கு இடமளித்த காரணத்தால், ஐ.நா. மன்ற நடவடிக்கையில் கலந்துகொள்ளவில்லை; வெளியேறி விட்டோம் என்று வெளிவிவகார அமைச்சர் சுவரண்சிங் பேசுகிறார்; அதுவே சரியான முறை என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

தவறு! தவறு! மிகப்பெருந்தவறு! ஐ. நா. கூட்டத்தை விட்டு வெளியேறி இருக்கக் கூடாது என்று பேசுகிறார் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமேனன்.

சாதாரணமான பிரச்சினையிலே வந்ததா இந்தக் கருத்து வேற்றுமை? அதிலும் எப்படிப்பட்ட நெருக்கடி நேரத்திலே பேசுகிறார் கிருஷ்ணமேனன்? என்ன சொல்கிறார் காமராஜர்?

இங்கே ஒவ்வொரு மாலையும் போடு போடு என்று போடுகிறார் காமராஜர், அமெரிக்காவை; உன் காலிலே வந்து விழவா! முடியாது! செத்தாலும் சாவேன், காலில் விழ மாட்டேன் என்று பேசுகிறார்.

தம்பி! அந்தப் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தப் போக்கை நான் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன். அமெரிக்க டாலர் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத்தான் வேண்டும்; அடிமையாகிவிடக் கூடாது. ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் அதேபோது பெரிய அமைச்சர் பட்டீல் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஜான்சன் - சாஸ்திரி சந்திப்புக்கு "முகூர்த்தம்' பார்த்துக் கொண்டிருக்கிறார், அமெரிக்காவில். டிசம்பரில் இந்தச் சந்திப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கிறார். ஜான்சனுக்கு உடல் நலம் இடம் கொடுக்கவில்லை என்றால், சாஸ்திரி "டெக்சாஸ்' மாநிலம் சென்றுகூட ஜான்சனைச் சந்திப்பார் என்கிறார்.

மாலை நேரப் பேச்சிலே பூத்திடும் கருத்துக்களுக்கும், பட்டீல் அமெரிக்காவிலே தூவிக் கொண்டிருக்கும் கருத்துக் களுக்கும் வித்தியாசம் இல்லையா? இருக்கலாமா?

பாகிஸ்தான் நம்முடைய விரோதி அல்ல, சீனாவே நம்முடைய பகைவன்.

என்று பட்டீல் அமெரிக்காவிலே பேசுகிறார். காங்கிரசின் மற்றத் தலைவர்கள் கொண்டுள்ள கருத்துடன் பட்டீ-ன் கருத்து மோதவில்லையா! கருத்து வேற்றுமை இல்லையா! இருக்கிறது! வெளிப்படையாகத்தான் பட்டீல் காட்டுகிறார். காமராஜர் என்ன செய்கிறார்? டெக்கான் எரால்டு எனும் இதழ்தான் முன்வந்திருக்கிறது, பட்டீலின் போக்கைக் கண்டிக்க.

இவை பற்றித் தம்பி! நான் கூறுவதன் காரணம், கருத்து வேற்றுமை, ஆளுங்கட்சிக்கு உள்ளேயே நிரம்ப இருக்கிறது; பேசிக் கொள்ளப்படுகிறது. அதைத் தாங்கிக் கொள்ளும் காமராஜர், போர்ச் சூழ்நிலை உள்ள இந்த நாளில் அல்ல, அமைதி நிலவிடும் நாட்களிலே கூட, மற்றக் கட்சிகள் தமது கருத்தைக் கூறுவதை வரவேற்கும் ஜனநாயகப் பண்பு காட்டுகிறாரா என்றால், இல்லை;

பேசித் தொலைக்கட்டும்

என்று பெரிய மனது வைத்து அனுமதி கொடுக்கிறார்; சகித்துக் கொள்ளச் சம்மதிக்கிறார். இதுதான் இவர் விரும்பும் ஜனநாயகமா?

உன்னுடைய கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், ஆனால் நீ உன்னுடைய கருத்தை எடுத்துக் கூறும் உரிமையை எவன் எதிர்த்தாலும் அவனை நான் எதிர்த்து உன் உரிமையைப் பெற்றுத் தருவேன்.

வால்டேர், தம்பி! இவ்விதம் கூறியவர். எத்தனை இனிய ஜனநாயக மணம் வீசுகிறது பார்த்தனையா!

எத்தனையோ இன்னல்களைத் தாங்கித் தாங்கி தகர்ந்து போகாமல், பேரறிவாளர்கள் ஜனநாயகப் பயிரைத் தழைக்கச் செய்திருக்கிறார்கள்.

அந்த ஜனநாயகம் தழைத்திட, கனிந்திட, பேச்சுச் சுதந்திரம் பேணிக் காப்பாற்றப்பட வேண்டும்.

பேச்சு பக்குவம் கொண்டதாக, பயன் உள்ளதாக, காலம் இடம் பற்றிய தெளிவு கொண்டதாக, நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு மற்றவர்களை நிந்திக்கும் போக்கு அற்றதாக, நாவால் சுட்டிடும் கேட்டினை நீக்கியதாக, அமைய வேண்டும்.

எடுத்துக் கூறி மெய்ப்பிக்கப் பட வேண்டியவைகள் ஏராளமாக உள்ளன; தொகை வளர்ந்தபடியும் இருக்கிறது.

விளக்கிக் காட்டி, ஒப்புக் கொள்ளச் செய்திட வேண்டிய தாகப் பல பிரச்சினைகள் உள்ளன.

கேட்போர் உள்ளத்திலே, வாழ்க்கைக் தொல்லை காரணமாக ஏற்பட்டுவிடும் "சோர்வு', பிரச்சினைகளின் முழுத் தன்மையை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றலை அரித்து விட்டிருக்கக் கூடும்; அதனை அறிந்து அவர்கட்கும் பிரச்சினையிலே அக்கறை ஏற்படச் செய்திடும் விதமாகப் பேசிட வேண்டும்.

ஆதிக்கத்தில் இடம் பெற்றோர், அதுகளுக்கு என்ன தெரியும் என்பர்; ஆத்திரம் கொள்ளலாகாது; இடம் பெறாத நிலையில் எல்லோருமே, "அதுகள்' என்ற பட்டியலில்தான் இருந்திருக்க முடியும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். இவற்றினுக்கான பயிற்சி நிரம்ப வேண்டும்; நான் கூறியுள்ள சிலவற்றுடன் மேலும் பல கருத்துக்களைத் தேடிப் பெற்று பயிற்சி பெற்றிட வேண்டுகிறேன்.

அண்ணன்,

7-11-65