அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாட்டு நிலை - பல நினைவுகள்
1

2-3-1964

தம்பி!

"நலிவுற்றுக்கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புதுவலிவு ஊட்டும் மருத்துவர்' என்று கொண்டாடப்படும் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர், எல்லா அரசியல் பிரச்சினைகளையும், சிக்கல்களையும், ஒதுக்கி வைத்துவிட்டு, சென்னை மாநகராட்சி மன்றத்திலிருந்து, தி. மு. கழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன், என் புகழை நிலைநாட்டுகிறேன் என்று சூளுரைத்துவிட்டவர்போல பம்பரம்போலச் சுழன்று, ஒருவார காலம், தேர்தல் காரியத்தைத் தாமே கவனித்தார்; மேடைகளிலே பேசுவது மட்டுமின்றி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைக் கண்டு பேசினார். அவருடைய மிகப்பலமான முயற்சியை எதிர்த்து நின்று தி. மு. க. மகத்தான வெற்றியைப் பெற்றுக் காட்டிற்று; முசுலீம் லீகும் சுதந்திரக் கட்சியும் துணை நின்று, மக்களாட்சி முறைக்குப் புதிய தெம்பு ஏற்படச் செய்துள்ளனர்; இந்த மகத்தான நிகழ்ச்சியையும், இதிலிருந்து பெறத்தக்க அரசியல் கருத்துக்களையும் எடுத்துக்கூற, திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் பேசுகிறார்; அகில இந்திய முசுலீம் லீக் தலைவர் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் கருத்துரை வழங்குகிறார்; சுதந்திரக் கட்சிச் செயலாளர் மாரிசாமி சொற்பொழி வாற்றுகிறார். கழகச் செயலாளர் நடராஜன், சிற்றரசு, சத்தியவாணி ஆகியோருடன், கழகப் பொருளாளர் கருணாநிதியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நல்லுரையாற்றுகிறார்கள், சென்னைக் கடற்கரையில், மிகப் பெரிய கூட்டத்தில். இதுபற்றிய செய்தியை, இந்நாட்டு இதழ்கள் எந்த முறையில் வெளியிட்டன என்பதை இன்று பார்த்தபோது உள்ளபடி மனம் நொந்துபோயிற்று. அரசியல் பண்பு இந்த அளவுக்கா பட்டுப் போய்விட வேண்டும். கழகம் வளருவதற்குத் துணைபுரியத்தான் மனமில்லை என்றாலும், வளர்ந்துவிட்ட கழகத்தை அதன் வளர்ச்சியின் அளவுக்கு ஏற்ற விதத்திலாகிலும் மதிப்பளித்து, பண்புள்ள அரசியலை, இந்த இதழ்கள் உருவாக்க வேண்டாமா? என்பதை எண்ணி மிக்க வேதனைப்பட்டேன். தமிழகத்தில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக வளர்ந்துவிட்டிருக்கிறோம், மாநகராட்சி தேர்தலில் வெற்றி ஈட்டிக் காட்டினோம் என்றால், அந்த அளவுக்குப் பொதுமக்களின் நல்லாதரவு தொடர்ந்து தி. மு. கழகத்துக்குக் கிடைத்துக்கொண்டு வருகிறது என்பதல்லவா பொருள்? இந்த நிலை அடைந்துள்ள கழகத்தை, இன்னமும் தங்கள் கோபப் பார்வையாலும், அலட்சியப் போக்கினாலும், புருவத்தை நெரிப்பதாலும் பொசுக்கிவிடலாம் என்று எண்ணுவது எத்துணை பேதமை! கழகத்தை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு சில இதழ்கள் மேற்கொள்ளும் போக்கு உள்ளபடி மக்களாட்சி முறையை, மக்களை, இழிவு படுத்துவதுதானே! கழகத்துக்கு ஆதரவு தரும் பல இலட்சக் கணக்கான மக்களை, கேவலம் என்று கருதும் போக்குத்தானே இது? இதனை மக்கள் எண்ணிப் பார்க்கமாட்டார்களா? என்பது பற்றி எல்லாம், நாங்கள் இங்கு பேசிக்கொண்டோம்.

மொழி காத்திடும் தூயநோக்குடன், தன்னைத்தானே தீயிலிட்டுக் கொண்ட தியாகச் செம்மல் சின்னசாமி பற்றி, நாலு நல்ல வார்த்தை எழுதக்கூட மனம் வரவில்லையே இந்த இதழ்களுக்கு! தியாகத்தைக்கூட அல்லவா, பழிக்கிறார்கள் என்று எண்ணி மிக்க வேதனையுற்றோம். நான் சொன்னேன். "இதழ்களில் சின்னசாமி இடம் பெறாமலிருக்கலாம்; ஆனால் தமிழ் உணர்வு உள்ளோர் இதயங்களிலெல்லாம், இடம்பெற்றுவிட்டான் - சின்னசாமி உயிருடன் இருந்த நாட்களில் கழகத்திலுள்ள பல இலட்சம் இளைஞர்களில் ஒருவன் - குறிப்பிடத்தக்க நிலையைக் கழகத்தில் பெற்றவனாகக்கூட இருந்ததில்லை - ஆனால் தியாகத் தீயில் குளித்த அந்தத் தீரன் இன்று கழக வரலாற்றிலே மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலேயே ஓர் உன்னதமான இடத்தைப் பெற்று விட்டான் - இதழ்கள் அந்த இணையற்றவனைப் பற்றி எழுதாவிட்டால் என்ன, அவன் தன் பெயரை வரலாற்றிலே பொறித்துவிட்டான்'' என்று கூறினேன்.

காங்கிரஸ், இயக்கம் நடத்திய நாட்களில், இதழ்கள் கொடுத்து வந்த சிறப்பிடத்தை விளக்கும் சம்பவங்களில், எனக்குத் தெரிந்த சிலவற்றை எடுத்துச் சொன்னேன். நம்முடைய இயக்கம் நடாத்தும் அறப்போர்பற்றி, இதழ்கள் காட்டும் இருட்டடிப்பு மனப்பான்மை, நமது கழகத்துக்கு ஊறு உண்டாக்காது; ஏனெனில் நமது தோழர்கள் பலப் பல ஆண்டுகளாக இந்த இருட்டடிப்பைக் கண்டு, முதலில் வெகுண்டு, பிறகு அந்தப் போக்கைப் புரிந்துகொண்டு, இப்போது அதனைப் பொருட்படுத்தாத நிலையைப் பெற்றுவிட்டனர். நம்முடைய செய்திகள், நம்முடைய இதழ்களிலேதான், செம்மையான முறையிலே வெளியிடப்படும் என்ற பொது உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்; ஆகவே பத்திரிகைகளின் இருட்டடிப்பினால், கழகத்துக்கு எந்தக் கேடும் வந்துவிடாது; ஆனால், இந்த இதழ்களிலே பல, இந்தி ஆதிக்கம் கூடாது என்ற கருத்து கொண்டுள்ளன; அந்தக் கருத்துக்கு மதிப்பு அளிப்பதானால், இந்தி எதிர்ப்பு உணர்ச்சி தமிழகத்திலே எவ்விதம் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை, இந்தி ஆதிக்கக்காரர்கள் உணரும்படியாக, செய்திகளை வெளியிட வேண்டாமா? அவ்விதம் செய்திகள் வெளிவந்தால்தானே டில்லி அரசு, மொழி விஷயமாகக் கொண்டுள்ள போக்கிலே மாறுதல் ஏற்படும்? ஏனோ இந்த இதழ்கள், இதனைக்கூட, உணர மறுக்கின்றன. விளக்கமளிக்கும், வாதத்தன்மை மிக்க ஆயிரம் தலையங்கங்கள் தீட்டி டில்லியின் போக்கை மாற்ற முயற்சித்தாலும் அடைய முடியாத வெற்றியை, இந்த இதழ்கள் தீக்குளித்த சின்னசாமியின் படத்தைத் தமது இதழ்களில் வெளியிட்டு, அந்தச் சம்பவம் காட்டும் பாடத்தை பண்டித நேரு உணரும்படி செய்திருந்தால், மொழிப் பிரச்சினையிலே மகத்தான வெற்றி ஏற்பட்டிருக்குமே; கழகத்தின்மீது உள்ள கசப்பினால் - காரணமற்ற கசப்பினால் - இதழ்கள் பெறவேண்டிய வெற்றியையுமல்லவா இழந்துவிட்டன - நாட்டுக்கே பெரிய நட்டமல்லவா இது என்று பேசிக்கொண்டோம்.

இதிலிருந்து, எங்கள் பேச்சு பொதுவாக இந்தி எதிர்ப்புப் பிரச்சினைபற்றித் தொடர்ந்தது. தமிழகத்திலே ஆச்சாரியார் அமைச்சர் அவையின்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்பின்போது, தமிழ்ப் புலவர்கள் பலரும் சீரிய பங்கெடுத்துக்கொண்டனர். இம் முறை அந்த அளவுக்கு இல்லையே, ஏன்? என்பதுபற்றி யோசித்தோம். அப்போது, உண்மைக்காகப் பரிந்து பேசுபவருக்கு உத்தியோகம் போய்விடாது என்ற நிலைமை இருந்தது. இப்போது, "வணக்கம்' என்று கூறிடும் தமிழ் ஆசிரியர்களுக்கே, வந்தது ஆபத்து என்ற நிலை இருக்கிறதே, அதனால்தான், அவர்கள் மனம் எவ்வளவு துடித்தாலும், இந்தி எதிர்ப்பிலே ஈடுபட முடியாது இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிவிட்டு, இந்த நிலையிலும், ஔவை துரைசாமிபோன்ற அருந்தமிழ்ப் புலவர்கள், தீக்குளித்த சின்னசாமி குறித்து எழுச்சியுடன் பாடல் புனைந்து வெளியிட்டுள்ளனர். அந்தப் பாடல்களைப் பன்முறையும் படிக்கலாம். படிக்கப் படிக்க, பட்ட மரம் துளிர்ப்பதுபோல, மொழிப்பற்றற்ற நிலை பெற்றவர்கட்கும் மொழி ஆர்வம் ஏற்படும் என்று சொன்னேன்.

மாலையில், கழக உறுப்பினர்கள் சேர்ப்பது, அமைப்புகளில் புதுமுறுக்கு ஏற்படுத்த வழி காண்பது, மாநாடுகள் நடத்துவது ஆகியவைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், கழகம் வளர்ந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் ஒருவர் செயலாளராகப் பணியாற்றுவது, அநேகமாக இயலாததாகிவிடுகிறது. இனி வட்டச் செயலாளர்கள் அதிக பொறுப்புக்கள் அளிக்கப்பட்டு, பணியாற்ற நமது கழக விதிமுறைகளில் வழி செய்ய வேண்டும் போலத் தோன்றுகிறது என்று நான் கூறி, இதுபற்றி நன்றாக யோசித்து, நல்ல கருத்துக்களைத் தாருங்கள் என்று நண்பர்களைக் கேட்டுக்கொண்டேன். கிளைக் கழகங்களுக்கும் துணை மன்றங்களுக்கும் உள்ள தொடர்புகள், சில இடங்களில் அந்தத் தொடர்பு பலனைத் தரும் முறையில் இருப்பது, சில இடங்களில் வெறும் போட்டிக்குக் களமாக இருப்பது ஆகியவைபற்றிப் பேசினோம். இரண்டு நிலைகளுக்கும் எடுத்துக்காட்டுகள் உள்ளன என்பது, பேசும்போது நன்றாகப் புரிந்தது.

இன்று மாலை, பரிமளம் என்னைக் காணவரக்கூடும் என்று எதிர்பார்த்தபடி இருந்தேன். வரவில்லை.

வெங்காவைக் காண அவர்கள் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். பரிமளம் வராமற் போனதுபற்றிய வருத்தம், வெங்கா, தன் வீட்டாரைக் காணச் சென்றபோது, அதிகமாயிற்று, ஒரு கணம். பிறகு நானே வெட்கப்பட்டுக்கொண்டேன். என்னை விட எவ்வளவோ இளமைப் பருவத்தில் உள்ளவர் வெங்கா. அவருக்கு ஆவல் எழுவதைவிட, எனக்கு எழுவது கூடாதல்லவா! ஆகவே, சரி இன்று இல்லாவிட்டாலும். நாளை பரிமளம் வரக்கூடும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

நாளையத் தினமிருந்து, நாங்கள் இங்கேயே சமைத்துக் கொள்வது என்று ஏற்பாடாகி இருக்கிறது. அதற்கான பாத்திரங்கள் தரப்பட்டுள்ளன.

நாளைக் காலையில், "பைல்' - அதாவது கைதிகளை அதிகாரிகள் வரிசையாக நிற்கவைத்துப் பார்வையிடும் நாள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தத் "திருநாள்'.

நான் இருக்கும் இடத்தில் இருந்தபடியே, இன்று, உறவினரைக் காணச் சென்ற, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியைக் கண்டேன். சிரித்த முகத்துடன்தான் காணப்பட்டார் - ஆனால் மனதுக்குள் என்னை நிச்சயமாகத் திட்டிக்கொண்டிருந்திருப்பார்!

மெத்தவும் ஒதுங்கிப்போகும் ஆசாமி! இந்தத் தேர்தலிலேயே, நான் வலுக்கட்டாயப்படுத்தி, அவரை நிற்கச் செய்தேன்; நமக்கு எதற்கு, நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிடுபவரை, தேர்தல் களத்திலே இறக்கிவிட நான் வெகுபாடுபட்டவன். அத்தகைய ஆசாமி சிறையில்? அவரோ, அவருடைய குடும்பத்தினரோ, கனவிலேகூட இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்தே இருக்கமாட்டார்கள். அவருடைய மைத்துனர் ஏ! அப்பா! பெரிய காங்கிரஸ்காரர்!! அமைச்சர் பக்தவத்சலத்தின் பல வலது கரங்களில் ஒருவர். ராமசாமி சிறைபுகும் அளவுக்கு நான் அவரைக் கெடுத்துவிட்டேன் என்றுதான் அவர்களெல்லாம் எண்ணிக்கொள்வார்கள். ஆனால் உண்மையைச் சொல்லுகிறேன், சிறைக்குச் செல்லும்படி நான் ராமசாமியிடம் கூறினதே இல்லை. மொழி ஆர்வத்தால் எழுந்துள்ள சூழ்நிலை வேகம், அவரை, இங்குக் கொண்டுவந்து தள்ளிவிட்டது - அவ்வளவே.

மாநகராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற லோகநாதன், இங்கு இருக்கிறார், அல்லவா! அவரை இன்று காணும் வாய்ப்பு கிடைத்தது. அதிகாரியிடம், அதற்கான அனுமதியை அவர் எப்படியோ பெற்றிருக்கிறார். அவரைக் காண, இன்று என்னை, வேறோர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். "சி' வகுப்பு உடையில் லோகநாதன் இருந்தார் - நானும் கைதி உடையில்தான் - அவர் அரைக் கை, அரைக் கால் - எனக்கு முழுக் கை; முழுக்கால் சட்டை! என்னைக் கண்டதும் உணர்ச்சி வயப்பட்டு, காலைத் தொட்டு வணக்கம் செய்தார் - என் மனம் மெத்தவும் உருகிவிட்டது. சில விநாடிகள் பேசிக்கொண்டிருந்தோம். "கார்ப்பரேஷன் கவுன்சிலர்' ஆகிவிட்டதால், ஒரு சமயம் இன்னும் ஒரு வாரத்தில், "பி' வகுப்பு தரப்படக்கூடும் என்று நான் சொன்னேன் - "பரவாயில்லை அண்ணா! இன்னும் சில மாதங்கள்தானே - "சி' வகுப்பிலேயே இருந்துவிடுகிறேன்'' என்று லோகநாதன் சொன்னபோது, எத்துணை எழுச்சியும் கடமையுணர்ச்சியும் கொண்ட பண்பாளர்கள் இந்தக் கழகத்திலே இருக்கிறார்கள் என்பதுபற்றி எண்ணிப் பெருமிதமடைந்தேன். அந்த மகிழ்ச்சியுடன், இன்று துயிலச் செல்கிறேன் - காலையிலே எழுந்து ஒழுங்காகக் கைதி உடை உடுத்திக்கொண்டு, அடக்கமாக, வரிசையில் நிற்கவேண்டுமே - கைதி என்பதற்கான பில்லையுடன்.
3-3-1964

இன்று "கைதிகளை' சிறை அதிகாரிகள் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்பு நான் சிறைப்பட்டிருந்த போது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நினைவு வந்தது. இம்முறைதான், சிறையில் புதிய நிர்பந்தங்களாயிற்றே - ஆகவே, நானும் மற்றக் கைதிகளுடன் வரிசையில் நின்றேன். சிறை அதிகாரிகள் நடத்தும் இந்தப் பார்வையிடும் நிகழ்ச்சி, ஓரளவு "ராணுவ' முறைபோலவே அமைந்திருக்கிறது. கைதிகளின் உடைகள், பயன்படுத்தும் தட்டுகள், குவளைகள் இவைகள் ஒழுங்காக்கப்பட்டு, கைதிகளும் "சுத்தமாக' இருக்கும் நிலை ஏற்படுகிறது. மிக முக்கியமாக, கைதிகள் தங்களுக்குத் தரப்பட்டுள்ள எண் குறிக்கப்பட்டுள்ள பில்லைகளை பளபளப்பாக்கிக்கொள்கிறார்கள். எனக்குத் தரப்பட்டுள்ள "பில்லை'யின்படி நான் கைதி எண் 6342, சுந்தரம் 6343, பொன்னுவேல் 6344, வெங்கா 6345, பார்த்தசாரதி 6346 - ஐவரல்லவா அறப்போரின் முதல் அணி! இன்று சுந்தரம் "முகக்ஷவரம்' செய்துகொள்ளாதிருந்தது கண்டு சிறை மேலதிகாரி, வேடிக்கையாக, "என்ன திருப்பதி போகப்போகிறீரா?'' என்று கேட்டுவிட்டுச் சென்றார்.

வழக்கமான நிகழ்ச்சிகள் பிறகு தொடங்கின.

அன்பழகன், முன்னாள் இரவு திருக்குறள் ஆராய்ச்சி நடத்தியதில் சிலபற்றி எடுத்துரைத்தார். "பலர் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்கள் என்றாலும், நுண்ணறிவுடன் மேலும் பல உரைகள் எழுதுவதற்கான வாய்ப்பும் தேவையும் இருக்கிறது' என்பது, அன்பழகன் பேசும்போது தெரிகிறது. பொதுவான "உரை'யில், ஒருவர் எழுதுவதற்கும் மற்றவர் எழுதுவதற்கும் அதிகமான அளவு மாறுபாடு இல்லை - இருக்க முடியாது - என்றாலும், சில இடங்களில், சிறப்புரையும் புதுமை உரையும் பெற வழி இருக்கிறது. ஏனோதானோவென்றோ, எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ, வலிந்து பொருளையும் கருத்தையும் திணித்தோ உரை எழுதக்கூடாது. புதுமைக் கருத்து கூறுவதாயினும், பொருத்தம் பார்த்து, கற்றோர் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் என்று கூறத்தக்க முறையில் அமைய வேண்டும் என்பதிலே, அன்பழகன் மிகுந்த அக்கறை காட்டுகிறார்.

குறளில் வரும் "தென்புலத்தார்' எனும் கருத்து குறித்துப் பேசத் தொடங்கிய நாங்கள், தமிழர்கள் பிறநெறியை எப்போது, ஏன், எவ்வகையில் கொண்டனர் என்பது பற்றி. ஆராயலானோம். தமிழக வரலாற்றுத் துணுக்குகள்பற்றிய பேச்சு சுவை அளிப்பனவாக இருந்தன.

நான்கு நாட்களாக, படித்துக்கொண்டிருக்கும் சட்டம் பற்றிய வரலாற்று ஏடுபற்றிக் குறிப்பிட்டு, மனு தர்ம சாஸ்திரம் சட்ட திட்டங்களைக் குறிப்பிடுவதுபற்றியும், அதிலே உள்ளவைகள் சாதி ஆதிக்கத்துக்குத் துணை செய்வதாக இருந்தபோதிலும், சட்டம் அந்த நாட்களில் எந்த முறையில் இருந்தது என்பதை அறிய வாய்ப்பளிக்கிறது என்பதையும் எடுத்துக்கூறி, தமிழகத்தில், சட்ட திட்டம் இவ்வாறு இவ்வாறு இருந்தது என்பது தெரியத்தக்க விதத்தில் ஒரு தனிநூல் இல்லையே என்று கூறினேன். சங்க காலத்தில், நீதி, சட்டம் இவை எங்ஙனம் இருந்தன என்பதுபற்றி, சட்டக் கல்லூரிப் பேராசிரியர் பழனிச்சாமி எனும் நண்பர் ஆராய்ந்துகொண்டிருப்பதாக மதியழகன் சொன்னார். மிகத் தேவையான ஆராய்ச்சி! பழனிச்சாமி அதற்கான நூல் வெளியிட்டால், மிக்க பயன் அளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

"மனுநீதி கண்ட சோழன், மனு தர்ம சாஸ்திரத்தை மேற்கொண்டு நடந்தானென்று தெரிகிறதே, அப்படியாயின் மனு தர்மத்தைத் தமிழ் அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதாகத்தானே பொருள்படுகிறது' என்று மதியழகன் கேட்டார். அன்பழகன் "உள்ளபடி ஆராய்ந்து பார்த்தால் அந்தச் சோழன், மனு தர்மத்தின்படி நடக்கவில்லை என்பது தெரியும். கன்று, தேர்க்காலில் சிக்கி இறந்ததற்கு, மனு போன்றார் கூறிடும் "தர்மம்', பொன்னாலே கன்று செய்வித்து, அதனைப் "பிராமணர்களுக்கு' தானமாகத் தருவதுதான்! ஆனால் மன்னன் அதைச் செய்யவில்லை; மகனையே தேர்க்காலின் கீழ் இருந்து இறந்திடச் செய்தான்'' என்றார். மனுநீதி கண்ட சோழன் என்று கூறுவதைவிட, மனுநீதி கொன்ற சோழன் என்பதே பொருந்தும் என்றார். எனக்கு இது சாமர்த்தியமான சமாதானமாகப்பட்டதேயன்றிச் சரியான விளக்கமாகப் படவில்லை. நான் சொன்னேன், "நமது முன்னோர்கள், பழந் தமிழர்கள், பிறநெறியாளரின் முறைகளை, ஆரிய சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டதே இல்லை. ஆகவே அவை நமக்கு இப்போதும் வேண்டாம் என்று வாதாடி, எவரேனும் ஒருவர், ஏதேனும் ஓர் ஏட்டிலே ஒரு இடத்தை விளக்கிக் காட்டி, நீங்கள் கண்டிக்கும் முறைகளைத் தமிழர்கள் முன்பு கொண்டிருந்தனர் காணீர் என்று இடித்துரைத்து, நாம் அதற்கு ஒரு சமாதானம் தேடிக்கொண்டு இருப்பதைவிட, தேவையற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற, நெறிமுறை, சட்டதிட்டம் முன்பே தமிழ்ச் சமுதாயத்தில் இருந்திருந்தாலும், அவை நமக்கு வேண்டுவதில்லை என்று கூறுவதுதான், வீணான சிக்கலுக்குள் நம்மைச் சிக்கவைத்துக்கொள்ளாத முறை. நாம் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, சில முறைகள் முன்பே இருந்தனவா இடையிலே நுழைந்தனவா என்பது பற்றி அல்ல; அவை தேவையா வேண்டாமா என்பதுதான்'' என்று கூறினேன்.

பிறகு, வழக்கம்போல், இதழ்கள் தரப்பட்டன. அவைகளைப் படித்து, செய்திகள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.