அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாட்டு நிலை - பல நினைவுகள்
2

சின்னசாமியின் தியாகம் பற்றி, நமது கழகத் தோழர் ராமசாமி சட்டசபையில் பேசியிருந்ததைப் படித்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது. மற்றோர் இளைஞன் இதுபோலச் செய்யப்போவதாக அறிவித்திருந்ததாகச் செய்தி கண்டேன்; திடுக்கிட்டுப் போனேன். "இருந்து அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்; இறந்துவிடுதல் தேவையற்ற முறை; அத்தகைய எண்ணம் ஏற்படவிடக்கூடாது'' என்று இங்கு நண்பர்களிடம் கூறினேன்.

வேறோர் இளைஞன் சட்டமன்ற நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, என்னை விடுதலை செய்ய வேண்டும் என முழக்கமிட்டதாகவும், அதற்காகக் கைது செய்யப்பட்டதாகவும் பத்திரிகையில் கண்டேன். இதுவும் தேவையற்ற செயல். நானும் நண்பர்களும், சிறையில் அடைபட்டுக் கிடப்பதன் மூலம், தமிழர்களின் சிந்தனையைக் கிளறி, மொழி ஆதிக்க எதிர்ப்புணர்ச்சியை எழச் செய்யலாம் என்று நம்பி, கம்பிகளுக்குப் பின்னால் கிடக்கிறோம். மொழி ஆதிக்கத்தின் கேடுகளை மற்றவர்கள் உணரும்படியாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டுவது முறையேயன்றி, எங்களை "விடுதலை' செய்யச் சொல்லி முழக்கமிடுவதும், கிளர்ச்சி செய்வதும் முறையுமல்ல, தேவையுமில்லை.

தூத்துக்குடியில் அரசியல் சட்டத்தைக் கொளுத்திய இளமுருகுபொற்செல்வி குழுவினரின் வழக்கு, மிக துரிதமாக முடிவுற்றது, மகிழ்ச்சிகரமான செய்தி. ஆறுமாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. இளமுருகு ஆசிரியராகப் பணியாற்றியவர்; பொதுத்தொண்டில் நீண்டகாலமாக உள்ளவர். அவருக்கு "சி' வகுப்புதான் என்று விதித்திருப்பது, நாம் காங்கிரசாட்சியில் இருக்கிறோம் என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

இன்று பிற்பகல், நாங்கள் இங்கேயே சமைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டின்படி சமையலுக்குத் தேவையான பண்டங்கள் எவ்வளவு அளிக்கப்படும் என்பதற்கான "பட்டியல்' பார்த்தசாரதியிடம் தரப்பட்டது. பட்டியலைக் காண்பதற்காகத் தந்திருக்கிறேன். எங்கள் எழுவருக்கு இரண்டு வேளை சாப்பாட்டிற்கும் காலை சிற்றுண்டிக்கும் சேர்த்து,

  கிலோ கிராம்
அரிசி 1 - 610
கோதுமை 0 - 805
பருப்பு 1 - 190
புளி 0 - 210
மிளகாய்த்தூள் 0 - 40
உப்பு 0 - 280
வெங்காயம் 0 - 210
காய்கறி 1 - 610
உருளைக்கிழங்கு 0 - 420
கடுகு 0 - 070
மிளகு 0 - 070
நல்லெண்ணெய் 0 - 210
சர்க்கரை 0 - 210
காபிதூள் 0 - 105
பால் - லிட். 2 - 094
நிலக்கடலை 0 - 420
நெய் 0 - 210
விறகு 6 - 370

இன்று மாலை சிறை மேலதிகாரி எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாளையத் தினம், சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியை எங்களோடு கொண்டுவந்து சேர்த்துவிடப் போவதாகத் தெரிவித்தார். நமது கழகத் தோழர்களின் எண்ணிக்கை செங்கற்பட்டு மாவட்ட அறப்போர் வீரர்களின் வருகையால் வளருகிறது. இப்போது நாங்கள் இருக்கும் "பகுதி' இனிப் போதாது என்று தெரிகிறது. இன்னும் சில நாட்களில் வேறு பகுதிக்கு மாற்றுவதாக மேலதிகாரி தெரிவித்தார்.

இன்று மாலையும் பரிமளம் வரவில்லை; எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்தேன்.

சட்டப் புத்தகம் படித்துக் குறிப்பெடுத்தேன் - "வரவு - செலவு' என்ற சிறுகதை ஒன்றும் எழுதினேன்.

நிரம்பப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன; கிடைக்கும் வழிதான் தெரியவில்லை!

வெளியிலேயே, நான் இரவு நீண்ட நேரம் தூக்கம் பிடிக்காமல் விழித்திருப்பது வாடிக்கை. சிறையில் சொல்ல வேண்டுமா? இரவு இரண்டு மணி வரையில் படித்துக் கொண்டிருக்க ஏடு தேவை! கிடைப்பதில்லை! கிடைக்கும் ஏடுகளை, பண்டங்களைச் சிறுகச்சிறுக உபயோகப்படுத்துவது போல ஒரேயடியாகப் படித்து முடித்துவிடாமல், விட்டு விட்டுத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறையில் - குறிப்பாக நான் இருக்கும் பகுதியில், எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் - நானோ, துயிலலாம் என்று படுக்கையில் படுத்தாலும், தூக்கம் பிடிக்காமல், புரண்டபடி இருக்கிறேன். விளக்கு எப்போதும் எரிந்தபடி இருப்பதால், பக்கத்திலேயே புத்தகமும் மூக்குக்கண்ணாடியும் வைத்துக்கொண்டிருக்கிறேன், தூக்கம் வர மறுக்கிறது என்றால் படித்திட. படிக்காமல் படுத்திருக்கும் நேரத்திலெல்லாம், வெளியே உள்ள நமது தோழர்களைப்பற்றி எண்ணியபடி இருக்கிறேன்.
4-3-1964

சட்டசபை உறுப்பினர் ராமசாமி இங்கு கொண்டுவரப் பட்டதால், இன்று என் அறையில் தோழர்கள் பொன்னுவேல், வெங்கா இருவரும் தங்கியுள்ளனர். இருவருமே, அதிகமாகப் பேசும் பழக்கம் உள்ளவர்கள் அல்ல. வேலூர் சிறையில் பொன்னுவேல் என்னுடன் ஒரே அறையில் இருந்திருக்கிறார். நாங்கள் வேலூரில் இருந்தபோது, பிரிவினைக் கொள்கையை ஒடுக்க சர்க்கார் மேற்கொள்ளப்போகும் திட்டம்பற்றிய செய்திகள் இதழ்களில் வந்திருந்தன, பல இரவுகள் அது குறித்து நான் பேசி வந்தேன். மாணவர்கள், கொள்கைத் துடிப்புள்ள இளைஞர்கள் ஆகியோருடைய நோக்கம், கருத்து குறித்து பொன்னுவேல் மெத்த ஆர்வத்துடன் பேசுவார். பல இரவுகள் இந்தப் பிரச்சினைபற்றி வேலூர் சிறையில் பேசிப் பேசி, தெளிவும் நடைமுறைக்கு ஏற்றவை எவை என்பதுபற்றிய வேலைத்திட்ட விளக்கமும் கிடைக்கப்பெற்றோம். பொன்னுவேல் - வெங்கா போன்றவர்கள் இளைஞர்கள். மண வாழ்க்கையின் பொலிவு களையும் பொறுப்புகளையும் மேற்கொள்வதிலே ஆர்வம் கொள்ளவேண்டிய வயதினர். ஆனால் மொழிப்பற்றும், ஆதிக்க எதிர்ப்புணர்ச்சியும் அத்தகையவர்களைச் சிறைபுகச் செய்திருக்கிறது. நல்ல ஆர்வத்துடன், தூய்மையான எண்ணத்துடனும், அழுத்தமான நம்பிக்கையுடனும், இந்தத் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

அரக்கோணம் ராமசாமி, சிறைக்குப் புதியவர் - சிறையிலே காணப்படும் முறைகளையும், நிலைமைகளையும் பார்த்துத் திடுக்கிட்டுப் போயிருக்கிறார். "முதலிலே பயமாக இருந்ததா?' என்று கேட்டதற்கு சற்று தயக்கத்துடன் "ஆமாம்! முதல்நாள் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது'' என்று கூறினார். நம்மிலே பலர் கருதுவதுபோலவே நண்பர் ராமசாமியும், அரசியல் கைதிகளை, மற்றக் கைதிகளைப்போல அல்லாமல், தனிவிதமாக நடத்த வேண்டும் என்று எண்ணுகிறார் - அவருக்கு இந்தச் சிறை அனுபவம், பல புதிய கருத்துக்களைத் தரும் என்பதில் ஐயமில்லை.

இன்று மாலை, அவருடைய தம்பி வந்திருந்தார் - ராமசாமியைக் கண்டதும் அழுதேவிட்டாராம். இதை ராமசாமி என்னிடம் சொன்னபோது, அவரே ஓரளவு கலங்கித்தான் போயிருந்தார். பொன்னுவேலுவைக் காண அவருடைய தம்பி வந்திருந்தார். பரிமளத்துக்கு இப்போது பரீட்சை நேரமென்றும், அதனால்தான் என்னைக் காண வரமுடியவில்லை என்றும், எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இன்று எங்கள் பகுதியில் நாங்களே சமைத்துக் கொண்டோம். நீண்ட பல நாட்களுக்குப் பிறகு, சில்லிட்டுப் போகாத சோறும் சாறும் உண்டு மகிழ்ந்தோம். சமையல் வேலையில் சிறிதுநேரம் பார்த்தசாரதிக்குத் துணையாக இருந்தேன்.

சட்ட வரலாறுபற்றிய புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். அதன் தொடர்பாகப் படித்தாகவேண்டிய புத்தகங்களைத் தருவித்துக் கொடுக்கும்படி பொன்னுவேலிடம் சொன்னேன். அவர், தன் தம்பியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

நான் படித்து முடித்த புத்தகம், ஒரு முறை படித்தால் போதும் என்ற முறையில் உள்ளதல்ல, மறுமுறையும் படிக்க எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

"அடக்குமுறை' பற்றிய புத்தகம், காணாமற்போய்விட்டதாக, சிறை அதிகாரிகள் சொல்லி இருந்தார்களல்லவா? திடீரென்று, இன்று மாலை, அந்தப் புத்தகத்தை அவர்களே கொடுத்தனுப்பினார்கள். ஏதாவது ஒரு புத்தகம், எங்களிடம் கொடுக்கப்படக் கூடியதா அல்லவா என்ற ஐயம் இங்குள்ள அதிகாரிகளுக்கு ஏற்பட்டுவிட்டால், அவர்கள் அந்தப் புத்தகத்தை, சர்க்காருக்கு அனுப்பி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டறிந்து அதன்படி நடக்கிறார்களாம். இப்படி ஒரு விளக்கம் - அதிகாரிகளால் அல்ல - எனக்கு அளிக்கப்பட்டது. சிறை அதிகாரிகளுக்கு, ஏடுகளைப் படிக்க நேரமும் கிடைக்காது; நினைப்பும் எழாது - மற்ற எந்த ஏடுகளாக இருப்பினும், உடனே கொடுத்துவிடலாம். புத்தகங்கள் தருவதிலே இத்தனை கண்டிப்பும், தடைகளும் இருக்கத் தேவையில்லை - அதிலே பொருளும் இல்லை.

சிறையிலே புத்தகங்கள் தருவதிலே இவ்விதமான முறையும் தடையும் இருக்கிறது. ஆனால் இன்று பத்திரிகையில் ஒரு செய்தி பார்த்தேன் - அறிவுக்குத் தடை விதிக்கும் அக்ரமத்தை எவரெவரெல்லாம் கண்டிக்கிறார்கள் என்பதற்கான சான்று, அந்தச் செய்தி மூலம் கிடைத்தது.

வழுக்கி விழுந்தவளைப்பற்றிய ஏடொன்று, ஆபாசமானதாக இருக்கிறது என்று அமெரிக்க நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆனால், இப்படி ஒரு ஏடு, ஆபாசமானது என்று கருதி தடை விதிப்பது முறையாகாது என்ற கருத்துக்கொண்ட கிறித்தவ தேவாலய அதிபர் ஒருவர், அந்த ஏட்டினைத் தமது தேவாலயம் வருபவர்களுக்குத் தந்து படிக்கச் சொல்லப்போவதாகவும், அதிலே உள்ளதுபோன்ற கருத்தோவியங்கள் பல பைபிள் புத்தகத்திலேயே இருப்பதுபற்றிப் பேசப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இங்குச் சிறையிலோ, தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் அல்ல, வரலாறுகூட அய்யப்படத்தக்க புத்தகமாகத் தெரிகிறது. அவர்கள்மீது குற்றம் இல்லை - அவர்களுக்கு தொகுதி ஐந்து 239 இவ்விதமான "கண்டிப்புடன்' நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிற சர்க்காரின் போக்கிலேதான் குற்றமிருக்கிறது. பண்டித ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்தபோது - அகமத் நகர் கோட்டைச் சிறையில் - இலண்டனில் உள்ள அவருடைய நண்பர்கள் பல புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார்களாம் - அந்த ஏடுகள் சிறையில் நேருவிடம் தரப்பட்டன. இலண்டனிலிருந்து அந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு வந்து, சிறையில் இருந்த நேருவிடம் அனுப்பிவைத்தவர் யார் என்றால், வைசிராய் வேலை பார்க்க வந்த வேவல் பிரபு. வெள்ளைக்காரனுக்கு அந்தத் தாராளத்தன்மை இருந்தது என்பதை துரைத்தனத்தில் பெரிய பதவி வகித்திருந்த எச். ஆர். வி. அய்யங்கார் என்பவர் இந்த வாரம் ஒரு கட்டுரையில் விளக்கி இருந்தார். அதனையும் சிறையிலே படித்தேன். சிறையில் புத்தகங்கள் தருவதிலே மேற்கொள்ளப்படும் "கெடுபிடி'யையும் காண்கிறேன். "சுயராஜ்ய' சர்க்காரிடம் பரிவா ஏற்பட முடியும்!!

இன்று பிற்பகல், "அவை அறிதல்'' பற்றியுள்ள குறள்பற்றி, அன்பழகன் தனக்குத் தோன்றிய சில கருத்துக்கள் குறித்து, என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இன்று மாலை, வழக்கம்போல் எங்கள் பகுதி நுழைவு வாயிலருகே, உட்கார்ந்துகொண்டிருந்தேன்; மூன்று புறாக்கள் ஒயிலாக உலவிக்கொண்டிருக்கக் கண்டேன். புறாக்களை வளர்ப்பதிலும் அவைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பதிலும் எனக்கு மிகுந்த விருப்பம் என்பது பலருக்குத் தெரியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, புறாக்களைக் கண்டபோது ஓடிச் சென்று அவைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விளையாடலாமா என்றுகூடத் தோன்றிற்று. சிறை அதிகாரிகளிலே ஒருவருடைய புறாக்கள் அவை என்று கூறினார்கள். எங்களிடம் சிறை அதிகாரிகள் நடந்துகொள்ளும் முறையும், அதற்கான காரணமும்தான் எனக்குத் தெரிந்திருக்கிறதே! இந்நிலையில் புறாக்களைக் கேட்டால் கொடுக்கவா சம்மதிப்பார்கள். கொடுத்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் வெளியே வளர்க்கும் புறாக்கள் என்னிடம் மிக அன்பு காட்டும்; என் கரத்திலும் தோட்களிலும் தொத்திக்கொண்டு தீனி தின்பதிலே அவைகளுக்கு மிகுந்த விருப்பம். இங்கு, புறாக்கள் வளர்த்திட அனுமதி கிடைத்தால், மிக மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் இருக்கும் பகுதியில், பூனைகளும் அதிகமாக இல்லை; ஒரே ஒரு பூனைதான் உலவிக்கொண்டிருக்கிறது. அழகான பூனை, சாமான்கள் கிடங்கிலே இருக்கும் பூனை, மிகச் செல்லமாக வளர்க்கப்படுகிறது. ஆகவே அது வேட்டையாடும் போக்கைக் கூட மறந்துவிட்டது. காலையும் மாலையும், அசைந்து அசைந்து நடந்து வரும்; புல்வெளிப்பக்கம் சில விநாடிகள் உலவிவிட்டு பொறுப்புள்ள அதிகாரி தமது அலுவலைக் கவனிக்கச் செல்வதுபோல, கிடங்கு சென்றுவிடும். ஆகவே புறாக்களுக்குப் பூனையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கூட இருக்காது; ஒரே ஒரு ஆபத்து - பெரிய ஆபத்து - இருக்கிறது! இங்குதான் பொன்னுவேல் இருக்கிறார். நான் சிறிது ஏமாந்திருந்தால் புறா, ஏப்பமாக மாறிவிடக்கூடும். அந்த ஒரு பயம்தான். வீணான எண்ணங்கள்!! சிறை அதிகாரிகளாவது எங்களுக்கு மன நிம்மதிக்கான உதவிகளைச் செய்வதாவது!!

அண்ணன்

1-11-1964