அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாவலர் நம் கழகக் காவலர்
1

ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை -
திராவிடரின் மறம் -
திருச்சியில் மாநாடு.

தம்பி,

ஒரு அலங்காரக் கூடம் - இரத்தின ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கிறது - சோபாக்கள் விதவிதமானவை போடப்பட்டுள்ளன - வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால் நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில் உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம் - பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள் உள்ளன - ஒரு புறத்தில் "ராஜாஜி' இருக்கிறார் படத்தில் - மற்றும் பல தேயத் தலைவர்களின் படங்கள்.

சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக் கொண்டிருக்கிறார் - பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்? சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர். . . . சீமான் சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப் பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித் தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக முடிகிறது.

சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே, வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம் மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும் துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும் இருந்தன்; அது முன்பு!

இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ் போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ் தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை எட்டிப் பிடிக்க வேண்டியவர்!

சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப் பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார் - உள்ளே நுழைந்தான் வேலையாள்.

"என்னடா. . . ''

"கிடைக்கலிங்க. . . ''

"மடையா. . . . கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா . . . . பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?''

"பார்த்தேனுங்க. . . . . ஒரு கடையிலேகூட இல்லிங்க. . . . ''

"படக்கடையிலே?''

"இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன் - இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி. . . . ''

"என்ன சொன்னாரு?''

"விழுந்து விழுந்து சிரிக்கிறாரு. . . . . அந்தப் படம் இங்கே ஏதுடான்னு கேட்கறாரு. . . . .

''பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே. . . . ''

"இல்லிங்க. . . . போசு படம் இருக்குதுங்க. . . . தாகூர் படம் கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க. . . . விவேகானந்தரு படம் கிடைக்குதுங்க. . . ''

"வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர் படம் கிடைக்கல்லே. . . . ''

"இல்லிங்களே. . . . ''

என்னடா பெரிய இழவாப் போச்சு. . . . . இன்னும் ஒரு அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே. . . . ஏலே! டேய்! ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே''

"இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க... கிடையாதுங்க. . . . ''

"நாசமாப் போச்சி. . . ''

"ஐயாமாரெல்லாம் வருகிறாங்க. . . . '' என்று கூறிக் கொண்டு கணக்கபிள்ளை உள்ளே நுழைகிறார்; சீமான் வேலையாளை வெளியே விரட்டி விட்டு முகத்தை மலரச் செய்து கொள்கிறார். உள்ளே கதராடைக் கனவான்கள் வருகிறார்கள்.

சீமான் : வாங்க ! வாங்க ! நமஸ்காரமுங்க. . . . நமஸ்காரம். . . . இப்படி இந்தச் சோபாவிலே. .

ஒருவர் : நமஸ்தே ! நமஸ்தே!

மற்றொருவர் : வந்தே மாதரம்,

மூன்றாமவர் : நீங்க உட்காருங்க. . . .

சீமான் : பரவாயில்லிங்க . . . .

நான்காமவர் : சிவ! சிவா! நீங்க நிற்கறது, நாங்களெல்லாம் உட்காருவதா, சேச்சேச்சே! உட்காருங்க . . . .

சீமான் : ஆகட்டுங்க . . . .

முதலாமவர் : (ஒருவரைக் காட்டி) இவர்தான். . . .

சீமான் : இதென்னாங்க அறிமுகப்படுத்தவேணுமா! உலகமறிந்தவர் ஊராள்றவரு, அவரைத் தெரியாதவங்களும் உண்டா? நம்மைப்பத்திச் சொல்லுங்க அவருக்கு.

முதலாமவர் : சொல்லித்தானே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் - உங்களோட தயாள குணத்தையும், தர்ம சிந்தனையையும், காங்கிரஸ் பக்தியையும் கேள்விப்பட்ட பிறகு தான், அவர் தம்முடைய பல வேலைகளை விட்டுவிட்டு வந்தார்.

சீமான் : என் பாக்யம்னுதான் சொல்லோணும் . . . . பாருங்க, இங்கே ஒரு தொண்டன், இந்த மாதிரி ஆளுக வீட்டுக்கு எங்க தலைவரு வரவே மாட்டாருன்னு, கடை வீதியிலே பேசி விட்டிருக்கான் கண்டபடி, என்னைப் பத்தி, இல்லாததும் பொல்லாததுமாப் பேசினானுங்க.

மற்றவர் : தள்ளுங்க குப்பையிலே . . . தடியடி பட்டேன். . . . ஜெயிலுக்குப் போனேன். . . . நான் தியாகி, தேச பக்தன், அப்படி இப்படின்னு சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டலாம்னு பார்க்கிறவனுங்க அவனுங்களெல்லாம், அவனுங்க பேச்சை விட்டுத் தள்ளுங்கள்.

சீமான் : எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை.

ஒருவர் : சரி. . . . அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப் பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை. . . .

சீமான் : சொல்லுங்கள்

ஒருவர் : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும் வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி . . .

சீமான் : ரொம்ப சந்தோஷமுங்க . . . .

மற்றவர் : பேப்பர்லே பார்த்திங்களேல்லோ . . . .

சீமான் : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா ? காணோமே . . . .

ஒருவர் : அதல்ல. . . . . ஆவடி காங்கிரஸ் பற்றி . . . .

சீமான் : அதுங்களா . . . . ஒவ்வொரு நாளும் வருதுங்க . . . . படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா இருக்குதுங்க . . . .

மற்றவர் : செலவு ஏராளமா இருக்குது. . . .

சீமான் : இதென்னங்க பிரமாதம் . . . . பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம் ஒதுக்கிவிட்டாப் போகுது . . . .

மற்றவர் : அப்படிச் செய்யலாமா . . . . அதிகாரம் இருக்குன்னு வையுங்க . . . . எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன் இருக்கான் . . . . ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது பாருங்க . . . . . அதனாலேதான், பணம் "தண்டி' . . . . . பிரமாதமா நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி . . . . . உங்களிடமிருந்து, ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு . . . .

சீமான் : நீங்க ஒரு வேடிக்கை . . . . டாட்டாவும், பிர்லாவும் தரலாம் . . . . . நான் என்னங்க, தகரக் குவளை . . . . என் சக்திக்கு ஏற்றதை நான் தருவேனுங்க . . . .

மற்றவர் : அனுமாருக்கு, அவரோட சக்தி அவருக்குத் தெரியாதாம் . . . . . பிறர் சொன்னாத்தான் தெரியுமாம் . . . . கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட முடியும்னு. . . . ஜாம்பவான் சொன்னாராம் . . . . அனுமான்! தாண்டு, உன்னாலே முடியும்னு . . . . தாண்டினார் ! இராமாயணம் கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோட சக்தி உங்களுக்குத் தெரியாது. . . . நாங்கதான் சொல்லவேணும். இருவதுக்குக் குறைஞ்சா இவர் வந்ததுக்கும் கௌரவமல்ல. . . . உங்கள் யோக்யதைக்கும். . . .

சீமான் : பிடிவாதம் செய்யாதிங்க . . . . பெரியவரை எதிரே வைத்துக் கொண்டு, என்னோட மானத்தைக் கெடுத்துப் போடாதிங்க. . . . இந்த வருஷம் ரொம்ப "டல்லு'ங்க . . . . வியாபாரம் சரியில்லை . . . . நம்ம ஆபீசருங்களும் புலியாப் பாயறாங்க . . . . மேலே விழுந்துக்கறாங்க . . . . எந்த மாதிரியா எழுதினாலும், அவங்க கண்ணுக்குத் தப்புக் கணக்காத்தான் தெரியுது . . . . . நான் இதைப்பத்தி தலைவரிடமே வந்து சொல்லணும்னு எண்ணிக் கொண்டிருந்தேன் . . . . . ஏதோ என் அதிர்ஷ்டம் அவரே வந்திருக்காரு . . . .

ஒருவர் : உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக் கொள்கிறேன் - அதைப்பத்தி இப்ப பேசத் தேவையில்லை . . . .

சீமான் : சரிங்க... நல்ல காரியம் நடக்கப் போகுது. நம்மோட கஷ்டத்தைக் கவனிக்கப்படாது. ஒரு அஞ்சு அனுப்பி விடறேன்.

ஒருவர் : அதென்னங்க அஞ்சும் பிஞ்சும்....

சீமான் : உங்களண்டை சொல்றதிலே தப்பு என்னங்க, அந்த அஞ்சுக்கே நான் அகர்சந்துகிட்டேதான் போகவேண்டி இருக்கு....

ஒருவர் : இதுபோலப் பேரம் பேசப் போறது நெரிஞ்சிருந்தா.... இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்க மாட்டோம்.

அவர் : பரவாயில்லை... எனக்கு ரொம்ப நாளா இவரைப் பார்க்க வேணும்னு எண்ணம். பணம் கொடுத்தாத்தானா! அது அவர் சவுகரியம்.... பத்து கொடுக்கிற வங்க "லிஸ்டு' ஒண்ணு பண்டித நேருவுக்குப் போவுது... அதிலே இவர் பெயர் இருக்க வேணும் என்பது என் ஆசை

சீமான் : அப்படிங்களா... நீங்க உத்தரவு போடுங்க... நான் மீறவா போறேன்... ஐயா! கணக்குப்பிள்ளை!!

(கணக்குப்பிள்ளை வருகிறார். அவரிடம் இரகசியமாகச் சீமான் பேசுகிறார். அவர் போன பிறகு, சமையல் ஐயர் வருகிறார், "பாதாம்கீர்' அனைவருக்கும் தரப்படுகிறது.)

எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச் சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே காங்கிரசார், அப்போது, இதுபோலெல்லாம் பணம் திரட்ட முடிந்தது - எளிதாக. ஆவடியிலிருந்து இப்போது அமிர்தசரஸ் சென்றுள்ளனர்.

ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறுவதற்கு முன்பேகூட, தேசியப் போராட்டம், "இந்திய முதலாளிகளுக்கு'ச் சாதகமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பதை அறிந்த "பிர்லாக்கள், "காங்கிரஸின் போராட்டங்கள், கிளர்ச்சிகள், தேர்தல்கள், மாநாடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாராளமாகப் பணம் கொடுத்தனர், விதைக்கிறோம், அறுவடை ஆனந்தமாகப் பிறகு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

பிர்லா என்று நினைக்கிறேன், ஒரு சமயம் காந்தி யாருக்கு, ஒரு கடிதமு:ம, கையொப்பமிட்ட! ஆனால் தொகை மட்டும் குறிப்பிடாத "செக்'கும் அனுப்பினாராம்.

மகாத்மாஜீ! காங்கிரஸ் பணிக்காக, என்னிடம் தாங்கள் பணம் கேட்பதுபோல நான் நேற்று ஒரு கனவு கண்டேன். உள்ளம் உருகி விட்டது; தொகை இவ்வளவு என்று தாங்கள் கனவில் குறிப்பிடவில்லை; எனவே நான், தொகை குறிக்காமல், "செக்' அனுப்பிருக்கிறேன். பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும் தொகையை எழுதிப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்பதாக அவர் எழுதி இருந்தார் என்று அந்த நாட்களில் பத்திரிகைகளில் "சேதி' வெளியிட்டார்கள்.

ஆலை அரசர்களும், வணிகக் கோமான்களும், சிற்றரசர் களும், சீமான்களும் பாலூட்டி வளர்த்தனர். பாரத மாதாவின் தளைகள் உடைபடவேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக அல்ல. வெள்ளையர் வெளியேற்றப்பட்டால், நாடு தங்கள் வேட்டைக் காடு ஆகும் என்ற "நப்பாசையால்' அந்த ஆசையும் அவர்கட்கு ஈடேறிற்று; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலாளி கட்கு நல்லதோர் பாதுகாப்பாக அமைந்துவிட்டது; மாளிகை வாசிகள் "கூர்க்கா'வுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதுபோல, இப்போது, முதலாளிகள், ஆவடி, அமிர்தசரஸ் ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.

பணக்காரரிடமிருந்து பணமும் ஏழைகளிடமிருந்து ஓட்டுகளும், திரட்டிக் கொள்வதிலே, நேரு பண்டிதர் நிகரற்ற சமர்த்தர் என்று டாக்டர் லோகியா சென்னையில் ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும் பெற்றுள்ளனர்.

தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன்.

என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன்.

சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன்.

தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும் நான் அனுப்பி வைக்கிறேன்.

இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள். எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் - துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்!

காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண் காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப் பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும், அவர்தமை "உடைமை' கொண்ட உரிமையாளர்களும், தமது ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும், வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது.

"யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக் கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும், "யார்? அந்த இளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில் கண்டேன் இந்தக் காரிகையை . . . . '' என்று பதில் பெறவும், இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்! கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், பட்டத்தை விட்டு விட்டுப் படாடோபத்தை மட்டும் கெட்டியாகப் பற்றிக் கொண்டுள்ள "ராஜாக்களும்' கொலுவீற்றிருக்கக் கிடைக்கும் ஒரே இடம் காங்கிரஸ் மாநாடுதான்!