அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாவலர் நம் கழகக் காவலர்
2

உடற் கனத்தைக் குறைத்துக் கொள்ளவும், உள்ளத்துக்கு உல்லாசம் தேடிடவும், சுவிட்சர்லாந்துக்கும் பாரிசுக்கும் சென்று வரும் சுந்தரிகளையும், கல்வித்துறை ஆராய்ச்சிக்குக் கனடாவுக்கும், செல்வத்துறை ஆராய்ச்சிக்கு அமெரிக்காவுக்கும் சென்று வந்தேன் என்று கூறிடும் செல்லப் பிள்ளைகளையும் காணவேண்டுமானால், காங்கிரஸ் மாநாடுகளில்தான் முடியும்.

அறுபதுக்கு ஆறோ ஏழோதான் குறைவு என்றார்கள் இந்த அம்மைக்கு; இப்போது உடையைப் பார்த்தால் இருபதாண்டு இளமங்கை போலிருக்கிறது, நடையோ முப்பதுக்கு மேலிராது என்று மதிப்பிட வைக்கிறது, அலங்காரமோ நட்சத்திரங்கள் கண்டு பொறாமைப்படத்தக்க விதமாக இருக்கிறது. எப்படி இந்த எழிலும் இளமையும் பெறமுடிந்தது என்று கேட்க, இவ்வளவு தானே உனக்குத் தெரிந்தது நண்பா! அந்த நளினியின் புன்னகையைக் கண்டால் என்ன சொல்வாயோ! உடலழகைக் கண்டே இத்துணை ஆச்சரியமடைந்திருக்கிறாய், உள்ளத்திலே ஊற்றெடுத்துக் கிடக்கும் பரோபகார சிந்தனையைச் சிறிதளவேனும் அறிந்திடும் வாய்ப்பினைப் பெற்றால், ஏதேது எண்ணுவாயோ! இவ்வளவு எழிலும் இளமையும், முதுமையில் உழன்று கிடந்த இந்தச் சீமாட்டிக்குக் கிடைத்ததற்குக் காரணம், கீழ்நாட்டு ஓவியம் பற்றி மேனாட்டாருக்கு அறிவிக்க இவர்கள் ஈராண்டுக் காலம் அமெரிக்கா சென்று வந்ததுதான்! அங்கு ஓர் மருத்துவ விடுதியில், சருகு தளிராக்கப்படுகிறதாம்! - என்று பதில் பெறவுமான உற்சாக உரையாடல்கள் கேட்கவேண்டுமானால், காங்கிரஸ் மாநாட்டிலேதான் முடியும். காங்கிரஸ் மாநாடு என்பது உல்லாச விழா ஆகிவிட்டது; எனவே வாழ்க்கைச் சல்லாபம் பெறும் செல்வக் குடியினர், அங்கு சென்று ஆனந்தம் காண்கின்றனர்.

நான் உன்னை, வறண்ட தலையினர், இருண்ட கண்ணினர், வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்து போயுள்ள நொந்த உள்ளத்தினர், இவர்கள் கூடிடும், மாநாட்டுக்கு அழைக்கிறேன்! இங்கு நீ பட்டுப் பூச்சிகளைக் காண முடியாது! படாடோபச் சீமான்கள் கிடைக்கமாட்டார்கள்! ஆலைக் கணக்கும் சோலைக் கணக்கும் கூட்டிக் கூட்டிக் களித்திடும் கனவான உன் கண்ணில் படமாட்டார்! சல்லாபப் பேச்சிலே வல்லவரும், சாகச வீச்சிலே வெல்பவரும், இங்கு உலவ மாட்டார்கள். இங்கு கண்களை மயக்கி, கருத்தினைக் குழப்பி, கால் தடுமாறவும் பேச்சுக் குழறவும் ஆகும்படியான நிலையை மூட்டிவிடும் நளினிகளின் நாட்டிய விருந்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவாய். சதங்கைச் சத்தம், அதனுடன் போட்டியிடும் வளை ஒலி, அதற்குக் காரணமான மோகனப் பூசல், இவை உன் செவிக்கு விருந்தாகக் கிடைக்குமென்று எதிர்பார்த்திடாதே!

திருச்சியில், நடைபெறும் மாநில மாநாடு. திக்கற்றோருக்கு ஒரு திட்டம் காட்டும் திருச்சபை - வாழ்விழந்தோருக்கு வழி காட்ட எடுத்துக் கொள்ளப்படும் ஒரு நன்முயற்சி - வழி தவறியோருக்கு நன்னெறி பற்றிய விளக்கமளித்திடும் முயற்சி!

ஒளி இழந்த கண்ணினரே! நமது முன்னோர் வாழ்ந்த வகை கூறிடக் கேண்மின்! பிறகு உமது கண்களிலே ஒர் புத்தொளி பூத்திடும் !! - என்று எடுத்தியம்பும் ஓர் மருத்துவக் கூடம் - இம் மாநாடு.

மகனே! மகனே! அருமந்த மகனே! என் ஆசை மகனே!! பெற்றேனே பாவி நான் உன்னை, பாலூட்டிச் சீராட்டி வளர்த்தேனே, உன் மழலை கேட்டு மகிழ்ந்தேனே, துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலே உன்னைக் கண்டு "கர்வம்' கூடக் கொண்டேன், அந்தோ மகனே! அரும்பு மீசை கொண்ட வனானாய்! அஞ்சா நெஞ்சினர் மரபு அன்றோ, இனி அவனியே, எதிர்த்தாலும் எனக்கென்ன அச்சம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தேன்! ஆனால், ஐயோ! அயலவன் என்னை ஆட்டிப்படைக்கிறான், அலங்கோலப்படுத்துகிறான், இம் சிக்கிறான், இழிவாக நடத்துகிறான், என் கூந்தலைப் பிடித்திழுத்துக் குற்றேவல் செய்யச் சொல்கிறான் - மகனே! எங்கே இருக்கிறாய்? என் இழிநிலை கண்டு, புலி எனச் சீறி எழுவாய், புல்லர்தம் ஆதிக்கத்தை அழித்தொழிப்பாய்! என் கண்ணீர் துடைப்பாய், கலி தீர்ப்பாய் என்றெல்லாம் எண்ணிக் கதறி நின்றேன், உன்னைக் காணோமே என்று பெற்றெடுத்த தாய் புலம்பும்போது, மகன், இழுக்கு நடைக்காரியுடன் வழுக்குப் பாறை வழியில் சென்றான் என்றால் எப்படி இருக்கும்!

வழுக்குப் பாறையில்தான் தம்பி இழுக்குடையாளின் பின்னே நாம் சென்று கொண்டிருந்தோம்.

திருஇடம் சீரழிக்கப்படுவதையும், பேரழிக்கப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும், அலங்கோலமாக்கப்படுவதையும் கண்டும் காணாதவர் போலாகி, ஆரியமெனும் இழுக்குடை யாளுடனும், வடவர் ஆட்சி எனும் வழுக்கு நிலத்திலேதான் நடந்து சென்று கொண்டிருந்தோம் - நீண்ட நாட்களாக!

நமது நிலையினை உணரவும், நமது தாயகத்துக்கு வந்துற்ற தாழ்நிலையினைத் தெரிந்துகொள்ளவும், எளிதில் நம்மால் முடியவில்லை.

நாம் யார் என்பதனையும், நமது நாடு எது என்பதனையும், நம் நாடு எந்நிலையில் இன்று உளது என்பதனையும், அதனை மாற்றித் திருஇடம் காண வேண்டும் என்பதனையும் உணர்ந் தோரின் அணிவகுப்பு காணத்தான் உன்னை அழைக்கிறேன் - உல்லாசம் காண அல்ல.

திருச்சிக்குத் தீரர்கள் அழைக்கப்படுகிறார்கள் - திருவாளர்கள் அல்ல! தோழர்கள் கூடுகிறார்கள். சீமான்களல்ல! வைரம் அல்ல காட்டச் சொல்வது, எஃகு உள்ளத்தை! மலர்த் தோட்டமல்ல, மாநாடு, மறவர் பாசறை! வெந்ததைத் தின்று விட்டு வேடிக்கைத் தெந்தினம் பாடிட அல்ல; வேதனைப் படு குழியில் வீழ்ந்துள்ள தாயகத்தை மீட்கவும், அதற்காக வெந்தழல் மிக்கதோர் அகழியைக் கடந்தாக வேண்டுமென்ற நிலை இருப்பினும், துணிந்து இறங்கி, கருகி மாண்டவர் போக, மீதமுள்ளோர் முன்னேறிச் சென்று, தாயின் தளைகளை உடைத்தெறிந்து, அன்னையை அரியாசனம் ஏறச் செய்து, "நான் உனது மகனலனோ! நீ எனக்கு வாய்த்த தாய் அலவோ?'' என்று தழதழத்த குரலிற் கேட்டு அன்னையின் அன்புக் கண்ணீரைக் காணிக்கையாகப் பெற்றுப் பெருமைப்பட, ஓர் பெரும்படை கூடுகிறது திருச்சியில், மே, 17,18,19,20 - நாட்களில் வீரம் அறிந்தவனே! வெற்றிபெற்றுத் தரத்தக்க தீரம் மிகுந்தவனே! களம் காணக் கலங்காத அடலேறே! என் அருமைத் தம்பி! வா ! காண்போர் மனம் மகிழவும், காணாதார் மனம் ஏங்கவும், ஏறு நடையுடன் வா! என் அருமை திருநாடே! எல்லா வளங்கட்கும் உறைவிடமே! எவரையும் ஈர்க்கும் இயற்கை எழிலை ஏராளமாகப் பெற்ற என் பொன்னாடே! கெம்பீரத்தை விளக்குவது போன்ற மாமலை பலவும், மனக்குமுறலைக் காட்டிவிடுவது போலுள்ள பெருங்கடலும் உணர்ச்சி பீறிட்டு வருவதுபோல் ஆர்த்தெழும் ஆறுகள் பலவும் அழகழகாய்ப் பெற்றுள்ள செல்வத் திருநாடே! செந்தமிழ் தன்னையும் அதன் சேய்களாய்க் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் பெற்றெடுத்த பெருமைமிக்க நாடே! வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து புகழ் பெற்ற புலமை மிக்க நாடே! போர்க்கஞ்சாக் கொற்றவர் களையும், அவர்தம் கோலுக்கு அஞ்சாக் குடிமக்களையும், அவர்தம் ஏரடிக்கும் சிறு கோலுக்கு அஞ்சி கேட்டதைத் தந்த செல்வியையும் பெற்றுச் சீருடன் விளங்கிப் பாராண்ட நாடே! பண்பளிக்கும் பெட்டகமே! கலைக்கு ஓர் கருவூலமே! வீரம் விளைவிக்கும் பண்ணையே! மறக்குடி மகளிரின் மாண்பினை மாநிலம் கண்டு வியக்கத்தக்க அளவில் பெற்றிருந்த ஏற்றமிக்க நாடே! என் தாய்நாடே! உன்னை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்! வளம் தந்தாய், வாழ்வு தந்தாய் - இனி நான், உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் நீங்கிட, இன்னலை ஏற்க மட்டுமல்ல, இதோ இன்னுயிரை ஈந்திடவும் துணிந்துவிட்டேன்! அந்த உறுதியைத்தான், இதோ அணி அணியாக வந்துகொண்டிருக்கும் என் உடன் பிறந்தார் காட்டுகின்றனர். அவர்களின் வாழ்த்தொலி, வஞ்சனையால் நம்மை வீழ்த்தி, சாகசத்தால் இன்னமும் நம்மைச் சாய்த்திட எண்ணும் மாற்றாரின், மனதிலே மருட்சியை மூட்டுகிறது, காணாய்! - என்று கூறிட வாராய் என்று உரிமையுடன் அழைக்கிறேன்.

வெட்டவெளியில் வேகவைக்கும் வெய்யிலைப் பொருட் படுத்தாது, கொட்டகை அமைக்கவும் கோலம் கிடைத்திடச் செய்யவும், திருச்சித் தோழர்கள் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர்.

முடிமன்னர்கள் கட்டிய மண்டிலங்களும் அவைதம் சிறப்பும் பிடிமண்ணாகிப் போன காதை அறிந்தும், இந்தப் பொடியன்கள், ஏதேதோ பேசுகின்றனர், போர் போர் என்று முழக்கமிடுகின்றனர், என்னே பேதமை! என்று ஒரு புறம் ஆரியம் எள்ளி நகையாடுகிறது.

பணாயுதத்தின் பராக்கிரமம் அறியாத பதர்களே! பாரெங்கும் எமது பண்டிதருக்குப் பராக்குப் பாடிடும் போது, எங்கே, ஓர் மூலையில் நின்றுகொண்டு விடுதலை என்கிறீர்கள், கிளர்ச்சி என்கிறீர்கள் - போலீஸ் பாயும், பட்டாளம் துரத்தும் சிரையில் தள்ளுவோம், தூக்குமரத்தில் ஏற்றுவோம், நாங்கள் துரைமார்கள் ஆகிவிட்ட சேதியை அறியீரா? - என்று ஆணவத்துடன் கேட்டு ஆர்ப்பரிக்கிறது வடவராட்சி.

வகையற்றோரே! வாழவழி அறியாதாரே! வறட்டுத் தத்துவம் பேசுவோரே? பட்டமும் பதவியும், பவிசும் தரக் காங்கிரஸ், கிட்டே நெருங்கி வருவோரை எல்லாம் அழைக்கிறது, குட்டம் கொண்டோனாயினும் பனிநீர் தெளித்து, பரிமளகந்தம் பூசிப்படுக்கை அறை அழைத்தேகும், பசிகொண்ட பாதகி போல், கொள்ளை இலாபக்காரராயினும் கள்ள மார்க்கட்டுக் காரராயினும், மக்கட்கு மாபெரும் துரோகமிழைத்தோராயினும், ஊரை அடித்து உலையில் போடுவோராயினும் அனைவரையும் வரவேற்று உபசரித்து, உயர்வளிக்கக் காங்கிரஸ் சித்தமாக இருக்கும் போது, அதன் நிழலில் குளிர்ச்சியும், அதன் நேசத்தில் மலர்ச்சியும் கண்டு சுவைத்திடாமல், கொள்கை என்றும் குறிக்கோள் என்றும், தாய்நாடு என்றும் தன்னரசு என்றும் திராவிடமென்றும் தன்மானமென்றும் ஒலி கிளப்பிக் கொண்டு ஒய்யார வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறீர்களே! ஓட்டாண்டியாகாதீர் ! பதவிபெறும் பாதையை விட்டு விட்டு, சிறைக்கும் சித்திரவதைக்கும் அழைத்துச் செல்லும் பாதையில் ஏன் செல்லுகிறீர்கள்? எம்மைப் பார்த்து, பிழைக்கும் வழி அறிமின்! - என்று கூவிக் கூவி அழைக்கின்றனர் - கொள்கையை இழந்து, கோல்கொண்டோரின் கொடியைத் தூக்கிக்கொண்டு கூத்தடிக்கும் கோணங்கிகள்!

நானிருக்கப் போர் ஏன்? என்று தத்துவம் பேசுகிறார் காமராஜர்.

வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் - வஞ்சகர்கள் - போக்கிட மற்றவர்கள் - என்று ஏசுகின்றனர், நாம் உழைத்து உயர்வளித்த குடும்பத்தினர் எனத்தகும் திராவிடக் கழகத்தினர்.

இந்தச் சூழ்நிலையில், தம்பி! நாம் நமது குடும்பத்தின் முழு வலிவும் பூரணப் பொலிவும், திருச்சி மாநில மாநாட்டில் விளங்கிடும் வகையில் கூடிட வேண்டாமா!

களம் பல சென்று கடும்போரில் ஈடுபட்டுத் தியாகத் தழும்புகளை ஏற்றிருக்கிறோம் - தாயக மீட்டுப் பணிக்காக நம்மை நாமே ஒப்படைத்துவிட்ட நிலையினரானோம்.

பெற்ற தழும்புகளைக் கண்டு, பெருமிதம் அடைந்திட மட்டுமல்ல, இழித்தும் பழித்தும் பேசிடும் இயல்பினரை இனி நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதும் பற்றிப் பேசிட மட்டுமல்ல, எதிர்போர், ஏளனம் செய்வோர் ஆகியோரின் திட்டத்தைத் தகர்த்தெறிய வழிவகை காணமட்டுமல்ல, நமது "வரலாறு' பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச் செய்யமட்டுமல்ல, சீரிய நம் கொள்கை வெற்றி பெறத்தக்க செயல் திட்டம் காணக் கூடுகிறோம்! இதற்குச் சிந்தையில் உறுதிதான் சிறப்புறத் தேவையே தவிர சிங்கார அமைப்புகளும் செல்வப் பெருக்கமும் அல்ல!

களம் செல்லத் துடிப்போருக்குக் கட்கம் முக்கியமே தவிர கட்டில் தந்தத்தாலா, தங்கத்தாலா, வட்டிலில் பாலா, தேனா வனிதையின் மொழி யாழா, குழலா என்பதல்ல முக்கியப் பிரச்சினைகள்.

வதைபடும் தாயகத்தைக் காண்கிறோம் - விடுதலைக்கான வழிவகை காணக் கூடுகிறோம்.

கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் படைத்தோர் கூடுகிறோம்.

நாவலர் நெடுஞ்செழியனைக் கழகக் காவலராகக் கொண்டு கூடுகிறோம். நாவலர் - நம் கழகக் காவலர், தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள படை, ஒப்புயர்வற்றது, உளத்திண்மை கொண்டது என்பதை உணரத்தக்க அளவிலும் வகையிலும், ஆற்றல் மிக்க தம்பி! உடன் பிறந்தோரை, உற்றாரை, உறவினரை, உளப்பண்பு மிக்கோரை, அனைவரையும் அழைத்துக் கொண்டு வா! உன் ஆர்வம் கண்டு களித்திடவும், கண்ணொளி கண்டு மகிழ்ந்திடவும் துடிக்கிறேன். இன்னலும் இழிமொழியும், வன்கணாளரின் வஞ்சகமும், என்னை வாட்டி வதைத்திடும் விதத்தில் ஏவப்படும் போதெல்லாம், நான் கலங்காது நின்று என் சக்திக்கேற்ற அளவு கடமையைச் செய்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! அதனால்!!

அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பா அது! ஆகவே தம்பி காடு மலை வனம் குறுக்கே நின்றாலும், காதகரும் பாதகரும் தடை விதித்தாலும், வேலை நெருக்கடி மிரட்டினாலும், பண நெருக்கடி பயமூட்டினாலும், விவரமறியாதார் குழப்ப மூட்ட முயற்சித்தாலும் அதிகாரம் கொண்டோர் அடக்கிட முனைந்தாலும் எதற்கும் சளைக்காமல் கிடைக்கும் வசதிகளைத் திரட்டிக்கொண்டு, வசதி கிடைக்காவிட்டால், ஓர் புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உறுதியைத் துணைகொண்டு புறப்படு, திருச்சி நோக்கி!

உன் எழுச்சி நாடெங்கும் எதிரொலிக்கட்டும்.

உன் முழக்கம் மாநிலமெங்கும் கேட்கட்டும்.

உன் பரணி, நாம் முன்னம் தரணி ஆண்டோர் என்பதை அனைவருக்கும் அறிவிக்கட்டும்.

குன்றுகளிலும், சிற்றூர்களிலும், வயலோரங்களிலும், ஆலைகளிலும், பள்ளிகளிலும் பணிமனைகளிலும், பட்டினங் களிலும், அங்காடிகளிலும் பண்புள்ளோர் காணப்படும் எல்லா இடங்களிலும், இன்றிலிருந்து, தம்பி, எடுத்துக்கூறு, திருச்சி தீரரை அழைக்கிறது, மே 17, 18, 19, 20 நாட்களில் என்பதை.

தேனென இனிக்கும் சேதி என்பர் திராவிடர்; பிறர்க்குக் தேட்கடிபோல் தோன்றும், இச்சேதி.

புதியதோர் அரசு காணப் புறப்படுவோம், புல்லர்தம் புரட்டாட்சி ஒழித்திடப் போரிடுவோம்.

திருஇடம் காண்பதற்கே திரண்டிடுவோம், தீரரெலாம் திருச்சி மாநகரில்தானே!!

அன்புள்ள,

8-4-1956