அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நல்லோரின் தீர்ப்பு!
1

வலியவர் எளியவரை வதைத்திடும் கதைகள்!
வசதியற்றவர் அமைத்த கழகம் வளர்ந்தவண்ணம் உள்ளதே!
பஞ்சை பராரிகளால் பாராளவும் முடியும்!
அடுக்கு மொழி பேசுவதைக் கேலி செய்தவர்களே அடுக்கு மொழி பேசிடும் அதிசயம்!
அரசியல் மேடை நாடக மேடையாவதை அனுமதிக்க லாமா?
அலைய மாட்டோம்; அவசியமானால், விடமாட் டோம்!
நம் வெற்றியில் மாற்றாருக்கு வேதனை!

தம்பி!

"எதுக்காக அகிலாண்டம், அது ஏழை பாவம், அதன்பேரிலே எரிந்து எரிந்து விழறே, எப்பவும் சிடு சிடுன்னு இருக்கறே...?'

"பரிந்து பேச வந்துவிட்டிங்களா அதுக்கு. அது இன்னும் தாவிக்குதிக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு என்ன தெரியும் அதோட போக்கு. அது நடக்கற நடையும், பார்க்கற பார்வையும் பேசற பேச்சும்...'

"என்ன செய்தா, அதைத்தான் சொல்லேன்...'

"என்ன செய்தாளா? பாருங்க, அவ போட்டுக்கிட்டு இருக்கற கொண்டையை! என்னமோ அள்ளிச் சொருகறதாம், அள்ளி! இந்த அலங்காரமெல்லாம் செய்து கொண்டிருக்கத்தானே அவளுக்கு நேரம் இருக்குது. வேலை செய்ய நேரம் ஏது! வாடி! வள்ளின்னு கூப்பிட்டா வந்தாத்தானே வேகமா!! அன்ன நடை நடக்கறா, அன்ன நடை...,

"வேண்டுமென்றா அப்படி நடக்கப்போறா! ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா நடக்கற பழக்கம். அதுக்காக ஒரு கோபமா...'

"வேளைக்கு ஒரு டப்பா "மை' கண்ணுக்கு அப்பிக் கொள்றது... எத்தனை தடவை, அந்தக் கூந்தலைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொள்றது, நான்தான் கேட்கறேன், இப்படியா ஒரு சிங்காரிப்பு... புடைவை தெரியுமேல்லோ நாலு கெஜம்... சும்மா ஒரு சுத்து சுத்திக்கிட்டு வந்துவிடறா, அதுதான் இப்ப நாகரிகம்னு...'

*******

தம்பி! வீட்டு வேலை செய்யும் வள்ளியிடம்; எஜமானியம் மாளுக்கு ஏகப்பட்ட கோபம்; அவள் குலுக்கி நடக்கிறாள், மினுக்கிக் கொள்கிறாள் என்று ஆத்திரம்! குடும்பத்துக்கு ஏற்றவிதமாக நடப்பதில்லை என்று குற்றச்சாட்டு! சீவிச் சிங்காரித்துக் கொள்கிறாள், ஒயிலாக நடக்கிறாள் என்று கோபம். வள்ளியைக் "காலா காலத்தில்' கண்டித்து வைக்கா விட்டால், வீட்டு வேலைகளைக்கூட அவள் ஒழுங்காகச் செய்யமாட்டாள் என்றோர் எண்ணம். ஏழ்மை காரணமாக வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாளே வள்ளி என்பதிலே எஜமானருக்கு அந்தப் பெண்ணிடம் ஒரு மதிப்பு. ஒழுங்கான பெண் என்பதால் அவளிடம் ஒரு பற்றுதல். ஏழையின் மனம் புண்படும்படி நடந்திடக்கூடாது என்ற பெருங்குணம். அதனால்தான் தன் மனைவியிடம் கேட்கிறார், ஏன் அந்த ஏழைப் பெண்ணிடம் சிடுசிடுவென்று பேசுகிறாய்; கோபித்துக் கொள்கிறாய் என்று.

வள்ளிமீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார்க ளல்லவா எஜமானியம்மாள்... அவை உண்மையா?

அழகான பருவம் வள்ளிக்கு! அடர்த்தியானது! இளமை மெருகு பளபளக்கிறது! வேளா வேளைக்கு "மை' அப்பிக்கொள்வதாகஎஜமானியம்மாள் சொல்வது. கருகருவென்று இருக்கும் அந்த விற்புருவம் இயற்கை அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாததால் எஜமானியம்மாள், விவரம் தெரியாமல் பேசுகிறார்கள். பேசட்டும் அதனால் என்ன என்று வள்ளி, "அம்மா! நான் "மை' பூசிப் புருவத்தை அழகுபடித்திக் கொள்ளவில்லை; இயற்கையாகவே ஒரு எழில் இருக்கிறது' என்று விளக்கம் அளிக்கவில்லை. வள்ளி பதில் ஏதும் கூறாததால், தன் குற்றச்சாட்டை அவள் ஒப்புக்கொண்டுவிட்டாள் என்று எஜமானியம்மாள் நம்பிக் கொள்கிறார்கள்.

வள்ளியின் குடிசைக்குப் பக்கத்தில் ஓர் தாமரைக் குளம். பொழுது புலர்ந்ததும் அதிலே போய்க் குளிப்பதிலே அவளுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி. கூந்தல் உலருவதற்காகக் காத்துக்கொண்டிருக்க முடியுமா, ஆயிரத்தெட்டு வேலை இருக்கிறதே எஜமானியம்மாளின் வீட்டில். அதனால் வள்ளி தலையைத் துவட்டிக்கொண்டு, கூந்தலை அப்படியே அள்ளிச் செருகிக் கொள்கிறாள். அடர்த்தியான கூந்தல்! அழகாக அமைகிறது அந்தக் கொண்டை! அலங்காரம் செய்து கொண்டது போல இருக்கிறது. எத்தனை வேலைப்பாடுகளைத் துணைக்கொண்டாலும் எஜமானியம்மாளால் அந்தவிதமான சிங்காரக் கோலம் பெற முடியவில்லை. அந்த எரிச்சலால் ஏசுகிறார்கள், வள்ளி என்னவோ வேண்டுமென்றே, வெகு கஷ்டப்பட்டு அந்தவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொண்டிருப்பதாக.

அன்னம்போல நடக்கிறாள் வள்ளி என்றார்கள்! அது அவள் தவறு அல்ல! வாலைப்பருவம்! வடிவழகு! சிற்றிடை! பயிலாமல் வந்த நடை! அதற்கு அவள் என்ன செய்வாள்! எஜமானியம்மாள் நடந்தால் பூமி அதிரும், கெம்பீரமான நடை என்று புகழ்வோரும் உண்டு! அசைகிறது பார் யானை என்று கேலி செய்வோரும் உண்டு! வள்ளி, இளமங்கை! சின்ன இடை! அன்ன நடை! அவள் தேடிப் பெற்றதுமல்ல; பாடம் படித்ததுமல்ல! அவளுக்கென்று அமைந்துவிட்ட எழில்! அதற்கு அவள் என்ன செய்வாள்?

பதினெட்டு முழமாகத்தான் அந்தச் சேலை இருந்தது வள்ளியின் தாயிடம். பிறகு அது நைந்து நைந்து கிழியத் தொடங்கிற்று. பொத்தலும் போனதும் போக மிச்சமுள்ளதை வள்ளி எடுத்துக் கட்டிக் கொண்டாள். அவளுடைய உடலமைப்புக்கு அது போதுமானதாக இருந்தது. அது புதியநாகரிகம் என்பதற்காக அல்ல; பழைய புடவையின் மிச்சம் அது. புதுப்புதுப் புடவைகள் வாங்க முடியுமா ஏழையால்.

இந்த விளக்கங்களை யார் கூற முடியும், கோபம் கொண்டுள்ள எஜமானியம்மாளிடம்.

ஏழ்மை, தன்னை வேறோர் வீட்டிலே வேலை செய்து பிழைக்கச் சொல்லுவதுடன், காரணமற்ற கோபத்துடன் எஜமானியம்மாள் ஏசுவதையும் தாங்கிக் கொள்ளச் சொல்லுகிறது என்று எண்ணிக் கொண்டாள். ஏழை வேறு என்ன செய்ய முடியும்? நியாயம், கேட்க முடியுமா!!

***

"பய, படுக்க வேண்டியதுதான், அடுத்த விநாடி தூக்கம். அது எப்படித்தான் வருதோ! எங்கிருந்துதான் வருதோ! துளியாவது வித்து விசனம் இருந்தாத்தானே. வயிறு நிறையப் போட்டு விடுறாங்க; ஆசாமிக்குத் தூக்கம் தள்ளுது.'

என்று தன்னோடு சேர்ந்து தூக்கம் வராமல் தவிக்கும் மனையாட்டியிடம் கூறி வருத்தப்பட்டுக் கொள்கிறார் சீமான். படுத்துப் படுத்துப் புரளுகிறார், தூக்கம் வர மறுக்கிறது. பட்டு மெத்தை; மின்சார விசிறி இருந்து? மனத்திலே முள்! தைத்தபடி இருக்கிறது. மூதூர் நிலத்தை முடிக்க முடியவில்லையே! பாதூரான் இந்த வருடத்து வட்டிப் பணத்தைக் கட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறானே! மந்திரி வந்த கூட்டத்திலே மாலை போடும்போது, பயத்தால் உடல் வெடவெடத்ததைப் பார்த்து பக்கிரி கேலியாகச் சிரித்தானே! எத்தனை டானிக் சாப்பிடட்டும், நாலு அடி நடந்தால் மேல் மூச்சு வாங்குகிறதே. பெரிய இடத்திலே பெண்ணைக் கொடுத்ததிலே பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, மாப்பிள்ளை "பேயாட்டமாடி' பெண்ணைத் துரத்தி அடிக்கிறானே! கொண்டு போனக் கணக்கைத் தூக்கி தூர எறிந்துவிட்டு அதிகாரி நெருப்பைக் கக்கினாரே! ஒரு ரூபாய் டிக்கட்டு ஒன்பதாயிரத்தை வந்தே மாதரம் தலையில் கட்டிவிட்டு கிட்டி போடுகிறானே! - என்று இப்படிப் பலவிதமான கவலைகள் மனத்திலே குடைகின்றன; தூக்கம் வரவில்லை.

அவன் - படுத்ததும் தூங்கிவிட்டானே - வேலையாள் - காலையிலே இருந்து செய்த வேலை உடலைக் கசக்கிப் பிழிந்துவிட்டது பசி. விறு விறுவென்று சோறும் சாறும் பிசைந்து உள்ளே போட்டதும், பசி அடங்கி, ஒருவிதமான நிம்மதி ஏற்பட்டது.

புளியங்கட்டை, பிளக்க முடியாது, உயிர்போகும் என்று பல பேர் மிரட்டினார்கள். ஆனால் மூன்றே மணி நேரத்தில் பிளந்து போட்டுவிட்டோம்!! எந்தப் பய நம்முடைய வேலையிலே குறை காண முடியும்! என்று எண்ணுகிறான்; ஒரு பெருமித உணர்ச்சி கொள்ளுகிறான். பிற்பகல் சாப்பிட்ட நெல்லிக்காயின் "ருசி'; நான் எங்க மாமனைத்தான் கட்டிக்கப் போறேன் வேளை வந்ததும் என்று காத்தாயி சொன்னதைக் காதாரக் கேட்ட நினைவு அவனுக்கு ஒரு தெம்பு கொடுத்தது. இந்த இன்ப நினைவு தழுவியதும் நிம்மதியாகத் தூங்கிவிட்டான்.

தன் தூக்கத்தை என்னவோ அவன் பறித்துக் கொண்டதுபோல எண்ணிக்கொண்டு, பதைக்கிறார் சீமான். நியாயமல்ல! ஆனால், அவரிடம் போய் நியாயம் பேச முடியுமா? மூன்று இலட்சம் கொண்ட பெரிய புள்ளி!!

***

ஏன் அண்ணா! இவர்களையெல்லாம் என் முன் கொண்டுவந்து நிறுத்துகிறாய். உலகிலே இதுபோலப் பலப்பல உண்டு என்பதை நானும் அறிவேனே காரணமற்ற காழ்ப்பு! பொருளற்ற கோபம்! தேவையற்ற மாச்சரியம்! இருந்திடத்தான் காண்கிறோம். வலியோர், எளியோரை வதைத்திடும் தொடர் கதையிலே இந்தச் சம்பவங்கள் பகுதிகளாக அமைந்துள்ளன; அறிவேனே! - என்று கூறுகிறாய். ஆமாம், தம்பி! இவைபற்றி நீ அறிவாய் என்பதனை நானும் அறிவேன்; ஆனால் வள்ளிமீது எஜமானியம்மாள் குரோதம் கொண்டிருப்பது போல, பாடுபடுபவன் களைத்து உறங்கக் கண்டு சீமான் பதைபதைப்பது போல, உன்னைப் பற்றி, உன் இயல்பும் அதன்மீது அமையும் பணியும் அதன் விளைவான வெற்றியும் கண்டு, அத்தகைய இயல்பற்றவர்கள், வெற்றி பெற்றிடாதவர்கள், எரிச்சல்கொண்டு, காழ்ப்பினை உமிழ்கின்றனரே, அதனை அறிந்திருக்கிறாயா!

உன் இலட்சிய முழக்கத்தை, வெறி என்றும்,
உன் தொண்டாற்றும் திறனை, அலைச்சல் என்றும்,
உன் அமைப்பின் வளர்ச்சியை, போலி என்றும்,
உன் வெற்றியை கானல்நீர் என்றும்,
உன் திட்டத்தை வெறும் பகற்கனவு என்றும்,
உன் தமிழ் பற்றை, மொழி வெறி என்றும்,

ஏசிப் பேசிடவும், எள்ளி நகையாடிடவும், நிரம்பப் பேர் உள்ளனரே அறிவாயா?

வானம்பாடிபோல வட்டமிடுகிறாய், தம்பி! தமிழ் இசை பரப்பியபடி! வல்லூறுகள் உன்னைக் கொத்திவிடும் கொடு நோக்குடன் பசி நிறைந்த கண்களுடன் உள்ளனவே பார்த்தனையா?

எல்லோரும் இன்புற்று இருந்திட என்னாலான பணியாற்றுவேன் - என்கின்றாய் நீ; இவன் யார் இந்தப் பணியாற்றிட! இவனை அழைத்தது யார்? இவனுக்கு ஏது அதற்கேற்ற ஆற்றல்? - என்று இறுமாந்து கேட்டிடுவோரின் குரல் உன் செவியினில் வீழ்ந்ததுண்டா?

தம்பி! உன்னைச் சூழ்ந்து கொண்டுள்ளனர், பொறாமையும் பொச்சரிப்பும் கொண்டோர்; நச்சு நினைப்பினர்; நாமடைய முடியாத வளர்ச்சியினை இவன் பெற்று வருகின்றானே என்ற எண்ணத்தால் மிருகமானோர்.

உன் தகுதி என்ன, திறமை என்ன என்றே கேட்கின்றனர், கோபத்துடன்.

பாதை அறிவாயா, பயணப்பட்டுவிட்டாயே! - என்று கேட்கின்றனர்.

பெரியதோர் சுமையைத் தூக்கிட முனைகின்றாயே, அதற்கேற்ற தோள்வலி உனக்கு உண்டோ? - எனக் கேபேசுகின்றனர்;

ஓட்டாஞ் சல்லிகளைக் கொடுத்து வைரக்கற்களை வாங்கிடப்போமா! ஊராளும் வாய்ப்பை, உண்மைக்கு உழைப்பதன் மூலம் பெறலாம் என்று எண்ணிக் கொள்கிறாயே, ஏமாளித்தனம் அல்லவோ அஃது என்று கேட்கின்றனர்.

கோட்டை எம்மிடம்! கொடிமரம் எம்மிடம்! பேழை எம்மிடம்! நீயோ உறுதி என்னிடம்! உண்மை என்னிடம் களம்புக முனைகின்றாயே, இது பேதையின் போக்கல்லவா என்று கூறிக்கொண்டு கேட்கின்றனர்.

***

ராஜபாட்டையில் ரத கஜ துரக பதாதியர் செல்கின்றனர்!

காலைக் கதிரவன் ஒளிபட்டு, படைக்கலன்கள் பளபளக்கின்றன!

மாடிகளிலே நின்றிடும் மங்கையரின் வதனம் கண்டு ஈதென்ன அதிசயம்! ஒரு கதிரவனைக் காண இத்தனை சந்திரன்கள் வந்துள்ளனவே என்று புலவர்கள் பாடுகின்றனர்.

வீசிடும் மென்காற்றால் அசைந்திடும் பட்டாடை கண்களைப் பறிக்கும் நேர்த்தியுடன் விளங்குகிறது.

அந்த ராஜபாட்டை, அரசிளங்குமரர்க்கும் அவர்தம் படை வீரர்கட்கும் அமைந்தது.

கட்டுடலை மட்டும்கொண்டு, அதற்கு ஓர் அழுக்கேறிய துணி சுற்றிக்கொண்டு நடந்திடும் பராரிக்கு அங்கு என்ன வேலை?

மாளிகைக்குள்ளே பூங்கொடிகள் மீட்டிடும் யாழொலி கிளம்புகிறது. உன் வாய் ஏதோ முணுமுணுக்கிறதே, யார் செவியில் அது விழும்?

போ! போ! ஒதுங்கிப் போ! ஓரமாகப் போ! ஊர்க் கோடி நோக்கி நட!

முட்டுச் சந்துகளில் நட! ராஜபாட்டையைக் கேவலப் படுத்தி விடாதே! இது செல்வபுரி! நீ இங்கே நடந்திட அனுமதி இல்லை! காவலர் தடுத்திடுவர்! வேட்டை நாய்களை அவிழ்த்துவிடுவர்! அவை உன்மீது பாய்ந்து கடித்துப்போடும்! பாவையர் கண்டு கைகொட்டிச் சிரிப்பர், பித்தன் என்று! சிறார்கள் கல் வீசுவர்! சிறைக்கே இழுத்துச் சென்றிடக்கூடும்! இது உனக்காக அமைந்த பாதை அல்ல! இது உடைமை உடையார்க்கான பாதை! உழைத்தால் மட்டுமே பிழைத்திடத் தக்க உனக்கு அல்ல! - என்று பழங்காலத்துக் கொடுங்கோலர் கூறுவர்; இப்போது உள்ள ஆளவந்தார்கள் நாடாள உனக்கு ஏது தகுதி! உனக்கு ஏது ஆற்றல்! என்று ஆணவத்துடன் கேட்கின்றனர்.

உன் அமைதி அவர்களை ஆர்ப்பரிக்கச் செய்கிறது.

உன் கடமை உணர்ச்சி அவர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.

***

மன்னன் மகளுக்குச் சுயம்வரம் என்று கேள்விப்பட்டு விரைந்தோடினர் அரசிளங்குமரர் பலர், தத்தமது விருதுகளுடன் படை புடைசூழ; பரிவாரம் உடன்வர!

பல்லக்கில் சில பார்த்திபர்கள்! பரிமீது சிலர்! யானைமீது அம்பாரி அமைத்து அதிலே கெம்பீரமாக அமர்ந்து சிலர்! அணிபணிபூண்டு! பளபளப்புடன்!!

காட்டுக்குதிரை, இது கட்டுக்கு அடங்காது, இதற்கு மதிப்பும் கிடைக்காது என்று பலர் எண்ணிக் கொண்டிருந்தனர், அவன் ஏறிக்கொண்டு வந்த அந்தக் குதிரையை முன்பு கண்டவர். இது நல்ல "சுழி' உள்ள குதிரை அல்ல என்று நாம் ஒதுக்கி விட்டோம், வேறு நல்லது கிடைக்காததால் இவன் இதனைக் கொண்டான்; இப்போது பார்த்தால், எலும்புந் தோலுமாகவும் இல்லை. இடறி விழுந்திடுவதாகவும் இல்லை, காட்டுப் போக்கையும் காணோம். குதிரைக்கே ஒரு புது மினுமினுப்பு ஏறிவிட்டிருக்கிறதே! நடை, அழகாக இருக்கிறது, தோற்றம் கெம்பீரமாக இருக்கிறது. அவ்வளவு புதுப்பொலிவு, அந்தக் குதிரைக்கு! நம்முடைய குதிரைக்கு நாலு ஆள் பராமரிக்க! பாதாம் பருப்பை அரைத்துப் பக்குவப்படுத்தித் தருகிறோம், மினுமினுப்புப் பெறட்டும் என்று. அரபு நாட்டிலேயே இது போன்ற அருமையான புரவி கிடையாது என்று கூறி நம்மிடம் வணிகர் விற்றனர். நாம் மிக அக்கறையுடன் பராமரித்து வருகிறோம். என்றாலும் அந்தப் பயல் அமர்ந்து வருகிறானே ஒரு குதிரைமீது, அது என்ன கெம்பீரத் தோற்றத்தோடு இருக்கிறது! இடர்மிகு வழியெனினும் எத்துணை எளிதாகச் செல்கிறது. ஆறு குறுக்கிட்டால் அலுப்புத் துளியுமின்றி நீந்துகிறது அகழி கண்டால், தாவுகிறது தடுமாற்றமின்றி! தட்டினால் சிட்டாகப் பறக்கிறது? இவன் ஆள நாடு இல்லை! கொலுவிருக்க, மாளிகை இல்லை! கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள் அம்பு இல்லை! இவனிடம் இப்படிப்பட்ட குதிரையா! என்று எண்ணி ஏக்கம் கொள்கிறார்கள் இளவரசர்கள்.

அவனோ! ஊர்பேர் தெரியாதவன்! விருது ஏதும் இல்லை! அரண்மனையில் அவன் இல்லை! குடிமகன்! அவன் உலவுவது பூங்காவில் அல்ல; வயல்வெளியில். அவன் பெருமைமிகு மரபினன் என்று புலவர் எவரும் பாடிடவில்லை. அவன் செயலில் சிறப்பு இருக்கிறது; மனவளத்தில் மரபு இருக்கிறது என்ற கருத்துடையவன்; உழைப்பால் மெருகேறிய உடல்; களத்திலே பெற்ற வடுக்களே அவன் பூண்டிருந்த அணிபணி! மற்றவர்கள் உடலில் வைரம் மின்னிட, இவன் கண் ஒளியிலே வைரத்தைக் காட்டினான்.

இவனா சுயம்வரம் காண வருகிறான்! ஏனாம் என்று கேட்டு கெக்கலி செய்தனர் சிலர்.

சுயம்வரம் காணப் பல நாட்டுச் சிற்றரசர்கள் வருவார்கள். அங்குச் சென்றால் யாரேனும் ஓர் இளவரசனிடம் வேலை கேட்கலாம் என்று வருகிறான் போலும் என்று கூறிச் சிரித்தனர் சிலர்.

சந்தையோ திருவிழாவோ நடைபெறுகிறது என்று எண்ணிக்கொண்டு வருகிறான் போல இருக்கிறது! பயலுக்குச் சொல்லுங்கள், சுயம்வரம் நடைபெறுகிறது, அதற்காக, அரச மரபினர் செல்கின்றனர் என்பதை! அங்கு வந்து ஏமாற்ற மடைவானேன்!! என்று கேலி பேசினர் சிலர்.

அவன் அவர்களுடைய பேச்சைப் பொருட்படுத்தவில்லை.

அவன் அவர்களிடம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே ஏமாற்றம் கொள்ளவில்லை.

அவன் சென்றபடி இருந்தான்!

அவன் காட்டிய அலட்சியம் அவர்களுடைய ஆத்திரத்தை மேலும் மூட்டிவிட்டது.

இவ்வளவு ஏசுகிறோம் பயல் ஏனென்று கேட்கமாட்டேன் என்கிறானே!

வம்பு வல்லடிக்கு இழுத்துப் பார்க்கிறோம், பயல் வலையில் விழ மறுக்கிறானே! என்று அவர்கள் பேசிப் பேசி ஓய்ந்து போயினர்!

அத்தாணி மண்டபத்திலேயோ அந்த அழகுமயிலாள் அவனைத்தான் தேர்ந்தெடுத்தாள்!

கவனிப்பாரற்ற நிலையில் வந்தான்; எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டான்.

அரச மரபினில் வந்தவன் அல்ல இவன் என்று கேபேசின ர். கண்முன் அவன் அரச மரபினன் ஆக்கப்பட்டு விட்டான்.

***

தம்பி! பழங்காலக் கதைகள், பாராளும் வேந்தர் மரபினர், புதியவர்களைக் கண்டு பொச்சரிப்புக் கொள்ளும் இயல்பை எடுத்து விளக்கிடும் கதைகள்.

இக்காலத்தில், கரி பரி காவலர் என்ற புறத் தோற்றம் இல்லை எனினும், அன்று இருந்தது போன்றே, பொச்சரிப்பு கொள்வோரும் பொல்லாங்கு எண்ணுவோரும் நிரம்ப உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் தம்பி! உன் ஆற்றலால் வளர்ந்துள்ள நமது கழகத்தின் ஏற்றமிகு தோற்றம் கண்ணை உறுத்துகிறது, கருத்தைக் கலக்குகிறது, நடையிலே நாராச நெடி அடிக்கிறது!

இவனுக்கு இப்படி ஒரு கழகமா! இப்படி ஒரு கழகத்தை இவன் உருவாக்குவதா!

வசதியற்றவன் அமைத்துள்ள கழகம், வளர்ந்த வண்ணம் இருக்கிறதே!

வசதிகள் நம்மிடம் ஏராளம்! நம்மாலே முடியவில்லை, இந்தவிதமான வளர்ச்சி பெற்றிட. இவன்... இவன்... என்று எண்ணும்போதே; தம்பி! அவர்களுக்கு இதயத்தில் ஈட்டி பாய்வது போலிருக்கிறது.