அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நல்லோரின் தீர்ப்பு!
2

பார்க்கப்போனால் தம்பி! நாம் பெற்றுள்ள இந்த வளர்ச்சி, பலருக்கு மனப் புழுக்கத்தைத்தான் தந்திடும்.

ஆராய்ந்து பார்த்திடின், இந்த உண்மையை உணரலாம்.

இந்த உண்மையை உணர்ந்திடின், அவர்கள்மீது கோபம்கூட வராது, பரிதாபந்தான் பிறக்கும்.

நாடாளும் உரிமை ஜனநாயகத்தில் எவர்க்கும் உண்டு.

ஏழைக்கும் பணக்காரனுக்கும், "ஓட்டு' ஒவ்வொன்றுதான்! அதிலே வித்தியாசம் கிடையாது.

மேல்ஜாதிக்காரன் நான் ஆகவே எனக்கு எட்டு ஓட்டுகள்! தாழ்ந்த ஜாதிக்காரனுக்கு ஒரே ஒரு ஓட்டுதான் இருக்கவேண்டும் என்று பேச முடியாது; நாடு கேட்டுக் கொள்ளாது; சட்டம் அனுமதிக்காது; ஜனநாயகம் ஒப்புக்கொள்ளாது.

இவை ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகள்!

ஆனாலும், இப்போதும் நம்மைவிடப் பண பலத்தில் தாழ்ந்தவன் நமக்குச் சமமாக, அரசியலில் இடம் பெறுவதா! - என்ற காதக எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்; புற்றுக்குள் அரவம்போல அவர்களின் காதகம் இருந்து வருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது குறள். சட்டமும், அரசியலில் அனைவரும் சமம் என்று செப்புகிறது. என்றாலும் இன்றும், ஜாதி மூலம் ஆதிக்கம் செலுத்த எண்ணுவோர் சாஸ்திரம் காட்டி சமூகத்தில் ஏற்றத் தாழ்வைப் புகுத்த நினைப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களால் முன்பு போலக் கொக்கரிக்க முடிவதில்லை, ஆனால் மனத்திலே மட்டும் குரோதம் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது.

பணத்தால் உயர்ந்த நிலை, ஜாதியால் உயர்ந்த நிலை என்ற முறை, ஒருபுறம் சீர்திருத்தவாதிகளின் சம்மட்டி அடியால் நொறுங்கிக் கொண்டுவந்தது; மற்றோர்புறம் நாட்டு விடுதலைக்கான போராட்ட வேகம், சமூகத்தில் பணம், ஜாதி ஆகியவற்றால் மூட்டி வைத்திருந்த பேத உணர்ச்சியை, மேல் கீழ் என்ற நிலையைத் தகர்த்தபடி இருந்தது.

அரசியலில் அனைவரும் ஒன்றுபட்டுப் பணியாற்று வது என்பதும் அரசியலில் அனைவருக்கும் ஒரே நிலை என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சமூக அமைப்பிலேயும் சாஸ்திரம் சம்பிரதாயம் ஆகியவற்றின் துணை கொண்டு கெட்டிப்படுத்தப்பட்டிருந்த ஜாதிபேதம் தொலைக்கப் பட்டாக வேண்டும் என்ற உணர்வு வலுப்பெற்றது.

ஜனநாயகத்தின்படி ஏழையாயினும் சீமானாயினும், எந்த ஜாதியினன் என்றாலும் ஒருவருக்கு ஒரு ஓட்டு! என்ற முறை நடைமுறையாக்கப்பட்டது.

என்றாலும், பணம் படைத்தோர், உயர்ஜாதி என்று பட்டயம் பெற்றுக்கொண்டோர், சட்டம் என்ன செப்பிடினும், நாடாளும் உரிமை தமக்குத்தான் இருக்க வேண்டுமேயன்றி ஏழைக்கும், என்னென்னவோ ஜாதிகளைச் சேர்ந்தவனுக்கும் இருக்கக் கூடாது; இருக்க அனுமதிக்கக்கூடாது என்ற நச்சு நினைப்பினை விட்டுவிடவில்லை.

தம்பி! நாம் கழகம் துவக்கியபோது, இந்தப் பயல்களா? இந்தப் பஞ்சைகளா? என்று கேட்டனர், செல்வபுரியினர். ஏன்? பணத்தைக் காட்டியோ, பூர்வ பெருமை காட்டியோ, அரசியலில் பலர் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், வறண்ட தலையினர், எமக்கும் அரசியலில் ஈடுபட, மக்களுக்குத் தொண்டாற்ற உரிமை உண்டு என்று கூறியபோது கெக்கலி செய்தனர்.

நாம் அரசியலில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கத் தக்க விதமாக, முன்னேற்றக் கழகம் துவக்கியபோது, காங்கிரசுக்குள் பணம் படைத்தோரின் செல்வாக்கு மிகுதியாகி விட்டிருந்தது. அவர்கள், நம்மைப் போன்ற "பஞ்சை பராரிகள்' ஒரு கட்சி நடத்த முடியும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

அவர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.

எந்தத் திராவிடர் கழகத்தைவிட்டு வெளியேறினோமோ அந்தக் கழகத்தவர் ஏளனம் செய்தனர்.

பெரியார் சாபம் கொடுத்தார்; ஜாதகம் கணித்தார்; நாலு நாளைக்கு ஆட்டமாடிவிட்டு, மூலைக்கு ஒருவனாக ஓடிப்போவான், மூக்கறுபட்டு முக்காடிட்டுக் கொள்வான் என்று ஊரூருக்கும் சென்று கூறினார், நாள் தவறாமல்.

"ப்யூஸ்போன பல்புகள்' என்று உவமைநயம் காட்டிப் பேசினர், நம்மை ஏசிட!

காங்கிரசுக் கட்சியினர் காசு கொடுத்து இந்தக் காலிகளைத் தூண்டிவிட்டுள்ளனர்; வாங்கிய காசு தீர்ந்து போனதும் வாலை மடக்கிக் கொள்வார்கள் என்று பெரியார் "எதிர்காலம்' பேசினார்.

என்னிடம் மூட்டை தூக்கிய பயல்கள். கூலி வாங்கிய ஆசாமிகள் - இதுகளுக்கு ஒரு கட்சி! ஒரு கொடி! ஒரு படை! ஒரு நடை! செச்சே! நாடு இப்படியா தாழ்ந்து விடுவது என்று பரிதாபம் காட்டிப் பேசினார்.

கோபம் காரணமாகப் பெரியார் இப்படியெல்லாம் பேசினார் என்றுதான் பலர் கருதிக்கொண்டனர்; அவர் உண்மையில் நம்பிக்கையுடன் பேசினார்.

ஒரு கட்சியை நடத்திச் செல்வது, பணபலமற்ற நிலையில் அதனை வளரச் செய்வது நடக்கக்கூடிய காரியமல்ல என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

அதிலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்பது என்றால் அதற்கு மிகப் பெரிய துணிச்சலும், தன்மான உணர்ச்சியும், எவனையும் நத்திப் பிழைக்கவேண்டிய அவசியமற்ற நிலையும் இருக்க வேண்டும். மற்றவர்கள், பத்து நாள் படபடப்புக் காட்டிவிட்டுப் பதினோராம் நாள் பாதம் விழுவார்கள் என்று சொல்பவர்.

எனக்கு எவன் தயவும் தேவையில்லை! யாருடைய கையையும் எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலையில் என்னை என் பெற்றோர் விட்டுவைக்கவில்லை.

ஈரோட்டிலேயே மிகப் பெரிய மண்டிக் கடை எங்களுடையது.

ஈரோட்டிலேயே மூன்றடுக்கு மாடிக் கட்டடம் எங்களுடையது.

என் வீட்டுத் தாழ்வாரத்திலேதான் தமிழ்நாடு காங்கிரசே இடம் கேட்டுப் பெற்றிருந்தது. என்றெல்லாம் பெரியார் பேசுவார்; வெகு கெம்பீரமாக.

அவருடைய அந்தப் பேச்சு அவருடைய அழுத்தமான நம்பிக்கையின்மீது அமைந்திருந்தது; வெறும் வீம்புப் பேச்சு அல்ல; வெட்டி வீராவேசப் பேச்சு அல்ல!

மிகுந்த செல்வவசதி படைத்தவர் தவிர மற்றவர் களால் அரசியலில், மற்றவனுக்கு அடிமையாகிடாமல், வாழ முடியாது என்பது அவருக்கு இருந்து வந்த (இப்போது எப்படியோ தெரியாது) அசைக்க முடியாத நம்பிக்கை.

பணமற்றவன், பிறன் கையை எதிர்பார்த்து வாழ வேண்டியவன் கொள்கை பிறழாமல் வாழ முடியாது என்பதனை ஒரு தத்துவம் போலவே பேசுவார்.

சோற்றுக்கில்லாதார் பிரசாரம்!

என்ற தலைப்பிட்டே, அப்படிப்பட்டவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஆகவேதான் தம்பி! அவருடைய கழகத்திலிருந்து பிரிந்து சிலர் தனிக் கழகம் துவக்கியபோது அவர் அவ்வளவு வேகமாக ஆரூடம் கணித்தார்.

எவன் இவன்களோடு போவான்!

எவனுக்கு இவன்களிடம் நம்பிக்கையோ மதிப்போ ஏற்பட முடியும்?

நாலு நாளைக்கு ஒரு கூட்டம் சேர்த்துக் கூத்தடித்துவிட்டு, காங்கிரசின் காலிலே போய் விழுவான்! வேறே வழி!!

என்று அவர் பேசியபோது "ஐயா'' நடைபெறப் போவதைத்தான் சொல்கிறார் என்று நம்பினோர் பலப்பலர்.

ஆனால், தம்பி! உன்னுடைய ஊக்கமும் உற்சாகமும் உன்னதமான உழைப்பும், பணவசதியற்ற நம்மை, பல கட்சியினரும் கண்டு வியந்திடத்தக்க ஒரு கழகத்தை நடத்திச் செல்லத்தக்கவர்களாக்கிற்று.

நம்மிடம் பணம் இல்லை, பழம்பெருமை இல்லை, மேட்டுக் குடியினர் என்ற விருது இல்லை; ஆகவே, வளரமாட்டோம் என்று மட்டுந்தான் அவர் கணக்கெடுத்தார்.

உன் வியர்வைத் துளிகளுக்குள்ள விலை மதிக் கொணாத கணக்கு அவருக்குக் கிடைக்கவில்லை.

கழகம் கருகிவிடவில்லை; கழகம் நடாத்துவோரும் எவர் பின்னும் கைகட்டி வாய்பொத்திச் சென்றிடவில்லை. அது கண்டு ஓரளவு எரிச்சல் ஏற்பட்டது; அப்போதும் எதனால் கழகம் வளருகிறது என்ற கணக்குப் புரியவில்லை.

அப்போதுதான் தம்பி! அரசியல் உலகில், கழக வளர்ச்சி கண்டு அருவருப்பு அடைந்தவர்கள், கழகம் வளருவதற்கான காரணம் எதையாவது கூறியாக வேண்டும் என்ற நிலைக்குத் துரத்தப்பட்டு, நான்,

அடுக்கு மொழி பேசி மயக்குகிறேன் என்றும்,

காமச் சுவையுள்ள கட்டுரைகள் எழுதிக் கெடுத்து விடுகிறேன் என்றும்,

குற்றம் சாட்டி வந்தனர்.

ஒரு ஐந்தாறு வருடமிருக்கும், தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சி மேடைகளிலும், இதுதான் பேச்சு!

அடுக்கு மொழி!
ஆபாச நடை!!

தமிழ் மொழியின் அமைப்பே அடுக்கு மொழிக்கு இடம் தருகிறது. அடுக்கு மொழி பேசுவதற்கு முன்வந்தவன் நான் மட்டும் அல்ல! என்றாலும் செய்யக் கூடாத ஒரு பாதகத்தை நான் செய்து வருவது போன்ற ஒரு தோற்றமளிக்கும்படி, எல்லா அரசியல் கட்சியினரும் பேசினர், அடுக்கு மொழியைக் கண்டித்து.

முத்தைத் தரு பத்தித் திருநகை
சத்திக் கிரை சத்திச் சரவண
முத்துக்குக வித்துக் குருபர!

என்பன போன்ற சந்தச் சுவைமிகு எடுத்துக்காட்டுகளை யெல்லாம் நான் பேசி, அடுக்கு மொழி என்பது தவறு ஆகாது என்று விளக்கிக் கொண்டுவந்த காலம்.

தம்பி! நீ மறந்துவிட்டிருப்பாய்; நமது கழகத்தின்மீது என்ன பழி சுமத்துவது என்றே அலைந்தவண்ணம் இருந்த அந்த நாட்களில், நாள் தவறாமல் நாம் கூட்டம் நடத்துகிறோமே, அதுவே தவறு, கேலிக்குரியது, கண்டிக்கத்தக்கது என்று பேசினர்! இப்போது நினைவிற்குக் கொண்டு வந்தால்கூட எனக்குச் சிரிப்பு வருகிறது!

பேச்சுக் கச்சேரி நடத்துகிறார்கள்.
உவமையும் அணியும் வைத்துப் பேசுகிறார்கள்.
இது அரசியல் பேச்சாகுமா!

என்றே எழுதினார்கள் தொடர்ந்து.

இந்த எதிர்ப்பு கழகத்தை ஏதும் செய்துவிடவில்லை.

சொல்லப்போனால், நான் அடுக்கு மொழி பேசுகிறேன் என்று கேலி பேசியவர்களெல்லாம் அடுக்கு மொழி பேசத் தலைபட்டனர்.

அடுத்த கட்டத் தாக்குதல் தம்பி! மேலும் விந்தையானது.

அந்த நேரத்தில், நமது கழகத்தில் கலை உலகினரின் தொடர்பு இன்றுள்ள வகையிலும் அளவிலும் இருந்ததில்லை. இன்று ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டிருக்கிற பல சமுதாயத் திருத்தக் கருத்துக்களை, நாடகம் மூலம் எடுத்துக் காட்ட வாய்ப்புகள் கிடையாது.

கழகக் கருத்துள்ள நாடகம், சினிமா, பாட்டுக் கச்சேரி, இவை இன்றுள்ளது போல இருந்ததில்லை.

ஆனால், நாடக மூலம், இசை மூலம், அடிப்படையான சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துக் கூறியாக வேண்டும் என்ற துடிப்பு, நிரம்ப.

அதன் காரணமாக, நாடகங்கள் நடத்திட முனைந்தோம். உடனே தாவிப் பாய்ந்தனர், இது சரியான வாய்ப்பு என்ற எண்ணத்துடன்,

கூத்தாடுகிறான்!
பவுடர் பூசுகிறான்!!
அரசியல் மேடையை நாடக மேடையாக்குகிறான்!
அடுக்குமா! ஆகுமா!
அனுமதிக்கப் போமா? நாடகமாடுபவன் நாட்டிலே அரசியல் கட்சி நடத்துவதா!

கணைகள் சரமாரியாக; மிகக் கூர்மையுடன்!!

ஆனால் தம்பி! அவர்கள்தான் அலுத்துப் போனார்கள், நமது நாடகப் பணி நின்றுவிடவில்லை; கே.ஆர். ராமசாமியின் ஒப்பற்ற கலைத் தொண்டு நமக்குக் கிடைத்தது; சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினோம்.

இன்று தலைமை நிலையம் இருக்கிறதே "அறிவகம், அதுவும், அங்கு நடைபெறும் அச்சகமும் பிறவும், "பவுடர் பூசிகளாக' இருக்கிறோம் என்று ஏசினார்களே அப்போது பெற்றவை.

கழகத் தோழர்களே நடத்தித் தீரவேண்டியிருந்த நிலையிலிருந்து நமது நாடகப் பணி செம்மையாக வளர்ந்து "நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்றாரின் பண்பட்ட நடிப்பின் துணை பெற்றது.

தம்பி கருணாநிதி, சி.பி. சிற்றரசு, ஆகியோரின் நாடகங்கள், கழகத்தின் கலைப்பகுதியாக விளங்கி வந்தன.

தம்பி என்று நான் அழைத்தால் மகிழ்ச்சி பெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிவாஜி கணேசன், கழக நாடகங்களில் பங்கேற்றதை நாடறியும்!

நாடகமாடுவதால், கழகத்தின் தரம் கெட்டுப் போய்விடும் என்று குற்றம் சாட்டினர். கழகமும் வளர்ந்தது; கலை நிலையும் உயர்ந்தது. இன்று இந்த இரு துறைகளிலும் மிக்க ஏற்றம் பெற்றுத் திகழ்ந்திடும் எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ்.எஸ். ராஜேந்திரன், கே. ஆர். ராமசாமி, டி.வி. நாராயணசாமி ஆகியோர் நாட்டவரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்.

எதற்காக இதனைக் கூறினேன் என்றால் தம்பி! நாடகமாடுவதையே ஒரு இழுக்கு, இழிவு, அரசியல்வாதி செய்யத்தகாதது; ஆகவே நாடகமாடக் கிளம்பிவிட்டதால் கழகத்தவர் அழிந்துபோய்விடுவர், நாட்டு மக்களுடைய நன்மதிப்பை இழந்துவிடுவர் என்று தவறாகக் கணக்கிட்டுக் கொண்டு, சில ஆண்டுகள் "பவுடர் பூசுகிறானே! பாவலா போடுகிறானே!!' என்றே மேடை அதிரப் பேசிக்கொண்டு வந்தனர்.

இத்தகைய எதிர்ப்புப் பிரசாரம் பலன் தராது போகவே, கழகத்தில் தலைமைப் பதவிக்குச் சண்டை! அவனை இவன் விழுங்கப் பார்க்கிறான்; இவனை அவன் ஒழிக்கப் பார்க்கிறான்! தீர்ந்தது! இன்னும் எட்டே நாளில் படாரென உடைபடப் போகிறது என்று பேசி வந்தனர்.

கழகம் குலையாதது மட்டுமல்ல, நேர்த்தியான ஜனநாயக அமைப்பாக வளர்ந்து வரலாயிற்று.

நாடகத் துறையிலே ஈடுபாடுகொண்டது போலவே கழகத்தவர், சினிமாத் துறையில் ஈடுபடலாயினர்! இதைக் காரணமாகக் காட்டி, இனி இந்தக் கழகம் அழிந்தே போகும்! அவன் - அங்கே புரளுகிறான்! இவன் இங்கே உருளுகிறான்! - என்று ஆபாசமான பழிகளை உமிழ்ந்தனர்.

சினிமாவை விடு!
சிலம்பத்தை எடு!!
என்று நாடெங்கும் முழக்கம் எழுப்பினர்!
இந்தப் படலமும் அவர்களுக்குப் பலன் தரவில்லை.
உடனே வேறோர் முனை பாய்ந்தனர்.
இந்தக் கழகத்தான்கள் பேச்சோடு சரி!
செயலில் முடியாது!!
கிளர்ச்சி நடாத்திட இயலாது!

துணிவும் கிடையாது, திட்டமும் இல்லை; இவர்களை நம்பிக் கிளர்ச்சியில் ஈடுபட ஆட்களும் வரமாட்டார்கள். இவர்கள் கிளர்ச்சி நடத்தினாலும் சர்க்கார் மதிக்காது என்று ஏசலாயினர்.

அப்போது தம்பி! நான் கூறினது நினைவிலிருக்கும்.

கிளர்ச்சிகளைத் தேடி அலையமாட்டோம்.

அவசியம் ஏற்பட்டால் நடத்தாமல் விட மாட்டோம்! என்றேன்.

அந்த வாசகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு அலையமாட்டானாம்; அகப்பட்டால் விட மாட்டானாம்.

என்று ஊரூருக்கும் பேசி, ஒவ்வொரு நாளும் கணக்குப் பார்த்து வந்தனர், இன்று கழகம் எந்த அளவு குலைந்தது என்று! குலையவில்லை.

பிறகு தேர்தலிலே ஈடுபட முனைந்தோம்.

அகப்பட்டுக்கொண்டான் பயல்! இதுவரையில்

சிக்காமல் இருந்து வந்தான்! இனிச் செத்தான்!! - என்று செப்பினர்.

நாட்டு மக்கள் கழகத்தை மேலும் ஏற்றம் பெற்றிடச் செய்தனர்; இவர்களின் ஆரூடத்தைப் பொய்யாக்கினர்.

இரண்டாவது முறை தேர்தலில் ஈடுபட்டவுடன் வேறோர் புகார் கிளப்பினர்.

அண்ணாதுரை பார்ப்பன அடிமை ஆகிவிட்டான்.

ஆச்சாரியார் திருவடி சரணம் என்றாகிவிட்டான்.

இனி அவனைத் தமிழர் துரத்திவிடுவர்.

இந்தப் பிரசாரம், மிகத் தீவிரமாக வேலை செய்யும் என்ற நினைப்பு அதிகம்.

ஆனால், அந்தப் பிரசாரத்திற்குப் பிறகுதான், கழகம் 38-இலட்சம் வாக்குகளைப் பெற்றது!!

ஏமாற்றம்! ஆத்திரம்! எரிச்சல்! அவர்களுக்கு.

ஆகவேதான் தம்பி! உன்னையே ஏசவும், இழித்துரைக் கவும் தலைப்பட்டுள்ளனர்.

இடையிடையே, செத்த பாம்பை எடுத்து ஆட்டிக் காட்டுவதுபோல, ஆச்சாரியாரிடம் சரண் அடைந்து விட்டான்! ஆரிய தாசனாகிவிட்டான்! என்ற பேச்சையும் எடுத்து வீசி வருகின்றனர்.

சுடச்சுட இருந்த நாளிலேயே விலைபோகாத பண்டம் அது!

இப்போது சூடும்போய், ஈ எறும்பு மொய்த்துக் கொண்டிருக்கும் நிலைக்கு வந்துவிட்டது; இப்போது அதனைக் கூவிக்கூவி விற்றாலும் வாங்கவார் யார்?

ஆனால் வேறு என்ன செய்வார்கள்?

வள்ளிமீது எஜமானியம்மாளால் கோபிக்காமல் இருக்க முடிகிறதா?

அயர்ந்து தூங்குகிறானே என்று வேலையாளிடம் சீமானுக்குப் பொறாமை மூளாமல் இருக்கிறதா? எல்லாவிதமான வசதிகளும், வலிவுகளும் திரட்டிவைத்துக் கொண்டு, தலைவர்கள் ஆகத் துடியாய்த் துடிக்கிறார்கள் பலர்; முடியவில்லை. நீயோ தம்பி! உன் தூய தொண்டின் மூலம், வலிவும் பொலிவும் மிக்க கழகத்தை நடத்திச் செல்கிறாய். கோபம் அவர்களுக்கு. கொதிப்பு மிகுதியாக!! அதனால் இழித்தும் பழித்தும் பேசிட முனைகின்றனர். அவர்களின் வேகம் அதிகமாகும், தேர்தல் நெருங்க நெருங்க!

இழி மொழிகளையும் பழிச் சொற்களையும் கேட்டு, உனக்குக் கோபம் பீறிட்டுக்கொண்டு வர வேண்டும். திசை மாற வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். தயக்கம், தடுமாற்றம் மூட்டிவிட்டு, தீர்த்துக்கட்டிவிடலாம் என்பது அவர்கள் கொண்டுள்ள நப்பாசை.

இவ்வளவுக்கும் காரணம் உன் தூய தொண்டில் அருமையும் பெருமையும் இன்று அரசியல் வட்டாரத்தில், ஓங்கி வளர்ந்துள்ள தலைவர்களை உறங்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் ஒரு உன்னதமான பாசறையை அமைத்துக் கொடுத்திருக்கிறதே என்பதனால் ஏற்படும் பொறாமை உணர்ச்சி.

இன்று நேற்றல்ல, நமது கழகம் தொடங்கிய நாள்தொட்டு இத்தகையோரின் இழிமொழியும் பழிச் சொல்லும் நம்மீது வீசப்பட்டு வந்தன. ஆனால் அந்தத் தாக்குதல் நமது வளர்ச்சியைத் தடுத்திட இயலவில்லை என்பதை நினைவுபடுத்தவே "பழங்கதை'யைக் காட்டினேன்!

ஆறு புரண்டோடி வரும் வேகத்தில், கூழாங்கற்களை உருட்டி விட்டுவிடும்.

பெரும் பாறைகள் தடுத்திடினும், அவற்றிலே, மோதிப் பேரிரைச்சலுடன் மேலே தாவும்!

மிகச் சாமான்யர்கள் நாம்! மிகப் பெரிய வலிவினை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

மிகப் பெரியவர்கள் வலிவு பெறத் தவம் கிடக்கிறார்கள்; பெற்றிட இயலவில்லை.

அதனால் வந்திடும் ஆத்திரத்தில் ஆயிரத்தெட்டு ஏசிடத்தான் தோன்றும்.

***

அந்த வட்டாரத்திலேயே அவன் பெரிய மிட்டாதாரன்! தலம் பல சென்று தொழுது, வரம் பெற்றுப் பெற்றான் ஒரு மகனை! ஆனால் அவனோ...

பொட்டல் காட்டினைப் பண்படுத்திப் பூந்தோட்ட மாக்கினான் ஒரு காளை.

ஒரு நாள் ஆற்றோரம் மிட்டாதாரன் மகன் உலவச் சென்றான். திடீரெனக் கீழே சாய்ந்தான்! காக்காய் வலிப்பால் தாக்குண்டதால்!

கண்டான் காளை! கடுகிச் சென்று, மிட்டாதாரன் மகன் முகத்தில் நீர் தெளித்து, நினைவு வரச் செய்து, அவனை அழைத்துச் சென்றான் மாளிகைக்கு!

மிட்டாதாரன் நன்றி கூறத்தானே வேண்டும்? எரிந்து விழுகிறான், காளையின்மீது!

பார்! இந்தப் பயலை. கொழுத்துக் கிடக்கிறான்!

இத்தனைக்கும் இராப்பட்டினி!

என் மகன் - குலக் கொழுந்து - இப்படி இருக்கிறான்!

என்று எண்ணுகிறான்; கடுங்கோபம் வருகிறது.

தம்பி! கதைதான்: ஆனால், இத்தகைய இயல்பு கொண்டோர் இருந்திடும் இடத்திலேதான் நீயும் நானும் இருந்து வருகிறோம். ஏசுகிறார்களே ஏன் என்று வியப்படையவா வேண்டும்: விளக்கம் பெற்றிட வேண்டும்: நம் வெற்றி அவர்களுக்கு வேதனையைத் தருகிறது: அதனால், பாவம் எரிச்சல் மிகுந்த நிலையில், எதையெதையோ கதைக்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரிந்ததை அவர்கள் செய்து கொண்டிருக்கட்டும்; நாம் நமது இயல்புக்கு ஏற்றனவற்றினைச் செய்தபடி இருப்போம். நல்லோரின் தீர்ப்பு நம் பக்கம்தான் இருந்திடும்!

அண்ணன்,

5-6-66