அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நிலவு, கழக வெற்றி, சிறைச்சாலை நிலைமைகள்
2

காங்கிரஸ் வட்டார ஓட்டுகள் சில அவருக்குக் கிடைத் திருப்பதுபற்றி, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் விசாரம் தரும் விசாரணை நடத்த இருப்பதாக மாலைப் பத்திரிகைகளில் பார்த்தேன் - அதுபற்றி மாரிசாமியிடம் கேட்டேன். - எனக்குத் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள், காங்கிரஸ் வட்டாரத்தில் , சில மந்திரிகள் மட்டுமே இருக்கிறார்கள் - அவர்களுடைய ஓட்டுகள்தான் கிடைத்திருக்க வேண்டும் என்று கூறினார். அவ்விதமாக, பத்திரிகை நிருபர்களிடம் கூறிவிட்டு வந்ததாகவும் சொன்னார். சுதந்திராக் கட்சிக்காரர் என்பதனால் மட்டுமல்ல, காங்கிரஸ் வட்டாரத்தின் பெரிய புள்ளிகளின் இயல்புகளை, நெருங்கிப் பழகி அறிந்திருக்கிறவர் என்பதாலே, இன்றைய காங்கிரஸ் தலைவர்களிலே முதன்மையானவர்களுக்கு, மாரிசாமியிடம் கோபம் - கசப்பு - அச்சம்கூட! அவருடைய வெற்றியை, அவர்கள் தங்கள் இதயத்துக்குத் தரப்பட்ட கசையடியாகவே கருதுவார்கள்.

திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவர் சின்னராஜு நமது இயக்கத்தவர் என்றாலும், எதற்கும் தாமாக முந்திக்கொண்டு வந்து நிற்கும் சுபாவம் உள்ளவரல்ல. சட்ட மன்றத் தேர்தலில் அவர் ஈடுபட்டதே என்னுடைய இடைவிடாத வற்புறுத்தலுக்குப் பிறகுதான். நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலிலும் ஈடுபட அவர் இலேசில் இடம் கொடுத்திருக்கமாட்டார். தேர்தலில் பல்வேறு வகையான எதிர்ப்புகள் இருந்தன என்று கூறினார். அவருடைய வெற்றி, நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும், காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வேலைகளில் ஒரு தலைமுறை அனுபவம் பெற்றவர்களாயிற்றே என்பதை எண்ணிச் சிறிது கவலைப்பட்டுக் கொண்டிருந்தவன், வெளியே சென்று அவரைக் காண நாட்கள் பல ஆகுமே என்று எண்ணிக்கொண்டிருந்தேன் - அவரே இங்கு வந்தது என் ஆவலை அறிந்து வந்ததுபோலிருந்தது.

ஆம்பூர் சம்பங்கி, மிக அமைதியாகக் காரியத்தைக் கணக்கிட்டு முடிக்கும் இயல்பினர். விலைவாசிக் குறைப்புப் போராட்டம் காரணமாக என்னோடு வேலூர் சிறையில் இருந்தவர். அப்போதே, அவர் ஆம்பூர் நகராட்சித் தலைவராக வரவேண்டும் என்று பேசிக்கொண்டோம். எண்ணியபடியே நடந்தேறியது. ஆம்பூர் நகராட்சிக்கான தேர்தலின்போது இருந்த நிலைமைகள்பற்றிச் சிறிதளவு கூறினார்.

அவர்களைக் கண்டுவிட்டு வந்து, இங்கு நமது நண்பர்களிடம் "சேதி' கூறியபோது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இன்று காலையில், சிறை மாநில மேலதிகாரி வந்திருந்தார் - இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவராம். நாங்கள் இருந்த பகுதிக்கு, சிறை அதிகாரிகளுடன் வந்திருந்தார். மிகப்பெரிய பொறுப்பான பதவியில் இருப்பவர், சிறை நிலைமைகளைக் கண்டறிய வரும்போது, எங்களையும் பார்த்து, நாலு வார்த்தை பேசுவார், நிலைமை எப்படி? என்று கேட்பார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். கேட்டிருந்தால் சொல்வதற்கு ஏராளமான தகவல்கள் இருப்பதால் அல்ல; ஒரு பரிவு காட்டும் முறையில், பேசுவார் என்று நினைத்தேன். அவர், எங்கள் பகுதியின் கீழ்த்தட்டில் உலவினார் - நாங்கள் மாடிப் பகுதியில், நூற்பு வேலையில் இருந்தோம் - திரும்பிக்கூடப பார்க்கவில்லை! சமையற்கட்டைப் பார்த்துவிட்டு, அங்கு இருக்கும் ஒரு அரச மரத்தைப் பார்த்துவிட்டுப் போய்விட்டார். வெள்ளைக்கார ஆட்சி ஒழிந்ததும், அதிகார வர்க்கத்தின் பழைய மனப்பான்மையே ஒழிந்துவிட்டது என்று வேறு பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள்.

கம்யூனிஸ்டு கட்சியிலே "பிளவு' விரிவாகிக்கொண்டு வருவதுபற்றி, நண்பர் மதியழகன், இன்றையப் பத்திரிகையைப் பார்த்துவிட்டுச் சொன்னார். ஆந்திராவில் சுந்தரய்யா - நாகிரெட்டி போன்ற புடம் போட்டு எடுக்கப்பட்டவர் களெல்லாம்கூட, புரட்சி செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டில், கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்படுவது, களிப்பூட்டும் நிகழ்ச்சி அல்ல - காங்கிரசை எதிர்க்க அமைந்துள்ள ஒரு கட்சி வலிவிழந்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தைப் புதுவலிவு கொள்ளச் செய்கிறதே என்பது கவலை தருவதாகவே இருக்கிறது.

பொதுவாகவே, இப்போது, எல்லாக் கட்சிகளிலும், இரு பிரிவுகள் - ஒன்றை ஒன்று பிற்போக்கு என்று கூறிக்கொண்டு முளைத்து, முடைநாற்றத்தைக் கிளப்பிவிடும் நிகழ்ச்சி ஏற்பட்டு விட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில், வலதுசாரி டி. டி. கிருஷ்ணமாச்சாரி, மொரார்ஜி போன்றோராலும், இடதுசாரி கிருஷ்ணமேனன், மாளவியா போன்றோராலும் நடத்தப்பட்டு வருகிற நிலைமை இருப்பதை, மறைக்கக்கூட முடியவில்லை.

கம்யூனிஸ்டு கட்சியில், டாங்கே கோஷ்டி, கோபாலன் கோஷ்டி என்கிறார்கள்.

பிரஜா - சோஷியலிஸ்டுகளில், மிஸ்ரா கோஷ்டி அசோக் மேத்தா கோஷ்டி என்கிறார்கள்.

திராவிடர் கழகத்தில் பெரியார் சுயமரியாதைக் கட்சி, குருசாமி சுயமரியாதைக் கட்சி என்று பேசப்பட்டு வருகிறது.

மாற்றார்கள் எத்துணையோ இட்டுக்கட்டியும் மூட்டி விட்டுங்கூட, நமது கழகம் மட்டும் இத்தகைய கேட்டினுக்கு இரையாகாமல் இருந்து வருவதுபற்றி, வியந்து பேசிக் கொண்டிருந்தோம்.

இன்று பத்திரிகைகள், காங்கிரஸ் கட்சிக்குள் மூண்டு கிடக்கும் உட்பூசல்களை எவ்வளவோ மூடி மறைக்கின்றன. கேரளத்திலும், ஆந்திரத்திலும், ராஜ்யசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்களே காங்கிரஸ்காரர்களைத் தோற்கடித்தனர். தேர்தல் தந்திரத்தில் தனக்கு மிஞ்சியவர் இல்லை, கட்டுப்பாட்டில் நிகர் வேறு இல்லை என்று விருது பெற்ற காமராஜர் கண் எதிரில், மாரிசாமிக்குக் காங்கிரஸ் ஓட்டுகள் கிடைத்துள்ளன!

இந்த நிலைமைகளோடு மிகப் பெரிய நெருக்கடியின் போதும், திராவிட முன்னேற்றக் கழகம், கட்டுப்பாட்டு உணர்ச்சியுடன் காரியமாற்றிவரும் கண்ணியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் பொதுமக்கள், நமது கழகத்தைப் பாராட்டாமலிருக்க முடியாது. எந்த ஒரு கழகத் தோழரும், இந்த மேலான நிலைக்கு ஊறு நேரிடும்படியான சொல்லிலோ செயலிலோ தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்ற செம்மையான பாடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வெளியில் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடியதைவிட, சிறைப்பட்டிருப்பவர்களுக்குத்தான், இந்த அருமையும், அதனால் கிடைக்கப்பெறும் பெருமையும் எழுச்சியைத் தந்திடும். நாம் சிறையில் இருக்கிறோம், நமது கழகம் வெற்றிமேல் வெற்றி பெற்று, மக்களின் நன்மதிப்பைப் பெற்று வளருகிறது என்பதனை விட, உற்சாகமான வேறு உணர்ச்சி தேவை இல்லை அல்லவா? அத்தகைய வெற்றிகளை ஈட்டித்தரப் பாடுபடும் அனைவருக்கும், நன்றி கூறியபடிதான், சிறையிலே இருக்கிறோம்.

இவைபற்றி இன்று பிற்பகல் அன்பழகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நகராட்சி மன்றத் தேர்தல்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா என்று கேட்டார் -பெரும் அளவு கிடைத்தது. ஆனால் சேலம், ராசிபுரம் இரண்டு இடங்களிலும் நான் அதிக அளவு வெற்றி எதிர்பார்த்தேன் - கிடைக்கக் காணோம் - பொதுவாக இதுபற்றி வெளியே சென்ற பிறகு கண்டறிய வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஏன் இதற்கு ஒரு குழு அமைக்கலாமே என்றார் - குழு அமைத்து, இன்னின்னாரால் குறைகள் ஏற்பட்டு விட்டன என்று கிளறிக்கொண்டிருப்பதை நான் விரும்புபவன் அல்லவே என்பதை நினைவுபடுத்தினேன்.

நிலவைக் கண்டு களிப்பைப் பருகிக்கொண்டிருந்து விட்டு உடனே குறிப்பு எழுதவில்லை. இடையில் வைசாலி தட்சசீலம் ஆகிய பழம் பெருமைமிக்க ஊர்களிலே உலவிக் கொண்டிருந்தேன் - ராகுல் எழுதிய சிந்து முதல் கங்கை வரை என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். இனி, கெய்ரோ நகர் நோக்கி, கிருஸ்தவ அரசுகளின் படைகள் பாயும் நிகழ்ச்சி பற்றி - புனிதப் போர்பற்றி - (ஆங்கில) ஏடு படித்துவிட்டுத் தூங்க முயற்சிக்க வேண்டும். நேற்றிரவு இரண்டு மணியிலிருந்து நாலு மணிவரையில் கைவலியினால், தூக்கம் வராமல் கஷ்டமாக இருந்தது. இன்று பிற்பகலும் வலிதான். ஆனால் இப்போது இல்லை. நிலவின் அழகும் கழக வெற்றியின் நேர்த்தியும், வலியை விரட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன், பார்ப்போம்.

1-4-1964

ஏப்ரல் மாதத் துவக்கம்; இடையில் குறிப்பு எழுதாததற்குக் காரணம், ஏற்பட்டுவிட்ட மனச்சங்கடம். திடீரென்று டி. எம். பார்த்தசாரதிக்கு நெஞ்சுவலி கண்டது. கவலைப்படும் அளவுக்கு வலி விறுவிறுவென்று வளர்ந்து களைப்பு, மயக்கம் மேலிட்டு விட்டது. சிறை மருத்துவர், சில மணி நேரம் பார்த்துவிட்டு, வெளியே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றார். நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம். அதற்கு ஏற்றபடி, பார்த்தசாரதியின் நிலைமையும் இருந்தது. மாலை ஏழு மணி இருக்கும், பார்த்தசாரதியை வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, படிக்கட்டுகளில் இறங்கியதும் மயக்கம் அதிகமாகிவிட்டது. வார்டர் தாங்கிப் பிடித்துக்கொண்டு சென்றார் என்றாலும், சிறிது தூரம் நடப்பதற்குள் மயக்கம் மேலும் அதிகமாகி நடந்துபோக முடியாத நிலை ஏற்பட்டு, வார்டர்கள் பார்த்தசாரதியைத் தூக்கிச் செல்லும்படி ஆகிவிட்டது. இதைக்கண்ட எங்களுக்கு மேலும் திகிலாகி விட்டது. வேறு எங்கும் பெறமுடியாத மேலான மருத்துவ உதவி, வெளி மருத்துவமனையில் கிடைக்குமென்பது தெரிந்திருந்தாலும், பொதுவாக நெஞ்சுவலி விபத்தாக முடிந்துவிடுவதை அறிந்திருந்த காரணத்தால், எங்களுக்குப் பெருத்த மனச்சங்கடம் ஏற்பட்டது.

அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாளும் மருத்துவமனை சென்றுள்ள பார்த்தசாரதியின் நிலைமை எப்படி இருக்கிறதோ என்பதுபற்றிய கவலையே உள்ளத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது. சிறை அதிகாரிகளைக் கேட்டாலோ, "மருத்துவமனைக்கு ஒரு கைதியை அனுப்பிய பிறகு, தொடர்பு வைத்துக்கொள்வதில்லை' என்று கூறிவிட்டனர். பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுபற்றி, வில்லிவாக்கத்தில் உள்ள அவருடைய துணைவியாருக்குச் "சேதி' தரும்படி சிறை அதிகாரிகளில் ஒருவரைக் கேட்டுக்கொண்டோம். அவர், வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தொலைபேசி மூலம் செய்தி அனுப்பி, வீட்டாருக்குத் தெரிவிக்கும்படி ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இது ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது, என்றாலும் கண்களில் நீர் தளும்பும் நிலையில், இங்கிருந்து பார்த்தசாரதி சென்ற காட்சி, கண்முன் எப்போதும் நின்று மனதை வாட்டியபடி இருந்தது. வயது 60, எப்போதும் மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தபடி இருப்பது வாடிக்கை. நான் பல முறை தடுத்தும் எந்த வேலையையும் அவரே மேற்கொள்வார், அந்த அளவு வேலை செய்யக்கூடிய வலிவும் இல்லை. அதை அவர் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை, இதன்றி வீட்டை ஒட்டிய கவலைகள்.

பொன்னுவேல் சமையல் காரியத்தைக் கவனித்துக் கொண்டார்; எனக்கும் மற்றவர்களுக்கும் சாப்பாட்டின் வகை பற்றிய எண்ணமே எழவில்லை. சிறை மருத்துவரிடம் பொன்னுவேலுவை அனுப்பி இருந்தேன். அவர், "பயப்படும் படியாக நிலைமை இல்லை; இருதய சம்பந்தமான வஎன்றுகூடத் திட்டவட்டமாகச் சொல்லுவதற்கில்லை, பரிசோதனைக்காகத்தான், பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறேன்' என்று கூறி அனுப்பினார்.

எனக்கு ஊசிபோட மருத்துவர் வந்திருந்தார். பெரிய மருத்துவமனை சென்று, நிலைமையைக் கண்டறிந்து வந்து கூறும்படி கேட்டுக்கொண்டேன். அன்று மாலையே, அவர் பெரிய மருத்துவமனை சென்று பார்த்தசாரதியைப் பார்த்துவிட்டுத் திரும்பி, கம்பவுண்டர் மூலமாக, கவலைப் படத்தக்கதாக ஏதும் இல்லை என்று செய்தி அனுப்பி இருந்தார். மிகுந்த ஆறுதலாக இருந்தது. தொடர்ந்து, சிறைக் காவலர்களில் ஒருவர், மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு வந்து, பார்த்தசாரதி நல்லபடி இருக்கிறார் என்ற செய்தியைக் கூறினார்.

எங்கள் கவலையையும் கலக்கத்தையும் போக்கிடத் தக்கவிதத்தில் 1-4-64 மாலை, பார்த்தசாரதியே, இங்குத் திரும்பி வந்துவிட்டார். நேரிலே பார்த்த பிறகுதான் மன நிம்மதி ஏற்பட்டது. பரிசோதனைகள் செய்தது குறித்தும், வீட்டாரும் நண்பர்கள் நடராஜன், கருணாநிதி, நெடுஞ்செழியன், கிட்டு ஆகியோர் வந்து விசாரித்தது குறித்தும் பார்த்தசாரதி கூறினார். அதிகமாக வேலை செய்க்கூடாது என்று கண்டிப்பாகக் கூறினேன். அவரால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. சோர்வு நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை.

மனச்சங்கடம் காரணமாக, படிப்பதும், உரையாடுவதும், தட்டுப்பட்டுவிட்டிருந்தது.

வைசாலி - தட்சசீலம் ஆகிய இடங்களில் அமைந்திருந்த குடியரசுக்கும் மகத நாட்டின் முடியாட்சிக்கும் இடையே மூண்டுவிட்ட போர்பற்றி, ராகுல் விவரித்திருந்த பகுதியைப் படித்தேன்.

ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்படுவார் என்று காஷ்மீர் முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

ஷேக் அப்துல்லாமீது தொடரப்பட்டுள்ள வழக்கு, பயங்கரமானது - அவருக்கும் அவருடைய கூட்டுத் தோழர் களுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத் தரத்தக்க வழக்கு. பாகிஸ்தானோடு கூடி, காஷ்மீர் சர்க்காரைக் கவிழ்க்கச் சதி செய்தார் என்பது வழக்கு. பல இலட்சம் வழக்குக்காகப் பாழடிக்கப்பட்டது. இப்போது வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். பத்து ஆண்டுகளாக சிறைக்கொடுமைக்கு ஆளான ஷேக் அப்துல்லா, நிபந்தனையின்றி விடுதலை பெறுவது, அவருடைய புகழொளியைப் பார் அறியச் செய்யும் என்பதில் ஐயமில்லை. காஷ்மீரத்தின் எதிர்காலமும், காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள தொடர்பின் நிலையும், இந்தச் சம்பவத்தினால் எந்த விதத்தில் உருப்பெருகிறது என்பது, இனிதான் தெரிய வேண்டும்.

மொரார்ஜி தேசாய் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். "அடிமைப்பட்ட மக்களிடம் எஜமானன் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டு செல்லும் விதமாக அவருடைய பேச்சு இருக்கிறதே தவிர, காரணம், விளக்கம், கனிவு ஏதும் காணோம்' என்று நண்பர்கள் கேட்டார்கள். "மனதிலே பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார் - இது ஒருவிதத்தில் பாராட்டத்தக்கது. நமது அமைச்சர்க ளைப்போல மூடி மறைத்து, மக்களின் நோக்கை வேறு திசையில் திருப்பி விடவில்லை? இதுபோன்ற பேச்சுத்தான், நமது மக்களுக்கு, உண்மையான நிலைமையை எடுத்துக்காட்ட உதவும்'' என்று நான் கூறினேன்.

மொரார்ஜியின் பேச்சில் மற்றோர் கருத்து - பேசாததன் மூலம் - தொனித்தது. பலரும் பாராட்டிப் பேசிய காமராஜ் திட்டம்பற்றி அவர் ஏதும் குறிப்பிடவே இல்லை. ஒருவேளை அதனால் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால், அது குறித்துப் பேசவில்லை போலும்!

அண்ணன்

6-12-1964