அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நினைவலைகள் - கவலைகள்!
1

8-3-1964

தம்பி!

வேலை செய்பவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, மனதுக்கு மகிழ்ச்சி தேடிட, பல நிகழ்ச்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நாள் ஞாயிற்றுக்கிழமை. இந்த ஞாயிறு, சிறையைப் பொறுத்தவரையில் வெறிச்சென்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இன்று எங்களை அறையிலே போட்டு அடைத்தபோது மாலை மணி ஐந்து.

இன்று அன்பழகன் கலகலப்பாக இல்லை - மகனுக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது, என்னவிதமான சிகிச்சை செய்திருக்கிறார்கள் என்பதுபற்றிய தகவல் எதுவும் பெறமுடியாத இடத்திலும் நிலையிலும் இருப்பதால், கவலையாகத்தானே இருக்கும். வாரத்துக்கு ஒரு முறைதானே, வீட்டினர் வந்து பார்க்கச் சட்டம் இடம் தருகிறது. இடையில் கடிதம் போடுவதோ பெறுவதோ அனுமதிக்கப்படுவதில்லை - அப்படிக் கடிதம் போட்டாலோ, பெற்றுக்கொண்டாலோ, உறவினரும் நண்பர்களும் வந்து பார்க்க இருக்கும் உரிமையை இழந்துவிட வேண்டுமாம். இது மிகக் கொடுமையானது, பொருளற்றது, தேவையற்றது என்று கருதுகிறேன். கடிதம் அனுப்பவும் பெறவும், உரிமை வழங்கப்பட வேண்டும் - கடிதங்களைச் சிறை மேலதிகாரி படித்துப் பார்த்து, தரத்தக்கதா அல்லவா என்பதைக்கூட முடிவு கட்ட வேண்டும் என்று விதி இணைத்துக்கொள்ளட்டும். குடும்பத்தினர் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தியைக் கடிதம் மூலம் தெரிந்து, சிறையில் இருப்பவர்களும், சிறையில் உள்ளவர்கள் உடல் நலம் கெடாமல் இருக்கிறார்கள் என்று வீட்டாரும் தெரிந்துகொள்வதன் மூலம் இரு தரப்பினருக்கும் ஒரு மன நிம்மதி ஏற்படும் - இதை ஏன் தடுக்க வேண்டும்? புரியவில்லை. மனநிம்மதியை மாய்த்திடவேவா, சிறை! ஆம் என்று கூறுவார்களானால், "சிறைச் சாலையை அறச்சாலை ஆக்குகிறோம், சிறையில் அடைப்பது கொடுமைப்படுத்த அல்ல, திருத்த' என்றெல்லாம் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒருபுறத்தில், சிறையிலே புது முறைகளைப் புகுத்துகிறோம் என்று பேசுவதும், மற்றோர் புறத்தில், கடிதப் போக்குவரத்துக்குக்கூடத் தடைபோட்டு வருவதும் பொருத்தமாகத் தெரியவில்லை.

கடிதம் போடவும் பெறவும் உரிமை அளிக்கப்பட்டிருக்கு மானால், அன்பழகன் தன் மகனுடைய உடல்நிலைபற்றி அவ்வப்போது தெரிந்து, மனதுக்குச் சங்கடமில்லாமல் இருக்க முடியும். அரசியல் விஷயங்களைப்பற்றி எழுதக்கூடாது என்று தடுக்கட்டும் - நியாயம் - ஆனால் குடும்பத்தாரின் நலன்பற்றி அறிந்துகொள்வதுமா தடுக்கப்படவேண்டும் - நாகரிக நாட்களில் - அதிலும் அரசியல் கைதிகள் விஷயத்தில்!

இன்று அறையில் போட்டுப் பூட்டப்பட்டதும், இது பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.

கொள்கை காரணமாக கொடுமைக்கு ஆளானவர்கள் பற்றிய புத்தகத்தில், இன்று இருவருடைய வாழ்க்கைபற்றிப் படித்தேன். போர்ச்சுகீசிய ஆதிக்க வெறியின்கீழ் சிக்கிக்கிடக்கும் அங்கோலாவில், விடுதலை விரும்பிகள் எத்தகைய கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பதை, டாக்டர் நெடோவின் வரலாறு காட்டுகிறது. தென் ஆப்பிரிக்க வெள்ளையர் ஒருவர் அங்கு தலைவிரித்தாடும் "நிறவெறி'யை எதிர்த்து, அறப்போர் நடாத்துவதுபற்றியும், அதன் காரணமாக அவருக்கு ஏற்படும் அவதிகள்பற்றியும், டன்கன் என்பவருடைய வாழ்க்கை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற பொது விதியிலிருந்து, கொள்கைக்காகப் போரிடும் எவருக்கும், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் விலக்கு இல்லை என்ற பேருண்மையை இந்த ஏடு விளக்குகிறது.

அஜந்தா - எல்லோரா ஆகிய இடங்களுக்குப் போய் வந்தது குறித்தும், சரவணபெலகோலா சென்று வந்ததுபற்றியும், ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், பரோடா, சூரத், ஆமதாபாத் ஆகிய நகர்களின் நிலையைக் கண்டறிந்ததுபற்றியும், சிறிது நேரம், பொன்னுவேல் - வெங்கா ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எதிரே உள்ள "சென்ட்ரல் ஸ்டேஷனை'யே ஆறு திங்கள் பார்க்க முடியாதபடி அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜெய்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தது, ஒரு கேலிக்கூத்தல்லவா! சிறையிலே உள்ளவர்களின் சிந்தனை, வேகவேகமாக, நெடுந்தொலைவு சிறகடித்துக்கொண்டு பறந்து செல்வது இயல்பு,

நாங்கள் உள்ள பகுதியில்தான், கிருத்தவர்களுக்கான தொழுகை இடம் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இசையுடன் தோத்திரப் பாடல்களை "கைதிகள்' - கிருத்தவர்கள் - பாடுகிறார்கள்.

இன்று காலையில், சற்று நேரம், நாங்கள் உள்ள பகுதி நுழைவு வாயிலில் நின்றுகொண்டு, தோத்திரப் பாடல்களைக் கேலிட்டுக்கொண்டிருந்தேன்.

இரண்டு நாட்களாக கை வலி சிறிதளவு இருக்கிறது - ஆனால் பனிக்காலம் நீங்கி வெப்ப நாட்கள் ஆரம்பமான திலிருந்து வலி குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இடக் கரம், வலக் கரம்போலத் தூக்க இன்னமும் இயலவில்லை. வதெ ரியாதிருக்க "நொவால்ஜின்' மாத்திரைகளையும் சாப்பிட்டபடிதான் இருந்து வருகிறேன். தேகப் பயிற்சி ஓரளவு செய்துகொண்டிருக்கிறேன் என்றாலும் இடக் கரத்தைப் பழையபடி தாராளமாகத் தூக்கத்தக்க நிலை ஏற்படவே இல்லை. எப்போதுமே இதுபோலவே இருந்துவிடுமோ என்ற ஐயுறவே அதிகமாகிக்கொண்டு வருகிறது.

சிறையில், உட்புறப்பகுதியில் உள்ள நமது தோழர்கள் நலமாகவே இருக்கின்றனர் என்பதை, இங்கு, சமையலுக்கான சாமான்கள் வாங்குவதற்காக வந்திருந்த தோழர் மணிவண்ணன் மூலம் அறிந்துகொண்டேன். இங்குபோலவே, அங்கு பலரும் நூற்பு வேலையில்தான் உள்ளனராம். மணி பதினொன்று அடிக்கிறது; பொன்னுவேலும் வெங்காவும் தூங்கி முக்கால் மணி நேரமாகிறது. நானும் எச். ஜி. வெல்சின் புத்தகத்தைச் சிறிது நேரம் படித்துவிட்டு, தூங்க முயற்சிக்கவேண்டியதுதான்.

10-3-1964

நேற்று குறிப்பு எழுதவில்லை; மனதிலே ஏதோ ஒரு விதமான சலிப்பு உணர்ச்சி; இன்ன காரணத்தால் என்று என்னாலேயே கூறமுடியவில்லை; ஆனால் ஏதோ ஒருவிதமான சுமை மனதை அழுத்திக்கொண்டிருப்பதுபோன்ற ஒரு உணர்ச்சி. அதனால் வழக்கமாக எழுதும் குறிப்பைப்பற்றிக் கவனம் செலுத்தவில்லை. படிப்பதிலே மட்டும் கவனம் செலுத்தினேன். வெல்ஸ் எழுதிய அந்தப் புத்தகத்தில், ஒரு ஆராய்ச்சியாளன் காதல் திருமணம் செய்துகொண்டு, காதலியின் மனம் மகிழத்தக்க நிலையைக் காண ஆராய்ச்சித் துறையைவிட்டு விலகி, பொருள் ஈட்டும் வாணிபத்துறைக்குள் நுழைந்து, நிரம்பப் பொருள் ஈட்டி மனைவியை மந்தகாசமான வாழ்விலே ஈடுபடச் செய்து, மனைவி செல்வத்தின் பளபளப்பிலும் நாகரிகமினுக்கிலும் மூழ்கி விட்டதால், காதலின்பம் பெறமுடியாமல் வேதனைப்பட்டு, செல்வம் கொந்தளிக்கும் சூழ்நிலையையே வெறுத்து, பணம் ஈட்டும் பணியில் வெறுப்படைந்து, கண்காணா இடம் சென்று, சிந்தனைச் செல்வத்தைப் பெறவேண்டுமென்று தீர்மானித்து, அது குறித்து மனைவியிடம் பேச, அவளும் வேண்டா வெறுப்புடன், அவனுடன் வரச் சம்மதம்தர, பனிக்காடு நிரம்பிய ஒரு தீவுக்குச் சென்று இருவர் மட்டும், செல்வம், நண்பர்கள், விருந்து, கேலிளிக்கை எதுவுமற்ற ஒரு நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் விவரம் தரப்பட்டிருந்த கட்டம், நான் படித்துக் கொண்டிருந்தது அதனால்தானோ என்னவோ, என் மனமும் பனிக்காடு சூழ்ந்த இடத்திற்குச் சென்றவன் அடையும் நிலையை அடைந்தது. கழகம்பற்றிய நினைவுகளும், இந்தி ஆதிக்கத்தை அகற்றும் அக்கறையற்று ஆட்சியாளர்கள் கழகத்தை எப்படி ஒழிப்பது என்பதிலேயே அதிகத் துடிப்புடன் இருப்பதுபற்றிய சங்கட உணர்ச்சியும், என் மனதைக் குடைந்திடும் நிலை.

நேற்று காலை, வழக்கறிஞர் நாராயணசாமி வந்திருந்தார் - கருணாநிதி நடராஜன் சார்பாக, உயர்நீதி மன்றத்திலே தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்துக் கூறிவிட்டுச் சென்றார்.

மாலை, நாவலரும், கருணாநிதியும் வந்திருந்தனர். இளங்கோவன், நான் கொண்டுவரச் சொல்லியிருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

மேலவைகளுக்கு எவரெவரைக் கழகம் ஆதரிப்பது என்பதுபற்றி கருணாநிதியும், நாவலரும் கூறினர்.

சில சட்டமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியதாக, ஒரு கருத்தையும் கூறினார்கள்.

பதில் ஏதும் கூறக்கூடிய நிலையிலும் இடத்திலும் நான் இல்லையே! எனவே "நான் என்ன சொல்ல இருக்கிறது. நிலைமைக்குத் தக்கபடி முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பினேன்.

கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும், நான் என்னிச்சையாகவோ, எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ மேற்கொள்வதில்லை. என்றாலும், எனக்கென்று ஏதேனும் ஒரு "விருப்பம்' எழுகிறது என்றால், அதனை நிறைவேற்றி வைக்கும் விருப்பம் கழகத்தினர் சிலருக்கு இருப்பதில்லை என்பதை, பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்து வருகிறேன். வருந்தி என்ன பயன்! காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பலன்! நிலைமை அவ்விதம் - அவ்வளவுதான்!

ராணிக்கு இரண்டு மூன்று நாட்களாகக் "காய்ச்சல்' என்று இளங்கோவன் கூறினான். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் வேலை நிறுத்தக் கிளர்ச்சி செய்வதாகவும், கௌதமன் அதிலே ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றான்.

பிற்பகல், காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்துள்ள தோழர்கள், நாங்கள் இருக்கும் பகுதி அருகில் வந்திருந்து, பெரிய பெரிய வைக்கோற்போர்களைத் தலைமீது சுமந்துகொண்டு, உட்புறம் சென்றிடக் கண்டேன் - மெத்தச் சங்கடப்பட்டேன். அவர்கள் சிரித்த முகத்தோடுதான் இருந்தார்கள் - ஆனால், அரசியல் கைதிகள் என்னென்னவிதமாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பதைக் காணும்போது, வேதனையை அடக்கிக்கொண்டிருக்க முடியத்தான் இல்லை. என் மனம் என்னமோபோல் ஆகிவிட்டதற்கு இதுவும் காரணம். ஆகவேதான், குறிப்பு எழுதாமலேயே இருந்துவிட்டேன்.

இன்று, இரண்டு நாட்களுக்குமாகச் சேர்த்து குறிப்பு எழுதுகிறேன். மனச்சங்கடம் அடியோடு போய்விடவில்லை - போக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று, சமையல் வேலையில், அதிகக் கவனம் செலுத்தினேன் - நூற்பு வேலையிலும் சற்று அதிக நேரம் ஈடுபட்டேன்.

நாங்கள் அடைபட்டிருக்கும் பகுதிக்குப் பக்கத்திலேதான், தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலே ஒரு கைதிக்கு, நாளைக் காலை - பொழுது விடியுமுன் - தூக்கு! இன்று மாலை, அதுபற்றிய கவலை என் மனதைக் குடையத் தொடங்கிற்று.

ஏழ்மைக் கோலம்! எண்பது வயதிருக்கும்! கூனிக் குறுகிப்போன நிலையில் உள்ள அவன் தாய், இன்று மாலை, மகனைக் கடைசி முறையாகக் காணவந்ததை நான் பார்த்திட்ட போது, மனம் மிக நொந்த நிலை பெற்றேன்.

சில கெஜ தூரத்தில்தான் இருக்கிறான் - விடியற்காலை தூக்கிலே மாள இருப்பவன்.

மாலையில், சிறை பெரிய அதிகாரிகள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

கோயமுத்தூர் போகிறான், பெங்களூர் போகிறான் என்று ஒருவனுடைய "பயணம்' பற்றி எவ்வளவு சாதாரணமாகப் பேசுவார்களோ, அதுபோல, இங்கு உள்ள சிறைக்காவலர்களும், கைதிகளுங்கூட, நாளைக் காலையிலே குப்பனுக்குத் தூக்கு! - என்று மிகச் சாதாரணமாகப் பேசுகிறார்கள், கேலிட்கும்போதே, மனம் வேதனையடைகிறது. ஆனால் அவன் செய்த குற்றத்தைக் கூறக்கேலிட்கும்போதோ, இப்படிப்பட்டவனுக்கு இதுதான் தக்க தண்டனை என்றும் தோன்றத்தான் செய்கிறது.

பெயரோ, வெறுங் குப்பன் அல்ல - தலைவெட்டி குப்பனாம்.

ஒரு பெண்ணின் தலையை வெட்டி, கையில் தூக்கிக் கொண்டு, ஊரெல்லாம் சுற்றிவந்து, போலீஸ் அதிகாரியின் முன்பு கொண்டுபோய் அந்தத் தலையை வைத்தானாமே! அதைக் கேலிள்விப்படும்போது, தூக்குத்தண்டனை கூடாது என்று கூற யாருக்குத்தான் மனம் இடம் தரும்?

நேற்றுவரை, சாதாரணமாக இருந்தவனுக்கு, இன்று மாலை, மனக்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஆறு மணி சுமாருக்கு, ஒரு பயங்கரமான கூச்சலிட்டான், திகில், திகைப்பு, மரணத்தின் பிடியில் சிக்கிவிட்டோம் என்ற வேதனை உணர்ச்சி, இவ்வளவும் கலந்த ஒரு கூச்சல். நான் குப்பன்! வெறுங்குப்பன்! தலைவெட்டி குப்பன் அல்ல! எனக்கு விடுதலை! விடுதலை கிடைக்கப்போகிறது! - என்றெல்லாம் கூவிக்கொண்டிருப்பதாக, சிறைக்காவலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில கெஜ தூரத்திலே இருக்கும் ஒருவன், நாளைக் காலையிலே தூக்கிலே மாளப்போகிறான் என்று தெரியும் நிலையில், இன்று எனக்குத் தூக்கம் எங்கேலி வரப்போகிறது! பொன்னுவேலுவும் வெங்காவும், இதோ தூங்கிக்கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். பக்கத்து அறைகளிலேயும் சந்தடி இல்லை.

இங்காவது சில கெஜ தூரத்துக்கு அப்பால், தூக்கில் தொங்கப்போகிறவன் இருக்கிறான். "ஆரிய மாயை' வழக்கிலே தண்டனை பெற்று, நான் திருச்சி சிறையிலே கிடந்தபோது, எனக்குப் பக்கத்து அறையிலேயே, தூக்குத் தண்டனைக் காரன்தான்!

இவ்வளவுதானா! இதோ, காலையிலே தூக்கிலே தொங்கப்போகும் குப்பன், இப்போது எந்தப் பகுதியில் இருக்கிறானோ அந்தப் பகுதிக்குத்தான், நாங்களெல்லாம் இரண்டொரு நாட்களில் மாற்றப்பட இருக்கிறோம்.

13-3-1964

மூன்றாம் நம்பர் அறையிலிருக்கிறேன் - வேறோர் பகுதியில் - முன்பு குறிப்பிட்டிருந்தபடி, தூக்குக்குச் சென்றவன் இருந்த பகுதியில்! மணி பத்து அடித்துவிட்டது! இரண்டு நாட்களாகக் குறிப்பு எழுதாதிருந்தேன் - இன்று மொத்தமாக்கி எழுதுகிறேன்.

இந்த இடத்திற்கு 11-ம் தேதி பிற்பகலே வந்துவிட்டோம் - மாடி - முதல் - அறையில் அன்பழகன், இரண்டாவதில் சுந்தரம் - நான் மூன்றாவது அறை - நாலாவதில் பார்த்தசாரதி - பிறகு மதி - அடுத்தது பொன்னுவேல் - பிறகு வெங்கா - அடுத்ததில் அரக்கோணம் ராமசாமி.

தூக்குக்குச் சென்றவன்போக, அதே தண்டனை பெற்று, காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆறு பேர், இங்கு இருந்து, வேறு பகுதிக்கு - பக்கத்திலேதான் - அனுப்பப்பட்டு விட்டனர்.

இப்போது இருக்கும் பகுதிக்கும் ரயில்வே தண்டவாளப் பகுதிக்கும் இடையே அதிக தூரம் இல்லை; ஆகவே ரயில்வேக்களின் சத்தம் காதிலே விழுந்தபடி இருக்கிறது; கக்கும் புகை இந்தப் பகுதியில் அடிக்கடி கப்பிக்கொள்கிறது.

இந்தப் பகுதியிலிருந்து பார்க்கும்போது, எதிர்புறத்தில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து, மவுண்ட்ரோட் போகும் வண்டிகளின் மேல்பாகம் நன்றாகத் தெரிகிறது - ஆக நகரத்தின் மத்தியிலே இருக்கிறோம் என்ற உணர்வு ஒருவிதமான மகிழ்ச்சியையும், நகரத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு மனச்சங்கடத்தையும், மாறி மாறித் தருகிற இடம்.

பெரிய மரமாக ஓங்கி வளரப்போகிறேன் என்று அறிவிக்கும் தன்மையில், "பருவ கருவத்துடன்' ஒரு மாமரம், அறைக்கு எதிர்ப்புறம் இருக்கிறது. அதிலே பூ இல்லை. காய் இல்லை, ஆனால் சிட்டுக் குருவிகள் நூறுக்குமேல் என்று கருதுகிறேன், அதிலே இடம் பிடித்துக்கொண்டுள்ளன. என்னுடைய - நண்பர்களைப்போலவே, அந்தச் சிட்டுக் குருவிகளும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டுள்ளன. துளி அரவம்கூட இல்லை. ஆனால் விடியற்காலை, என்னை எழுப்புவதே, அந்தக் குருவிகளின் "கோஷ்டி கானம்'தான். அடே அப்பா! இத்தனை சின்ன உருவத்திலிருந்து எப்படித்தான் அத்தனை பெரிய சத்தம் பிறக்கிறதோ தெரியவில்லை! சத்தம் என்று சொல்லிவிட்ட தற்காக வருந்துகிறேன். இசை - இன்னிசை! கவலை, பயம், தேவை, தவிப்பு எனும் எந்த உணர்ச்சிகளுமற்ற ஓர் நிம்மதியான நிலையிலிருந்து எழும் இசை!

"எப்படி எல்லாமோ இருந்தேன் - இப்போது இப்படி ஆகிவிட்டேன்'' என்று ஏக்கத்துடன் கூறுவதுபோன்ற நிலையில், மாவுக்குப் பக்கத்தில் ஒரு அரசமரம் இருக்கிறது, பல கிளைகள் வெட்டப்பட்டுவிட்டுள்ளன, இலைகள் பசுமையற்று, கீழேயும் விழாமல், கிளைகளுடன் கொஞ்சிக் கொண்டுமில்லாமல், ஏழ்மைக் கோலத்தில் உள்ளன.

வேறோர் புறத்தில், இரு மரங்கள் - மரங்களாக வேண்டியவை - ஒரு வேம்பு, நுழைவு வாயிலருகேலி ஒரு பாதாமி மரம். இது, நான் இப்போது இருக்கும் இடத்தின் தோற்றம்.

இங்கு இருந்தவன் தூக்குக்குப்போன பிறகு, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, எங்களை இங்கு கொண்டு வருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் - அவனைக் காலை ஐந்து மணிக்கு "அனுப்பி'விட்டு, பத்து மணிக்கு எங்களுக்குச் "சேதி' அனுப்பினார்கள். இன்று பிற்பகல் புதிய இடம்; சாமான்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள் என்று!

அங்கு நாங்கள் போவதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, ராஜகோபால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, எனக்குத் தந்தி கொடுத்தது, வந்தது. எத்தனை "இன்பமான செய்தி' அனுப்பிவைக்கிறார்கள் பாருங்களேன், நண்பர்கள்! நான் இருப்பது சிறையில், என் மனதில் குடைவது ஓராயிரம் கவலைகள், நான் இழந்திருப்பது என் சிற்றன்னையை, நான் நடத்தப்படுவது ஒரு கைதி என்ற முறையில், எனக்கு வெளியிலிருந்து அனுப்பப்படும் "விருந்து' இதுபோல! இதை மற்றவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மனதைச் சங்கடப் படுத்துவானேன் என்று நினைத்து, "தந்தி'பற்றி ஏதும் சொல்லவில்லை. ஆனால் சில மாதங்கள் "உள்ளே இருக்கும் தொகுதி ஐந்து 263 நிலையில், வெளியே என்னென்ன ஏற்பட்டுவிடுகின்றன என்பதை எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். மறுநாள் பத்திரிகையில், உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், ஏன் இருக்க நேரிட்டது என்பதற்கான விளக்கமும் கண்டேன். கழக நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்கள், அவர்களுக்குச் சரி என்றுபட்ட செயலில் ஈடுபடும்போது, அந்தச் செயல், நம்மிலே சிலருக்குக் கசப்பும் கோபமும் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படுத்தக்கூடும்; ஆனால் முடிவெடுத்துச் செயல்படும் பொறுப்பை மேற்கொண்டவர்கள் வேண்டுமென்றே தவறான முறையைக் கைக்கொண்டிருக்கமாட்டார்கள். அப்படி அவர்கள் மேற்கொண்ட முறை குறையுடையது என்று தோன்றினாலும், அதன் விளைவாக நமக்கு வேதனையே ஏற்பட்டாலும், அதற்குப் பரிகாரம், பொறுத்துக்கொள்வதிலேயும், நோக்கத்திலே தவறு காணாமலிருப்பதிலேயும், நம்முடைய கடமையை மறவா திருப்பதிலேயும் கிடைக்க முடியுமே தவிர, கோபம், கொந்தளிப்பு, எதிர்ப்பு வருத்திக்கொள்ளுதல் ஆகியவற்றினாலே அல்ல என்பதை நமது கழகத் தோழர்கள் இன்னமும் முழு அளவிலும் நம்பிக்கையுடனும் உணரவில்லை. அதாவது இன்னமும் "பக்குவம்' ஏற்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. இவ்விதமாக, நான் வருத்தப்படக்கூடிய நிகழ்ச்சிகள் கழகத்தில் ஏற்பட்டுவிடும்போது, நான் வேதனை மட்டுமல்ல, வெட்கப்படக் கூடச் செய்கிறேன். என்ன செய்வது? "இன்னமும் சிறிது காலம் தேவைப்படுகிறது போலும்' பக்குவம் ஏற்பட.